Skip to content
Post Views: 4,567
அத்தியாயம் – 13
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்து விறுவிறுக்க இடுப்பில் கைவைத்து நிமிர்ந்து நின்றவன் அதிவிரைவு இரயில் போல் தடதடக்கும் இதயத்தை சமன்செய்யும் பொருட்டு வேக வேகமாக மூச்சு வாங்கி விட்டுக் கொண்டிருந்தான்.
“என்ன நின்னுட்டீங்க? இன்னும் ரெண்டு ரெப்ஸ் எடுங்க.” என்று அவன் முதுகை நேர்படுத்தி காலை சரியான கோணத்தில் வைக்க உதவி, சரியாக அவன் புஷ்அப்ஸ் எடுத்த பின்தான் நகர்ந்தான் அந்த ஜிம் ட்ரைனர்.
ட்ரைனர் அந்த பக்கம் நகர்ந்ததும் இந்த பக்கம் அப்படியே தரையில் படுத்தவன் மூச்சு வாங்க, தெரியாமல் இங்கு வந்து மாட்டிக்கொண்டோமோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
Advertisement
‘இரத்தம் சூடாகுற மாதிரி ஏதேதோ பேசி உன்னை எங்க கொண்டாந்து நிறுத்தியிருக்காங்க பாரு. இதெல்லாம் தேவையா? சொல்லிக்காம கொள்ளாம இங்கிருந்து கிளம்புனா என்ன?’ என்று ஒரு மனம் தப்பிக்க சொல்ல,
‘சும்மாயில்லைடா… ஆஃபர் இருக்குனு ஒரு வருசத்துக்கு பணத்தை கட்டி தொலைச்சிருக்கியே.’ என்று வாதாடியது மனசாட்சி.
‘ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வந்து பிரெஷ்ஷா ஸ்டார்ட் பண்ணா இப்படியெல்லாம் தோணாது.’ என்று எண்ணிக்கொண்டவனாய் மூச்சு நிதானத்திற்கு வந்ததும் ஜிம்மிலிருந்து கிளம்பப் பார்க்க,
Advertisement
“இது மட்டும் போதாது. நாங்க சொன்ன டயட்டையும் பாலோ பண்ணுங்க.” என்ற ஜிம் ட்ரைனர், “டயட் சார்ட் சென்ட் பண்ணிட்டேன்ல உங்களுக்கு?” என்று கேட்க, ஆம் என்று தலையசைத்து விடைபெற்றான் அகிலன்.
Advertisement
முகத்தை துடைத்துவிட்டு வண்டியை கிளம்பிக்கொண்டு அறைக்கு வந்தவன் அக்கடாவென அவனிடத்தில் கை, கால்களை விரித்துப் படுக்க,
“செம்ம ஒர்க்கவுட்டா அகிலா?” கண்கள் மின்ன கேட்டான் சந்துரு. இப்போதாவது புத்தி வந்து முன்னேற ஏதோ முயற்சிக்கிறானே என்ற மகிழ்வு நண்பனாய் அவனிடத்தில் பிரதிபலித்தது.
“அட, ஏன்டா… விட்டா போதும்னு வந்திருக்கேன்டா.” என்ற அகிலன், முழங்கைக்கு மேலே பிடித்துவிட்டபடி, “என்னா வலி…” என்று முனகினான்.
Advertisement
“ரொம்ப வலிக்குதா?”
“கையையும் காலையும் தனியா கழட்டி வச்சிடலாமான்னு தோணுது. இடுப்பு அது தனி கேட்டகிரியா வலிக்குது.” வலியில் நெற்றி சுருக்கி முகம் கோணினான் அகிலன்.
“இத்தனை வருஷமா வளைக்காத இடுப்பை திடீர்னு போய் வளைச்சா வலிக்காம என்ன பண்ணும்.”
“இன்னைக்கு ஸ்டேஷனுக்கு வந்து அலைய முடியும் தோனலடா. உடம்பெல்லாம் அங்கங்க புடிக்குது.”
“இன்ஸ் கத்துவாருடா. கோர்ட்டுக்கு போற வேலை இருக்கு.” என்றான் சந்துரு.
“ம்ச்… ஒரு மணி நேரம் பர்மிஷனாவது சொல்லு.” என்றவன் எழுந்து ஈரமாய் இருந்த தன் டிஷர்ட்டை கழட்டிப் போட்டுப் படுத்தான்.
