Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒளி சிந்தும் இரவு

ஒளி சிந்தும் இரவு 10.1

அத்தியாயம்  10

    மாதவன் விருப்பமின்மையை தெரிவித்ததிலிருந்து துவண்டு விட்டார் ரங்கசாமி. அன்பரசை மருகனாக  ஏற்ற பின்னே வேறொருவனை பார்க்க நினைத்தாலும் அன்பை போல் வருமா என்றும், அப்படியென்ன தன் மகள் குறைந்துவிட்டாள் என்றும் மனம் வெம்ப, உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

   இரண்டு நாள்களாக இந்நிலை நீடிக்கவே நலமிழந்தார் ரங்கசாமி. லேசாய் நெஞ்சு வலிப்பதாய் சொல்ல, பதறிப்போனார் ஜானகி. மகளிடம் சொல்லி உடனடியாக மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றனர்.



Advertisement

   அசிடிக் ப்ராப்லம்தான். ஆனால் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று மருத்துவர் கூட அட்மிட் செய்தனர். கணவனின் உடல்நிலை நினைத்து ஜானகிக்கும் மனம் சரியில்லாமல் போக, அவரும் பலவீனமாகத்தான் இருந்தார். ஜானகிக்கும் முடியாமல் போகவே, தனியாக மகள் அல்லாடுவதைப் பார்த்து இன்னும் நிலைகுலைந்தார் ரங்கசாமி.

     தங்களுக்குப் பிறகு மகள் வாழ்வு என்னாகுமோ என்ற பயம் பெரிதாய் ஆட்டிப்படைத்தது ரங்கசாமியை. கணவனின் சோர்ந்த முகம் ஜானகியை அச்சுறுத்தியது.

   கணவன் ஏன் இன்னும் உண்ணவில்லை, நீர் ஆகாரமாகவே எடுத்துக் கொள்கிறார். ஏதேனும் வேறு பிரச்சனையா? எனறு ஜானகி மருத்துவரிடம் புலம்ப, பெரிதாய் பிரச்சனையில்லை. மனசை லேசா வச்சுக்கோங்க என்று மருத்துவர் இருவருக்கும் எடுத்துரைத்தார்.

Advertisement

   யார் எத்தனை எடுத்துரைத்தாலும் எண்ணங்கள் மகளின் எதிர்காலத்தை நினைத்தே அச்சம் கொள்ள, மூன்று நாள் மருத்துவமணையில் இருந்தும் உடல்நிலை தேறவில்லை ரங்கசாமிக்கு.

Advertisement

   “நம்ம மகளுக்கென்ன குறை ஜானு? மாதவன் ஏன் மறுத்தார்? வளர்ப்பு மகள்ன்ற காரணமா?” என்று வேதனையோடு வினவ, டீ வாங்க சென்று வந்த முல்லை தந்தையின் வேதனையை கேட்டு மொத்தமாய் உடைந்து போனாள்.

    அன்று மாலை நிதீஷ் வந்தான் மாமனை காண. ரங்கசாமி விரக்த்தியோடு பார்த்தார். அன்று வனிதாவும் நாராயணனும் அத்தனை பேசும்போது நிதீசும், நாராயணனின் மகனும் தங்களுக்காக கொஞ்சமும் யோசிக்கவில்லையே என்று ஜானகிக்கும் நிதீஷோடு பேச விருப்பமில்லைதான். ஆனால் கணவனை பார்க்க வந்துவிட்டானே என்று “வா நிதீஷ்” என்றார் ஜானகி.

   “அட்மிட் பண்ணியிருக்கோம்னு கால் பண்ணலாம்லத்த?” என்றான்.

Advertisement

  முல்லை வருவதற்கு முன்னே நிதீஷிற்கு அவனின் அத்தை மாமாவை மிகவும் பிடிக்கும்தான். ஆனால் முல்லை வந்த பின்னே ரத்தபந்த உறவான தன்னைவிட முல்லைக்காக மாமன் யோசித்தது பெருத்த ஏமாற்றத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது.

