Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 6

அத்தியாயம் 6

அந்த வளாகத்தின் வெளிப்புற கார் பார்க்கிங் அருகே தலையில் கட்டோடு, வீங்கிய புருவங்களோடு மாலை ஆறு மணிக்கு, பாவமாய் நின்றிருந்தான் கோவர்த்தன். நெற்றியில் போட்டிருந்த ஏழு தையல்கள் வேறு கண்ணை சுருக்கினாலே ‘சுருக்;சுருக்’கென இழுத்தது.



Advertisement

நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு என்ற கதையாக தான் அன்று அவன் பேசியது. ஒருவேளை, இப்படியும் இருக்கக்கூடும் தானே என்று முழுதாய் பேசி முடிக்கும் முன்னே இந்த கொலைவெறி தாக்குதலை பெண்ணவளிடம் இருந்து வைத்தியன் எதிர்ப்பார்க்கவில்லை.

அந்த வெளிநாட்டுக்காரி அடித்தது கூட வெளிக்காயத்தோடு போய்விட்டது, பாதகத்தி இவள் அடித்ததோ, கபாலத்தையே கலங்கடித்து விட்டதே!

Advertisement

Advertisement

‘ஆளுக்கு தகுந்தமாறி பேசித்தொலைய வேண்டியது தானே டா! இந்த மண்டவலி தேவையாடா உனக்கு…’ நெற்றியை லேசாக அழுத்திவிட்டபடி தன்னையே நொந்துக்கொண்டு அங்கே நின்றிருந்தான் கோவர்த்தன்.

அடித்த அடியின் தாக்கம் சற்று குறைந்து வெயிலில் வெளியே வரவே ஒரு வாரம் பிடித்துவிட்டது. வந்ததும் வராததுமாக இங்கே தான் வந்து நிற்கிறான்.

Advertisement

ஒரு வாரமாய் மருத்துவமனையில் வேறு ஒரே கேலி கூத்து தான்.

‘வரவங்களுக்கு வைத்தியம் பாக்க நீங்க இருக்கீங்களா, இல்ல உங்களுக்கு வைத்தியம் பாக்க நாங்க இருக்கோமான்னு தெரியலையே’ என்று அவனுக்கு தையல் போட்ட மருத்துவர் சொல்ல, அதைக்கேட்டு அந்த செவிலிப்பெண்கள் கிளுக்கி சிரிக்க, ஒரே அவமானமாய் போய்விட்டது. அதோடு போனதா? இந்த சேதி காட்டுத்தீ போல மருத்துவமனை முழுக்க பரவி, ‘அடிவாங்கி டாக்டர்’ என்ற அவப்பெயரை வேறு வாங்கிக்கொடுத்துவிட்டது.

இதில் குற்றவுணர்ச்சி வேறு! இந்த அளவு கோபம் வர வேண்டும் என்றால் தன் பேச்சு அந்த பெண்ணை எத்தனை பாதித்து இருக்க வேண்டும் என்று!

பத்தடி தள்ளி நின்றாவது தக்க பாதுகாப்போடு ஒரு மன்னிப்பை கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான், ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கேமிங் கம்பெனி ஒன்றின் பார்கிங்கில் தலைக்கடுக்க நின்றுக்கொண்டிருக்கிறான்.

உள்ளே ஒன்பதாவது மாடியில் ஆவிபறக்கும் ‘கபே கான்லேச்சே’ முன்னே உணர்ச்சிகளற்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள் வாணிலா. அங்கே அவளுக்கு பெரிதாய் வேலை ஒன்றும் இருக்கவில்லை. சில நாட்கள் முன்பு தான் புதிய கேம் ஒன்றை டிசைன் செய்து கொடுத்திருந்தாள். அது சந்தைக்கு வர வேண்டிய வேலைகள் மும்முரமாய் நடந்துக்கொண்டிருக்கிறது. அது வெளியாகி வெற்றிநடை போடும்வரை இவளுக்கு பெரிதாய் வேலை இல்லை.  அடுத்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்க அவசரமும் இல்லை.

