Skip to content
Post Views: 1,966
“விஷ்ணு கீழ வா” உறக்க கலக்கம் முழுதாய் கூட அகலவில்லை விஷ்ணுவுக்கு. கைபேசியை காதிலிருந்து எடுத்து நேரத்தை பார்த்தான். ஆறு ஐந்து என காட்டியது.
“என்னடா இது நடு ராத்திரி கால் பண்ணி வர சொல்ற?”
“விஷ்ணு எந்திரி மொத” போர்வையை இன்னும் சுகமாய் போர்த்திய விஷ்ணு, “வீட்டுக்குள்ள வாடா காபி குடிச்சிட்டு போகலாம்”
“மவனே நீ இப்போ வெளிய வரல வீடு உள்ள வந்து வெட்டுவேன்” எழுந்துவிட்டான் விஷ்ணு.
Advertisement
“அப்டி என்ன தா அவசரமோ. குளிச்சிட்டு வர்றேன்டா” “ஒன்னும் வேணாம், என்னமோ டெய்லி குளிக்கிற மாதிரி தான். பல் தேச்சிட்டு சென்ட் அடிச்சிட்டு வாடா”
சரி என்ற விஷ்ணு, ‘இவரு சொல்றதை நாம அப்டியே செய்யணுமா? நேத்தே சண்டேனு குளிக்கல’ ஐந்தே நிமிடம் தான் பிடித்தது விஷ்ணுவுக்கு குளித்து வர.
ஈரமான தலைமுடியோடு வந்தவன் வேகமாக வாகனத்தினுள் ஏறி அமர்ந்தான், “எங்க போறோம்?” என்ற கேள்வியோடு.
Advertisement
“உன்ன கடத்தி குடுத்தா ஒரு கோடி தர்றேன்னு சொன்னாங்க”
Advertisement
சத்தமாக சிரித்த விஷ்ணு வாகனத்தின் கண்ணாடியை திறந்து சிகையை காய வைக்கும் வேளையில் இறங்கினான்.
“என்னடா இந்த பக்கம், தாமோதரன் பாக்க போறோமா?”
“பொண்ணு கேக்க போறோம்”
Advertisement
“டேய் லூசுப்பயலே, வண்டிய திருப்பு. நாம கேட்ட ஒடனே இந்தாப்பானு அவளை கை புடிச்சு குடுத்துடுவான் பாரு”
“சரி எப்போ தான் கல்யாணம் பண்ணிக்க போற?”
“இந்த பிரச்சனை முடியட்டும். அந்த ஆளுக்கு ஒரு முடிவு கட்டிட்டு பாக்கலாம்”
“அதுக்குள்ள அந்த பொண்ணுக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் ஆகிடும்” விஷ்ணு விழி விரிய பார்த்திபனை பார்த்தான்.
தலை அசைத்த பார்த்திபன், “கல்யாணம் முடிவு பண்ணிருக்கான் அந்த கிழவன், மூணு வாரத்துல. பிஸ்னஸ் டீல் மாதிரி பண்டமாற்று முறை. பொண்ணு குடுத்து மில் வாங்குறான்.
ஃபுள்ளி ஆட்டோமேட்டட் காட்டன் மில். மாப்பிள்ளைக்காரனுக்கு பிஸ்னஸ் சரியா வரலனு இவன் கைக்கு பாதிக்கு மேல ஷேர் வருது. போனஸ் நியூஸ், மாப்பிள்ளை டிவோர்சி”
“கோத்தா செத்தான்டா இன்னைக்கு அவன்” நுனி மூக்கு சிவந்து போனது விஷ்ணுக்கு கோவத்தில்.
“நீ ஏன் ராஜா கோவப்படுற, பொறுமையா தாமோதரனை வச்சு செஞ்சிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்”
அவன் வழியிலே சென்று பார்த்திபன் நண்பனை கலாய்க்க, “பார்த்தி… ஆரபி உன் பக்கத்துல இருக்குறது எவ்ளோ தெம்பா இருக்கு, யோசிச்சு பாத்தா எனக்கும் கூட ஆள் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. அதுனால நீ சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்” என்றான் நண்பன் சொல் கேட்கும் சிறந்த நண்பனாக விஷ்ணு.
அந்த வாகனத்தில் பார்த்திபன் சிரிப்பொலி எதிரொலிக்க வாகனம் தாமோதரன் வீட்டினை அடைந்தது.
