Skip to content
Post Views: 848
இளங்குயில் -2
அன்று சனிக்கிழமை என்பதால், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
“ஏன்டா, பொண்ணு பாக்கனும்னா, அவங்க வீட்டுக்கு போகனும், அதவிட்டுட்டு கோவில், குளம்னுட்டு… ஏம்பா நீங்களாவது சொல்லியிருக்கலாமே?” என ப்ரணவின் அக்கா பானுமதி கேட்க,
“உன் தம்பி சொல்லி தான் நானே வர்றேன். இதுல நான் என்னத்த சொல்றது. இப்ப எல்லாம் அவங்க அவங்க இஷ்டமாயிடுச்சு”….
Advertisement
“இப்ப எல்லாம் பெரும்பாலும் யாரும் பொண்ணு வீட்ல போயி, பொண்ணு பாக்கறதில்ல பானு.… கோயில், ஏதாவது பங்ஷன் இல்லைனா ஒரு நல்ல ஹோட்டல் இப்படி தான் பாத்துக்கிறாங்க”.. என ஆனந்த் கூற,
“அது சரி!… உன் கல்யாணமும், என் கல்யாணமும் ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்திருக்குமா, டேய் என்னோடது நாலு வருஷம், உன்னது முடிஞ்சு இரண்டு வருஷம் தான் ஆச்சு… நாம என்ன இப்பிடியா பொண்ணு பாத்தோம்… நாலு வருஷத்துக்குள்ள என்ன மாறிடுச்சு” என மீண்டும் கேட்க,
“ஐயோ அண்ணி, நம்ம கல்யாணம் எல்லாம் மாமா பாத்து, முன்ன நின்னு நடந்தது.. ஆனா உங்க சின்ன தம்பி, அவரே பொண்ணு பாத்துட்டு வந்து மாமா கிட்ட சொல்லி, நாம வந்து பாக்குறது.. அது தான் மாறி இருக்கு” என ஆனந்தி நக்கலாக கூறி சிரிக்க,
Advertisement
ஆனந்த் அவளை முறைக்க, உதட்டை கோணி திருப்பிக் கொண்டாள்…
Advertisement
“இவளுக ரெண்டு பேருக்கும் எதுல பொருத்தம் இருக்கோ இல்லையோ, ஆனா ஒரு பிரச்சினைய பெருசாக்கிறதுல நல்ல பொருத்தம் டா” கோமதி தன் மகன்களிடம் கூற,
“என்னம்மா உன் பசங்க கிட்ட மட்டும் என்ன பேசற”
“அது ஒன்னுமில்லைமா, மருமகன காணோம்னு கேட்டேன்”…
Advertisement
“ம்ம்… வாறாரு வாறாரு, அதான், நான் ஒரு அறுந்தவாலை பெத்து வெச்சிருக்கேனே.. அவ வர்ற வழியெல்லாம் திங்க கேட்டுட்டே இருந்தா… வாங்கி குடுத்து கூட்டீட்டு வருவாரு”…
“குழந்தை புள்ளைய ஏம்மா அப்படி சொல்ற” சோமு கேட்க,
“அதான உன்னைய நாங்க வளத்தல” கோமதியும் தன் பங்குக்கு கூற,
“சரி சரி, எல்லாரும் பேசாம சாமி கும்பிடுங்க, தீபாராதனை ஆகுது பாரு” என சோமு கூறினார்….
அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு பிரகாரம் சுற்றி வெளியில் வர, கோயில் அருகில் சென்று கொண்டிருந்த ஆறு, அதில் நிறைந்து ஓடிக்கொண்டிருந்த தண்ணீர், அருகில் இருந்த ஆலமரம், அதில் கூடு கட்டியிருந்த குருவிகள் என கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சியாக இருந்தது…..
சோமுவுக்கு அந்த இடத்தை பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது… ஆலமரத்தை சுற்றிலும் திண்ணை போல் கட்டியிருக்க, அருகில் சற்று தள்ளி மர பெஞ்ச் சிலவும் போடப்பட்டிருந்தது.
“ரொம்ப வருஷம் கழிச்சு இந்த மாதிரி ஒரு அருமையான, அழகான இடத்தை இப்ப தான் பாக்குறேன்….. ஏன் கோமதி, இந்த கோயிலுக்கு எல்லாம் நீ வரமாட்டியா?”…..
