Skip to content
Post Views: 5,548
அத்தியாயம் 10
மகன் மருமகள் வாழும் வாழ்க்கையை பார்த்து சரசுக்கு வேதனையாக இருந்தது. இருவருமே படித்த பிள்ளைகள், இதற்கு மேல் தன்னால் என்ன செய்ய முடியும் என ஆதங்கப்பட்டார். இவர் வந்து நான்கு நாட்கள் கழித்து, பானு பேங்க் எக்ஸாம் எழுதிவிட்டு வந்தாள்.
அவர் வந்ததற்கும், தங்கியதற்கும் அதுவும் ஒரு காரணம். அவள் படிப்பது பற்றி முன்னமே அவளது வீட்டாரிடமும், சரசிடமும் சொல்லியிருந்தாள். அவளது பரீட்சையின் போது சரசு வருவதாக போனில் கூறியிருந்ததால் கிளம்பி இந்த சமயத்தில் வந்திருந்தார்.
Advertisement
தனியாக செல்லவிடாமல் அவரும் அவளுடன் துணையாக சென்று வந்தார். புது இடம். பானுக்கும் எக்ஸாம் டைமில் தடுமாற்றம் வேண்டாம் என, மகனை கேப் புக் செய்து தரச் சொல்லி, அவரே அழைத்துச் சென்று வந்தார்.
அவர் சொல்லிதான் சங்கருக்கு அவள் பேங்க் எக்ஸாமுக்கு படிக்கிறாள் என்றே தெரியவந்தது. அப்பொழுது தான் அவள் என்ன படித்திருக்கிறாள் என சரசிடம் கேட்டறிந்து கொண்டான். ” பி.ஈ முடிச்சவ, ஏன் வேலைக்கு ட்ரை பண்ணாம வீட்டுல உட்கார்ந்திருக்கா”, என்ற கேள்வியும் எழுந்தது அவன் மனதில்.
”ம்ப்ச்……. நமக்கு என்ன? அவள் வேலைக்கு போனா நமக்கென்ன? போகாட்டி நமக்கென்ன……? இன்னும் கொஞ்ச நாள் அதுக்கப்பறம், அவள் யாரோ? நான் யாரோ?” என நினைத்துக் கொண்டான் மனதில்.
Advertisement
பானு எக்ஸாம் எழுதி வந்த அடுத்தநாள், சங்கர் அடிபட்டு ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தான். பைக்கில் வேகமாக சென்றபோது திருப்பத்தில் எதிரில் வந்த வண்டியை கவனிக்காமல், சடன் பிரேக் போட்டதால் அவனது டூவீலர் ஸ்கிட்டாகி கீழே விழுந்து அடிப்பட்டிருந்தான்.
Advertisement
கையிலும் காலிலும் தோள் உராய்ந்து சதையெல்லாம் பேந்திருந்தது. இது இல்லாமல் ஒரு காலிலும், ஒரு கையிலும் மைல்ட் பிராக்சர். குறைந்தது இரண்டு வாரத்துக்காவது ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதின் பேரில் வீட்டிலேயே பெட் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தான்.
இவன் அடிப்பட்டதை கேட்டு ராகவன், மதுசூதனன், ஜமுனா, கலியமூர்த்தி எல்லோரும் வந்திருந்தனர். ஹாஸ்பிட்டலில் இருந்து சங்கர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு வரும்வரை, கூடவே இருந்து அவனை கவனித்து பார்த்து கொண்டனர்.
சரசு மட்டும் மகன் மருமகள் கூடவேயிருந்தார். மற்றவர்கள் எல்லோரும் சங்கர் டிஸ்சார்ஜ் ஆனதும் கிளம்பியிருந்தனர். சரசுக்கு சங்கர் மீது கோவம் இருந்தாலும், வருத்தமே எஞ்சியிருந்தது. அடிப்பட்ட அன்று காலையில் வேலைக்கு செல்வதற்கு முன் சரசுக்கும் அவனுக்கும் பெரிய வாக்குவாதமே நடந்திருந்தது.
