Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இலக்கணம் பெண்மையே

இலக்கணம் பெண்மையே!… அத்தியாயம் 20

இலக்கணம் பெண்மையே!…

அத்தியாயம் 20

    பிரகாஷ் தன் சொந்த ஊருக்கு வந்து இருந்தான். பெரிதாக வரவேற்பு எதுவும் இருக்காது என்று தெரியும். ஆனால், உதாசீனம், அருவருப்பை நேராக பார்த்தான். அதுவும் தன் குடும்பத்திடமே…

 வீட்டின் உள் நுழையும் போது எதிற்பட்டது, முதல் தம்பியின் மனைவி தான். அவளை பார்த்து என்ன எதிர் கொடுக்க என்று இவன் தயங்கி நிற்க, அவள் முகத்திளோ ஒரு பிடிக்காத தன்மை, அருவருப்பு. அத்தோடு ஒரு பயம்.



Advertisement

   அவன் வந்தது அதிகாலை வேளை என்பதால் அப்போதுதான் கயல் கோலம் போட எழுந்தது. மாமியார் மட்டும் அந்த நேரம் எழுந்து கொள்ளுவார். வேற யாரும் கண் விழிக்க மாட்டார்கள் என்பதால் இரவு உடையோடு தான் வெளியே வந்தாள்.

   அப்போது தான் உள்ளே வந்த பிரகாஷை பார்த்தவள், ஒரு நொடி திகைத்தாலும், அடுத்த நொடி அவசரமாக அருகில் சேரில் கிடந்த துணிகளில் ஒரு துண்டை எடுத்து மேலே போட்டு கொண்டு ஒரு அசௌகரிய பார்வையியோடு வெளியே சென்று விட்டாள்.

  தம்பி மனைவியை பார்த்து தயக்கமான புன்னகையை வெளியிட வந்தவன், அவளின் எதிர் திருப்பலில் அதிர்ந்து நின்று விட்டான். “வாங்க பெரிய மாமா…” என்று முகம் முழுக்க புன்னகையோடு வரவேற்பவள். இன்று அவள் முகத்தில் தோன்றிய அருவருப்பு, பிடித்தமின்மை என்பதையும் தாண்டி ஒரு பயம் தென்பட்டது. தன்னை என்னவும் செய்து விடுவானோ என்று முகத்தில் ஒரு நொடி என்றாலும் தோன்றிய பயம் என்பது அவன் மீதான அவர்களின் எண்ணத்தை எடுத்து உரைக்க, மடிந்து போனான் பிரகாஷ்.

Advertisement

  அவ்வளவு தானா நான்… இத்தனை வருட பழக்கத்தில் என்னை தெரிய வில்லையா… நெஞ்சம் வலித்தது. சகுந்தலா மட்டுமே வரவேற்றார். மற்ற யாரும் பெரிதாக பட்டு கொள்ள வில்லை. தம்பிகள் இருவரும் நல் முறையில் பேசினார்கள் தான். ஆனாலும் ஏதோ ஒன்று குறைந்தது. “எங்கள் அண்ணன்… இந்த குடும்பத்தை தாங்கியவன்” என்ற பிரகாஷ் மேல் இருந்த ஒரு பெரிய பிம்பம் உடைந்து விட்டதே…

Advertisement

   இரண்டாவது தம்பி மனைவி லாவண்யா. “வாங்க மாமா…” என்று வரவேற்பு குடுத்தாலும் முன் மாதிரி இல்லை. ஒரு கடமைக்காக, பெயரளவில் மட்டுமே எல்லா பேச்சு வார்த்தையும் இருந்தது. பிரகாஷ் வந்ததில் இருந்து நாராயணன் அறையை விட்டு வெளியே வர வில்லை.