சும்மாவே இருக்க முடியாமல் மற்றவர் வேலையை கூட இழுத்துப்போட்டு செய்துக்கொண்டிருந்தாள். ஓரிரண்டு நாட்களாய் அதுவும் இல்லை. சிறிய வெகேஷன் ஒன்றுக்கு செல்ல எல்லாரும் முடிவு செய்ய, அதன் பேச்சுக்கள் தான் ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்கு போகும் எண்ணம் துளியும் இல்லை என்பதால் அங்கிருந்து நகர்ந்து ஒரு ‘காபி’ குடிப்போம் என மேல்தளத்துக்கு வந்திருந்தாள்.  இப்போது வந்த வேலையை கூட மறந்து எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள்.

“ஹே, என்ன பண்ற இங்க?” ஸ்பேனிஷ் மொழியில் கேட்டபடி அவள் தோள் தட்டினான் ஒருவன். அதில் கலைந்தவள், “ஹான்? ஜஸ்ட் காஃபி” என்று சொல்ல, “லேட் ஆகிடுச்சு, எல்லாரும் கிளம்பிட்டோம்!” என்றான் ஆங்கிலத்தில் அறிவிப்பாய்.

“நானும் கிளம்பிடுவேன்” அவள் சொல்ல, “ஓகே, ஹஸ்த லுயோகோ” (see you later) என்றவனும் கிளம்ப, காத்துக்கொண்டிருந்த காபியை வீணடிக்க மனமின்றி ஒரே மூச்சில் பருகிவிட்டு கிளம்பினாள் வாணிலா.

தன் தோள்பையோடு கிளம்பி அவள் கீழ வர, அவளை தொலைவிலேயே கண்டுக்கொண்டான் கோவர்த்தன். சற்று பரபரப்பாக உணர்ந்தான். எப்படியும் ஒரு வாரம் கடந்துப்போனதில் அவள் கோபம் மட்டுப்பட்டிருக்கும், அவளுமே தன்னை அடித்ததற்கு வருந்தியிருப்பாள், நாம் அதை பெரிய மனதாய் மறந்து, மன்னித்து, ‘இட்ஸ் ஓகே’ என்ற வார்த்தையோடு கடந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நிற்க, அடி அடியாய் நடந்து அவனருகே கூட வந்துவிட்டாள்.

“நில்….” அவன் ஆரம்பித்து, “ஆஆ” என பேரை சொல்லி முடிப்பதற்குள் அவனைத்தாண்டி சென்றிருந்தாள் அவள்.

‘போறவன் வரவன் கூட என் நெத்திக்கட்டை உத்துப்பார்த்துட்டு போறான். இவளுக்கு நான் நிக்குறதே தெரியலையா என்ன?’ என்ற திகைப்போடு சில அடிகள் தாண்டி சென்றவளை வேகமாய் சென்று இடைமறித்து, “ஹே நிலா!” என்றான் சிரிப்புடன்.

‘யார்ரா நீ!’ என்ற அந்நியப்பார்வை அவளிடம்.

“என்னை பாக்கலையா நீங்க?” அவன் கேட்க, “யார் நீங்க?” என்றாள் அவள்.

திகைத்தவன், ‘அடி பட்டது எனக்கா இல்ல அவளுக்கா?’ என்று தோன்ற, “விளையாடாதீங்க நிலா” என்றான்.

“அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்ல. கொஞ்சம் நகர்ரீங்களா?” நிர்மலமான முகத்துடன் அவள் கேட்க, இவன் தான் பேந்த பேந்த விழித்தான். அவன் முழித்துக்கொண்டு நின்ற கேப்பில், கேபில் (cab) ஏறி சென்றுவிட்டாள் அவள்.

            காரைக்குடிக்காரன் அத்தோடு விட்டானில்லை. கஜினி முகமதுவாய் மீண்டும் கிளம்பினான்.

மாலை ஆறு மணி! அதே நேரம்!

கார்ப்பார்க்கிங்! அதே இடம்!

சற்று நேரத்திலேயே அவளும் வந்தாள்.