   வளர்ப்புமகளை விட தாங்களே மாமனுக்கு உயர்வாக இருக்கவேண்டும் என்று வனிதா சொல்லிக்கொடுத்தது ஆழமாய் பதிந்திருக்க, அன்னை மற்றும் சின்ன மாமன் பேசிது ஏதும் தவறில்லை. ரத்த பந்தத்தை விட வளர்ப்புமகள் முக்கியமா? என்றுதான் எண்ணத் தோன்றியது நிதீஷிற்கு.

    இன்று கூட வனிதா சொல்லித்தான் ரங்கசாமியை பார்க்க வந்திருக்கிறான். உடன் பிறப்புக்கான உரிமையை நிலைநாட்ட சண்டையிடுகிறார்களே தவிர, அம்மாக்கு மாமாமேல உள்ள பாசம் போகல என்று அன்னையை உயர்வாக நினைத்தவன், தன் மீதான மாமனின் உயிரற்ற பார்வையில், மகள்னு வந்துட்டா மாமாக்கு எல்லாரும் இரண்டாம்பட்சம்தான்னு அம்மா எப்போதான் புரிஞ்சுக்குமோ என நினைத்திருந்தான் கோபமாக.

    ஆனால் வனிதா சொல்லாமல் நிதீஷ் வரமாட்டான் என்றும், காரணமில்லாமல் வனிதா தன்னை பார்க்க அனுமதித்திருக்கமாட்டார் என்றும் ரங்கசாமிக்கு தெரியும் ஆதலால் நிதீசிடம் பேச பிடிக்காமல் மௌனமானார்.

    மாமா பேசலைன்னாலும் நீ அனுசரனையா பேசு. அந்த முல்லை வரும்வரை உன்னை மகனா நினைச்சவங்க என்று அன்னை சொன்னதை நினைத்தவன், “டாக்டர் என்ன மாமா சொன்னாங்க?” என்றான்.

    “டாக்டர் என்னவோ சொல்லட்டும். நீ என்ன விசயமா வந்த?” என்றார் ரங்கசாமி.

   “உங்களை பார்க்கத்தான் வந்தேன்”

   “பார்த்துட்டதான?”

   “ஓ… நான் உங்களை பார்க்க வரது கூட பிடிக்கலயா?” என்றான் ஆற்றாமையோடு.

    “பார்க்கத்தான வந்த? பார்த்துக்க வரலையில்ல?” என்க, நிதீஷ் முகம் வாடிட, “முல்லை என் மகள்ன்றதாலதான் எங்களை பார்த்துக்கிறா. ஆனா நீ… எதோ காரியத்தோட விசாரிக்க வந்திருக்க. இப்போ புரியுதா முல்லைக்கும் உனக்கும் உள்ள வித்யாசம்?” என்றார் எள்ளலாக.

    “ஒரு காரியமாவும் வரல, உங்களை பார்க்கத்தான் வந்தேன்” என இவன் சொல்ல, “நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்ததும், காரியமா வந்தியா? இல்ல உண்மையா என்னை பார்க்கத்தான் வந்தியானு தெரிஞ்சிடும்” என்றவர் “முல்லை எங்க ஜானு” என்றார்.

   “பில் கட்ட போயிருக்கா, ஏங்க?”

   “பாத்ரூம் போகனும்” என்ற நேரம் முல்லை உள்ளே வர, “நான் அழைச்சிட்டு போறேன்த்த” என்று ரங்கசாமியிடம் நெருங்கினான் நிதீஷ்.

   “இப்போ ஒருமுறை செய்துட்டா ஆச்சா? அரைமணி நேரத்துக்கு ஒருமுறை எனக்கு போகனும். எல்லாம் என் மக பார்த்துப்பா” என்று முல்லையை பார்க்க, தந்தை எழ உதவி செய்து தாங்கலாய் அழைத்து சென்று பாத்ரூமினுள் விட்டு, வெளியே வந்தவள் பாதிவரை மட்டுமே கதவை சாற்றி திரும்பி நின்றாள்.