“ஏன் கேக்குறீங்க?”…
“இல்ல இங்க நீ வந்திருந்தா உன்ன கூட்டிட்டு வர, போகையில நான் பாத்திருப்பேன்.. அதான் கேட்டேன்”….
“நான் இங்க வந்தது இல்லீங்க, சின்னவன் சொல்லியிருக்கான். ஆனா நானும் இப்பதான் வர்றேன்”…
“அப்பா… இந்த கோயில், யாழுக்கு ம்க்கும்.. இல்ல, யாழினிக்கு ரொம்ப பிடிச்ச கோயில்.. அவ தான் எனக்கு காட்டினா. அவளோட சந்தோஷம், துக்கம் எதுனாலும் இங்க தான் வருவா”…
அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் மனதிலோ, பரவாயில்லை அந்த புள்ளைக்கு நல்ல ரசனை இருக்கு, மத்தவிங்களாட்டம் பார்க், பீச் னு போகாம கோயிலுக்கு வருபவளை, பார்க்காமலேயே ஒரு சின்ன நல்ல எண்ணம் தோன்றியது மனதில்….
“அது சரி!.. இப்ப என்ன இந்த இடம் எப்படி இருக்குனு பாக்கவா நாம வந்தோம்.. டேய் பிரணவ், எங்க அவ வந்துட்டாளா, இல்லியா?… இன்னும் எத்தனை நேரம் நாம காத்திட்டிருக்குறது?”…..
“அதானே!.. இதே நாம் அவங்க வீட்டுக்கு போய் பார்க்கறதா இருந்தா, இன்னேரம் அவங்க காத்திருப்பாங்க”…என ஆனந்தி கூற,
ஆனந்த் இருவரையும் பார்த்து தலையசைத்து விட்டு இதுகளை திருத்தவே முடியாது என நினைத்தவன், “டேய் தம்பி, நீ இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே நின்ன, இதுக ரெண்டும் சேர்ந்து உன் கல்யாணத்தை இங்கேயே ஊத்தி மூடிடுங்க, உசாராயிக்கோ, சீக்கிரம் அவங்களுக்கு போன் பண்ணு, என்னம்மா?”…
“ஆமாண்டா தம்பி, உங்க அக்காகாரி அவ நாத்தனார உனக்கு கட்டி வைக்க பிளான் பண்றா, உன் அண்ணிக்காரி அவ தங்கச்சிய கட்டி வைக்க நினைக்கிறா.. உன் கல்யாணம் முடியறதுக்குள்ள, எந்த பிரச்சனைய எங்க இருந்து கூட்டிட்டு வருவாளுகனே தெரியல”
“ஏம்மா, தம்பிக்கு அவ்ளோ டிமாண்டா” என ஆனந்த் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,..
“நாம இங்க உட்காரலாமா மாது?.. பாப்பா வந்திருட்டும்” என்றவரை, அனைவரும் திரும்பி பார்க்க…
அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்தார் சுந்தர்.
“நாம இங்க எதுக்கு வந்திருக்கோம்?.. ஆனா உங்க மக என்ன பண்ணிட்டிருக்கா?”… என கேட்டுக்கொண்டே அவர் அருகில் அமர,
“அம்மா யாழுவோட அப்பா” என கூறியவன், “ஹாய் அங்கிள்” என்ற வார்த்தை பாதி உள்ளேயே சென்று விட்டது.. அவனது அப்பாவின் “அடடே சுந்தரம் சார்!” என்ற அழைப்பில்.
“சுந்தர் சார்”, என அழைத்துக் கொண்டே அவர் அருகில் செல்ல,
இங்கோ அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ‘என்ன’ என்பது போல் கோமதி கேட்க, ‘உதடு பிதுக்கி தெரியாது’ என்பது போல் தலையை ஆட்டியவன், “வாங்க அங்க போகலாம்” என கூறி முன்னே சென்றான் ப்ரணவ்..
“அடடே சோமு சார், நல்லா இருக்கீங்களா?, நீங்க இங்க.. கோயிலுக்கு வந்தீங்களா?” என கேட்டபடி பின்னால் பார்க்க,
“அட ப்ரணவ் தம்பி” என்றார்.
“நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க?” அட! என் பையனை உங்களுக்கு தெரியுமா?” என கேட்டார் சோமு…
“தம்பி தான் எங்க ஆடிட்டிங் எல்லாம் பாக்குறாரு” என்றார்.
