“உங்கப் பணத்தை வாங்கிட்டு கிளம்புங்க மிஸ்டர் வம்சி. என்னால இதை அப்ரூவ் பண்ண முடியாது” என்றாள் காட்டத்துடன்.
அவனோ சுருங்கிய புருவத்துடன், “இங்க பாருங்க கிருபாஷிணி, நான் சின்ன வயசுல இருந்தே உங்க பத்திரிகை வெளியிடுற நியூஸ் பேப்பர், மேகஸின், வார இதழ்ன்னு எல்லாமே ஆர்வமா படிப்பேன். ஆனா கடைசி ஆறு மாசமா உங்க மேகசின்ஸ் எதையுமே நான் படிக்கிறது இல்ல. அதுக்குக் காரணம் என்னன்னு உங்களுக்கே தெரியும் ஐ திங்க் சோ! அப்படியும் இடைல என்னால பழக்கத்தை விட முடியாம, ஒரே ஒரு வார மேகஸினை வாங்கிப் படிச்சேன்.
அதை நீங்களும் படிச்சு இருப்பீங்களே!” எனக் கிண்டல் தொனியில் கூறியவன்,
“‘வி’ நடிகருக்கும் ‘வை’ நடிகைக்கும் விவாகரத்து. இடையில் புகுந்த ‘வே’ நடிகர் தான் காரணமா? நாட்டுக்கு ரொம்பத் தேவை பாருங்க…” என்று ஏற்ற இறக்கத்துடன் கூறியதில், கிருபாஷிணியின் முகம் அவமானத்தில் சிவந்தது.
அவனோ மேலும் தொடர்ந்தான். “சரி இது போகட்டும்… ‘கள்ளத்தொடர்பை கல்யாணத்திற்குப் பின்னும் தொடரும் மஞ்சள் நடிகை. கணவனே அனுமதிக்கும் அதிசயம்!’ ஆஹா! வாட் அ இம்பார்ட்டண்ட் டாபிக்! டிஎன்பிஎஸ்சி எக்ஸாம்க்கு வர்ற முக்கியமான கேள்வி இது.” என்று படு நக்கலாகக் கூறியவன், அத்துடன் விடவில்லை.
“இதெல்லாம் கூட பரவாயில்ல. படிக்கிற பசங்களுக்கு உபயோகமா வெளியிடுற பொது அறிவு மேகஸின்க்குள்ள ‘பாலியல் தொடர்பான பிரச்சனையா… இரவில் விந்து…'” என ஆரம்பிக்க, அவனை கை நீட்டித் தடுத்தவள், தமையன் மீதிருந்த கோபத்தையும் எரிச்சலையும் அடக்கியபடி, “சொல்ல வந்ததை நேரா சொல்லுங்க” என்றாள் முகத்தை சுருக்கி.
அவளது இறுகிய முகத்தில் என்ன கண்டானோ, “அந்த மாதிரி ஒரு பிங்க் நோட்டீஸை ஜிகே புக்குக்குள்ள வச்சு பிரசுரம் பண்ணிருக்கீங்க. ஸ்ஸீ… இதெல்லாம் நான் தப்புன்னு சொல்லல. இந்த மாதிரி ‘கிசுகிசு’க்கும், 18+ கண்டெண்ட்க்கும் தனியா ஒரு மேகஸின் போடலாம். கண்டிப்பா யங்ஸ்டர்ஸை ரீச் பண்ணும். ஆனா, இத்தனை வருஷமா நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கவும், பொது அறிவை வளர்த்துக்கவும் நம்பிக்கையா வாங்கிப் படிக்கிற பெரியவங்களையும், சின்னப் பசங்களையும், என்னை மாதிரி வாசகர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்க வேணாம்.” என்றதில், அவள் பதில் கூறாமல் உணர்ச்சித் துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
“ஆனா, இதெல்லாம் பப்ளிஷ் பண்ணுன நீங்க, என்னோட விளம்பரத்தைப் பண்ண மாட்டேன்னு சொல்றது தான் எனக்கு உண்மையா இரிடேட்டிங்கா இருக்கு.” என்றான் மெல்லிய கடுப்புடன்.
