Skip to content
Post Views: 4,538
அத்தியாயம் – 14
மான்சி வழக்கே திக்கு தெரியாத காட்டில் கொண்டு போய் விட்ட கணக்காய் இருக்க, இப்போது புதிதாய் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது வழக்கை அதிதீவிரமாக மாற்றியது. மேலிடத்திலிருந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தது அதிராவுக்கு. இன்னும் அவளுக்கே அந்த வழக்கின் கோணம் பிடிபடாமல் இருக்க மேலிடத்திற்கு திடமான பதில் கொடுக்க முடியாமல் சமாளித்து வைத்தாள்.
“இதை க்ளியர் பண்ண அவ்ளோ பேசுனீங்க. இப்போ பாருங்க… நீங்களும் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.” ரமேஷிற்கு கொட்டு வைக்க மறக்கவும் இல்லை அதிரா. முதல்முறை மான்சி உடலை கையகப்படுத்தும் போதே கொஞ்ச நஞ்சமா பேசினார். கால்வாசி அப்புறப்படுத்திய குப்பைகளுக்கு நடுவே இப்படி எலும்பு கூடுகள் கிடைத்திருக்க, இன்னும் தோண்டத் தோண்ட என்னென்ன வருமோ என்று நினைத்தாலே வியர்த்தது ரமேஷுக்கு.
“காணாம போனவங்க பத்தின கம்பளைண்ட்ஸ் எல்லாத்தையும் எடுங்க. முதல்ல மூணு மாசம் முன்னாடி வந்த கேஸ் பைல்ஸை ஓபன் பண்ணுங்க. பாரென்சிக் அனுப்பி இங்க கிடைச்சிருக்கிற எலும்புக்கூடு யாரோடது என்னனு சீக்கிரம் கண்டுபுடிக்கணும்.” பரிதியிடம் கட்டளைகள் பறந்தது.
Advertisement
“மீடியாகாரங்க அப்டேஸ்ட்ஸ் கேக்குறாங்க.” அவள் பதில் என்னவாக இருக்கும் என்று தெரியுமாதலால் தயங்கியபடி கேட்டான் பரிதி.
அவன் யூகத்திற்கு மாறாக, “கொடுத்துடலாம்.” என்றபடி பத்திரிகையாளர்கள் குழுமியிருக்கும் இடத்திற்கு வேகநடையிட்டாள் அதிரா.
‘இவங்களை புரியும்னு பாத்தா இப்படி டிவிஸ்ட் வைக்குறாங்களே.’ என்று நினைத்தபடி பின்தொடர்ந்தான் பரிதி.
Advertisement
போட்டி போட்டுக்கொண்டு பத்திரிகையாளர்கள் கேள்விகளை வீச, பொறுமையாக கேளுங்கள் என்று அமைதிப்படுத்தினாள். தொடர்ந்து குப்பை கிடங்கில் கிடைத்திருக்கும் சடலங்களின் கூடுகள் பற்றி மேலோட்டமாய் சொன்னவள் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம் என்று நம்பிக்கையாய் பேசி நகர்ந்தாள்.
Advertisement
“எப்போதும் மீடியாவை அவாய்ட் பண்ணுவீங்க. இன்னைக்கு சட்டுனு பேசிட்டீங்க?” என்று பரிதி தன் சந்தேகத்தை கேட்க, வலக்கை விரல்களுக்கு பயிற்சி கொடுக்கும் விதமாய் மெல்ல அதை மூடித் திறந்தபடி நடந்தாள் அதிரா.
“மான்சி பாடி கிடைச்சப்போ நமக்கு நிறைய லீட் இருந்துச்சு பட் இப்போ அப்படி இல்லை. காணாமப் போனவங்களை கண்டுபுடிக்க சொல்லி சம்மந்தப்பட்டவங்களோட எல்லா குடும்பமும் போலீஸ் ஸ்டேஷன் வந்து கம்பளைண்ட் குடுத்திருப்பாங்கனு சொல்ல முடியாது. மிஸ் ஆக நிறைய வாய்ப்பிருக்கு. எந்த தடயமும் இல்லாம நாமளா இறந்தவங்க யாருனு கண்டுபிடிக்கிறது கஷ்டம். பப்லிக்கிட்ட இதை நேரடியா கொண்டுபோறது மூலமா நமக்கு லீட் கிடைக்கலாம் பரிதி.”
