Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரங்கேற்ற வேளை

அரங்கேற்ற வேளை – 4(2)

வேளை 4(2)

உதயாவுக்கு மனம் இதம் தொலைக்க, 



Advertisement

“ப்ச், விடுங்க. நான் மொக்க போடுறேன். சாப்பிடுங்க” என்றாள். உண்ட பின் உதயா பில்லுக்குப் பணம் கொடுக்க, லாலா அவன் கொடுக்கிறேன் என்றான். 

“என் டீரிட் சொன்னேன்” என்று அழுத்தி சொன்னவள் 

Advertisement

Advertisement

“நீங்க உங்களுக்குத் தோணும்போது  எனக்கு டீரிட் கொடுங்க” என்றாள். 

“அப்புறம் எல்லா ப்ரண்ட்ஸும் ஒரு நாள் ஸ்டேரேஞ்சர்ஸ்தான்” என்று சிரிப்போடு சொல்ல 

Advertisement

“நான் உன் மேல உள்ள அக்கறையில சொன்னேன் உதயா” என்று லாலா அழுத்தி சொல்ல 

“எனக்குப் புரிஞ்சது, சரி நான் கிளம்புறேன். இன்னொரு நாள் பார்ப்போம்” என்றதும் 

“உன் ஹாஸ்டல் எங்க?” என்று கேட்க, அவன் இருக்கும் அதே அண்ணாநகர். 

“நீ அங்கயா இருக்க? ஒரு நாள் கூட நான் பார்த்ததே இல்ல..” லாலா வியப்பாகக் கேட்க 

“நீங்க அண்ணா நகர்ல பஸ் ஸ்டாண்ட்ல நின்னு டெய்லி பொண்ணுங்களைப் பார்ப்பீங்கனு எனக்குத் தெரியல” என்றதும் லாலா முறைத்தான். 

“நீயும் நானும் ஒரே காலேஜ், ஆனா நம்ம பார்த்ததே இல்ல. ஒரே ஏரியாவுல இருக்கோம், அப்பவும் பார்க்கல. தெரிஞ்சவங்களே காணாம போற இந்த பீச்ல உன்னைப் பார்க்கிறேன்.” 

“லைப் அப்படித்தானே? எங்க பார்க்கணும்னு இருக்கோ அங்கதான் பார்க்க முடியும்” என்ற உதயா 

“என் ஆபிஸ் இருக்க ஏரியாவுல ஹாஸ்டல்ஸ்லாம் கம்மி, அண்ணா நகர்ல இந்த எக்ஸாம் படிக்கிற கேர்ள்ஸ்காக நிறைய ஹாஸ்டல்ஸ் இருக்கு, சேப்டியா இருக்குனு அங்க இருக்கேன். மெட்ரோ இருக்குறதால எனக்கு ஈசி, சீக்கிரம் ஆபிஸ் போயிடுவேன்” என்றாள். 

“அப்போ வா ஒரே பஸ்ல போயிடலாம்” என்று லாலாவும் அவளோடு பயணித்தான். இறங்கும்போது இருவரும் பரஸ்பரம் அலைப்பேசி எண்ணைப் பகிர்ந்தார்கள். லாலாவுக்கு நிலாவோடு பேசிய அந்த நாளை மறக்கமுடியவில்லை, தோற்ற கணத்தையும், தோற்ற கணத்தில் நம்மோடு இருந்தவர்களையும் எளிதில் மறக்க முடியாதில்லையா? ஆனால் அதன்பின் அவன் நிலாவிற்கு அழைக்கவோ பேசவோ இல்லை. லாலா வேலை, படிப்பு, தேர்வு என்று கவனமாக இருக்க உதய நிலாவை எல்லாம் நினைவில் வைக்கவில்லை. 

