Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகம் சேர்ந்தாய் அதிசயனே

ASA 1

அகம் 1

“அம்மா, இந்த ஜும்கா என்னோட ட்ரஸ்க்கு மேட்ச் ஆகுமா?” என்று ஒருபக்கம் நன்மதி கேட்க,



Advertisement

“அம்மா, இந்த பொட்டு நல்லா இருக்கா பாருங்க?” என்று இன்னொருபக்கம் நன்மொழி கேட்க,

Advertisement

“உங்களுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கும்?” என்று எல்லாம் அன்னையும் சொல்லும் வழக்கமான பதிலையே தன் மகள்களுக்கும் கூறினார் நளினி.

Advertisement

அவர்கள் இப்போது நின்று கொண்டிருப்பது பாண்டிபஜாரின் சாலையோர ஒரு கடையில், சாதாரணமாக ஷாப்பிங் வந்தாலே ஒரே சாயல் கொண்ட இரட்டை சகோதரிகளான நன்மதி, நன்மொழிக்கு கொண்டாட்டமாக போய்விடும், இதில் திருமணத்திற்கான ஷாப்பிங் என்றால் கேட்கவா வேண்டும், ஒரு மணி நேரத்திற்கு முன்பு வாங்கியிருந்த லெஹங்காவிற்கு தோதான அணிகலன்களை ஒவ்வொரு கடையாக தேடித் தேடி வாங்கிக் கொண்டிருந்தனர்.

Advertisement

நமக்கு ஒரு குழந்தையே போதும் என்ற கணவரை ஒத்துக் கொள்ள வைத்து இரண்டாவது கருவுறும்போது மூத்த மகளுக்கு ஐந்து வயதாகியிருந்தது. ஆசை ஆசையாய் கருவை சுமக்க இரட்டை குழந்தைகள் என்ற செய்தியில் கணவன், மனைவி இருவருக்கும் மகிழ்ச்சியே, இரண்டுமே பெண் குழந்தையாக பிறந்தபோதுமே உறவினர்களெல்லாம் மூன்றுமே பெண் பிள்ளைகளாக பிறந்துவிட்டதே, எப்படி வளர்த்து திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள்? என்று கேட்டபோது, ஒரு புன்னகையையே கணவனும் மனைவியும் அவர்களுக்கு பதிலாக கொடுத்தனர்.

“எனக்கு அரசு வேலை இருக்கிறது. நீயும் வேலை செய்கிறாய். சொந்த வீடும் இருக்கிறது? பிறகென்ன நம் குழந்தைகளை மகாராணிகள் மாதிரி வளர்க்கலாம்,” என்று சொன்ன கணவர் பாதியிலேயே இந்த உலகத்தை விட்டுப் போய்விடுவார் என்று நளினிக்கு அப்போது தெரியவில்லை. அப்போது மதிக்கும் மொழிக்கும் ஏழு வயது.

காலையில் புன்னகை முகமாக மகள்களிடமும் தன்னிடமும் விடைப்பெற்ற கணவரை மாலை விபத்தில் பலியாகி பிணமாக பார்க்கும்போது உலகமே இருண்டது போல் தான் இருந்தது அவருக்கு, அடுத்து என்ன செய்யப்போகிறோம், எப்படி குழந்தைகளை வளர்க்கப் போகிறோம் ஒன்றும் புரியாத நிலை தான், இருவருக்குமே பெற்றவர்கள் இல்லை. மற்ற உறவுகளும் 16ம் நாள் காரியத்துடன் அவரவர் வேலையைப் பார்க்க போய்விட்டனர்.

அந்தநேரமும் அதன்பின்பும் தனக்கு உறுதுணையாக உடன் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டது சாகரி தான், அதுவரை அருகருகில் வசிப்பதால் உண்டான பழக்கம் அதன்பின் தான் இன்னும் இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பாக மாறியது.

சாகரியின் மூத்த சகோதரன் சேகரன், அவரின் செல்வாக்கை பயன்படுத்தி கணவரின் வேலையை எவ்வளவு விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக அவருக்கு வாங்கி தந்ததால் தான் இப்போது உறவினர் யாரின் தயவுமின்றி சொந்தக்காலில் நின்று மகள்களை நல்லப்படியாக நளினியால் வளர்க்க முடிகிறது.

