காலை நேரம் ஐந்து முப்பது மணி.. அவன் வைத்த அலாரம் சரியாக அந்த நேரத்துக்கு சத்தமிட்டு அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது..
எழுந்து அலாரத்தை நிறுத்தினான்.. இன்று திங்கட்கிழமை.. அதனால் அவனது கடமை அவனை அழைத்தது.. அதை அவனும் கண்களை கசக்கி நினைவுபடுத்திக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டான்..
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் நேரம் போவதை உணர்ந்து எழுந்து குளித்துவிட்டு தயாராகி பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி பூ வைத்து ஒரு நிமிடம் இறைவனை நன்கு வணங்கிவிட்டு திருநீறு பூசிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்..
அவனின் மனைவி தேவநாயகி எழுந்து தேநீர் தயாரித்து அவனுக்கு கொடுத்தாள்..
அதை வாங்கி குடித்துவிட்டு வெளியே வந்து போர்ட்டிக்கோவில் இருந்த ஆள் உயர கண்ணாடியில் அவனை ஒருமுறை நன்கு பார்த்து விட்டு நேரத்தைப் பார்த்தான்.. அப்பொழுது நேரம் 6 15 அவனது கை கடிகாரத்தில் காட்டியது..
மூன்று பாடசாலை பெண்களை தனது ஊரில் இருந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அக்கரைப்பற்றில் இருக்கும் பாடசாலையில் விட்டு விட்டு மீண்டும் பாடசாலை முடிவடைந்ததும் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வரவேண்டும்.. இதுவே வாரநாட்களில் ஆரம்பிக்கும் அவனது முதல் வேலையாகும்..
அதே விநாயகபுரம் எனும் ஊரில் பிறந்து முப்பது வருடங்களாக அதே ஊரில் அந்த பெண்களின் பெற்றோர்கள் பார்க்க எந்தவ்வொரு தகாத பழக்கங்களும் இல்லாமல் நல்லொழுக்கத்துடன் வளர்ந்தவன் என்பதால்.. அவனை நம்பி அவர்கள் வீட்டுப் பெண்களை அனுப்புகிறார்கள்..
ஒவ்வொரு வீடும் சற்று தொலைவில் உள்ளது.. பொறுமையாக ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று மூன்று பெண்களையும் ஏற்றிக்கொண்டு அவனது வரலட்சுமி அவனது கைகளுக்கு உரிய கட்டுப்பாடுகளை அறிந்து சீரான வேகத்தில் 20 நிமிட பயணம் ஆகிய அக்கரைப்பற்றுக்கு சென்று கொண்டிருக்கின்றது..
ஆட்டோ ஓட்டுவது அவன் நிரந்தர தொழில் இல்லை.. அவனது சொந்த தேவைக்காக எடுத்த ஆட்டோவை அந்த பெண்களின் பெற்றோர் நம்பிக்கைக்காக கேட்டதால் அதை மட்டும் இல்லை என்று சொல்லாமல் அவர்களை ஏற்றிக் கொண்டு செல்வான்.
ஆற்றுக்கு அருகில் சுற்றிலும் வயல்களும் அதற்கு மேல் பயிர் செய்யும் நிலங்களும் அதற்கு நடுவில்
இரண்டு அறை சிறிய ஹால் சிறிய அளவிலான சமையல் அறையைக் கொண்ட அந்த வீட்டின் முன்பு சொந்தங்கள் நிறைந்திருந்தனர்..
அந்த வீட்டில் மூத்தவன் முத்துகிருஷ்ணன்.. இரண்டாவது ரவி. மூன்றாவது மாணிக்கம். பெண் பிள்ளை வேண்டும் என்ற ஆசையில் 5 பிள்ளைகள் பெற்றார்கள்.. ஐவரும் ஆண் பிள்ளைகள்.. அதில் இருவர் இறந்து விட்டார்கள்.. அவர்களின் தாய் சிவகாமி.. தந்தை ராமச்சந்திரன்..
தற்பொழுது இரண்டாவது மகன் ரவி 28 வயது முடிவடையும் நிலையில் உள்ளதால் பெண்பார்க்க ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எங்கெல்லாமோ பெண் தேடி அமையாமல் அவர்களுக்கு முன் தெருவில் உள்ள இரண்டு வீடு தள்ளி உள்ள வீட்டில் தான் பெண் எடுக்கிறார்கள்..
