Skip to content
Post Views: 6,153
அத்தியாயம் 9
அன்று மதுசூதனன் வீடு வந்து சேரவே நெடு நேரமாகியிருந்தது. அவனுக்காக ஜமுனா காத்திருந்ததைப் பார்த்தவன் அவரை முறைத்தான்.
Advertisement
எதுக்கும்மா…. இவ்வளவு நேரம் தூங்காம உடம்பை கெடுத்துக்கற?
உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும், அதான் உட்கார்ந்திருக்கேன்.
இரு ம்மா வரேன், என்றவன் அவசரமாக ஒரு குளியலைப் போட்டு உடைமாற்றி வந்தவன் அவர் அருகில் அமர்ந்தான். ஹம்ம்…..” இப்ப சொல்லு…….. என்ன அப்படி முக்கியமான விஷயம்? பானு ஊருக்கு வராளா”…..? என்றான் ஆர்வமாக.
Advertisement
திருமணமான இத்தனை நாட்களில் ஒரு முறை மட்டும் நேரில் சென்று பார்த்து வந்ததோடு சரி. அதுவும் தங்ககூட இல்லை, போன அன்றே திரும்ப வந்திருந்தனர். அதுதான் பானு வருகிறாளோ என அன்னையிடம் கேட்டான்.
Advertisement
பானுவை நினைத்து பெரு மூச்சு விட்டவர், ஹ்ம்ம்………. இல்லப்பா……., நமக்கு தெரிஞ்சவங்க மூலமா உனக்கு ஒரு வரன் வந்திருக்கு அதை சொல்லத்தான் உட்கார்ந்திருக்கேன்.
”நான்தான் இன்னும் ஒரு ஆறு மாசம் போகட்டும்னு சொன்னேன் இல்லம்மா……. எதுக்கு அவசரப்படறே?”
தானா தேடி வந்திருக்கு மது. பார்க்க நல்ல வரனா தெரியுது. அதான் விட்டுட வேணாமேன்னு நினைக்கறேன். ”இன்னும் எவ்வளவு நாள் இப்படியே ஏதாவது காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே இருப்பே………. நல்லா யோசிச்சு முடிவெடு”. என கையில் பெண்ணின் போட்டோவை தந்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
Advertisement
போட்டோவை பார்த்தவனது கண்கள் அதிலிருந்து நகரவேவில்லை. புகைப்படத்தில் இருந்த பூர்ணியின் உருவத்தைப் பார்த்தவனுக்கு…., கண்கள் பசை போட்டு ஒட்டியது போல அதிலேயே இருந்தது.
அவனுக்கு திருமணத்தைப் பற்றிய எண்ணம் இருந்தாலும், தன் தொழில் வளர்ச்சிக்காக தள்ளிப் போட்டு கொண்டிருந்தான். பூரணியின் உருவத்தைப் பார்த்ததும், மனதின் ஓரத்தில் ஆசை துளிர்த்தது.
”தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு. நாம நினைச்ச மாதிரி ஓட்டலும் ஆரம்பிச்சாச்சு. கல்யாணம் பண்ணிகிட்டாதான் என்ன…….? என யோசனை சென்றது.
இதோ மது கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்ட அடுத்த வாரமே ”பூர்ணிமாவைப் பெண் பார்க்க வந்திருந்தனர்”. ஜமுனாவின் தாய் வீட்டு உறவினர் வகையறாவில் மாதவியின் கணவர், அவர்களுக்கு தூரத்து உறவினர் என்ற முறை வந்தது .
முதலில் பெண் பார்த்து எல்லாம் ஒத்து வந்தால் பானு வீட்டிற்கு சொல்லலாம் என முடிவு செய்து ஜமுனா, கலியமூர்த்தி மதுசூதனன் மட்டும் பெண் பார்ப்பதற்காக வந்திருந்தனர்.
அதுகூட வீட்டில் வேண்டாம் ”இருவருக்கும் பொதுவாக கோயிலில் வைத்துக் கொள்ளலாம் என பெண் பார்க்கும் வைபவத்தை சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைத்திருந்தனர்”.
மாதவி வீட்டினர் முன்கூட்டியே வந்திருந்ததால், முதலில் நடராஜர் சிவகாமியை தரிசித்துவிட்டு, கோயில் சுற்று பிரகாரத்தில் வந்து அமர்ந்திருந்தனர்.