உதயாவுக்கு அப்படியில்லை. லாலாவைப் பிடித்தது, எதிர்ப்பாராமல் முதல்முறை சந்தித்தவள், அதன்பின் அவனோடு சந்திப்பினை எதிர்ப்பார்க்க, அது இயல்பாக நடக்காது போக, உதயாவே அவனிடம் பேசினாள். இயல்பாக அவனைப் பார்ப்பது போல், காரணம் தேடி அவனை கண்டாள், பேசினாள். பார்த்தவுடன் நேசமில்லை, ஆனால் பழக பழக ஒரு பிடித்தம் உருவானது. 

சிற்சில சந்திப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் கூட்ட இருவருக்கும் நேசமாய் வளர்ந்தது.  

லாலா நடக்கும்போது இதையெல்லாம்  நினைத்து இன்றைய தினத்தை எப்படி கடக்க போகிறோம் என்ற கவலையோடு இருந்தான். காதலை கடப்பதா? கனவினை துறப்பதா? அவனுக்குப் பிடிக்காத கேள்விகளோடு உதயாவை சந்திக்க சென்றான்.

அண்ணா நகரில் இருக்கும் டவர் பூங்காவில் குழந்தைகள் எல்லாம் ஓடி விளையாட, பின்பக்கமிருக்கும் கேட் பக்கத்தில் இருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தாள் உதயா. லாலாவுக்கு அவள் கொடுத்த அவகாசம் முடிந்திருக்க, அதுவரைக்கும் அவளுக்கும் அம்மாவுக்கு அத்தனை சண்டைகள். ஹைதரபாத்தில் இருந்துகொண்டே அலைப்பேசியில் மகளைத் திட்டியிருந்தார், பேசாதே என்றவர் வீம்போடு அவளிடம் பேசுவதில்லை. இவளாக அழைத்தாலும் எடுப்பதில்லை. உதயாவுக்கு அவ்வளவு கவலை, லாலாவையும் அவள் தொந்தரவு செய்யக் கூடாதென்று பேசாமலிருக்க, அவளுக்கு அம்மா மட்டும்தானே அவரும் பேசவில்லை.

அம்மாவின் பிடிவாதமும் வீம்பும்தான் அவரை வைராக்கியமாக அப்பா இல்லாத உலகில், பெண்ணை வளர்க்க உதவியது என்றாலும் உதயாவுக்கு மிகுதியான மன வருத்தம். எப்போதும் போல் அதனை யாரிடமும் பகிரவில்லை. எல்லாம் மாறிவிடும் வேளை வந்தால் அவள் அம்மாவும் பேசுவார் என்று தேற்றிக்கொண்டாள்.

லாலா அன்று சந்திக்க வருகிறேன் என்றதும் உற்சாகம் தளிர்த்தது. அவனை பார்க்கவும் அப்படியே வடிந்தது. தாடிக்குள் முகத்தை மறைத்து வைத்திருந்தான் லாலா. 

லாலா அருகே வந்து உட்காரவுமே, “ஏன் லாலா இவ்வளவு தாடி? ஷேவிங் பண்ணியிருக்கலாமில்ல?” என்று கேட்டதும் சுள்ளென்று விழுந்தான். 

“இப்ப நான் ஷேவிங் செய்யாததுதான் நமக்கிருக்க பெரிய பிரச்சனை இல்ல?” என்று கேட்க, உதயாவின் முகம் சுருங்கியது. 

“வந்ததும் இப்படி பேசணுமா?”

லாலாவுக்கும் அவன் இப்போதெல்லாம் அதிகமாக பேசுவதில்லை, அப்படியே பேசினாலும் அதில் கோபமும் ஆற்றாமையுமே வெளிப்படுவதை உணர்கிறான். இருந்தாலும் மாற்ற முடியவில்லை. சந்தோஷம் என்பதே இல்லாத ஒரு உணர்வு, அவனிடம் இல்லாத போது அடுத்தவரிடம் எப்படி கொடுக்க? 