“இங்க பாருங்க மிஸ்டர் வம்சி. இவ்ளோ நாள்ல நடந்தது எதுக்கும் நான் காரணமில்லைன்னு ஓடி ஒளிய மாட்டேன். எங்க சைட் நடந்த தப்பு தான் இது. ஆனா, கண்டிப்பா இதைத் திரும்ப நடக்க விடமாட்டேன். ஒரு வாசகரா உங்க மனக்குமுறலை மறைக்காம ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி.” என்று கையெடுத்துக் கும்பிட்டவள், “இதுக்காக உங்களோட விளம்பரத்தை நான் நியாயப்படுத்த மாட்டேன்.” என்றாள் தீர்மானமாக.
அவளது அணுகுமுறையும், தவறை ஒப்புக்கொண்ட பாங்கும் அவனை ஈர்த்திருக்க வேண்டும்!
“க்ரேட்! அப்போ மறுபடியும் நான் பழைய மாதிரி உங்க வெளியீடு எல்லாத்தையும் நம்பிப் படிக்கலாம்.” என மெச்சுதலாகக் கூறியவன் அவளது இறுதி வாக்கியத்தில் நொந்து,
“ஏன் பண்ண முடியாது. ஏதாவது ஒரு வேலிட் ரீசன் சொல்லுங்க” என்றான் முறைப்புடன்.
“ஒன்னு இல்ல நூறு கூட சொல்லுவேன். முதல்ல, இப்படி ஒரு விளம்பரத்தப் பார்த்து வர்றப் பொண்ணுங்களை நீங்க ஏமாத்த மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்.” என அவள் எகிறிட,
“ஏமாத்துறதுக்கு எவனாவது ‘ஆட்’ குடுப்பானாங்க. நான் ஒரு ப்ரொபசர். அந்த வேலைக்கு எந்த அளவு மரியாதை குடுப்பேனோ அதே மரியாதையை என்னோட பசங்களுக்கும் குடுப்பேன்.” என்றவனை இடைமறித்து, “ஒரு ப்ரொபஸரா இருந்துகிட்டு இப்படி கான்டராக்ட் காதலி கேட்டு வந்து நிக்கிறீங்க உங்களுக்கே இது அசிங்கமா இல்ல.” என சூடாகக் கூறினாள்.
“இதுல என்னங்க அசிங்கம்? கான்டராக்ட் கல்யாணம் பண்றது இல்ல. அதே மாதிரி ஒரு வருஷம் என்னை லவ் பண்ண பொண்ணைத் தேடுறதுக்காக ‘ஆட்’ கொடுக்குறேன். வித் டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்!” என்று அதையும் சேர்த்துக் கூறினான்.
மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்ட பெண்ணவள், “அப்படி என்ன உங்க டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்” என்று வேண்டா வெறுப்பாகக் கேட்க,
“அதை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல” என்றான் பட்டென.
அவள் முறைக்கவும், “சரி மீதி 99 யையும் சொல்லிடுங்க” என்றவனைப் புரியாமல் பார்க்க,
“அதாங்க, ஏதோ 100 ரீசன் இருக்குன்னு சொன்னீங்களே. ஒன்னு சொல்லிட்டீங்க மீதி 99?” எனக் கேள்வியடன் நிறுத்த, ‘இதேதுடா பெரிய ரோதனையா போச்சு’ என்ற தலையில் வலியில் நெற்றியைப் பிடித்தவள்,
“இந்த மாதிரி ‘ஆட்’ குடுத்து உங்களை காண்டாக்ட் பண்றப் பொண்ணுங்களைக் கடத்திக் கொலை பண்ற சீரியல் கில்லரா இருந்தா…? தப்பு நடக்க நானும் ஒரு விதத்துல காரணமான மாதிரி தான?” என்று ஒரு புருவத்தை நெறித்துக் கூறியவளைக் கண்டு புன்னகைத்தான்.
