Skip to content
Post Views: 8,991
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 8
ரேவதி என்ற பெயர், அவளுக்கு துளியும் சம்பந்தமில்லாதவர்களை உலுக்கி இருந்தது. பெண்களுக்கு நடக்கும் அநியாயம் நமக்கு புதிதல்ல. கதைகளில், செய்தித்தாள்களில், அவ்வளவு ஏன் பக்கத்து தெருவில் கூட பாதிக்கப்பட்ட பெண்களை பார்த்து அன்றாடம் கடந்து இருப்போம். ஆனால் ஏதோ ஒன்று ஒட்டு மொத்த மக்களையும் கொதிப்படைய செய்யும், இரத்த உறவு இல்லாதா ஒரு பெண்ணுக்கு நடந்த வலியை நம் மனம் உணர செய்யும். அந்த இடத்தில் நாம் இருந்தால், நம் உடன் பிறப்பு இருந்தால் எவ்வளவு வலிக்கும். அப்படியொரு மனநிலையில் தான் மூவரும் பார்த்து இருந்தார்கள்.
ரேவதி அடுத்த ஆட்டோ பார்த்து போக, மதிய நேரம் என்பதால் எங்கும் கிடைக்க வில்லை. குறை என்று சொல்ல முடியாது. ஆனால் பார்த்தால் தெரியுமளவு ஒரு பக்க கால் இழுத்து தான் நடந்தாள். நிச்சயம் முப்பத்தி ஐந்துக்குள் தான் இருக்கும்.
Advertisement
ஏழை, கஷ்டப்படும் பெண், வறுமை நிலையில் உள்ள பெண், கைம்பெண் என்று பார்த்த முதல் பார்வையிலேயே கண்டு கொள்ளலாம். அப்படி தான் இருந்தது ரேவதி தோற்றம்.
வேலை செய்து கருத்த உடம்பு என்று கண்டு கொள்ளலாம். மதன், அருண், விக்ரம் மூவரின் பார்வையும் அவள் மீதே… என்னவோ தாங்களே தப்பு செய்து விட்டது போல ஒரு உணர்வு வந்தது. இவர்களும் ஊர் பெருமை பேசி காலரை தூக்கி விட்டு கொண்டவர்கள் தான். அதை பெருமையாக, கௌரவமாக, தன் அடையாளமாக கருதியவர்கள் தான். இன்று ஒரு சாமானிய பெண்ணின் நிலையை கண் கூடாக கண்ட பின், என்னவோ படித்தும் தாங்கள் முட்டாள் என்று நினைக்க தோன்றியது.
ரேவதியின் நிலைக்கு தாங்கள் காரணமில்லை என்ற போதும் வலித்தது. ரேவதி கையில் இருந்த அரிசி மூட்டையை தூக்கி கொண்டு பஸ் ஸ்டண்ட் நோக்கி நடக்க போக,
Advertisement
“அக்கா…” தடுத்தான் விக்ரம்.
Advertisement
“என்னங்க தம்பி…”
“வாங்க, நாங்க குளத்து கரை தான் போறோம். ஒரு எட்டு கள்ளி காட்டுல விட்டுறோம்…”
ரேவதிக்கு மகிழ்ச்சி. இந்த நேரத்தில் பஸ் சிரமம் தான். அதுவும் அரிசி மூட்டையை சுமந்து கொண்டு செல்வது சாதரணமல்ல.
Advertisement
“ரொம்ப நன்றி தம்பி. ஊர் எல்லையில் விட்டா கூட போதும். அப்புறம் நான் இழுத்துக்கு போயிடுவேன்…” என்று ரேவதி சொல்ல,
ஷேர் ஆட்டோ என்பதால் உர முட்டைகள் உடன் விக்ரம் மேல் சீட்டில் அமர்ந்து கொள்ள, கீழ இருக்கும் சீட்டில் தன் பொருட்களோடு ரேவதி அமர்ந்து கொண்டாள். மதனோடு, அருண் முன் பக்கம் அமர்ந்து கொண்டான். மதன் ஆட்டோ எடுக்க, வண்டி கிளம்பியது.