Advertisement
பானு எக்ஸாம் எழுதி வந்த அடுத்த நாள் காலை பானு கிட்சனில் சமைத்துக் கொண்டிருந்தாள். சரசு அவளுடன் வேலையாக நின்றிருந்தார். அன்று காலையிலேயே எழுந்து வந்தவன் சரசிடம் தன்னுடைய வாழ்க்கை இப்படியானதை சொல்லி, அதற்கு அவரும் பானுவும் தான் காரணம் என்று சண்டை பிடித்திருந்தான்.
அதற்கு சரசு பதில் சொல்ல, அவன் கோவத்தில் வார்த்தைகளை விட என அந்த இடமே போர்களமானது. சங்கரும் சரசுவும் சண்டையிடுவதை பார்த்து பானு பயந்து போய் நின்றிருந்தாள். மனதில் தன்னாலதானோ என்ற கழிவிரக்கம் தோன்றியது. சங்கர் தன்னை குறித்து பேச பேச அவளுக்கு அழுகை ஆறாக பெருகியது.
அதே கோவத்தோடு சென்று குளித்து முடித்து வந்தவன், சாப்பிடவும் இல்லை. சரசிடம் சொல்லிக்கொள்ளவும் இல்லை. எதுவும் பேசாமல், நிமிர்ந்து கூட யாரையும் பாராமல் கோவமாக பைக்கை எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டிருந்தான்.
மனம் முழுதும் தாயிடம் பேசிய வார்த்தைகளிலேயே உழன்று கொண்டிருந்ததது. சிந்தனைகள் முழுதும் அதிலேயே இருந்ததால் திருப்பத்தில் எதிரில் வரும் வண்டியின் ஓசையை காதில் வாங்காமல் சென்று, சடன் பிரேக் போட்டு, டூவிலர் சறுக்கியதால், கீழே விழுந்து கை கால் அடிப்பட்டிருந்தது.
இவன் விபத்துக்குள்ளாகியதும், அங்கு சாலையில் சென்று கொண்டிருந்தவர்களின் உதவியால் உடனே ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டு, வீட்டிற்கும் தகவல் சொல்லியிருந்தான்.
அன்று பானுவுக்கு உடல்நிலை சரியில்லாத போது வந்திருந்த அதே மருத்துவமனை என்பதால் சரசு கண்டு பிடித்து வருவதற்கு எளிதாக இருந்தது. அவருடன் பானுவும் ஹாஸ்பிட்டலுக்கு வந்திருந்தாள்.
சங்கரை கைகால்களில் கட்டுகளுடன் பார்த்ததும் சரசுக்கு மயக்கமே வந்திருந்தது. அவரை சமாளிக்கவே பானுக்கு கடினமாக இருந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ராகவனுடன் சேர்ந்து பானுவின் வீட்டினரும் ஒன்றாகவே வந்திருந்ததனர். வீட்டினரைப் பார்த்ததும் தான் பானுக்கு மனதில் தெம்பே வந்தது. அதுவரை சங்கரையும், சரசையும் மாற்றி மாற்றி கவனித்ததில், அவளும் சோர்ந்து போயிருந்தாள்.
பானு இதுவரை எல்லாவற்றிற்கும் அண்ணனையோ, அம்மாவையோ சார்ந்தே பழகியிருந்ததால், எதையும் தனித்து நின்று எதிர்கொண்ட அனுபவம் எதுவும் இல்லை.
பானுக்கு தனியாக வெளியே சென்று எதற்கும் பழகியிராததால் மருத்துவமனையில் ஒவ்வொன்றுக்கும் அலைவதற்கு சிரமமாகவே இருந்தது. இதில் சரசு வேறு மகன் அடிபட்ட அதிர்ச்சியில், பிபி அதிகமாகி மயங்கி, அவர் ஒரு பக்கம் படுத்திருந்ததால் அவளுக்கு பயமும் வந்திருந்தது.