வனிதாவின் வீட்டின் பின் வாசலில் நின்று பார்த்தால் இவர்கள் வீடு நன்றாக தெரியும்..
வீட்டு ஆட்கள் உட்பட சொந்தங்கள் அனைவரும் பெண் வீட்டாரின் வருகைக்கும் அவர்களைத் தொடர்ந்து வெளியே சென்ற முத்துக்கிருஷ்ணன் வருகைக்காகவும் காத்திருந்தார்கள்..
முத்து இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கச்சான் என்னும் பயிர் செய்திருந்தான்..
அதற்கு தேவையான உரங்கள் மற்றும் மருந்துகள் அனைத்தையும் அக்கரைப்பற்றில் வாங்கிக் கொண்டு வருவதற்காக தாமதம் ஆகிவிட்டது..
இதோ அவனும் வந்து விட்டான்..
அதே நேரத்தில் பெண் வீட்டார்களும் வந்து விட்டார்கள்..
வனிதா வீட்டில் வனிதாவும் அவள் அண்ணனும்.. அவர்கள் தாய் அமுதா தந்தை கமல்..
வனிதாவின் அண்ணன் சந்துரு இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து சென்று விட்டான்..
அவனும் அதே ஊரில் பக்கத்து தெருவில் தான் ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டான் அது அவன் தாய் அமுதாவிற்கு பிடிக்காமல் அவனை ஒதுக்கி வைத்துள்ளார்கள்.
அமுதாவின் உடன்பிறப்புகள் 5 பெண்கள்.. அவர்களும் அவர்களது பிள்ளைகள் என்று அவர்களது குடும்பம் பெரிய குடும்பம் அவர்கள் அனைவருமே சிவகாமி வீட்டுக்கு ரவியை பார்ப்பதற்காக வந்துள்ளார்கள்..
சிவகாமியின் தரப்பிலும் அவர் அவர்களது உறவினரை அழைத்து இருந்தார்..
அந்த நேரம் ரவி அங்கே இல்லை..
திருமண பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது ரவியை சிவகாமி அவர் தங்கை வீட்டிற்கு பக்கத்து ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார்..
இரு தரப்பு சொந்தங்கள் இரண்டு குடும்பங்கள் என்பதால் அங்கு ஆட்கள் அதிகமாக இருந்தார்கள்..
அப்போது அமுதா பேச்சை ஆரம்பித்தார்.
“ சிவகாமி நான் பேசுறதை யாரும் தப்பா எடுத்துக்ககூடாது.. எல்லாத்தையுமே உடைத்து பேசிடனும்.. இது எங்க பொண்ணோட வாழ்க்கை..
இப்பவே பொதுவில் எல்லாத்தையும் பேசி முடிவு செய்தால் நாளைக்கு யாருக்கும் எந்த பிரச்சினை யும் இல்லை..
ரவியை நான் பிறந்ததிலிருந்து பார்க்கிறேன்.. எழுத படிக்க தெரியாது. சரியான வயசுல சரியா பள்ளிக்கு போனதில்ல.. படிப்பு பெரிய விஷயம் இல்ல..
ஆனா ஒழுக்கம் ரொம்ப பெரிய விஷயம் தானே..
வெளிநாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நிறைய தடவை ரவி குடிச்சிட்டு அங்கேயும் இங்கேயும் சண்டை போட்டதை நானே பார்த்திருக்கேன்..
இப்ப கொஞ்ச காலம் காசு கொஞ்சம் அதிகம் இருப்பதால காட்ஸ் கூட்டம் விளையாடுவதையும் நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கேன்..
இது எல்லாம் கல்யாணத்துக்கு முதல் எப்படியோ.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் விட்டுடனும்.. கல்யாணம் முடிஞ்சதும் குடும்பம் பிள்ளைகள் என்று வந்தால் இது சரி படாது..
ரவிகிட்ட தெளிவா சொல்லிடு நாளைக்கு இது தொடர்ந்தா வேற பிரச்சனைகள் வரும்..
ரவிக்கு சூது விட முடியலன்னா இந்த பேச்சு வார்த்தையை இதோட விட்டுடுவோம்..” என்றார் அமுதா..