நேற்றாவது கடந்து சென்றாள். இன்றோ கண்டுக்கொள்ளவே இல்லை. இவன் அழைக்க அழைக்க நிற்காமல் சென்றே விட்டாள். நம்மூராக இருந்திருந்தால், கையை பிடித்துக்கூட இழுத்திருக்கலாம். அங்கே தப்பித்தவறி பொது இடத்தில் அப்படி செய்து சிக்கினால்,  ‘பெனிடென்ட்ரி’யில் (ஜெயில்) கிடந்து ‘பிராத்’ (சூப்) குடிக்க வேண்டியதாய் இருக்கும்.

இரண்டாம் நாள் முயற்சி செய்யும்முன்பே தோல்வியை தழுவினான் அவன்.

‘யார் இவள்? எங்கிருந்தோ வந்தாள்! தமிழ்க்காரி என்ற ஒரே காரணத்துக்காக அவளிடம் இப்படி தொங்க வேண்டுமா என்ன? சர்த்தான் போடி!’ என்று உதட்டை சுளித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன், மறுநாள் மாலை ஆறு மணிக்கு கார்ப்பார்க்கிங்’கில் காத்து நிற்கவில்லை.

அவன் என்ன ரோஷம் இல்லாதவனா? இரண்டு நாட்கள் நின்று பார்த்ததிலேயே தெரிந்துப்போனது அவள் ஆறரைக்கு மேல் தான் வருவாள் என்று! அதனால் அன்று சரியாய் ஆறு முப்பதுக்கு சென்று நின்றான். சில நிமிடங்களிலேயே அவளும் வந்தாள்.

எப்படியும் கண்டுக்கொள்ளமாட்டாள் என்று புரிந்து அவள் அருகே வந்ததும் எதுவும் பேசாமல் அவளுடனே நடக்க ஆரம்பித்தான்.

‘இப்போ எதுக்கு என்னோட வர?’ என்று அவள் கேட்ப்பாள் என அவன் காத்திருக்க, ‘நீ வந்தா எனக்கென்ன, வரலன்னா எனக்கென்ன?’ என்று நடந்துக்கொண்டிருந்தாள் அவள்.

அன்று போல கேபில் ஏறி சென்றுவிடுவாளே என்ற அவன் பதைக்க அவள் நடையை நிறுத்தியப்பாடில்லை. அவனும் சளைக்காமல் உடன் நடந்தான். பத்து நிமிட வேக நடையில் அவள் கால்கள் ஒரு பெரிய அப்பார்ட்மென்ட்டை சென்றடைய, அவன் அங்கேயே தேங்கிவிட்டான்.

அவள் வீட்டுக்கு வந்துவிட்டாள் என்று புரிந்தது. இதுவரை அவள் இருப்பிடம் எங்கு என்பதை பற்றி அவன் பெரிதாக கேட்டுக்கொண்டதில்லை.

கீழே லிப்டுக்காக அவள் பொத்தானை அழுத்திவிட்டு நிற்க, சற்று தள்ளி நின்றவன், “புரிஞ்சுப்போச்சு” என்றான் சத்தமாய்.

அவள் ஓரப்பார்வை சொன்னது, அவன் பேச்சை கவனிக்கிறாள் என்று!

“ஆறு மணிக்கு ஆபிஸ்க்கு வந்து காத்துக்கிடக்காதடா! ஏழு மணிக்கு வீட்டுக்கே வா’ன்னு சொல்றீங்க போல” நமட்டு சிரிப்போடு அவன் சொல்ல, அவளிடம் இருந்து முறைப்பு.

‘ஐ… சப்ஜெக்ட் ரியாக்ட் பண்ணுதே!’ என்று எண்ணியவன் அதே ரூட்டில் போனான்.

“நீங்களே கூப்பிட்டாலும், ஒரு வயசு பொண்ணு இருக்க வீட்டுக்கு ஒரு வயசு பையன் வரது தப்புங்க… என்னால வர முடியாது… சாரி!” என்றவன், “டோன்ட் மிஸ்டேக் மீ, ஓகே?” என்றான், என்னவோ அவள் வருந்தி அழைத்த அழைப்பை நிராகரித்ததை போல.

அவள் முறைப்பு கூடியது. சட்டென விளையாட்டை விட்டவன், “ரொம்ப கோவமா இருக்கீங்கன்னு புரியுது. ரொம்ப சாரிங்க! நான் அப்படி பேசிருக்கக்கூடாது” என்றான் உளமார.