“சொல்லிப் பாக்குறேன். ரொம்ப கத்துனா போன் போடுறேன் சீக்கிரம் வந்து சேரு.” என்றுவிட்டு குளித்து கிளம்பினான் சந்துரு.
சந்துரு சென்றதுகூட தெரியாது அடித்துப் போட்டது போல் உறங்கினான் அகிலன். ஜன்னலூடே காலை வெளிச்சமும் வெயிலும் போட்டி போட்டுக்கொண்டு அவனை சீண்ட அதை உணரும் நிலையில் கூட இல்லை. அப்படி ஒரு களைப்பு.
ஒரு மணி நேர அனுமதி என்பது இரண்டு மணி நேரங்கள் கடந்தும் நீடிக்க, சந்துரு அழைத்துவிட்டான். அலைபேசி சத்தத்தில் அங்குமிங்கும் புரண்டவன் கண்களை தேய்த்துக்கொண்டு எழும் முன் அழைப்பு முழுதாய் அடித்து ஓய்ந்திருந்தது. மணியை பார்த்துவிட்டு அவனே திரும்ப அழைத்தான்.
“இன்னுமா தூங்குற… இன்னைக்கு இன்ஸ்பெக்ஷனாம். இப்போதான் நியூஸ் வந்துச்சு. நீ உடனே கிளம்பி வா.” என்றதும் விருட்டென எழுந்துவிட்டான் அகிலன்.
இன்ஸ்பெக்ஷனுக்கு ஐயமுறுபவன் இல்லை என்றாலும் தாமதமாய் சென்று தேவையில்லாமல் பேச்சு வாங்கி மனநிலையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கிளம்பி ரேபிடோவில் பைக் புக் செய்து காவல் நிலையம் வந்தடைந்தான். காலையிலிருந்து உண்ணாதது வேறு பசியை கிளப்ப, உள்ளே சென்று தலை காட்டிவிட்டு வந்து உண்டுகொள்ளவோம் என்று முடிவெடுத்து ஸ்டேஷனுள் அடியெடுத்து வைத்ததுதான் தெரியும், வேலை அவனை பிடித்துக்கொண்டது.
அத்தனை நாள் மெத்தனமாய் விட்ட வேலைகளை நேர்படுத்தும் பணியில் மொத்த காவலர்களும் ஈடுபட்டிருந்தனர். சமீபமாக வந்த வழக்குகளின் கோப்புகளை எல்லாம் பிரிவுகள் வாரியாக பிரித்து நேர்த்தியாக அடுக்கும் பணி அவனுக்கு ஒதுக்கப்பட்டது. ஆறு மாத வழக்குகளை அடுக்க சொல்ல, இவன் மூன்று மாத கோப்புகளை சரிபார்த்து வைக்கவே திணறினான்.
“என்னடா டல்லா இருக்க?” என்று கேட்டபடி டீ வாங்கி வந்து கொடுத்தான் சந்துரு.
“இப்படி கடைசி நேரத்துல உயிர வாங்குனா எப்போவோ போற உசுரு சீக்கிரமே போயிடும்.” என்று அலுத்துக்கொண்டே அந்த டீயை நொடியில் குடித்து முடித்தான் அகிலன்.
“பொறுமையா குடிடா எருமை… ஒரு வேலையை செய்யும் போதே ஒழுங்கா செஞ்சா இப்படி ஒரே நாள்ல ஸ்டேஷனை புரட்டி போடுற மாதிரி வருமா? என்ன செய்யுறது எல்லாருக்குமே அலட்சியம்.” என்று புலம்பிக்கொண்டே அவன் வேலையை பார்க்கச் சென்றான் சந்துரு.
தலைவாழை விருந்து இல்லையென்றாலும் இந்த பிரெட் பன்னாவது உண்டாக வேண்டும் என்று வயிறு எச்சரிக்கை கொடுக்க, நா அரும்புகள் உணவுக்கு ஏங்கியது. நடப்பது நடக்கட்டும் என்று எழுந்துவிட்டவன் அங்கிருந்தவரிடம் சொல்லிக்கொண்டு எப்போதும் உண்ணும் உணவகத்திற்கு வந்தான்.
“சாப்பாடு ரெடி ஆகிட்டு இருக்கு. ஒரு அஞ்சு நிமிஷம் சார்.” என்றார் கடைக்காரர்.