    பின்னே ரங்கசாமி குரல் கொடுக்க, உள்ளே சென்று கை தாங்கலாய் அழைத்து வந்து பெட்டில் படுக்க வைத்து, நிதீஷ் இருப்பதால், “நான் வெளில இருக்கேன்ப்பா” என்று வெளியேறினாள் முல்லை.

   முல்லையின் முன்னே தனது உதவியை நிராகரித்த கோபத்தில் கிளம்பியிருந்தான் நிதீஷ்.

    நிதீஷ் சென்றதும் சோர்வாய் கண் மூடினார். கணவனின் முக வாட்டத்தில் கவலையாகிட “என்னதான்ங்க பண்ணுது? ஒரு இட்லியாவது சாப்பிடுங்க, அப்போதான தெம்பு வரும்” என வருந்தினார் ஜானகி.

   “நமக்கு பின்னாடி மகளுக்கு யார் ஆதரவுனு நினைச்சா சாப்பாடு உள்ள இறங்கமாட்டேங்குது ஜானு” என்று கண்ணீர் விட, “ஏங்க அப்படி நினைக்கிறிங்க? மகளை நல்ல இடத்துல ஒப்படைச்சிட்டுதான் நாம போவோம். இப்படி பேசாதிங்க” என்று ஜானகியும் கலங்கினார் வேதனையோடு.

   “இல்ல ஜானகி, நாலு நாளா முல்லை தனியாளா படாத பாடுபடுறா, தைரியம் சொல்லக் கூட ஆளில்ல. முல்லை முகம் ரொம்ப வாடியிருக்கு” என்று வருந்தியவர், “அநாதை ஆஸ்ரமத்துல இருந்திருந்தாளாவது நிறைய பேர் துணையா இருந்திருப்பாங்க. எனக்கென்னவோ முல்லையை தத்தெடுத்து அவ வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிட்டோம்னு வேதனையா இருக்கு.

    மகளுக்காகவாவது கொஞ்சமா சாப்பிட முயற்சி செய்ங்கனு நேத்து அந்த நர்ஸ் சொன்னதை கேட்டயில்ல? நமக்காக நம்ம பொண்ணு படுற அவஸ்த்தையை பார்த்துதான் அப்படி சொன்னாங்க. வயசான காலத்துல நம்மளை கவனிச்சிக்க முல்லையை தத்தெடுத்தமாதிரி ஃபீலாகுது ஜானு. அவளுக்கான வாழ்க்கையைப் பத்தி யோசிக்கும் சூழலை கூட நாம கொடுக்கலை.

   இந்த வயசுல காதலிக்காத பிள்ளைகள் ரொம்ப குறைவு. நம்ம பொண்ணுக்கு அப்படியும் ஏதும் இல்ல, சொல்லப்போனா உயிர் தோழிகள்னு கூட யாருமில்ல, நம்மளையே சுத்தி சுத்தி வந்திட்டிருக்கா. பாசம்ன்ற பேர்ல முல்லை வாழ்க்கையை சூனியமாக்கிட்டோம்” என்றார் வேதனையாக.

   “எனக்குத்தான் அன்பு, பாசம் எல்லாத்தையும் மொத்தமா காட்ட நீங்க இருக்கிங்களே, உங்க முன்ன காதல்லாம் ஒரு விசயமாப்பா?” என தவித்தாள் மகள்.

   மகள் நின்றிருப்பதை அறியாமல் விட்டேனா என வருந்தி, “பில் கட்டியாச்சாடா?” என்றார்.

   “அப்போவே கட்டிட்டேன்ப்பா” என்க, பிறகுதான் நிதீஷ் இருப்பதால் வெளியேறியிருக்கிறாள் என்பதையே உணர்ந்து, எப்படி மகளை கரையேத்துவது என்று முல்லையையே பார்த்திருந்தார் பெரும் கவலையாக.