“என்னைப் பார்த்தா உங்களுக்கு சீரியல் கில்லர் மாதிரியா இருக்கு?” என முன் நெற்றி முடிகளைப் பின்னால் தள்ளியபடி சிரிப்பு மாறாமல் கேட்டவனை ஒரு நொடி கண்ணெடுக்காமல் பார்த்தாள்.
அப்படிக் கூற மனம் அனுமதிக்கவில்லை தான் ஆனாலும், “பின்ன, இப்ப எல்லாம் சீரியல் கொலைகாரனும்,கடத்தல்காரனும், பரட்ட தலையோட கன்னத்துல மரு வச்சுக்கிட்டு ரௌடி கெட் அப்லயா இருக்காங்க. எல்லாரும் உங்களை மாதிரி டிப் டாப்பா தான் இருக்காங்க.” என்று நொடித்துக் கொண்டவளை ‘ஐயகோ இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என்ற ரீதியில் பார்த்தான்.
“அப்போ ஒன்னு பண்ணுங்க. நான் குடுத்த விளம்பரத்தைப் பார்த்து என்னை அப்ரோச் பண்ற பொண்ணுங்களை இண்டர்வியூ எடுத்து தான் செலக்ட் பண்ணுவேன். அப்படி எடுக்கும் போது நீங்களே கூட இருங்க.” என யோசனை கூறிய வம்சியைக் கண்டு விழித்தாள்.
“ஃபைன்… ஏதோ பிரபலமான பத்திரிகைல ‘ஆட்’ குடுக்கலாம்ன்னு தான் இவ்ளோ நேரம் மூச்சுப் பிடிக்க பேசுனேன். இந்த ஊர்ல உங்க ஒரு நியூஸ்பேப்பர் மட்டும் தான் வருதா.” என்றபடி தனது விளம்பரத் தகவல் அடங்கிய கவரையும் எடுத்துக் கொண்டவன், “நான் குடுத்தப் பணத்தை ரிட்டர்ன் பண்ணிடுங்க.” என்று கடுகடுப்பாகக் கூறி விட்டு வெளியில் சென்றான்.
‘ஹப்பா கிளம்பிட்டான்…’ என நிம்மதி பெருமூச்சு விட்டவள், நாற்காலியின் பின்னால் ஆசுவாசமாக சாய்ந்து கண்ணை மூடி விட்டு சட்டென விழித்தாள்.
‘இவன் இதே விளம்பரத்தை வேற பத்திரிகைல குடுத்து அவங்க பப்ளிஷ் பண்ணிட்டு, அதனால பொண்ணுங்கள இவன் தப்பா யூஸ் பண்ணிட்டா?’ என்ற அதிர்வு தாக்க,
“ம்ஹும். ஒருவேளை அப்படி நடந்தா, முன்னாடியே இதைத் தடுக்காம போய்ட்டோமேன்ற குற்ற உணர்ச்சி நம்மளைக் கொன்னுடும். ஏற்கனவே ஒரு குற்ற உணர்ச்சில வேகுறது பத்தாதா!” எனத் தன்னையே நிந்தித்தவளுக்கு ஆற்றாமை தாளவில்லை.
நொடிக்குள் செய்யப்போவதை தீர்மானித்து விட்டு, அவசரமாக எழுந்தவள் அலுவலகத்தை விட்டு வேக வேகமாக வெளியில் செல்ல, சரியாக வம்சி கிருஷ்ணா தனது ‘அப்பாச்சி’யைக் கிளப்பி இருந்தான்.
“ஹலோ மிஸ்டர் வம்சி. நில்லுங்க” என்று அவன் கிளம்புவதற்குள் அருகில் வந்தவளுக்கு மெலிதாய் மூச்சு வாங்கியது.
வம்சியோ வண்டியை நிறுத்தி விட்டு, “என்னங்க… மீதி 98 காரணத்தையும் சொல்லாம என்னை விட மாட்டிங்களா? ரெண்டு காரணத்துக்கே என் குட்டி ஹார்ட்டு ஹர்ட் ஆகிடுச்சு” என்றான் பரிதாபமாக.
