Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 9.2

அவள் பேசியதில் தலையில் அடித்து அமர்ந்திருந்த சகோதரனைப் பார்த்து சத்தமாக சிரித்தான் சித்தார்த், “சுத்தம்! காபி கூட போட தெரியாதா அண்ணிக்கு? அஸ்வினு நீ பாவம் தான்டா…” இதில் கேலி வேறு வந்தது சிறியவனிடமிருந்து.

கிளம்புவதாக கூறி நின்ற அஸ்வினால் இப்பொழுது அதே வேகத்தில் நகர முடியவில்லை. மதி பாசத்திற்கு அடிபணிபவர், அவள் என்ன கேட்டாலும் யோசிக்காது செய்துவிடுவார் என்கிற பயம்.

“நீங்க தான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டீங்களே, அப்டியே சமையலையும் சொல்லி குடுத்துடுங்க. நான் வர்றப்ப அவளை கூட்டிட்டு வீட்டுக்கு போய்டுங்க.” எரிச்சலோடு கூறியவன், அதற்கு மேல் திரும்பி பார்க்காது கிளம்பிவிட்டான்.

காலை எட்டு மணிக்கெல்லாம் தான் கிரௌண்டில் இருப்பதாக, அவனது பர்ஸ்னல் கோச்சுக்கு தகவல் கொடுத்து மொத்த மைதானத்தையும், அரை மணி நேரத்தில் பரபரப்பாக்கியிருந்தான் அஸ்வின்.



Advertisement

அங்கு ஏற்கனவே சில வீரர்கள் பயிற்சியில் இருக்க, இவனுக்காக தனியாக எந்த இடத்தையும் ஒதுக்க வேண்டாம் என கூறி, அவர்களோடு இணைந்தே பயிற்சியில் இறங்கினான். உடன் இருக்கும் சக ஆண்களோடு சகஜமாகவே பேசி சிரித்தாலும், மட்டையை கையில் எடுத்தபிறகு ஒரு கோவம் தெரிந்தது அனைவருக்கும்.

“என்ன அஸ்வின், வீட்டுல சண்டை போட்டு வந்தியா?” அவனை சிறு வயது முதல் சரியாக படித்தவர் கேள்வி கேட்க, சிரித்தே சமாளித்தான்.

வீட்டிற்கு சென்றால் தனிமையே துணை என உணர்ந்த பொழுது, வீட்டிற்கே செல்ல மனம் வரவில்லை. அதே தனிமை, அதே வீடு தான் இத்தனை நாள் துணையாக இருந்தது. இன்று என்ன புதிதாக வீம்பு?

Advertisement

மனதை சமன் செய்து இல்லத்திற்கு செல்ல தன்னை தயார் செய்தாலும், ஒரு மனம் அடமாய் போக மறுத்துவிட்டது. மதிய உணவை அங்கேயே முடித்தவன், அம்மைதானம் முழுதும் காலியான பிறகும் கூட போகவே பிடிக்காமல், மைதானத்தினுள் சுற்றி வந்தவன் அவ்விடமே இருண்டபிறகு தான் அகன்றான்.

Advertisement

ஒரு நபரின் வரவு வீட்டையே பிரகாசித்துவிடுமா என்ன? கேலியோடு அவன் மனம் கேட்ட கேள்விகளை எல்லாம் புறம் தள்ளி வைத்து வீட்டினுள் நுழைந்தான்.

நேராக அறைக்கு செல்ல படி மேல் கால் வைத்த நொடி, பின் திரும்பி பார்த்தவன் முகம் ஒரே நொடியில் குப்பென சிவந்தது.

காரணம் அங்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆரோஹி கையில், பெரிய ஐஸ்க்ரீம் பாக்ஸ் இருக்க, அதே அளவு சித்தார்த் கையில். இதில் ஆரோஹியின் கை, சித்தார்த் ஐஸ்க்ரீமை பிடுங்கும் முயற்சியில் இருக்க, இவன் வந்ததை அறிந்த இருவரும் அமைதியாகிவிட, அஸ்வின் எதையும் பார்க்காது மேல் ஏறியதை கவனித்து, நிம்மதி மூச்சு விட்டு மாட்டிக்கொண்டனர்.

