Skip to content
Post Views: 13,865
மேலும் பத்து நாள்கள் முடிந்திருக்க, முன்னறிவிப்பின்றி சத்யனும் சரவணனும் வீட்டிற்கு வந்தனர். மாதவன் இன்ஸ்டியூட்டிலிருக்க, கல்பனா சமையலறையில் இருந்தார்.
அன்பரசு வீட்டிலில்லாததால் ஜனனியை பார்த்துக்கொள்ள வந்திருந்த சுகந்தி, ஜனனியை பாட்டு க்ளாஸில் விட்டு வந்து நாளைக்கு பள்ளியில் கொடுக்க வேண்டிய ப்ராஜக்ட்டை மகளுக்காக செய்து கொண்டிருந்தாள்.
யாரோ நிற்பதுபோல் தோன்ற திரும்பியவளின் முகம் ஆனந்த அதிர்வில் பரவசமடைந்து பின்னே சில நொடிகளில் கோபமாய் மாறியது. சுகந்தியின் பாவனையில் இருவரும் மௌனமாய் சிரிக்க, “இரண்டு நாள் முன்ன கூட அம்மாகிட்ட பேசின… ஏன்டா வரேனு சொல்லல?” என சத்தியனை முறைத்து, “எவளோ ஒருத்திகிட்ட ஏமார்ந்தது மட்டுமில்லாம, உன்னோட இயலாமைக்கு பெத்தவங்களையும் சொந்த பந்தங்களையும் மறந்தவனுக்கு இங்க என்ன வேலை? இரண்டு பேரும் வெளில போங்கடா” என்று சரவணனையும் அதட்டினாள் உரிமையாக.
கிச்சனில் குழம்பு தாளித்து, இட்லிக்கு ஊத்திக்கொண்டிருந்த கல்பனாவிற்கு மகளின் குரல் அரைகுறையாக கேட்க, “யார்கிட்ட பேசிட்டு சுகந்தி?” என குரல் கொடுத்தார்.
Advertisement
“பிச்சைக்காரனுங்கம்மா, திட்டினாலும் போகமாட்டேங்குறானுங்க” என்றாள் சிரிப்பை உள்ளடக்கி.
உண்மையில் பிச்சைக்காரனோ என நினைத்த கல்பனா, “எதுக்கு துரத்துற சுகந்தி? அஞ்சோ பத்தோ கொடுத்தனுப்பு. பாவம்” என்றார்.
“உண்மையா பிச்சை கேட்டுத்தான் வந்திருக்கேன்” என்றபடி சத்யன் உள்ளே வர, பின்னோடு சிரித்த முகத்தோடு சரவணனும் உள்ளே வர, “ம்மா உள்ள வரானுங்க, வந்து துரத்திவிடு” என்றாள் பயந்தவள்போல்.
Advertisement
என்ன? உள்ள வராங்களா என்ற பதட்டத்தோடு வெளியே வந்த கல்பனா அதிர்ந்து நின்றார். அண்ணன் மகன்களைப் பார்த்த சந்தோசத்தில் தானாய் கண்கள் கலங்கியது. “எப்படி இருக்கத்த?” என்று அன்போடு அணைத்துக்கொண்டான் சத்யன்.
Advertisement
“உடம்பு கல்லுகண்டா நல்லாத்தான் இருக்கு. ஆனா மனசு…” என இழுத்தவர், “ஆளுக்கொரு திசையில நீங்க இருக்கும்போது சந்தோசமாவா இருக்க முடியும்? எதோ இருக்கோம்” என ஆற்றாமையோடு சொல்லி, “இப்போதான் வர தோணுச்சா?” என்று பிணங்கினார்.
சரவணன் “ஹம்… இப்போதான் தோணுச்சு போலத்த” என்றான் சுகந்தியை பார்த்தவாறு.
“இரண்டு பேரையும்தான்டா கேக்குறாங்க” என சுகந்தி சத்யனை முறைக்க, “எரும… போய் குடிக்க எதாவது கொண்டு வா” என சத்யன் அதட்ட, சத்யனின் பழைய அழைப்பில் சுகந்தி மனம் இதமானது.
