Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 6(a)

மைவிழி – 6(a)

தட்டுத் தடுமாறி கீர்த்தி வாசன் தன் பெயரைச் சொன்னதும், ‘ஹா’ வென விளித்த வேதவிக்கு உண்மையில் அழைத்திருந்தது யார் எனத் தெரியவில்லை.



Advertisement

“ஹலோ லைன்ல இருக்கீங்களா?”

“ஹா இருக்கேங்க! யார் கீர்த்தி வாசன்?”என்று கேட்டாளே பார்க்கலாம்.

Advertisement

Advertisement

இப்போது திகைப்பது வாசனின் முறையாயிற்று.

“நிஜமாவே தெரியலையா?”என இவன் கேட்க,

Advertisement

“இல்லைங்க. சத்தியமா தெரியல!இந்த நேரத்துல கால் பண்ணி யார்னு கேட்டா.. ப்ச்” என்றாள் வேதவி.

குரலில் சிறு கடுப்பு, எரிச்சல் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அழைத்து கடுப்பேற்றுகிறானே என நினைத்திருக்க வேண்டும். அவள் நினைப்பும் வாஸ்த்தவம் தான்! வேதவிக்கும் சேர்த்தே வாசனின் எண்ணங்கள் சுழல, அழைப்பை எப்போதோ துண்டித்திருந்தாள் வேதவி.

“கீக்..”என்ற ஒலியில் தான் அவள் அழைப்பை துண்டித்திருந்தது விளங்கியது இவனுக்கு.

கைபேசியாலே நெற்றியில் தட்டிக் கொண்டான் வாசன்.

“சொதப்புரடா வாசா!”முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டவனுக்கு தூக்கமெல்லாம் தூரப் போயிருந்தது.

வேதவியின் எண் கிடைத்ததிலிருந்து அவளுக்கு அழைப்பதை பற்றிய யோசனை தான் இவனுக்கு. தன்னை பற்றிய அவள் பிடித்தத்தையும், எண்ணத்தையும் அறிய வேண்டி மனம் நிம்மதியின்றி தவித்து கொண்டிருக்க, தூங்க வந்தவனுக்கு தூக்கமும் டாட்டா காட்டி ஓடி விட படுக்கையில் உருண்டு கொண்டிருந்தவன் தான் நேரம் காலம் பார்க்காமல் அவளுக்கு அழைத்திருந்தான்.

ஆனால் வாசனே சற்றும் எதிர்பாரதது, வேதவிக்கு இவன் பெயர் தெரிந்திருக்கவில்லை என்பது தான். அதை நினைக்கையில் சிறு கோபம் வாசனிடம்.

‘அது என்ன தன் பெயரை அறியாமல் இருப்பது?அதிலும் பதினைந்து நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு!’ என பொருமினான்.

அவனுக்கெங்கே தெரியப் போகிறது..வேதவி, அவன் பெயரை காதிலே போட்டுக் கொள்ளவில்லை என்று.

பெயரே தெரியாமல் இருக்கும் பட்சத்தில் மற்ற விடயங்களை அறிந்திருப்பாளா? அவளிடம் சொல்லி விட்டதாக கிஷோரும் (வேதவியின் பெரியம்மா பையன்) சொன்னானே?அதை சொல்லித் தான் சம்மதம் வாங்கியதாக கூறியவன், வாசனின் எண்ணையும் அவளுக்கு கொடுத்து விட்டதாகவும் சொல்லிருந்தான்.

ஆனால் அவளின் பதில்களோ இவனை குழப்பியிருக்க, இந்த யோசனைகளிலே அன்றிரவு தூங்கா இரவாகி போனது கீர்த்தி வாசனுக்கு.

ஒருவனின் தூக்கத்தை பறித்ததையே அறியாதவளாய்.. காலையில் சோம்பலாகவே எழுந்து கொண்டாள் வேதவி. ஞாயிறு என்பதால் இன்று இவளுக்கு எந்த வகுப்புக்களும் இருக்கவில்லை.

சாவகாசமாக எழுந்தவள் மீண்டுமாய் கண்கள் சொக்கவும் அப்படியே படுக்கையில் விழ, அவளைத் தேடி அறைக்கே வந்து விட்டார் சரஸ்வதி.