“மான்சி பாடி எரிஞ்சிருச்சு. இவங்க எல்லாம் எப்படினு யோசிக்கவே பயமா இருக்கு.” என்றான் பரிதி.
Advertisement
“இதுக்கு முன்ன எப்போ இங்க தீவிபத்து நடந்துச்சுனு விசாரிங்க.”
“…”
சற்று யோசித்தவள், “பாரென்சிக் ரிப்போர்ட் இல்லாம நாம எந்த ஸ்டெப்பும் முன்ன எடுத்து வைக்க முடியாது பரிதி. தீ விபத்தே நடந்திருந்தாலும் பாடி எரிஞ்சிருக்கும்னு உறுதியா சொல்ல முடியாது. டீகம்போஸ் ஆகியிருக்க கூட வாய்ப்பிருக்கு. இந்த எலும்பெல்லாம் எங்கிருந்து எடுத்தாங்கன்னு கேட்டு நோட் பண்ணிக்கோங்க.
அண்ட் எல்லாம் ஒரே இடத்தில கிடைச்சதா இல்லை தனித்தனியா இருந்துச்சானு கேட்டு ஐ விட்னஸ் ரெடி பண்ணுங்க. இதெல்லாம் ஒரே நேரத்தில் நடந்த கொலையா இல்லை பல்வேறு காலகட்டத்தில நடந்து இங்க ஒன்னா கொண்டு வந்து டிஸ்போஸ் செஞ்சிருக்காங்களான்னு அதை வச்சிதான் டிசைட் பண்ண முடியும்.
இந்த குப்பை கிடங்கு எவ்ளோ வருஷமா ஆக்டிவா இருக்குன்னு எல்லா டீட்டைலசும் அந்தந்த டிபார்ட்மெண்ட்ல கேட்டு வாங்கிடுங்க. ரெகார்ட்ஸ் எதுவும் மிஸ் ஆகக்கூடாது.
இந்த ஏரியாக்கு சர்வைலன்ஸ் அதிகப்படுத்துங்க. சிசிடிவில கவர் ஆகாத எல்லா இடத்துலயும் சிசிடிவி வைக்க ஏற்பாடு பண்ணுங்க.” யூகங்களையும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் பகிர்ந்து கொண்டவள் சூழுந்திருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியில் மூளையை தட்டிவிட்டாள்.
“மான்சி வீட்ல வச்ச ஆள் மூலமா இன்பர்மேஷன் எதுவும் கிடைச்சுதா?”
“இல்லை மேம். மான்சி மட்டும்னா அந்த ஹாஸ்பிடல் அப்புறம் அமைச்சர் மேலனு சந்தேகப்படலாம். இப்போ இத்தனை கிடைச்சிருக்கே. வேற ஏதோ மோட்டிவ் இருக்கனும் மேம்.”
ஆமோதிப்பாய் தலையசைத்தவள், “அதுக்காக மான்சி வீட்டை வாட்ச் பண்றதை நிறுத்த வேண்டாம். இது எல்லாம் ஒன்னுக்கொன்னு தொடர்பு இருக்கா இல்லையானு செக் பண்ணிட்டு மேல என்ன பண்றதுன்னு பாப்போம்.”
பரிதி வழக்கு குறித்த தகவல்களை சேகரிக்க சென்றுவிட, அதிரா தன் அறையில் சோர்வாய் அமர்ந்தாள். வலது கையில் பிரச்சனை ஏற்பட்ட பின் அவள் பழக்கங்களில் நிறைய மாற்றம் வந்திருந்தது. முதலாவதாக அவளது உணவும் உடற்பயிற்சியும் அவளை மீறிச் சென்றது. ஒரு கையில் வலுவும் பிடிமானமும் இல்லாது போக, சரியாக உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை. சமையலுக்கு வைத்திருக்கும் வள்ளியும் ஒரு நேரம் நன்றாகவும் ஒரு நேரம் இவளுக்கு தோதுபடாத முறையிலும் சமைக்க, உணவை வீணடிக்க விருப்பமில்லாமல் உண்டு எடை அதிகரித்துவிட்டது போன்றதொரு உணர்வு. உடனடியாக பயிற்சியில் ஈடுபட்டு குறைக்கவும் முடியாது என்பதால் கையை சீக்கிரம் சரிசெய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.
