Skip to content
Post Views: 1,069
மைவிழி – 12
கணவன் கேள்வியில் திணறிய வேதவி நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டாள். அவனை முறைக்க முடியாது நாணம் வந்து தடுக்க, புத்தகத்தை பார்ப்பது போல் தலையைக் குனிந்து கொண்டாள்.
Advertisement
லேசாக அவள் பக்கம் தலையை சரித்த வாசன், புருவம் உயர்த்தியபடி
“என்ன செய்வாங்களாம்?”என மீண்டும் வினவ,
Advertisement
Advertisement
தலை நிமிர்த்தியவள் அவனை ஓரக் கண்ணால் நோக்கிய படி,
“என்ன செய்வாங்கன்னு தெரியாதவங்க தான் முதல்ல படிக்க புக்கை எடுத்தாங்கலாம்?”என்றாள் சத்தமான முணுமுணுப்புடன்.
Advertisement
வரப் பார்த்த சிரிப்பை அடக்கிக் கொண்டவனாக,
“அப்போ வேற பாடம் படிக்கலையாம் போலையே?” எனக் கூறி தன் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைக்க பதறி விட்டாள் பெண்.
“வா..வாசன்”காற்றுத் தான் வந்தது வேதவிக்கு. என்னவோ துடுக்காக பேசி விட்டாலும், இப்போது வேண்டும் என்றே அவள் பக்கம் இன்னும் அவன் தன்னுடலை சாய்க்கவும்,
“எ.. என்ன இது? பேச்சு பேச்சா இருக்கனும். சின்ன புள்ளைத் தனமால்ல இருக்கு!”என மிரட்டினாள் அவள்.
அவனை நோக்கி நீண்டிருந்த மனைவியின் விரல்களை பற்றிக் கொள்ள மனம் பரபரக்க இப்போது பதறிப் போனான் இவன்.
விரல் பற்றினால் தீப் பற்றிக் கொள்வது நிச்சயம்!
தாடியை நீவி,தலையை கோதியென தன்னையே அடக்கிய படி அவள் பக்கமிருந்து மெதுவாய் விலகினான் வாசன்.
“ம்ஹூம்!இவட்ட நான் அப்படி கேட்டிருக்கவே கூடாது”என சன்னமாய் முனகிய படி புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டான்.
கணவன் பார்வையையும், பதட்டத்தையும் பார்த்திருந்த வேதவிக்கு சிரிப்பு ஒரு பக்கமென்றாலும் நெஞ்சம் வேறு தடதடத்துக் கொண்டிருந்தது.
வாசன் அன்று சொன்னதையும் மீறி முன்னேற மாட்டான் எனத் தெரிந்தாலும் இந்த நிமிடம் தன் விரல்களில் நிலைத்திருந்த அவன் பார்வை பெண்ணவளை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கியிருந்தது.
அவள் வலது கையில் இருந்த பேனை வியர்வையில் குளித்திருக்க அதை புத்தகத்தின் மீது வைத்து விட்டு தன்னை ஆசுவாசம் செய்து கொண்டவள், வேண்டுமென்றே கணவனை சீண்டும் பார்வை பார்த்தாள்.
அவள் பார்வையைக் கவனித்து விட்டவன்,
“அப்படி பார்க்காத வேதா. அப்பறம் நீ படிச்ச மாதிரி தான்”என நேரடியாகவே சொல்லி விட, ‘ஹான்’ என திகைத்தவள், புத்தகத்தை எடுத்து முகத்தை மூடிக் கொண்டாள்.
வாசனின் சிரிப்பு சத்தம் செவிகளை நிறைக்க,முகத்தை விலக்கியவள் தானும் உடன் சேர்ந்து சிரித்தாள்.
சிரிப்பு நின்று விட்ட பிறகும் இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை.
உடலை நன்றாக கட்டிலில் சரித்த வாசன் படித்த வாக்கிலே அப்படியே உறங்கி விட, அவனது மெல்லிய குறட்டை ஒலி கேட்ட பின்பு தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் வேதவி.
