Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 10.1

அத்தியாயம் 10

காவ்யாவிடம் தான் பேசியதை விஷ்ணுவிற்கு விளக்கினார் கோபாலன். ஏதும் சொல்லாமல் கேட்டிருந்தான். “உனக்கு காவ்யாவை பார்க்க பிடிக்கலனா ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடறேன் விஷ்ணு” என்றார்.

“என்னை யோசிச்சு ஏதும் செய்யாதிங்கப்பா. அவ வீட்டுல இருக்கிறதால எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. என்கிட்ட பேசக்கூடாதுனு மட்டும் சொல்லிடுங்க” என்றான் முன்பு சொன்னதை போலவே.

என் வாழ்க்கை என் இஷ்டம்னு பெத்தவங்க, கூடப்பிறந்தவங்கனு யாரைப்பத்தியும் யோசிக்காம திமிர்ல எதாவது செய்ய வேண்டியது. பிரச்சனைனு வந்ததுக்கப்புறம் ஒன்னுமே நடக்காத மாதிரி வந்து ஒட்டிக்கிறது.



Advertisement

ஆதரவு தேடி வந்த மகளை தண்டிக்க முடியாத பெத்தவங்களோட இளகிய மனசுதான் இவளை மாதிரியான பொண்ணுங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட் என்று கோபம் வந்ததுதான்.

ஆனால் அவளை துரத்திவிட்டால் அன்னையின் நிம்மதி போய்விடுமே. நாம் கோபத்தை காட்டி அதனால் அவளுக்கு ஏதேனும் விபரீதம் ஆகிவிட்டால் அதன்பின் தந்தையும் மனமுடைந்திடுவார்.

தற்போதும் காவ்யா மீது கோபம் கடுகளவும் குறையவில்லை. ஆனால் அவளின் தப்பை, துரோகத்தை மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்குமான முழு உரிமை பெற்றவருக்கு உண்டு என்று தன்னை சமாதானம் செய்துகொண்டான் விஷ்ணு.

Advertisement

நேற்று விஷாலினிக்கு நடந்த பிரச்சனையின் போது அவள் பேசிய வலிமிகுந்த வார்த்தைகளும் கோபாலன் மனதில் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.

Advertisement

அதோடு மேகலையின் தாத்தாவும் பாட்டியும் மேகலையை ஆதரிக்காமலிருந்திருந்தால் மேகலையின் வாழ்க்கை இன்னுமல்லவா கடினமாகியிருக்கும்? அந்த நிலை காவ்யாவிற்கு வர தன் கோபம் காரணமாகிடக்கூடாது என்று கோபாலன் காவ்யாவை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை சொன்னார்.

உங்க மனசுக்கு எது சரினு படுதோ அதை செய்ங்கப்பா. எனக்கு விளக்கி சொல்லனும்னு அவசியமில்லை என்று தன்மையாகவே நேற்றும் சொல்லியிருந்தான். சொன்னதுபோல் காவ்யாவிற்கும் பெற்றோருக்கும் இடையே நிற்காமல் விலகி நின்றான்.

தனதறையில் படுத்திருந்த காவ்யாவிற்கு கண்ணீர் நிற்கவில்லை. இங்கு வந்ததிலிருந்து பெற்றோர் தன்னை ஏற்பார்களா? அண்ணன் என்ன சொல்வானோ என்ற பயத்திலேயே நேற்றைய நாளை கழித்தாள்.

Advertisement

அடுத்தநாள் விஷாலினி பிரச்சனை… அப்பொழுது அவள் பேசிய வார்த்தைகளால் இன்னும் குறுகிப்போனாள் காவ்யா. அன்னை சொன்னது போல தன்னைவிட மூன்று வயசு சிறியவளுக்கு இருக்கும் அறிவு தனக்கில்லாமல் போனது உண்மைதான்.