பிடித்தது கிட்டாததால் பிடிப்பில்லாத நிலை! காதலும் நெருக்கடி கொடுக்க நேசம் கூட தன்னிடம் நியாயமில்லாது நடப்பது போலத் தோன்றியது.

“ப்ச், என்னனு சொல்லு உதயா. எனக்கு உன்னை மாதிரி இன்னிக்கு லீவ் இல்லை, நான் இப்போ மதியம் க்ளாஸ் எடுக்கணும்” என்றவன் இருக்கையின் பின்பக்கம் சாய்ந்தமர்ந்தான். அப்படியே அவன் பார்வை உதயாவைத் தொட்டது.

“அம்மா என்கிட்ட பேசி மூணு மாசம் ஆச்சு லாலா” என்றதும் அவன் முகத்தில் அதிர்ச்சி. 

“இனிமேலும் அவங்க பேச்சைக் கேட்காம இருக்க முடியாது லாலா” 

சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தவன் விழிகளில் அதிர்வும், மனதில் படபடப்பும் கூடியது. உதயா அவளாக வந்து விருப்பம் சொல்லியிருந்தாலும், அவனுக்கும் விருப்பமிருந்ததால் மட்டுமே ஒத்துக்கொண்டான். 

“அப்போ உங்க அம்மா சொன்ன மாப்பிள்ளையைக் கட்ட போறியா?” லாலாவின் குரல் கரகரத்தது. நிச்சயம் அதனை தன்னால் தாங்க முடியாது என்று தோன்றியது. எத்தனை தேர்வில் தோற்றாலும் மீண்டும் மீண்டும் துவளாமல் படித்தாலும், காதலெனும் தேர்விலும் அதே நிலையா என்று அஞ்சியது ஆண் மனம்.

உதயாவுக்கு அவன் பேச்சில் எரிச்சல் மிக, 

“அவனை கட்டணும்னா ஏன் இங்க வந்து உங்ககிட்ட பேசுறேன்?” என்று கேட்க கணம் லாலாவின் மனதிலிருந்த கனம் கொஞ்சமாக இறங்கியது. அதே நேரம் அவளுக்குச் சம்மதம் சொல்லும் சாதக சூழலும் அவனிடமில்லை. 

முடிவெடுக்க முடியாத நிலையும் தவறான முடிவெடுக்கும் நிலையும் மோசம்தானே? ஒன்று வேண்டும், இன்னொன்று வேண்டாம் என்றால் தேர்வுகள் எளிதாக இருக்கும். லாலாவோ இரண்டையும் விட முடியாத சூழ்நிலை. வீட்டில் என்ன சொல்வான்? யோசிக்க யோசிக்க யாரும் அணுக முடியாத தனிப்பிரதேசம் ஏதேனும் கிட்டினால் பரவாயில்லை என்று தோன்றியது. தொலைந்து போக ஒரு விழைதல், எந்த விருப்பங்களுமின்றி, யாரும் அண்ட முடியாத ஒரு உலகில் அமைதியாக ஒரு தொலைதல்! 

யாருக்கேனும் வாழ்க்கையில் அப்படியொரு கணம் தோன்றும். தொலைந்து போக! உள்ளும் புறமும் கேட்டிடும் இரைச்சலின்றி ஒரு நீடமைதி! லாலா அப்படியொரு கட்டத்திலிருந்தான். 

வெகு நேரம் அமைதியாக இருந்தவன், “இப்போ என்ன பண்ணணும் சொல்ற உதயா” கொஞ்சம் தணிந்து கேட்டான். 

“நீங்க என்ன நினைக்கிறீங்க லாலா, பட் இன்னொரு முறை டைம் கேட்காதீங்க” என்றாள் கெஞ்சலாக. கண்களில் கண்ணீரை அடக்கிக்கொண்டாள். அம்மா பேசாமல் இருப்பது வேதனைக் கொடுத்திருந்தது.

“அப்போ உன் முடிவு நம்ம கல்யாணம் இல்லையா?” என்றான் லாலாவும். 