“இன்னும் என்னடி தூக்கம் வேதா? அடுத்த வீட்டுக்கு கல்யாணமாகி போகப் போறவ கொஞ்சம் நல்ல பழக்கத்தை பழகறது தானே? இப்படியே லேட்டா எந்திருச்சியேன்னா அங்க போயும் இதே பழக்கம் தான் வரும். உங்க மாமியார் எங்க வளர்ப்பை தானே குறை சொல்வாங்க.” என மகள் அறையை சுத்தம் செய்தபடி புலம்பத் தொடங்க,

“ஐயோ, ம்மா!எழுந்திருச்சிட்டேன். நீ காலைலயே ஆரம்பிக்காதே” என சிடுசிடுத்த படி எழுந்தவள், குளிக்க வெளியே சென்றாள்.

அந்த வீட்டின் கீழ் தளத்தில் பொது ஓய்வறை தான் இருந்தது.

மேல் தள படுக்கை அறைகளில் அதனுடன் ஒட்டிய குளியலறை இருக்க மாடி அறைகள் இப்போது பெரிதாக புழக்கத்தில் இல்லை. கனியன் மட்டும் தான் மேலுள்ள அறையில் இருப்பது. இப்போது அவனும் சென்னை வாசியாகிவிட்டதால் வந்து செல்லும் நேரங்களில் மாத்திரம் அங்கே தங்கிக் கொள்வான்.

எனவே,மேல் தளத்திலும் ஆட்கள் நடமாட்டம் வேண்டுமென்பதற்காக டீவியை மாடி ஹாலில் மாட்டி வைத்திருந்தார் நாதன். அவர் யோசனைப்படி நடந்தாலும் மேலறைகள் பராமரிக்கப்படாமல் இருக்க, திருமணத்திற்கு பின் மகள் வீடு வரும் சமயங்களில் அங்கு தங்கிக் கொள்ளட்டும் என, அதற்கும் தனி திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

வேதவி முகம் மட்டும் கழுவிக் கொண்டு வர, குளியலறை வாசலிலே கையில் சிறு கிண்ணத்தை ஏந்தியவாறு நின்று கொண்டிருந்தார் சரஸ்வதி.

அது என்னவாக இருக்குமென தெரிந்ததில் ‘ஐயோ’ வென்றாகிப் போனது பெண்ணுக்கு.

அவள் முக பாவனையைக் கண்டவர்,

“கல்யாணம் முடியுமட்டுமாவது இதெல்லாம் பூசிக்கோடி வேதா”என்றார் கெஞ்சலாய்.

கிண்ணத்திலிருந்து சமத்தாய் எட்டி பார்க்கும் ரோஜா பன்னீருடன் கலந்த முல்தாணி மெட்டியின் நெடி, வேதவியின் நாசித் துவாரங்களில் இருந்து புசு புசுவென புகையை வெளி வரச் செய்வதாய். (😤)

“இதை தேச்சா மட்டும் அப்படியே கலராயிடுவேனா?” என்றாள், எரிச்சல் ஏறி விட்ட குரலில்.

“இவளோட!”என சன்னமாக முனகியவர்,

“பேஸ் பேக்கெல்லாம் முன்னாடி நீயே ஆர்வம் எடுத்து போட்டவ தானடி. இப்ப அடிக்கடி போடறது இல்லைன்னு செஞ்சு தந்தா சண்டைக்கே நிக்கற! நீ போடறன்னா போடு இல்லைன்னா இரு”என கோபத்துடன் சமையலறை புகுந்து கொண்டார்.

ஆம், முதலெல்லாம் இதை ஆர்வமாகச் செய்தவள் தான் வேதவி. தன் முக நிறம் மாறும் என எண்ணிச் செய்வதில்லை. அவளுக்கான திருப்திக்காக செய்வாள். தன்னைக் கவனித்துக் கொள்வதில் அத்தனை பிடித்தம் அவளுக்கு. செல்ஃப் லவ் என்று வைத்துக் கொள்ளலாம்.

