Skip to content
Post Views: 13,533
அத்தியாயம் 8
மகளை பார்த்ததும் கோபாலன் அதிர்ந்து நிற்க, “ஏங்க நின்னுட்டிங்க?” என்று கணவனிடம் வந்த பிரபாவதி அங்கே மகளைப் பார்த்ததும் மகனை பார்த்தார் தவிப்போடு.
எதிர்பார்த்ததுதான், ஆனால் இவ்வளவு சீக்கிரம் இல்லை என்று மனதில் நினைத்தவன், “என்னப்பா நம்ம வீட்டுக்கு வரா? நாமவேற இவ நம்ம பொறுப்புல இல்லைனு ஸ்டேஷன்ல எழுதிகொடுத்திருக்கோம், FIR ஃபைல் பண்ணியிருப்பாங்க. இப்போ கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்காம வீட்டுல சேர்த்த முடியாதே” என்றான் எள்ளலாக.
அண்ணனின் பேச்சில் காவ்யா விக்கித்து நின்றிருக்க, இரண்டு மாதங்கள் காணாத ஏக்கத்திலும், மகளின் ஓய்ந்த தோற்றத்திலும் பதறிய பிரபாவதி “காவ்யா” என அழைத்தார் உயிரை தேக்கி.
Advertisement
எங்கிருக்கிறாள்? எப்படியிருக்கிறாள்? என்று அனுதினமும் மகளின் நினைவு வாட்டினாலும், மகன் சொல்வதுபோல் தேடிப்பிடித்தும் தன்னோடு வர விருப்பமில்லை என்றுவிட்டால் இன்னும்தானே அவமானம் என்று மகன் பேச்சிற்கு கட்டுண்டு காவ்யாவை கண்டறிய எந்த முயற்சியும் எடுக்கவில்லை கோபாலன்.
எத்தனை கோபம் இருந்தபோதும், அவமானங்களை சந்தித்தபோதும் நேரில் வந்திருக்கும் மகளை ஆராயாமல் இருக்க முடியவில்லை. மனதளவில் நன்றாக அடிபட்டு வந்திருக்கிறாள் என்று காவ்யாவின் தோற்றத்தில் புரிந்தபோதும் கல்லாய் நின்றிருந்தார் கோபாலன்.
மனைவியின் அழைப்பில் கோபம் வர, “விஷ்ணு சொன்னது புரியலையா பிரபா. இவ நம்ம பொறுப்புல இல்லைனு ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம். திரும்ப திரும்ப ஸ்டேஷன் போக என்னால முடியாது. பேசாம உள்ள போ” என்றார் கட்டளையாக.
Advertisement
“அப்பா” என கோபாலன் காலில் விழுந்தாள் கண்ணீரோடு.
Advertisement
“கால்ல விழுந்துட்டா பட்ட அவமானம் போய்டுமா?” என மகளிடமிருந்து காலை உதறி இழுத்து, “டைமாச்சு விஷ்ணு, கிளம்பலாமா?” என்றார்.
“சரிப்பா” என்று பைக்கை எடுக்கப்போக, “கார்ல போலாம் விஷ்ணு” என்றார் தளர்வாக.
“அப்பா எதாவது பண்ணுதாப்பா?” என்றான் பதறியவனாய்.
Advertisement
“இல்லையில்ல… ஆனா கார்ல போலாம், சாய்ஞ்சி உக்காரனும்” என்றார்.
அசுரனின் ஓயாத சத்தத்தில் மேகலை வந்தார். காவ்யாவின் கோலம் கண்டு அதிர்ந்து நிற்க, கார் சாவியை எடுத்துக்கொண்டு வந்த விஷ்ணு காவ்யாவை பாராமல் தந்தையோடு கிளம்பினான்.
காவ்யாவை பார்த்ததும் அடித்து துவம்சம் செய்யும் ஆத்திரம்தான் விஷ்ணுவிற்கு. ஆனால் காவ்யாவை நினைத்து இரண்டு மாதங்களாக தாய் தந்தை அடைந்த வேதனையை நினைத்தும், இவளை துரத்தி விட்டால் இன்னும் மனவேதனை கொள்வார்கள் என்று வேறு வழியில்லாமல் அவளின் வரவை சகித்துக்கொண்டான் விஷ்ணுவர்தன்.