அன்னைக்காக எத்தனை பேசினாள்? ஆனால் நான் தாய் தந்தையை நினைக்காமல் சென்றுவிட்டேனே…

காதலிக்கும்போதும், திருமணம் செய்யும்போதும், காதல் என்றாலே பெற்றோர்கள் முதலில் மறுப்பார்கள். சில வருடங்கள் கழித்து மன்னிப்பார்கள். இது எல்லா இடத்திலும் நடக்கும் நிகழ்வுதானே. வாழ்க்கை ஒருமுறைதான் வாழ முடியும். நமக்கு பிடித்தவர்களோடு வாழ்வதில் தவறேதும் இல்லை என்று சாதாரணமாகத்தான் நினைத்தாள் காவ்யா.

ஆனால் தான் சென்ற பின்னே தந்தைக்கு நெஞ்சுவலி, விஷ்ணு பெல்ட்டால் அடித்துக்கொண்டது, இன்டர்வியு செல்ல மறுப்பது என்று  அனைத்தும் அன்னை விளக்கியதில் உடைந்து போனாள் காவ்யா.

தந்தை அன்பு பாசத்திற்கு கட்டுபட்டவர் என காவ்யா அறிந்ததுதான். தன்மீதான தந்தையின் அன்பே தன்னை மன்னிக்க வைக்கும் என்றுதான் வீட்டைவிட்டு வெளியேறினாள். ஆனால் தன்னால் உயிர்போகும் நிலை வருமென உண்மையாய் எதிர்பார்க்கவில்லை. தந்தை உயிருக்கு ஏதேனும் ஆகியிருந்தால் என யோசிக்கக்கூட முடியவில்லை.

தந்தை உடல்நிலை எண்ணித்தான் விஷ்ணு அமைதியாக இருக்கிறான் என்று அன்னை மூலம் அறிந்திருந்தாள். விஷ்ணுவின் எதிர்காலமும் தன்னால் பாதித்ததை ஏற்க முடியாமல் மனம் தவித்தது.

இருபது நாள்களாய் வேதனையில் உழன்றவள், நேற்றுதான் தனது பழைய மொபைலை தேடி எடுத்தாள். தான் இளநிலை படித்த கல்லூரியில் இடம் கிடைக்குமா? என்று விசாரிக்க வேண்டியிருந்தது. ஆசிரியர் மற்றும் தோழிகளின் கைப்பேசி எண்கள் பழைய மொபைலில் இருப்பதால் அதனை எடுத்தாள்.

சுவிட் ஆஃப் செய்யப்பட்டிப்பதை கண்டவள், யாராவது தோழிகள் அழைத்திருப்பார்கள். கோபம் கொண்டு விஷ்ணு ஆஃப் செய்திருப்பான் என்ற நினைத்தபடி மொபைலை உயிர்ப்பித்தாள்.

கடைசியாக மேகலை எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதை பார்த்ததும் அவரிடம் தன் திருமணம் குறித்து பேசியது நினைவு வர கண்ணீர் விட்டாள். தனது நலனிற்காக பேச வந்தவர்களிடம் அப்படி பேசிவிட்டோமே என்று வருந்தினாள். சாரி ஆன்ட்டி என்று மனதாற சொன்னாள்.

வாட்ஸாப் சென்று பார்க்க அதிலும் மேகலை எண்ணே முதலில் இருந்தது. ஆன்ட்டி மெஸேஜ் பண்ணமாட்டாங்களே, விஷாலினியாக இருக்குமோ என்று ஆராய்ந்தவளுக்கு கண்ணீர் பெருகியது.

பெற்றோர்களுக்கு தெரியாமல் கல்யாணம் செய்பவர்கள் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள் என்ற விஷாலினியின் செய்தி வெகுவாய் தாக்கியது. எத்தனை பக்குவமாக யோசித்திருக்கிறாள். இவள் சொன்னது போலத்தானே திவாகரும் நடந்துகொண்டான் என்று கலங்கினாள்.

