Skip to content
Post Views: 6,037
உன் காதல் ஒரு வரமாய்….4
தனது படுக்கையில் உருண்டு கொண்டிருந்த அமிர்தாவைக் கண்டு பல்லைக் கடித்த பாரதி,
“இந்தாடீ….ஒண்ணு தூங்கு இல்லை என்னை தூங்க விடு….இப்படி உருண்டுக்கிட்டே இருந்தா நான் எப்படி தூங்க….”
“ஹி ஹி….சாரிக்கா…நீங்க தூங்குங்க…..”என்றுவிட்டு ஒழுங்காக படுக்க,பாரதி நிம்மதியாக கண்களை மூட அடுத்த இரண்டு நிமிடம் கழித்து,
Advertisement
“க்கா…..க்கா….”என்று பாரதியின் தோளை சுரண்டினாள் அமிர்தா,
“அடியே கொஞ்ச நாளா நீ சரியில்ல சொல்லிப்புட்டேன் பார்த்துக்க….என்னை தூங்க விடாம இப்படி தான் உயிரை எடுக்குற….என்ன தான் உன் பிரச்சனை…..”என்று பாரதி எழுந்து அமர்ந்து கேட்க,
“க்கா….எனக்கு ஒரு சந்தேகம் அதை உங்க கிட்ட கேட்டு தெளிவு படுத்திக்கலாம்னா இப்படி எரிஞ்சி விழறீங்க….”என்று அமிர்தா முகத்தை தூக்க,
Advertisement
“யெம்மா ராசாத்தி….மூஞ்சிய தூக்காத…என்ன சந்தேகம் சொல்லு….”
Advertisement
“அது….அது வந்துக்கா…”
“இந்த வந்துக்கா போனக்காவெல்லாம் விட்டுபுட்டு விஷயத்தை சொல்லுடீ…..தூக்கம் வருது தூங்கிட போறேன்….”
“தூங்கிடாத சொல்லுறேன்….க்கா இந்த குருக்கள் மாமி இருக்காங்கல்ல….அவங்க அன்னைக்கு அந்த சிவா பத்தி சொன்னாங்கனு சொன்னேன்ல்ல…..”
Advertisement
“என்ன சொன்னாங்க….”
“என்னக்கா மறந்துட்டியா…..அந்த சிவாக்கும் யாரும் இல்ல அந்த பையன் டிகிரி முடிச்சிட்டு இப்ப ஏதோ கவர்மென்ட் வேலைக்கு படிச்சிக்கிட்டு இருக்குனு சொன்னாங்க சொன்னேனே….நியாபகம் இல்ல….”என்று அமிர்தா கேட்க,
“அதான் இப்ப சொல்லிட்டியே மேல சொல்லு…..”
“அந்த மாமி அவங்க தான் சொன்னாங்க நீயும் படிச்சிருக்க தான நீயும் ஏன் இந்த மாதிரி வேலைக்கு முயற்சிக்க கூடாதுனு கேட்டாங்க….”
“சரி அதுக்கு இப்ப என்ன….”
“ச்சு…..எனக்கா நீங்க நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லுறேன்….இப்படி தூங்கி வழுஞ்சி கேட்குறீங்க….”என்று அமிர்தா குறைபட,
“அட எவடீ இவ….நான் படிச்சதே ஐஞ்சாம் வகுப்பு தான் அதுவும் பெயிலு…..இதுல நீ என்னனமோ சொல்லுற எனக்கு என்னடீ தெரியும்….சரி அத விடு அந்த அம்மா சொன்னாங்க சரி உனக்கு அதுல என்ன யோசனை அதை சொல்லு…..”
“அது நானும் அந்த கவர்மென்ட் பரிட்சைக்கு படிக்கலாமானு கேட்கட்டுமா…..”
“யாருக்கிட்ட?????”
“வேற யாரு அந்த கடுவான் கிட்ட தான்…..”
“சொல்லிட்டாலும்……”
“என்னக்கா இப்படி அபசகுனமா சொல்லிப்புட்ட….”