இவளின் வேலை பளு உணர்ந்து காலையில் பிசியோதெரபி செய்ய வீட்டிற்கே வந்துவிடுவார் மருத்துவர். கை வலிமையை கூட்ட உபகரணங்களின் உதவியும் தேவைப்படும் என்பதால் ஒருநாள் விட்டு ஒருநாள் இவள் சென்று வருவாள். இன்று காலை வீட்டிலே செய்ததால் மாலை மருத்துவமனை செல்லலாமா என்று யோசித்து அன்றைக்கான அலுவல்கள் என்ன இருக்கிறது என்று பார்த்தாள். குப்பைக் கிடங்கு விவகாரம் மட்டுமே தீவிரமானதாய் இருக்க, பரிதியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்து மருத்துவமனையில் முன்பதிவு செய்து பின்மாலையானதும் அங்கு சென்றாள்.
மருத்துவர் வேறொருவருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்ததால் ஐந்து நிமிடங்கள் இவளைக் காத்திருக்க சொன்னார்கள். வெளியே வேடிக்கை பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க, முகம் முழுக்க அப்பிய குழப்பத்தோடு அவளை நெருங்கியிருந்தான் அகிலன்.
“என்னாச்சு? காலையில நல்லாத்தானே இருந்தீங்க?”
“என்னை பாலோ பண்றியா நீ?” அவனை அழுத்தமாய்ப் பார்த்து கேட்டிருந்தாள் அதிரா.
புரியாத பாவனை அவனிடம், “என்ன?”
“நான் போற இடமெல்லாம் பின்னாடி வந்து என்ன ப்ரூப் பண்ண நினைக்குற நீ?”
“நான் ஏன் உங்களை பாலோ பண்ணப்போறேன்?”
பார்வையில் காட்டிய அழுத்தத்தை மாற்றாது அப்படியே அவனை முறைக்க,
“டாக்டர்கிட்ட ஏதோ மெடிக்கல் செர்டிபிகேட் தேவைன்னு சொல்லியிருந்தாராம் அதை வாங்கிட்டு வரச் சொல்லி இன்ஸ்பெக்டர் அனுப்புனார்.” என்றான் தன் மீது தவறில்லை என்ற ரீதியில். துணையை நிர்ணயிக்க காலமே துணை நிற்கிறதோ…
‘இவன் உண்மையைத் தான் சொல்கிறானா?’ என்று அவள் பார்க்க, அவள் எதிரே கையிலிருந்த பைலை நீட்டினான்.
வேண்டாம் எனும் வகையில் தலையசைத்து திரும்ப, அவளை உள்ளே அழைத்தனர். திரும்பியும் பாராது விறுவிறுவென அவள் உள்ளே சென்றுவிட,
‘நீ இப்படி இருக்குற வரை உன்னையெல்லாம் மதிக்கவே மாட்டாங்கடா.’ என்று கையிலிருந்த பைலைக் கொண்டே நெற்றியில் அடித்துக்கொண்டான் அகிலன்.
உள்ளே சென்ற அதிரா ஒரு மணி நேரம் பயிற்சி முடித்து வெளியே வர, அவள் உள்ளே செல்லும் போது எங்கு அமர்ந்திருந்தானோ அதே இடத்தில் இருந்தான் அகிலன்.
‘இன்னும் போகலையா இவன்? வந்து லொட லொடம்பானே…’ மனதிற்குள் சலித்துக்கொண்டே அவனை கண்டும் காணாதவாறு அவள் நடக்க முயல, பின்னேயே வந்துவிட்டான் அகிலன்.
“என்ன சொல்றாங்க டாக்டர்? கை தூக்க முடியுதா?”
“போகாம இன்னும் என்ன பண்ற இங்க?”
“உங்களை தனியா விட்டு போக வேண்டாமேன்னு இருந்தேன்.” என்கவும் அதிராவின் நடை சட்டென நின்றது.
திரும்பிப் பார்த்தவள், “என்னோட அஞ்சு வயசுலேந்து தனியா இருக்கேன். எனக்கு நீ துணையா?” என்றவள் நொடி நேரத்தில் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து முகத்தை கடுமையாக மாற்றி வேகமாக முன்னே நடந்து சென்றாள்.