அதன் பிறகு அவள் அனுப்பிய மொத்த செய்தியையும் வாசித்து, அழுகையோடு அவளனுப்பிய குரல்வழி செய்தியையும் கேட்டறிந்தவளுக்கு பேச்சு வரவில்லை. தந்தை மருத்துவமணையில் அனுமதித்த போது பேசியிருக்கிறாள். செய்திகளை விஷ்ணுதான் பார்த்திருப்பான். இந்த கோபத்தில்தான் மொபைலை அணைத்திருக்கிறான் எனப்புரிந்தது.

கடந்த இருபது நாள்களில் கணவனிடமிருந்து நான்கு முறை அழைப்பு வந்தது. நான்காம் முறை அழைப்பை ஏற்றவள், “என்னை மதிக்காத உன் குடும்பத்தை அட்ஜஸ்ட் பண்ணினாத்தான் உன்னோட வாழ முடியும்னா,  அப்படி வாழ்க்கை எனக்கு தேவையில்லை, இனி கால் பண்ணாத” என்று இணைப்பை துண்டித்திருந்தாள்.

அதன் பின் திவாகரும் அழைக்கவில்லை. தண்டச்சோறு என்று அம்மாவும் அக்காவும் உண்மையைத்தானே சென்னார்கள் என்ற திவாகரின் பதிலில்தான் அவனிடத்தில் தனக்கான இடம் எது என்பதை அறிந்தாள். அவனின் அலட்டலில்லாத அட்வைஸை கேட்க முடியவில்லை காவ்யாவினால்.

திருமண வாழ்வின் நீண்ட பயணத்தின் ஆரம்பமே ஆட்டம் கண்டது. இரண்டு மாதம் பொறுத்துப் பார்த்தாள். திவாகர் தனக்காக ஒரு வார்த்தை கூட அவனின் குடும்பத்தாரிடம் பேசவில்லை. இவர்கள் குடும்பத்திற்கு அடிமையாக இருக்கவா தந்தை அத்தனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார் என்று அப்பொழுதான் தந்தையின் அருமை புரிந்தது.

இங்கே தண்டச்சோறு என்கிறார்கள். காபி முதற்கொண்டு உணவு வரை படிக்கும் இடத்திற்கே அன்னை கொண்டு வந்ததை நினைத்து ஏங்கினாள். இங்கே ஒருவரும் தன்னிடம் பேசுவதில்லை. தன்னிடம் வம்பளக்கவே மற்ற நண்பர்களின் அழைப்பை மறுத்து வீட்டிற்கு வரும் அண்ணனை நினைத்தாள்.

விஷ்ணு மிகுந்த கோபத்திலிருப்பான் என்று தெரியும். அடித்து கொன்றாலும் சரி… என் வீட்டில் உயிர் போகட்டும் என்று கிளம்பிவிட்டாள் அன்னை வீட்டிற்கு.

தனது நினைப்பிற்கு மாறாக விஷ்ணு ஏதும் சொல்லாமல் இருந்ததே பெரும் நிம்மதியை கொடுத்தது. திட்டினாலும் அன்னை அரவணைத்துக்கொண்டார்.

கோபமிருந்த போதும் தந்தை தனது எதிர்காலத்தை யோசிக்கிறார். இதைவிட வேறு என்ன வேண்டும்? இப்படிப்பட்ட சொர்கத்தை விட்டு சென்றிருக்கிறோமே என மிகவும் வருந்தினாள்.

மொபைலில் மற்ற தோழிகளின் செய்திகளை பார்த்தாள். காலேஜ் ஜாயின் பண்ணலையா? வேற காலேஜ் போறியா? கல்யாணம் செய்துகிட்டியா? இப்படியான பல கேள்விகள் இருந்தது.