வாட்ச்மேன் கதவை திறக்காமல் யாரென்று விசாரிக்க வர, “வீட்டோட மாப்பிள்ளை காரை நிறுத்துற அளவு தைரியம் உனக்கு யாருயா குடுத்தா?”
பார்த்திபன் கேட்ட தோரணையில் அவன் ஓடி சென்று கதவை திறக்க பார்த்திபன் விஷ்ணுவை பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
“டேய் பார்த்தி இன்னைக்கு நீ ஏதோ பார்ம்ல தான்டா இருக்க”
நண்பனது எனர்ஜி விஷ்ணுவுக்கும் தொற்றிக்கொள்ள முன் கண்ணாடியை திருப்பி அவனை போலவே சிலுப்பி நின்ற சிகையை கை கொண்டு கோத, தன்னுடைய சீப்பை எடுத்து கொடுத்தான் பார்த்திபன்.
“இதான்டா என் பார்த்தி” புகழாரம் அதிகமாக விஷ்ணுவிடமிருந்து வர அவன் சிகையை கலைத்துவிட்டு கீழே இறங்கினான் பார்த்திபன்.
வீட்டின் வாசல் திறந்தே இருக்க, இருவரும் தங்கு தடையின்றி உள்ளே நுழைந்தனர். இருவரையும் முதலில் பார்த்த அனாயாவின் அன்னை கையில் இருந்த சாம்பிராணி கரண்டியை அப்படியே தரையில் போட்டுவிட நண்பர்கள் இருவரின் பார்வையும் அவரிடம் சென்றது.
ஆனால் எந்த வார்த்தையும் பரிமாறப்படவில்லை. அதிர்ச்சியிலிருந்து அவரே வெளி வந்து வேகமாக தந்தையை அழைத்து வந்திருந்தார்.
“செக்யூரிட்டி” தாமோதரன் அறையின் துவக்கத்தில் குரலை உயர்த்த ஒரு படையே ஓடி வந்தது.
“யோவ் இப்போ எதுக்கு இவனுங்கள கூப்புடுற? சண்டை போட வரல நாங்க. சம்மந்தம் பேச வந்துருக்கோம்” என்றான் பார்த்திபன்.
“அனாயா எங்க?”
“என்னடா ட்ராமா போட வந்துருக்கீங்க? வெளிய போங்க” என்றார் தாமோதரன் ஆவேசமாக.
எது நடக்க கூடாதென அவர் பயந்தாரோ அது நடப்பதற்கான பல சாத்தியக்கூறுகள் இங்கு தென்படுகிறது.
“முடியாதுங்க. அனாயா” அழுத்தமாக மறுத்த பார்த்திபன் அனாயாவை உரக்க அழைத்தான்.
“தம்பி, என் பொண்ணுக்கு கல்யாணம் பேசி முடிவு பண்ணிருக்கோம். இந்த நேரத்துல வந்து இப்டி பிரச்சனை பண்றிங்களே. போய்டுங்க ப்பா” என்றார் அனாயாவின் அன்னை வேண்டுதலாய்.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விஷ்ணு, “சரிங்க பையன் விவரம் சொல்லுங்க”
தாமோதரன், “அதை எதுக்குடா உன்கிட்ட சொல்லணும்?” குரலை உயர்த்தினார்.
“சொல்லணும் பெருசு. என்கிட்ட கண்டிப்பா சொல்லணும். எவனோ ஒரு தருதலைய புடிச்சு கட்டி வப்ப நின்னு பாத்துட்டு இருக்கணுமா?”
அனாயா அன்னை, “பெத்தவங்க நாங்க எங்க பொண்ணுக்கு நல்லது தான் செய்வோம்”
விஷ்ணு, “மனசாட்சியை மொத்தமா உங்கப்பா கூட சேர்த்து பொதைச்சிட்டீங்கல? கேடுகெட்ட அப்பனோட புத்தி தானே இருக்கும். பெத்த பொண்ண பிஸ்னஸ் டீல் மாதிரி எவனுக்கோ விக்க பாக்குறது நல்லதா உங்களுக்கு? பெத்ததோட உங்க கடமை முடிஞ்சது. அப்டியே ஒதுங்கிக்கோங்க”
சினம் கொண்டு எழுந்த தாமோதரன் விஷ்ணுவின் சட்டையை பின்னிருந்து பிடித்து இழுக்க ஒரு நொடி தடுமாறிய விஷ்ணு சுதாரித்து கால் ஊன்றி நின்றான் அழுத்தமாக.