தலையசைத்து உள்ளே சென்றவன் ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டு, “இருக்கறதை கொண்டு வா.” என்று கடைப் பையனை ஏவ, சுடுசோறு போட்டு பருப்பு பொடியை முதலில் போட்டான்.
பசியின் தாக்கத்தில் குழைத்து பிசைந்து உணவினை வேகமாக உள்ளே தள்ள, எப்போதும் உண்ணும் அளவை விட அதிகம் உண்டு எழுந்தவன் பெரிதாக ஏப்பம் விட்டு தளர்வாய் கிளம்பினான்.
‘இன்னைக்கும் சாப்டுட்டு காசு கொடுக்கலையா… கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தோம் திரும்ப வந்துட்டான்…’ உள்ளுக்குள் புகைந்தார் உணவக உரிமையாளர். அது எதுவும் தெரியாது மீண்டும் ஸ்டேஷனுள் சென்றவன் அப்படியே இருக்கையில் சோர்வாய் அமர, கண்கள் இழுத்து சொக்கியது. நொடியில் உறங்கிப் போனான்.
“யோவ், இப்படி சட்டமா தூங்குறதுக்கு தான் உன்னை இங்க வேலைக்கு வச்சிருக்கா… எழுந்திரியா… நீ தூங்குறதுக்கும் நாந்தான் பதில் சொல்லணும்.” அவனை வசைபாடி எழுப்பிவிட்டார் இன்ஸ்பெக்டர்.
எரிச்சலுடன் கண்களை கசக்கியபடி எழுந்தவன் இன்ஸ்பெக்டரை பார்த்து நிற்க, முறைத்துவிட்டு சென்றார் அவர்.
‘ஏன்டா இப்படி?’ சந்துருவும் பார்த்துவிட்டு அவன் வேலையைத் தொடர்ந்தான்.
‘இதெல்லாம் உனக்கு ஒத்துவராதுடா. பழையபடி இருந்தோமோ போனோமான்னு இருக்கனும். என்ன இப்போ பீ.பி தானே, நேரத்துக்கு தூங்கி எழுந்தா சரியாகிடும்.’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வேலையைப் பார்த்தவன் இரவு இருந்த அசதிக்கு ஒரு மதுபாட்டிலை கையோடு வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்றான்.
“ரெண்டு நாளா சூரியன் மேற்க உதிச்சிதேனு பாத்தேன், திரும்ப கிழக்குக்கு வந்துடுச்சா?” மதுவும் கையுமாக அமர்ந்தவனைப் பார்த்துக் கேட்டான் சந்துரு.
“உனக்கொரு க்ளாஸ் குடுக்கலாம்னு பாத்தேன் ரொம்ப பேசுனா கட் பண்ணிடுவேன்டா.”
“ம்ம்க்கும்… நல்லா குடிச்சிட்டு காலையில தெளிஞ்சிடு ராசா… நாளைக்கு உன்னை வச்சி செய்ய காத்திருக்கார் இன்ஸ்…”
“ஏன் ஏன்? இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் எல்லாம் நல்லாத்தானே போச்சு?” ஒரு க்ளாஸை மடக்கென வாயினில் கவுத்து உதட்டை துடைத்தபடி கேட்டான் அகிலன்.
“நல்லா போச்சா… அதெல்லாம் இல்லை. வந்த ஏ.சி இன்ஸை ரூம்ல வச்சி செஞ்சிட்டார். ரெகார்ட்ஸ் ஒழுங்கா மெயின்டைன் பண்ணல. கேஸ் கொடுக்க வர்றவங்களை ஒழுங்கா ட்ரீட் பண்ணி கம்ளைண்ட் வாங்காம இருக்கோம்னு கம்ளைண்ட் போயிருக்கும் போலடா… ஸ்டேஷன் பர்பார்மென்ஸ் கம்மியா இருக்குனு தாளிச்சிட்டாராம். கடுப்புல நாளைக்கு எல்லாரையும் ஒரு வழி பண்ணனும் இருக்கார். முதல்ல நீதான் சிக்குவ பாத்துக்கோ…” எச்சரிக்கும் விதமாகவே சொன்னான் சந்துரு.