நேரம் ஒன்றுக்கு மேலாகிருக்க அவன் முகப் பக்கமிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டவள் தன்னோடதையும் சேர்த்து அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு அவனைப் பார்த்தபடியே உறக்கத்திற்கு சென்றாள்.
வழமையாக எழுந்திருக்கும் நேரத்திற்கே முழிப்பு வந்து விட்டது வாசனுக்கு.
மனைவியைப் பார்க்க ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் அவள்.
இதழ்ப் பிரியா சிரிப்புடன் அவளைப் பார்த்திருந்தவனுக்கு நேற்றைய இரவின் தன் கேள்விக்கு மனைவின் திணறலும், அவள் பதில்களும் நினைவில் எழுந்து மேலும் சிரிப்பின் பரப்பளவைக் கூட்டியது.
என்னதான் இருவரும் சகஜமாய் பேசிக் கொண்டாலும் இன்னுமே வாசனுக்கு அவளை நெருங்க சிறு தயக்கமிருந்தது. அவளுக்குமே அப்படித்தான்.
அன்று சஞ்சனாவைப் பற்றி வேதவியிடம் சொல்லி விட்டாலும் அவளிடமிருந்து அதற்கு எந்தவித எதிர் வினையுமில்லை.
கலங்கிய கண்களை அடிக்கடி துடைத்தவாறு அவன் சொல்லிய கடந்த காலங்களை கேட்டுக் கொண்டாளே தவிர பேசி முடித்ததும் அழைப்பை துண்டித்திருந்தாள்.
ஆனால் இவன் மனது அவளிடமிருந்து ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்த்தது. அது எவ்விதத்திலும் நியாயமில்லை எனப் புரிந்தாலும் என்னவோ வேதவி மனதுக்கு வெகுவாக நெருக்கமாகி விட்டதால் அவள் பொறாமையாவது பார்க்க வேண்டும் போல் இருந்தது வாசனுக்கு. ‘சில்லி(silly) ஃபெல்லொவ்’ அவன் தனக்கே சொல்லிக் கொண்டது.
அடுத்த நாளே அவள் இயல்பு போல் வேறு பேச அவனும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
அதுவே இவன் தயக்கத்திற்கு காரணமாகிருந்தது.வெறும் பதினைந்து நாட்கள் தான் இருவரும் அறிமுகமாகி. இன்னுமே இருவரின் மனங்களும் சரிதான புரிதலிற்குள் வராமலிருக்க இப்போதைக்கு உடலின் இணைவுகளும் வேண்டாமென எண்ணினான் வாசன்.
வேதவியிடம் எதையோ எதிர் பார்த்து நின்றான் இவன். அது அவனுக்கே புரியாத பட்சத்தில் அவளை நெருங்குவது சரியில்லை என தனக்குள் சொல்லிக் கொண்டான். அதை அவளுக்கும் உணர்த்திருக்க, புரிந்து கொண்டாள் வேதவி.
இருவருக்குமே கண்ணுக்குத் தெரியாத தயக்கமெனும் கோடு இருக்க அதை இயல்பாக அழிக்க வேண்டுமென்று தான் நேற்று இவனே புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிப்பது போல் பாவலா செய்தது எல்லாம்.
இப்போது நினைக்கையில் அசடு வழிந்தாலும் உண்மையில் இருவருக்கும் படிக்க வேண்டி இருந்தது!
‘ஃபர்ஸ்ட் நைட்ல படிப்புக்காக படிச்ச கப்பிள்ஸ் நீங்களா தான்டா இருப்பீங்க!ஓவர்டா இதெல்லாம்’ என கேலி செய்தது அவனின் மனசாட்சி.
வாசனின் மோனநிலையைக் கலைப்பது போல் வேதவியின் கைபேசி சிணுங்கியது.