மதுசூதனன் வீட்டினரும் சொன்ன நேரத்துக்கு சரியாக வந்திருந்தனர். கோயிலுக்குள் வந்ததும் ஜமுனா அவர்களுக்கு போன் செய்து எங்கிருக்கிறார்கள் என கேட்டறிந்து , கணவர் மற்றும் மகனுடன் அங்கு வந்தார்.
தூரத்தில் இருந்து அவர்களை நோக்கி வரும் போதே மதுசூதனனது கண்கள் பூர்ணிமாவைத் தேடியது. அருகே அவர்களை நெருங்க…. நெருங்க… அவனது விழிகள் ஆர்வமாக அவள் மீது படிய துவங்கியது.
இவர்களை அடையாளம் கண்டதும் மாதவி, குமார் இருவரும் எழுந்து நின்று இன்முகமாக வரவேற்று பேசினர். பூர்ணிமாவும் சிரித்த முகமாக எழுந்து நின்றாள்.
பூர்ணிமா புன்னகையுடன் ஜமுனாவையே பார்த்திருந்தாள். அவரும் அவளைப் பார்ப்பதும் மாதவி குமாருடன் பேசுவதுமாக இருந்தார்.
அங்கேயே உட்கார்ந்து இருகுடும்பமும் பேச ஆரம்பித்தனர். குமார் மதுசூதனனிடம் அவனது தொழிலைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்.
மாதவிக்கு மது படிக்காதது மிகப் பெரிய குறையாக இருந்தது. தங்கைக்கு ஏற்ற படித்த மாப்பிள்ளையாக தேடிப் பிடித்தாலும், பூர்ணிமாக்கு தாய் தந்தை இல்லை என்பதால் சிலர் தவிர்த்தனர். சிலது ஜாதகம் சரியில்லாமல், மாப்பிள்ளை சரியில்லாமல் இவர்களாகவே ஒதுக்கியிருந்தனர்.
எல்லாம் ஒத்துவந்தால், செந்தில் ஏதாவது குளறுபடி செய்து களைத்து விட்டுவிடுவான். இப்படியே பூர்ணிமாவுக்கு மாப்பிள்ளை தகையாமல் தள்ளி சென்று கொண்டேயிருந்தது.
மதுவைப் பற்றி கேள்விப்பட்டதில் படிப்பைத் தவிர எல்லாம் பொருத்தமாக இருந்ததால் அரைமனதாக ஒப்புதல் சொல்லியிருந்தாள் மாதவி. ”குமார் நன்றாக மதுவின் குடும்பத்தை பற்றி விசாரித்ததில், அவருக்கு மிகுந்த திருப்தி. பையன் நல்ல ஒழுக்கமானவன். எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. ஓரே பையன். படிக்கவில்லை என்றால் என்ன? தொழில் செய்கிறான். அவனிடம் பத்துபேர் வேலை செய்கிறார்கள் என மாதவியை சம்மதிக்க வைத்திருந்தார்”.
அவரைப் பொறுத்தவரை பூர்ணிமாவை நல்ல பையனாக பார்த்து, அவளுக்கு கட்டி வைத்து, அவனிடத்தில் அவளை ஒப்படைத்துவிட நினைத்தார்.
அதற்கேற்றது போல் மதுசூதனனைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டதில் திருப்தி அடைந்துதான் பூர்ணிமாவை அவனுக்கு திருமணம் செய்து தர சம்மதித்திருந்தார்.
”மாதவிக்கு மதுசூதனனை நேரில் பார்த்ததும் பிடித்துவிட்டது. மனதுக்கு நிறைவாக உணர்ந்தாள். ஆள் பார்க்க கம்பீரமாக இருந்தான். என்னவோ அவனைப் பார்த்ததுமே, பூர்ணிமாவுக்கு இவன் பொருத்தமாக இருப்பான், என அவளது உள்ளுணர்வு கூறியது. அதில் பூர்ணிமாவிடம் திரும்பி மாப்பிள்ளைய நல்லா பார்த்துக்கோடா….. என ரகசியம் பேசினாள்”.