“ஏற்கனவே அந்த இன்ஸ்பெக்டருக்கு என் மேல காண்டு. எல்லாத்தையும் என் தலையில இறக்கிடுவாரு…” இன்னொரு க்ளாஸ் உள்ளே சென்றது.
“அதுக்குதான் சொல்றேன். வாயை வச்சிக்கிட்டு சும்மா இரு. உன் நேரமே சரியில்லை. இப்போதான் எஸ்.பி மேடம்கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்க…” என்றதும் அதிரா நினைவில் இன்னொரு க்ளாஸ் உள்ளே சென்றது. லேசாக போதை ஏறத் துவங்கிய நேரம் தன்னை குனிந்து பார்த்துக்கொண்டான்.
இரண்டு நாள் மட்டுமே உடற்பயிற்சி செய்த உடலில் எந்த மாற்றமும் இல்லை. மேற்சட்டையின்றி குடித்துக்கொண்டிருந்தவன் உடல் ஆங்காங்கு சதைப்பிடிப்புடன் சற்று பருமனாய் இருந்தது.
“என்னடா பார்வை? ரெண்டு நாள் குடிக்காம உறுப்புடுற மாதிரிதானே இருந்த?” கொறிக்க வாங்கி வைத்திருந்த கடலையை கையால் தூக்கிப்போட்டு வாயில் பிடித்தபடியே அகிலனிடம் பேச்சு கொடுத்தான் சந்துரு.
“குடிக்காம இருந்தா உடம்பும் மனசும் நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. இன்னைக்கு முடியல. டையர்டா இருக்கு.” என்றான் ஜன்னல் வழியே தெரிந்த இருளை வெறித்தபடி.
“ஓஹோ… யார் சொன்னது?” தெரிந்துகொண்டே கேட்டான் சந்துரு. அன்று அதிராவிடம் திரும்ப வேலைக்கு சேர வேண்டும் போல் இருக்கிறது என்ற போதே சந்தேகம் கொண்டவன் பின் அவளை காணுகையில் அதிராவிடம் முந்திக்கொண்டு இவன் பேச்சு கொடுத்தது சந்தேகத்தை வலுத்தது. எந்த தைரியத்தில் இதெல்லாம் செய்கிறான் என்று கேட்டுவிட சமயம் பார்த்துக்கொண்டிருந்தவன் இன்று அகிலன் வாய்விடவும், பிடுங்கப் பார்த்தான்.
“நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்கணும். அது யாரா இருந்தா என்ன?” என்றவனை அதிர்ந்து பார்த்தான் சந்துரு.
“டேய் டேய்… செப்டம்பர் மாசமே இங்க வெள்ளம் வரவச்சிடாதடா, நாடு தாங்காது.”
“…”
“அப்போ சொல்ல மாட்ட?”
“என்ன சொல்லணும்? எனக்கு தூக்கம் வருது.” என்று பேச்சை கத்தரித்து அப்படியே தரையில் படுத்து உறங்குவது போல் கண்களை மூடிக்கொண்டான் அகிலன்.
“தகுதிக்கு மீறி ஆசைப்படுறது தப்புடா அகிலா. தேவையில்லாம எதையும் பண்ணாத…” என்றுவிட்டு சந்துருவும் அமைதியாகிவிட, கண்களைத் திறந்து அவனை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாது திரும்ப கண்மூடிக்கொண்டான்.
இரண்டு நாட்களாய் நேரமே அலாரம் வைத்து எழுந்து உடற்பயிற்சி செய்ய கிளம்பிய அகிலன் இன்று எழாது இருக்கவும் அவனை எழுப்பினான் சந்துரு.
“தூங்க விடுடா எருமை…”
“ஜிம் போக வேண்டாமா, எழுந்திருடா.”
“…” பதில் சொல்லாது அகிலன் உறக்கத்தை தொடர, மீண்டும் எழுப்பிப்பார்த்தான். அவன் எழவில்லை.
‘இரண்டு நாளுக்கே நாக்கு தள்ளிடுச்சா இவனுக்கு?’ என்று நினைத்தபடி குடும்பத்துடன் போன் பேச சென்றுவிட்டான் சந்துரு.
வழக்கமாக எழும் நேரத்திற்கு வந்து சந்துரு திரும்ப எழுப்பவும், சாவுகாசமாக கண்களைத் திறந்தான் அகிலன்.