விக்ரம் மெல்ல பேச்சு கொடுத்தான்.
“கள்ளி காட்டுல எந்த பக்கம்க்கா, உங்களை நான் பார்த்ததில்லையே…” .
“அடிக்கடி வாரதில்லை தம்பி. அம்மா மட்டும் தான் வயசாகி போய் கிடக்கு. அதுக்கு எதுவும் தேவைன்னா மட்டும் எட்டி பார்ப்பேன்…” சின்ன சிரிப்பில் பதில் சொன்னாள் ரேவதி.
“உங்க வீட்டுகாரர் என்ன பண்றாங்க அக்கா…” தயங்கி தான் கேட்டான்.
பின்னே கிராமத்தில் கைம்பெண்ணை எளிதாக கண்டு கொள்ளலாம், அவர்கள் தோற்றம் காட்டி கொடுத்து விடும். ரேவதியும் அவ்வாறே, சாதாரண பூனம் சேலை, இழுத்து கட்டிய கொண்டை, கழுத்தில் கருப்பு கயிறு, தொங்கி நிற்காமல் காதோடு ஒட்டிய தோடு, கை, கால்கள் சும்மா தான் இருந்தது.
ரேவதி புரியாமல் ஒரு பார்வை பார்த்தாள்.
“அவக ஊர் போய் சேர்ந்து பத்து வருசம் ஆகி போச்சு தம்பி…”
“ஐயோ! தெரியாம கேட்டுட்டேன். என்ன ஆச்சுக்கா?…”
“முடியாம கிடந்தாங்க. அவங்க விதி அம்புட்டு தான்…”
“பிள்ளைக இருக்கா…”
ரேவதி முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு, “ம்ம், ஒரு பொம்பளை பிள்ளை இருக்கு. பேரு ஜனனி, ஆறாவது படிக்கிறா…”
“நீங்க என்ன வேலை பாக்குறீங்க…”
“என்னத்த பெரிய வேலை தம்பி. கூலி வேலைக்கு தான் போவேன். காட்டு வேலை இல்லாம இருக்கும் போது கட்டட வேலை, கம்மா வேலை இருக்கும்… வீட்டிலேயே மாவு ஆட்டி விக்கிறேன்… ஆமா, ஏன் இதெல்லாம் கேக்குறீங்க…” கிராம மக்கள் பழகி விட்டாலே சகஜமாக குடும்பம் முதற்கொண்டு கேட்பார்கள் தான். இது என்ன விசாரணை போல என்று நினைக்க கேட்டு விட்டாள் ரேவதி.
“அது ஒன்னுமில்லக்கா, உங்க ஊர் பஞ்சு மில்லு இருக்குல்லா, அங்க வேலைக்கு ஆள் கேட்டாங்க. எங்க சொந்தக்காரங்க தான். கூடமாட இருக்க நம்பிக்கையான ஆள் வேணுமாம். நீங்க நம்ம ஊர்காரங்க. அதா கேட்டேன்…”
“அப்படியா தம்பி. நல்ல வேலை தான். எனக்கு சந்தோசம் தான். ஆனா, நான் முன்னாடியே போகலை தம்பி. ராத்திரியும் வேலை வருமாம். எம் பிள்ளைக்கு நாம் மட்டும் தான் இருக்கேன். பிள்ளையை விட்டு போக முடியாதே தம்பி…”
அருண், மதன் இருவரும் அவர்கள் பேச்சு வார்த்தையை கவனித்து தான் வந்தார்கள்.
ரேவதி சொன்னா, “என் பிள்ளைக்கு நான் மட்டும் தான் இருக்கிறேன்…” எப்படிபட்ட வார்த்தை. ஆழமான வலியையும், காயத்தையும் சொல்லும் வார்த்தை. எத்தனை சொந்தம் இருந்தால் என்ன, கணவன் இல்லாமல் குழந்தையோடு இருக்கும் பெண்கள் உணரும் வலி அது. மனசு வலித்தது. எப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டிய பெண்.