Advertisement

இதில் ஊசியாய் குத்தும் பார்வை வேறு…

கையிலிருந்த அந்த நான்கு கிரிக்கெட் மட்டையின் மேல் அஸ்வின் பிடி இறுக, பல்லைக் கடித்தவன் சகோதரனைப் பார்த்து, “நான் மேல போய்ட்டு வர்றதுக்குள்ள, நீ வீட்டை விட்டு வெளிய போயிருக்கணும்.”

“ரோஹி தா… இல்ல அண்ணி தான்டா ஐஸ்க்ரீம் சாப்பிடணும் போல இருக்குன்னு சொன்னாங்க.”

“கெளம்புன்னு சொன்னேன்.” அடிக்குரலில் அஸ்வின் சீற, அமைதியாக எழுந்து நின்ற சித்தார்த்தை முறைத்து விட்டு மேலே சென்றுவிட்டான் அஸ்வின்.

அவன் சென்றதும் வேகமாக ஆரோஹி கையிலிருந்த ஐஸ்க்ரீமை வாங்கி, “நல்லவேளை நீதான் ரெண்டையும் சாப்பிட்டனு தெரியல, இல்லனா வீட்டுக்கு பின்னாடி எனக்கு குழியே தோண்டிருப்பான். கல்யாணம் வேணாம் வேணாம்னு ஊரையே ஏமாத்துறது, கல்யாணம் ஆகிட்டா செல்லம் செல்லம்னு முத்துபாண்டியா மாறிடுறது…”

புலம்பியவாறே வாயிலை நோக்கி வேகமெடுத்தவன் ஆரோஹியைப் பார்த்து கை எடுத்து கும்பிட்டு, “வாழ்க்கைல தயவு செஞ்சு இனிமே கிட்சன் பக்கம் போயிடாத தெய்வமே! கல்யாண ஆசையே வெறுத்துடும் போல…”

ஆரோஹி, “ரொம்ப ஓவரா பண்றீங்க கொளுந்தனாரே… அப்றம் உன் பொண்டாட்டிக்கும் சமைக்க தெரிய கூடாதுனு சாபம் விட்ருவேன் பாத்துக்கோ.”

அவனோ ஒரு வலியோடு சிரித்தவாறே, “என் ஆளே ஹோட்டல் நடத்துறா அண்ணியாரே… எல்லாத்தையும் மறந்தா தான் உன் சாபம் பலிக்கும்.”

அடுத்த நொடி அந்த சிரிப்பு கூட மறைந்தது, “உன்னால முடிஞ்சா அப்படியாவது அவளுக்கு எல்லாத்தையும் மறக்க வைக்க சொல்லி கேட்ருப்பேன்.” தலை திருப்பி சென்றவன் கண்களில் தெரிந்த வலியானது, ஆரோஹியின் இதயத்தையும் நேரடியாக சென்று தாக்கிவிட்டது.

இத்தனை நேரம் தன்னோடு ரகளை செய்து வயிற்றைப் பிடித்து சிரித்து கேலி பேசியவன் முகத்தில், ஒரே நொடியில் இவ்வளவு வேதனையின் சாயலா?

மனிதர்களும் அவர்களுள் மிதக்கும் கட்டுக்கடங்கா காதலும்!

அஸ்வின் வருவதற்குள் எழுந்து சென்று முகத்தைக் கழுவி, ஆரோஹி அறையினுள் புகுந்திட எண்ணி அறையை நெருங்கிவிட்ட சமயம், “இங்க தான் இருக்கேன்.” என்கிற சத்தம் நிறுத்தியது.

அவளைப் பார்த்தவாறே மாடியின் வரவேற்பறையில் அமர்ந்தவன் அவளுக்கும் கண் அசைத்து காட்ட, எதுவும் பேசாமல் வந்து அமர்ந்துகொண்டாள்.