  இவர்கள் வீட்டில் விசாலாட்சி மட்டுமே கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவள். மற்ற மருமகள்கள் இருவரும் சேர்ந்து உட்கார்ந்து தான் அரட்டை அடிப்பார்கள். சாலா மட்டுமே கொழுந்தன் என்று ஒதுங்கி கொள்வாள். கயல், லாவண்யா இருவரும் சகஜமாக தான் அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, படிப்பு என்று அலசுவார்கள். அதுவும் பிரகாஷ் மேல் ஒரு பெரிய மரியாதையே இருக்கும். நாலும் அறிந்தவன், பொறுப்பானவன், கண்ணியமிக்கவன் என்று…

  ஆனால், இன்று எல்லாம் வேறாகி போனது. யாரும் ஒதுக்க வில்லை, ஒதுங்கியும் போக வில்லை. ஆனாலும் என்னவோ ஒரு வித்தியாசம் உணர்ந்தான். அவன் எண்ணத்தில் நின்றது எல்லாம் “நான் என் மனைவிக்கு மட்டுமே துரோகம் செய்தவன்…” என்ற எண்ணம் மட்டும் தான். மத்தபடி ஒரு மகனாக, அப்பாவாக, அண்ணனாக தன் பொறுப்பு, கடமைகளில் இருந்து விலக வில்லை தானே…

Advertisement

   தப்பு செய்தவன் மன்னிப்பும் கேட்டு, வழி தவறாமல் தன் குடும்பத்தின் பக்கம் நின்று விட்டான். வேற என்ன வேண்டும். வாழ்க்கையில் தவறாத மனிதர்கள் தான் யார் இருக்கிறார்கள்?… எல்லோரும் ஏதோ ஒரு கட்டத்தில் தவறு செய்து இருப்பார்கள், பின் திருந்தியும் வாழ்வார்கள் தானே… அப்படி ஒருவன் தான் நான் என்று பிரகாஷ் நிற்க.

  சமூகம் அவனுக்கு வேறு சொன்னது. யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒருவனின் நடத்தை மட்டுமே அவன் யார் என்பதை காட்டும். ரவுடி தனம் பண்றவனை கூட மனிதனாக ஒரு கட்டத்தில் சமூகம் ஏற்க்கும். ஆனால், ஒழுக்கம் கெட்டவனை ஒரு நாளும் மனிதனாக சமூகம் ஏற்காது. அவன் மேல் பதிந்த பார்வையும் மாறாது. அதை தான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தான் பிரகாஷ்.

   நாராயணன் கடைசி வரை மகனுடன் பேசவே இல்லை. தம்பி மனைவிகள் முழுதாக தள்ளியே நின்றார்கள். வாய் வார்த்தையாக எதுவும் சொல்லாவிடுனும் நடத்தையே காட்டி கொடுத்தது. சகுந்தலா மட்டுமே சாப்பாடு பரிமாறினார். பிரகாஷ் உண்ட பின் தான் மற்ற மக்கள் தன் குடும்பத்தோடு வந்து உணவு உண்டார்கள்.

   சகுந்தலா முகத்தை தூக்கி கொண்டு, “பெரியவனுக்கு எதுவும் ஒட்டிகிற வியாதி வந்து இருக்கா?… அவன் கூட உட்கார்ந்து சாப்பிட கூட மாட்டீங்களா?…”

   “என்னம்மா?…” என்று சங்கடமாக மற்ற மகன்கள் இழுக்க.

   “பெரிய மாமா கிட்ட கேட்டு தான் இடம் வாங்கணும், நல்ல வேலைக்கு பெரிய மாமா கிட்ட தான் சொல்லி வைக்கணும்ன்னு எல்லாத்துக்கும் அவனை தான் கொடை பிடிப்பீங்க. இன்னைக்கு எம் மகன் உங்களுக்கு ஆகாதவனா…” என்று கோபமாக ஆரம்பித்தவர்,

