Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 9

மைவிழி – 9

திருமண நாள் நெருங்கியது. சரஸ்வதிக்கும், சத்யநாதனுக்கும் சொந்தங்கள் அதிகமென்பதால் நேரமில்லாது திருமணப் பத்திரிகை கொடுப்பதில் அலைந்து திரிந்தனர்.



Advertisement

வேதவியும் மாலை வகுப்புக்களுக்கு செல்வதில்லை. ஞாயிற்று கிழமை திருமணம் என்பதால் அந்த வார வெள்ளியோடு லீவ் சொல்லிவிட்டிருந்தாள்.

அன்று திருமணத்திற்கான உடைகளும், நகைகளும் எடுக்க சென்றிருந்தனர். சரஸ்வதி வர முடியாததால் சங்கரியுடன் சென்றிருந்தாள் வேதவி.

Advertisement

Advertisement

வாசன் வீட்டுப் பெண்களும் வந்திருக்க விஜியும் சௌந்தர்யாவுமே இவளுடன் பேசினர்.

வாணி என்னவோ போல் முகத்தை வைத்துக் கொள்ள, கௌசல்யா அமைதியாக இருந்தாள். இதையெல்லாம் கண்டு கொண்டாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை வேதவி.

Advertisement

புடவை எடுக்கும் போது மாத்திரம் அவள் நிறத்தை வைத்து அதையும் இதையும் சொல்லிக் கொண்டிருந்தாள் வாணி.

வேதவிக்கு மெரூன் கலரில் ஒரு புடவை கண்ணைப் பறிக்கவும், ஆசையாக அதை தன் மேல் போட்டு பார்த்தவளிடம்,

“உன் கலருக்கு டார்க் கலர்ல புடவை போட்டா, இன்னுமே நீ மங்களாத் தான் தெரிவ வேதவி” என்றாள் வாணி.

சுறு சுறுவென வந்தது இவளுக்கு. பட்டென காரமாய் பதில் கொடுக்க வந்தவளை கை பிடித்து தடுத்தது என்னவோ சங்கரி தான்.

“கல்யாணம்னா இப்படித் தான் ஆயிரம் இருக்கும் வேதா! நீ வாணி மாதிரி ஆட்கெல்லாம் கண்டுக்காதே. உன் கிட்ட மாப்ள எப்டி இருக்காருன்னு மட்டும் பாரு” என சமாதானம் செய்தார்.

கீர்த்தி வாசன் என்ற ஒருவனுக்காகவே அத்தனை பொறுமை காத்தாள் வேதவி.

போதாதென்று கடையில் வைத்து இவள் காது படவே,

“இந்த கீர்த்தி தான் காதல் தோல்வில அறிவு கெட்டுப் போய், இந்த பொண்ணை பிடிச்சிருக்குன்றான்னா! நம்ம மாமனாரும் மாமியாரும் அதுக்கு மேல இருக்காங்க” என சௌந்தர்யாவிடம் கிசுகிசுத்த வாணி,

“எல்லாம் உங்க அப்பாவ சொல்லனும்!வேற பொண்ணே கிடைக்கலயா உன் தம்பிக்கு பார்க்கறதுக்கு”என்றாள், கௌசல்யாவிடம்.

வாணி, நேரடியாகவே பேசினாலே காதில் போட்டுக் கொள்ள மாட்டாள் வேதவி. இதில் இப்படி கேட்க வேண்டுமென்று கிசுகிசுத்ததை கேட்டிருப்பாளா என்ன?

இவள் காதில் முன்பாதியும் பின் பாதியும் ஓரளவு விழுந்தாலும் ‘என்னவோ பேசுகிறார்கள் பேசிக் கொள்ளட்டும்’ என நினைத்துக் கொண்டவள், நீயெல்லாம் எனக்கொரு ஆளா என வாணியைப் பார்த்து வைத்தாள்.

அன்றிரவு இவளே வாசனை அழைத்து,

“உங்கண்ணி ரொம்ப பேசுறாங்க. எனக்கு வர்ற கோபத்துல எதனா சொல்லி வெச்சிட போறேன்” என அவர்கள் மீதுள்ள எண்ணத்தை மறைக்காமல் சொன்னாள்.

வாசனும் கேட்டுக் கொண்டானே தவிர்த்து இவளை சமாதானப்படுத்தவோ, அவர்கள் வீட்டுப் பெண்கள் பக்கம் நிற்கவோ இல்லை.