லிப்டின் கதவுகள் திறந்துக்கொண்டன.

அவனை ஒரு பார்வை பார்த்தவள் ஒன்றுமே சொல்லாமல் உள்ளே புகுந்துக்கொண்டாள். அவனுக்கு தான் மனதுக்கு மிகவும் பாரமாகிப்போனது. அவள் காட்டும் எதிர்வினை, ‘தான் அப்படி அவளிடம் பேசியிருக்கவே கூடாது’ என்ற எண்ணத்தை வலுப்படுத்த, தொங்கிப்போன முகத்துடனே அங்கிருந்து வீடு சென்று சேர்ந்தான்.

இரவு படுக்கையில் விழுந்தபோதும், ‘நீ ‘சாரி’ சொல்லனும்ன்னு தானே பின்னாடியே போன… சொல்லிட்டீல்ல? பொத்திட்டு தூங்கு’ என்று மூளை சொல்ல, “அவ ஓகே சொல்லலையே!” என்றது மனது.

‘அதுக்கு?’ என்ற மூளையின் அதிர்ந்த கேள்விக்கு விடையாய் மறுநாள் மாலை ஆறு நாற்பத்தி ஐந்து மணிக்கு அவள் அப்பார்ட்மென்ட் வளாக வாசலில் நின்றுக்கொண்டிருந்தான் கோவர்த்தன். நெற்றியில் போட்டிருந்த பெரிய கட்டு, இரண்டு சுற்று இளைத்திருந்தது.

சோர்ந்த நடையோடு வந்தவளை பார்த்ததும் பளிச்சென அவன் சிரிக்க, ஒரு நொடி அதிர்ச்சியை கண்ணில் காட்டிவிட்டு பின்பு அவனை சாதாரணமாக கடக்க முயன்றாள் வாணிலா.

“நிலா… நிலா… நிலா…!” நிற்காமல் சொல்லிக்கொண்டு அவளோடு வேகமாய் நடந்தான்.

“இரக்கமே இல்லையா? ஒரு வாரமா பின்னாடியே வரேன்!” அவன் கேட்க, அவனை தவிர்த்து பிரயோஜனமில்லை என்று உணர்ந்த வாணிலா, அவனை நேராய் பார்த்து,  “நீங்க நிஜமாவே டாக்டர் தானா?” என்று கேட்டாள்.

“பார்த்த நாள்ல இருந்து கேக்குறீங்க. எப்போ தான் நம்பப்போறீங்க?” சின்ன சிரிப்போடு கேட்டான் இவன்.

“உங்க செய்கை எதுவும் நீங்க ஒரு டாக்டர்ன்னு சொல்லல. ஒரு டாக்டருக்கு தன்னோட பேஷன்டை ‘கேர்’ பண்ணவே நேரம் போதாது. ஆனா நீங்க ஜாலியா ஒரு பொண்ணு பின்ன சுத்துறீங்க. அவாய்ட் பண்ணாலும் புரிஞ்சுக்காம ‘ரோட் சைட் ரோமியோ’ மாறி வரீங்க!” சுருதி ஏறாத அவளது அழுத்தமான வார்த்தைகள் அவனை பெரிய அளவில் ஒன்றும் தாக்கிவிடவில்லை.

முகத்தில் இருந்த புன்னகையில் எந்த மாற்றமுமின்றி, “என் கன்சல்டிங் ரூம்ல எனக்கு எதிரே வந்து உட்காருர ஆளை தவிர வேற யாரையும் எப்பவும் நான் சைக்கலாஜிக்கலா டீல் பண்றதே இல்லை. அதனாலையோ என்னவோ, நான் ஒரு டாக்டர்ன்னு உங்களுக்கு தோணலை போல!” என்றவன்,

“கண்டிப்பா என்கிட்ட கவுன்சிலிங் வந்த டேஸ்’ல உங்களுக்கு தோணிருக்குமே, நான் டாக்டர்ன்னு” ஆவலாக கேட்டான்.

“தோனுச்சு!” அவள் சொல்ல, “என்ன தோணுச்சு?” என்றான் அதே ஆவலுடன்.