“ஓஓ… என்றவர், கோமதி அன்னிக்கு, பேங்க்ல பத்து லட்சத்தை தொலைச்சப்ப, அங்க வேலை செய்ற சார் ஒருத்தர் தான், பணத்தை கண்டுபிடிக்க உதவி செஞ்சாருனு சொன்னேன் இல்ல, அது இவர்தான்” என்றார்…
“ஓஓ.. அப்படிங்களா!, ரொம்ப நன்றிங்க” என்றவர் மனதில், அப்பாடி ஒருவழி கிடைச்சிருக்கு, இத வெச்சே இந்த கல்யாணத்த நல்ல படியாக நடத்தி முடிச்சுடனும், முருகா!….. நீ தான் துணை இருக்கணும் சாமி என அவசர வேண்டுதல் ஒன்றை வைத்தார்..
“இதுல என்னமா இருக்கு, இதெல்லாம் ஒரு விஷயம்னுட்டு, நன்றியெல்லாம் எதுக்கு?”
“அது அப்படி இல்லீங்க சார், உதவி செஞ்சவுங்களுக்கு அது சின்ன விஷயம்.. ஆனா எங்களுக்கு அது எவ்வளவு பெரிய உதவி” என சோமு கூற, கோமதியும் அதை ஆமோதித்தார்.
“அப்புறம் சார், இவ என் சம்சாரம் கோமதி, இவன் பெரியவன் ஆனந்த் வாத்தியாரா இருக்கான், அது அவன் சம்சாரம் ஆனந்தி, இவ என் பொண்ணு பானுமதி வீட்ல தான் இருக்கா, மாப்பிள்ளையும் பேத்தியும், வெளியே கடையில நிக்கறாங்க, அப்பறம் இதோ சின்னவன் உங்களுக்கு தான் தெரிஞ்சுருக்கே” என்று கூறினார்.
அனைவரும் அவரை பார்த்து புன்னகைக்க, அவரும் புன்னகைத்துக்விட்டு,
“இவங்க என் மனைவி மாதவி, சொந்தமா ஃபேஷன் டிசைனிங் கடை வெச்சு நடத்திட்டு இருக்காங்க, ஒரே பொண்ணு யாழினி, அதோ அங்க நிக்கறா” என கைகாட்ட,
அவர் காண்பித்த திசையில் அனைவரும் பார்க்க, அங்கு ஒரு ஏழு, எட்டு வயதில் பத்து சிறுவர்கள், அவளை சுற்றி நின்று ஐஸ்கிரீம் வாங்கி தர சொல்லி கொண்டிருந்தனர்..
இளம் பச்சையும், மாம்பழ மஞ்சளும் கலந்த அம்பர்லா சுடிதார் ஒன்றில், தோளுக்கு கொஞ்சம் கீழே இருந்த கூந்தலை லேயர் கட் செய்திருந்தாள். பார்த்தவுடன் பிடித்துவிடும் குழந்தைத்தனமான முகம் குறை சொல்ல முடியாத தோற்றம் என இருந்தாலும்… ஒவ்வொருவரின் பார்வையிலும், ஒவ்வொரு விதமாய் தெரிந்தாள்…
ஒருவருக்கு ஆராய்ச்சி, அடுத்தவருக்கு அன்பாய், இன்னோருவருக்கு திமிராய், அலட்டலாய் தெரிய ஒருவனுக்கு மட்டுமே அவள் ரசனையாய் தெரிந்தாள்…….
பிரணவின் பார்வை அவள் மீதே இருக்க, ஆனந்த் தான் அவன் தோளை தட்டி, “ஐயா ராசா போதும், இந்த உலகத்துக்கு வா” என்றான்.
“நல்ல அழகான பொண்ணுங்க சார்” என்றார் சோமு.
“ப்பா, இவர் தான் யாழினி அப்பா” என ப்ரணவ் சுந்தரை காட்ட,
ஒரு நொடி முழித்தவருக்கு, பிறகே தாங்கள் இந்த கோயிலுக்கு வந்த காரணம் ஞாபகம் வந்தது…
“ஓ.. சுந்தரம் சார், அது நீங்க தானா?” என கேட்டவர் முகம் சோர்ந்து போனது.
அதை கவனித்த சுந்தர், “ஆமாங்க சோமு சார், என் பொண்ணும், உங்க பையனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க.. இப்ப உங்க மனசில என்ன ஓடுதுனு என்னால புரிஞ்சுக்க முடியும்.. ஏன்னா நானும் அப்பாதான்” என சோர்வாக கூறி புன்னகைக்க,
சோமுவும் சோர்ந்தவாறு புன்னகைத்தார்.
