Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 18 2

ப்ரோசன் வெஜிடபில்ஸ் செக்ஷன் சென்று தேவைப்படும் காய்கறிகளை எடுக்க ஆரம்பித்தாள். ஊரில் பசுமையாய் வாங்கி உண்டதெல்லாம் நினைவு வர, அந்த பதப்படுத்தப்பட்ட வெட்டிய முருங்கைக்காய், பெரிய சைஸ் கத்திரிக்காய், வெள்ளை வெங்காயத்தை எல்லாம் பெருமூச்சோடு எடுத்து ட்ராலியில் போட்டாள்.

“நிலாம்மா… முருங்கைக்காய் சமைக்க போறோமா இன்னைக்கு?” அவன் ஏதோ கேட்க வேண்டுமே என்று கேட்க, அவனை பார்த்தவள், “நோ யூஸ்!” என்றுவிட்டு போக, ‘என்ன சொன்னா?’ என புரியாமல் நின்றான். அவள் திரும்பி ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்க, மண்டையில் பல்ப் எரிந்தது, கூடவே முகத்திலும்.



Advertisement

‘என்ன ஒரு அசிங்கம்!’

தன்னை சீண்டுபவளை சும்மா விட தோன்றுமா!? வேண்டுமென்றே ஒன்றை எடுத்து, “நிலாம்மா, இதையும் சேர்த்து பில் போடு” என்று அவளிடம் தூக்கிப்போட, அவள் நெஞ்சில் விழுந்ததை கேட்ச் பிடித்தவள், அதை பார்த்ததும், அவனிடமே வேகமாய் வீசினாள்.

Advertisement

Advertisement

சிரிப்பை அடக்கிக்கொண்டு அதை பிடித்தவன், “ஏன் வேற ப்ளேவர் வேணுமா?” என்று கேட்க, நின்று திரும்பி அவனை ஏற இறங்க அவள் பார்த்த பார்வையில், ‘உச்சகட்ட அவமானம்’ வந்து தாக்கியது அவனை. சத்தமின்றி அந்த பாதுகாப்பு உறையை பாதுகாப்பாய் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

பில் போட வந்து நின்றபோது, “ஹே… கோ!!!” என்ற சத்தம் கேட்க, ஒரு வெள்ளைக்காரி  அவனிடம் ஓடி வருவதை கண்ட கோவர்த்தன், முகமெல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டே, தன்னிடம் வந்தவளை கட்டியணைத்தான். அவளும் அவனிடம் சரளமாக ஸ்பேனிஷில் பேச ஆரம்பித்துவிட்டாள்.  இவனும் சளைக்காமல் பேசினாலும், ஒரு கண் என்னவோ வாணிலா மீது தான்.

Advertisement

முன்பொருமுறை ஒருத்தி வந்து தன்னை கட்டியணைத்து பேசியபோது கோவப்பட்டாலே, அதுபோல இப்போதும் ஆகுமோ என ஆவலாய் பார்த்திருக்க, அவனை மொத்தமாய் ஏமாற்றினாள் வாணிலா. இவனுக்கு தான் சப்பென்று போக அந்த பெண்ணிடம் விடைபெற்று கிளம்பினான்.

காரில் போகும்போது, “அவங்க என் பேஷன்ட் தான். என்னை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு” என்று சொல்ல, அவள் காதில் வாங்கினாளா என்று கூட தெரியவில்லை.

“நாளைக்கு மீட் பண்ணலாமா கூட கேட்டா!” அவன் சொல்ல, “வெடிக்காத பட்டாசுக்கு வீதியெல்லாம் விளம்பரமாம்!” என்றாள் எங்கோ பார்த்து.

உண்மையிலேயே அவனுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது.

‘அவமானத்துக்கு மேல அவமானம்’ என்ற பொருமிக்கொண்டே வீட்டுக்கு சென்றவன், தன் அறைக்கு போய்விட்டான்.