நேரத்தைப் பார்க்க ஐந்தாகி ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க, அவள் போனில் ஒலித்துக் கொண்டிருந்த அலாரமை அணைத்து விட்டவனின் விழிகள் மனைவியை உரிமையாத் தழுவி நின்றன.
இப்போது மீண்டுமாய் போன் ஒலிக்க அதன் சத்தத்தில் உறக்கம் கலைந்து விட்டாள் வேதவி.
கண்களைத் திறக்காமல் ஓய்ந்து போயிருந்த போனைத் தேடி கரத்தை அலைய விட்டவளின் கையில் சிக்கிக் கொண்டது வாசனின் வலது கரம்.
சட்டென கண்களைத் திறக்க அவள் முகத்திற்கு வெகு அருகில் அவன் முகம்.
மேலும் கண்கள் விரிய சிரத்தை பின்னுக்கு தள்ளி அவனைப் பார்க்க, சிறு முறுவலுடன் கண் சிமிட்டினான் வாசன்.
அதிலே தூக்கமெல்லாம் தூரப்போயிருந்தது பெண்ணுக்கு. காலையின் இதமான தரிசனத்திற்கு கரடியாய் அலைபேசி அழைப்பு.
இருவரின் இணைந்த கரத்திற்குள் இருந்தது கைபேசி.
பிடியைத் தளர்த்தாமல் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தவனிடமிருந்து வெட்கம் சூழ,தன் கையை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்ட வேதவி போனைப் பார்த்தாள்.
அழைத்திருந்தது அவள் அன்னை சரஸ்வதி.
“அம்மா தான்”என சின்னக் குரலில் அவனிடம் சொன்னவள்,அழைப்பை ஏற்று,
“ம்மா?”என்றாள் தூக்க கலையாத குரலில்.
“வேதா இன்னுமே எழுந்துக்கலையா டி நீ?” பரப்பரப்புடன் கேட்டார் சரஸ்வதி.
“ப்ச், ம்மா நைட் தூங்க லேட்டாச்சு!”என சிணுங்களுடன் பெண் சலிக்க, கேட்டுக் கொண்டிருந்த சரஸ்வதிக்கு வெட்கம் வந்து விட்டது.
மனைவியின் பேச்சில் வாசனுக்கோ உடல் குலுங்க அப்படியொரு சிரிப்பு.
‘ஐயோ வேதாஜி! என்னத்த சொல்லி வைக்கனும்னு தெரியாம பேசுறாளே..!’
அவள் இயல்பாய் தான் சொல்லிருந்தாள்.ஆனால் வேறு அர்த்தமாய் புரிந்து கொண்டிருப்பார் அன்னை என இவளுக்கெப்படித் தெரியும்.
“….”
“என்னம்மா சத்தத்தையே காணோம்?”என வேதவி கேட்க,
“டைமாச்சு. எழுந்துக்க!அப்படியே போய் தலைக்கு குளிடி”என படபடவெனக் கூறியவர், அழைப்பைத் துண்டித்து விட,
“இதச் சொல்லவா இந்தம்மா போன் பண்ணிச்சு. சரஸு ம்மீ”என பற்களை நறநறத்த படி கணவனை ஏறிட்டுப் பார்க்க, அடக்கப்பட்ட சிரிப்புடன் கீழுதட்டை கடித்தவாறு அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் வாசன்.
“என்ன.? எதுக்கு சிரிக்கறீங்க?” என கேட்டவள், அவன் பார்வை மாற்றம் கண்டு,
“காலைல என்ன பார்வை இது? கண்ண மூடுங்க”என அதட்டினாள் வேதவி.
அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை வாசனுக்கு. தலையணை மீது தலை வைத்து மல்லாக்காக படுத்தவன் சத்தமாய் நகைத்தான்.
“ஷ்ஷ்!ஸ்ஸ்ஸ். மெதுவா சிரிங்க வாசன். ஐயோ வெளில கேட்கப் போகுது”என பதறினாள் இவள். அவன் சிரிப்புக்கு அர்த்தம் தெரியாத கடுப்பு வேறு!