‘இவ்ளோ தானாடா உன் வீராப்பு.’ என்று சந்துரு பார்க்க, நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கைகளை உயர்த்தி சோம்பல் முறித்த அகிலன், “இப்போதான் பிரெஷ்ஷா இருக்கு.”
‘என்னவோ பண்ணித்தொல’ எனும்விதமாய் சந்துரு தன் வேலையைப் பார்க்க, அகிலன் நிதானமாய் எழுந்துக் கிளம்பினான்.
சந்துரு இரவு சொன்னது போலவே அகிலனைக் கண்டதும் அதிருப்தியாய் பார்த்த இன்ஸ்பெக்டர், “இந்த மாசம் கமிஷனை ஒழுங்கா வசூல் பண்ணிட்டு வா. போன மாசம் சரக்கு கேஸ்ல உள்ள தள்ள ஆளு கொண்டுவர சொன்னா ஒன்னும் கிழிக்காம டிரைவரா போய் எஸ்.பி அம்மாகிட்ட உக்காந்துட்டா. இந்த முறை ஒழுங்கா செய். மேலிடத்துக்கு கட்டிங் அனுப்பனும்.” என்று அகிலனை அனுப்பி வைக்க, எரிச்சலாய் வந்தது அவனுக்கு.
சட்டத்திற்கு புறம்பாக மாமூல் வாங்குவதால் வந்த எரிச்சல் அல்ல அது. கடை கடையாய் ஏறி இறங்கி அலைந்து திரிந்து வாங்குவதில்தான் கடுப்பு. வாங்கும் பணத்தில் கணிசமான பங்கு இவனுக்கும் வருமென்றாலும் அதெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரி கதைதான். எப்போதும் கோர்ட் செல்வது, இவர்கள் நிலையத்தில் பதியப்படும் வழக்குகளுக்கு அரசு வக்கீலை கொண்டு வாதாடுவது, குற்றவாளியை அடித்து துவைத்து கவனித்துக்கொள்வது போன்ற வேலைகளை தான் பார்த்திருக்கிறான். இதுபோன்ற பண விஷயத்திற்கு எல்லாம் இவனை அனுப்ப மாட்டார்கள். நேற்று இவன் தூங்கிய கடுப்பில் வெளியே அலைய வைக்க வேண்டி அனுப்பிவிட்டார் இன்ஸ்பெக்டர்.
அவரை கடிந்துக்கொண்டே இன்னொரு ஏட்டையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் அகிலன்.
“இந்த சேட்டு கடைக்காரன் கூட கொடுத்துடுவான். நம்ம ஊரு பயலுவோ தான் என் ஜாதி என்னனு தெரியுமா, நான் என்ன கட்சினு தெரியுமா, நான் எதிர்க்கட்சி, நான் ஆளுங்கட்சின்னு மாமூல் தராம இழுத்தடிப்பானுங்க. இதுல கட்டர் பிரபா வேற தனியா மாமூல் வாங்குறான்.” அகிலனிடம் புலம்பியபடி வந்தார் அந்த ஏட்டு.
“ரெண்டு தட்டு தட்ட வேண்டியதுதானே ஏட்டு?”
“புரியாம பேசாதையா… நம்ம இன்ஸ்பெக்டர் ***ஜாதி. அவர் ஜாதிகாரங்க மேல கையை வச்சா இன்ஸ்பெக்டரே வரிஞ்சி கட்டிக்கிட்டு வருவாரு. அவரையும் சமாளிச்சு அவர் ஜாதிக்காரனுங்களையும் சமாளிச்சு மாமூல் வாங்கிக் கொடுக்கணும் நாம…” இதுவரை இதுபற்றி மேலோட்டமாகவே தெரியும் அவனுக்கு. மாமூல் பங்கு தனக்கு வருகிறது அது எப்படி வந்தால் என்ன என்று அலட்சியாய் இருந்தவன் இன்று அதற்குள் தான் சிக்கிக்கொள்ளவும் காது கொடுத்து ஏட்டு சொல்வதை கேட்டுக்கொண்டு வந்தான்.
“உடனே கொடுத்துடுவானுங்களா இல்லை இழுத்தடிப்பானுங்களா?”
“முக்கால்வாசி கலெக்ஷன் ஆகிடும். ஒரு சிலது முரடு புடிப்பானுங்க. அவனுங்கள கடைசியா பாத்துக்கலாம். முதல்ல கிழக்கு தெருவுக்கு வண்டியை விடு.” என்ற ஏட்டின் அறிவுறுத்தல்படி கூட்டம் குறைவான தெருவிற்கு முதலில் சென்றார்கள்.