மாணிக்கம் இது அனைத்தையும் ரவிக்கு வீடியோ காலில் காட்டிக் கொண்டிருந்தான்..
அங்கே ரவி மிகவும் கோபத்தோடு இருந்தான்..
அவனை சிவகாமியின் தங்கை திட்டி அமைதிப்படுத்தினார்..
அவன் இங்கே இருந்தால் அதிகம் ஏதாவது பேசி இந்த சம்பந்தத்தை கெடுப்பான் என்பதால் தான் சிவகாமி அங்கே அனுப்பி வைத்தார்..
“ இல்ல அமுதா இனி அப்படி இருக்க மாட்டான்.. நேரத்தோட ரவி கிட்ட இதெல்லாம் பேசிட்டோம்.. இனி எல்லாம் குறைச்சிடுவேன் அப்படின்னு சத்தியம் பண்ணினான்.. அதனால தான் கல்யாணம் பார்க்கவே ஆரம்பிச்சோம்.. எங்கள நம்பி நீ பொண்ணு கொடுக்கும்போது நாங்க இத கூட செய்யலைன்னா எப்படி?.. அவங்க ரொம்ப சந்தோசமா வாழ்வாங்க நீ எந்த கவலையும் பட தேவையில்லை..” என்றார் சிவகாமி..
அவரைத் தொடர்ந்து அமுதாவின் மூத்த அக்கா பேசினார்..
“ அப்புறம் என்ன அமுதா?. சிவகாமியே வாக்கு கொடுத்துருக்கா.. சிவகாமியை நாம இன்னைக்கு நேத்தா பாக்குறோம்.. நம்மளோட வளர்ந்த பிள்ளை.. அதுவும் இல்லாம நம்ம வனிதா நம்ம கூட தான் இருக்க போகுது.. இந்த ஊர் வழக்கப்படி மாப்பிள்ளை தானே பொண்ணு வீட்டுக்கு வரணும்.. நம்ம பொண்ணு நம்ம கண்ணு முன்னாடி இருக்க போகுது அப்புறம் என்ன நமக்கு பயம்.. மேல பேச வேண்டியதை பேசுவோம்..” என்றார்..
சிவகாமியின் சித்தி “ பொண்ணுக்கு உங்களால் என்ன செய்ய முடியும்..” என்றார்..
“ நாங்க இப்ப இருக்கிற வீடு வனிதாவுக்கு தான்.. உங்களுக்கு நல்லா தெரியும் முன் மதில் கட்டின காணி, வீடு இதே மாதிரி மூன்று அறை ஹால், சமையலறை, போட்டிக்கோ. இருக்கு.. வீட்டுக்குள்ள எல்லாமே பக்காவா ரெடி பண்ணிட்டோம்.. மேல அண்டசிட் போட்டாச்சு, கீழ மார்பில் பதிச்சாச்சு.. கரண்ட் தண்ணி டாய்லெட் எல்லா வசதியும் இருக்கு.. சமையலுக்கு உரிய புது பாத்திரங்கள் எல்லாம் இருக்கு.. அப்புறம் பொண்ணுக்கு மூனரை பவுன் தாலி செயின் போடுவோம்.. காதில் தோடு கையில இரண்டு மோதிரம் இவ்வளவுதான் நகைன்னு எங்களால் செய்ய முடியும்.. அதுக்கு சம்மதம் என்றால் தொடர்ந்து பேசுவோம்..” என்றார் அமுதா..
“ அது எல்லாம் சரி.. கல்யாணம் முடிச்சதும் ஆறு மாசம் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் உங்க பணத்தில் தான் சாப்பாடு கொடுக்கணும்.. தெரியும்தானே.. அப்புறம் தல பிரசவம் பொண்ணு வீட்டு செலவு தான்.. ” என்றார் சிவகாமியின் சித்தி..
“ என்ன அத்தை நாங்களும் இதே ஊர்தானே.. எல்லா நடைமுறையும் எங்களுக்கும் தெரியும் புது ஆளுங்களுக்கு சொல்ற மாதிரி சொல்றீங்க?.. மாப்பிள்ளைக்கு எங்க சைட்ல எந்த குறையும் வைக்க மாட்டோம்.. அப்புறம் மாப்பிள்ளைக்கு மாத்து மோதிரம் அரை பவுன் போடுவோம்.. ” என்று கறாராக அவங்க தரப்பில் பேச்சுவார்த்தை முடிந்தது..