“காரை எங்கையாவது நிறுத்து விஷ்ணு” என்றார்.
“ஹாஸ்பிட்டலுக்குதான்ப்பா போறோம். இன்னும் அஞ்சு நிமிஷத்துல போய்டலாம்” என்று பயணத்தை தொடர்ந்தான்.
“டேய் எனக்கு நெஞ்சு வலிலாம் இல்ல. எனக்கு உன்னோட பேசனும். காரை அந்த லஷ்மிநாராயணன் கோவில்ல நிறுத்து” என்றார்.
தந்தை சொன்னதுபோல் கோவிலில் நிறுத்த, கோவிலுக்கு வந்தது கூட அறியாமல் கோபாலன் யோசனையிலிருந்தார். “காவ்யாக்கு என்ன வழி பண்ணலாம்னு கேட்க்கத்தான் நிறுத்த சொல்லியிருப்பிங்க. கோவிலுக்குள்ள போய் பேசலாமாப்பா? மனசுக்கு கொஞ்சம் இதமாயிருக்கும்” என்றான் தன்மையாக.
“விஷ்ணு” என தடுமாறியவர், பின்னே தன்னை திடப்படுத்தி, “காவ்யாவை சேர்த்துக்கலாமா வேணாமானு நீயே முடிவு பண்ணுப்பா” என்றார் மகன் மனமறிந்து.
விரக்த்தியாய் சிரித்தவன், “எனக்கு அவளை பார்க்கவோ, அவளைப்பத்தி நினைக்கவோனு எதுவுமே பிடிக்கலப்பா. என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்துதான் நேத்து வரைக்கும் காவ்யாவை தேட முயற்சி செய்யாம இருந்திங்க. இப்போ நேர்ல வந்துட்டா. இனி உங்க உணர்களுக்கு மதிப்பு கொடுக்கனும்னுதான் அவளை ஏதும் சொல்லாம வந்தேன்.
காவ்யா விசயத்துல நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம்தான். ஆனா என்னை அவளோட எப்போவும் எந்த விசயத்துக்காகவும் இன்வால்வ் பண்ணாதிங்க. எனக்கு அதுமட்டும் போதும்” என்றான்.
மகன் இப்படி சொல்லிவிட்டு பிறகு காவ்யாவை ஏதும் செய்ய முடியாத கோபத்தில் தன்னையே தண்டித்துக்கொள்வானோ என்ற பயம் வர தவிப்பாய் பார்த்தார் கோபாலன்.
தந்தையை புரிந்தவனாய், “வேற என்னப்பா பண்றது? வீடுதேடி வந்தவளை நிராதரவா விட உங்களால முடியாதே. எனக்கு உங்க நிம்மதிதான் முக்கியம்” என்றான்.
“ஆனா எனக்கு உன் எதிர்காலம் முக்கியம். நீ என்னதான் பண்ணலாம்னு இருக்க?” என்றார் கவலையாக.
“ஹ… அவ வந்ததால என் ஃப்யூச்சரை ஸ்பாயில் பண்ணிக்குவேனு கவலைப்படாதிங்கப்பா. எப்போவும் சொல்றதைதான் இப்போவும் சொல்றேன். குரூப் எக்ஸாம் ரொம்ப நல்லா எழுதியிருக்கேன். இந்த மன்த் ரிசல்ட் வரும்னு கோச்சிங் சென்ட்டர் சார் சொன்னார். என் ஃப்யூச்சரைப்பத்தி கவலைப்படாதிங்க” என்றான்.
“இல்லப்பா, யு.பி.எஸ்.சி இன்டர்வியு எப்போ? அதுக்கு ட்ரை பண்ணுப்பா” என்றார் கெஞ்சலாக.
“நீங்க எத்தனை முறை கேட்டாலும் இன்டர்வியுக்கு போகமாட்டேன்ப்பா. அது ஆல் இந்தியா லெவல்ல போஸ்ட்டிங் போடுவாங்க. தமிழ்நாட்டுலயே போஸ்ட்டிங் வாங்கனும்னா நல்ல ரேங்க்ல வரனும். இப்போ இருக்க மனநிலையில நிச்சயம் அது என்னால முடியாது. நீங்களும் அதர் ஸ்டேட்டுக்கு வரமாட்டிங்க. அதனால அதைப்பத்தி நினைக்காதிங்க” என்றான் உறுதியாக.