இவள் சரியில்லை என்று கூடி நின்று தூற்றிய ஊர் எங்கே போனது. எங்கள் கட்டு திட்டம் இது தான் என்று பேசிய பெரிய மனிதர்கள் எங்கே? ஒரு பிள்ளையோடு தனித்து நிற்கும் நேரவதிக்கு யார் நியாயம் சொல்லுவார்கள்.
இனி யார் குற்ற உணர்வில் குறுகி நின்றாலும் ரேவதி வாழ்க்கை மாறுமா?…
“எனக்கு ரொம்ப வேண்டியவங்க தான்க்கா. நான் சொல்றேன் பகல்ல மட்டும் வேலைக்கு போங்க…”
ரேவதி முகத்தில் மகிழ்ச்சி,
“நிசாமாவா தம்பி. நீங்க சொன்னா சரி சொல்லுவார்களா? மாச சம்பளம் கிடைக்கும்…” உற்சாகமா ரேவதி பேச,
“அதெல்லாம் சரி சொல்லுவாக. திங்க கிழமை வாரேன்…” என்றான் விக்ரம்.
“ நீங்க எந்த பக்கம் தம்பி?…” தனக்கு வலிய உதவி செய்யும் விக்ரமின் நிலை அறிய கேட்டாள்.
முதல் முறை தயங்கி நின்றான் விக்ரம். எப்படி சொல்ல,
“அது, பஞ்சாயத்தார் மகன்…” மெல்ல சொல்ல,
ரேவதி முகம் மலர்ந்தது. “நீதிபதி அண்ணன் மகனா? கை பிள்ளையா உன்னை நான் பார்த்து இருக்கேன். உங்க அம்மா இறக்கியே விட மாட்டாங்க… உங்க ஊர் கம்மாயில மீன் பிடிக்க வருவோம்…” என்று பலதும் பேசினாள்.
அவனின் மாமா பற்றி ஒரு வார்த்தையும் சொல்ல வில்லை.
“ நீதி அண்ணன் நல்லவரு. எங்க ஊருக்கு ஊத்து தண்ணி கொண்டு வர ஏற்பாடு அவர் தான் பண்ணாரு… சின்ன ஊரா இருந்தாலும், பொதுவா சுத்துபத்து கிராமத்துல எடுக்குற எல்லா முடிவுக்கும் எங்களையும் கூட்டு சேப்பாரு. நல்ல மனுசன்… அவர் மகன், அதான் ஓடி வந்து உதவி செய்யிற…”
ரேவதி மேல் மூவருக்கும் மரியாதை வந்தது. ஆட்டோ கள்ளி காட்டை நெருங்க,
மதன் சொன்னான், “அக்கா அடுத்த பஸ் நாலு மணிக்கு தான். நீ காத்திருந்தா உர மூட்டையை தோட்டத்துல போட்டு இந்த வழி தான் வருவோம். உன்னையும் சேர்த்து ஏத்தி போய் டவுன்ல விட்றோம்…”
“ஆத்தே, நல்லதா போச்சு தம்பி, இல்லை ரோட்டை பார்த்தே உட்காரணும். புள்ளைக்கும் பள்ளியொடம் விட்ரும். ஒரு எட்டு, என்னை டவுனுல விட்டுடுபா தம்பி…” என்று கேட்டு கொள்ள,
“வரும் போது சத்தம் கொடுக்கிறோம்க்கா… வெளிய வந்துரு…” என்றான் மதன்.