சாகரியின் மகளுக்கு தான் இப்போது திருமணம். அந்த திருமணத்திற்கு செல்வதற்கு தான் இந்த ஷாப்பிங்கே, கணவர் வெளிநாட்டில் இருக்கவே சாகரி இவர்களுக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்திருந்தார். பின் கணவர் நிரந்தரமாக இந்தியா வந்துவிடவே சில வருடங்களுக்கு முன்பே அந்த விட்டை விட பெரிய வீடாக பார்த்து குடியேறிவிட்டனர். ஆனாலும் இருவருக்கும் நட்பு தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

கணவரோடு வீடு தேடி வந்து பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைத்திருந்தார் சாகரி. “எங்க முறைப்படி கல்யாண சடங்குகள் என்னமோ நாலைந்து நாட்கள் தான், ஆனா வட இந்தியர்கள் சடங்குகள் எல்லாம் செய்யணும்னு பசங்க எல்லாம் சேர்ந்து ஏதேதோ திட்டம் போட்டு வச்சிருக்காங்க, பத்து நாளும் ஒரே கொண்டாட்டம் தான், பிள்ளைங்களை கூட்டிட்டு கண்டிப்பா வரணும், சும்மா ஏதாவது காரணம் சொல்லக் கூடாது.” என்று உரிமையாக சொல்லிவிட்டு சென்ற தோழிக்காக, திருமணத்திற்கு பிள்ளைகளை அழைத்து செல்ல வேண்டுமென்று தான் நளினியும் நினைத்தார். 

அதுவும் பாண்டிச்சேரிக்கு அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்களுக்கு சொந்தமான ரெசார்ட்டில் இந்த திருமண விழா நடக்கவிருக்கிறது. பத்து நாள் நடைபெறும் திருமணத்திற்கு அந்த மொத்த ரெசார்ட்டையும் இவர்களுக்காக மட்டும் உபயோகிக்கப் போகிறார்களாம்,

மதி, மொழி இருவரும் பத்தாவது பொது தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்திருப்பவர்கள். எங்கேயாவது பிக்னிக் போகலாம் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால் இந்த திருமணத்திற்கு அவர்களை அழைத்து செல்ல நளினி முடிவெடுத்திருந்தார். பத்து நாட்களுக்கு அவரால் விடுமுறை எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. நாலைந்து நாட்களுக்காவது இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்திருந்தார்.

“அம்மா இதைப்பாருங்களேன்.” மதி அழைத்ததில் யோசனையை விட்டவர் மகள்களுடன் ஐக்கியமாகிவிட்டார்.

ஆனால் இவர்களுடன் வந்திருந்தாலும் அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் அலைபேசியில் மூழ்கியிருந்தாள் நம் கதையின் நாயகி நயந்தினி. நளினியின் சீமந்த புத்திரி. பொறியியல் படிப்பின் இறுதி வருடத்திற்கான தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவிற்காக சில கனவுகளுடன் காத்திருப்பவள். அன்னையும் தங்கைகளும் ஷாப்பிங் கூப்பிட்டபோது வர மறுத்தவளை, நளினி கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததில் அந்த கோபத்தை காட்டுவது போல் தனக்கும் அவர்களுக்கும் சம்மதம் இல்லாததுபோல் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள்.

அதை அறியாத நன்மதியோ, “அக்கா இங்கப் பாரேன். இந்த பேங்கிள்ஸ் உன் லெஹங்காவுக்கு சூட் ஆகும்ல,” என்று தமக்கையிடம் கேட்க, 

நயந்தினியோ தங்கை காட்டியதை பார்க்காமல், அலைபேசியில் யாருக்கோ குறுந்தகவல் அனுப்பியப்படியே, “ம்ம் ஆமாம்,” என்று மட்டும் பதில் கூறவும், அதில் நளினுக்கு கோபம் வரவே, மகளிடமிருந்து அலைபேசியை வெடுக்கென்று பிடுங்கியவர்,

“பிள்ளை ஆசையா காட்டுது, நீ எங்க கவனத்தை வச்சிருக்க,” என்று அவளைத் திட்டவும், மேலும் ஏதாவது பேசினால் அலைபேசியை தரமாட்டார் என்பதை நயந்தினி உணர்ந்து,

“சரி போன் பார்க்க மாட்டேன் கொடுங்க,” என்று அலைபேசியை வாங்கியவள், தங்கைகளோடு சேர்ந்து கொண்டாள்.

