Skip to content
Post Views: 13,996
கேட்டினுள் நுழைந்த விஷாலினி, “மாமா” என்றாள் சத்தமாக.
விஷாலினி வீட்டுக்கு வந்திருக்காளா? என வியந்தவாறு வெளியே வந்தார் கோபாலன். கோபாலனை கண்டதும் “ஹப்பா… நீங்க வீட்டுல இருக்கனும்னு வேண்டிட்டே வந்தேன், அதே மாதிரி இருக்கிங்க” என்று ஆசுவாசமாய் சொல்லி, “எனக்கொரு பிரச்சனை மாமா. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, அம்மாவை அழைச்சிட்டு வந்திடறேன்” என்று தனது வீட்டிற்கு சென்றாள்.
“விஷாலினி… தனியாவா வந்த? நேத்து கூட கேட்டேன், இன்னைக்கு லீவ் இல்லைனுதான சொன்ன? எதுக்குடீ தனியா வந்த?” எனக் கடிந்தார் மேகலை.
“ப்ச் ம்மா, ஒரு முக்கியமான பிரச்சனை, நீ வா” என்று தனது கல்லூரி பையை வீட்டில் வைத்து அன்னையின் கையைப் பிடித்தாள்.
Advertisement
“எங்க வரனும்? முதல்ல போய் கை கால் கழுவு”
“அதெல்லாம் பண்ணிட்டிருக்க நேரமில்லை. அவனும்தான் வந்திட்டிருக்கான். வா” என்று சொல்ல, “யாரு விஷாலினி?” என்றார் அதிர்வாக.
விஷாலினி அழைத்த தோரணையும், பிரச்சனை என்று சொன்னதும் யோசித்தவர், விபரமறிய வீட்டிற்கே வந்துவிட்டார் கோபாலன்.
Advertisement
“வாங்க மாமா” என்றவள் கோபாலனை அமரச் செய்து, “நேத்து கூட இன்னைக்கு காலேஜ் இருக்குனுதான்ம்மா சொன்னாங்க, காலைலதான் லீவ் சொன்னாங்க. சரி சர்ப்ரைஸா வரலாம்னு ரெடியாகி ஹாஸ்டல்லயிருந்து வெளில வந்தேன்.
Advertisement
என்னவோ உறவுக்காரன் மாதிரி ஹாய்ன்னு முன்னாடி வந்து நிற்கிறான். எனக்கு ரொம்ப பயமாகிடுச்சு. நான் பயந்துக்கிறேனு தெரிஞ்சதும், அதோ அங்க ஒரு கூட்டம் நிற்குதே… அவங்கள்லாம் உன் க்ளாஸ்மேட்தான? அவங்களை கூப்பிட்டு நான்தான் உன்னை கட்டிக்கபோறவன்னு சொல்லவானு கேட்குறான்.
எனக்கு செம்ம கோபம் வந்துச்சு. ஆனா அங்க வச்சு சண்டை போட முடியாது. முதல்ல அந்த இடத்தை விட்டு வந்துட்டா போதும்னு நினைச்சு, “நீ ஆம்பிளையா இருந்தா என் வீட்டுக்கு வந்து பேசுனு சொல்லிட்டு வந்துட்டேன்.
நான் ஆட்டோ பிடிச்சு இங்க வரதுக்குள்ள எப்படி வந்தானு தெரியல. தெரு முனையில நின்னுட்டிருக்கான்ம்மா. எப்படியும் வீட்டுக்கு வருவானு நினைக்கிறேன்” என பயந்து சொன்னவள், “நாம இப்படி பயப்படக்கூடாது தானம்மா? ஆமாம் பயப்படக்கூடாது. வரட்டும் பேசிக்கறேன்” என்று அன்னையிடம் சொன்னவள்,
Advertisement
“எனக்கு பிரச்சனைன்னா உங்க மகன் உங்ககிட்ட சொல்ல சொன்னார்னு அம்மா சொன்னாங்க மாமா. அவங்களே பர்மிஷன் கொடுத்துட்டாங்க, அதான் உங்களையும் கூப்பிட்டேன். நாம எல்லாரும் சேர்ந்து இனி எப்போவும் அவன் என்கிட்ட பேசாத மாதிரி திட்டிவிடலாம்” என்றாள் தைரியம் வந்தவளாக.
மேகலை, “சின்ன பிள்ளைகிட்ட என்ன பேசியிருக்கான் பார்த்திங்களாண்ணா? அதுவும் படிக்கிற இடத்துல” என்றார் வேதனையாக.