பூர்ணிமா நிமிர்ந்து மதுசூதனனைப் பார்த்தாள். இவளையே பார்த்திருந்தவன்…., பூர்ணிமா நிமிர்ந்து பார்த்ததும், அவளைப் பார்த்து சிநேகமாக முறுவலித்தான். ஜமுனாவுக்கே அவனது செய்கையில் ஆச்சர்யம்தான்.
”குமாரிடமும் மாதவியிடமும் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை பூர்ணிமாவையும் மதுவையும் அவ்வப்போது தழுவி நின்றது ஜமுனாவுக்கு. பூர்ணிமா மதுவை நிமிர்ந்து பார்த்ததையும், மதுசூதனன் புன்னகைத்ததையும் பார்த்தவருக்கு மனம் நிம்மதி கொண்டது”.
அவனுக்கும் பெண்ணைப் பிடித்திருப்பதாக உணர்ந்தவர், மெல்ல அவர்களுக்கு தனியாக பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நினைத்து குமாரிடம் பேசினார்.
மாதவியும் குமாரும் அவரது எண்ணத்திற்கு சம்மதிப்பது போல, குமார் பூர்ணி நீ தம்பியோட போய் சாமி கும்பிட்டு வாம்மா….. என்றார்.
”பூர்ணிமாக்கு மதுவுடன் தனியாக செல்ல கூச்சமாக இருந்தாலும், பெரியவர்களின் பேச்சை மீற எண்ணாமல் எழுந்து நின்றாள். மதுவுக்கு குமார் சொன்னதைக் கேட்டதும் சந்தோஷத்தில் மனம் துள்ளியது”. அவனும் எழுந்து அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
மெல்ல மதுசூதனன் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேச ஆரம்பித்தான். பேசிக் கொண்டே நடந்தவர்கள், ஓரமாக நிழலில் ஒதுங்கி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
மதுசூதனன் கேட்கும் கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. மதுசூதனன் படிக்கவில்லை. எட்டாவதோடு தனது படிப்பை நிறுத்தியிருந்தான் என அவளுக்கு முன்னமே மாதவி கூறியிருந்தாள்.
பூர்ணிமாவின் சம்மதம் கேட்டபிறகு தான் மதுசூதனன் வீட்டிற்கு, பெண் பார்க்கவே ஒப்புதல் கொடுத்திருந்தனர். மது இலகுவாக பேசியதில் கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவள் அவனிடம் ‘’கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்குப் போக அனுமதிப்பீங்களா…….?” என்றாள்.
பூர்ணி அப்படி கேட்டதும் வேலைக்கா…………? என நெற்றி புருவத்தை சுருக்கி வேள்வியாக அவளைப் பார்த்தவன், என்ன வேலைக்கு………? என்றான் ஒன்றும் புரியாமல்.
தான் ஆசிரியையாக வேலை செய்யும் அந்த புகழ் பெற்ற தனியார் பள்ளியின் பெயரைக் கூறி, அங்கே பணி புரிவதாக கூறினாள்.
இது அவனுக்குத் தெரியாது. ஜமுனா இது பற்றி மகனிடம் ஏதும் சொல்லவில்லை. மகன் தான் படித்த பெண்களே வேண்டாம் என சொல்லிக் கொண்டிருக்கிறானே. எங்கே இதைப் பற்றி சொன்னால் மறுத்துவிடுவானோ…. என பயந்து மறைத்திருந்தார்.
ஆனால் பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை படிக்காததைப் பற்றி முன்கூட்டி பேசும் பொழுதே கூறியிருந்தார். பூர்ணிமா வேலை செய்வதை அவள் கூறக் கேட்டவன், என்ன படிச்சிருக்க……..? என்றான் அவளைப் ஆழமாக பார்த்து.
பூர்ணி, அவனைப் பார்த்து, எம்.எஸ்,சி., இப்ப எம்.பில் படிச்சிட்டிருக்கேன். என்றாள்.
ஓஹ்………. என்றவனுக்கு ”ஸ்வரம் தப்பியது போல், நொடியில் முகம் கூம்பியது”. ”வா……… போகலாம்” எனத் தலையசைத்தவன் பெற்றவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இவர்கள் வருவதைப் பார்த்ததும், ஆச்சர்யமானது அவர்களுக்கு. அதுக்குள்ள பேசிட்டாங்களா….! இவ்வளவு சீக்கிரமாகவா சாமி தரிசனம் முடிந்துவிட்டது என யோசனையுடன் இருவரையும் பார்த்திருந்தனர்.