முதல்முறையாய் அவளுள் இருக்கும் தனிப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டிட, அப்படியே நின்றுவிட்டான் அகிலன். அப்போலேந்து தனியா இருக்காங்களா, ஐயோ… தவிப்பும் வேதனையும் கொண்டவனாய் வேகமாக வெளியே நடந்தான். தொலைவில் வண்டி நிறுத்துமிடத்தில் காரில் அவள் ஏறுவது தெரிந்தது. இப்போது விட்டால் அடுத்து எப்போது பார்த்து பேச வாய்ப்பு கிடைக்குமோ என்று வேக வேகமாக அவளை நெருங்க, நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று வந்து குறுக்கிட்டு தடுத்தது. அதிருப்தியாய் உச்சுக்கொட்டியவன் ஆம்புலன்ஸை சுற்றிக்கொண்டு செல்ல, நல்ல வேலையாக ஆம்புலன்ஸ் பின்னிலிருந்து நோயாளியை இறக்குவதற்கு ஏதுவாக அவளது காரும் வழி விட்டு நின்றது.
ஆசுவாசமாக உணர்ந்தவன், “மேடம்.” என்று அவள் கார் கண்ணாடியை தட்டினான்.
கண்ணாடியை கீழே இறக்கி இறுகிய முகத்தோடு என்ன என்பது போல் அவள் பார்க்க, “போற வழில என்னை டிராப் பண்றீங்களா?”
“நான் என்ன உனக்கு டிரைவரா?”
“நாந்தான் உங்க டிரைவர். நான் வேணும்னா டிரைவ் பண்ணவா?”என்று அவன் கேட்கவும், அவள் முறைத்த முறைப்பில் இவன் பொசுங்காதது அதிசயமே.
‘ஓவரா போறோமோ?’ என்று அவன் மனமே ஜெர்க் அடிக்க, இதை விட்டால் எப்படி அவளை நெருங்குவது என்று அவனுக்கும் தெரியவில்லை.
ஏதோவொரு புள்ளியில் இருவர் எண்ணங்கள் ஒத்து சென்று இணைந்தால்தான் நட்பு கூட மலரும். இங்கு இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். பதவியிலும் சரி பழக்கவழக்கம் அந்தஸ்திலும் சரி ஏணி வைத்தாலும் எட்டாத தூரத்தில் இருந்தாள் அதிரா.
சர்பத்திற்கு அஞ்சாமல் பரமபத ஏணி போல் தடங்கல்களை தாண்டி உயரம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் அவனுள் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கவும்தான் தன்னகங்காரம் ஒதுக்கிவிட்டு திரும்பத் திரும்ப அவளை தொந்தரவு செய்தான். இப்போதெல்லாம் அவள் திட்டாது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாய் கத்தரித்து பேசி ஒதுங்கிச் செல்வதை பார்த்தால் புரிந்துகொண்டாலோ என்ற தடுமாற்றம் அவனை தடுமாறச் செய்தது.
கழிவிரக்கம் பிறக்க அப்படியே இரண்டடி பின்னெடுத்து வைத்தான். அவனையே பார்த்தபடி அதிரா ஓட்டுனரிடம் வண்டியை கிளப்பச் சொல்லி சைகை செய்ய, கார் மெல்ல அவன் கண்ணை விட்டு மறைந்தது.
நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டு வெளியே வந்து கிடைத்த வண்டியில் லிப்ட் கேட்டு ஸ்டேஷன் சென்றுவிட்டான். இரவு சந்துரு கிளப்பும் வரை அறைக்கு செல்லும் எண்ணமே வரவில்லை, ஏதேதோ வேலையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டான்.
“டேய் நீ என் பிரெண்ட் அகிலனா இல்லை உனக்குள்ள இந்த பேய் ஏதாவது புகுந்திருக்கா?” கேலியோட சந்துரு அகிலனை இப்படியும் அப்படியும் பார்க்க, முகத்தை திருப்பிக்கொண்டான் அகிலன்.
“ரூமுக்கு வர்ற ஐடியா இருக்கா இல்லை இப்படியே விடிய விடிய பழைய பைல்ஸ் எல்லாத்தையும் தூசு தட்டிட்டு இருக்கப் போறியா?” என கேட்க, அமைதியாய் எழுந்துகொண்டான் அகிலன்.
“என்னடா ஆச்சு? இந்நேரத்துக்கு மூச்சு விடாம புலம்பி தள்ளியிருப்பியே!” என்ன கேட்டும் அகிலன் அமைதியாகவே வந்தான்.