அதன் பின் படிப்பு, வகுப்புக்கள் என நேரம் போதாமையால் இதையெல்லாம் கை விட்டிருந்தாள் வேதா.

இப்போது அவளுக்கு என்ன கடுப்பென்றால், தன் திருமணத்திற்காகத் தான் தாய் இத்தனையும் செய்கிறாரே என்றது தான்.

இவளுக்கு எப்போது வரன் பார்க்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து தொடங்கியது தான் இது. முதலில் இதை அறியாத வேதவி பின் கண்டு பிடித்து விட, மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டாள், வேதவி எனும் வேதாளம்.

ஏதாவது அழகியல் பொருட்களை வைத்து செய்து கொடுத்தால், பின் சரஸ்வதியுடன் சண்டை தான்.

பாவம் அவரும் என்ன தான் செய்வார்.? பங்கஜம் போல் எத்தனை பேரை பேசியே சமாளிக்க? அதிலும் பங்கஜம் யாரோ வெளியாள். ஆனால் சொந்தங்கள் சில பேரே மகளின் நிறத்தை வைத்து குறை காண்கையில் சரஸ்வதி இப்படி எதையாவது செய்து வைத்து விடுவதும், மகளோடு மல்லுக்கு நிப்பதும் இப்பொழுதெல்லாம் வாடிக்கையாகிப் போனது.

“இந்த வேதவி அப்படியே உங்க பாட்டி தான்டா கனியா.எம் மாமியார் இல்லாத குறைக்கு இவ இருக்கா.! காலைல எழுந்திருச்சதிலருந்து ராத்திரி தூங்கும் வரையும் ஏதாவது ஒரு சண்டை. நானும் என்னடா செய்ய? எது சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேன்றா” என சென்னையிலிருக்கும் மகனை போனில் அழைத்து அலு(று)த்துக் கொண்டிருந்தார் சரஸ்வதி.

“சரிமா விடு!நான் வீட்டுக்கு வந்து அவ கூட பேசிக்கிறேன்” என இவருக்கு சார்பாக பேசியவன் “இன்னைக்கு நைட்டு புறப்படுறேன் மா” என்று விட்டு கட் செய்ய, ‘மகன் பேசிக் கொள்வான்’ எனும் நிம்மதியில் வாயிற் பக்கம் திரும்பியவர், அங்கு நின்றிருந்தவளை பார்த்து வாயில் கை வைத்துக் கொண்டார்.

முகத்தில் முல்தாணி அப்பியிருக்க காளியாக நின்றிருந்தாள் வேதவி.

கடனே என பூசிக் கொண்டிருந்தவளுக்கு நேற்றிரவு பெயரறியா(!) ஒருவனிடமிருந்து அழைப்பு வந்தது நினைவில் எழ, அதை தாயிடம் சொல்லவே அவரை தேடி வந்திருக்க, நல்ல வேளையாய் அவர் பேசியது பெரிதாக இவள் காதில் விழவில்லை.

“என்ன வேதா?”என அப்பாவியாக கேட்டார், சரஸ்வதி.

“நீங்க யார் கூட பேசிட்டிருந்தீங்க?”என இவள் வினவ,

“நம்ம கனியன் தான். நாளைக்கு வரானாம்”என்றார் சமாளிப்பாக.

“ஓஹோ”எனக் கேட்டுக் கொண்டவள்,

“ம்மா நேத்து நைட்டு எனக்கு போன் வந்தது!” அசுவாரஷ்யத்துடன் கூற,

“யாருடி?”

“யாரோ கீர்த்தி வாசனாம்”

“என்னடி சொல்ற?!!!”

“ஆமா, கீர்த்தி வாசன். அப்படி தான் சொன்னாங்க!உனக்கு தெரியுமா என்ன?”

“எதே தெரிஞ்சவரா? அடியே அவர் உனக்கு பார்த்த மாப்ள டி!”என நெஞ்சில் கை வைத்துக் கொண்டார், சரஸ்வதி. இலேசாக நெஞ்சு வலி வரும் போல் இருந்தது அவருக்கு.

“!!!!!!!!!” வேதவிக்கும் அதிர்ச்சியில் வாய் பூட்டிக் கொண்டது.