கிருபாஷிணி சிறிதாய் முறைத்து விட்டு, “அதெல்லாம் இல்ல. உங்க விளம்பரத்தை நான் பப்ளிஷ் பண்றேன். ஆனா ஒரு கண்டிஷன்.” என்றதும், அவன் என்னவெனப் பார்த்தான்.
“அந்த விளம்பரத்துல என்னோட நம்பரைக் குடுக்கணும். அது சம்பந்தமா எந்த கால் வந்தாலும் அது எனக்குத் தெரியாமல் உங்ககிட்ட வரக்கூடாது. எனக்குத் தெரிஞ்சு, இப்படி ஒரு கேவலமான கான்டராக்ட்க்கு எந்த பொண்ணும் வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும், நீங்க இன்டர்வியூ எடுக்கும் போது நானும் கூட இருப்பேன். சும்மா இல்ல மிஸ்டர் வம்சி… என்ன தப்பு நடந்தாலும் என் ப்ரெண்ட் போலீஸ் டிபார்ட்மென்ட் தான், அவர் கிட்ட சொல்லிட்டு தான் வருவேன். எனக்கோ இல்ல உங்களை அப்ரோச் பண்ற பொண்ணுங்களுக்கோ ஏதாவது பிரச்சனைன்னா, நீங்க தப்பிக்கவே முடியாது.” என்றாள் காரசாரமாக.
வம்சி தான், சத்தமாக சிரித்து விட்டான். “பட், குட் எஃபர்ட் மிஸ் கிருபாஷிணி. நீங்க என்னை சீரியர் கில்லர்ன்னு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டீங்க. ஓகே நோ ப்ராபளம். எனக்கு லவ்வர் கிடைச்சா ஓகே தான். அண்ட், உங்க பெர்சனல் நம்பர் குடுக்காதீங்க. ரொம்ப யூஸ்ல இல்லாத ஆல்டர்நேட் நம்பர் இருந்தா குடுங்க.” என்று அறிவுரைக் கூறி விட்டு, புன்னகை மாறாமல் சென்றவனைக் கண்டு அவள் தான் விழிக்க வேண்டியதாகப் போயிற்று.
அவன் கூறியது போன்றே, அவசரத்திற்காக வைத்திருந்த மற்றொரு எண்ணைக் கொடுத்து விளம்பரத்தையும் வெளியிட்டாள்.
அடுத்த இரு நாட்களும் வேலை நெட்டி முறிக்க, அன்று இரவு அவள் உறங்கவே ஒரு மணிக்கு மேலானது.
அதுவரையில், அந்த விளம்பரம் சம்பந்தமாக எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அவளும் வேலைப்பளுவில் அதனை மறந்து விட்டாள்.
காலை 6 மணி அளவில், அலைபேசி அழைக்க, தூக்கக் கலக்கத்துடன் போனை எடுத்து காதில் வைத்தவள், “ஹலோ” என்றிட, எதிர்முனையில் பெண்குரல் கேட்டது.
“ஹலோ மேம். கான்ட்ராக்ட் காதலி வேணும்ன்னு ஒரு ஆட் பாத்தேன். அதை பத்தி டீடெய்ல்ஸ் சொல்ல முடியுமா. இட்ஸ் இன்டரஸ்டிங்” என்றதில் வாரி சுருட்டி எழுந்தாள்.
‘இதுல என்ன இன்டெரெஸ்ட்டிங்’ என வாய்வரை வந்தாலும், “உங்க பேர் அண்ட் டீடெயில்ஸ இதே நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. நான் அகைன் காண்டாக்ட் பண்றேன்” என்று வைத்து விட்டாள்.
அதன் பிறகு வரிசையாக போன் வந்து கொண்டே இருக்க, அவளுக்கோ உறக்கமே பறிபோனது.