நீண்ட நெடிய மௌனத்திற்கு பிறகு ஒற்றைக் கையால் தலையைப் பிடித்து அமர்ந்திருந்தவனைப் பார்த்து, “சாரி கிரிக்கெட்டரே… ஐஸ் சாப்பிடணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு. அதான் வீட்டுல இருந்ததை எடுத்துட்டோம். சித்தார்த் வேணாம்னு தான் சொன்னார்…”

“சாரி சொன்னா எல்லாம் சரியாகிடுமா? நேத்து நீ வந்து நின்ன நிலைமையை பாத்துட்டும், என்னால என்னவோ பண்ணிக்கோனு விட்டு போக முடிஞ்சிருந்தா, இவ்ளோ கோவம் எனக்கும் வந்திருக்காது.”

ஆரோஹி, “சாதாரண பீவர் தானே நாராயணா, அதுக்கு ஏன் இவ்ளோ கோவம், இவ்ளோ எமோஷன்? என்னையும் அத்தை வீட்டுக்கு போக சொன்னிங்களாமே?”

குரல் இறங்கி, கண் கலங்கி போனது பெண்ணுக்கு. அவள் குரல் மாற்றத்தை உணர்ந்தவன் அவளைப் பார்த்து தன்னையே நொந்துதான் போனான். இப்படியே அவளிடம் கூறி விட்டார்களா என்று அன்னைக்கும் அர்ச்சனை மனதில் விழவே செய்தது.

அவளை நெருங்கி அமர்ந்தவன், “நான் அப்டி சொல்லல ம்மா, என்னால உனக்கு ஒடம்பு சரி இல்லாம போச்சுன்னு ரொம்ப வருத்தம். ரெண்டு நாள் கூட பாத்துக்க முடியல, பயமுறுத்தி காய்ச்சல் வர வச்சிட்டேன்னு என் மேலயே எனக்கு கோவம்.”

ஆரோஹி, “அதுக்குன்னு வீட்டை விட்டு அனுப்புவீங்களா?”

சண்டைக்கு நின்றாலும் குரல் உடைந்து எந்நேரமும் கண்ணீர் உடைப்பெடுக்க காத்திருந்தது.

“ஆரூ…” அஸ்வின் கரங்கள் அவள் கையைப் பற்றப் போக, பார்வையாலே தள்ளி வைத்தாள் ஆரோஹி.

“இது உன் வீடு ம்மா. நான் எப்போ உன்ன அனுப்ப பாத்தேன்? கொஞ்ச நாள் நான் என்னை ப்ரிப்பர்…”

“நான் சொன்னேனா? உங்களால, உங்க நாயால தான் காய்ச்சல் வந்து படுத்துட்டேன்னு? நியாயப்படி பாத்தா எனக்கு நாய்னா பயம், கூட்டிட்டு போகாதீங்கனு நான் தானே சொல்லிருக்கணும். நான் சொல்லாம நின்னதும் தப்பு தானே?

சரி, நான் மறுபடியும் ஹாஸ்டல் போய் என்னை நானே மென்டலா ப்ரிப்பர் பண்ணி, அப்றம் இங்க வர்றேன். இன்னைக்கு மட்டுமில்ல, இனி எப்போ இது மாதிரி நடந்தாலும் ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிஞ்சு, அப்புறம் ஒரு மாசம், ரெண்டு மாசம் கழிச்சு இங்க வந்துக்கலாம்.” என்றவள் எழுந்து நிற்க, அவள் கையைப் பிடித்து கேள்வியோடு பார்த்தான்.

“என்னை ப்ரிப்பர் பண்ணிக்க போறேன் ப்பா. கம்யுனிகேஷன் ரெண்டு பக்கமும் இருந்து வந்தா தானே உறவுக்கு நல்லது?”

கோவமாக பேச முயன்றவள் முயற்சியும் வெற்றியடைய, தோல்வியை ஒப்புக்கொண்டவனாய் அவளை அமர வைத்து சரணடைந்தான் அஸ்வின்.