“உங்களுக்கு சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சுருக்குறது வேஸ்ட்ன்னு தோனுச்சு” என்றவள் முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

வடிந்துப்போன ஆவலுடன் விடாது பின்னே சென்றவன், “ஓகே நிலா, பாஸ்ட் இஸ் பாஸ்ட்! நான் பண்ணதுக்கு சாரி சொல்லிட்டேன்! லெட்ஸ் பி பிரெண்ட்ஸ்!” என்று அவள் முன்னே நின்று கையை நீட்டினான்.

தன் முன் நீண்டிருந்த நட்புக்கரத்தை ஏறிட்டவள், “எனக்காக ஒன்னு செய்வீங்களா?” என்றாள்.

“ஆணையிடுங்கள் இளவரசி!” இடைவரை குனிந்து இலகுவாய் அவன் சொல்ல, “தயவுசெஞ்சு இனி என்னை பாக்க வராதீங்க! என்னை என் போக்குல விட்டுடுங்க! எனக்கு யாரோடவும் பேசி பிரென்ட் ஆக முடியும்ன்னு தோனல… புரிஞ்சுதா?” என்றாள்.

“நான் சாரி சொல்லியும் கோவம் போலையா நிலா?” பாவமாய் கேட்டவனை, இரக்கமின்றி பார்த்தவள், “ஐ அக்சப்ட் யுவர் அப்பாலஜிஸ்! அட் த சேம் டைம்… ஐ டோன்ட் வான்ன பி பிரன்ட் வித் யூ! ரியல்லி ஐ மீன் இட்!” (உங்க மன்னிப்பை நான் ஏத்துக்குறேன். அதே நேரம், எனக்கு உங்கக்கூட பிரண்டா இருக்க வேண்டாம். உண்மையா சொல்றேன்) என்றவள்,

“உங்களுக்கு நான் செட் ஆக மாட்டேன். விட்டுடுங்க” என்றுவிட்டாள்.

பதிலின்றி அவன் நிற்க, அவள் போய்விட்டாள்.

சில நொடிகள் நின்றான். என்னவோ மனம் ஒரு மாதிரி செய்தது.

‘காறித்துப்பாத குறையா போவ சொல்றா… சூடு சொரணை இருக்கவன் இந்நேரம் டேபிள் ஃபேன்’ல தூக்கு மாட்டிருப்பான்’ உள்ளுக்குள் இருந்து குரல் கேட்க, “ஹும்! நாங்கல்லாம் சுடு சான்ட்விச்’ல சொரனையை தொட்டு திங்குறவிங்க! போறா! பெரிய இவ! என்னோட பிரண்ட்ஷிப் வேண்டான்னா, லாஸ் அவளுக்கு தான்” என்ற எண்ணத்தோடு சென்றவன் அதன் பின் வரவில்லை.

உண்மையிலேயே சூடு சுரணை ஆக்டிவேட் ஆகிவிட்டதோ என்னவோ!  அடுத்த பத்து நாட்கள் அவனது வழமையில் தான் கழிந்தது.

வாணிலாவிடம் எந்த பெரிய வித்தியாசமும் தென்படவில்லை. கோவர்த்தனிடம் பேசாததால் எதுவும் குறைந்தது போல தெரியவில்லை. அவள், அவளது இயல்பில் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தாள். வழியில் ‘நைட் கிளப்’பிற்கான அறிவிப்புகள் பார்க்கையில் மட்டும் மனம் நினைக்கும், ‘எவகிட்ட கார்ட் வாங்கி ஓசி குடி குடிக்குறானோ!?’ என்று!!!

அலுவலகத்தில் அடுத்த கேம் டிசனிற்க்கான அஜெண்டா கொடுக்கப்பட்டது. அதைக்கொண்டு அவள் டீமோடு அதை விரிவுப்படுத்தும் முதல்க்கட்ட வேலைகளில் இறங்கியிருந்ததால், நேரம் நன்றாகவே ஓடியது அவளுக்கு.