சிறு பெண்ணிடம் இப்படி பேசியிருக்கான் என்று கோபாலனுக்கும் வருத்தமும் கோபமும் வர “வரட்டும் பார்த்துக்கலாம்” என தைரியம் கொடுத்தார்.
“அவன் வந்தா வீட்டுக்குள்ளாலாம் விடக்கூடாது மாமா” என்றாள்.
“சரிம்மா. நீ தைரியமா இரு, நான் ஹால்லதான் இருப்பேன், புது ஆள் வந்தா நம்ம அசுரன் விடமாட்டான். அவன் சத்தம் வந்தா வா. அதுக்குள்ள எதாவது சாப்பிடு, நான் வீட்டுல இருக்கேன்” என்று தனது வீட்டிற்கு வந்தார்.
“ம்மா நான் ஹாஸ்டல்லயே டிபன் சாப்பிட்டுதான் வந்தேன். எனக்கு பசிக்கல” என்றாள்.
காவ்யா வந்ததை சொன்னால் அவளை பார்க்க சென்றிடுவாள். அது குடும்பத்தினரிடையே சங்கடத்தை ஏற்படுத்தும். விஷ்ணுவிற்கு கோபம் வரும். அதோடு அந்த பையன் வந்த பின்னே மனநிலை என்னவாக இருக்குமோ என யோசத்தவர், விஷாலினியை முகம் கழுவி வர சொல்லி, மதிய உணவு செய்ய ஆயத்தமானார்.
முகம் கழுவி வந்தவள், “பார்த்தியா? நான் இல்லைனவும் மதியத்துக்கு சமைக்கல, நான் வரவும் அரிசியை தண்ணில போடுற” என கோபித்தாள் அன்னையை.
“மணி ஒன்னுதான ஆகுது? வழக்கமா இனிதான சமைக்க ஆரம்பிப்பேன்” என்க, அசுரனின் சத்தம் கேட்டது.
“ம்மா அவன் வந்துட்டான் போல” எனப்பதறினாள் விஷாலினி.
தனது வாழ்க்கை கிளறப்படும் என்று மேகலைக்கும் வேதனைதான். ஆனால் என்ன செய்வது? சந்தித்து தானே ஆக வேண்டும் என வெளியே வந்தார். விஷாலினியும் பின்னோடு வந்தாள்.
இளைஞனோடு அவன் அன்னையும் வந்திருந்தார். ஆம் நான் கணித்தது சரிதான். அந்த பெண்மணி அவனின் அன்னைதான். பதினெட்டு வருடங்களுக்கு முன்னே சிறுவனை கையில் பிடித்தபடி வீட்டு வாசலில் நின்று தன்னை தரக்குறைவாக பேசிய அதே பெண். இன்று சற்று உடல் பருமனாகி, நரைத்த முடியோடு அறுபது வயதை நெருங்கிய தோற்றத்தில் இருந்தார்.
“நீ உள்ள போ விஷாலினி, நாங்க பேசிக்கறோம்” என மேகலை சொல்ல, “நானும் இருக்கேன்ம்மா. நீங்க பேசுங்க” என்றாள் பிடிவாதமாக.
“உள்ள போலாங்களா?” என்று அப்பெண் கேட்க, அதற்கு மற்றவர்கள் பதில் சொல்லும் முன்னே, “நான் என் அம்மா வயித்துல இருந்தப்போ என் அம்மாவை தெருவில வச்சிதான பேசுனிங்க?” என்று பதிலளித்தவள், “நாம கேட்டுக்குள்ள விட்டுருக்கோம்ல மாமா. இங்கையே பேசிடுங்க.” என்றாள் கோபாலனிடம்.
“ஓ… உனக்கு நாங்க யார்னு தெரிஞ்சிடுச்சா? அதான் வீட்டுக்கு வர சொன்னியா?” என்றான்.
“டேய்…” என மகனை அதட்டி, “அப்போ இருந்த சூழல் அப்படி பேச வச்சிடுச்சுங்க, மன்னிப்பு கேட்டா சரியாகுற பிரச்சனை இல்லை இது. என் அண்ணன் மேலதான் தப்பு. உங்களுக்கு பெரிய பாவம் பண்ணிட்டார் என் அண்ணன். இனியாவது சரி செய்ய முயற்சிக்கலாமே” என்றார் பணிவாக.
“என் பொண்ணை பெத்தவன் சரியில்லைன்றதைத் தவிர, நீங்க சரி பண்ற அளவுக்கு என் பொண்ணுக்கு வேற எந்த குறையும் இல்ல. நீங்க கிளம்பலாம்” என்றார் மேகலை.