  “ஏய் லாவண்யா… சென்னையில பெரிய காலேஜ்ல உன் தங்கச்சிக்கு இடம் கிடைக்க எம் மகன் தான் ஏற்பாடு செஞ்சான். இதோ இந்த கயல் அண்ணன் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து கொடுத்ததும் எம் மகன் தான். உங்க அப்பாக்கு பென்சன் காசு வராமா கிடக்கும் போது நம்ம தம்பி குடும்பம்ன்னு ஓடி வந்ததும் அவன் தான்… குடும்பத்துல பொது செலவு எது வந்தாலும் அவன் தலையில தான கட்றீங்க. உங்களுக்கு எந்த குறையும் இல்லாம தான் செஞ்சான். நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், ஒரு மார்கமாதான் இருக்கீங்க…” என்று வேகமாக ஆரம்பித்தவர், தன் இரு மகன்களையும் பார்த்து,

   “கொஞ்சமாவது நன்றி வேணும் மக்கா… அவனை வச்சு நீங்க வாழ்ந்துட்டு, இன்னைக்கு உங்களுக்கு சமமா அவன் இல்லைன்னு ஒதுக்குறீங்களோ…” கொஞ்சம் கண்ணீர் கூட வந்தது சகுந்தலாக்கு. எப்படி இருந்த மகன், எவ்வளவு செய்தான். இந்த குடும்பத்தின் ஒற்றுமை, சந்தோசம், அமைதி எல்லாம் எங்கே போனது…

  “அத்தை, எங்களுக்கு பெரிய மாமா செஞ்சதுல கொஞ்சமும் உடன் பாடு இல்லை. அவரை எந்த விதத்துல ஆதரிக்க சொல்றீங்க. எங்களுக்கு செஞ்ச நல்லதுக்காக அவர் செஞ்ச தப்புக்கு துணை போக முடியுமா?…” எதிர்த்து கயலும் கேட்க.

   லாவண்யாவும் விட வில்லை, “உங்க மகன் உங்களுக்கு உசத்தியா இருக்கலாம். பெத்தவ கண்ணு தப்பா பார்க்காது போல… ஆனா, எங்களுக்கு கொஞ்சம் பயமா இருக்கு… எனக்கும் இளையவ தான் ஷாலினி. அவளவே தப்பா பார்த்தவர். எங்களையெல்லாம் எந்த மாதிரி பார்த்து இருப்பார். சகஜமா அவர் முன்னாடி உட்கார்ந்து பேச முடியலை. பிரகாஷ் மாமா சாதாரணமா பார்த்தாலும், பார்வை எங்க போகுதுன்னு ஒரு உறுத்தல் இருக்கு…” என்று லாவண்யாவும் சொல்ல,

   இவற்றை எல்லாம் மேல படியில் நின்று கேட்டு கொண்டிருந்த பிரகாஷ் அதிர்ந்து போனான். தன்னை பற்றிய தன் வீட்டு பெண்களின் கணிப்பு அவனை நிலை குழைய செய்தது. அமைதியாக அமர்ந்திருக்கும் தம்பிகளையும் பார்த்தான். அவர்களும் ஆமோதிக்கிறார்களோ!…

    அரவிந்த் எழுந்தவன், “அம்மா… அண்ணன் செஞ்சதை உணர்ந்ததால தான் அப்பா சொத்தை பிரிச்சு எழுதும் போது அவருக்கு துணை நின்னோம். எங்களுக்கு வெறும் நிலத்தடி மட்டும் தான். இந்த பூர்வீக வீட்டு அஜய் பேருக்கு மாத்தி எழுதும் போது நாங்க சரின்னு தான சொன்னோம்…”

  “அண்ணன் மேல பாசம் இருக்க போய் தான் ஊர் முன்னாடி விட்டு குடுக்காம நின்னோம். ஆனா… அண்ணி பாவம் இல்லையாமா… அவங்க எங்களுக்கு எவ்வளவு செஞ்சு இருக்காங்க. நான் எம்பிஏ பண்ணாதே அண்ணன் வீட்டுல தான். என் கூட பிறந்தவன் எனக்கு செய்யலாம். ஆனா, அண்ணி ஏன் செய்யணும்? அவங்க பக்கம் நாங்க நிக்க வேணாம்…” விவேக் கேட்க.