தனது வீட்டினரை அன்று மாலை பார்க்கும் வரை, பயமும் பதட்டமுமாகவே இருந்தாள். மாமியாரும் இந்த நேரத்தில் பிபி அதிகமாகி படுத்தது பயத்தை கொடுத்தது. மாலை ராகவனை பார்த்ததும்தான் அவளுக்கு தைரியமே வந்தது.
நான்கு நாட்கள் கழித்து, சங்கர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பின்பு, ஒரளவு பழைய சுழ்நிலை திரும்பியிருந்தது. சங்கர் யாருடைய உதவியில்லாமலும், தானாகவே எழுந்து நடக்க ஆரம்பித்த பிறகு ராகவன் முட்லூருக்கு திரும்பியிருந்தார்.
மகன் அடிபட்ட செய்தியை கேட்டு, எந்த முன்னேற்பாடும் செய்யாமல் அப்படியே கிளம்பி வந்திருந்ததால், அவரும் அங்கு கிளம்ப வேண்டிய சூழ்நிலை. தொழிலை பார்க்க கிளம்பியிருந்தார்.
சரசுக்கும் பிபி அதிகமாகி அதைக் குறைக்க மாத்திரை எடுத்துக் கொண்டிருப்பதால் பானு தான் இருவரையும் கவனிக்க வேண்டி இருந்தது.
காலையில் எழுந்து பாத்ரூம் சென்று வந்தவன், உடையை மாற்ற எண்ணி சட்டையை கழற்ற முயன்றான். அடிபட்ட கையிலிருந்து சட்டையை கழற்ற முடியாமல் திணிறிக் கொண்டிருந்தான்.
சரியாக அந்த நேரத்தில் அவனுக்கு காப்பி எடுத்து வந்த பானு, அவன் சட்டையைக் கழற்ற முடியாமல் தடுமாறுவதைப் பார்த்து, அவனருகே சென்று உதவுவதா வேண்டாமா என தயங்கி நின்றிருந்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தான். பானு வந்து உதவி செய்வாள் என எதிர்பார்த்தவன், அவள் தயங்கியபடியே நிற்பதைப் பார்த்து கோவமுற்றான். அவள் அவனுக்கு உதவாத எரிச்சலில், சட்டையை பிடித்து வேகமாக உருவ முயன்றான். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பானுவிற்கு பதற்றமானது.
அவளையும் அறியாமல் பதற்றமாக, ‘’அய்யோ, என்ன பண்றீங்க’’? என சங்கரிடம் ஓடிவந்தாள். சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்த அவனது கையை, அவளாகவே, எந்த தயக்கமும் இல்லாமல் பிடித்து நகர்த்தியவள், அவனது சட்டையின் கையை, அந்த அடிப்பட்ட கையிலிருந்து மெல்ல வலிக்காமல் லாவகமாக கழட்டி எடுத்தாள்.
அவன் கட்டிலின் நடுவில் உட்கார்ந்திருந்ததால் இவளும் அவனுக்கு அருகில் அமர்ந்து கழற்ற வேண்டியதாக இருந்தது. இதில் பதட்டத்தில் அவளை அறியாமலேயே, அவளது முகத்தை அவனது நெஞ்சில் உரசியவாறு சட்டையை கழற்றியிருந்தாள்.
அவனது செய்கையை தடுக்கும் வேகத்தில் ஏறி அமர்ந்திருந்தவளுக்கு ”அவனது பார்வையோ, மூச்சுக் காற்றோ தன் மேல் பட்டதைக் கூட உணரவில்லை”. சட்டையைக் கழற்றியவள் அழுக்கு சட்டையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அவளை தன் மார்பின் அருகே நெருக்கத்தில் பார்த்ததில், அவனுக்குதான் நெஞ்சு எகிறி குதித்தது. கண்களை மூடி பின்னால் சாய்ந்து உட்கார்ந்தவன், மனதின் போக்கை அறிய முயன்றான்.