கோபாலன் முகம் வாடிட, “இப்போ காவ்யாவைப்பத்தி பேசத்தான காரை நிறுத்த சொன்னிங்க? பேசியாச்சில்ல? கட்டிடத்துக்கு போலாம்ப்பா. நாளைக்கு அவங்க கிரகப்பிரவேசம், இன்னைக்கு ஈவ்னிங்குள்ள வேலை முடிச்சாகனும்” என நினைவு கூர்ந்தான் பணிச்சுமையை.
“ஆமாம்… நாம போகலனா வேலையை இழுத்துடுவானுங்க. ஓனர்க்கு பதில் சொல்ல முடியாது, நீ கார் எடு” என்றார்.
“ம்… ஒரு நிமிஷம்ப்பா” என்றவன் தனது நண்பனின் தந்தையான கான்ஸ்டபிள் நாகநாதனுக்கு அழைத்தவன், “அங்கிள் ஃப்ரீயா இருக்கிங்களா?” என்றான்.
“சொல்லுப்பா விஷ்ணு”
“காவ்யா வீட்டுக்கு வந்துட்டா, கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கனும்” என்றான் தயக்கத்தோடு.
“ரொம்ப சந்தோசம்ப்பா” என சந்தோசித்தவர், “என்னைக்கானாலும் இது நடக்கும்னு எனக்கு தெரியும்ப்பா. FIR ஃபைல் பண்ணிட்டா கோர்ட் அது இதுனு பெரிய பிரச்சனைனு இன்ஸ்பெக்ட்டர்கிட்ட ஃபைல் பண்ணவேண்டாம்னு சொல்லியிருந்தேன். கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கிக்கிறேனு இன்ஸ்பெக்டர்கிட்ட நேர்ல வந்து சொல்லிடு” என்றார்.
“சரிங்க அங்கிள். ரொம்ப தேங்க்ஸ்” என்று இணைப்பை துண்டித்தவன் நாகநாதன் சொன்னதை தந்தையிடம் சொல்லி, “உங்களை கட்டிடத்துல விட்டுட்டு நான் ஸ்டேஷன் போய்ட்டு வந்திடறேன்ப்பா” என்றான்.
“நீ தனியா போக வேணாம், நானும் வரேன் விஷ்ணு”
“வேண்டாம்ப்பா, அங்கிள் இருப்பார். நான் பார்த்துக்கிறேன்” என்று தந்தையை கட்டிடத்தில் விட்டு காவல்நிலையம் சென்றான் விஷ்ணு.
**** *** *** *** ***
இங்கே வீட்டில் விஷ்ணுவும் கோபாலனும் சென்றதும், “ஏன்டீ இப்படி பண்ணின?” என்று பிரபாவதி அழுகையோடு கேட்க, “அம்மா சாரிம்மா” என்று ஓவென அழ ஆரம்பித்தாள் காவ்யா.
“என்னாச்சு? உன்னை ஏத்துக்கலயா?” என்க, காவ்யா அழுகையையே பதிலாய் கொடுக்க, “மொத்தமா விட்டுட்டு வந்துட்டியா?” என்றார்.
என்ன சொல்வதென தெரியாமல் காவ்யா அமைதிகாக்க, “எதாவது பேசுடீ, எப்படி தெரியும் அவனை உனக்கு? காலேஜ்ல பழக்கமா? இல்ல இன்ட்டர்நெட் காதலா? கல்யாணம் செய்துக்கிட்டிங்களா? இல்ல இப்போல்லாம் கல்யாணம் பண்ணிக்காமலே வாழ்றாங்களே… அது மாதிரியா?” என்று முகச்சுழிப்போடு கேட்க, “ம்மா” என வெம்பினாள் காவ்யா.
“எதாவது சொல்லித் தொலைடீ, மனசு பதறுது. உன் அப்பா கேட்டா என்ன சொல்வேன்? நீதான அவனுக்கு பொண்டாட்டி, இல்ல இரண்டாந்தாரமா கட்டிக்கிட்டானா?” என மனதிலுள்ளதை கேட்டேவிட்டார்.
“ம்மா அப்படிலாம் இல்லம்மா. ரிஜஸ்தர் மேரேஜ் செய்து அவங்க வீட்டுக்குத்தான் அழைச்சிட்டு போனார். ஆனா அங்க என்னால இருக்க முடியல” என்றாள்.