“மாப்ள பேர் கூட தெரிஞ்சு வெச்சுக்கலையாடி நீ,வேதா?”

“…….”

“சொந்தக்காரங்க பத்தி தான் அக்கறை இல்லாம அலட்சியமா இருக்கேன்னு நினைச்சா, சொந்தமாகப்போறவர் பேரையும் தெரிஞ்சு வைக்காம இருக்கியேடி..?” ரைமிங்காம்!

“…….”

“அந்த தம்பி எதுக்கு கால் பண்ணிச்சோ? என்ன நெனைச்சாரோ?”என தன்னைப் போல் சொல்லிக் கொண்டவர்,

“வேதா நீயென்ன பேசுன? எதுவும் பட்டுன்னு பேசிடலையே?”என பதட்டமானார்.

“…..”

“அடியே வேதா!”என உலுக்கவும்,

திக் பிரம்மையிலிருந்து வெளி வந்தவள் திரு திருவென முழிக்க, தலையில் அடித்துக் கொண்டார் சரஸ்வதி.

“எத்தனை தடவை டி உனக்கு சொல்றது. எதையும் அலட்சியமா கேக்காதன்னு! இப்படி எல்லா விஷயத்துலயும் விட்டேத்தியா இருக்காதே வேதா! நீ ஒன்னும் சின்ன பொண்ணில்ல” என்றவர், இவள் முறைக்கவும்,

“ஆமா, இந்த மொறைப்புக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல. அன்னைக்கு வசந்த், மாப்ள பத்தி அவ்ளோ சொன்னானே. அதெல்லாம் காதுலயே வாங்கிக்கலையா நீ?”என்றார் தானும் முறைப்பாக.

“அதெல்லாம் கேட்டேன் ம்மா!”என ரோஷம் கொண்டவள், “ஆனா பேரு தான் டக்குன்னு நியாபகத்துல வர”என முனகினாள்.

என்னவென்று சொல்வதாம்! அவன் படத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்ததில் எதுவும் மண்டைக்குள் ஏறவில்லை என.

“ரோஷம் மட்டும் வந்துடுமே உனக்கு!என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. போய் மாப்ள தம்பிக்கு போன் பண்ணி பேசு”கறாராக சரஸ்வதி கூற,

“நானா? என்னால முடியாதுப்பா! நான் மாட்டேன்” என மறுத்தாள் வேதவி.

“வேதா அடி வாங்கப் போற நீ”

“சரிஇஇஇஇஇ!!” கால்களை நிலத்தில் உதைத்தபடி நகர்ந்தாள் பெண்.

முகம் கழுவி விட்டு வந்தவள், வாசனுக்கு அழைக்கலாமா, வேண்டாமா எனும் யோசனையிலே அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“போன் பண்ணி என்னனு பேசுறது?”என தனக்கே கேட்டுக் கொண்ட வேதவி,

“நானா போன் பண்ணவும் ஒரு மாதிரி இருக்கே! கடவுளே..!” என்றாள், சலிப்புடன்.

ரவி தந்த போன் பெட்டி பிரிக்கப்படாமல் அப்படியே இருக்க, தன் போனில் நேற்றைய கால் ஹிஸ்டரி சென்று இறுதியாக வந்த அழைப்பின் படி கீர்த்தி வாசனின் எண்ணைக் கண்டு கொண்டாள்.

“என் பதிலை கேட்டு நேத்து என்ன நினைச்சிருப்பான்?” என புலம்பியவள்,

“மரியாதை வேதா, மரியாதை!அவன் இல்ல, அவர்! உன்னை கட்டிக்க போறவர். சோ, என்ன நினைச்சிருப்பார் ன்னு சொல்லனும்!”என திருத்திக் கொண்டாள்.

‘ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே’ என ஏதேதோ நினைத்த படியே தன்னை அறியாமலே கீர்த்தி வாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள் வேதவி.

“ஐயோ!”என பதறிய படி இவள் துண்டிக்கப் போக,

இரண்டு ரிங்கிலே போனை எடுத்திருந்தான் கீர்த்தி வாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!