Advertisement
ஆனாலும் காட்டிக்கொண்டால் உரிமையோடு தனது மறுமணத்தை பற்றி பேசுவான் என, “முகம் கையாவது கழுவிட்டு வாங்கடா” என கட்டளையிட்டு கிச்சன் சென்றவள், அடுப்பில் டிகாஷனை வைத்து, தண்ணீரோடு வந்தாள்.
“எவ்வளோ கொழுப்பிருந்தா பிச்சக்காரனுங்கனு சொல்லுவ?” என கல்பனா மகளை முறைக்க, “இவனுங்க தாடியும், தலை முடியையும் பார்த்ததும் அப்படித்தான்மா தோணுச்சு” என்றாள் சிரிப்போடு.
“என் பொண்ணுக்கு பெரியம்மான்றதால மன்னிச்சு விட்டுடலாம் விடுத்த” என்று சுகந்தியிடம் தண்ணீர் சொம்பை வாங்கினான் சத்யன்.
“எதே… உன் பொண்ணா? வெக்கமாயில்ல அப்படி சொல்ல?” என சுகந்தி உண்மைக் கோபத்தோடு கேட்க, “அதானே?” என சுகந்திக்கு ஆதரவளித்தான் சரவணன்.
“சரி எரும… என் பொண்ணுனு சொன்னது தப்புதான். நம்ம பொண்ணு” என்று உள்ளடக்கிய சிரிப்போடு சொன்னவன், “இப்போ கோபம் போச்சா?” என்றான்.
சத்யனின் நம்ம பொண்ணு என்ற வார்த்தையில் சரவணன் அர்த்தமாய் சிரிக்க, சத்யனின் எண்ணம் புரியாமல், தான் இங்கிருந்து ஜனனியை பார்த்துக்கொள்வதால் அப்படி சொல்கிறான் என நினைத்த சுகந்தி, “ம்… இது பேச்சு. ஆனாலும் எஸ். ஜனனின்றதால அந்த நம்மன்றதுல உன்னை சேர்த்துக்கிறேன். பொழச்சிப் போ” என்றாள்.
“ம்… நான் பொழைக்கனும்னு நினைக்கிற… பெரிய மனசுதான் போ” என அதற்கும் கிண்டலடித்தான்.
சத்யன் இப்படி பேசி நெடுங்காலமாகியிருக்க, “வந்து இவ்வளோ நேரமாகுது? பாப்பாவை கேட்டியாடா?” என்றாள் உரிமையாக.
“பாப்பா இந்த நேரம் பாட்டு க்ளாஸ்ல இருக்கும்னு எனக்கு தெரியாதா?” என்றவன், “எத்தனை வருசம் கழிச்சு இரண்டு பேரும் வந்திருக்கோம். ஒத்த வார்த்த நல்லாயிருக்கியானு கேட்டியா?” என்றான் கோபமாக.
ஆமாம்ல? என நினைத்தாலும், தனது தவறை ஒத்துக்கொள்ளாமல், “எத்தனை வருசம் கழிச்சு வந்தா என்ன? நானே ராஜா நானே மந்திரினு தனிக்காட்டு ராஜாவா உன் இஷ்டத்துக்குதான இருக்க? உன்னை அக்கறையா விசாரிக்கனுமா?” என்றாள் நக்கலாக.
“ராஜாவா இருக்கேனா?” என சுணக்கமாய் சத்யன் கேட்க, சத்யன் முக வாட்டம் தாளமுடியாமல், “வந்ததும் ஏன்டி அவனை படுத்திட்டிருக்க? டிகாஷன் வச்சியே அது நியாபகம் இருக்கா?” என மகளை நொடித்தவாறு டீயோடு வந்தார் கல்பனா.
“அச்சோ ஆமாம்மா… இவனுங்களை பார்த்து அதை மறந்துட்டேன்” என பதறி திரும்பியவள், டீயோடு நிற்கும் அன்னையை பெருமையாக பார்த்தாள்.
“என்னை பார்க்குறதை விட்டுட்டு மாமாக்கு போன் போட்டு சத்யன் சரவணன் வந்திருக்கிறதை சொல்லு” என்றார்.