அஸ்வின், “சாரி ஆரூ தெரியாம சொல்லிட்டேன். அதையும் தாண்டி எனக்கு உன்னை எப்படி பாத்துக்குறதுனு தெரியல. அம்மா கூட இருந்தா அவங்க உன்னை நல்லா பாத்துக்குவாங்கனு தான் சொன்னேன்.”

ஆரோஹி, “லூசு மாதிரி பேசுறீங்க கிரிக்கெட்டரே… நீங்களா ஒன்னு பேசி, நீங்களா ஒரு முடிவெடுத்து அதுல என்னையும் இழுத்து போட்டு, எனக்கே தெரியாம முடிவெடுத்திருக்கீங்க. இதுக்கு ஒரு உப்பு சப்பில்லாத எக்ஸ்ப்ளனேஷன் ஒன்னு…”

மனைவியின் உரிமை கோவம் இதம் கொடுக்க, இழைத்த பிழையெல்லாம் தவறாகி, அவள் உரிமையில் தவறுகள் கூட கருகிப்போனது. நியதிகள் பேசி அவள் கொடுத்த இதமான உணர்வை கரைக்க விரும்பாமல், அவளைப் பார்த்துக் கொண்டே அவளைப் பிடித்து சோபாவில் அமர வைத்து, அவளுக்கு வாகாக கீழே அமர்ந்து கொண்டான்.

அவன் என்ன செய்கிறான் என விழித்தவள், ‘என்ன’ என பேச வரும் முன்பே, அவளை அவன் பார்த்த பார்வையே அவனுக்கான தலை வலியைக் கூற, அஸ்வின் அனுமதியின்றி அவனது சிகையினுள் விரல்களை விட்டு, தனக்கு தெரிந்தவாறு அவன் சிகையினுள் விரல்களை அலையவிட்டாள்.

கண் மூடி இன்புற்றவன் அவளது அனுபவமில்லா செயலில் இதழ் பிரியாமல் சிரித்து, மெல்ல அவள் மடி மீதே கண் மூடி சாய்ந்தான்.

ஆரோஹிக்கு திக் என்று ஆனது. அவ்வளவு உரிமையாய் அவள் மடி சாய்வான் என சிறிதும் எண்ணியிராதவளுக்கு, அவன் செயல் இதயத்தில் ஒரு பூகம்பத்தையே வெடிக்க செய்தது.

அடிவயிறு உணர்ச்சிகளால் குலைந்து அடம்பிடிக்க, இதழ்கள் துடிக்க, கண் இமைகள் படபடத்தது. ஆரோஹி கைகள் மேலும் நகர வழி தெரியாமல், காட்டில் தொலைந்தது போல தவிக்க, உதட்டின் மேல் பரப்பில் நிலைத்திருந்த வியர்வைத் துளியே, அவளது மனதை படம் பிடித்து போட்டது.

கைகளை மெல்ல தளர்த்தி மொத்தமாய் விலகி நிற்க எண்ணியவள் கண்கள், அவனது முகத்தில் படிய அப்படியே நின்றது.

அவள் எண்ணியது போல் நிஜமாகவே உடல் சோர்ந்து தான் இருந்தான். அதோடு நெற்றியில் முடிச்சுகளாய் நின்ற கோடுகள், அவன் முகத்தை சிரமப்பட்டு கொஞ்சம்தான் தன் மீது தலை சாய்த்திருப்பது புரிந்தது.

அவனுக்கும் தயக்கம் இருப்பது தெரிந்து கண்களை மூடி திறந்தவள், அவனது தலையில் சற்று அழுத்தம் கொடுத்து, அவனது சிரத்தின் மொத்த பாரத்தையும் தானே தாங்கிக்கொண்டாள்.

உரிமை மௌனமாய் விளையாட கண் திறந்து அவளைப் பார்த்து, மெல்லிய புன்னகையோடு தலை சாய்த்து அவளைப் பார்க்க, அந்த பார்வையின் ஆழத்தில் சிணுங்கியது பெண் மனம்.

“கிரிக்கெட்டர்ரே…” தாழ்ந்து வந்த பெண்ணின் குரலில் மிக மெதுவாக உடல் குலுங்க சிரித்தான்.