    தந்தையின் கவலையை சகிக்க முடியாமல் “வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வரேன்ப்பா” என்று வெளியேறினாள் முல்லை. மருத்துவமணை வளாகத்தில் வந்தமர்ந்து யோசித்தவளுக்கு என்ன செய்வதென்றுதான் புரியவில்லை.

   தனக்கு திருமணத்தை நடத்தி வைக்கும்வரை தந்தையின் உடலும் மனமும் தேறாது. வீட்டிற்கு வந்ததும் மீண்டும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார். நான் திருமணத்திற்கு மறுத்தால் தன்னை கடிய மாட்டார். ஆனால் மனமும் உடலும் வலுவிழந்திடும். அப்பாவை நினைத்து அம்மா வருந்துவாங்க.

   எல்லாம் புரிந்தாலும் வேறொருவனோடு திருமணத்தை நினைக்க அத்தனை வேதனையாக இருந்தது. ஒருநாளும் அன்பரசோடு பழகியதில்லை. பத்து நாள் அவனை மனதில் சுமந்தது இத்தனை தாக்கத்தை தருமா? மனதினுள் இருப்பவனை எப்படி துரத்துவது என்ற வழிதெரியாமல் அமர்ந்திருந்தாள்.

    அரைமணிநேர அமைதிக்குப் பிறகு, ஹம்… என்ன பெரிய காதல்? பத்து நாள் அவனை நினைத்திருந்தோம், அவ்வளவுதானே? ஆறுமாதம், ஒரு வருடம் காதலித்து பிரேக்கப் ஆகிடுச்சு என்று எத்தனை தோழிகள் சொல்லியிருக்காங்க. அவங்கள்லாம் வாழலையா?

    தன்னை உயிராய் வளர்த்தவர்களை விடவா அவன் நினைவு முக்கியமாகிவிடும்? இல்லை… உலகத்துல யாரையும் விட என் அப்பாம்மாதான் எனக்கு முக்கியம். அவங்களுக்காக வெறும் பத்துநாள் நினைத்தவனை மறக்க முடியாதா என்ன? என்று தன்னை தேற்றி வீட்டிற்கு கிளம்பினாள்.

   மகளுக்கு தற்போதுதான் இருபத்தி இரண்டு வயது. திருமணத்திற்கு அவசரம் என்றெல்லாம் இல்லை. அதிக நாள் தள்ளி போடவில்லை என்றாலும் ஒரு வருடம் கழித்தாவது பண்ணலாம். கணவன் உடல் நன்றாக இருந்தால் முல்லையும் திருமணத்தை பற்றி யோசிப்பாள் என்பதுதான் ஜானகியின் எண்ணம்.

   ஆனால் மகள் திருமணத்தை முடிக்காமல் கணவன் மனம் நிலைகொள்ளாது என்பதால் “ஏங்க மேட்ரிமோனியில பயோடேட்டா அப்லோட் செய்யலாம்ங்க, நமக்கு வரன் பிடிச்சிருந்தா டிடெக்டிவ் வச்சி விசாரிச்சு அதுக்கப்புறம் முல்லைகிட்ட பேசலாம்” என்றார் ஜானகி.

   “ஆமாம்ல ஜானு… இப்படியொன்னு இருக்கிறதையே மறந்துட்டேன்” என்று சற்றே நிமிமதியானார் ரங்கசாமி. மேலும் இரண்டு நாள்கள் மருத்துவமணையில் இருந்து வைத்தியம் பார்க்கவே, மகளுக்கு வரன் பார்க்கும் ஆவலில் மனம் சற்று லேசாக உணர, உடலும் சற்று ஒத்துழைத்தது.

    இன்னைக்கு வீட்டுக்கு போகலாம் என்று மருத்துவர் சொல்ல, வீட்டிற்கு வந்தனர். முல்லையின் முகம் வெகுவாய் சோர்ந்திருக்க, மருத்துவமணைக்கும் வீட்டிற்கும் அல்லாடிய அலுப்பு என நினைத்து “போய் ரெஸ்ட் எடும்மா” என்றார் ரங்கசாமி.