ஒரு வழியாய் ஆசுவாசமானவன், சிரிப்பு மிச்சமிருக்கும் குரலில்,
“அத்தைக் கிட்ட என்ன சொல்லி வெச்ச வேதா?”எனக் கேட்க,
“என்ன, என்ன சொல்லி வெச்சேன்? உண்மையைத் தானே சொன்னேன்! லேட்டாச்சு தூங்க.நீங்க தான் நைட் தூங்கவே விடல”என எகிறிக் கொண்டு வந்தவள், அதன் அர்த்தம் விளங்கியதும், ஐயோவென தலையணையில் முகம் புதைத்து விட்டாள்..
“நானா? நான் நைட் ஒன்னுமே செய்யலையேமா!”
“ஐயோ!வாசன் போதும்” என்றாள் அமிழ்ந்து விட்ட குரலில்.
அவன் மீண்டும் சிரிக்கத் தொடங்கி விட பதறி எழுந்து கொண்டவள், தன் தலையணையால் அவனை அமத்தினாள்.
“ஐயோ! கொலை கொலை!”என தலையணைக்குள் அலறினான் கீர்த்தி வாசன்.
“ஷ்ஷ்ஷ்!வாசு”
“நேத்து கட்ன புருஷனை இன்னைக்கு கொலை பண்றா! காப்பாத்துங்க”
“டேய்,கீர்த்தி வாசா”
“ஹா ஹா! போதும்டி மூச்சு முட்டுது”என சொல்லவும் தான் அவனை விடுவித்தாள் பெண்.
அவள் எழுந்து அமர, மூச்சு வாங்கியபடி தானும் எழுந்து அமர்ந்து கொண்டான் கீர்த்தி.
வேதா கணவனை முறைக்க,
“நான் என்ன செஞ்சேன்?நீ பேசிட்டு என்ன முறைக்கிற” என சீண்டினான்.
“உங்களை”கழுத்தை நெறிப்பது போல் வேதவி பாவனை செய்ய,
“என்னை?”என்றான்.
“நீ.. நீங்க நைட்டு குறட்டை விட்டு என்னைத் தூங்க விடல.அதைச் சொன்னா..! இந்த சரஸு வேற” என்றாள் முகத்தை சுருக்கி.
“ஹேய்..! நான் எங்க குறட்டை விட்டேன். பொய் சொல்லாத வேதா”என இவன் மறுக்க,
“எனக்குத் தெரியும் ஒத்துக்க மாட்டீங்கன்னு!அதான் ரெகார்ட் பண்ணி வெச்சிருக்கேன்”என அதை போட்டுக் காட்டியவளை முறைத்தான் வாசன்.
“சின்ன சத்ததுக்கே எழுந்துடற ஆள் நானு! எங்கூட தூங்க சங்கவிய கூட சேர்த்துக்க மாட்டேன். நீங்க சிங்கம் கணக்கா குறட்டை விடறீங்க. இந்த சங்கு விட்ட சாபம் தான் பளிச்சிடுச்சு போல”என தன் பாட்டுக்குப் புலம்பினாள் வேதவி.
“சரிடி. போதும் எழுந்துரு”என சிரிப்புடன் கூறியவன் நேரத்தை பார்க்க, இவர்கள் அலப்பறையில் அரை மணி நேரம் பஞ்சாய் பறந்திருந்தது.
வேதவி தனக்கான உடையுடன் குளிக்க வெளியே வர, சௌந்தர்யாவும், மேகலையும் சமையலறையில் நின்றிருந்தனர்.
சங்கடமாய் இவள் நிற்பதைக் கண்ட சௌந்தர்யா,
“வா வேதவி!”என அழைக்க,
மேகலையும் “எழுந்திட்டியா ம்மா! காபி தரட்டா”எனக் கேட்டார்.