“யார் எப்டி நடந்து கிட்டாலும் நம்ம உறவுகளுக்குள்ள பிரிவு வரக் கூடாது வேதவி” என்றான்.

அதிலே அவன் உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டாள் பெண். 

அந்த வகையில் வேதவி கொஞ்சமே கொஞ்சம்(!) அலட்சியமானவள் தான்.

இவள் அதையும் சொல்லி விட்டு அமைதியாக, சிரித்தவன்,

“சரி அதெல்லாம் விடுங்க மேம்சாப்(medam ji). புடவை உனக்கு புடிச்ச மாதிரி எடுத்தியா?”என்றான்.

“ஹ்ம்ம்” என்றாள் வேதவி.

“என்ன ஹ்ம்ம்? நானும் என்னடா நம்ம பொண்ணே கால் பண்ணுதே ஒரு நிமிஷம் ‘அழைப்பது நீதானா நிஜம் தானா’ ரேஞ்சுக்கு நினைச்சிட்டேன்!” என பாட்டோடு கேலி பேசியவன் ஹம் செய்ய,

“உங்களோட..!”செல்லமாய் சலித்துக் கொண்டாள் இவள்.

“என்னோட.. ம்ம்ம் சொல்லுங்க ஜி?”

“இப்போ பாடுனீங்களே பாட்டு அது எந்த படத்துல வருது?”

“யாருக்கு தெரியும். மொதல்ல இப்படி பாட்டுருக்குன்னே தெரியல” என சிரித்தவன்,

“என்ன?” என்றவளின் திகைப்பை பொருட்படுத்தாது,

“பேச்சை மாத்தாம சொல்லு வேதா! என்னோட?” என விடாமல் வம்பு செய்தான் வாசன்.

“ஹா, உங்களோட தான் கல்யாணம்னு சொல்ல வந்தேன்”

“ரைட்!கல்யாணப் பொண்ணை பார்க்கணுமாம் வீடியோ கால்ல வா வேதவி”என்றவன் கட் செய்து விட்டு, வீடியோ காலில் அழைப்பு விடுத்தான்.

“பதினொன்னுக்கே தூங்கிடணும். அப்பா திட்டுவாரு ஆட்டுக்குட்டி திட்டுவாருன்னு சொன்ன புள்ளை!இப்ப 12 மணிக்கு மேலயாகுது இவர” என பொருமியபடியே தான் அட்டென்ட் செய்தாள் வேதவி.

அவள் இதழசைவில் கண்டு கொண்டவன், “என்னவாம்?” என மிரட்டல் கலந்த முறுவலிப்புடன் கேட்க,

“எனக்கென்ன உங்ககிட்ட பயமா?” என்றவள், அதை சொல்லிக் காட்ட அட்டாகாச சிரிப்பு வாசனிடம்.

“இப்போ அப்படியெல்லாம் இருக்க முடியாதுன்னு அப்போ எனக்கு தெரியல பாரேன்”என குறும்பாய் பார்த்தான்.

“ஷப்பா உங்களோட..!”

“என்னோட..”

“zip it!” அவள் மிரட்டலில் கப்பென வாய் மூடிக் கொண்டான் வாசன். 

நமட்டுச் சிரிப்போடு போனைத் தள்ளி வைத்து விட்டு சம்மணம் கொட்டி அமர்ந்தாள் இவள்.

“வேதவி” என மென்குரலில் சொன்னவன் அப்போது தான் முழுதாய் திரையை நிறைத்தவளை ஆழ்ந்து பார்த்தான்.

கரு கரு நாகமென நீண்ட அடர்ந்த கூந்தலை ஒற்றை பின்னலிட்டு வலது பக்கம் தோளின் வழி நதியென நீண்டு கிடக்க,மெல்லிய விளக்கொளியில் தங்கமாய் மினுமினுத்த முகம் முழுவதும் வெட்கப் புன்னகையும், அவள் பேசும் ரிதத்திற்கேற்ப அசையும் அவன் வாங்கி கொடுத்த ஜிமிக்கியும் என கண்களை நிறைத்தவள், மெது மெதுவாய் கீர்த்தி வாசனின் மனதையும் நிறைத்துக் கொண்டிருந்தாள்.