அவளது வாசம் இன்னும் அவன் நாசியில் நிறைந்திருந்தது. பெண்மையின் நளினங்களை நெருக்கத்தில் உணர்ந்திருந்தவனின் மனம் நர்த்தனம் ஆடியது.
சில நாட்களாகவே அவனது பார்வை, அவள் மீது ஆர்வத்துடன் படிய ஆரம்பித்திருந்தது. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், தன்னை ஏறெடுத்துக் கூட பார்க்காமல், கண்டு கொள்ளாமல் இருந்தவளின் சுபாவம் அவனை திரும்பி பார்க்க வைத்தது.
அவளை தினமும் எதற்காவது சீண்டி டென்ஷனாக்குவது அவனுக்கு பொழுது போக்காக மாறியிருந்தது. அதை அவள் அறியாமல் ரசிக்கவும் செய்தான் மனதில். நாளடைவில் அவள் மீதான ஈர்ப்பு வளரத் துவங்கியது அவன் உள்ளத்தில்.
ஒரு பக்கம் அவள் அவன் வாழ்க்கையில் வேண்டாம் என முடிவெடுத்து இருந்தாலும், அவளை பார்க்காமல், சீண்டாமல் இருக்க முடியவில்லை அவனால்.
அவனது மனமாற்றத்தை, அவன் ஒப்புக்கொள்ள தயாராகவும் இல்லை. அடிபட்ட அன்று கூட சண்டை போட்டதிற்கான காரணம், அவளை சீண்டுவதற்காக, வம்பு செய்வதற்காக ஆரம்பித்ததுதான். விளையாட்டு வினையாகும் என்பது போல, முடிவில் அது சண்டையாக மாறியிருந்தது.
இப்பொழுது எல்லாம் வலிய சென்று ஏதாவது சேஷ்டை செய்து வம்பிழுத்து, அவளது ரியாக்ஷனை ரசிப்பது, அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
அன்றும் வேண்டுமென்றே அவளிடம் வம்பிழுக்க வந்து சேஷ்டை செய்தவனை, பானு கண்டுகொள்ள வேயில்லை. மாறாக சரசு அவனைக் கண்டிக்க போக நிலைமை வேறு விதமாக மாறியது.
அவன் அவளை கிண்டல் செய்தும், கேலி பேசியும் பானு கண்டுகொள்ளாமல் இருந்தது அவனுக்கு பானு தன்னை மதிக்கவில்லை என ஈகோவை கிளப்பியிருந்தது.
இவளுக்கு நான் பொருட்டே இல்லையா……? என்னை மதிக்கமாட்டாளா……? அப்படி என்ன என்னை விட இவள் ஒசத்தி……..? என ஆங்காரம் எழுந்தது. அதற்கு தூபம் போட்டது போல, சரசுவும் அவனை பானுவின் எதிரிலேயே கண்டிக்க அவனுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது.
அந்த கோவத்தில் தாயையும் மனைவியையும் தனது ஆசைகளையும் கனவுகளையும் கெடுத்துவிட்டதாகவும், தனது எதிர்காலத்தையே நிர்மூலமாக்கியதாகவும் திட்டித் தீர்த்து அவர்களையும் கலங்க வைத்து, அவனும் கோவத்துடன் சென்று நடந்ததுதான் இந்த விபத்து.
சங்கரின் மனம் பானுவின் அருகாமையை விரும்பியது. அவனது மனம் அவள் பக்கம் சாய ஆரம்பித்திருப்பதை உணர முடிந்தாலும், அவனது சுபாவம், அதனை ஒத்துக்கொள்ள தடுத்தது.
சரசு சங்கரைப் பார்ப்பதற்காக அவனது அறைக்கு வந்திருந்தார். அவனுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியல் உட்கார்ந்தவர், அவனிடம் உடல் நலனை விசாரித்து கொண்டிருந்தார். சரசு வரும் வரை பானுவின் சிந்தையில் இருந்தவன், அவர் வந்ததும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
சரசு, மது போன் பண்ணான். நாளைக்கு உனக்கு செக்கப்புக்கு ஹாஸ்பிட்டல் போகனும் இல்ல, இங்க வரேன்னு சொல்லியிருக்கான்
”ம்ப்ச், ஏன் ம்மா? நானே மேனேஜ் பண்ணிப்பேன். நீங்கதான் கூட இருக்கீங்க இல்ல”.