“ஆமா” 

“இப்போ நான் இருக்க நிலைமை தெரியும்தானே? என் சம்பளம் உனக்குத் தெரியும்தானே?. நான்” என்றவனின் கையைப் பிடித்தவள்

“இப்போ எப்படி இருக்கீங்களோ அப்படியே இருங்க, எக்ஸாம் படிச்சிட்டு இங்க டீச் பண்ணிட்டு அதையே பண்ணுங்க. வேற வேலைக்குப் போகணும்னு எல்லாம் நான் சத்தியமா சொல்ல மாட்டேன். நம்ம கல்யாணம் பண்ணிட்டா போதும், எங்கம்மாவுக்காக ப்ளீஸ்” என்று உதயா கேட்டிட, உதயாவுக்காக ஒத்துக்கொள்ள சொன்னது மனது.

வேலைக்கான வேளை எதுவென்று தெரியாவிட்டாலும் உதயாவையும் விட மனதில்லை. திருமணத்திற்கோ, காதலுக்கோ இது வேளையில்லை என்று லாலாவுக்குப் புரிந்தது. உண்மையில் இன்னும் ஒரு வருடம் கொடுத்தால் கூட லாலா சந்தோஷப்படுவான். 

எப்போதும் மற்றவர்களின் முடிவுகளுக்கு ஒத்திசைந்தே அவன் வாழ்க்கை நகர்கிறதோ என்ற கேள்வி. தாத்தா, அப்பா சொன்னதைப் படித்தான், அவர்கள் சொன்னது கேட்டு தேர்வுகளுக்குப் படிக்க ஆரம்பித்தான். சுதந்திர விலாசத்து மகன் என்ற பெயரைக் காப்பாற்றும் பொறுப்பு அவனுடையதாக இருந்தது. அப்பா, சித்தப்பாவின் வெற்றிகளுக்கு அடுத்து அவனும் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். இப்போது காதலிலும் உதயாவின் முடிவினை ஏற்க வேண்டிய கட்டாயம். இப்போது திருமணம் செய்ய கொஞ்சமும் அவன் தயாரில்லை. ஆனாலும் அவளின் முடிவினை ஏற்கும் நிலை. 

தன்னிலை கசந்தது.

 எதுவுமில்லாத உனக்குக் காதல் மட்டும் ஏன் என்று கடிந்தது அறிவு. எதுவுமில்லாமல் போய்விட்டால் காதலாவது துணையிருக்குமே என்று ஆறுதலாகவும் நினைத்தான்.

“ஒரு வாரம் டைம் கொடு உதயா, வீட்ல பேசணும். ஓகேவா” என்றதும் உதயா

“நிஜமா லாலா?” என்றவளுக்குக் கண்ணீர் கன்னம் தொட்டது. 

“இப்பவே அம்மா கிட்ட சொல்றேன்” என்று அவசரப்பட 

“ரெண்டு நாள் போகட்டும், நான் வீட்ல பேச ஆரம்பிச்சதும் சொல்றேன் உதயா, ப்ளீஸ்” என்றான். 

 

உதயாவுக்கும் லாலாவை அப்படி பார்க்க விருப்பமில்லை, அவள் விரும்பித்தொடங்கிய போதிருந்த லாலாவிடம் இப்போது நிறைய மாற்றங்கள். அதிகம் பேசுவதில்லை, மிகுந்த அமைதி, எரிச்சல் என்று ஆளே மாறியிருந்தான், லாலாவின் மாற்றம் அவனுக்கே பிடிக்கவில்லை. அதுவும் கூட அவனை இன்னும் சோர்வடையச் செய்தன. 

“கவலைப்படாதீங்க லாலா,  நான் உங்களை கண்கலங்காம பார்த்துக்கிறேன்” என்ற உதயாவின் பேச்சில் பல  நாட்கள் கழித்து லாலா பற்கள் தெரிய புன்னகைத்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!