   சகுந்தலாக்கு பேச முடியவில்லை. சாலாவை அவரும் தப்பு சொல்ல வில்லையே. மகன் செய்தது தப்பு தான். பெரிய பிழை தான். யார் இல்லை என்றது. ஆனாலும், மனம் மாறி திருந்தி வந்தவனை ஏற்கலாம் அல்லவா…

   மாடியின் கை பிடியை பிடித்து தன்னை நிலைப்படித்தினான் பிரகாஷ். சகோதரிகள் போல தான் அவர்களையும் பார்த்தான். தம்பிகளுக்கு கல்யாணமாகி அவர்களுக்கு என்று குடும்பம் வந்த போதும், இவன் சொல் தான் முன் நிற்கும்.

   தனிப்பட்ட இவர்கள் குடும்ப பிரச்சனை கூட பிரகாஷ் தலையிட்டு முடித்து வைப்பான். கயல், லாவண்யா இருவரும் எந்த தயக்கமும் இல்லாமல், “மாமா உங்க தம்பி இப்படி பேசி சண்டை போடுறார். குடி பழக்கம் அதிகமா இருக்கு… நேத்து அடிக்க கை கூட ஓங்கினார்…” என்று அவர்கள் தாய், தந்தைக்கு முன்பே இவனிடம் தான் கொண்டு வருவார்கள்.

   இதுவரை பிரகாஷ், தம்பி குடும்ப பிரச்சனைகளில் தலையிட்டு சரி செய்தும் இருக்கிறான். அதே போல தான் தம்பிகளும், “நீ யார் என் குடும்ப விசயத்தில் தலையிட…” என்று ஒரு வார்த்தை அண்ணனை எதிர்த்து வராது. அதட்டி, அரட்டி பேசினாலும் அண்ணனுக்கு மரியாதை கொடுத்து கை கட்டி தான் நிற்பார்கள்.

  அதற்கு மேல் அவன் தந்தை. பெரிய மகன் மேல் எப்போதும் ஒரு பெருமை தான். முகத்திற்கு நேராக பாராட்ட மாட்டார். ஆனால் அவர் பார்வை உணர்த்தி விடும். வீட்டில் எந்த ஒரு விசேசமும் இவனின் தோது பார்த்து, இவனிடம் கேட்டு தான் முடிவு செய்வார்கள். தந்தைக்கு முன்பே இந்த வீட்டை இவனுக்கு கொடுக்க தான் ஆசை. இவனுக்கு பின் இவன் மகனுக்கு தான். அது தாத்தா, தந்தை, மக என்று தானே வர வேண்டும். இவனிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் பேரனுக்கு கொடுப்பது என்றால், இவன் மேல் நம்பிக்கை இல்லை. இதையும் வித்து ஊர் மேய்ந்து விடுவான் என்று எண்ணம்.

    வாழ்வின் நெறி, வாழும் முறை என்று முன்னோர்கள் ஏன் வகுத்தார்கள். சமூக மரியாதை, அந்தஸ்து என்பதை எல்லாம் தாண்டி அவன் இழந்தது அவன் குடும்பத்தை. அந்த குடும்பம் யார் என்று அவனுக்கு புரிந்தது. அது அவன் மனைவியும், பிள்ளைகளும் தான்.

   தப்பே செய்து இருந்தாலும் அவன் குடும்பம் அவனோடு இருந்தால் நிலை வேறு தான். அவன் இழந்த கௌரவம், மதிப்பு எல்லாம் சாலாவை கொண்டு தான். அவள் மட்டும் ஒற்றை மன்னிப்பை வழங்கி அவனோடு இருந்திருந்தால் அவன் மரியாதையே வேறு தான். ஆனால் விசாலாட்சி தான் அந்த ஒற்றை மன்னிப்பை அவன் யாசித்தும் வழங்க வில்லையே.