“வேணாத்தை. இன்னும் குளிக்கல! குளிச்சிட்டு வரேன்.” என்றவள், தயங்கியவளாய்,
“கொஞ்சம் எழுந்துக்க லேட்டாச்சு”எனவும்,
முறுவளித்த மேகலை, “அதொன்னும் பிரச்சினை இல்லம்மா. நாங்க எழுந்துக்கறது தான். நீ போய்க் குளி”என அனுப்பி வைத்தார்.
வேதவி குளித்து விட்டு வந்தவள் சாமி அறையில் விளக்கேற்ற,வாசன் காலைக் கடன்களை முடித்து விட்டு கூடம் வந்தான்.
மேகலை மருமகளை அழைத்தவர்,
“உனக்கிங்க எந்த தயக்கமும் வேணாம் வேதா! கொஞ்ச நாள் போகும் இங்க எல்லாரையும் பழகிக்க. கீர்த்தியோட அப்பா தான் கொஞ்சம் ரூல்ஸ் ராமானுஜம்! ஆனா எனக்கெல்லாம் அது சரி பட்டு வராது. என்ன செய்றது அவர் பிள்ளைங்களும் அவர மாதிரியே”என அங்கலாய்த்தவர்,
அவளுக்கு காபியும், மகனுக்கு பெரியளவு குவளை நிறைய தண்ணீரும் கொடுக்க, வேதவி கேள்வியாய் பார்த்தாள்.
“கீர்த்தி எழுந்த உடனே காபி குடிக்கறது இல்ல. இப்படி கிளாஸ் நெறைய கொதிக்க வெச்சு ஆறின தண்ணீ இல்லைன்னா பச்சைத் தண்ணி குடிப்பான்.இதுவும் உங்க மாமனார் சொல்லிக்க கொடுத்த பழக்கம்.எப்பவாவது அவங்கண்ணி காபி குடுத்தா ஒன்னும் சொல்லாம குடிச்சுக்குவான்” என்றார்.
மாமியார் சொன்னதையெல்லாம் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த வேதவி தலையசைத்து விட்டு அவர் தந்ததை வாங்கிக் கொண்டு கூடம் சென்றாள்.
“என்னவாம் மேகலைக்கு?”என கேட்டபடி மனைவி நீட்டியதை வாங்கிக் கொண்டான் வாசன்.
“மாமியார், மருமகள் நாங்க என்ன வேணா பேசிக்குவோம். அதெல்லாம் எதுக்குங்களுக்கு!” என்றாள் வேதவி.
“ஆஹான்”
இவர்கள் பேசிக் கொண்டிருக்க வேதவிக்கு அழைப்பு. அறை சென்றவள் அட்டென்ட் செய்தவுடன்,
“தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி! தூக்கி வளர்த்தேன் அன்பு தங்கச்சி”எனப் பாடினான் தமிழ்க் கனியன்.
கோரசாக ரவியும், இவள் தம்பி செல்வாவும்.
“அடேய் கனியா”என பல்லைக் கடித்தாள் வேதவி.
“நேத்து இங்க அவ்ளோ அழுகை. கல்யாணம் பண்ணிட்டு போக மாட்டேன்னு சத்யநாதனை புடிச்சிட்டு கதறினவ அங்க போய் ஒரு ஃபோன் பண்ணாளா? பாரேன் ரவிண்ணா!” என தங்கையோடு வம்பு வளர்த்தான் அவன்.
“அதானே!”என ரவியும் சொல்ல,
“ரவிண்ணா நீயுமா!”என சிணுங்கினாள் இவள்.
“உன்னை ஓட்டணும்னே அந்த போட்டோஸ்லாம் எடுத்து வெச்சிருக்கேன் என் அன்புத் தங்கையே!”என்ற கனியன் இவளுக்கும் அதை அனுப்பி வைக்க அதைப் பார்த்தவள்,
“போங்கடா டேய்!”என்றாள் கடுப்பாக.
அங்கு வேதவி சகோதர்களுக்கு ஒரே சிரிப்பு. அவள் அழுததை எல்லாம் வைத்து அதே போல் அழுது அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.