தனது ஆசிரியருக்கு அழைத்து கல்லூரியில் முதுநிலை படிப்பிற்கு இடம் கிடைக்குமா என விசாரித்தாள். பின்னே தோழிக்கு அழைத்து பேசினாள். அரைமணி நேரத்திற்கு பிறகு, “காவ்யா… விஷ்ணு மதிய சாப்பாடுக்கு வரதுக்குள்ள வந்து சாப்பிடு” என்றழைத்தார் பிரபாவதி.

சாப்பாடு எடுத்து வைத்த பின்னே இதோ வரோம் என்று விஷ்ணுவும் காவ்யாவும் பல மணிநேரம் பலமுறை அரட்டையில் ஆழ்ந்திருக்கிறாகள். தற்போது அன்னையின் அழைப்பு அதனை நியாபகப்படுத்த, மனம் வலித்தது. தான் செய்தது சாதாரண விசயமல்லவே என்று தன்னை தானே சமாதானம் செய்தபடி வெளியே வந்தாள் காவ்யா.

மகளின் அழுத முகம் கண்ட பிரபாவதி “உனக்கு தெரியாத பழைய விசயம் ஒன்னு சொல்லவா?” என்றார்.

தெரியாத விசயமா என்ற பதட்டத்தோடு காவ்யா பார்க்க, “உன் அப்பா ஏன் செங்கற்பட்டுக்கு போறதில்லனு தெரியுமா?” என்றார்.

“தெரியும்மா, அத்தை இறந்ததுனால போறதில்ல. அத்தைக்கு எதோ வியாதி இருந்ததாம். தங்கையை காப்பாத்த முடியாம ஆகிடுச்சுனு அப்பா ரொம்ப வருத்தப்படுவார். தங்கையை பறிகொடுத்துட்டு அந்த ஊர்ல இருக்க முடியாம சென்னை வந்ததா சொல்லியிருக்கார்” என்றாள்.

“ஹம்… இதெல்லாம் ஊரார்க்காக சொன்ன பொய். உண்மை அதில்ல” என்க, அதிர்வாய் விழித்தாள் காவ்யா.

“உன் சித்தி (கோபாலனின் தம்பி மனைவி) எனக்கு ஒன்னுவிட்ட சின்னம்மா பொண்ணுதான். சித்தியோட அண்ணன் உன் அத்தையை (கோபாலனின் தங்கை) விரும்பியிருக்கார்.

ஆனா வசதியான இடம் வரவும் நான் உன்னை விரும்பல, கட்டிகிற முறையாச்சேனு தமாஷ் பேசினா இப்படி எடுத்துப்பியானு சொல்லியிருக்கான்.

உன் அத்தை உன் அப்பாகிட்ட விசயத்தை சொல்லி வேதனை பட்டுருக்காங்க. உன்னை ஏமாத்திட்டு வேற பார்ப்பானா? நான் பார்த்துக்கிறேனு உன் அப்பா தைரியம் சொல்லியிருக்கார். ஆனா அடுத்த வாரமே கல்யாணம்னு உன் சித்தியோட அப்பாம்மா பத்திரிக்கையோட வந்தாங்க.

தங்கையை ஏமாத்தினவன் சொந்த மச்சான்றதால குடும்பத்துக்குள்ள பெரிய சண்டையாகிடுச்சு. அவனுக்கு பார்த்திருக்க பொண்ணு வீட்டுல போய் உண்மையை சொல்றேனு உன் அப்பா பிடிவாதமா நின்னார். அப்படி சண்டை போட்டு, இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்தி எனக்கு அவரை கட்டி வைக்க வேணாம்னு உன் அத்தை சொன்னாங்க.

அப்போ நல்ல பையனா பார்க்கிறேன். கல்யாணம் செய்துக்கனும்னு உன் அப்பா கண்டிஷன் போட்டார். உன் அத்தையும் சம்மதிச்சாங்க. எப்படியாவது ஒரு மாசத்துல கல்யாணத்தை செய்து வச்சிடனும்னு உன் அப்பா தீவிரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சார்.