   பிரகாஷ் தாயை போல நியாயம் கேட்க வில்லை. சத்தமின்றி அறைக்கு சென்றவன் ஊருக்கு செல்ல தயாரானான். தன் உடைமைகளை எடுத்து கொண்டு வெளியேற, அங்கிருந்த சுவரில் மாட்டி இருந்தது அவன் குடும்ப புகைப்படம். செங்கல் நிற பட்டு சேலையில் தோல் உரசி சாலா நிற்க, பிரகாஷ் ஒரு கையில் மகளை தூக்கி பிடித்தபடி, மனைவியின் தோலை சுற்றி சேர்த்து அனைத்து பிடித்து இருந்தான். சாலாவின் முன் பக்கம் அஜய் நிற்க, அவன் கழுத்தை சுற்றி கை போட்டு இருந்தாள் சாலா. இந்த புகைப்படம் எடுத்து எப்படியும் நான்கு வருடம் இருக்கும். ஷாலினி அவன் வாழ்வில் வருவதற்கு முன் எடுத்தது.

   சாலா கணவன் புறம் லேசாக தலை சாய்த்து சாய்ந்து இருந்தாள். நால்வர் முகத்திலும் அப்படி ஒரு புன்னகை. அதுவும் அவன் செல்ல மகள் வாயில் அத்தனை பற்களும் தெரிய கள்ளம் இல்லா சிரிப்பு கண்டு பிரகாஷ் கண்கள் கலங்கியது. அஜய் கொஞ்சம் சிறு வயதாக தெரிந்தான். இப்போது இருக்கும் அரும்பு மீசை, உடல் வளர்த்தி எல்லாம் இல்லாமல் சிறுவனாக தாயின் கைகளில் அடங்கி நின்றான். இப்போது அவன் தாய்க்கு மேல் அல்லவா நிற்கிறான். இவர்கள் போட்டோ ஷீட் மாதிரி எல்லாம் எடுக்க மாட்டார்கள். வருடத்திற்கு ஒரு குடும்ப புகைப்படம் மட்டும் தான்.

   பிரகாஷ் மெல்ல ஒவ்வொரு முகமாக தொட்டு பார்த்தான். கைகள் கொஞ்சம் நடுங்க விசாலாட்சியின் சிரித்த முகத்தில் நிலை பெற, கண்கள் கண்ணீரை பொழிந்தது. உண்மையில் வலித்தது. நெஞ்செல்லாம் அழுத்தி பிடித்து வலித்தது. இனி ஒருகாலும் இப்படி ஒரு போட்டோ எடுக்க முடியாது.

  “என் குடும்பம்” இந்த சொல் தான் எத்தனை சுகமானது. இது கனமாக இருக்கிறது என்று ஒதுக்கி வைத்தேனே. நான் படுபாவி… “சாலா” பிரகாஷ் நெஞ்சு கதறியது. சற்று முன் தன் தம்பிகள் சொன்னது அனைத்தும் நிஜம் தான்.

   அவர்களின் முதல் இரவிலேயே பிரகாஷ் சொல்லி விட்டான். என் குடும்பத்தில் நான் தலை மகன். எனக்கு உரிய பொறுப்பும், கடமையும் என் மனைவியாகிய உனக்கும் இருக்கிறது என்று. அன்று சொன்னது தான். அதன் பின் ஒரு நாளும் திரும்ப சொல்லும் படி சாலா நடந்து கொண்டதே இல்லை.