மூன்று பிள்ளைகளையும் நல்லப்படியாக வளர்த்து ஆளாக்க முடியும் என்று நினைத்திருந்த நளினிக்கு இப்போதைய ஒரே கவலை நயந்தினியை பற்றி தான், 

தவம் வேண்டி பிறக்கவில்லையென்றாலும் முதல் குழந்தை என்பதால் கணவன் மனைவி இருவருமே அவளை மிகவுமே செல்லமாக வளர்த்தனர். கணவர் இறந்தபோது அவளுக்கு ரெண்டும்கெட்டான் வயது என்பதால் தந்தையின் மறைவு அவளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதால் மற்ற இரண்டு மகள்களையும் விட நளினி அவளை பொத்தி பொத்தி வளர்த்தார். அதன் விளைவு நயந்தினி அனைத்திற்கும் அன்னையை தேடினாள்.

பிறகு அதுவே நளினிக்கு கவலையாகிவிட மகள் தன் துணை இல்லாமல் எல்லாவற்றையும் பழகி கொள்ள வேண்டும் என்பதால், சென்னைக்கு புறநகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் அவளை சேர்த்திருந்தாலும் அவளுக்கு பேருந்து பயணம் ஒத்துக் கொள்ளாது என்பதை சாக்காக வைத்து அவளை கல்லூரி விடுதியில் சேர்த்தார். தனியாக இருந்தால் மகள் அவளே அவளை பார்த்துக் கொள்வாள் என்று நினைத்து தான் இதை செய்தார். ஆனால் எல்லாம் வேறுமாதிரி ஆகிவிட்டது.

இப்போது மகளை முன்போல் வீட்டுப் பறவையாக மாற்ற வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று தான் புரியாமல் இருக்கிறார். இப்போது இந்தநேரம் திடீரென அவருக்கு ஒரு யோசனை வந்தது. பத்து நாள் இந்த திருமணத்தை சாக்காக வைத்து மகளை வேறொரு சூழ்நிலையில் இருக்க வைத்தால், தங்களுடன் அதிக நேரம் செலவிடுவாள். அவளிடம் ஏதாவது மாற்றம் வரலாம் என்று நினைத்தவர், பத்து நாட்களும் அங்கே தங்கி திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்ற முடிவை தீர்க்கமாக எடுத்திருந்தார்.

அன்னை இப்படி ஒரு முடிவை எடுத்தது நயந்தினிக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? அவள் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள விரும்பாமல் தான் இந்த ஷாப்பிங்கிற்கும் வர மறுத்தாள். அதிலும் ஊரில் வேறு துணிக் கடையே இல்லாதது போல் அவர்கள் அழைத்து வந்த கடையை பார்த்து அவளுக்கு மேலும் கடுப்பானது. அது அவனுக்கு சொந்தமான கடை அல்லவா, அதிலும் அவன் பேர் கொண்ட கடை அல்லவா,

“இங்கே எனக்கு எதுவும் பிடிக்கல,” என்று எதுவும் வாங்காமல் செல்லலாம் என்று பார்த்தாலும்,

“புது கலெக்‌ஷன்ஸ் நிறைய வந்திருக்கு மேம், இருங்க காட்றேன்.” என்று கடை ஊழியர் குடோனில் இருந்து நிறைய கொண்டு வந்து காட்ட, அதெல்லாம் நன்றாக இருந்ததால் அவளும் போனால் போகுது என்று அங்கேயே எடுத்துக் கொண்டாள்.