அவள் பின்னோடு வந்து இவர்களின் அலப்பறையைக் கேட்டுக் கொண்டிருந்த வாசனுக்கும் சிரிப்பு பொங்கியது.
வேதவி அழு குரலில் கெஞ்சவும் தான் ஒரு வழியாய் அவளை ‘பொழச்சுப் போ’ என விட்டனர்.
மனைவி கையிலிருந்த போனை வாங்கிய வாசன்,
“யாருங்க அது? என் பொண்டாட்டிகிட்ட வம்பு செய்றது” என போலியாக அதட்டினான்.
“ஐயோ மச்சானா?”என பயந்தது போல் கனியன் கேட்க,
“என்ன வேதவி ஆள் சேர்க்கறியோ!”என சிரிப்புடன் குரல் கொடுத்தான் ரவி.
“தங்கச்சி புருஷன்னு மரியாதை இல்லைங்க உங்க கிட்ட. நான் என் பொண்டாட்டியை அங்க விட மாட்டேன் பார்த்துக்கங்க” என்றான் இவனும் சிரிப்புடன்.
“நீ என்னடா விடறது!என் தங்கச்சிய தூங்கிட்டு வந்துடுவேன் பார்த்துக்கோ” என்றான் ரவி.
“என்னங்க நினைச்சீங்க நீங்க? என் பொண்டாட்டி கல்லானாலும் கணவன் புல்லனாலும் புருஷன் கேட்டகரியைச் சேர்ந்தவ”என மனைவியையும் ஓட்டினான் வாசன்.
அவன் கரத்தில் கிள்ளினாள் வேதவி.
“அவுச்” – வாசன்.
“இன்னும் ரெண்டு போடு வேதவி!”என கனியனும் சேர்ந்து கொண்டான்.
மச்சினர்களின் கலாட்டாக்களில் வேதவிக்கு சிரிப்பு.
பின்,மறு வீட்டுக்கு விருந்திற்கு அங்கு அவர்களை அழைக்க வருவதாக.. தான் போன் செய்த காரணத்தை சொன்னான் கனியன்.
“நீ வீட்டுக்கு வா கனியா! ஆனா இன்னும் ரெண்டு நாள் கழிச்சு நாங்க விருந்துக்கு வரோம்”என்ற வாசன்,
“தப்பா நினைச்சிக்காத டா! உன் தங்கச்சிக்கு எக்ஸாம் இருக்காமே நாளைக்கு. அவ வெட்டிங் ரஷ்ல ஸ்டடீஸ்ல போகஸ் பண்ணிருக்க மாட்டா. ஸோ, நாங்க எக்ஸாம் முடிச்சுட்டே அங்க வரோம்” என்றான்.
“ஹ்ம்ம், சரி அத்தான்.நான் அம்மாக்கிட்ட சொல்லிடுறேன்” என கனியன் வைத்து விட,
“பரவால்ல போய்ட்டு வரலாம்ங்க” என்றாள் வேதவி.
“அதெல்லாம் இல்ல. நீ படி. எக்ஸாம் முடிச்சிடு. ஆறுதலா போகலாம்” என்றான் முடிவாக.
வேதவியும், வாசனும் இந்த ஒரு வாரமும் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தனர். அதனால் அவன் சொன்னதற்கு ஒத்துக் கொண்டாள் அவள்.
சௌந்தர்யா வேலைக்குச் செல்ல ஆயத்தமாக, அவள் பிள்ளைகளை தயார் படுத்திக் கொண்டிருந்தார் மேகலை.
மாமியாரிடம் விடயத்தை பகிர்ந்து கொண்டாள் வேதவி. அவரும் சரி என்று விட, இவளை அழைத்து அவ் வீட்டு பொறுப்புக்களை சொல்லிச் சென்றாள் சௌந்தர்யா.
என்னவோ அதிசயமாக அவ்வளவு நேரமாமும் வாணி அங்கு வரவில்லை. இவளும் படிக்க உட்கார்ந்து விட,பத்து மணி போல் வேதவியின் பொருட்களோடு கனியன் வந்தான்.