”பானு போன் போட்டு அவனைக் கூப்பிட்டு இருக்கா………… உன்னை பார்க்க வரவனை, நான் எப்படி வரவேணாம்னு சொல்ல முடியும்?”
பானு அவனுக்காக இட்லி, சாம்பார் சட்னி என தட்டில் வைத்து எடுத்து வந்திருந்தாள். கூடவே கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பவுலில் இருந்த தண்ணீரில் கையை சுத்தம் செய்தவன், பானு கொடுத்த இட்லியை ஒரு கையால் சாப்பிட ஆரம்பித்தான்.
அவன் சாப்பிட்டு முடித்ததும், அவனுக்கான மாத்திரையை எடுத்துக் கொடுத்தவள், சாப்பிட்ட பாத்திரத்தை எல்லாம் எடுத்துச் சென்றாள். சங்கர் அம்மாவின் பேச்சிற்கு செவியைக் கொடுத்திருந்தாலும் கண்கள் மனைவியை மொய்த்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலையிலேயே மதுசூதனன் வந்திருந்தான் தங்கையின் வீட்டிற்கு. உடன் ராகவனும் வந்திருந்தார். வந்து குளித்து முடித்து காலை உணவை முடித்தவர்கள், சங்கரை அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு சென்றனர்.
சங்கருடன் நால்வருமே மருத்துவமனைக்கு வந்திருந்தனர். சங்கரை பரிசோதித்த டாக்டர் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இப்படியே கன்டினியூ செய்தால் சீக்கிரம் குணமாகிவிடும் எனக் கூறி, மருந்து மாத்திரைகளையும் எழுதி கொடுத்து அனுப்பியிருந்தார்.
அங்கேயே சரசுவின் உடல்நிலையையும் காட்டி அவருக்கான மருந்துகளையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தனர். மதுசூதனன் அன்று மாலையே கிளம்பிவிட்டான் அங்கிருந்து. ராகவன் அவர்களுடன் இரண்டு நாள் தங்கியிருந்து முட்லூருக்கு கிளம்பியிருந்தார்.
அடுத்த ஒரு மாதத்தில் உடல்நிலை தேறியவன் அலுவலகத்துக்கு செல்ல ஆரம்பித்திருந்தான். அவனது உடல்நிலை முழுமையாக குணமாகும் வரை டூவீலரை தொடக் கூடாது என சரசு ஸ்ட்ரிக்டாக கூறியிருந்ததால் தினமும் கேப் புக் செய்து ஆபிஸ்கு சென்று வந்தான். அவன் அலுவலகம் செல்ல ஆரம்பித்த சில நாட்களில் சரசுவும் முட்லூருக்கு சென்றிருந்தார்.
பூர்ணிமாவை அவளுடைய பள்ளி ஆபிஸ் ரூமிலிருந்து பிரின்சிபால் அழைப்பதாக தகவல் வந்தது. அவள் ஆபிஸ் ரூமுக்கு சென்று பார்க்கும்போது, அங்கு செந்தில் உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சி.
பிரின்ஸி, வாங்க பூர்ணிமா, ஸார் உங்களோட ரிலேட்டிவ்வா……. ?
பூர்ணிமா ஆமாம் என தலையசைத்தாள். என்ன சொல்லி வைத்திருக்கிறானோ? என்று நெஞ்சு பட பட என அடித்துக் கொண்டது.
உங்களைப் பார்க்க வெளியூர்ல இருந்து வந்திருக்கிறதா சொன்னார். ரொம்ப அர்ஜென்டுன்னு சொன்னதால தான் உங்கள கூப்பிட்டு விட்டேன்.