அவளுக்கு பிடித்த ராகவி அக்காவின் திருமணம் என்றாலும், அவள் அந்த திருமணத்திற்கு போக விரும்பாததற்கு முதல் காரணமே, அந்த திருமணத்திற்கு கண்டிப்பாக அவன் வருவான். அப்போதே அவன் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவான். இப்போ அவன் ரேஞ்சே வேற, இப்போ அதுக்கும் மேல இருப்பான். அவனைப் பார்க்க அவளுக்கு சுத்தமாக விருப்பமில்லை. அந்த திருமணத்தில் கலந்து கொண்டால் அவனை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும், அதனால் அந்த திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நினைத்தாள். அன்னையிடம் ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு கண்டிப்பாக வீட்டில் இருந்துவிட வேண்டும்,

ஏனென்றால் இந்த திருமணத்தில் கலந்து கொள்வது விக்கிக்கும் பிடிக்காது. இந்த திருமணத்திற்கு சென்று விக்கியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பது தான் அவள் இந்த திருமணத்திற்கு போக மறுப்பதற்கு இரண்டாவது காரணம். என்ன காரணங்கள் கூறி திருமணத்திற்கு போகாமல் தவிர்ப்பது என்று அவள் அப்போதிலிருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். இதில் பத்து நாட்களும் அங்கு தங்கவிருப்பது அவளுக்கு தெரிந்தால் என்ன பிரளயங்கள் ஆக காத்திருக்கிறதோ தெரியவில்லை.

“அம்மா கார் வந்துடுச்சு, வாசலில் நின்று மொழியும் மதியும் குரல் கொடுக்கவும்,

“அவரை பத்து நிமிஷம் காத்திருக்க சொல்லு,” என்று நளினி அதற்கு பதில் கூறினார்.

அவர்கள் கூப்பிட்டார்கள் என்று பத்து நாட்கள் அங்கு தங்கி திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டோமே, அவர்கள் ஏதோ முறைக்கு கூப்பிட்டு, அதை சாக்காக கொண்டு தாங்கள் வந்ததாக அவர்கள் நினைத்துவிட்டால் என்ன செய்வது? என்று நேற்றுவரை நளினி குழப்பத்திலேயே இருக்க,

சாகரி அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டவர், “நளினி நாளைக்கு நானே கார் அனுப்பறேன். 4 பேருமே வரீங்க தானே,” என்று உரிமையாக கேட்கவும் தான், நளினிக்கு குழப்பம் தீர்ந்தது.

“நீ கூப்பிட்டு நான் வராம இருப்பேனா? ஆனா எதுக்கு கார்? நாங்களே வந்துடுவோம்,” என்று அவர் கூறினாலும்,

“பரவாயில்லை, இதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை.” என்று சாகரி கூறவும், நளினியும் அதை ஒத்துக் கொண்டார்.

பத்து நாட்களுக்கு தேவையான உடமைகளை நேற்றே எடுத்து வைத்திருந்தார். அலுவலகத்தில் கேட்டதும் விடுமுறையும் கொடுத்துவிட்டனர். அதனால் அங்கு தங்குவதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மதியும் மொழியும் திருமணத்தில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். நயந்தினியை சம்மதிக்க வைப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இந்த திட்டமே அவளுக்காக தானே, இந்த பத்து நாள் மாற்றம் கண்டிப்பாக அவளுக்கு தேவை என்று அவர் நினைத்தப்படி, 

உடமைகள் அடங்கிய பெட்டிகளை வெளியில் கொண்டு வந்தவர், “நயனி, கிளம்பிட்டியா?” என்று மகள் இருந்த அறையை பார்த்தப்படி குரல் கொடுக்க,

“பத்து நிமிஷத்தில் கிளம்பிடுவேன்.” என்று குரல் கொடுத்த நயந்தினியோ, எப்போதோ தயாராகி தான் இருந்தாள். காலையிலிருந்து விக்கிக்கு எத்தனை குறுந்தகவல்கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. அலைபேசியில் அழைத்தும் எடுக்கவில்லை என்ற கவலை அவளுக்கு,