ஆழ்ந்த பார்வை எப்போது ரசனையாய் மாறியது என அவன் அறியான்! பாவம், திணறிப் போனதென்னவோ வேதவி தான்! அவனின் அசையாப் பார்வையின் வீரியம் கன்னத்தை குறுகுறுக்கச் செய்ய,திணறித் தவித்து கீழ் இதழை கடித்து விடுவித்தவள், பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து அமர்ந்த வாக்கிலே கட்டிக் கொண்டு முகம் புதைத்து விட்டாள்.

“ஜி,வேதவி”என்றவனின் சிரிப்புடனான அழைப்பில் நிமிர்ந்தவள் அவனை முறைக்க முயன்று தோற்றவளாய் மீண்டும் முகம் புதைக்க,

“அழகுடா நீ” என்றான் ஆர்த்மார்த்தமாய்.

தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவள்,

“பிளர்ட் பண்றீங்களா வாசன் ஸார்? சும்மா பொய் பொய்யா சொல்றீங்க” என்றாள்.

“மீ பிளர்ட் யூ?”என ஒவ்வொன்றுக்கும் விரலை நீட்டி கேட்டவன்,

“அதெல்லாம் எப்பவும் செய்றது தானடா! ஆனா இது நிஜம்டா வேதவி”என்றான் கொள்ளைப் புன்னகையுடன்.

“என்னவோப்பா! ஆனா இங்க என்னை கருப்புன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணவங்க தான் அதிகம். அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஆனாலும் நீங்க சொல்லும் போது நம்ப முடியல. சும்மா கல்யாணம் பண்ண போற பொண்ணுகிட்ட சொல்லி வைக்கனும்னு சொல்றீங்களோன்னு தான் தோணுது” என தலையணையில் முகம் சாய்த்தபடி சாதாரண குரலில் கூறினாள் பெண்.

மென்மையாய் மாறி விட்ட முகத்துடன்,

“அழகுன்னா என்ன நினைக்கற வேதவி” என கேட்டான் வாசன்.

வேதவி அமைதியாய் பார்க்கவும்,

“நீங்கள் அழகென்றால் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது யாரை பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள் தான்” என்றவன்,

“ஜெயகாந்தன் ஸார் சொன்ன இந்த வரிகள் எத்தனை உண்மை இருக்குல்ல வேதா? நம்ம மனசுக்கு இன்பம் தர்ற அத்தனையும் அழகுடாம்மா” என்றவனும் பேரழகனாய் தான் தெரிந்தான் வேதவிக்கு.

அவனிலிருந்து விழியகற்ற முடிவில்லை இவளால்.

“டீச்சர்! இப்ப நீங்களே இப்படி பார்த்து வெச்சா வெட்கம் வராதா எனக்கு?” என கேலி பேசினான் வாசன்.

அழகாய் புன்னகைத்தாள் வேதவி.

“டே,பாரேன்! சொல்ல வந்ததை விட்டுட்டேன்”என்றவன்,

“என்ன?”கேட்டவளிடம்,

“கல்யாண நாளும் நெருங்குதே”என சிரிப்புடன் பார்த்தான்.

“ஆமாவாம்,அதுக்கு?”

“கல்யாணப் பொண்ணுக்கு ஆசை இருந்தா நிறைவேத்தி வைக்கனுமாம்”

“ஓஹோ!”

“எங்கிட்ட உனக்கு எதுவும் சொல்லனுமா வேதா? இருந்தா சொல்லிடுப்பா” என்றான்.

அத்தனை இனிப்பாய் சென்று கொண்டிருந்த இவர்களின் உரையாடலை கசப்பாய் மாற்றும் கேள்வியே இது தானே அப்போது அறிந்திருக்கவில்லை இருவரும்.

“ஹ்ம்ம், அவசியம் சொல்லனுமா?”என்றாள் வேதவி.

“டெல் மீ மேம் சாப்!”

“நான் சொல்லிடுவேன். அப்பறம் மாட்டேன்னு சொல்லக்கூடாது?”

“அப்போ ஏதோ இருக்கு ரைட்?”

“ம்ம்”

“புதிர் போடாம சொல்லிடு வேதா” என லேசான டென்ஷனில் தாடியை நீவிக் கொண்டான் வாசன்.

திரையில் அவனை சுட்டிக்காட்ட,

“என்ன?” புரியாது கேட்டான்.

“உங்க தாடி!” என்றாள் வேதவி.