“வேணாம்த்த, அப்பா இன்ஸ்டியூட்ல இல்ல, டைப் மிஷின் ரிப்பேர் ஆகிடுச்சாம், அதை சரி பண்ண எடுத்துட்டு போயிருக்கார். இன்னும் அரைமணி நேரத்துல வந்திடுவேனு சொன்னார். ஊருக்குள்ள வந்ததும் அப்பாக்கு போன் செய்துட்டுதான் வந்தோம்” என்றான் சரவணன்.
“சரி பேசிட்டிருங்க, நான் போய் ஜனனியை கூட்டிட்டு வந்துடறேன், க்ளாஸ் முடியும் டைம் வந்துடுச்சு” என்று சுகந்தி கிளமபப்பார்க்க, “இரு சுகந்தி, நானும் வரேன்” என்றான் சத்யன்.
“அப்போ நான் எதுக்கு? நீயே போய் அழைச்சிட்டு வந்திடு. அம்மா எங்களுக்கு மட்டும்தான் சமைச்சிருக்கும், நான் உங்களுக்கு எதாவது சாப்பிட செய்யிறேன்” என்றாள்.
“எனக்கு க்ளாஸ் எங்க இருக்குனு தெரியாது. என்னோட வந்து வழி காட்டு” என்றவன், “அத்த அன்பு பைக் கீ எங்க வைப்பான்?” என்றான்.
“வழி சொல்ல என்னடா இருக்கு? பொறந்ததுலயிருந்து ஃபாரின்லயே இருந்த மாதிரி பில்டப் பண்ற… நம்மூர் நகைக்கடை இருக்குல்ல? அங்க ரைட்ல போனா நாலாவது பில்டிங். அதுதான் நம்ம பாப்பா பாட்டு க்ளாஸ் இருக்கு”
“ப்ச், என்னை பார்த்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவானு தெரியல, அங்க இருக்கவங்க நீ யாருனு கேட்டா அப்பானு சொன்னா நம்புவாங்களா தெரியாது. நீ கூட வாயேன்” என்றான்.
“சங்கடப்பட்டுட்டுதானே கூப்பிடுறான். வழக்காடுற நேரம் போய்ட்டுதான் வாயேன் சுகந்தி” என்று சத்யனிடம் சாவியை கொடுத்தார் கல்பனா.
“இப்போ சங்கடப்பட்டு என்ன பிரியோஜனம்? பிள்ளையை கூட பார்க்க வராம கல் மனசா இருந்தவன் இதையெல்லாம் சந்திச்சுதானே ஆகனும்?” என்ற நொடிப்போடு பைக்கில் அமர்ந்தாள்.
“என்னை திட்டுறதை நிறுத்திட்டு நல்லா பிடிச்சிக்கோ, விழுந்துட போற” என இவனும் அதட்டி பைக்கை கிளப்பினான்.
இருவரையும் கண்நிறைந்து பார்த்தான் சரவணன். “இட்லி இருக்கு சரவணா, வந்து சாப்பிடு. பாப்பாக்கு தோசை ஊத்திக்கலாம்” என்றார்.
“இல்லத்தா, பாப்பா வந்திடட்டும்” என்றான்.
“அன்பும் நாளைக்கு வந்திடுவான். ரொம்ப வருசம் கழிச்சு வீடு நிறைஞ்சிக் கிடக்கும்” என்றார் நெகிழ்வாக.
அன்பரசு நாளை வருவான் என இவர்களுக்கும் தெரியுமே. அவனின் ஓய்வுநாள் எப்போதென்று கேட்டு அதற்கு தகுந்தபடிதானே இவர்கள் கிளம்பியது.
அத்தையோடு பேசிக்கொண்டிருந்தாலும் சத்யன் சுகந்தி திருமணம் எப்படி சாத்தியமாகப்போகுதோ என்ற யோசனையில் ஆழ்ந்தான் சரவணன்.
பைக்கில் செல்லும்போதுதான் திருமணம் செய்யும் எண்ணமில்லாமல் வீட்டிற்கு வரக்கூடாது என்று அன்பு கட்டளையிட்டிருந்தது நியாபகம் வர, “என்னடா ஊருக்கு வந்திருக்க? கல்யாணம் செய்துக்க போறியா?” என்றாள் ஆர்வமாக.