மாப்பிள்ளை தரப்பில் பேச்சு வார்த்தை நடைபெறும்..
“ ரவி கிட்டத்தட்ட 05 லட்சம் பணம் வச்சிருக்கான்.. ஆத்து பக்கம் உள்ள ஒரு ஏக்கர் விவசாய நிலம் அவனுக்கு நாங்க கொடுக்கிறோம்.. அப்புறம் ரவி சொல்லிட்டான் ஐந்தரை பவுன் தாலிச் செயின் தான் போடணும் அப்படின்னு.. நீங்க மூனரை பவுன் போடுங்க.. எங்க தரப்புல நாங்க ரெண்டு பவுன் போட்டு தாலிச் செயின் பண்ணுவோம்..
அப்புறம் பொண்ணுக்கு நாங்களும் மாத்து மோதிரம் அரை பவுன் போடுவோம்..” என்றார் சிவகாமி..
வரும்போது பெண் வீட்டில் வாங்கி வந்த கேக் மற்றும் பல வகைகள் அதை வைத்து
தேவா அனைவருக்கும் டீ, பிஸ்கட், கேக் என கொண்டு வந்து கொடுக்க அதையும் சாப்பிட்டுவிட்டு
அவர்களது முக்கியமான பேச்சு வார்த்தைகள் முடித்து கல்யாணத்துக்குரிய நாளையும் குறித்துக்கொண்டு பெண் வீட்டார் அங்கு இருந்து சென்று விட்டார்கள்..
அவர்கள் தள்ளிச் சென்றதை உறுதிப்படுத்தி விட்டு “ மொத கல்யாணம் முடிஞ்சதும் ரவிகிட்ட அந்த அமுதாவை வீட்டை விட்டு அனுப்பசொல்லணும்.. நாங்க போய் கேட்டதும் பொண்ணு கொடுக்க மாட்டாலாமே.. இப்ப காசு பணத்தை பற்றி சொன்னதும் வழிய நாங்க பொண்ணு தரோம்னு வந்துட்டாளுக! நாலு இத்து போன ஆப்பிளையும், காஞ்சிபோன கேக்கையும் எடுத்துக்கிட்டு.. யார் தான் இப்ப குடிக்காம ஒழுங்கா இருக்கா?.. அவ புருஷன் குடிக்கலையா?.. இல்ல அவ பிள்ளை குடிக்கலையா?.. ” என்று திட்டி அவர் மன வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார்..
“ சிவகாமி அதெல்லாம் சரி.. இந்த காணியை மூன்று பேருக்கும் பிரித்தது சரியா?.. சரி சமமா பிரிக்கவே இல்லையே..” என்றார் அன்னம்..
“ உங்களுக்கு தெரியாததா சித்தி?.. முத்து யாருக்கும் சொல்லாம ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே காதலிச்சு தேவா வீட்டுக்கு போய் கல்யாணம் முடிச்சுட்டு வந்துட்டான்..
ரவிதானே அஞ்சி வருஷமா வெளியிலிருந்து என் கடன் எல்லாம் அடச்சான்.. ரவி கடன் அடைக்கலன்னா இந்த காணி இந்நேரம் மூழ்கி போய் இருக்கும்..
அவன் பணம் தந்து தானே இந்த காணியை மீட்டெடுத்தோம்.. அப்ப அவனுக்கு தானே அதிகம் கொடுக்கணும்..
என் தாலிக்கொடி அடகு இருந்தது அதையும் அவன் தான் எடுத்து தந்தான்..
இப்ப அவனே மீண்டும் அடகு வச்சு பணம் அதிகம் எடுத்திருக்கிறான்..
அப்புறம் மாணிக்கத்துக்கு இந்த வீட்டோட இருக்கிற வயலும் காணியும்..
முத்து உழைச்சு தராமல் இல்ல.. 13 வயசுல இருந்து உழைச்சு தந்து இருக்கான் கல்யாணம் முடிக்க வரைக்கும்.. அப்புறம் கல்யாணம் முடித்ததும் ஒரு லட்சம் பணம் தேவா தந்தது.. அவங்களுக்கு அந்த சின்ன காணிதான் கொடுக்கலாம்..