என்ன அசுரன் சத்தம் இங்க வரைக்கும் கேட்குது என்று யோசித்தவாறு கேட்டினுள் நுழைந்த விஷ்ணு, காவ்யாவைச் சேர்ந்தவர்களாக இருக்குமோ என்று “யாரைப் பார்க்கனும்?” என்றான் இறுகிய முகத்தோடு.
விஷாலினி “பிரச்சனைன்னா சொல்ல சொன்னிங்களாமே. பிரச்சனை வீடு தேடி வந்திருக்கு” என்றாள் விஷ்ணுவிடம்.
விஷ்ணு கோபாலனை பார்க்க, “விஷாலினியை கேட்டு வந்திருக்காங்க” என்றதும், மகனின் இச்சைக்கு சிறு பெண் என்றும் பாராமல் அன்னையும் கூட்டா? என்று கோபம் வந்தது விஷ்ணுவிற்கு. ஆனாலும் முதலில் சம்மதப்பட்டவர்கள் பேசட்டும் என அமைதியாக நின்றான்.
“நான் வேணும்னா உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறேன்” என்று அப்பெண் மேகலையை நெருங்க, “என் அம்மா இன்னொரு கல்யாணம் செய்திருந்தா இப்படி வந்துருப்பிங்களா?” என்றாள் விஷாலினி.
மகள் வார்த்தையை சகிக்க முடியாமல் “விஷாலினி உள்ள போ, நாங்க பேசிக்கறோம்” என அதட்டினார் மேகலை.
“நீங்க பேசுங்க. ஆனா நானும் பேசுவேன்” என்று பிடிவாதமாய் சொல்லி, “ஸ்கூல் சேர்த்தும்போதும், கம்யுனிட்டி சர்டிஃபிகேட் வாங்கும்போதும் அப்பா பேர் கேட்டாங்களாம் மாமா, அம்மாவோட பேரையே இன்ஸியலா வைக்கிறதுக்கு, ஸ்கூல் ஹெச்.எம், வி.எ.ஒ னு எத்தனை பேர்கிட்ட அவமானப்பட்டுருக்காங்கனு என் பாட்டி சொல்லி கேட்டிருக்கேன்.
இப்போ கூட ஒரு ப்ரஃபசர் அப்பா இல்லையானு கேட்டார். இல்லைனு சொன்னேன். இறந்துட்டா கூட அப்பா பேர் போடுவாங்க. ஆனா நீ அங்க ஏதும் போடலைனு கேட்டார்.
சார் அக்கறையாதான் கேட்டார். ஆனா பதில் சொல்ல எனக்கு எப்படி இருந்தது தெரியுமா மாமா? இந்த பிரச்சனை இதோட ஓயப்போறதில்ல, வேலை கிடைச்சா சர்டிஃபிகேட் வெரிஃபிகேஷன்ல கேட்பாங்க. கல்யாணத்துக்கு பார்க்கும்போது அவங்க கேட்பாங்க…
இப்படி ஒவ்வொரு இடத்துலயும் என்னைப் பெத்தவன் என் அம்மாவை ஏமாத்திட்டானு சொல்லும்போது வர வலியிருக்கே… அதை இவங்களால உணர முடியுமா? இல்ல சரி செய்யத்தான் முடியுமா? இவங்கண்ணனால பாதிக்கப்பட்டதும் அவமானப்பட்டதும், வாழ்க்கையை இழந்ததும் என் அம்மாதான். அவங்கண்ணனுக்கு ஒன்னும் இழப்பில்ல.
அவங்கண்ணன் செய்த பாவம் தீர்க்க முடியாத பாவம்னு உணர்ந்திருந்தா அன்னைக்கு என் அம்மாவை அப்படி பேசியிருப்பாங்களா? இல்ல இத்தனை வருசம் கழிச்சு இன்னைக்கு இப்படி வந்து நிற்பாங்களா? கேளுங்க மாமா” என்று கோபாலிடம் பேசினாள் ஆக்ரோசத்தோடு.
விஷாலினி கண்ணில் கண்ட வலியையும், ஆக்ரோசத்தையும், கண்டு பிரம்மித்தான் விஷ்ணுவர்தன்.
“உங்களை திட்டிட்டு போய் வருசம் முடியறதுக்குள்ள என் புருசன் ஆக்சிடண்ட்ல இறந்துட்டார்ம்மா, எங்கண்ணனுக்கு நான்னா உயிர். என் புருசன் இறப்பை எங்கண்ணனால தாங்க முடியல. மேகலைக்கு நான் செய்த பாவம்தான் என் கூட பிறந்த உன்னை பழிவாங்கிடுச்சுனு சொன்னார்.