சத்யனின் மனம் பதைத்து அடங்க, சில நொடி மௌனம் காத்தான். “என்னடா பேச்சை காணோம்?” என கேட்டு, “ஓ… அதான் அன்பு இல்லாத நேரமா பார்த்து வந்திருக்கியா? உன் நினைப்பு தப்பு சத்யா. அன்பு நாளைக்கு வரப்போறான்” என்றாள்.
அதற்கும் சத்யனிடம் பதிலில்லாமல் போக, “சும்மா கிண்டலுக்குத்தானே கல்யாணம் செய்துக்கப்போறியானு கேட்டேன்? இதுக்கே உர்ருனு இருக்க? வண்டியை நிறுத்துடா, இப்படி முகத்தோட ஜனனிம்மாவை கூப்பிட போக வேண்டாம். நான் தனியா போய் கூட்டிட்டு வரேன்” என்றாள் கோபமாக.
“என் கல்யாணத்தை பத்தி பேசினா, நான் உன் கல்யாணத்தை பத்தி பேசுவேன். ஓகேவா?” என்றான்.
கோபம் வந்தபோதும், ‘நான் பேசல, நாளைக்கு அன்பு வருவான், அவன்கிட்ட என்ன சொல்றனு பார்ப்போம்’ என நினைத்துக்கொண்டாள்.
“உன் கல்யாணத்தை பத்தி பேசினா மட்டும் வாய் லாக் ஆகிடுமே” என கடிந்தவன், “இறங்கு” என்றான்.
பிறகுதான் சுற்றுப்புறத்தை பார்க்க, ஜனனியின் பாட்டு க்ளாஸிற்கு வந்துவிட்டோம் எனப்புரிந்து இறங்கினாள்.
“உள்ள இருப்பா, போய் கூட்டிட்டு வா” என்று சுகந்தி சொல்ல, “ப்ச் வா” என்று சுகந்தியின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே போனான்.
“விடு சத்யா, பார்க்குறவங்க எதாவது நினைக்கப்போறாங்க” என்று இவள் முணுமுணுக்க, “என் எருமைடீ நீ. பார்க்குறவங்களுக்காகலாம் என்னால யோசிக்க முடியாது” முறைத்தவன் கையை பிடித்தவாறே உள்ளே சென்று மகளை பார்த்த பின்னேதான் சுகந்தி கையை விடுவித்து, மகளுக்காக கையை விரித்தான்.
“பெரியப்பா” என கண்களை அகல விரித்து அதீத மகிழ்வோடு சத்யனிடம் வர, அள்ளி அணைத்துக்கொண்டான் மகளை.
சத்யன் கண்களிலிருந்து கண்ணீர் இறங்க, உணர்ச்சி ததும்பும் அவனின் முகத்தை ஆச்சர்யத்தோடு பார்த்திருந்தாள் சுகந்தி. நான்கூட பொண்டாட்டி செத்ததும் பொண்ணை கூட கண்டுக்காம விட்டுட்டானு நினைச்சேன். இத்தனை பாசத்தை வைத்துக்கொண்டுதான் பிரிந்திருக்கிறானா? என நெகிழ்வாய் பார்த்திருக்க, “ஜனனியோட பெரியப்பாவா நீங்க?” என்று ஆசிரியர் கேட்க, ஆம் என்பதாய் தலையசைத்தான்.
தள்ளி நின்ற சுகந்தியிடம், “ரொம்ப வருசம் கழிச்சு சேர்ந்துருக்கிங்களா? கங்ராட்ஸ்” என்று வாழ்த்து சொல்லி ஆசிரியர் கிளம்ப விதிர்த்து போனாள் சுகந்தி.
“எப்போ வந்திங்க பெரியப்பா?” என மகள் கேட்ட அனைத்திற்கும் பொறுமையாய் விடையளித்துக்கொண்டிருக்க, “அந்த டீச்சர் கேட்டதை பார்த்ததான? வீட்டுக்கு போய் கொஞ்சிக்கலாம் வாடா” என முணுமுணுத்தாள் கடுப்பாக.