“அட நீதானடீ சொன்ன அந்தாளு சரியான கடுவான்னு…..அப்புறம் எப்படி கேட்ப….”
“கடுவான் தான்…..”என்று இழுத்த அமிர்தாவை புதுவிதமாக பார்த்தாள் பாரதி.அன்று சிவாவிடம் நன்றி தெரிவித்துவிட்டு வந்ததிலிருந்து,
“க்கா அவருக்கு என்னை நினைவே இல்லைக்கா…..”என்று கூறிக் கொண்டே திரிந்தாள் பின் தனது வேலை பளுவில் அதை மறந்திருந்தாலும் அவ்வபோது அது வெளிபடத்தான் செய்யும்.
“க்கா….க்கா….”என்று அமிர்தாவின் சத்ததில் நிகழ்வுக்கு வந்த பாரதி,
“ஆங் சொல்லுடி…..”
“க்கா நீ என்ன சொல்லு நான் கேட்க தான் போறேன்….ஒரு தடவை கேட்டு பார்த்துட்டு திட்டுனா வேணா விட்டுறேன்….சரியா….”என்று குழந்தை போல கேட்க,
“சரிடி….உன் இஷ்டம்….”என்று பாரதி கூறிய பிறகு தான் அமிர்தாவிற்கு மனதின் அழுத்தமே குறைந்தது.இரண்டு வாரங்களாக இதே நினைவு தான் குருக்களின் மனைவி தெரிந்து சொன்னாரோ இல்லை தெரியாமல் சொன்னாரோ ஒருமுறை அவனிடம் கேட்டு விட வேண்டும் என்று முடிவு எடுத்த பிறகு தான் அமிர்தாவிற்கு உறக்கமே வந்தது.
சிவாவை பார்த்துவிட வேண்டும் என்று அமிர்தா எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.அவன் கோவிலுக்கும் வருவதில்லை என்று குருக்கள் கூற,
“எங்கக்கா போயிருப்பாரு…..நான் எப்ப அவர பார்த்து என் சந்தேகத்தை கேட்டு…..அச்சோ…..”என்று அவள் புலம்ப பாரதி தான் ஒருவழியாவாள்.
இவ்வாறே ஒரு மாதம் கடந்துவிட்டது சிவாவை தேடுகிறேன் என்று தேடி ஓய்ந்து தான் போனாள் அமிர்தா.அவளின் ஓய்ந்த முகத்தை பார்த்து பாரதிக்கு தான் வருத்தமாக இருந்தது.
“ஏய் புள்ள ஏன் இப்படி ஓஞ்சி போய் இருக்க….நீ அந்த பையனை….”
“க்கா….நீங்க வேற நான் இருக்குற இருப்புக்கு இந்த காதல் ஒண்ணு தான் குறைச்சல்….”என்று அமிர்தா எரிச்சலாகவே கூற,
“பின்ன என்னடி நீ ஏதோ கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்திருக்க….”என்று கேட்க,
“இல்லக்கா….எங்க அம்மாக்கு நான் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும்னு தான் ஆசை…..ஆனா என் சூழ்நிலை மேல படிக்க முடியாம போச்சு…..இப்ப இந்த மாமி சொன்னத பார்த்தா பன்னிரெண்டாவது முடிச்சிருந்தாலே கவர்மென்ட் எக்ஸாம் எழுதலாம்னு சொல்லுறாங்க…..நான் எழுத வாய்ப்பு இருந்தா என் வாழ்க்கையே மாறி போகும் இல்ல….அதான்….”என்று அமிர்தா கலங்கியவரே விளக்கம் கொடுக்க,
“சரி சரி அழதா புள்ள……எனக்கு இதெல்லாம் தெரியாது….கடவுள் உனக்கு கண்டிப்பா நல்லது செய்யுவாரு….அதனால எதையும் குழப்பிக்காம இரு….நல்லது நடக்கும்னு மனசுல நினை அப்ப தான் நடக்கும்…..”என்று பாரதி கூற,அமிர்தா தலையை மட்டும் ஆட்டினாள்.