ஆட்டோ பிரபா வீட்டை நெருங்க, விக்ரம் கண் கூட அந்த பக்கம் திரும்ப வில்லை. மூணு நாள் லீவு, நிச்சயம் வந்து இருப்பாள். இப்போது அடங்கி கிடக்கும் மனம், அவளை பார்த்தால் ஆட்டம் போடும். எதற்கு வம்பு…
“தம்பி கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க. இறங்கிலாம் போகல…” என்றவள்,
“ பிரபா, அடியே பிரபா…” என்று ரேவதி சத்தம் கொடுக்க,
“கிழிஞ்சது போ…” என்ற மதன், “இவன் சும்மா இருந்தாலும், ஆலமரத்தை ஐயனார் சும்மா இருக்க மாட்டார் போலடா…” என்றான்.
விக்ரமுக்கு ஒரு பரவசம் இருந்த போதும் வெளியில் எதையும் காட்ட வில்லை. வலுக்கட்டாயமாக எட்டி கூட பார்க்க வில்லை. ஆட்டோவிலே தான் இருந்தான்.
“பிரபா…” பலமாக சத்தம் கொடுக்க.
அவள் தான் வெளியில் வந்தாள்.
“அடியே! இங்க ஆட்டோல பாரு…” என்று மேலும் சத்தம் கொடுக்க,
“சித்தி…” என்று ஓடி வந்தாள். விக்ரம், ஆட்டோ உள்ளே இருந்தான். உர மூட்டையை தாங்க, கை மட்டும் வெளியே நீட்டி கம்பியை பிடித்து இருந்தான்.
சித்தி என்று வேகமாக வந்தவள். வெளியே நீட்டி இருந்த நீண்ட கையையும், அதில் இருக்கும் வாட்ச்சையும் பார்த்தவள், பிரேக் போட்டது போல தயங்கி நின்று விட்டாள்.
அவளுக்கா அவன் கை, கட்டிருக்கும் வாட்ச் தெரியாது. அன்று அவனோடு பஸ், ஆட்டோவில் என்று மாறி வந்த போது, குனிந்த அவள் தலை இதை தான் பார்த்து வந்தது.
ஆட்டோ உள்ளே இருப்பது யார் என்று தெரிய, மனதில் ஒரு நடுக்கம். அவன் எட்டி பார்க்காத போதே அவன் உறுதியை கண்டு கொண்டாள். ஆனாலும் மனதி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
“இந்தா, பிடி. தம்பி எங்க?…” என்ற ரேவதி, சில தின்பண்டங்களை கொடுத்தார்.
“அவன் டிவி பாக்குறான். பாப்பா வரல…”
“இல்லை, நான் மட்டும் தான் வந்தேன். ஆத்தாவ பார்த்திட்டு, வந்த ஆட்டோவில் ஊருக்கு போகணும். வர நேரமில்லை, நீ உள்ளே போ…” என்றவள்,
“ரெண்டு தெரு முன்ன போ தம்பி. நான் இறங்கிகிறேன்…” என்று ரேவதி சொல்ல, வண்டி கிளம்பியது.
விக்ரம் முகத்தில் மெல்லிய புன்னகை. ஒதுங்கி கொண்டாச்சு தான். ஆனாலும், அவள் தன்னை அறிந்து தயங்கி நின்றது, பரவசமாக இருந்தது.
ரேவதி இறங்கி கொள்ள, ஆட்டோ நகர்ந்தது. மதன், அவர்களையே கவனித்து வந்தவன். விக்ரம் பார்வை திரும்பாதது கண்டு நிம்மதியே. அவனை பொறுத்த வரை ஒரு செல்வம், ரேவதி போதும்…
வீட்டிற்கு உள்ளே சென்றால் ரேவதி. தாய் ஒரு கட்டிலில் படுத்து கிடக்க,
“எம்மா? என்ன பண்ற?…” என்று வந்தவள்,
அவசரமாக வீட்டை கூட்டி சுத்தம் செய்தாள். பொருட்களை ஒதுங்க வைத்தாள், உலையில் அரிசியை போட்டு, குழம்பை கூட்டி வைத்தாள். போன வண்டி திரும்பும் முன் கிளம்பி விட வேண்டும்.