மதுவின் முகம் டல்லாக இருப்பது வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்தது. பூர்ணிமாவும் அவ்வப்போது மதுவின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு நடந்து வந்தாள். ”என்ன இவன் வேலையை பத்தி கேட்டதும் மூட் அவுட் ஆன மாதிரியாயிட்டான் என அவள் மனதில் யோசனை ஓடியது”.
ஜமுனாவிடம் வந்தவன் கிளம்பலாமா…… என தலையசைத்தான். அவரும் புரிந்து கொண்டு, மாதவி குமாரிடம் சொல்லிக் கொண்டு எல்லோரும் கிளம்பினார்கள்.
வீட்டிற்கு வரும் வரை ஏதும் பேசாது இருந்தவன், வந்த பின்பு உங்ககிட்ட ”எத்தனை தடவை சொல்லியிருக்கேன் படிச்ச பொண்ணு பார்க்காதீங்கன்னு” என சத்தம் போட்டான்.
”டேய் டேய்…….. ஏன்டா? இப்படி கத்தற……..? எதுவா இருந்தாலும் பொறுமையா கேளு நான் பதில் சொல்றேன்”.
”என்ன பொறுமையா கேட்கனும் உங்களுக்கு? என்னை என்ன வேலை வெட்டி இல்லாதவன்னு நினைச்சீங்களா………? வீணா…. அவங்களையும் அலைகழிச்சு, என்ன நினைச்சீங்க நீங்க? நீங்க ஒன்னும் சொல்லனா எனக்குத் தெரியவராதுன்னா…….? ஏன் பொண்ணு வேலைக்கு போறதை என்கிட்ட முன்னாடியே சொல்லல என எகிறினான்”.
கலியமுர்த்தி மனைவியை அர்த்தமாக பார்த்து நின்றார். ”அவரது பார்வையின் பொருள், நான் அவன்கிட்ட மறைக்காத சொல்லிடுன்னு சொல்லும்போது கேட்டியா……? இப்ப கேட்கறான் இல்ல, பதில் சொல்லு என இருந்தது”.
”கணவரை திரும்பி முறைத்தார் ஜமுனா. ம்ம்…. என்னை தான் அடக்க முடியும் பையன் கேட்கிறான் இல்ல பதில் சொல்லு என முனுமுனுத்தார்”.
”அப்ப உங்களுக்கும் தெரிஞ்சுருக்கு. நீங்களும் அம்மாவோட சேர்ந்து மறைச்சிருக்கீங்க……. என்று அவரிடமும் பாய்ந்தான்”.
”அய்யோ என் வாயால நானே மாட்டிக்கிட்டேனா……, என திருதிருத்தார் பதில் பேச முடியாமல்”.
வீட்டு நிர்வாகம் முழுதும் ஜமுனாவுடையதுதான். பிள்ளைகளின் வளர்ப்பும் அவரைச் சார்ந்ததே. கலியமூர்த்தி எதிலும் தலையிடமாட்டார். அதற்காக பொறுப்பில்லாத மனிதர் என்று இல்லை.
குடும்பம் ஒத்தாற்போல நடக்க வேண்டும் என்றால், கணவன் மனைவி இருவரும் மனமொத்து விட்டுகொடுத்து ஒரு கை வாகாக இருந்தால் மட்டுமே, அது சிறப்பானதாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.
ஆகையால் மனிதர் மனைவியின் பொறுப்பில் பிள்ளைகளுடன், தன்னையும் சேர்த்து ஒப்படைத்து விட்டார்.
வசதிக்குதான் குறைவே தவிர…. அன்பும் பாசமும் அள்ள அள்ள குறையாத நடுத்தர குடும்பம் அவர்களது.
மகனிடம் மாட்டிக்கொண்டதில் முழித்துகொண்டு ”காப்பாத்து….. டி..” என மனைவியைப் அப்பாவியாக பார்த்து நின்றார்.
மது, சொல்லுங்க ப்பா……. நீங்களாவது முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்கலாம் இல்ல….