உண்டு அறைக்கு வந்த பின்பும் விட்டதை வெறித்துக்கொண்டு படுத்திருந்தவனை கண்டு சந்துருவுக்கே மனது கேளவில்லை.
“என்னத்தை அப்படி மனசுல போட்டு குழப்பிக்கிட்டு இருக்க? வீட்ல எதுவும் பிரச்சனையா?”
“…”
“நீ இப்படியெல்லாம் பீல் பண்ற ஆளே இல்லையே. என்னாச்சுன்னு சொன்னாத்தானே என்ன செய்யலாம்னு பாக்க முடியும்.”
“…”
“டேய், இப்போ சொல்லப் போறீயா இல்லையா?” சந்துரு குரல் உயர்த்திக் கேட்டதும், பார்வையை அவனிடம் பதித்தவன், “நேரம் வரும்போது சொல்றேன்.” என்றானே ஒழிய மறந்தும் வார்த்தை விடவில்லை.
சந்துருக்கு ஓரளவுக்கு என்னவாக இருக்கக்கூடும் என்ற யூகம் இருந்தது. ஆனால் அது யூகம் மட்டுமே இன்னும் உறுதியாக தெரியவில்லை. தான் கேட்டு இல்லாத ஒன்றை கிளப்பிவிடுவதைவிட அவனே வாய் திறந்து சொல்லட்டும் என்றுதான் வார்த்தையை மாற்றி மாற்றி போட்டுப் பார்க்கிறான், ம்கூம் அகிலன் திறப்பேனா என்று நழுவிக் கொண்டிருந்தான்.
மறுநாள் சோம்பலாய் உணர்ந்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்ய கிளம்பிவிட்டான்.
“ரெண்டு நாள் வந்துட்டு ரெண்டு நாள் லீவ் எடுத்துட்டிங்களே. விடாம பண்ணாதான் வெய்ட் லாஸ் ஆகும். இல்லைனா நீங்க வியர்வை சிந்துறதுக்கு யூஸே இருக்காது.” என்றார் ஜிம் ட்ரைனர்.
இனி விடுப்பு எடுக்காது வருகிறேன் என்று சமாளித்து ஒருமணி நேரம் பயிற்சி செய்துவிட்டே காவல் நிலையம் சென்றான். வழக்கம் போல நீதிமன்றம் செல்லும் பணியே அவனுக்கு ஒதுக்கப்பட்டது. சலிப்பு தட்டினாலும் வெளியே காட்டிக்கொள்ளாது வண்டியில் பிக்பாக்கெட் குற்றவாளியை அழைத்துக்கொண்டு கிளம்பினான். காவல் நிலையத்திற்கான வாகனம் இன்ஸ்பெக்டர் எடுத்துச் சென்றதால் இந்த ஏற்பாடு. பின்னால் அமர்ந்திருக்கும் குற்றவாளியை கைவிலங்கிட்டு அதை வண்டியின் கைப்பிடியோடு சேர்த்து பூட்டிவிட்டிருந்தான்.
“சார், இன்னும் எவ்வளவு நேரம்? கையெல்லாம் வலிக்குது.” பின்னாலிருந்தவன் சற்று முன்னே சரிந்து அகிலனைக் கேட்க, அவன் வாய் திறக்கவில்லை.
“போன தபா வந்தப்போ ஜீப்புல அழைச்சிட்டு போனீங்க. இப்போ என்னா சார் வெயில்ல மண்டையை பொளக்கவுட்டி அழைச்சிட்டு போறீங்க.”
“பேசாம வாயா…”
“சார்,”
“டேய்…”
“ன்னா சார்… நாம அப்படியா பழகி இருக்கோம். போன தபா வந்தப்போ லாக்கப்ல நாம சரக்கெல்லாம் அடிச்சோமே…”
“அதுக்கு?”
“ஒரு மூவாயிரம் இனாம குடுங்க. எப்படியும் பைன் போடுவாங்க. கோர்ட்டுல கட்ட காசில்லை.” என்று அவன் நச்சிருக்கும் போது சைரன் சத்தத்துடன் போலீஸ் கார் ஒன்று அவனைத் தாண்டிச் செல்ல, அதன் பின்பகுதி வைத்தே அது எஸ்.பி வாகனம் என்று கண்டுகொண்டான்.