அவள் தேடிக் கொண்டிருந்தவனோ தனது அறையில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான்.
“டேய் என்னடா இவன் இப்படி தூங்குறான்….எப்போதும் வேலை வேலைனு ஓடிடுவான் இந்த நேரத்துல தூங்குறான்….”என்று அந்த அறையில் தங்கியிருந்த ஒருவன் கேட்க,
“அவன் இன்னைக்கு தான்டா ஊர்லேந்தே வந்திருக்கான்….அதான் தூங்குறான்….”என்று மற்றொருவன் கூற,
“எங்க போயிட்டு வரான்….இவனுக்கு தான் யாரும் இல்லையே….”
“ம்ம்…இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே எந்திருச்சுடுவான் அவன் கிட்டேயே கேளேன்….”என்று கூற,
“அடேய் ஏன்டா என்னை கோத்துவிடுற…..இவன் கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா….”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,
“பேசி முடிச்சாச்சுனா வெளில போறீங்கலா….எனக்கு தூங்கனும்….”என்று புரண்டு படுத்தபடியே சிவா கூற மற்ற இருவரும் எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டனர்.
சிவா இந்த ஆண்கள் விடுதியின் காப்பளருக்கு மிகவும் நெருக்கம் அதோடு அவன் தான் விடுதியை பல நேரங்களில் மேற்பார்வை பார்ப்பது.யாரிடமும் அனாவசியமாக பேசமாட்டான் அதே சமயம் அவனை சீண்டுபவர்களை விட்டு வைக்கவும் மாட்டான் அதனால் மற்றவர்கள் அவனிடம் சற்று அடக்கி தான் வாசிப்பர்.
அடுத்த நாள் காலை ஒரு முக்கிய வேலையாக கிளம்பிக் கொண்டிருந்தான் சிவா.அப்போது விடுதி காப்பளர் குமரன் அழைப்பதாக கூறவும் அவரிடம் சென்றான்.
“வாப்பா சிவா…..நல்லாயிருக்கியா…..”என்று அன்பாக அவர் விசாரிக்க,
“ம்ம்….நல்லா இருக்கேன் சார்….என்னை கூப்பிட்டுவிட்டீங்கலாம்…..”என்று கூற,
“ஆமாம் ப்பா…..இங்க சில பாத்ரூம் கதவு,அப்புறம் சில ரூம்களோட கதவு எல்லாம் சரியில்லைனு கம்பளைன்ட் வந்திருக்கு….அதை சரி செய்ய ஆள் வர சொல்லனும்….அதான் உனக்கு எப்ப வசதிபடும் கேட்க தான் கூப்பிட்டேன்….நீ இருந்தா எனக்கு கொஞ்சம் சௌகரியாம இருக்கும்…..”என்று அவர் கூற,
“சரி…..நாளைக்கு மறுநாள் வர சொல்லுங்க….இப்ப ஒரு இரண்டு நாளுக்கு எனக்கு வேலை இருக்கு….அப்படியே நம்ம மேஸ்திரிக்கும் சொல்லி வைங்க சார்…..கொஞ்சம் பூச்சு வேலையும் இருக்கு…. சரி நான் கிளம்புறேன்….வேலையிருக்கு……”என்று கூறிவிட்டு ஒரு தலையசைப்புடன் அவன் கிளம்பி விட,
“யாரு குமரா இது….நீ இவ்வளவு பவ்யமா பேசுற…..அவ்வளவு பெரிய ஆளா இவன்…..”என்று எதிரில் அமர்ந்திருந்த அவரின் நண்பன் கேட்க,
“டேய்….எனக்கு புள்ள போலடா…..நம்ம மேஜர் ராஜவேலு இருக்காருல அவரோட புள்ள….”
“என்ன அவர் புள்ளையா…..அவருக்கு ஒரு பொண்ணு தான கேள்வி பட்டிருக்கேன்…..”
“சிவா அவரோட வளர்ப்பு மகன்….”