அன்னைக்கு உங்க வீட்டுக்கு சண்டை போட வந்தப்போ பணத்துக்காக எங்கண்ணனுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் மயக்கிட்டனுதான் நினைச்சோம்.
உன்மேல எந்த தப்பும் இல்லைனு என் அண்ணன் சொன்னார். ஆனா அதை நம்ப கூடிய சூழல்ல நாங்க இல்ல. அண்ணியும், குழந்தைகளும் அநாதையாகிடுவாங்களோன்ற பயமும் கோபமும் உங்களை அப்படி பேச வச்சிடுச்சு.
என் புருசன் இறந்ததுக்கப்புறம் என் குழந்தையை மாதிரி உன்னை அநாதையா விடமாட்டேன்டானு என் மகன்கிட்ட எங்கண்ணன் வேதனையோட சொன்னார். மனசு பதறிபோச்சு. என்ன நடந்ததுனு உண்மையை சொல்லுண்ணானு கேட்டேன்.
உங்களுக்கும் எங்கண்ணனுக்கும் நடந்த கல்யாணத்தை பத்தி சொன்னார். நாங்க அப்படியொன்னும் பெருசா வசதியான குடும்பம் கிடையாது. எங்கண்ணன் படிப்புல கெட்டி. சொத்தை பாதுகாக்கவேண்டி பல கோடிக்கு சொந்தமான பொண்ணை எங்கண்ணனுக்கு கொடுக்க முன்வந்தாங்க.
எங்கண்ணனுக்கும் அண்ணியை பிடிச்சிருக்கவும் கல்யாணம் நடந்தது. எங்ககிட்டல்லாம் நல்லபடியா நடந்துக்கிற அண்ணி, அண்ணனை மட்டும் பணத்துக்காக என்னை கட்டிக்கிட்டனு குத்திகாட்டிட்டே இருந்திருக்காங்க. அவங்களுக்குள்ளயே சண்டை சமாதானம்னு நாலு வருசம் போயிருக்கு.
இரண்டு குழந்தை பிறந்த பிறகு உங்கப்பா ஒரு செல்லாக்காசுனு குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. அதுக்கு மேல பொறுக்க முடியாம என்னால இனி உன்னோட குடும்பம் நடத்த முடியாது. என் சக்திக்கு தகுந்தமாதிரி குழந்தையை வளர்த்துக்கிறேனு டிவோர்ஸ் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்கு. அவங்களுக்குள்ள இருந்த பிரச்சனை எங்க யாருக்கும் தெரியாது.
அவங்களை டிவோர்ஸ் பண்ணிட்டு உங்களை கல்யாணம் செய்ய நினைச்சாங்களாம். மன அழுத்தம் தாங்க முடியாம எல்லாம் அவசரமா நடத்திக்கிட்டேனு சொன்னார். உங்க மேல எந்த தப்பும் இல்லைனு புரிஞ்சதுக்கப்புறம் உங்களை நினைச்சு நானும் எங்கண்ணனும் வருந்தாத நாளில்லைம்மா” என்றார் அப்பெண்.
“உங்க விளக்கமும் வருத்தமும் எங்களுக்கு தேவையில்ல” என்றாள் தீப்பார்வையோடு.
தாய்க்கு நிகரான தாய்மாமனின் குற்றவுணர்வை போக்கத்தான் இவன் விஷாலினியை மணக்க முடிவெடுத்தான். அன்னையிடம் அப்படி சொல்லித்தான் அழைத்து வந்தான். சிறு சண்டை பூசல் நடக்கும். பிறகு சமாதனம் செய்திடலாம் என்ற நம்பிக்கையோடு வந்தவனுக்கு அதற்கான வாய்ப்பில்லை எனப்புரிய ஏமாற்றமானது.. ஏமாற்றம் கோபமாய் மாறியது.
“பாதிக்கப்பட்டவங்களாச்சேனு பார்த்தா ரொம்ப துள்ளுற? இழுத்துட்டு போய் கல்யாணம் செய்தா என்ன பண்ண முடியும் உன்னால?” என்று வந்தவன் கேட்க, “என்னடா சொன்ன?” என்று விஷ்ணு அவனின் சர்ட்டை பிடித்தான்.
“என் முறைப்பொண்ணை நான் என்ன வேணாலும் கேட்பேன். நீ யார்டா கேட்க?” என்று அவன் கேவலமாய் பார்க்க, அடுத்த நொடி சரமாரியாக நான்கைந்து அடிகளை கொடுத்து, உதைக்க, “விடு விஷ்ணு” என்று தடுத்தார் கோபாலன்.