அதிரா அதில் செல்கிறாள் என்றுமே சோர்ந்த மனதில் கொஞ்சம் புத்துணர்ச்சி எட்டிப்பார்த்தது. இதழ்கள் மெல்ல விரிய, வண்டியின் வேகத்தை கூட்டி காரை பின்தொடர்ந்தான்.
‘தேவையில்லாத வேலை பார்க்காதே.’ என்று மனம் எச்சரித்தாலும் அவளின் இருப்பை உணர்ந்துவிட்டாலே நெருங்கச் சொல்லியது மனது.
“மொல்ல போ சார்…”
“…”
“சார் கோர்ட்டுக்கு லெப்ட்டு எடுக்கணும் சார்…” இடப்பக்கம் திரும்பாது காரைத் தொடர்ந்து நேரே சென்றதால் பின்னிருந்து குரல் கொடுத்தான் அந்த குற்றவாளி.
“சும்மா கிடடா… நயிநயினு பேசிட்டு வர.” என்று கடித்துக்கொண்டே அகிலன் காரைத் தொடர, கார் ஒரு இடத்தில் நின்றது.
அதுவரை உல்லாசமாய் உணர்ந்த மனம் பதற்றத்தை தத்தெடுத்துக்கொள்ள வண்டியை ஓரமாய் நிறுத்தினான். அருகில் சென்று பேசும் எண்ணமெல்லாம் இல்லை அவளை தொலைவில் இருந்து பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என்று நினைத்து காரின் பின்னேயே சற்று தள்ளி நிற்க, அவள் இறங்கவே இல்லை. ஓட்டுநர் மட்டும் இறங்கி அங்கிருந்த கடையில் ஏதோ கேட்டுவிட்டு மீண்டும் காருக்கு செல்வதைப் பார்த்தவன் இதற்கு மேலும் முடியாது எனும் விதமாய் வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு வேக வேகமாக காரை நெருங்கினான்.
“மேடம்…” என்ற குரலோடு முன் இருக்கையில் எட்டிப்பார்க்க, இடம் காலியாக இருந்தது.
ஓட்டுனரிடம் அவள் இருக்கையை காட்டி எங்கே என்று கேட்க, “மேடம் லீவு. பரிதி சார் வேலை கொடுத்திருந்தார் அதான் இந்தப்பக்கம் வந்தேன்.”
“ஏன் லீவு?”
“அதெல்லாம் நம்மகிட்ட சொல்லுவாங்களா?” என்று கேட்டுக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்தார் ஓட்டுநர்.
அகிலன் நகர்ந்து நின்று காருக்கு வழிவிட, அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார் ஓட்டுநர்.
‘ஏன் லீவு? உடம்புக்கு எதுவும் முடியலையா? தனியா வேற இருப்பாங்களே. எப்படி சமாளிப்பாங்க? போய் பார்க்கவும் முடியாது, யாரையும் கேட்கவும் முடியாது.’ மனதில் பல்வேறு சிந்தனைகள். அனைத்தும் அவளை சுற்றி.
“சார்… சார்…” அதற்குள் கத்தியிருந்தான் அந்த குற்றவாளி. இறங்க முடியாமல் அவனும் எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பான்… அவன் குரல் கேட்டு நடப்பை உணர்ந்தவன் வண்டியை கிளப்பிக்கொண்டு நீதிமன்றம் சென்றான். மனம் மந்தமாக அவள் நினைவிலேயே தேங்கி நிற்க, நீதிமன்ற அலுவலகத்தில் அரசு வக்கீல் வழக்கு சம்மந்தமாய் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் கூறவில்லை.
“என்னாச்சுயா உனக்கு? எப்போவும் நானே ராஜாங்குற மாதிரி நெஞ்சை நிமித்திக்கிட்டு சுத்துவ. இப்போ பீஸ் போன பல்பாட்டம் ஒரேடியா டல் அடிக்குற?”
“ஒன்னும் இல்லை சார்.” என்றான் முகத்தை அழுந்தத் துடைத்து.
கேஸ் கட்டுக்களை பார்த்துக்கொண்டே, “என்ன ராஜாவை அடக்கி ஆள ராணி யாரையாவது புடிச்சிட்டியா என்ன?”
“என்ன?” அதிர்ந்து பார்த்தான் அகிலன்.