தேங்கஸ் மேம் என எழுந்தவன், அவளுடன் வெளியே நடந்தான். பிரின்ஸ்பாலின் எதிரில் ஒன்றும் பேச முடியாமல், அவனை அழைத்துக் கொண்டு வெளி வராண்டாவிற்கு வந்தவள், ”இங்க எதுக்கு வந்தீங்க……?” என்றாள் அடிக்குரலில்.
அவளைப் பார்த்து சிரித்தவன், ”உன்கிட்ட இருந்து ஏதாவது ரெஸ்பான்ஸ் வரும்னு இவ்வளவு நாள் வெயிட் பண்ணேன். ஒன்னும் வராதுன்னு தெரிஞ்சப்புறம் அதுக்கான ஆக்ஷன்ல இறங்காம என்ன பண்ண சொல்ற?”
என்ன…..? நான் வேலைப் பார்க்கற இடத்துக்கு வந்து கலாட்டா பண்றீங்களா…….?
”ஏன் பெரிய வார்த்தையெல்லாம் பேசற பூர்ணி? நான் எங்க கலாட்டா பண்ணேன்……….? உன்னை பார்த்து, உன்கிட்ட பேசிட்டிருக்கேன்”.
”என்கிட்ட பேச என்ன இருக்கு? எதுவும் இல்ல. நான்தான் அன்னைக்கே உங்ககிட்ட, என் முடிவ சொல்லிட்டேன் இல்ல. ஏன்? புரிஞ்சுக்காம மேல மேல டார்ச்சர் பண்றீங்க……?”
”ம்ப்ச்…….., முதல்ல அமைதியா பேசு. ஏன் இவ்வளவு டென்ஷன்?” என்றான் கைகளை பேன்ட் பாக்கெட்டினுள் விட்டுக்கொண்டு.
”ஹ்ம்ம்….. டார்ச்சர் அது இதுன்னு பெரிய வார்த்தை யெல்லாம் பேசற”. குட். நல்லா பேசக் கத்துகிட்ட. நான் பார்த்த பழைய பூர்ணிமா…… இல்ல. இதுவும் நல்லாதான் இருக்கு……… என்று அவளை பார்த்து சிரித்துக் கொண்டான்”.
”இங்கயிருந்து கிளம்புங்க முதல்ல. கூட வேலை செய்றவங்க யாராவது பார்த்து என்ன? ஏதுன்னு? விசாரிக்கறதுக்கு முன்னாடி”.
கிளம்பு கிளம்புன்னு அதையே சொல்லிட்டிருக்காத…… ”எனக்கான பதில் உன்கிட்டயிருந்து வரவரைக்கும் நான் கிளம்பறதாயில்ல”…….
”என்ன பதில் சொல்லனும்? நான் ஏற்கனவே தெளிவா உங்ககிட்ட சொல்லியாச்சு. எதுவா………… இருந்தாலும் வீட்டுல பேசுங்கன்னு”.
அவங்ககிட்ட எல்லாம் பேசி எந்த ரெஸ்பான்சும் இல்லன்னுதான உன்னைத் தேடி வரேன். உடமையானவள் கிட்டயே நேர்ல பேசலாம்னு தான் உன்னை தேடி அலையறேன். நீயும் என் பொறுமைய சோதிக்கற. நானும் எவ்வளவு நாள் பொறுமையா…… நிதானமா….. இருக்கறது?
ம்ப்ச்.., நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என் பதில் ஒன்னுதான். ”வீட்ல என்ன சொல்றாங்களோ? அதுதான் என்முடிவு”.
”எனக்கு உன்னோட முடிவு தான் தெரியனும், அவங்க விருப்பமெல்லாம் எனக்கு முக்கியமில்லை. அவங்களுக்கெல்லாம் நீ ஏன் பயப்படற? நீ ஓகேன்னு சொல்லு, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”.
”திரும்ப திரும்ப அதையே ஸ்டுப்பிட் மாதிரி பேசறீங்க… எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா……? என்றாள் ஆத்திரத்தில்”.