விக்கியின் கோபம் அவளுக்கு புரியாமல் இல்லை. இந்த திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாதென்று விக்கி தீர்மானமாக சொல்லியும் இவள் கிளம்ப தயாராக இருக்கிறாள். அதுவும் பத்து நாள். அப்போது விக்கி கோபப்படுவது நியாயம் தானே, அன்னை எப்படியோ நான்கைந்து நாட்கள் அங்கு தங்கி அந்த திருமணத்தில் கலந்து கொள்வார். அதற்கு மறுப்பு கூறி எப்படி போகாமல் இருப்பது என்று அவள் யோசித்திருக்க,

நளினி பத்து நாள் தங்கப் போவதாக கூறியதும், “ஹே ஜாலி,” என்று மொழியும் மதியும் மகிழ்ச்சியடைய, அவர்களுக்கு எதிர்மாறாக நயந்தினி அதிர்ச்சியானவள்,

“பத்து நாளா? பத்து நாள் அந்த கல்யாணத்தில் கலந்துக்கிட்டு என்ன செய்யப் போறோம்? ரெண்டு மூனு நாள் முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துக்கிட்டா போதாதா? அதுக்கே என்னால வர முடியுமான்னு தெரியல, இதில் பத்து நாளெல்லாம் என்னால வர முடியாது.” என்று அவள் அன்னையிடம் கூறவும்,

“ஏன் வர முடியாத அளவுக்கு உனக்கு இங்க என்ன வேலையாம்? படிப்பு முடிஞ்சாச்சு, ரிசல்ட் வந்தா தானே அடுத்து என்ன செய்யணும்னு பார்க்கணும், அதுவரை வீட்டில் சும்மா இருக்க தானே போற, இந்த கல்யாணத்துக்கு போனா என்ன? ராகவி, ரோஹன் எல்லாம் உனக்கு நல்லா தெரிஞ்சவங்க தானே, அப்புறம் என்ன?” என்று நளினி பதில் கேள்வி கேட்டார்.

“அதுக்காக அங்க பத்து நாள் போய் இருக்க வேண்டிய அவசியம் என்ன? சாகரி ஆன்டி, ராகவி அக்கா, ரோஹனை தவிர வேற யாரை நமக்கு தெரியும்? அதுவுமில்லாம அவங்க நம்மளை விட பெரிய இடம். அங்க நமக்கு என்ன மரியாதை கிடைக்கும்? அவங்க ஒரு ஃபார்மாலிட்டிக்கு கூப்பிடுவாங்க, அதை சாக்கா வச்சு நாமளும் போயிட்றதா? இதுக்கு ஏதாச்சும் ட்ரிப் ஏற்பாடு செய்து போகலாமில்ல,” என்று ஒருவழியாக மனதிற்குள் தயார் செய்து வைத்ததை ஒருவாறு அவள் பேசி முடிக்க,

“அப்படியா? அப்போ எந்த ஊருக்கு ட்ரிப் போகலாம்னு சொல்லு? நீ சொல்ற இடத்துக்கு பத்து நாள் என்ன அதுக்கு மேலேயும் கூட தங்கி எஞ்சாய் செய்துட்டு வரலாம்,” என்று நளினி கூறினார். 

அவரை பொறுத்தவரை மகளிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறார். அவள் குடும்பத்துடன் சேர்ந்து இருப்பாள் என்றால், அதற்கு அவர் ஏன் மறுப்பு சொல்லப் போகிறார்.

ஆனால் அன்னை அதற்கு இப்படி ஒரு பதில் கூறுவார் என்று எதிர்பார்க்காத நயந்தினியோ, “அது, அது, மதி, மொழிக்கு எங்க விருப்பமோ கூட்டிட்டுப் போங்க, என்னால எங்கேயும் வர முடியாது. ஃப்ரண்ட்ஸ்லாம் சேர்ந்து ட்ரிப் பிளான் செய்றாங்க, நான் அதுக்கு போலாம்னு இருக்கேன்.” என்று கூற,

“எங்களுக்கு இந்த கல்யாணத்தில் கலந்துக்கிட்டாளே ஜாலி தான், நார்த் இந்தியன் முறை சடங்கெல்லாம் இருக்காமே, அதனால இந்த கல்யாணத்தில் கலந்துக்கிட்டா செமயா இருக்கும், அடுத்த வருஷம் வேணும்னா வேற எங்கேயாச்சும் போகலாம்,” என்று இரட்டை சகோதரிகள் தீர்மானமாக கூறிவிட, நயந்தினி அவர்களை நன்றாக முறைத்தாள்.