“எதுக்கு இவ்ளோ ஷாக்? உன் வயசை கடந்துதானே வந்திருக்கேன்.” என்றார் அவர் இயல்பாய் கண்ணாடியை மூக்கின் மேல் பொருத்தியபடி.
“…”
“முடிவு சொல்லாம சுத்தல்ல விடுதா பொண்ணு?”
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார்…” தடுமாற்றம் அவனில்.
“நீ சொல்லும் போதே அப்டித்தான்னு தெரியுது.” என்றவர் அதற்கு மேல் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
இவனுக்குத்தான் நெஞ்சம் அடித்துக்கொண்டது. அவள் அருகாமையை, அவளுடன் செலவழிக்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்து சுகம் பெரும் அவன் உணர்வுகளுக்கு இதுவரை பெயர் கொடுக்கவில்லை அவன்.
மனம் உந்தும் திசைக்கு அவளைத் துரத்திச் சென்றான். பேச்சு கொடுத்தான். பேச சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டான். ஆனால் இதற்கெல்லாம் பெயர் கொடுக்க பயம். இருவருக்கும் இருக்கும் வேறுபாடுகளே தடங்களாய் நின்றது. அதன்பொருட்டே சந்துருவிடம் கூட மூச்சுவிடவில்லை. இவன் உணர்வுகளை அவனிடம் பகிர்ந்துகொண்டு இது நடக்க வாய்ப்பே இல்லை, உனக்கு அவங்க கேக்குதா என்று கேட்டுவிட்டால் அவனது தன்மானம் மொத்தமும் அடிவாங்கிவிடுமே. தான் தாழ்ந்துவிடுவோமே என்ற பயம். அந்த பயமே அவனை முன்னேற உந்த, ஒருகட்டத்திற்கு மேல் அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இடைவெளி விழுந்தது. அவளிடமே செல்ல விழைந்தது மனம். சென்றால் கத்தரித்து அனுப்புவாள் என்று தெரியும், ஆனால் தெரிந்தே அன்று மாலை சென்றான்.
வீட்டு காவலுக்கு இருக்கும் காவலாளி இவனை பார்த்துவிட்டு விவரம் கேட்க, அவளை பார்க்க வேண்டும் என்று சொல்லி காத்திருந்தான். இதற்கு முன் எப்போதும் அவளோடு வந்ததால் அவள் வீட்டிற்கு காவலுக்கு இருப்பவரை எல்லாம் கண்டுகொண்டதே இல்லை அவன். இன்று இப்படி காத்திருப்பது கூட கடுப்பாய் வந்தது. பார்க்க முடியாது என்று அவள் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனை. ஏதாவது சொல்லி உள்ளே சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு எதிர்பார்த்தது போல் இப்போது பார்க்க முடியாது நாளை அலுவலகம் வந்து பார்க்கும்படி செய்தி வந்தது.
பொங்கும் ஏமாற்றத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அலைபேசியில் அவளுக்கு அழைத்தான். ஒன்றிரண்டு அழைப்புகளுக்கு பின் பலகீனமான அவளது குரல் செவியைத் தீண்ட அதற்கு மேல் அவனை யார் தடுக்க? அவளே உள்ளே வரச்சொல்கிறாள் என்று அலைபேசியைக் காட்டி உள்ளே சென்றான். அழைப்பு மணி அடித்துவிட்டு கதவை தள்ளிப் பார்க்க, கதவு திறந்துகொண்டது.
“மேடம்…” என்ற அழைப்போடு உள்ளே நுழைந்தான்.
அவன் குரல் கேட்டு தளர்ந்த நடையோடு அறையிலிருந்து வெளியே வந்தாள் அதிரா.
“என்ன வேணும் உனக்கு?” அவளது குரல் அவனது செவி தீண்டியதா என்று ஐயமுறும் வகையில் மிக மெலிதாய் பலகீனமாய் ஒலித்தது.
சோர்ந்து தலையெல்லாம் கலைந்திருக்கும் அவள் தோற்றத்தைக் கண்டு பதட்டத்துடன் நெருங்கினான் அகிலன்.
“உடம்பு முடியலையா? டாக்டர்கிட்ட போனீங்களா?” இவன் கேள்விகளை அடுக்க, எரிச்சலும் சோர்வுமாய் சோபாவில் வந்தமர்ந்து பின்னே சாய்ந்து கண்மூடித் திறந்தாள்.