என்னைப் பார்த்து முறைச்சீங்க இல்ல, இப்ப பதில் சொல்லுங்க என பார்த்தார் கணவனை. இருந்தாலும் கணவரை பார்க்க பாவமாக இருந்தது ஜமுனாவுக்கு. கலியமூர்த்திக்கு ஜமுனா அளவு சூட்சுமம் எல்லாம் தெரியாது. வெள்ளந்தியான மனிதன். பிள்ளைகளைகூட அதட்டி பேசமாட்டார்.
அ……து……. என இழுத்தவர்…, ஜமுனாவின் கண் அசைவில்…., எனக்கு கடைக்கு போகனும் ப்பா……. வேலையிருக்கு…. என்று வேகமாக சென்றுவிட்டார்.
ஜமுனாக்கு கணவரின் ஓட்டத்தைப் பார்த்து மனதில் சிரிப்பு. திரும்பி மதுவைப் பார்த்தவர், ‘’ முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருந்தா ஒத்துகிட்டுருப்பியா…… அதான் சொல்லல. பொண்ணை நேர்ல பார்த்ததும் சொல்லலாம்னு இருந்துட்டேன்.
ம்ப்ச், முன்னாடியே சொல்லியிருந்தா நான் இதுக்கு ஒத்துக்கிட்டே இருந்திருக்க மாட்டேன். இப்ப அவங்களையும் தேவையில்லாம அலைகழிச்சிருக்கீங்க…..
இந்த சம்மந்தம் சரி வராதும்மா……. அவங்க கிட்ட சொல்லிடுங்க.
பொண்ணு வீட்ல நீ படிக்கலன்ற விஷயத்தை சொல்லிதான் சம்பந்தம் பேசினதே. அவங்களே ஒத்துக்கிட்டாங்கன்றப்ப நீ ஏன் மறுக்கற…….மது?
இல்லம்மா…… சரிவராது, பின்னாடி எங்களுக்குள்ள எந்த பிரிவினையும் வரக்கூடாதுன்னு தான், நான் வேண்டாம்னு உறுதியா இருக்கேன். நீங்களே கூப்பிட்டு அவங்ககிட்ட சொல்லிடுங்க……… என ஓட்டலுக்கு கிளம்பி சென்றிருந்தான்.
பேங்க் எக்ஸாம் நெருக்கத்தில் வருவதால் பானு சின்சியராக படித்துக் கொண்டிருந்தாள். சங்கர் அன்று சீக்கிரமே வீட்டுக்கு வந்தவன், இவள் டைனிங் டேபிளில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து யோசனையானான். இப்பொழுது எல்லாம் சங்கரைக் கண்டு அச்சப்படுவதில்லை.
அவன் வீட்டில் இருந்தாலும் பானுவும் சகஜமாகவே இருக்க பழகியிருந்தாள். வீட்டிற்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு அவன் கண்ணில் படும்படி வைத்துவிடுவாள். அவனும் அதில் இருப்பதை லீவு நாட்களில் வாங்கி வந்து வைத்திடுவான்.
இருவரும் பார்ப்பதோ பேசிக் கொள்வதோ இல்லை. அவரவர் வேலைகளை எந்த ஒதுக்கமும் இல்லாமல் செய்ய பழகியிருந்தனர். அவனது துணிகளை எல்லாம் விடுமுறை தினங்களில் அவனே வாஷிங் மெஷினில் போட்டு துவைத்துக்கொள்வான்.
அவன் இருக்கும் சமயங்களில் வெளியே உட்கார்ந்து படிக்க மாட்டாள். எப்போதையும் விட இன்று சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்திருந்தான். அவள் அமரந்து படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே அறைக்கு சென்றவன், குளித்து முடித்து வந்தான்.
பானு அப்போதும் அசையாமல் இருந்தாள். கிட்சனிற்கு சென்று தனக்கான காப்பியை சேர்த்துகொண்டு ஹாலில் இருந்த சோபாவில் வந்து உட்கார்ந்தான்.
அவள் படிப்பதில் மும்முரமாக இருந்ததால் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவளையே பார்த்திருந்தவனுக்கு ”அப்படி என்னத்த படிக்கிறா…… என மண்டையில் வண்டு குடைந்தது.
அவளிடம் விவாகரத்தைப் பற்றி இரண்டு முறை பேசிவிட்டான். அவளிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.