“ஆமா என் தாடி தான்”

“ப்ச், உங்களுக்கு பியேர்ட் நல்லாத் தான் இருக்கு. ஆனா என்னவோ..லவ் பெயிலியர்ல வெச்சிட்ட மாதிரி என்ன இவ்ளோ? நம்ம கல்யாணத்தன்னைக்கு கிளீன் சேவ் பண்ணி கத்தையா மீசை மட்டும் போதும்” என்றாள் தான் இத்தனை நாளாய் கேட்க வேண்டுமென்று மனதினுள் வைத்திருந்ததை.

ஆனால் வாசனுக்கு தான் அவன் கேட்ட வார்த்தைகளிலிருந்து மீள முடியவில்லை.

‘லவ் பெயிலியர்ல வெச்சிட்ட மாதிரி’ என்ற வேதவியிடம் எத்தனை இன்னொசென்ட்ஸ்.

அவன் பதிலில்லாமல் இருப்பதை கண்டு,

“அப்போ செய்ய மாட்டீங்களா?”எனக் கேட்டாள்.

இவள் என்ன கேட்கிறாள் எனப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, வேதவிக்கு உண்மை தெரிந்திருக்குமா என சந்தேகமே வந்து விட்டது.

தன் காதல் தோல்வி பற்றி தெரிந்திருக்க கூடுமெனின், அதனால் தான் தாடி சுமந்திருக்கிறேன் என தெரியாமல் போனாளா? இல்லை யோசிக்க மறந்தாளா?

அப்போது வைத்தது தான் என்றாலும் இதை எடுக்க தோன்றியதில்லை வாசனுக்கு.

இவன் அமைதியில்,

“என்ன கேட்டுட்டேன்னு இப்படி என்னை பார்த்து வைக்கறீங்க வாசன்? முகமெல்லாம் டல்லாச்சு?” என்றவள்,

“சரி உங்களுக்கு வேணாட்டி விடுங்க. ஏனோ இதை கேக்கனும்னு தோணிச்சு கேட்டேன். அதுமில்லாம fbல ரெண்டு வருசத்துக்கு முன்னாடி உள்ள போட்டோஸ் பார்த்தேன். அதுல கிளீன் சேவ் பண்ணி சின்ன பையன் மாதிரி இருந்தீங்க. எனக்கு வந்த வரன் போட்டோஸ் ரெண்டுமே நீங்க தாடியோட இருக்கிறது தான்” என இன்னுமின்னும் அவள் பேசிக் கொண்டே போக, வாசனின் இதயத்தை இறுக்கிப் பிடித்ததது அவள் வார்த்தைகள்.

உட்சபட்ச தவிப்பில் ஏறி இறங்கிய ஆடம்ஸ் ஆப்பிளுடன் எச்சில் கூட்டி விழுங்கினான் கீர்த்தி.

“என்ன வாசன்?”என்றாள் இவளும் கூர்ந்து அவனை நோக்கி.

“வே.. வேதா எனக்.. லவ் பெயிலியர்..” என்றவன் வார்த்தைகள் தொண்டைக் குழியிலே சிக்கிக் கொண்டது.

தடுமாறினான் அவன். அத்தடுமாற்றம் அவளையும் தடுமாறச் செய்தது.

அப்போது தான் என்னவோ வேதவியும் நினைவு வந்தவளாக,

“வா..வாணி அக்காவும் இன்னைக்கு கடைல வெச்சு ஏதோ காதல் தோல்வின்னு பேசிக்கிட்டாங்க. நான் யாருக்கோனு நினைச்சு கண்டுக்காம இருந்துட்டேன். உங்.. உங்களுக்கு அப்படி எதுவும் இருக்கா வாசன்?லவ் பெயிலியர்?” என்றாள் அவன் முகம் பார்க்க முடியாது.

அப்படியொன்றுமே இல்லாதவனிடத்து தான் அதிகமாய் கேட்கப் போய் தப்பா நினைத்து கொள்வானோ என. இருப்பினும் அவன் தடுமாற்றங்கள் எதையோ உணர்த்த விளைவதை போலிருக்கிறதே?கண்டதையும் நினையாத மனமே!

ஆனால்,அவள் கேள்வியில் உள்ளுக்குள் கசிந்து கொண்டிருந்தவன் மனம், நிலை கொள்ளாமல் தவிக்க தொடங்கியது, பேரிரைச்சலைக் கொண்ட பேராழியாய்!

ஆக வேதவிக்கு எந்த உண்மையுமே தெரிந்திருக்கவில்லை.