கிச்சனுக்கு சென்றவள், வாங்கிய காய்கறிகள் கொண்டு சாம்பார் வைக்க ஆரம்பித்தாள். கத்திரிக்காயை வெட்டி  நீரில் போட்டு ஓரமாய் வைத்துவிட்டு, வேகவைத்த பருப்போடு, வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் தேவையான பொடி எல்லாம் போட்டு அடுப்பில் வைத்தாள். முருங்கைக்காய் பாதி வெந்ததும், வெட்டி வைத்திருந்த கத்திரிக்காயும் புளித்தண்ணியும் ஊற்றி மூடி வைத்தாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் சாம்பார் தயாராக, தாளித்துக்கொட்டிவிட்டு அடுப்பை அணைத்தவள் குளித்துவிட்டு வருவோம் என சென்றுவிட்டாள்.

அறைக்குள்ளேயே சற்று நேரம் சுற்றிக்கொண்டிருந்த கோவர்த்தன், ‘இந்த அவமானம் எல்லாம் கண்டு கலங்குனா நீ எப்படிடா கல்யாண வாழ்க்கைல கரை சேருவ?’ என்று தன்னை தானே மோட்டிவேட் செய்துக்கொண்டு கதவை திறந்து வெளியே சென்றான்.

கிச்சனில் இருந்து நல்ல வாசனை வர, அவள் வைத்திருந்த பாத்திரத்தை திறந்து வாசம் பிடித்தவன், “வாவ்… பொண்டாட்டி சமையல்ல தேறிட்டா போலயே” என்று வாய்விட்டு சொல்லி வேறு என்ன இருக்கிறது என்று பார்க்க, ரைஸ் குக்கரில் சுட சுட சாதம் இருந்தது.

“எவ்ளோ மோசமா இருந்தாலும் பரவால்ல… அவ சமையல இன்னைக்கு பராட்டித்தள்ளி, அவ மனசுல இடம் பிடிக்கணும்” திண்ணமாய் சொல்லிக்கொண்டவன், ஒரு தட்டில் உணவை போட்டு உண்ண ஆரம்பித்தான்.

முதல் வாய் வைத்ததுமே தெரிந்துப்போனது, குழம்பில் உப்பே போடவில்லை என்று. முகம் கோணாமல் உப்பு போட்டு திருப்தியாய் உண்டவன், தட்டை கழுவி வைக்கும்வரை அவள் வரவில்லை.

அடுத்து ஒரு பாத்திரம் ஓரமாய் இருக்க, “அட, பானகம் மாறி இருக்கு?” என்று வியந்தவன், ஒரு க்ளாசில் ஊற்றி குடித்துப்பார்த்தான். இனிப்பே இல்லாமல் இருந்தது. மருந்து போல மடக்கென அவன் குடித்து முடித்தபோது அவள் வந்தாள். கை தெரிந்த நடிகன் போல முகத்தில் நவரசத்தை கொண்டு வந்தவன்,

“நிலாக்குட்டி… அசத்திட்ட போ… அறுசுவையும் அடிநாக்குல இருந்து அர்ணாக்கொடி வரைக்கும் நின்னு மணக்குது…  சாம்பாரை சொட்டு வைக்காம குடிச்சுருப்பேன். உனக்கு வேணுமேன்னு மீதி வச்சேன்” அவன் சொல்ல, அவள் அசரவில்லை.

“அதுலயும் செரிமானத்துக்கு அந்த பானகம்… அடிபொலி” அவன் சப்புக்கொட்டி சொல்ல, “பானகமா? எங்க?” என்றாள் குழம்பி.

“இதோ இதான்!” மீதமிருந்த பாத்திரத்தை அவன் காட்ட, முகத்தை சுளித்து தலையில் அடித்துக்கொண்டவள், “அது கத்திரிக்காய் கழுவுன தண்ணி” என்றாள் பல்லைக்கடித்து.

‘கழுவுன தண்ணியா?’ கேட்ட மாத்திரத்தில், உள்ளே சென்ற பானகத்தோடு, சாம்பாரும் போட்டிப்போட்டு வெளியே வர பார்த்தது. வாயை பொத்திக்கொண்டான். பாக்கெட்டில் இருந்த அவன் அலைபேசி  சத்தம்போட, வாயை இறுக மூடிக்கொண்டு ஆன் செய்தான்.

காரைக்குடி வீட்டில் இருந்து தான் வீடியோ கால் வந்திருந்தது.

தனக்கான உணவை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்துக்கொண்டாள் வாணிலா. அழைப்பை ஏற்ற கோவர்த்தன், மறக்காமல் உப்பு டப்பாவை அவள் அருகில் வைத்துவிட்டு வேறொரு சேரில் அமர்ந்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

வழமையான நலம் விசாரிப்பெல்லாம் முடிய, வானிலாவிடம் கொஞ்சம் பேசினர். அவளும் சிரித்த முகமாய் பேசினாள்.