“துணையா இருக்கேன் சொன்னதுக்கு அப்படி பேசிட்டு. இப்போ எப்படி இருக்கீங்க…” ஒரு இரவில் இப்படி நோவுற்று நலிந்திருப்பவளைக் கண்டு ஆற்றாமையாய் இருந்தது. இந்த நிலையிலும் தனியாய் இருக்கிறாளே என்ற வருத்தம் மேலோங்கியது.
“பீவர் தான். டேப்லெட் போட்டிருக்கேன். சரியாகிடும்.” என்றாள் முகத்தை மறைக்கும் முடியை பின்னே ஒதுக்கியபடி.
“சாப்டீங்களா?”
எதுவும் சொல்லாது நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
“நானே பாக்குறேன்…” அவளுக்குக் காத்திராது அவன் நேரே கிட்சன் செல்ல, அதிர்ந்து அவனை பின்தொடர்ந்தாள் அதிரா.
“ஹே, நில்லு. நீபாட்டுக்கு போற…”
“இந்த மாதிரி நேரத்துல கூட இப்படி கராறா எஸ்.பி பவரை காட்டுனா அவார்ட் கொடுக்க போறாங்களோ என்ன?” அவளிடம் பேச்சு கொடுத்தபடியே கிட்சனை ஆராய, பழங்கள் நறுக்கி உண்டதற்கு அடையாளமாய் கத்தியும் பழத்தின் தோலும் மேடையில் இருந்தது.
“பழம் சாப்டீங்களா? நைட்டுக்கு என்ன செஞ்சிட்டு போயிருக்காங்க உங்க வள்ளி?” என்றபடியே கவிழ்த்திருந்த பாத்திரங்களை எடுத்துப்பார்த்து, “என்ன ஒன்னும் காணும். எல்லாம் காலியா கவுத்து கிடக்கு… உடம்பு சரியில்லை பொறுப்பா வந்து செஞ்சி கொடுத்துட்டு போயிருக்கணுமா இல்லையா…” அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டு செல்ல, கைகட்டி அவனை அழுத்தமாய் பார்த்தாள் அதிரா.
“என்ன?” என்றான் இவனும் அவளைப் போலவே கைகட்டி.
“நீ என்னை ஸ்டாக் பண்ற, தெரியுதா உனக்கு?” என்று அந்த நிலையிலும் அவள் அழுத்தமாய் கேட்க, அவன் முகம் சுருங்கியது.
“ஏதோ சண்டை போட்டு ஒன்னுமண்ணா பழகிட்டோமேன்னு அக்கறையா இருந்தா அதுக்கு இப்படி சொல்றீங்க…”
‘ஏதே! ஒன்னுமண்ணாவா?’ விழி விரிந்து இயல்பாகியது. அவன் பேச்சு சுவாரசியமாய் தெரிய, தொண்டையை செறுமியவள் அங்கேயே சுவரில் சாய்ந்து அவனைப் பார்த்தாள்.
அவளது உடல்பாவனை இலகுவாய் தெரிய, சற்று தைரியம் வரப்பெற்றவனாய், “நைட் என்ன சாப்புடுறீங்க? வாங்கிட்டு வரவா? உடம்பு முடியாம ஏன் நிக்குறீங்க. போயி ரெஸ்ட் எடுக்கலாம்ல…”
சரிதான் எனும்விதமாய் இவள் நகர்ந்து ஹாலுக்கு செல்ல, பின்னோடே வந்தவன், “என்ன சாப்புடுறீங்கன்னு கேட்டேன். ஒன்னும் சொல்லல.”
அவள் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் இவன் முந்திக்கொண்டு, “நான் பாத்துப்பேன் கிளம்புன்னு சொல்லாதீங்க. இப்படி முடியாம இருக்கும் போது தனியா எல்லாம் விட்டுட்டு போக முடியாது.”
“தனியா எல்லாம் இல்லை பாஸ். நான் வந்துட்டேன். உங்களுக்கு ஏன் வீண் சிரமம்…” என்று நுழைந்தான் விஷு.
அகிலன் வெளிப்படையாய் ஏமாற்றமும் அதிருப்தியும் காட்டி நிற்க, சோபையாய் சிரித்தாள் அதிரா.
error: Content is protected !!