அவளின் அறியாத பேச்சும், கண்களில் தென்பட்ட பரிதவிப்பும் அப்பட்டமாய் அதை வெளிக்காட்டி நிற்க அதற்கு மேல் வாசனுக்கு அவள் முகம் பார்க்க முடியவில்லை.

அந்த கண்களின் அலைப்புறுதல் ‘அப்படி சொல்லி விடாதே’ என்பதை போலிருக்க, கைகள் நடுங்க அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் வாசன்.

“ஷிட்! வாசா” தன்னையே நிந்தித்துக் கொண்டான் இவன்.

ஆனால் வேதவிக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவன் ஒவ்வொரு அசைவுகளையும் ஆசையாய் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தவளுக்கு இறுதியாய் அவனிருந்த கோலமும், தவிப்பும் தடுமாற்றமென தன்னையே பார்த்ததும் எதையோ புரியச் செய்வதாய்.

அவன் முடிக்காமல் விட்ட வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கோர்க்க முயற்சித்தாள் வேதவி. அதில் வெற்றி கண்டு கிடைத்த பதிலில் இதயமே அலண்டது போலான வலி. அப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே பிடிக்காமல் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டாள் வேதவி.

மீண்டும் வாசனுக்கு அழைத்தாள்.

அவளிடமிருந்த வந்த அழைப்பை வெறித்துக் கொண்டிருந்தானே தவிர்த்து சுத்தமாய் எடுத்துப் பேசும் அளவுக்கு தைரியமில்லை அவனிடம்.

வேதவி கேட்கப் போகும் கேள்விகளுக்கு பதிலிருந்தாலும் நிச்சயமாய் அந்த பதில்களின் தாக்கம் தங்கள் திருமணத்தை பாதிக்கும் என அறியாமலில்லை அவன். அதுக்கென்று இனியும் அவளிடம் சொல்லாமல் இருக்க போவதில்லை

“பிக்அப் வாசன்” மீண்டும் மீண்டும் அழைப்பு அவளிடமிருந்து.

“என்னால சத்தியமா உன் முகம் பார்த்து பேச முடியாது வேதாம்மா” என குறுஞ்செய்தி அனுப்பினான்.

மற்றவர்களை நம்பி எத்தனை பெரிய பிழை செய்து விட்டான். அன்றே இவளிடம் நேரடியாய் இது பற்றி பேசிருக்க வேண்டும். மன்னாங்கட்டி தயக்கம்! அது இல்லையெனின் இப்படி ஒரு சமயமே வந்திருக்காதே.

தன் மேல் தான் தவறை சுமத்திக் கொண்டான் வாசன். தன் பக்கத்தவர்கள் மறைத்திருக்க வாய்ப்பில்லை எனப் புரிந்தது அவனுக்கு. ஆனாலும் வேதவியின் பக்க உறவுகளையும் சாட முடியாதே அவன். முழுக்க முழுக்க தன் பிழை தான். அவளுடன் தானே பேசா விட்டதன் மடத்தனம்.

“பேசனும் வாசன். இன்னைக்கே பேசிடலாம்” எனும் குறுஞ்செய்தி வேதவியிடமிருந்து. அதைத் தொடர்ந்து சாதாரண போன் கால் அழைப்பு.

தன்னை சரி படுத்திக் கொண்டு அழைப்பை ஏற்றான் வாசன்.

சற்று நேரம் இருபக்கமும் மௌனங்களை தாங்கிய மூச்சு சத்தங்கள் மட்டுமே குரலாய் இருந்தது.

எத்தனை எத்தனை கனவுகள் பெண்ணவளிடம். முதலில் திருமணத்தில் பிடித்தமில்லாமல் இருந்தவள் தான். நாளாக நாளாக திருமணம் கூடியதும், அவள் வாழ்க்கையில் வசந்தமாய் வாசனின் வரவும், அவன் பேச்சும், குணமும் என மெல்ல மெல்ல கல்யாணக் கனவுகள் அவளையும் வாரிக் கொண்டது.

அதிலும், இந்த சில நாட்களாய் உரிமைப்பட்டவன் என்றதை தவிர்த்து மெல்லமாய் மொட்டவிழத் தொடங்கிருந்தது வாசன் மேலான நேசம்!அவளின் முதல் காதல் அவன்.