ஒரு தடவை அவளிடம் பேசும்பொழுது வார்த்தை முத்தி ”என்ன பார்க்க ஹேன்டசம்மா இருக்கான். பசையுள்ள இடமாவும் இருக்குன்னு.. ஒட்டிக்கலாம்னு பார்க்கிறியா.. ? அதெல்லாம் என்கிட்ட நடக்காது என கோவப்பட்டான்”.
பானு, ”அய்யோடா……. சார் ஹேன்ட்சம்மா இருந்தா… அவரோட. நாங்க என்ன அவர் பின்னாடி ஜொள்ளு விட்டுட்டா திரிஞ்சிட்டிருக்கோம்…….? நீங்க வசதியா இருந்தா உங்களோட. அதனால எனக்கு என்ன வந்தது? இப்ப பேசற இந்த டையலாக் எல்லாம் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி எங்க போச்சாம்…?”
இவர் இஷ்டத்துக்கு தாலி கட்டுவாராம். அப்புறம் வேணாம்னு சொல்லுவாராம். நீங்க சொல்றதுக்கு எல்லாம் என்னால ஆமாம் சாமி போட முடியாது.
”எங்கே உங்களுக்கு உண்மையிலே தைரியம் இருந்தா என் கழுத்துல தாலி கட்டும் போது வந்திருந்த அத்தனை பேரையும் கூப்பிட்டு இந்த பொண்ணை எனக்கு பிடிக்கல, வெட்டிவிடுங்கன்னு கேளுங்க….. பார்க்கலாம்?”
”அப்படி, அவங்க எல்லாம் வந்து சொல்லட்டும், உங்களை விட்டு நான் போயிடறேன்………? என்ன பார்க்கறீங்க….? ஓகேவா……..?”
விவாகாரத்து வேணுன்றவரு முதல்ல, ”உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா……. ? உங்களை நானா………. விருப்பப்பட்டு………. ஆசைப்பட்டு……… கட்டிக்கல”. உங்கம்மா வந்து எங்கம்மாகிட்ட கெஞ்சி கால்ல விழாத குறையா அழுது கேட்டுகிட்டதாலதான் எங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க.
”என்னமோ…. நான் வந்து உங்களை வேண்டி விரும்பி கட்டிக்கிட்ட மாதிரி பேசக் கூடாது. வேணும்னா உங்க வீட்டு, எங்க வீட்டு பெரியவங்க எல்லாரையும் வர வச்சி அவங்ககிட்ட பேசுங்க”, என்றுவிட்டாள்.
”கொழுப்புடி. ஆளை பாரு உழக்காப்பிடி மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேறா……….. வாய் வாய்…….. என கருவிக் கொண்டான்”.
அவள் அவனைப் பார்த்து ஒதுங்கி சென்றாலும்,” பெரிய ரதின்னு நினைப்பு மனசுல……., இவளப் பார்த்து நான் மயங்கிடப் போறேன்னு ஒளிஞ்சுக்கறாங்களாம்” என அவள் காது கேட்கும்படியே நக்கல் செய்வான்.
அவள் காதுகளில் விழுந்தாலும், அவளிடம் இருந்து எந்த எதிர்வினையும் இருக்காது. அதற்கும் காய்வான். ”திமிரு. அவ்வளவும் கொழுப்பு. எல்லாம் என் அம்மாவ சொல்லனும். அவங்க குடுக்கற இடம் என பொரிந்து தள்ளுவான்”.
இன்றும் அவன் வந்தும் அவனுக்கு காப்பி கூட போட்டுக் கொடுக்காமல், கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும் உள்ளுக்குள் கோவம் வந்தது. தன்னை அவள் மதிக்கவே இல்லை என்று ஆத்திரம் மண்டியது.
கையில் டீவி ரிமோட்டை எடுத்தவன், டீவியை ஆன் செய்து, நியூஸ் பார்ப்பது போல சவுண்ட் அதிகமாக வைத்தான். அவளுக்கு அவனுடைய சேஷ்டை புரிந்தது. எதுவும் பேசாமல் அங்கிருந்த புக்ஸ், நோட்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு அறையினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
சங்கர், போடி….. எவ்வளவு நாள் ஓடற நானும் பார்க்கறேன் என்று கறுவிக் கொண்டான் மனதில்.