அகிலனுடன் வந்தவர் பல வருடமாய் வந்து செல்பவர் என்பதால் அவரைக் கண்டதும் கடைக்காரர்கள் அவர்களை கவனித்து கமிஷனைத் தட்ட, இது கூட கெத்தா நல்லாயிருக்கே என்று பார்த்தபடி வந்தான் அகிலன்.
ஒரு டீக்கடையில் டீயும் பன்னும் உண்டு மீண்டும் வசூலைத் தொடர, பிரச்சனைக்குரிய கடை ஒன்று நடுவே இருந்தது. அதை மட்டும் விட்டுவிட்டு சென்றால் திரும்ப இதற்காக வரவேண்டும். இதோடு முடித்து கிளம்பிவிடலாம் என்றார் ஏட்டு. சரியென்று அவரைத் தொடர்ந்தான் அகிலன்.
“என்ன புது ஆளையெல்லாம் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்றே ஆரம்பித்தான் அந்த கடையின் உரிமையாளன்.
“நம்மாளுதான்… இந்த மாசம் ஏதாவது பாத்து குடுத்தீன்னா நாங்களும் நேரமே கிளம்பிடுவோம். உன் வியாபாரம் பாதிக்காது பாரு.” தன்மையாய் பேசினார் ஏட்டு.
“அதெப்படி ஏட்டு… மாசாமாசம் நீங்களும் வாங்குறீங்க கட்டர் பிரபாவும் வாங்குறான். அப்புறம் அந்த வரி இந்த வரினு உங்க கவர்மெண்ட்டே எல்லாத்தையும் வாங்கிட்டா நான் எப்படி வியாபாரம் பாக்குறது. நீங்களும் பிரபாவும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. ஒரு மாசம் அவனுக்கு கொடுக்கிறேன் ஒரு மாசம் நீங்க வாங்கிக்கோங்க. எல்லா மாசமும் உங்க ரெண்டு பேருக்குமே அளந்துட்டு இருக்க முடியாது.”
“இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்றேன். இந்த மாசம் பாத்து போட்டுவுட்டுரு.”
“இப்படித்தான் ரெண்டு மாசமா சொல்லிட்டு இருக்கீங்க. இந்த மாசம் ஒரு முடிவு தெரியாம நான் கொடுக்கிறதா இல்லை.”
“அதான் இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்றேன்னு சொல்றாருல்ல, கொடுக்க வேண்டியதை கொடுத்தா கேட்குறது தானா நடக்கப்போவுது.” என்றான் அகிலன் தன் இயல்பில்.
“உனக்கும் எனக்கும் பேச்சில்லை. நீ இதுக்குள்ள வராத. நாங்க பேசிப்போம்.” என்றான் கடைக்காரன் சற்று திமிருடன்.
“என்ன வாய் நீளுது…” என்ற அகிலனின் கை நீண்டு சலசலப்பானது.
ஓரிருவர் அதை வீடியோ பதிவு செய்ய, கவனித்த அகிலன் அதை பிடுங்கப் போகும் முன்னே மற்றொரு கை அதை பறித்திருந்தது.
யாரென்று அகிலன் நிமிர்ந்து திரும்பிப்பார்க்க, அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் அதிரா.
‘எப்போவும் இவங்க கண்ணுலதான் மாட்டணுமா?’ நொந்தவன், ‘இப்போ வச்சி செய்வாங்களே? இந்த முறை என்ன பனிஷ்மென்ட்டா இருக்கும்?’ என்று யோசித்து நிற்க, என்ன பிரச்சனை என்று விசாரித்தாள் அதிரா.
பதில் சொல்லி மாட்டிக்கொள்ளவோ, காட்டிக்கொடுக்கவோ எண்ணமில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, அனைவரையும் ஒருமுறை பார்த்த அதிராவின் விழிகள் அகிலனின் நிலைத்தது.
“நீங்க சொல்லுங்க மிஸ்டர். அகிலன். இங்க என்ன பிரச்சனை?”