“ஓஓ….அதான் மிடுக்கா இருக்கானா…..”
“ம்ம்….அவரோட வளர்ப்புல அப்ப அப்படி தான் இருப்பான்….”
“என்னடா ரொம்ப பெருமை பட்டுக்குற…..அவ்வளவு பிடிக்குமோ….”என்று சந்தேகமாக கேட்க,
“டேய் நல்ல பையன்டா…..ஒரு வேலை கொடுத்தா கச்சிதமா முடிச்சி கொடுத்துடுவான்….அதனால தான் அவனை கூட வச்சிருக்கது….”என்று குமரன் கூற,
“நான் கூட உன் பொண்ணை கொடுக்க நினைக்கிறியோ நினைச்சேன்…..”
“இது வரைக்கும் அப்படி ஒரு யோசனை இல்ல….இப்ப நீ சொன்னதுக்கு அப்புறம் தப்பில்லைனு தோணுது….”
“என்னடா இப்படி பொசுக்குனு சரினு சொல்லிட்ட….என்ன தான் மேஜர் பையனா இருந்தாலும்…..அவன் குலம்,கோத்திரம் என்ன தெரியாம பொண்ணை கொடுக்காதடா…நல்லதுக்கு இல்லை…..”
“அதை நான் பார்த்துக்குறேன் நீ கிளம்பு….”என்று குமரன் கூற,
“அட ஏன்டா கோபப்படுற….உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்….”
“நீ சொன்னதுக்கு ரொம்ப நன்றி கிளம்பு….எனக்கு வேலை இருக்கு….”என்று கத்தரித்தார் போல பேச,
“உன் கிட்ட போய் சொன்னேன் பாரு….”என்று தலையில் அடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.ஆனால் அவர் கூறிய வார்த்தைகள் குமரனின் மனதில் ஒரு யோசனையை உருவாக்கியிருந்தது.குமரனுக்கு ஓரே மகள் தான் இப்போது கணினி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.அவளுக்கு திருமணம் முடிந்து சென்றுவிட்டாள் இந்த ஹாஸ்டலை எப்படி பார்த்துக் கொள்ளவது என்று ஒரு ஐயம் இருந்தது ஆனால் இன்று நண்பன் கூறிய யோசனை கேட்ட பிறகு ஏன் சிவாவை தன் மருமகன் ஆக்கி தன்னுடனே வைத்துக் கொள்ள கூடாது என்கிற எண்ணம்.ஆனால் இதற்கு சிவா சம்மதிப்பான என்கிற ஐயமும் இருந்தது.
“அவசரப்படாத குமரா சமயம் வரும் போது பொறுமையா பேசி தான் காரியத்தை சாதிக்கனும்….இவன் நம்ம கூட இருந்தா நமக்கு லாபம் தான்…..”என்று குறுக்கு தனமாக சிந்தித்தது அவரின் வியாபார மூளை.
அமிர்தா இப்போதெல்லாம் தனது வேலையில் இருமடங்கு கவனமாக இருந்தாள் இப்போது புதிதாக சேர்ந்திருக்கும் சூப்பர்வைசர் சற்று கண்டிப்பானவர் அதனால் அவரிடம் எந்த கெட்ட பெயரும் வாங்க கூடாது என்பதில் அத்தனை கவனமாக தான் இருப்பவள் இன்று ஒரு சிறு தவறு செய்து மாட்டிக் கொண்டாள்.