ஹப்பா… நம்ம வாழ்க்கைல விளையாண்டவனைப் போல இல்ல. குடும்ப பிரச்சனைதான். கொஞ்சம் காலம் பொறுத்து பேசி சரி செய்திடலாம் என்ற நிம்மதியோடு, “அண்ணி முதல்ல காவ்யாக்கு எதாவது சாப்பிட கொடுங்க. மத்தது அப்புறம் பேசிக்கலாம்” என்று தனது வீட்டிற்கு வந்துவிட்டார் மேகலை.
“என்ன செய்தாங்க? விரும்பிதான கட்டிக்கிட்ட? உன் புருசன் பேரென்ன? எந்த ஊர்? என்ன தொழில் பண்றாங்க? கூடப்பிறந்தவங்க எத்தனை பேர்?” என்றார்.
காவ்யா சோர்வாய் இருக்க, “சரி இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல போய் குளிச்சிட்டு வா. சாப்பிடுவ” என்றார்.
குளித்து வந்தவளுக்கு உண்ண கொடுத்து, விபரம் அறியும் தோரணையில் மகளைப் பார்த்தார் பதைப்பாக. “அவர் பேர் திவாகர். சென்னைதான்ம்மா அவங்க வீடு. சொந்தமா ஐ.டி கம்பெனி வச்சிருக்கார். அப்பாம்மா தாத்தா பாட்டி, ஒரு அக்கா, ஒரு தம்பி எல்லாரும் இருக்காங்க.
அக்காக்கு கல்யாணம் ஆகிடுச்சு. வீட்டுக்கு வாரம் வாரம் வருவாங்க. அவங்களும் சென்னையிலதான் இருக்காங்க. இந்தியன் பேங்க்ல ஒர்க் பண்றாங்க. அவங்களை தவிர எல்லாரும் ஒன்னாத்தான் இருக்காங்க.
இவர் அக்காக்கு ஒருகிலோ நகை, கார், சீர்வரிசைனு நிறைய கொடுத்து கட்டிக்கொடுத்தாங்களாம். வசதியில்லைனாலும் புளியங்கொம்பா பிடிச்சிருக்கனு அவங்கக்கா என்னை கேவலமா பேசுவாங்க. அதுக்கு என் மாமனார் மாமியாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க.
இவர்கிட்ட சொன்னேன். லவ் மேரேஜ்ல இதெல்லாம் சகஜம். எனக்காக என் அப்பாம்மா உன்னை ஏத்துக்கிட்டாங்கள்ல? போகப்போக சரியாகிடும். கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோனு சொன்னார்.
நான் அட்ஜஸ்ட் பண்ணி போனேன். ஆனா இப்போ அவங்கம்மாவும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. சின்ன மகனுக்கு பார்க்கும்போது பெரிய மருமகளுக்கு என்ன போட்டிங்கனு கேட்பாங்க அப்படியிப்படினு பேசுனாங்க. இவர்கிட்ட சொன்னதுக்கு ஒருவகையில என் அம்மா உண்மையைத்தான சொல்றாங்கனுட்டார்.
வீட்டுல எல்லா வேலைக்கும் ஆள் வச்சிருக்காங்க. சும்மா வீட்டுல இருந்தா போரடிக்குது. நானும் உங்க கம்பெனிக்கு வரேனு கேட்டேன்.
என்னோட ஒர்க்குக்கும் உன் படிப்புக்கும் சம்மதமேயில்ல. அங்க வந்து நீ வேலை தெரியாம இருந்தாலும், உன்னை சும்மா அங்க உக்கார வச்சிட்டிருந்தாலும் எனக்குத்தான் அசிங்கம்னு அங்கேயும் கூட்டிட்டு போகமாட்டேனுட்டார்.
அவங்கம்மா தண்டச்சோறு சாப்பிடற மாதிரி பார்ப்பாங்க. அதை சொன்னா எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்காதனு என்னைத்தான் அட்ஜஸ்ட் பண்ண சொல்றார். பழகும்போது இருந்த குணம் இப்போ அவர்கிட்ட இல்லம்மா. என்னால அங்க இருக்கவே முடியல” என்றாள் கண்ணீரோடு.