அவள் தாய் எழுந்து அமர்ந்தவர், மகள் முகத்தையே தான் பார்த்தார். கண்கள் நிறைந்து நின்றது. மூணு ஆண்களுக்கு பின் பிறந்த பெண். ரேவதி என்ற சொல்லுக்கு கூட பொருத்தமாக, அம்சமாக இருப்பாள்.
நல்ல அடர்ந்த நிற தாவணி தான் அணிவாள். காட்டு வேலை செய்தாலும் கச்சிதமாக இருக்கும் பெண். எல்லாம் ஒரு நாள் மாறி போனது. தோட்டத்துக்கு போன பெண் வீட்டுக்கு வர வில்லை. நாலு நாளுக்கு பின் அரை உயிராக தான் வீடு வந்தாள்.
ஊரும், சொந்தமும் பேச, அவமானம் பிடிங்கி தின்றது. சொந்தத்தில் கூட கட்டி கொள்ள ஒருவரும் வர வில்லை. பட்ட அசிங்ககும், அவமானமும் மகள் மேல் வெறுப்பை கூட்ட, அவர்கள் கண் பார்க்க, மீதி இருக்கும் மானத்தை கூட்டி சேர்க்க நினைத்தார்கள் போல…
அவர்கள் வழியில் ஒரு மாப்பிள்ளை. யார் என்றாலும் அன்றைய நிலையில் கவலைப்பட வில்லை. தங்கள் பெருமையை நிலைநாட்ட நினைத்து, ரெண்டாம் தாரமாக முடித்து போட்டார்கள்.
ஐம்பது வயது ஆளுக்கு மனைவியாக, பதினேழு, பதினைந்து வயது பிள்ளைகளுக்கு தாயாக, வீட்டு வேலைக்கும், சமையல் வேலைக்கும் கூட்டி சென்றார்கள். முதல் நான்கு வருடம் கடந்து போனது, மகளை கிட்ட கூட அண்ட விட வில்லை. ஒதுக்கியே வைத்து இருந்தார்கள். அடுத்த வருடம் மாசமாகி விட்டாள் ரேவதி. அவளுக்கு ஐந்து மாதம் இருக்கும் போது நடந்த விபத்தில் அவள் கணவருக்கு ஒரு கால் போனது. பிள்ளைகள் பெரிசாகி அவர்கள் வாழ்க்கையை பார்க்க, ஜனனிக்கு மூன்று வயதான போது இருக்கும் சொத்தை எல்லாம் பிரித்து மகனுக்கு கொடுத்து விட்டவர். கூடவே, சிறு வயதிலேயே திருமணமும் முடித்து வைத்தார். தான் இல்லாமல் போவோம் என்ற பயம் போல…
தாங்கள் இருந்த வீடு மட்டும் ரேவதி மகளுக்கு என்று கொடுத்தார். ரேவதியை பெரியதாக கண்டு கொள்ள வில்லை. அதுவே அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையை காட்ட, தாயாக ரேவதி அம்மாக்கு அப்போது தான் சுருக் என்று தைத்தது.
அடுத்த கொஞ்ச நாளில் ரேவதியின் கணவர் இறந்து போக, ரேவதி தன் பிள்ளையோடு தனித்து நின்றாள். அண்ணங்களும் அவரவர் குடும்பம், வருமானம் என்று தொழில் தேடி ஊரை விட்டு செல்ல, ரேவதி தனியாக தன் பிள்ளையை கொண்டு கூலி வேலைக்கு செல்ல தொடங்கினாள்.
யாரையும் குறை சொல்ல வில்லை, குற்றம் சொல்ல வில்லை. தன் விதி என்று தனித்து ஓட தொடங்கி விட்டாள். காலம் கடந்த, தனிமை வந்த பின் தான். மகளுக்கு தாங்கள் செய்தது அநியாயமோ என்று மனம் அரித்தது.