   பின்னே தானும் குளித்து, பூஜையறை சென்று கடவுளை வணங்கி, உண்டு, ஓய்வெடுத்து மாலை நான்கு மணிபோல் மகளின் அறையைப் பார்த்தார் ரங்கசாமி.

   “எழுந்தாச்சாப்பா?” என்றபடி மொபைலை ஆஃப் செய்தாள்.

   “ம், லேப்டாப்பை எடுத்துட்டு ஹாலுக்கு வாடா” என்று சோபாவில் அமர, ‘வேலைக்கு அப்ளை பண்ண சொல்வாரோ?’ என்ற யோசனையோடு தந்தையிடம் வந்தவள், “நான் வேலைக்கெல்லாம் போகமாட்டேன்ப்பா” என்றாள் உறுதியாக.

    ரங்கசாமி சிரிக்கவே, “நீங்க இன்னும் ஸ்ட்டியா நடக்கவே ஆரம்பிக்கல, என் ரூம்லயிருந்து ஹாலுக்கு வரதுக்குள்ள இரண்டு முறை சுவரை பிடிச்சிட்டிங்க. எத்தனை சொன்னாலும் வீட்டுக்கு வராம உங்களோடவே ஹாஸ்பிட்டல்ல இருந்து அம்மாவும் டல்லாகிட்டாங்க. இப்படி நிலைமைல நான் வேலைக்கு போயே ஆகனுமாப்பா?” என்றாள் சிறு கோபத்தோடு.

    “வேலைக்கு போகவேணாம்டா, போய் லேப்டாப் எடுத்துட்டு வா” என்றார் மீண்டும்.

    வேலைக்கு போக வேண்டாம் என்பதில் ஆசுவாசமானவள் அறைக்கு சென்று லேப்டாப்பை எடுத்து வர, “உக்கார்ந்து ஓபன் பண்ணு” என்றார்.

   முல்லை சொன்னதை செய்ய, “மேட்ரிமோனி ஓபன் பண்ணு” என்றதும் முல்லை அதிர்வாக, “பண்ணுடா” என்றார்.

   “இரண்டு வருசம் போகட்டும்ப்பா” என்றாள் கெஞ்சலாக.

   “எனக்கும் உன்னை வற்புறுத்த கஷ்டமாதான்டா இருக்கு. ஆனா அப்பாக்கு டைம் இல்லையே. உன்னை செட்டில் ஆக்காம போய்டுவேனோனு பயமாயிருக்கு. அதைவிட நான் போன பின்ன நீ கல்யாணமே செய்துக்காம இருந்திடுவியோனும், இல்ல யாரையாவது நம்பி கல்யாணம் செய்து, ஆதரவில்லாத பொண்ணுதானேனு உன்னை கொடுமை படுத்துவானோனு மனசு கண்டபடி யோசிக்குதுடா. என்னால நிம்மதியா இருக்க முடியல” என்றார் வேதனையாக.

    தந்தையின் வேதனை தாளமுடியவில்லை என்றாலும் திருமணம் செய்ய மனம் மறுக்க, என்ன சொல்வதென்று புரியாமல் தவித்திருந்தாள் முல்லை.

    “வாழ்க்கையில முக்கியமான விசயம் கல்யாணம். மனசுக்கு பிடிச்சி விரும்பி செய்ய வேண்டிய வைபவம். ஆனா எனக்கு வயசாகிடுச்சேனு உன்னை படுத்துறேன்லடா?” என்றார் அதீத வருத்தத்தோடு.

    “அப்படிலாம் இல்லப்பா” என்று முல்லை தவிக்க, “அப்பா சொல்ற மாதிரி செய் முல்லை. உனக்கு கல்யாணம் செய்தாதான் அவருக்கு தெம்பு வரும்” என்று ஜானகியும் சொல்ல, தன்னை நினைத்தே மீண்டும் நெஞ்சுவலி வந்திடுமோ என்ற பயத்தில் தந்தை சொன்னதை செய்தாள் முல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!