அவனுக்கு அவளது வார்த்தைகளை கேட்டு கோவம் வந்தது. ”யாருடி ஸ்டுப்பிட்? அப்பா அம்மா இல்லாத அநாதை நாய் நீ……? இன்னைக்கு உன் அக்கா கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துகிட்டா நீ அவளுக்கு கூடப் பொறந்தவளாயிடுவியா…….. ?”
”இன்னும் எத்தனை நாளைக்கு அவள் உன்னை பார்த்துக்குவா……? எல்லாம் உன் சொத்தை உன்கிட்டயிருந்து பிடுங்கறதுக்கு போடற வேஷம். அன்பா இருக்கற மாதிரி, பாசமா இருக்கற மாதிரி ஆக்ட் குடுத்துட்டு இருக்கா…… அவள் நல்லவன்னு நீயும் நம்பிட்டிருக்கே”.
ஏதோ ”நல்ல பொண்ணா தெரியறயே, போனாபோகுது, அநாதையாச்சே, ஆதரவில்லாம இருக்கறயேன்னு, பாவப்பட்டா என்னையே பார்த்து ஸ்டுப்பிட்னு சொல்வியா”……. என ஆத்திரப்பட்டான்.
”காலத்துக்கும் உன் அக்கா செய்வாளா? பார்த்துக்குவாளா? இல்ல லைப் புல்லா கூட வருவாளா……..? என்னைக்கா இருந்தாலும் உன்னை கட்டிக்கப் போறவன் தான் எல்லாம் பார்க்கனும் உனக்கு. நினைவுல வச்சுக்கோ”.
அவளுக்கும் அவனது வார்த்தைகளில் உஷ்ணம் வந்தது. ”அதை நான் பார்த்துக்கறேன்………., நீங்க கிளம்புங்க”.
”வீணா நீ என்னை பகைச்சுக்கற…… பூர்ணி. வேணாம்……. சொல்லிட்டேன். இது நல்லதுக்கு இல்ல”.
இதுக்கு மேல இங்க நின்னு என்னால வெட்டி கதை பேசிட்டிருக்க முடியாது, ”எனக்கு வேலையிருக்கு”… எனத் வகுப்பிற்கு திரும்பி நடந்தாள்.
”பார்க்கறேன்… டி, என்னைத் தவிர யார் வந்து உன்னை கல்யாணம் பண்றாங்கன்னு. மதிச்சு வந்து பேசுனா, திமிராவா பேசறே. இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப…..?” என சவால் விடுத்தவன் கிளம்பியிருந்தான் அங்கிருந்து.
அவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் அவள் காதிலேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அதற்கு மேல் அவளால் வகுப்பு எடுக்க முடியும் என தோன்றவில்லை இன்னும் பள்ளி முடிய அரைமணி நேரமே இருந்ததால் என்பதால் பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பியிருந்தாள்.
நல்லவேளை இவள் செந்திலுடன் பேசும் சமயத்தில் யாரும் பார்க்கவில்லை. நேயாகூட அவளது வகுப்பில் இருந்தாள். யாருக்கும் காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல் போனது.
பர்மிஷன் போட்டு பள்ளியை விட்டு வெளியே வந்தவள் ஆட்டோ பிடித்து நடராஜர் கோயிலுக்கு சென்றிருந்தாள். அந்த நேரத்திற்கு கோயில் திறந்திருக்க மாட்டார்கள் என்பது கூட நினைவு வரவில்லை அவளுக்கு. இருந்த மனநிலைக்கு கோயிலுக்கு சென்றால் தேவலை என நினைத்தவள் கோயிலுக்கு ஆட்டோவை விடச் சொன்னாள்.
அங்கு சென்ற பிறகுதான் கோயில் இன்னும் திறவாதிருப்பதைப் பார்த்தவள், தலையில் தட்டிக் கொண்டாள். அங்கிருந்த நிழலில் ஒதுங்கி நின்றவள், கோயில் திறப்பதற்காக காத்திருந்தாள்.