ஒழுக்கம் கெட்டவள் என்று பெயர் எடுத்த ரேவதி தான். அவளை மாதிரி இருக்கணும், புருசன் இல்லாட்டியும் ரேவதி எம்புட்டு ஒழுக்கம். பேச்சு வார்த்தை கூட தள்ளி தான் நிக்கும்… என்ற பெயரை எடுத்து விட்டாள்.
ஆனால், அவள் வாழ்க்கை? அது எங்கே இருக்குறது. பிள்ளை என்ற ஒன்று கையில் இருக்க, அதை பிடித்து கொண்டு மீதம் இருக்கும் வாழ்க்கையை கடக்க நினைக்கிறாள். கணவனை இழுந்த பலர் போல, பிள்ளை மட்டுமே பற்று கோல்.
“ஏம்மா, என்னை பார்த்து கண்ணு கலங்குற?…” தாயை கேட்டாள் ரேவதி.
ஒன்றுமில்லை என்று தலையசைத்தவர், கண்கள் மேலும் நிரம்பியது.
அவர் தான் வருடா, வருட கோவில் திருவிழாவில் செல்வதை காண்கிறாரே. மனைவி, பிள்ளைகள் உடன் மரியாதையாக அவன் நிக்கும் போது கண்கள் தன் மகளை தான் தேடும்.
சாதாரண சேலையில், மகளை கையில் பிடித்து கொண்டு, மஞ்சள் நீர், குங்குமம் கொடுக்கும் போது ஒதுங்கி நின்று, வெறும் திருநீறை மட்டும் மகள் நெற்றியில் வைக்கும் போது நெஞ்சு எறியும். மகள் விதி மாற வழி இல்லாமல் போனதே…
ரேவதி வேலை முடித்து நிமிர, “ஒரு வாய் சாப்பிட்டு போ தாயி…” என்ற அம்மாக்கு…
“வேணாம்மா, பிள்ளையை விட்டு கறி கஞ்சி குடிக்க எனக்கு மனசு வராது. நீ நெனச்சிகே இருப்பான்னு தான் கொண்டு ஓடி வந்தேன்…” என்ற ரேவதி, சொம்பு தண்ணியை தூக்க,
வெளியே வண்டி சத்தம் கெட்டது.
“எம்மா, வண்டி வந்துருச்சு. அடுத்த பத்து நாள்ல வாரேன். எதுவும் ஒன்னுன்னா, தமிழ் செல்வம் மாமங்கிட்ட சொல்லி போன் போடு…” என்றவள் அவசரமாக கிளம்பி விட்டாள்.
ஆட்டோ திரும்ப பிரபா வீட்டை கடக்கும் போது, மெல்ல வெளியே எட்டி பார்த்தான் விக்ரம். அவனை போலவே அவளும் வெளியில் தான் நின்று இருந்தாள். அவன் தலையை நீட்டி பார்க்கும் போது அவளும் அவன் முகத்தை பார்த்து தான் நின்றாள்.
ஒரு சலனமில்லை. நேர் பார்வை தான். முகத்தை தான் பார்த்தார்கள். விக்ரமுக்கு மனசெல்லாம் அவள் தான். ஆனால், ரேவதியை பார்க்கும் போது, வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என்று தான் நினைத்தான்.
ஆட்டோ மெயின் ரோடு ஏற, இடையில் வந்தது செல்வம் கார். அவர்களை வழி மறித்து நிற்க, சங்கடமான நிலமை தான்.
ஆட்டோ உள்ளே இருப்பது யார் என்றெல்லாம் எட்டி பார்க்க வில்லை செல்வம். மதனை கண்டு அருகே வந்தவர்,
“எங்கடா விக்ரம். அவனை தேடி தான் வந்தேன்…” என்று ஆட்டோ உள்ளே எட்டி பார்க்க, திகைத்து போனான்.
நெஞ்சின் ஓரத்தில் நெருஞ்சி முள்ளாக குத்தி கொண்டே இருப்பவள் தான். ஆனால், நேராக பார்த்து ஒரு வருடம் ஆனது. ஊர் கோவிலுக்கு மட்டுமே பார்க்க முடியும். அதுவும் சில நிமிடம்.