ஆனால் அவனது முதல் காதலாய் தான் இல்லை என்பது பெண் நெஞ்சத்தை அசைத்திருந்தது. அதையும் மறைத்து சொல்லாமல் விட்டது தான் பெரும் வலியைக் கொடுத்தது. எத்தனை சமாதானம் செய்தும் இதயம் கேட்பதாய் இல்லை.

தங்கள் பிரியங்கள் அனைத்தையும் உரிமையாகப் போகும் ஒருவனுக்காய் சேர்த்து வைத்திருக்கும் சாதாரண பெண்களின் எதிர்பார்ப்பு தான் வேதவியிடம்.

“இன்னும் எப்டி என்னை ஏமாத்த போறீங்க வாசன்?” என பொறுமையின்றிய குரலில் கேட்டு விட்டாள் வேதவி.

“வேதா!!” அதிர்ச்சி அவனிடம்.

பொறுமை பொறுமை என தனக்கு தானே சொல்லிக் கொண்டாலும் அது வர மாட்டேன் என்றது அவளிடம்.

“கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டு பிடிச்சுட்டேன்னு உங்களால ஜீரணிக்க முடியல ரைட்?”

“….”

“இன்னைக்கு நான் கேட்டிருக்கலைன்னா கடைசி வரைக்கும் இது எனக்கு தெரியவே வந்திருக்காதுல்ல”

“….”

“இத்தனை பொய் பித்தலாட்டத்தோட.. ச்சேஹ்”

“…”

“முன்னாடியே சொல்லிருக்கலாமே வாசன்?”

“மறைக்கனும்னு நினைக்கலை வேதவி” அழுத்தமாய் சொன்னான் வாசன்.

“சொல்லனும்னும் நினைக்கலையே வாசன்?” என்றாள்.

“….” தளர்ந்து போய் விட்டான் அவன். இப்போது தான் எதை சொன்னாலும் வேதவிக்கு பொய்யனவே தெரியும் என புரிந்தது.அவளே பேசட்டுமென அமைதியாய் இருந்தான்.

“இவ.. இவளை இந்த கருப்பியை யாரு கட்டிக்க போறா? இதெல்லாம் சொல்ல அவசியமிருக்கான்னு நினைச்சிருப்பீங்கல்ல?”

“நீங்களும் உங்க குடும்பமும் சேர்ந்து நல்லாவே எங்களை ஏமாத்திட்டிங்கல்ல?”எனக் கேட்க,

“ஜெஸ்ட் ஷட் அப் வேதவி” என உருமினான் வாசன்.

“என்ன ஏமாத்திட்டாங்க? எப்படியெல்லாம் பேசற ராஸ்கல்” என பல்லைக் கடித்தவன், தானும் நிதானம் தவறுவது புரிந்து

“நாளைக்கு பேசலாம் வேதவி!” என்றான் தன்மையாக.

“ஏன் நாளைக்கு எதனா பொய் சொல்லி ஏமாத்தலாம்னு இருக்கீங்களா?” என கோபமும் கண்ணீருமாய் கேட்டவள்,

“இதுக்கு உங்க வீட்ல உள்ள எல்லாரும் உடந்தைல்ல?!” என்றாள் வேதவி.

நிதானம் தவறினான் வாசன்.

“வேதவி, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின..”என்று மூச்சு வாங்கியவன்,

“எனக்கு மட்டும் இந்த கல்யாணத்துல கஷ்டம் இல்லையா?”என்று விட,வேதவிக்கு கன்னத்திலிருந்து இறங்கி விட்டது கண்ணீர்.

“யாருமே மறைக்கல, யாருமே உடைந்தயும் இல்ல!”

“எங்க வீட்ல உள்ளவங்க எ.. என் லவ் பெயிலியர் பத்தி சொல்லித் தான் உன் வீட்ல சம்மதம் கேட்டதே”என சொல்லியே விட்டான்.

“ப்ச், அவ”என்றவன் நிறுத்தி அழுந்த தலைகோதி,

“எப்டி புரியவைக்கிறது தெரியல உன்கிட்ட! இப்படி சொல்லக் கூடாது நான். ஆனா இதையுமே சொல்லாம இருந்தா நான் சரியில்ல” என்று ஏதோ பேசினான் வாசன்.

அவன் பேசப் பேச சில்லு சில்லாய் உடைந்து கொண்டிருந்தாள் வேதவி. 

“உனக்கு விருப்பம் இல்லைன்னா இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு வேதவி”என்றதோடு அழைப்பை துண்டித்து விட விக்கித்துப் போனாள் பெண்.