எங்கே செந்தில் தன் பின்னாடியே, தன்னை பாலோ செய்துகொண்டு வந்துவிடுவானோ என மனதில் அச்சமும் இருந்தது.
நான்கு மணிக்கு மேல் கோயில் திறந்தார்கள். கோயிலுக்குள் சென்றவள் சாமியைப் பார்க்கும் எண்ணம்கூட இல்லாமல், பிரமை பிடித்தவள்போல கோயிலை சுற்றி வலம் வரும் பாதையில், நிழல் இருந்த பகுதியில், ஒரமாக உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டாள்.
இதுவரை யாரும் அவளை அநாதை என்றெல்லாம் பேசியதில்லை. சிறு வயதிலிருந்து தாய் தந்தை இல்லாதது, அவளை வாட்டினாலும் பெரிதாக வருந்தியதில்லை. அவளது வாழ்வில் கடந்த மாதங்களாக நடக்கும் குழப்பங்கள், சச்சரவுகள் எல்லாம் அவளது மனதில் சஞ்சலத்தை உருவாக்கியிருந்தது.
தாய் தந்தை தன்னை அவர்களுடனே அழைத்து சென்றிருந்தால் தனக்கு இந்த மாதிரியான வேதனைகள் இருந்திருக்காதே என மனம் ஊசலாடியது.
அதுவும் சில நாட்களாக தனக்கு தாய் தந்தை இருந்திருந்தால் இப்படி தன்னை தவிக்க விட்டிருக்க மாட்டார்களோ, என்ற தவிப்பு ஏக்கமாக மாறியிருந்தது. அந்த நினைவுகளின் தாக்கத்துடன், இப்போது செந்தில் பேசியதும் சேர்ந்து கொள்ளவே அவளுக்கு மனதில் வலியும் வேதனையும் அதிகமாகியது. ஆதலால் தான் என்றும் இல்லாமல் இன்று தனியாக கோயிலுக்கு வந்திருந்தாள்.
கோயிலுக்குள் வந்தவளுக்கு சாமி தரிசனத்திற்கு செல்லகூட மனமில்லை. மனமெல்லாம் பாறாங்கல் வைத்து அழுத்தியது போல் பாரமாக இருந்தது. இருந்த ஆத்திரத்திற்கு பேசாமல் இவர்களையெல்லாம் விட்டு எங்கேயாவது சென்று விடுவோமா என்று கூட நினைக்க தோன்றியது.
எத்தனை நேரம் அப்படியிருந்தாள் என அவளுக்கே தெரியாது. தன் பக்கத்தில் யாரோ நின்று தன்னை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு வரவும் கண்ணைத் திறந்து பார்த்தாள்.
எதிரில் மதுசூதனன் நின்று கொண்டிருந்தான் அவளையே பார்த்துக் கொண்டு. அவனைப் பார்த்ததும் எழ முயன்றவளை கைக் காட்டி அமர சொன்னவன், என்ன பேசுவது என்று தெரியாமல் தயக்கமாக நின்றிருந்தான்.
அவளை பார்த்து சிரிக்க முயன்றவனுக்கு, சிரிக்கவும் தயக்கமாக இருந்தது. ஏனோ அவளைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது அவனுக்கு. பூர்ணிமா அழுகையை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பது பார்த்தாலே தெரிந்தது.
இன்று பிரதோஷம் என்பதால் கோயிலுக்கு வந்தவன் சாமி தரிசனம் முடித்து கோயிலை வலம் வரும் போது அவளைப் பார்த்தான். சட்டென அவளை பார்த்த ஆர்வத்தில், வேகமாக வந்துவிட்டான். அருகே வந்ததும்தான் அவனது மனது, என்னன்னு ”இப்ப அவள்கிட்ட பேசுவ…..? என கேள்வி எழுப்பியது”. ஆமாம் இல்ல என திரும்ப இருந்தவனை, ”அவளது வாடிய தோற்றம், அவளிடம் பேசாமல் நகர விடவில்லை”.
தொடரும்.
error: Content is protected !!