“அப்புறம் நம்ம ராகாக்கு வளைகாப்பு வைக்கணும்டா… ஆறு பொறந்துருச்சு… ஏழு முடிய முன்ன வச்சா தேவலாம். இல்லனா ஒன்பதுக்கு இழுத்துட்டு போய்டும்” அம்ஸா சொல்ல, “சரி, பண்ணுங்கம்மா” என்றான் கோவர்த்தன்.

அவன் அப்படி சொன்னதும் முறைப்பு அவரிடம்.

“இவரு பெரிய கலக்டரு… இவர்கிட்ட ஒப்புதல் வாங்க தான் நாங்க விஷயத்தை சொல்றோம்” அன்னை கடுப்பாக சொல்லவும் தான், அவர் எதற்க்காக இதை சொன்னார் என்றே கேட்க தோன்றியது அவனுக்கு.

“பணம் எதுவும் தேவைப்படுதாம்மா… அனுப்பி வைக்கவா?” அக்கறையாய் அவன் கேட்டது, அம்சாவின் கோவத்திற்கு தூபம் போட்டது.

“உன் காசை வச்சு தான் இங்க நாங்க பொழைக்குறோமா? ஆங்…” சண்டைக்கு வருபவர் போல வந்தார்.

“ம்மா? என்னங்கம்மா உங்க பிரச்சனை? நேரா பேசுங்களேன்” வானிலாவிடம் போராடிய அலுப்பில் அன்னையிடம் சலித்தான். அவர் முறைத்தபடி ஃபோனை ராகவர்த்தினியிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

“ம்மா? ம்மா?” இவன் கத்திக்கொண்டிருக்க, “அண்ணா… என் கல்யாணத்துக்கு தான் வரல. அட்லீஸ்ட் வளைகாப்புக்காது வாண்ணா…” முகத்தை சுருக்கிக்கொண்டு பாவமாய் கேட்ட தங்கையை ஆதூரமாய் பார்த்தவன், “கண்டிப்பா ட்ரை பண்றேன்டா… வளைகாப்புக்கு முடியாட்டியும் உன் டெலிவரிக்கு கண்டிப்பா வந்துடுவேன்” என்று சொல்ல, நன்றாக முகம் சுருக்கியவள், அன்னையை போலவே ஃபோனை கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

“டேய், ராகா… ராகா…” கோவர்த்தன் கத்த, “அவ போய்ட்டா மச்சான்” என்றான் நகுலன் சிரித்துக்கொண்டே.

“டியூட்டிக்கு போகலையா அயித்தான்?” கேட்டுக்கொண்டே வானிலாவிடம் இருந்து சற்று தள்ளி போனான் கோவர்த்தன். அதே போல நகுலனும் வீட்டில் இருந்து வெளியே வந்தபடி, “போகணும் மச்சான்” என்று சொல்ல, குரலை சின்னதாக்கி, “எதாவது கால் வந்துச்சா அயித்தான்?” என்றான் கோ.

“நீ சொன்னதை வச்சு கண்டிப்பா கால் வரும்ன்னு எதிர்ப்பார்த்தேன். ஆனா வரலை!” நகுலன் சொல்ல, “ஒருவேளை பிரச்சனை ஒன்னும் இல்லையோ?” கோ கேட்டதும், “இல்லைனா சந்தோஷம் தானே!?” என்றான் நகுலன்.

“ம்ம்ம்!” என்ற கோவர்த்தனுக்கு, பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்று தோன்றவில்லை. பிரச்சனையை சொல்ல முடியாமல் இருக்கலாம் என்று தான் தோன்றியது. மீண்டும் ஒருமுறை அந்த வீட்டிற்கு சென்று பார்த்து வந்தால் தேவலாம் என்று அவனுக்கு தோன்றினாலும் தங்கை கணவனை தொந்தரவு செய்ய சங்கடமாக இருந்தது.

ஆனால், அவனே, “நான் இன்னொருக்க போய் பாக்குறேன் மச்சான்” என்று சொல்ல, கோவர்த்தனின் பார்வை அவனை நன்றியுடன் தழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!