இரவு முழுவதும் ஒரு பொட்டு உறக்கமில்லை வேதவிக்கு.

கண்களை மூடுவதும், கண்ணீர் சிந்துவதும், அலைபேசியை வெறிப்பதுமாக இருந்தவள் அதிகாலை ஐந்து மேல் தான் தூங்கினாள். மணி எட்டாகிருக்க சரஸ்வதியும் இவள் அறை கதவை தட்டி விட்டு சென்றிருந்தார்.

திடீரென கேட்ட சத்தத்தில் கண் விழித்தாள்.விரக்திச் சிரிப்போடு கையிலிருந்த அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தவளின் கண்கள் கண்ணீரை நிறுத்தி விட்டிருந்தது. 

அழுததின் அடையாளமாய் கண் இமைகள் தடித்து, அவள் குண்டுக் கன்னங்கள் மேலும் வீக்கத்தை தத்தெடுத்திருந்தது.

‘உனக்கு விருப்பம் இல்லைன்னா இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு வேதவி!’கடுமையும் அழுத்தமுமாய் அவன் உரைத்தது இன்னும் செவியில் கேட்டிக் கொண்டிருக்கும் உணர்வு வேதவிக்கு. எதிர்பார்ப்பு மொத்தமும் ஏமாற்றமாய் மாறியதன் விளைவில் மீண்டும் சுருக்கெனும் வலி நெஞ்சை தாக்க, கண்ணீர் அது பாட்டுக்கு உற்பத்தியாயிற்று.

அதில் தன்னையே வெறுத்தவளாய், கண் சிமிட்டி அதைத் தடை செய்தவள்,

“இந்த வேதவி அழ மாட்டா” தன்னுள்ளே முணுமுணுத்தபடி முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தமர்ந்தாள்.

‘எனக்கு மட்டும் இந்த கல்யாணத்துல கஷ்டம் இல்லையா?’

‘என் பழைய வாழ்க்கைல இருந்து வெளிய வரணும்னு நினைக்கிறேன். இன்னுமே அவளை, எ..என் சஞ்சனாவை மறக்க முடியல வேதவி! புரிஞ்சிக்கோயேன்’ கீர்த்திவாசன் கொட்டி விட்டு சென்றவை அனைத்தையும் மனமும்,மூளையும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க, கையில் அகப்பட்ட தலையணை அனைத்தையும் தரையில் தூக்கி எரிந்தாள்.

எப்படியெல்லாம் சொல்லி விட்டான் அதுவும் தன்னிடமே!ஆறவே இல்லை வேதவிக்கு.

அதிலும் அவன் இதைச் சொல்லிருக்கவில்லை என்றால், கடைசி வரையும் தன் குடும்பம் மொத்தமும் தன்னிடம் இதை மறைத்து தான் இருப்பார்களே என்ற எண்ணம் எழுந்து கோபத்தை கொடுத்தது அவளுக்கு.

“எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்!யாரும் என்னை கஷ்டப்பட்டு கட்டிக்க வேணாம்” கோபாமாய் சொல்லிக் கொண்டவள்,எழுந்து விறுவிறுவென வெளியில் சென்றாள்.

இன்னும் ஆறு நாட்களில் திருமணம் எனும் நிலையில் அதற்கான வேலைகள் வீட்டில் ஜரூராக நடந்து கொண்டிருக்க, ஹால் சோபாவில் அமர்ந்தபடி கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்த தாயின் முன் போய் நின்றாள்.

நிமிர்ந்து பார்த்த சரஸ்வதி மகளின் அழுத முகத்தைப் பார்த்து பதட்டமாகி கை பிடிக்க வர,

“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் ம்மா”என்றாள் அழுத்தமாய்.

“என்ன பேசற வேதா!”என அதட்டினார் சரஸ்வதி.

அதுவரை திடமாக இருந்தவளுக்கு கண்ணீர் வழிய, “எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம். பிடிக்கல!” என்றாள் குரலை உயர்த்தி.

அச் சத்தத்தில் வீட்டிலிருந்த சொந்தங்கள் இவர்களைப் பார்க்க,

“வேதா”என அடக்க முயற்சி செய்தவரை நகர்த்திக் கொண்டு முன்னே வந்த சத்யநாதன் மகளின் கன்னத்தில் அறைந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!