உள்ளுக்குள் சிரித்தவன், “ரொம்ப வருசம் கழிச்சுதானே சேர்ந்துருக்கோம்? உண்மையைதானே சொன்னாங்க?” என புரியாதவன் போல் கேட்டு, “வாடா” என்று மகளோடு பைக்கருகே சென்றான்.
உண்மையில் இவனுக்கு புரியலையா? இல்லை மகளை கண்டதில் வார்த்தையின் வீரியத்தை கவனிக்கவில்லையா? என்ற யோசனையோடு பைக்கில் ஏறியவள், வீடு வரும்வரை ஏதும் பேசவில்லை.
ஒருமணி நேரம்வரை மகளோடு பேசிக்கொண்டிருந்தான். பின்னே, தந்தைக்கு அழைக்க, அழைப்பை ஏற்றவர், “என்னடா?” என்றார்.
“இன்னும் காணோமே? வர லேட்டாகுமாப்பா?”
“நான் இன்ஸ்டியூட்லதான் இருக்கேன், இரண்டொரு நாள் கூத்து கட்ட வந்துருக்கவனுங்களை பார்க்க பிடிக்காமத்தான் வீட்டுக்கு வரல” என கர்ஜித்து இணைப்பை துண்டித்தார் மாதவன்.
தந்தை இப்படி கோபப்படுவார் என நினைத்தே பார்க்கவில்லை சத்யன். அப்படியானால் கோபத்தில்தான் ஒருவாரமாக தன் அழைப்பை ஏற்கவில்லையா? எத்தனை வருடம் கழித்து வந்திருக்கிறோம்? பார்க்கும் ஆசை இல்லையா? என்று மனம் வலிக்க, ஒரு வாரம் முன்புவரை போனில் பேசும்போது நன்றாகத்தானே பேசினார்? தற்போது என்னவாகிற்று என்று புரியாமல் தவித்தான் சத்யன்.
“என்ன சத்யா? அப்பாக்கு என்னாச்சு? ஏன் இன்னும் வரல?” என சரவணன் விசாரிக்க, சத்யன் தந்தை சொன்னதை சொல்ல, “பத்து நாளாவே அண்ணன் முகமே சரியில்ல, மனசுல எதையோ உழட்டிட்டிருக்கு. போய் என்ன ஏதுனு விசாரிச்சு சமாதானம் செய்து கூட்டிட்டு வா சத்யா” என்றார் கல்பனா.
சத்யன், சரவணன் இருவரின் முகத்தையும் பார்த்த சுகந்திக்கு பாவமாகிப்போக, “நானும் வரேன், வா சரவணா” என்றாள் ஆறுதலாக.
மாதவன் வர தாமதமானால் வழக்கமாய் கல்பனாவின் மொபைலிலிருந்து தாத்தாவிற்கு அழைக்கும் ஜனனி, இன்றும் அழைக்க, மாதவன் அழைப்பை ஏற்க, “தாத்தா, பெரியப்பா சித்தப்பாலாம் வந்துருக்காங்க, சீக்கிரம் வாங்க” என்றாள் ஆர்பரிப்போடு.
“தாத்தா வெளில இருக்கேன்டாம்மா, நீ சாப்பிட்டு ஹோம்ஒர்க் பண்ணு” என்று தன்மையாய் சொல்லி இணைப்பை துண்டித்தார்.
சத்யன், சரவணனிற்கு பசியே மறுத்து போனது. இவர்களை உண்ண வற்புறுத்தி தோல்வியடைந்த சுகந்தி ஜனனியை உண்ண வைத்து உறங்க வைத்தாள்.
இரவு பதினொரு மணிக்கு மேல் வீட்டிற்கு வந்த மாதவன், மகன்களிடம் பேசாமல், சுகந்தியை பரிமாற சொல்லி உண்டு, அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டார்.
சுகந்தியும் கல்பனாவும் உண்ணவேண்டுமென, “சாப்பாடு போடுத்த” என்று அமர்ந்தான் சத்யன். பின்னே சரவணனும் வர, நால்வரும் உண்டு உறங்க சென்றனர். ஆனால் மாதவனின் பரிமாணத்தை நினைத்து ஒருவரும் நேரத்தோடு உறங்கவில்லை. நள்ளிரவிற்கு மேல்தான் உறங்கினர்.
error: Content is protected !!