சங்கருக்கு பானு மீது ஈடுபாடு வந்திருப்பதை அவன் உணரவேயில்லை. அவன் அதனை அவளிடம் வெளிப்படுத்தும் விதம்தான் வேறாக இருந்தது.
அவனே அவனது நடவடிக்கையை உற்று கவனித்திருந்தால் அவன் போக்கு புரிந்திருக்கும். எங்கே அவன்தான் அதற்கு முழுக்க முழுக்க வேறுவடிவம் கொடுத்து வைத்திருந்தானே.
அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வரவே மதுசூதனனுக்கு பின் இரவுக்கு மேல் ஆனது. வந்தவன் அசதியால் அப்படியே படுத்துவிட்டான். கண்களை மூடினால் பூர்ணியின் உருவம் நினைவில் வந்து நின்றது. அவளை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவளது நினைவு அவனை அலைகழித்தது மனதில்.
அவளைப் பற்றி நினைக்க கூடாது என மனதை இழுத்துப்பிடிக்க பிடிக்க அவளது நினைவு கூடியதே தவிர குறையவில்லை. இன்றும் கண்ணை மூடியதும் அவளது உருவம் உள்ளத்தில் உதித்தது. முயன்று அவளை நினைவில் இருந்து அகற்றி உறங்க முற்பட்டான்.
ஆனால் உறக்கம்தான் வருவேனா என அழிச்சாட்டியம் காட்டியது. புரண்டு புரண்டு படுத்து ஒருவழியாக தூக்கத்தை ஆட்கொண்டான். அவன் வேண்டாம் என்று மறுத்த பிறகும், ஜமுனா அவனிடம் எவ்வளவோ போராடிப் பார்த்து, எடுத்து சொல்லியும், மது ஒப்புக் கொள்ளவில்லை. பிடிவாதமாக இருந்தான்.
படித்த பெண் வேண்டாம் என உறுதியாக மறுத்துவிட்டான். அவனுக்கும் பூர்ணியைப் பார்த்ததும் பிடித்திருந்தது. தனது பிடித்தத்திற்காக அவனது எண்ணத்தை மாற்றிக் கொள்வதற்கு அவன் தயாராக இல்லை.
”படித்திருக்கிறாள். வேலைக்கு வேறு செல்கிறாள். அவளுக்கென்று கனவுகள் இருக்கும். ஆசைகள் இருக்கும். என்ன காரணத்திற்காக படிக்காத என்னை கல்யாணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டாளோ”.
ஒருவேளை அவர்களது வீட்டில் வற்பறுத்தியிருக்கலாம் என அவனே முடிவு செய்து கொண்டான். அவளது பயந்த சுபாவத்தை பார்த்து, அவளுக்கு அவனை திருமணம் செய்வதில் இஷ்டம் இல்லை என தவறாக புரிந்திருந்தான்.
இப்பொழுது எல்லாம் ஒத்து வந்து திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்தின் பின் தங்கள் வாழ்வில் இதனைக் கொண்டு விரிசல் வந்தால், என்ன செய்வது? இதனால் பிற்காலத்தில் எந்த ஏற்றத் தாழ்வும் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
அவள் மேல் ஆசை இருந்தும் திருமணத்திற்கு மறுத்திருந்தான். காலப்போக்கில் அவள் நினைவு மாறிவிடும், என அவளைப் பற்றிய நினைவுகள் வந்தாலும் , அதனை ஒதுக்க ஆரம்பித்திருந்தான்.
சரசு ஊரில் இருந்து மகனையும் மருமகளையும் பார்க்க வந்திருந்தார். ராகவன் சரசுவைக் கொண்டு வந்து விட்டு விட்டு அதற்கு மறுநாளே சென்றுவிட்டார்.
சரசு சில நாட்கள் மகன் மருமகளுடன் இருந்து வருவதாக கூறி தங்கிவிட்டார். மகனும் மருமகளும் வாழும் வாழ்க்கையை பார்க்க எண்ணியே அவர் தங்க நினைத்தது. இன்னும் இவர்கள் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமல் உரசாமல் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்ததும் அவருக்கு ஆயாசமாக வந்தது.
தொடரும்.
error: Content is protected !!