அன்றும் டீம் மீட்டிங் முடித்துக்கொண்டு மிகுந்த சோர்வோடு தன் அப்பார்ட்மெண்டை நோக்கி நடந்துக்கொண்டிருந்தாள். வரும்போதே உணவை அவள் ஆர்டர் செய்திருக்க, வீட்டுக்குள் நுழையும்போதே கையில் பார்சலுடன் தான் சென்றாள்.

விரைவாக ஒரு குளியல் போட்டு, இலகு உடைக்கு மாறி, ருசி தெரியாமல் அந்த உணவை உண்டு முடித்து, படுக்கையில் வந்து விழுந்தபோது, ‘ஹப்பாடா’ என்றிருந்தது.

கண்ணை சுழற்றிக்கொண்டு தூக்கம் வர, தன்னை மீறி அவள் உறக்கத்திற்கு செல்கையில் அவள் அலைபேசி அலறியது. யாரென்றும் பாராது, சலிப்போடு எடுத்து காதில் வைத்து, “ஹலோ?” என்றாள்.

“வானும்மா!” அப்பாவின் குரல் கேட்ட நிமிடம் தூக்கம் பறந்து ஓடியது.

“பேசு கண்ணு… எப்படி இருக்கடா?” அவர் கேட்க, இங்கே இவளுக்கு கண்கள் கலங்கியே போனது.

“உன்னை பாக்கணும் போல இருக்கு வானு, ஒருக்க வாயேன்!” அவர் கேட்க, ‘வந்தா என்ன செய்வீங்கன்னு தெரியாதா எனக்கு?’ நெகிழ்ச்சி நகர்ந்து விரக்தி வந்தது அவளிடம்.

“இல்லன்னா நாங்க கூட அங்க வரோம்டா! எங்க இருக்க என்னன்னு சொல்லேன்! எனக்கு எப்படி வரணும்ன்னு எல்லாம் தெரியாது டா” மிகமிக பாசமாய் ஒலித்த தந்தையின் குரலில் சிக்காமல், “எனக்கு தூக்கம் வருது, அப்புறம் பேசுறேன்” என்று வைத்துவிட்டாள்.

கண்ணில் இருந்து வேகமாய் ஒரு துளி காதுக்கு இறங்கியது. அதன் ஈரம் கையும் முன்னே மறுபடியும் அழைப்பு.

எடுக்கவே வேண்டாம் என்று விட்டுவிட்டாள். ஆனால், அழைப்பு விடாமல் ஒலிக்க, ‘ப்ச்!’ சலிப்போடு, “என்ன?” என்று அவள் ஆரம்பிக்கவும், “நிலா’வா?” என்று கேள்வியாய் ஒருத்தது ஒரு பெண்ணின் குரல்.

காதில் இருந்து நகர்த்திப்பார்த்தாள்.

புது எண்ணில் இருந்து ‘வாட்சப்’ அழைப்பு.

குழப்பத்தோடே, “ஆமா” என்றவள் சொல்ல, “ஏம்மா… என் பையன் என்ன குரங்கா? குட்டிசாத்தனா? அவனோட பிரெண்டா தான் இருவேன்…” என்னவோ பல நாள் பேசி பழகியதை போல இயல்பாக அவர் பேச, இங்கே இவள் உச்ச குழப்பத்தில் அமர்ந்திருந்தாள்.

“என்ன பேச மாட்டுற? நாளைக்கு முதல் வேலையா அவன்கிட்ட பேசிடு, சும்மா எனக்கு ஃபோனை போட்டு வேலை செய்ய விடாம பாடா படுத்துறான்!” அவர் அங்கலாய்த்தார்.

நீங்காத குழப்பத்துடன், “நீ…நீங்…க யாருன்னு தெரியல” அவள் சொல்ல, “அண்ணமண்டி… அங்கேயே நில்லுங்க, நானே வாரேன்” எங்கோ யாருக்கோ சத்தமாய் குரல் கொடுத்தவர், “என்னம்மா கேட்ட?” என்றார் இவளிடம்.

“நீங்க யாருன்னு…”

“நானா… நான் அம்ச வர்த்தினி!” என்றார் அவர்.

அவர் சொன்ன ஒற்றை பெயரில் அவள் ஒட்டுமொத்த குழப்பமும் ஓடிப்போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!