ரவி கல்யாணம் முடிச்சதும் அதில் அவங்களை வீடு கட்டி தனியே போக சொல்லிட்டேன்..
மூணு மாசத்துக்கு அப்புறம் முத்து செஞ்சிருக்க கச்சான் புடுங்கி வித்தால் அதுல வரும் லாபம் போதும் அவங்களுக்கு சின்ன வீடு கட்டுறதுக்கு..
அவங்களுக்கு என்ன புள்ளையா?..குட்டியா?.. தானும் தடியும்..” என்றார் சிவகாமி..
“ இப்ப பிள்ளை இல்லன்னாலும் பிறகு பெறவே மாட்டாங்களா?. என்ன ” என்றார் அன்னம்..
அதற்கு ராமச்சந்திரன் “ சும்மா பேசணும்னு பேசாதீங்க மாமி.. அவங்க எல்லாம் எங்க புள்ள பெற போறாங்க.. நீங்க வேணும்னா பாருங்க..ரவிக்கு பிள்ளை பிறந்து பள்ளிக்குப் போகும்.. ஆனால் அதுவரை அவங்களுக்கு பிள்ளை கிடைக்காது.. ” என்று தேவாவின் காது படவே மனம் நோக்க பேசினார்..
முத்து அந்த இடத்தில் இல்லை.. அதனால் அந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.. அவன் இருந்தால் யாரும் அப்படி பேச மாட்டார்கள்..
“ ஒரே அடியா அவங்களுக்கு புள்ள கிடைக்காதுன்னு சொல்ல முடியாது.. மருமகன்.. அதனால பார்த்து ஏதோ பண்ணுங்க.. நீங்க முத்துவுக்கு சின்ன அளவு காணி கொடுத்து இருப்பதை பற்றி ஊர்ல தப்பா பேசுவாங்கன்னு கேட்டேன்..
ஒரு வயல் துண்டாவது சேர்த்து கொடுத்து இருக்கலாம்.. அவனும் தொடர்ந்து கச்சான், வெள்ளாமை செய்து பார்த்து இருப்பான்..
இப்ப அந்த சின்ன இடத்துல வீடு கட்டினால் சுத்தி இருப்பதை வைச்சு என்ன பண்ண முடியும்?.. மரக்கறி தோட்டம் மட்டுமே வைக்க முடியும்.. அதை மட்டும் ஒரு வருமானமாக எடுக்க முடியாதே.. ஏதோ நீங்க பெத்தவங்க உங்களுக்கு தெரியாதது இல்ல.. நல்லதை மட்டும் பார்த்து புள்ளைகளுக்கு செங்க.. ” என்று கூறி அவர்களும் அங்கிருந்து சென்று விட்டார்கள்..
உள்ளே சமையல் அறையில் வேலையாக இருந்த தேவாவின் காதிலும் இந்த பேச்சு விழுந்தது..
அவள் ஊரில் இருந்து இங்கே வந்து ஒன்னரை வருடத்தில் இதைக் கேட்டு காது புளித்து விட்டது.. ஆனாலும் கேட்கும் போது எல்லாம் அவள் கண்ணில் கண்ணீர் வருவது நிற்கவில்லை..
வழமை போன்று இரவில் முத்து அறைக்கு வந்தவுடன் தேவா இன்று நடந்த பேச்சு வார்த்தையை பற்றி கூறினாள்..
எந்த பதிலும் இல்லை.. செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அவன் வேலையை அவன் பார்த்தான்..
அதாவது அவளை இரவில் நாடுவது..
கணவனின் விருப்பதிற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அவன் குணம் எப்படி இருக்கும் என்று தேவாவிற்கு இங்கு வந்த இந்த குறுகிய காலத்தில் நன்றாக தெரியும்..
தேவாவின் ஊரில் இருக்கும்பொழுது முத்து இப்படி இல்லை.. இங்கு வந்த பின் அவன் குண நலன்களில் நிறைய மாற்றங்கள்..
பொதுவாக இல்லை.. தேவாவின் விஷயத்தில் மட்டும்..
அவள் மன வேதனைகளை அவளுடன் புதைத்து விட்டு கணவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாள் தேவநாயகி..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.