அகிலன் அவளையும் ஏட்டையும் மாறி மாறி பார்த்தான். ஏட்டு சமாளி என்பது போல் கண் காண்பிக்க, எச்சில் கூட்டி விழுங்கி செறுமிய அகிலன், “இன்ஸ்பெக்டர் ஒரு வேலையை முடிச்சிட்டு வர சொன்னாரு. இந்த கடைக்காரர் முரடு புடிக்கிறார்.”
என்ன நடந்திருக்கும் என்று அதிராவில் யூகிக்க முடிந்தாலும் வாய்வார்த்தையை என்ன சொல்கிறான் என்று பார்க்கவே கேள்வி கேட்டாள்.
“ஒன்னும் பிரச்சனையில்லை. நாங்க பாத்துக்குறோம் மேடம்.” என்ற ஏட்டையும் முறைத்தவள், கடைக்காரனிடம் திரும்பி, “பிரச்சனை வந்தா கம்ளைண்ட் குடுக்கணும் இப்படி நீங்களே இறங்கி போலீஸ் மேல கை வைக்கறதுக்கு உங்களை தூக்கி உள்ள வைக்கலாம். என்ன வைக்கவா?” என்று எகிற, தழைந்து சென்றான் கடைக்காரன்.
அகிலனையும் ஏட்டையும் பார்த்து கிளம்பும்படி தலையசைக்க, இருவரும் அங்கிருந்து கிளம்பினர். கடைக்காரனையும் எச்சரித்துவிட்டு கிளம்பினாள் அதிரா.
காவல் நிலையம் சென்று இந்த பிரச்சனையை இன்ஸ்பெக்டரிடம் சொல்ல, “எஸ்.பி மேடம்கிட்ட தானே வேலை செஞ்ச அவங்களை சமாளிக்க முடியாதா?” அவர் ஒருபாடு காய்ந்தார்.
அன்று முழுவதும் அதிராவிடமிருந்து அதிரடியான தண்டனை ஏதாவது கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாந்து போனான் அகிலன். மறுநாளும் விடிந்துவிட, பொறுக்கவில்லை அவனுக்கு. ஸ்டேஷனில் ஏதோ காரணம் சொல்லி அவளை பார்க்க வந்துவிட்டான். வெளியே காத்திருக்க சொல்ல, அவளை காணப்போகும் பதட்டம் இருந்தது. பேசப்போகிறோம் என்ற மலர்வும் லேசாக வந்து ஒட்டிக்கொண்டது. அன்று உடல்நிலை பற்றி பேசியபின் அவளை சந்திக்க முடியவில்லை.
உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்ததும் அவளைப் பார்க்க வீட்டிற்கு செல்ல, அவளில்லை. அதனால் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தான். பதிலுக்கு குட் என்று மட்டுமே அவள் பதில் அளித்திருக்க, ஒரு வாரமேனும் பயிற்சி செய்து ஒரு சின்ன மாற்றத்தையாவது கொண்டுவந்த பின்பு அவள் முன் சென்று நிற்க வேண்டும் என்று நினைத்திருக்க, நேற்று நடந்த எதிர்பாராத சந்திப்பிற்கு பின்னான அவள் அமைதி அவனை இருக்கவிடவில்லை.
சில நிமிடங்களில் உள்ளே செல்ல அனுமதி கிடைக்க, பதட்டத்தை மறைத்து மலர்வாகவே உள்ளே நுழைந்தான்.
“என்ன விஷயம்?” நேரடியாக அவள் பேச்சை ஆரம்பிக்க, ஏமாற்றம் அவனுள்.
ஜிம் எப்படி போகுது என்னனு கேட்டாத்தான் என்னவாம், அவன் மனம் குறைபட்டுக்கொண்டது.
“சும்மா நின்னு என் டைம் வேஸ்ட் பண்ணாத. சொல்ல எதுவும் இல்லைனா கிளம்பு.”
அவளின் இறுக்கம் மனதை சுணங்க வைக்க, கூம்பிய முகத்துடன், “நேத்தி பாத்துட்டு எதுவுமே கேக்கல.” என்றான் மொட்டையாய்.
கோப்புகளில் தன்னை மூழ்கடித்திருந்தவள் நிமிர்ந்து அவன் விழி நோக்க, தடுமாற்றியவன் அவள் கண்களை சந்திக்காது வேறு புறம் பார்த்தான்.
“என்ன கேக்கணும் அகிலன்?”