ஆனா உன் சித்தியோட தம்பி கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே உன் அத்தை தற்கொலை பண்ணிகிடுச்சு. தங்கை காதல் விவகாரம் வெளில தெரிஞ்சா… செத்தும் கெட்ட பேராகிடுமேனு அமைதியாகிட்டார் உன் அப்பா. தங்கை சாவுக்கு காரணமானவனை பழிவாங்கவும் முடியல. தங்கையையும் காப்பாத்த முடியலன்றதை அவரால தாங்கிக்க முடியல.

செங்கற்பட்டுல நம்ம வீடு, என் அம்மா வீடு, உன் சித்தியோட அம்மா வீடுனு எல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்தான். சித்தியை பார்க்க அவங்கப்பா வீட்டாளுங்க வரும்போதெல்லாம் அவங்க முகத்துல முழிக்கனுமேனும், தங்கையை ஏமாத்தினவனை உறவுக்காரனா ஏற்க முடியாமலும் சொந்த ஊரை விட்டுட்டு சென்னைக்கு வந்தார்.

உன் தாத்தா பாட்டி இருக்கும்வரை அவங்களை பார்க்க போய்ட்டுதான் இருந்தார். அவங்க போனதுக்கப்புறம் ஊர் பக்கமே போறதேயில்ல. நாள்பட பட உன் சித்திக்கும் நம்ம அப்பாவை பார்க்க, பேச குற்றவுணர்வாகிடுச்சு. என்கிட்ட மட்டும் பேசுவா” என்றார் வேதனையோடு.

காவ்யா அதிர்வோடு கேட்டிருக்க, “வசதியை காரணம் காட்டி தங்கையை ஏமாத்தினவன் முன்ன நல்லா வாழ்ந்து காட்டனும்ன்ற வெறியோட கஷ்டப்பட்டு உங்களை படிக்க வச்சார். ஆனா நீ எங்களுக்கு பச்ச துரோகம் செய்துட்டு போய்ட்ட” என்றார் வேதனையாக.

காவ்யா தலைகவிழ, “அந்த காலத்துலயிருந்து இந்த காலம் வரை, உன்னை மாதிரி கல்யாணம் செய்துக்கிறதுல… தப்பு ஆண், பெண் இரண்டு பேர் சம்மதப்பட்டதுனாலும், பொண்ணுங்களைத்தான் மகனை மயக்கி கல்யாணம் செய்துக்கிட்டானு கேவலமா பேசுவாங்க.

நீ ஓடிப்போன இரண்டாவது நாள் உன் தாத்தாவோட இறந்தநாள். வழக்கமா நான் மட்டும்தான் சாமி கும்பிட போய்ட்டு வருவேன். உன் சித்தப்பா அழைச்சார். உன் விசயத்தை சொல்லவேண்டிய கட்டாயம் ஆகிடுச்சு.

சாமி கும்பிட நான் வரலைன்னதும் சொந்தங்கள் விசாரிச்சிருக்காங்க. உன் சித்தப்பா முகமே எதோ பெரிய பிரச்சனைனு காட்டி கொடுத்திருக்கு. நீ எங்களை ஏமாத்திட்டு போய்ட்டனு உன் சித்திகிட்ட சொல்லி அழுதாராம். விசயம் எப்படியோ பரவிடுச்சு.

துக்கம் விசாரிக்கிற மாதிரி போன் மேல போன் எனக்கு. எல்லாருக்கும் பதில் சொல்லும்போதே பாதி செத்துட்டேன். யார் முகத்துல முழிக்கக்கூடாதுனு உன் அப்பா அந்த ஊரை விட்டு வந்தாரோ… அவங்கள்லாம்தான் நம்மளை கேவலமா பேசியிருக்காங்க. உன் சித்தப்பா என்கிட்ட சொல்லிட்டு எவ்வளோ வேதனை பட்டார் தெரியுமா?” என்றார் வேதனையாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!