“சாரி மேடம்…..என் தப்பு தான்…நான் தான் அந்த பார் கோடை மாத்தி கொடுத்துட்டேன்…..”என்று தலை குனிந்து கொண்டே கூற,
“நீ செஞ்சது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா….நல்லவேளை இது இன்னும் விற்பனைக்கு போகல போயிருந்தா உன்னால எத்தனை பேருக்கு கெட்ட பேரு….இந்த வேலையில இருந்தா கவனமா இருக்கனும் தெரியாது….”என்று மாலதி கத்த,அமிர்தாவிற்கு கண்களில் நீர் நிறைந்துவிட்டது.அவள் செய்தது பெரிய தவறு தான் புதிதாக வந்திருந்த இரு புடவைகளின் பார் கோர்டை மாற்றி ஒட்ட கொடுத்துவிட்டாள்.அவர்களும் அனைத்தையும் புடவைகளுடன் பின் செய்து அந்த இடத்தில் வைக்க போகும் நேரத்தில் மாலதி ஒன்று இரண்டு புடவைகளை பார்வையிட்டவர் தவறை கண்டுபிடித்து வேலை செய்தவர்களை கண்டிக்க அவர்கள் அனைவரும் அமிர்தாவை காட்டிவிட்டு ஒதுங்கிவிட்டனர்.உண்மையில் அவளின் மீது தான் தவறு அதனாலே அவளை தனியாக அழைத்துவிட்டார்.
“சாரி மேடம்….”என்று குரல் கரகரப்பாக தான் ஒலித்தது அமிர்தாவிற்கு.
“நீ சொல்லுற சாரி இங்க எதையும் மாத்திடாது அமிர்தா….இனி கவனமா இரு….அவ்வளவு தான் சொல்லுவேன்….ஏற்கனவே பழைய சூப்பர்வைசர் உன்னைவிட படிச்ச ஆளா இந்த இடத்துக்கு போட சொல்லி சொல்லிட்டு போயிருப்பாரு போல முதலாளி என்கிட்ட கேட்டாரு நான் தான் நான் பார்த்துக்குறேன்….சரியா வரலைனா மாத்திக்கலாம்னு சொல்லியிருக்கேன்….”என்று மாலதி கூற அமிர்தாவிற்கு நெஞ்சம் நின்று தான் துடித்தது இந்த வேலை ஒன்று தானே அவளின் உயிர் இதுவும் சென்றுவிட்டாள் அவளின் நிலை நினைத்து பார்க்க முடியவில்லை.எவ்வளவு அடக்கியும் அவளின் அழுகை கேவலாக வெளி வந்துவிட,
“எதுக்கு அழற….முதல்ல எல்லா சூழ்நிலையும் கடக்க பழகு…..தவறு செய்யறது மனித இயல்பு….அதை நான் தப்புனு சொல்லமாட்டேன் அதுக்காக அதையே தொடரக்கூடாதில்ல அதுக்கு தான் சொல்லுறேன்….உன் நிலை என்னனு எனக்கு தெரியும்….இந்த வேலை உனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியும் அந்த காரணத்தால தான் உனக்கு சப்போர்ட் பண்ணினேன்….இது தான் கடைசி தடவையா இருக்கனும்…..போ போய் வேலையை பாரு….”என்று சற்று கடுமையாகவே கூறிவிட்டார் மாலதி.
அமிர்தாவிற்கு தான் மனது அத்தனை கலங்கிவிட்டது.இது இந்த வேலை ஒன்று தான் அவளின் வாழ்வே இருக்கிறது வெளியில் இடத்திற்கு இதுவரை வேலை தேடி சென்றதில்லை தாய் இறந்த பிறகு திக்கற்ற நிலையில் இருந்த அவளுக்கு வாழ நம்பிக்கை கொடுத்தது இந்த வேலை தான் இப்போது அதுவும் நிலைக்காது என்று கூறுகையில் பயம் நெஞ்சை கவ்வியது.
“புள்ள நீ வெசனப்படாத….இனி இந்த தப்பு நடக்காம பார்த்துக்க….”என்று வேணி அமிர்தாவிடம் கூற அதை காது கொடுத்து கேட்டாலும் மனது என்னவோ மாலதியின் வார்த்தையிலேயே இருந்தது.அவர் கூறுவது போல் தன்னை விட படித்த வேறு ஒருவர் இந்த வேலைக்கு வந்தால் கண்டிப்பாக தனது வேலை போகும் அதற்கு முன் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்னை காத்து கொள்ள வழி தேட வேண்டும் என்ன செய்வது என்று அமிர்தாவின் மூளை யோசிக்க தொடங்கியது.
error: Content is protected !!