“ஏங்க, உங்க பொண்ணுக்கு நல்ல புத்தி எல்லாம் சொல்ல மாட்டீங்களா” என பானுமதி கேட்க,
“அக்கா..” என ப்ரணவ் பல்லை கடிக்க,
“ பானு” என சோமுவும், கோமதியும் கண்டனமாக பார்த்தனர்.
“ நான் என்ன இப்ப தப்பா சொல்லிட்டேன். அவங்க பொண்ணுக்கு அவங்க தான புத்தி சொல்லனும்.. பொண்ணு காதலிச்சாளாம் உடனே மாப்பிள்ளை பார்க்க தேடி வந்தாச்சு”..என காட்டமாய் பேச,
“ எங்க பொண்ணுக்கு நாங்க அதெல்லாம் சொல்லி குடுத்து தான் வளத்திருக்கோம்” என மாதவி கோபமாய் பேச வர,
“மாது”.. என கண்டிப்பாய் கூறியவர்,
ஒரு புன்னகையுடன், “காதலிச்சு கல்யாணம் பண்றது தப்பு இல்லமா, நாம தேர்ந்தெடுக்கற துணை நல்லவங்கலாங்கறது தான் முக்கியம். ப்ரணவ் தம்பிய எனக்கு மூணு வருஷமா தெரியும்.. ரொம்ப நல்ல பையன். நாங்க பாத்து கல்யாணம் பண்ணி வெச்சாலும் அந்த வாழ்க்கை மேலயும், அந்த பையன் மேலயும் ஒரு காதல் இருந்தா தான், அந்த வாழ்க்கை நல்லா இருக்கும். அது ஏன் என் பொண்ணு விரும்பின பையனா இருக்க கூடாது னு தான், நாங்க இன்னிக்கு இங்க வந்தோம்.. பாத்தா சோமு சார் குடும்பம்” என பொதுவாய் கூறியவர்,
சோமு விடம் திரும்பி, “சார் உண்மையா சொல்லனும்னா, என் பொண்ணுக்காக தான் நாங்க வந்ததே. ஆனா உங்களை நல்லா தெரியும்.. உங்க பையன்னு தெரிஞ்சதும் நாம ஏன் சம்மந்தம் பண்ண கூடாது? னு எனக்கு தோனுது.. உங்களுக்கு விருப்பம் இருந்தால்… என கோடிட்டு நிறுத்த,
“நிஜமா எனக்கும் அதேதான் யோசனைங்க சார். நீங்க சொன்னது போல தான் ஒரு பானை சோத்துக்கு, ஒரு சோறு பதம்ங்கற மாதிரி உங்க பொண்ணு போது எனக்கு மறுக்க காரணம் இல்ல.. கூப்பிடுங்க மருமகள ஒருக்க பாத்துக்கிறோம்” என்றார் சந்தோஷமாய்.
“இந்த டிவிஸ்ட நாம எதிர்பாக்கலையேடா மகனே” என கோமதி கூற,
“எனக்கும் அதான் மா ஒன்னும் புரியல” என ப்ரணவ் கூறினான்.
“பாப்பா’ என அங்கிருந்தே சுந்தர் அழைக்க,
“ஏங்க நாங்க பாக்க வந்தது, அந்த பத்து வயசு பாப்பாங்கள இல்ல” என பானுமதி கூற,
“அது என் பொண்ண நான் அப்படி தான் கூப்பிடுவேன் மா” என்றவர்,
“யாழு பாப்பா” என்று மீண்டும் அழைக்க,
‘ச்சே சகிக்கல‘, என முணங்கிகொண்டே திரும்பி விட,
“அவரு பொண்ணு அவரு கூப்பிடுறாரு, இதுல உனக்கு என்ன கஷ்டம்” ப்ரணவ் காய,
“ஏதேது, போற போக்க பாத்தா நீயும் அப்படிதான் கூப்பிடுவ போல”
“ம்ப்ச், ம்கூம் இது அவங்க அப்பாக்கு மட்டும். எனக்கு வேற பேரு இருக்கு” என காலரை தூக்கி விட்டு சொல்ல,
“அதுசரி” என்றவள், மனதுக்குள் முதல்ல கல்யாணம் நடக்குதான்னு பாரு தம்பி, அப்பறம் கூப்பிடு செல்ல… பேரு வெச்சு என நினைத்தாள்..