இவளும், வாசனும் வரவேற்றுப் பேசினர். காபி குடித்ததோடு கனியன் விடை பெறவும், அவனோடவே வாசனும் வெளியில் செல்வதாக மனைவியிடம் கூறி விட்டுக் கிளம்பி விட்டான்.
மதிய உணவுக்கும் வாசன் வரவில்லை. அவசர வேலையில் சிக்கிக் கொண்டதாக சொன்னவன் மனைவியிடம் மதிய உணவை உண்ணும் படி சொல்லி விட்டு வைத்து விட, மாலை வேதவியைப் பார்க்கவென மேகலையின் ஒரு சில சொந்தம் வந்திருந்தனர்.
“நல்ல சேலையா கட்டிக்கம்மா வேதா. உங்க கல்யாணத்துக்கு வர கிடைக்கலையாம்னு உன்னைப் பார்க்க வந்திருக்காங்க”என்றார் மேகலை.
“சேலை கட்டத் தெரியாது அத்தை. சுடிதார் போட்டுக்கவா?”எனக் கேட்டாள் இவள்.
“மத்த நாளைல சுடிதார் பரவால்லம்மா. நேத்து தானே கல்யாணமாகிருக்கு. இன்னைக்கு மட்டும் கட்டிக்க!”என்றவர்,
“உன்னை சங்கடப்படுத்தன்னு சொல்லல. வந்தவங்க எதுவும் சொல்லிடக் கூடாதுல்ல” என்றார் மருமகள் கரம் பற்றி.
அந்த மனிதியை அத்தனை பிடித்துப் போனது வேதவிக்கு.
“ஐயோ அத்தை! இதுக்கெல்லாம் இப்படி சொல்வீங்களா”என்றாள்.
“வாணிய வரச் சொல்லிடுறேன் மா!அவ வந்து கட்டி விடுவா” என்றவரை வாணியைக் கொண்டு மறுக்க முடியாமல் சரி என்றாள்.
வாணியும் வந்தாள். இவளுக்கு புடவை உடுத்தி விட்டு கூடத்தில் இருந்தவர்களோடு கதையளக்கத் தொடங்கி விட, அங்கு வந்த வேதவி அங்கிருந்தவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.
வந்தவர்களோடு பேசினாள். மேகலை, வேதவியை அழைத்தவர் டீ போட்டுக் கொண்டு வரச் சொல்ல, மலங்க மலங்க விழித்த படி சமையலறைக்குச் சென்றவள், நீரை அடுப்பில் வைத்து விட்டு கொதிக்கும் வரையிலும் காத்திருந்தாள்.
சமையலில் இன்னும் ‘அ’ கூட தெரியாத பட்சத்தில், அதை சொல்லவும் என்னவோ போல் இருந்தது வேதவிக்கு. அவளைத் தான் குறை கூறினால் மூக்குக்கு மேல் கோபம் வந்து விடுமே.! ஒன்றைத் தெரியாது என்பதில் கொஞ்சமே ஈகோ.
இத்தனை நேரமாகியும் டீ கொண்டு வராத மருமகளைத் தேடி தானும் உள்ளே நுழைந்தார் மேகலை.
அவள் கையைப் பிசைந்த படி நிற்க,
“என்ன வேதா? என்னாச்சு? டீ போடலையாமா?”எனக் கேட்க,
“அ.. அது போடத் தெரியாது அத்தை”என்றாள் உட் சென்று விட்ட குரலில்.
முறுவலித்தவர், ஒன்றும் கூறாது தானே, போட்டுக் கொண்டு அவளோடு கூடம் சென்றார்.
வந்த மக்களும் சென்று விட, அதுவரையிலும் நன்றாக இருந்த மேகலை வாணியின் பேச்சைக் கேட்டு நொடியில் மாமியார் ரூபம் எடுத்திருந்தார்.
error: Content is protected !!