“ச்சை… நம்ம ஊர் பொண்ணுங்க கஞ்சா விக்கிறவன், சிகரெட் குடிக்கிறவன், தண்ணி அடிக்கிறவன், ரக்கட் பாய்ன்னு தேடி தேடி லவ் பண்றாங்கன்னு பார்த்தா, இப்ப என்ன இப்படியும் கிளம்பிட்டாங்க. இந்த நாடும் நாட்டுப்பொண்ணுங்களும் எதை நோக்கி தான் போறாங்களோ!” என சலித்துக் கொண்டவள், குளியலறைக்கு செல்லப் போக, மீண்டும் அலைபேசி அழைத்தது.
‘ஐயோ!’ எனப் பற்களைக் கடித்தவள், போனை எடுத்து “ஹலோ?” என சற்று கடுமையாகவே கேட்க,
“என்னங்க இப்படி மிரட்டுறீங்க. இப்படி எல்லாம் ஹலோ சொன்னா, என்னை லவ் பண்ண வர்ற பொண்ணுங்களும் போனை கட் பண்ணிட்டு போய்டுவாங்க. என் ஒரு வருஷ காதல் வாழ்க்கையை இழுத்து மூடிடுவீங்க போலயே” என்ற நக்கல் குரல் கேட்டது. சாட்சத் வம்சி கிருஷ்ணாவே தான்.
“நீங்களா? உங்களுக்கு எப்படி என் நம்பர் தெரியும்.” என்று இப்போதும் அதே காட்டத்துடன் கேட்டாள்.
அதில் மெலிதாய் சிரித்தவன், “உங்களுக்கு தூக்கம் முழுசா கலையலைன்னு நினைக்கிறேன். முதல்ல ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்து இதே நம்பர்க்கு கால் பண்ணுங்க” என்று பொறுமையாக உத்தரவிட்டு விட்டு போனை வைக்க, ‘எனக்கு ஆர்டர் போட இவன் யாரு?’ என்று மீண்டும் ஆத்திரம் எழுந்தது அவளுக்கு.
பின் குளியலறைக்குள் நுழைந்து குளித்து முடித்து தெளிவான பிறகே, ‘அடி பைத்தியமே! இந்த நம்பரை தான விளம்பரத்துக்குக் குடுத்த, ஊருக்கே தெரிஞ்ச நம்பர் அவனுக்குத் தெரியாமையா இருக்கும்.’ எனத் தலையில் அடித்துக் கொண்டாள்.
கீழுதட்டைக் கடித்தபடி, மீண்டும் வம்சியின் எண்ணிற்கு அழைக்க, அவன் ஒரே ரிங்கில் போனை எடுத்தான்.
“ப்ரெஷ் ஆகிட்டீங்களா?” எனக் கேட்டவனின் குரலில் நிச்சயம் கேலி இல்லை.
“ம்ம்…” என்றவளும் அவள் முந்தையதாய் கேட்ட அசட்டுக் கேள்விக்கு விளக்கமளிக்கவில்லை. அவனும் அதனைப் பெரிதுபடுத்தவில்லை.
“கால் ஏதாவது வந்துச்சா கிருபாஷிணி?” ஆர்வத்துடன் கேட்டான் வம்சி கிருஷ்ணா.
“ம்ம். வந்துச்சு. அவங்க டீடெய்ல்ஸ் வாங்கி வச்சுருக்கேன். எங்க வர சொல்லட்டும்?” என்றிட,
“கால் வர வர ஈவ்னிங் டைம்ல ஒவ்வொருத்தரையா இன்டர்வ்யூ பண்ணலாம்ன்னு நினைச்சுருந்தேன். பட், உங்களால உங்க வேலையை விட்டுட்டு தினமும் அலைய முடியாதுல. சோ, வர்ற சண்டே அவங்க எல்லாரையும் ஒண்ணாவே ஆர்கனைஸ் பண்ணி, ஒரே இன்டர்வியூவா வச்சுடுறேன். அன்னைக்கே ஒரு பொண்ணு செலெக்ட் ஆகிட்டா கூட ஹாப்பி தான். அப்படி இல்லனா, மறுபடியும் ஒரு நாள் ‘ஆட்’ குடுக்கணும்.” என அவன் தீவிரமாய் பேச,
அவளுக்குதான், விரசமாக இருந்தது. “ஏங்க ஏதோ வேலைக்கு ஆள் எடுக்கப் போற மாதிரி பேசுறீங்களே!” என்றாள் நொந்த.