“அவங்களை எதுக்கு முறைக்கிற, சின்ன பசங்களுக்கு இருக்க தெளிவு கூட உனக்கு இல்லை. ஆமாம் நிஜமாகவே ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போகப் போறீங்களா? எந்த இடம், யாரெல்லாம் போகப் போறீங்க? அவங்களிடம் நானே டீடெயில்ஸ் கேட்டுக்கிறேன்.” என்று நளினி கூற,

திருமணத்திற்கு போக மறுத்து ஏதோ ஒரு காரணம் சொன்னவளிடம் விவரம் கேட்டால் அவள் என்ன கூறுவாள்? அதிலும் தோழிகளிடம் இவர் ஏதாவது விவரம் கேட்டு அப்படி எந்த திட்டமும் இதுவரை போடவில்லை என்ற உண்மை இவருக்கு தெரிந்தால் என்ன ஆவது? என்று நினைத்தவள், “அது இப்போ தானே பிளானே போட்றாங்க, இனி தான் எங்க போறோம்? யார் யார் போறோம்னு எல்லாம் தெரிய வரும்,” என்று நயந்தினி பதில் கூறவும்,

“நீங்க பிளான் போட்றதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிடும், அப்படியே எங்கப் போறதுன்னு முடிவு செய்தாலும், கல்யாணம் முடிஞ்சதும் வரேன்னு சொல்லு,” என்று நளினி தீர்மானமாக கூறிவிட்டார்.

அதைக்கேட்டவளோ, “ஏன் ம்மா அந்த கல்யாணத்தில் போய் பத்து நாள் தங்கியே ஆகணுமா? அப்படி போகணும்னா நீங்க 3 பேர் மட்டும் போங்க, நான் வரல,” என்று அவள் திரும்ப அதையே கூறவும்,

“ஏன் வராம நீ மட்டும் தனியா இங்க இருக்கப் போறீயா?” என்று நளினி கேட்க,

“என் ஃப்ரண்ட்ஸ் யாரோடயாவது தங்கிக்கிறேன் ம்மா,” என்றாள் அவள்.

“அப்படி ஒன்னும் போய் நீ எங்கேயும் தங்க வேண்டாம், இங்க உனக்கு முக்கியமான வேலை இருந்தா பரவாயில்லை. இல்லாம நீ ஏன் தனியா இருக்கணும், இதுக்கு மேல இதைப்பத்தி நாம பேச வேண்டாம், எல்லோரும் இந்த கல்யாணத்துக்கு போகத்தான் போறோம்,” என்று நளினி உறுதியாக கூறவும்,

“எனக்கு அந்த கல்யாணத்துக்கு வரப் பிடிக்கல ம்மா,” என்று நயந்தினியும் பிடிவாதம் பிடித்தாள்.

“ஏன் எதனால,” என்று நளினி கேட்க,

அவளுக்கு அவன் முகமும் விக்கி முகமும் மாறி மாறி ஞாபகத்திற்கு வரவும், “வரப் பிடிக்கல அவ்வளவுதான், ஏன் கட்டாயப்படுத்தறீங்க,” என்று கோபமாக எழுந்து போய்விட்டாள்.

“அம்மா, அக்காக்கு பிடிக்கலன்னா போக வேண்டாம் ம்மா, கல்யாணத்துக்கு மட்டும் வேணும்னா நீங்க போயிட்டு வாங்க, நாங்க இங்கேயே இருக்கோம்,” என்று மதியும் மொழியும் கூற,

பத்து நாள் செல்ல முடிவெடுத்ததே நயந்தினிக்காக தானே, வரவில்லை என்று மகள் சொல்வதற்கு என்ன காரணம் என்பது அவருக்கும் தெரியும், அது நடக்கக் கூடாது என்று மனதில் உறுதியாக நினைத்தவர், “அவ அப்படித்தான் சொல்லுவா, அங்க போனா மாறிடுவா, அதைப்பத்தி யோசிக்காம பத்து நாளுக்கு தேவையான பொருட்களை எடுத்து வச்சிக்கோங்க,” என்று மற்ற இரு மகள்களிடமும் கூறவும், அவர்களும் அதற்கு சம்மதமாக தலையசைத்தனர்.