செல்வத்தின் நிலை விக்ரமுக்கு புரிந்தது. ஏனோ, கோபம் வர வில்லை. அது ரேவதியை கொண்டு தான். அப்பாவி பெண்ணிடம் என்ன வன்மம். வாழ்க்கையில் போராட்டம் என்பதை தாண்டி, வாழ்க்கையையே போராட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணை, தன் அக்காக்கு போட்டியாக நினைக்க மனம் வரவில்லை. பாவமாக தான் நினைத்தான்.
“உன்னை தான் தேடி வந்தேன். இனி நீ இங்க இருக்க வேணாம். என் கூட திருச்சிக்கே வந்திடு…” விக்ரமை பார்த்தே பேச்சு இருந்தாலும், லேசான பார்வை ரேவதி மேல் விழுக தான் செய்தது.
“நீங்க வீட்டுக்கு போங்க. அங்க போய் பேசிக்கலாம்…” விக்ரம் செல்வத்தை அனுப்ப பார்த்தான்.
செல்வமும் நிற்க வில்லை. ரேவதி தோற்றம் அசைத்தது. யாரோ, எவரோ என்பது போல தான் அமர்ந்து இருந்தாள். செல்வதிற்கு தான் மனசு கனத்தது.
“எவ்வளவு பேசி இருப்போம். குழந்தை வரை சொன்னாளே… திருமணம் செய்து கொள்ள போகும் முதல் நாள் கூட ரேவதி கண்களில் அவ்வளவு கனவு. எதிர்காலத்தை குறித்து அத்தனை நம்பிக்கை. எவ்வளவு ஆசையாக இருந்தாள்… காலத்திற்கும் நீ மட்டும் தான் என்ற நிலை மாறி போனதே. யாரோ என்றாகி போனார்கள். நேர் கொண்டு பார்க்க கூட முடியாதே…”
எப்போதும் அடர்ந்த நிறம் தான் அவளுக்கு பிடிக்கும். வாடா மல்லி, ஊதா, காப்பி கொட்டை கலர், குங்கும நிறம் என்று தான் உடுத்துவாள். இன்று ஏதோ மங்கிய நிறம். அது அவள் கோலத்தை காட்ட, நொந்து போனான் செல்வம்.
எங்களை பிரித்து வைத்து கொடுமை செய்த விதி. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்து இருக்க கூடாதா? ரேவதி வெளிப்படையாக வலியை அனுபவிக்க, செல்வம் உள்ளுக்குள் வலி கண்டான்.
செல்வத்தை கண்டே கொள்ளாமல் வேற எங்கோ பார்த்து இருந்த ரேவதி. தான் எல்லாத்தையும் கடந்து விட்டேன் என்று காட்டி கொண்ட ரேவதி. அவன் கடந்த பின் ஒரு பெருமூச்சு விட்டாள்.
அப்போது அந்த முகத்தில் தான் அத்தனை வலி, ஏமாற்றம், ஏக்கம், பரிதவிப்பு, நிராசை, இயலாமை என்று எல்லாம் கலந்து நிக்க,
விக்ரம் நினைத்து கொண்டான், “முதல் காதல் என்றும் மறக்காது போல. ஒன்னு காதலிக்க கூடாது, காதலித்தால் நிச்சயம் கை பிடிக்க வேண்டும். இல்லையா, அதை கடந்து விடும் அளவுக்கு நல்ல வாழ்க்கை துணையாவது அமைந்து விட வேண்டும். அப்படி இல்லை வாழ்க்கையில் ஒரு மெல்லிய வலி நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும்…”
பிரபாவதி, தனக்கும் வாழ்க்கை முழுவதும் வரும் மெல்லிய வலியா? என்று நினைத்தவன். தன் மாமா உடன் ஊருக்கே செல்ல தீர்மானித்து கொண்டான்.
error: Content is protected !!