பிரபாவதி “நீ தேடின வாழ்க்கைதான? இருக்க முடியலனா என்ன அர்த்தம்?” என்றார் கோபமாக.
“அதுக்காக அவங்க என்ன செய்தாலும் தாங்கிக்கனுமாம்மா” என காவ்யா தவிக்க, “தாங்கித்தான் ஆகனும்” என்றபடி உள்ளே வந்தார் கோபாலன்.
“அப்பா” என்று அதிர, “உன் இஷ்டத்துக்கு வரதுக்கும் போறதுக்கும் இதென்ன சத்திரமா?” என முறைத்து, “நீ எங்க பொறுப்புல இல்லைனு ஸ்டேஷன்ல கம்ப்ளைன் கொடுத்தாச்சு.
அவனை மொத்தமா வேணாம்னுட்டு வந்திருக்கியா? இல்லை கொஞ்ச நாள் கழிச்சு போவியா? இல்ல வேற வாழ்க்கையை தேடிப்பியானு பதறிட்டிருக்க என்னால முடியாது. என் மக திரும்பவும் ஓடிப்போய்ட்டானு ஸ்டேஷன்ல போய் நிற்குற நிலைமை வந்தா உடம்புல ஒட்டிட்டிருக்க பாதி உசுரும் போய்டும்” என்றதும், “அப்பா” என்று கதறி அழுதாள்.
கோபாலனுக்கு அழைப்பு வர, ஏற்றவர் “என்ன சொன்னாங்க விஷ்ணு? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்றார் பதட்டமாக.
“இல்லப்பா, நாகநாதன் அங்கிள் FIR ஃபைல் பண்ண வேண்டாம்னு சொல்லியிருக்கார். அதனால வேலை ஈஸியா முடிஞ்சது” என்றவன், “நீங்க எங்க இருக்கிங்க?” என்றான்.
“வீட்டுலப்பா”
“சரி நான் கட்டிடத்துக்கு போறேன்” என்று இணைப்பை துண்டித்தான்.
மகனுக்கு அழைத்து, “லன்ச் டைம்தான விஷ்ணு? வீட்டுக்கு சாப்பிட வா” என்றார்.
“எனக்கு பசிக்கலப்பா” என்றான் இறுக்கமாக.
“நீ வராம எனக்கு தொண்டைக்குள்ள சோறு இறங்குமாப்பா?” என்றார் கரகரப்பாக.
“அப்பா” என விஷ்ணு கோபத்தை கட்டுப்படுத்தி அழைக்க, “அவகிட்ட நீ பேசவேணாம். பெத்த கொடுமைக்கு நாங்க சகிச்சிக்கிறோம். வீட்டுக்கு வா விஷ்ணு” என்றார் கெஞ்சலாக.
“வரேன்ப்பா” என்று இணைப்பை துண்டித்து இறுகிய முகத்தோடு வீட்டிற்கு கிளம்பினான்.
காவ்யாவிடம் “விஷ்ணு வரான், உள்ள போ. அவன்கிட்ட பேசவோ, அவன் முன்னாடி வரதோ கூடாது” என்றார் கட்டளையாக.
காவ்யா மனவலியோடு பார்க்க, “நீ பொறந்ததும் நான் அடைஞ்ச சந்தோசத்துக்கு அளவே இல்ல. ஆனா வளர்ந்த பின்ன ஏன்டா பொண்ணை பெத்தோம்னு நினைக்க வச்சிட்ட. உன்னால நாங்க பட்ட வேதனையை ஆயுசுக்கும் மறக்க முடியாது. ஆனாலும் துரத்திவிட மனசு வரல.
உன்னை கண்டந்துண்டமா வெட்டிபோட்டா கூட விஷ்ணு ஆத்திரம் அடங்காது. ஆனா எங்களுக்காக சகிச்சிக்கிறான். என் மகனை மேலும் மேலும் கஷ்ட்டப்படுத்த முடியாது. போ உள்ள” என்றார் கோபத்தோடு.
காவ்யா அறைக்குள் சென்றிட, அரைமணி நேரம்வரை காத்திருந்தவர் மீண்டும் மகனுக்கு அழைத்தார். “டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்ப்பா, வந்துடறேன். நீங்க சாப்பிடுங்க” என்று இணைப்பை துண்டித்தான்.
error: Content is protected !!