பார்வையை அகற்றாமல் சிரிப்பவனைப் பார்த்து ஆரோஹிக்கு ஒரு காந்த துண்டிலிருந்து, மற்றொரு காந்தத்தைப் பிரிப்பது போல் கடினமாக தான் இருந்தது.

“என்ன ஆரூ ம்மா?” வேகமாக தலையை எல்லா பக்கமும் அசைத்தவள் கன்னம் சிவந்துதான் போனது.

“ஒரு உண்மை சொல்லட்டுமா?” கள்வனின் கணீரென குரல் இறங்கி வர, அவள் தலை தன்னாலே ஆடியது.

“வீடு வர்ற அந்த இருபத்தி அஞ்சு நிமிஷமும் நீ அம்மா வீட்டுக்கு போயிருக்க கூடாதுன்னு மட்டும் தான் ஆசைப்பட்டேன். நீ போகல… எதுக்காகன்னு தெரியல ஆரூ, ஆனா ரொம்ப நன்றி.”

காடென வளர்ந்திருந்த அவனது சிகையில் சிக்கிய விரல்களைப் பிடித்து உள்ளே அழுத்தி வைத்தவன், “நிறுத்தாதடா, தலை வலியே தெரியல…” மயக்குவதில் ஆண்களுக்கு இணை ஆண்கள்தான் என இந்த மாயவனும் நிரூபித்தான்.

ஆனால் இவனோ வார்த்தையால் மயக்காமல் பார்வையால், சிறு சிறு தொடுகையில் காமத்தைக் காட்டாமல் மதியிழக்க செய்கிறான். காய்ச்சல் உடல் அலுப்பை வாங்கியிருக்க, எப்பொழுது தான் இமை மூடி உறங்குவோம் என இரவுக்கு காத்திருந்தவள் வேகமெலாம், கட்டை வண்டியின் வேகத்தை ஒத்து போனது. அவசரமென்ன வந்ததென அவனோடு பயணிக்க துவங்கியது சிறியவள் மனம்.

“ஆன்ட்டி கூட எல்லாம் நல்லா பேசுனாலும், உங்ககிட்ட மாதிரி உரிமையா அவங்ககிட்ட கேக்க முடியல.” கண்களை மூடி, ‘ம்ம்…’ கொட்டிக்கொண்டிருந்தான் அவள் மனதில் சிறிதாய் இடம் பிடித்துவிட்ட கர்வத்தில்.

“அதுவும் மாங்காய் சாப்பிடணும் போல இருந்துச்சு தெரியுமா?”

“சித்தார்த்கிட்ட கேட்ருக்க வேண்டியது தான, நம்ம மரத்துலயே இருந்துச்சே ஆரூ.”

“ம்ம்ம்… அது எப்படி கேக்க முடியும்?”

அஸ்வின், “ஏன் இதுல என்ன இருக்கு, அவன் தப்பா நினைக்க மாட்டான்டா.”

ஆரோஹி, “அதுக்கில்ல… காலைல ஏதோ சாப்பிட்டது ஒத்துக்கல, சோ வாமிட் பண்ணிட்டேன். ஒடனே வேலைக்கு இருந்த அக்கா, ‘இதுக்கு தான் தம்பிக்கு அவசரமா கல்யாணம் பண்ணி வச்சீங்களானு’ ஆன்ட்டிகிட்ட கேக்குறாங்க. இதுல நான் மாங்காய் கேட்டா…”

கூச்சப்பட்டு மேலும் பேசாமல் ஆரோஹி நிறுத்திவிட, வாய் விட்டு உடல் குலுங்க சத்தமாய் சிரித்தவன் மேல் உள்ள கோவத்தை, அவள் கைகளில் இருந்த அவனது சிகையை வைத்தே பலி தீர்த்துக்கொண்டாள்.

அவனோ அசைந்தானில்லை, நினைத்து நினைத்து சிரித்து வைக்க, பெண்ணவள் வெட்கமும் கோவமுமாய் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!