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து வந்தவள் ப்ரணவை பார்த்துவிட்டு நிற்க, அருகில் இருந்த பெற்றோரை கண்ணால் காண்பிக்க, அவர்களை பார்த்து புன்னகைத்து விட்டு தன் தந்தையின் அருகில் சென்று நிற்க,
பாருடா, நம்மாளு அமைதியா நிக்குது, இது எட்டாவது அதிசயமாச்சே என எண்ணினான் ப்ரணவ்.
“பாப்பா, இவங்க நம்ம ப்ரணவ் தம்பியோட அப்பா”
“ஹாய் அங்கிள், ஹாய் ஆண்டி”
“ஏம்மா, உனக்கு இந்த வணக்கம் எல்லாம் சொல்ல தெரியாதா?” பானுமதி ஆரம்பிக்க,
“இங்க என்ன நியூஸ் சூட்டா நடக்குது, வணக்கம் னு சொல்லி ஆரம்பிக்க, என்ன ஆண்டி நீங்க, எந்த காலத்தில இருக்கீங்க?”,
“ஏதே, ஆண்டி யா? என்ன பார்த்தா உனக்கு ஆண்டி மாதிரியா இருக்கு?” என மூக்கு விடைக்க,
ஆனந்த், ப்ரணவ், ஆனந்தி என அனைவரும் வாயை மூடி சிரிக்க,
“ஷ்ஸ், பேசாம இருங்க” என அடக்கினார் கோமதி.
“உன்ன விட ஒரு ஆறேழு வயசுதான் கூட இருப்பேன். அதுக்கு நீ இப்படி சொல்லுவியா, பாருங்க ப்பா” என புகார் படிக்க,
“ஐயோ சாரி சாரிங்க, நீங்க….. அது.. உங்க டிரஸிங் பாத்து நான் அப்படி நினைச்சுட்டேன். சாரி”.. என்க,
“ம்ம், அப்படி வா வழிக்கு, என்னை என்னனு நினைச்ச?” என எண்ணியவள், “பரவாயில்லை, பரவாயில்லை” என்றாள், ஏதோ போனா போகுது என்பது போல்.
அதான பாத்தேன்.. இதோ ஆரம்பிச்சுட்டாளே… இவளாவது அமைதியா இருக்கிறதாவது என எண்ணினான் ப்ரணவ்.
“என்ன கண்ணு படிச்சிருக்க” என கேட்டார் கோமதி.
“நான் எம்காம் முடிச்சிருக்கேன் ஆண்டி, ஒரு ஆசைக்கு **** இந்த பத்திரிகையில வேலை செய்யுறேன்”
“என்ன பத்திரிக்கையில் வேலை செய்யுறியா?… ஐய்யே, இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது” என முகத்தை சுழிக்க,
வந்ததே கோபம் மாதவிக்கு, கணவர் வரும் போதே, சொல்லி அழைத்து வந்திருந்தார். அங்கு வந்து தேவையில்லாத பேச்சு எதுவும் பேச கூடாது என, அதனாலே இவ்வளவு நேரம் பானுமதி கூறிய விஷயங்களை காதில் வாங்காமல் காற்றில் விட்டிருக்க, இப்போதோ பொறுக்க முடியவில்லை. ஏதோ பேச போக சுந்தர் தடுத்துவிட்டார்..
யாழினி, ப்ரணவை முறைத்து விட்டு கூற வருவதற்குள்,
“அந்த பொண்ணு தான் சொல்லுதே, ஆசைக்கு போறேன்னு விடேன் பானு.” என்றது வேறு யாரும் அல்ல சோமுவே தான்.
தலை சுற்றி மயங்காத ஒரு குறை தான் கோமதிக்கு… “டேய் சின்னவனே, என்னடா நடக்குது இங்க?, நாம் எதெல்லாம் பிரச்சினையாகும் நினைச்சோமே அதெல்லாம் ஒன்னுமே இல்லைனு, உங்கப்பாவே ஊதி தள்ளிட்டார்”…
“நானும் அதை தான் ம்மா, யோசிக்கிறேன்”
“சரி எது எப்பிடியோ, எந்த பிரச்சனையும் இல்லாம உன் கல்யாணம் நல்லபடியா நடந்தா, அதே போதும். முருகா நீ தான் காப்பாத்தனும்.” என வேண்டிக் கொண்டார்.
அவரது வேண்டுதல் முருகனின் செவிகளில் விழுந்திருக்குமா?……….
error: Content is protected !!