அதே நேரம் தனது நேரத்தை வீணாக்காமல் அவன் எடுத்த முடிவும் திருப்தி அளித்தது.
“காதலிக்கிறதும் ஒரு வேலை தானங்க.” என்றவனது பேச்சைக் கேட்க இயலாமல், “ஆளை விடுங்க சாமி. சண்டே மீட் பண்ணலாம்.” என்று போனை வைத்து விட்டவளுக்கு, தலை கிறுகிறுத்தது.
‘இன்னைக்கு புதன் தான் ஆகுது. இன்னும் நாலு நாள் இந்தக் கொடுமையை அனுபவிக்கணுமா?’ என நொந்து போனாள்.
அதோ இதோவென ஞாயிற்றுக்கிழமையும் வந்திருக்க, அவன் கொடுத்த முகவரிக்குச் சென்றாள்.
லோட்டஸ் அபார்ட்மெண்ட். ஏ, பி, சி என மூன்று பிளாக்குகளைக் கொண்ட அபார்ட்மெண்ட் அது. சகல வசதிகளும் நிறைந்திருக்கும் அளவு லக்ச்சுவரி இல்லை என்றாலும், இப்போதிருக்கும் நவீனத்தில் முக்கால்வாசியைக் கொண்டிருந்தது.
குழந்தைகள் விளையாடும் பார்க், நடைப்பயிற்சி செல்லும் பாதை, ஜிம், சிறிய பார்ட்டி ஹால், சுற்றிலும் கண்காணிப்புக் கேமரா என அனைத்தும் இருக்க, “பிளசண்ட் என்விரான்மெண்ட்…” என முணுமுணுத்தபடி, வம்சி கிருஷ்ணாவின் பிளாட் இருக்கும் ‘பி’ பிளாக்கிற்குச் சென்றாள்.
நான்காம் தளத்திற்கு மின்தூக்கியின் உதவியுடன் வந்தடைந்தவள், காலிங் பெல்லை அடிக்க, சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டது.
இன்று டீ – ஷர்ட், ஜீன்ஸில் இருந்தான். இதழ்களில் மட்டும் அதே புன்னகை. “ஹாய் வாங்க.” எனக் கதவை நன்றாகத் திறக்க, கிருபாஷினியின் மனதில் ஒரு அபாய மணி அடித்தது.
‘என்ன இருந்தாலும் அந்நிய ஆடவனின் வீட்டிற்குள் நுழைவது எத்தகைய முட்டாள்தனமான செயல்!’ எனத் தன்னையே நிந்தித்தவள், உள்ளே வராமல் விழித்தபடி நிற்க, அவளை ஒரு கணம் புரியாமல் பார்த்தான்.
பின் சட்டெனப் புன்னகைத்து விட்டவன், “இருந்தாலும் நீங்க ரொம்ப உஷார் பேர்வழி கிருபாஷிணி, பட் ஐ லைக் திஸ் அவேர்னெஸ். கீழ இருக்குற கான்ஃபரன்ஸ் ஹால்ல மீட் அப் ஏற்பாடு பண்ணிருக்கேன். அங்கேயே ஒவ்வொரு பொண்ணையும் கூப்பிட்டு இன்டர்வியூ பண்ணலாம்.” என்றவன் கதவை அடைத்து விட்டு மின்தூக்கிக்குச் செல்ல, ‘இவன் நல்லவனா கெட்டவனா?’ என்ற குழப்பத்தில் தலையை பிய்த்துக் கொண்டாள் கிருபாஷிணி.
அதை விட, அவனது விளம்பரத்தைப் பார்த்து விட்டு வந்த பெண்களிடம் அவன் பேசிய பேச்சிலும் அளித்த விதிமுறைகளையும் கேட்டு அயர்ந்து விட்டாள்.