எவ்வளவு பேசியும் வழிக்கு வராத அன்னையிடம் கோபம் கொண்டு ஒருநாள் முழுதும் சாப்பிடாமல் இருந்து பார்த்தாள். ஆனால் பசி தாங்கி பழக்கமில்லாததால் அதற்கு மேல் அவளால் முடியாமல் அவளாக இறங்கி வந்து சாப்பிடும்படி ஆனது. 

உடல்நலம் சரியில்லை என்ற காரணத்தை கூறினால், “டாக்டரிடம் போய் காண்பித்து மெடிசன் சாப்பிட்டா சரியாகிடும்,” என்றார்.

மாதவிடாயை காரணம் சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போது தான் வந்து போனது. விக்கி சொன்னதுபோல் கையை அறுத்துக் கொண்டு அன்னையை பயமுறுத்த நினைத்தாள். ஆனால் தானாகவே அப்படி செய்து கொள்ள அவளுக்கு தைரியம் வரவில்லை. ‘இந்த தற்கொலை எல்லாம் எப்படி தான் தைரியமா செய்துக்கிறாங்களோ?’ என்றுதான் அந்தநேரம் நினைத்தாள்.

வேறு என்ன செய்து அந்த திருமணத்திற்கு போகாமல் இருப்பது என்று எத்தனை யோசித்தும் அவளுக்கு வழி தெரியவில்லை. நளினியும் மனமிறங்கி வராததால் வேறு வழியில்லாமல் அந்த திருமணத்திற்கு கிளம்ப தயாரானாள்.

“என்ன இன்னுமா நீ ரெடியாகுற?” நளினி கேட்கவும், அவரின் வரவை அங்கு எதிர்பார்க்காமல் திடுக்கிட்டு திரும்பியவள்,

“ம்ம் ரெடி தான்,” என்றால் வேண்டா வெறுப்பாக,

“அப்புறம் என்ன? கிளம்பி வா, டிரைவரை ரொம்ப நேரம் காத்திருக்க வைப்பீயா?” என்றவர்,

“எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டீயா? அப்புறம் அங்க போய் இது கொண்டு வரல, அது கொண்டு வரலன்னு சொல்லக் கூடாது. நான் உதவட்டுமான்னு கேட்டதுக்கும் வேண்டாம்னு சொல்லிட்ட, முன்ன இதெல்லாம் நான்தான் உனக்கு செய்வேன்.” என்ற நளினியின் பேச்சைக் கேட்டு,

‘இப்படி ஒரு ஐடியா எனக்கு தோனாம போச்சே, ஏதாவது சாக்கு சொல்லி திரும்பி வந்திருக்கலாம், அது தெரியாம யோசிச்சு யோசிச்சு எல்லாம் எடுத்து வச்சிட்டேனே,’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள்,

“எல்லாம் நானே எடுத்து வச்சிட்டேன். எனக்கொன்னும் உங்க உதவி தேவையில்லை, சரி வாங்க போகலாம்,” என்றாள் கோபமாக, இப்போதெல்லாம் எதற்கும் அன்னையிடம் கேட்டு நிற்பதில்லை. அவளே அனைத்தையும் தனியாக செய்து கொள்ள பழகிக் கொண்டாள். 

வேண்டா வெறுப்பாக காரில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் ஒருமுறை விக்கிக்கு அழைத்துப் பார்க்க, முழுமையாக மணி அடித்து நின்றது தான் மிச்சம்.

‘சரி வந்து சமாதானப்படுத்திக்கலாம்,’ என்று நினைத்தப்படியே கிளம்பியவளுக்கு இந்த பத்து நாளில் தன் வாழ்க்கையே மாறப் போகிறது என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

அகம் சேர்வான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!