   தங்கை திருமணம் என்று சாலாவின் நகைகளை அடகு வைத்தான், அதன் பின் தம்பிகள் படிப்பு, வீட்டை எடுத்து கட்ட, கார் வாங்க, பிள்ளைகள் படிப்பு, சென்னையில் வீடு என்று எல்லா வகையான அவசர தேவைக்கும் சாலாவின் நகைகள் தான் உள்ளே விழுந்தது. மற்ற மருமகள்கள் நகையை யாரும் வாங்கியதில்லை. வீட்டின் தலைமகன் என்று அவன் பங்கு பொறுப்பு, கடமை என்று எல்லாவற்றையும் விசாலாட்சி தலையில் தான் இறக்கி வைத்தான்.

    பதினேழு வருடம் ஒற்றை முக சுளிப்பும் இல்லாமல் வீட்டின் மூத்த மருமகளாக அவனுக்கு பெருமை தேடி தந்தவள். அவளுக்குறிய எல்லாவற்றையும் இழந்து அவனை கௌரவமாக தலைநிமிர்ந்து நிற்க வைத்தவள். கணவனை முன் நிறுத்தி, அவனுக்கு பின் நின்று மரியாதையை தேடி தந்தவள்.

  அப்படிப்பட்ட மனைவிக்கு அவன் என்ன செய்தான். நடுத்தெருவில் அல்லவா நிறுத்தி விட்டான். அதுவும் துணை நிற்க வேண்டிய முக்கிய கட்டத்தில் நட்டாத்தில் நிற்க வைத்து விட்டானே…

  பலம் கொண்டு தலையை சுவற்றில் மோதி கொண்டான். எப்படி போய் இவ்வளவு பெரிய தப்பு செய்தேன். எது என்னை முன் தள்ளியது. நொடி நேர சபலமா இல்லையே, அதன் பின் இரண்டு ஆண்டுகள் அவள் கூட தான் கூத்தடித்தான். பணம், காசு அதிகமில்லாவிடினும் சந்தோசமும், மகிழ்ச்சியும் நிறைந்தது என் குடும்பம். தன் கையை வைத்து தன் கண்ணையே யாராவது குத்தி கொள்வார்களா?… இவன் குத்தி கொண்டான்.

  ஆனால் ஒன்று, இப்போதும் அவன் பார்வை எல்லாம் தன் குடும்பத்தின் மீது தான். அவன் நினைவு துளி கூட ஷாலினி மீது செல்ல வில்லை. அவள் என்ன செய்கிறாள் என்று யோசிக்கவும் இல்லை. அவனை பொறுத்த வரை, ஷாலினி எல்லாம் தெரிந்து தான் தலை கொடுத்தாள். வேற ஒருத்தியின் கணவன் என்று தெரிந்து தான் காதல் சொன்னாள். இந்த உறவு நிலைக்காது என்று அறிந்து தான் உறவாடினாள். இதில் அவளுக்கு என்ன நியாயம்? இது தான் ஷாலினி பற்றி பிரகாஷ் எண்ணம்.

   ஜெய பிரகாஷ் என்ற பெயருக்கே ஒரு மரியாதை இருக்கும். கோயில், விசேஷம், கல்யாணம், காது குத்து என்று எந்த இடத்திலும் அவனுக்கு என்று ஒரு வரவேற்பு இருக்கும்.

   ஏதேனும் ஒரு ஊர் பிரச்சனை, குடும்ப பிரச்சனை வந்தால். ஊரின் முக்கிய தலைக்கட்டில் இவன் பெயரும் அடிபடும். பிரகாஷ் கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க என்று தான் பலர் சொல்வர். அவன் என்ன போலீசா? இல்லை லாயரா?

  ஜெயபிரகாஷ் என்பவன் தனி மனிதன் தான். ஆனால் தனி மனித ஒழுக்கமுள்ளவன், நல்லவன், பண்பானவன், நேர் சிந்தனை கொண்டவன், உண்மையானவன் என்று தான்… இவை அத்தனைக்கும் உரியவனாக இருந்த பிரகாஷ். ஒழுக்கம் என்ற ஒன்றில் தவறி, இவை அத்தனைக்கும் உரியவன் அல்லாமல் போனான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!