அவனிலிருந்து விலகி, “வகுந்திடுவேன் ஜாக்கிரதை” என எச்சரித்தான் மிகக்கடுமையாக.
“இப்படி பேசலாமாடா?” என மகனை கடிந்து, விஷ்ணு அடித்த இடத்தில் தடவிக் கொடுத்து, “போலாம் வா” என்றார் வேதனையோடு.
“ஒரு நிமிஷம்” என்றவள், “என்ன சொன்ன? பாதிக்கப்பட்டவங்கன்னு பார்த்தியா? ம்… உன் மாமாவால பாதிக்கப்பட்டவங்கதான். ஆனா அதை நீ வந்துதான் சரி பண்ணனும் இல்ல…
ஏமாற்றத்தை தாங்க முடியாம என் அம்மா தவிச்சப்போ… உறுப்பில்லாதவனே வாழும்போது செருப்பில்லாம வாழ முடியாதா என்ன? நானிருக்கேன்… தைரியமா இருனு என் அம்மாவோட தாத்தா சொன்னாங்களாம்.
அதுக்கப்புறம் நிமிர்ந்த என் அம்மா இன்னைக்கு வரைக்கும் நிமிர்வாத்தான் இருக்காங்க. அப்போ என் அம்மா மனசுல உன் மாமாக்கு என்ன இடம்னு புரிஞ்சதா?” என்று நிமிர்வாய் சொல்லி,
“அப்புறம் என்ன சொன்ன? இழுத்துட்டு போய் கல்யாணம் செய்தா என்ன செய்வேனா? கல்லானாலும் கணவன்னு இருப்பேனு நினைச்சியா? உன் மாமா எப்படி ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறைச்சி நாடகம் போட்டு எங்கம்மா வாழ்க்கையை கெடுத்தாரோ… அதே மாதிரி நானும் உனக்கு அடங்குற மாதிரி நாடகம் போட்டு சோத்துல விஷம் வச்சி கொன்னுடுவேன்டா.
நீ யார்னு தெரியாதப்போ பயந்தேன். தெரிஞ்சதுக்கப்புறம் கொலை வெறியில இருக்கேன். எனை கடத்திட்டு போய் கல்யாணம் செய்தாலும் சரி, கற்பழிச்சாலும் சரி… வீணா போறது உன் வாழ்க்கைதான். எத்தனை பாலியல் வன்கொடுமையை டிவில பார்க்குறேன்? அந்த குழந்தைலாம் எப்படியாவது மீண்டு வரனும்னு மனசாற வேண்டிக்கிறவ நான்.
எனக்கு அப்படியானா நொடிஞ்சிடுவேனா? கற்புங்கிறது என் உடம்புல இல்ல, மனசுல இருக்கு. ஆனா என்னை தொட்டதுக்கப்புறம் உன்னால நிம்மதியா இருக்க முடியாது. இருக்க விடமாட்டேன். இப்படி நினைப்போட திரும்ப என் முன்னாடி வந்து உன் வாழ்க்கையை நரகமாக்கிக்காத” என எச்சரித்தாள் எரிமலையின் உக்கிரத்தோடு.
வந்தவர்கள் கிளம்பியதும், அவன் தன்னை கற்பழிப்பது போல் பேசியது தாள முடியாத ஒவ்வாமையை உண்டாக்கிட, “ம்மா நிறைய பேசிட்டேன்லம்மா? கோபத்துல என்னை நானே அசிங்கப்படுத்திக்கிட்டேன்ல? எப்படி இவ்வளோ பேசினேனு எனக்கே தெரியலம்மா” என தலைகுனிந்து சோர்ந்து அமர்ந்துவிட்டாள் வாசலிலேயே.
விஷாலினியின் பேச்சும், கண்களில் அனல் தெறிக்க கோபத்தை வெளிப்படுத்திய விதமும் விஷ்ணுவை பிரம்மிக்க வைத்தது. இச்சிறு வயதில் அன்னை வாழ்க்கையின் வலியை உணர்ந்து அதை தன் கண்களில் உணர்த்திய அவளின் அகன்ற கண்களை பூஜிக்கத் தோன்றியது.
அச்சிறு பெண்ணினுள் உள்ள ஆண்மை… இல்லையில்லை பேராண்மை விஷ்ணுவை ஆகர்ஷித்தது. சபாஷ் போட வைத்தது.
உறுத்தாமல் வலிக்காமல் வசதியாய் கண்ணில் நுழைந்து கருத்தாய் ஆழப்பதிந்தாள் விஷ்ணுவர்தன் மனதில்.
error: Content is protected !!