“இல்லை… நேத்திக்கு அங்க எதுக்கு பிரச்சனைன்னு உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும். ஆனா ஒன்னுமே சொல்லாம வந்துட்டீங்க. நான் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா எப்படி பனிஷ்மென்ட் குடுத்தீங்க.”
“உங்க ஸ்டேஷன் மட்டுமில்லை, இங்கிருக்கிற 99 சதவீத ஸ்டேஷன்ல இது நடக்குது. நான் ஆடர் போட்டாலும் யாரையாவது ரெகமெண்டேஷன் புடிச்சி வருவாங்க. என் ஒரு ஆளால எல்லாத்தையும் ஒரே நாள்ல மாத்த முடியாது. ஸ்மார்ட் மூவ் ரொம்ப முக்கியம். எங்க எப்போ புடிச்சா நிக்குமோ அப்போ புடிக்கணும்.” என்றவளை யோசனையாய் பார்த்து நின்றான் அகிலன்.
“இதெல்லாம் ஏன் உன்கிட்ட சொல்றேன்னா, நேத்திக்கு ஒன்னும் சொல்லலைனு நீ உன் இஷ்டத்துக்கு ஆடக்கூடாதுனுதான். மனசாட்சிக்கு விரோதமா நடந்தீன்னா எப்போ வேணும்னாலும் எங்க வேணும்னாலும் மாட்டுவ, பாத்து இருந்துக்க.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பரபரப்புடன் உள்ளே நுழைந்தான் பரிதி.
கதவைக் கூட தட்டாது அவன் உள்ளே வரவும் ஏதோ அவசரம் என்று புரிந்து அதிராவின் மூளையும் பரபரப்பானது.
“மேம்,” என்று வந்தவன் சொன்ன விஷயத்தில் அதிர்ந்து எழுந்தாள் அதிரா.
“மீடியாவை உள்ள விடாதீங்க. பாதுகாப்பை அதிகப்படுத்துங்க. சிசிடிவி எல்லாத்தையும் கலெக்ட் பண்ணுங்க.” கட்டளைகளை பிறப்பித்த வண்ணம் வேகநடையிட்டு அவள் வெளியேற, புரியாமல் நின்ற அகிலன், நொடியில் சுதாரித்து அவள் மேசைக்கு கீழே இருக்கும் அவள் ஸ்நாக்ஸ் பையை எடுத்துக்கொண்டு விரைந்தான்.
பரிதியும் இவளும் காரில் ஏறிக்கொள்ள, வேகமாக சென்று அவளிடம் பையை நீட்டினான் அகிலன்.
“நீங்க ஜுஸ் குடிக்கிற நேரம் ஆகிடுச்சு. போகும் போதே குடிச்சிட்டு போங்க, போற இடத்துல முடியுதோ என்னவோ…” அவனின் அக்கறையான செயலில் அதிர்ந்து அந்த பரபரப்பிலும் லேசாக அவள் இதழ்கள் விரிந்து விழிகள் நன்றி உரைத்தது.
கார் க்ரீச்சிட்டு கிளம்பி சென்ற பின்னும் அவளது இதழ் மலரலை நினைத்து சுகமாய் சிரித்த வண்ணம் நின்றிருந்தான் அகிலன்.
எஸ்.பி அலுவலகத்தில் கிளம்பிய கார் இடையே எங்கும் நிற்காது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிற்க, பரபரப்பாய் உள்ளே சென்றாள் அதிரா. இவள் வருவதற்குள் எப்படியோ விஷயம் வெளியே கசிந்து கூட்டம் கூடி, பத்திரிக்கையாளர்களும் வந்துவிட்டார்கள்.
இவளைத் தொடர்ந்து அந்த சரகத்தின் கவுன்சிலர், வருவாய்த்துறை அதிகாரி ரமேஷ், தடவியல் நிபுணர்களும் வந்தார்கள்.
முகத்தில் மாஸ்க் அணிந்த வண்ணம் அந்த க்ரைம் டேப் சுற்றப்பட்ட இடத்திற்குள் கிடத்தப்பட்டிருந்த எலும்புக் கூடுகளை கூர் விழிகளால் வெறித்துப் பார்த்தாள் அதிரா.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் தீப்பிடித்து எரிந்து மான்சி சடலம் கிடைத்த அதே குப்பை கிடங்கில் மூன்றிற்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
error: Content is protected !!