“யாரு வீட்டுக்குள்ள வந்து நாயே யாரைடா பேசுற? தெரு பொறுக்கி, சுட்டு தள்ளிடுவேன்”
பார்த்திபன், “வயசுக்கு கூட உனக்கு மரியாதை குடுக்க மனசு வரல, கை எடுயா” நண்பன் சட்டையை பிடித்திருந்த தாமோதரன் கையை உதர தடுமாறி பின் நின்றார்.
“யாரை பாத்து பொறுக்கி சொல்ற, ஊர் ஊரா இந்த வயசுலயும் பொண்ணுங்க பின்னாடி மேயிற உன் மாப்பிள்ளை பொறுக்கியா, இல்ல எல்லாம் தெரிஞ்சும் வேடிக்கை பாக்குற நீ பொறுக்கியா?”
பார்த்திபன் கேட்ட கேள்வியில் அனாயாவின் அன்னை முகத்தை திருப்பி கண்ணீரை துடைக்க இதை பார்த்த விஷ்ணுவுக்கு வெறுத்து போனது.
இப்படியும் பெற்றவர்கள் இருப்பதற்கு இல்லாமலே இருந்திருக்கலாம், ஏதோ ஒரு உந்துதல் வர விழி சுழற்றி பார்த்த விஷ்ணு கண்ணில் பட்டாள் அனாயா. மாடி சுவற்றில் விழி மூடி சாய்ந்து நின்றாள்.
“அமைதியா பேச மட்டும் தான் வந்தோம். நீ செஞ்சதுக்கு நாங்க செஞ்சோம், நாங்க செஞ்சதுக்கு பதில் நீ அதிகமாவே செஞ்சிட்ட. நியாயப்படி பாத்தா சேதாரம் எங்க பக்கம் அதிகம். எல்லாத்தையும் விட்டு அனாயாக்காக மட்டுமே இறங்கி வந்துருக்கோம் நல்ல முடிவு வரும்னு நம்பிக்கைல”
பார்த்திபன் பேச விஷ்ணு மொத்தமாய் அமைதியாகிவிட்டான். என்ன இவன் சத்தம் காணவில்லை என பார்த்திபன் பார்க்க, நண்பன் பார்வையை பின்தொடர்ந்தவன் அனாயாவை பார்த்து கீழே அழைத்தான்.
வந்தவளிடம் தாங்கள் வந்த காரியத்தை கூற, “எனக்கிதுல விருப்பமில்லை சார் ப்ளீஸ் கிளம்புங்க”
“அனாயா…” பேச வந்த விஷ்ணுவை கை காட்டி தடுத்தாள், “பாவம் பாத்து யாரும் எனக்கு வாழ்க்கை தர வேணாம். இத்தனை நாள் வேடிக்கை தானே பாத்திங்க. இப்பவும் அப்டியே இருங்க” என்றாள் உள்ளடக்கிய கோவத்தோடு.
“எமோஷன்க்கு இடம் குடுக்குற நேரம் இது இல்லமா. ப்ராக்டிகலா யோசி, கோவத்தை முன்னாடி வச்சு உன்னோட லைப்ப ஸ்பாயில் பண்ணிக்காத” என்றான் பார்த்திபன்.
“சாரி சார் உங்க மேல நான் ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். உங்கள அப்போஸ் பண்ணி என்னால ரொம்ப பேச முடியாது. இந்த கல்யாணத்தை வச்சு எனக்கு ஆக வேண்டிய வேலை இருக்கு”
விஷ்ணு, “அவன் தப்புக்கு துணை போக போறியா?”
அனாயா, “அது என் பிரச்சனைங்க”
விஷ்ணுவை தாண்டி தாமோதரன் முன்பு சென்று நின்றாள், “நான் நீங்க சொன்ன பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா இனி உங்க எல்லா கம்பெனி பொறுப்பும் எனக்கு வேணும். இனின்னா நாளைல இருந்து”
தாமோதரன் பேத்தி பொறுப்பை தான் எடுப்பேன் என கூறியதே அவருக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. பெரிதாக தலை அசைத்து விஷ்ணு பார்த்திபனை பார்த்து நக்கலாக சிரித்தார்.
“ரொம்ப பண்ற அனாயா, அந்த ஆள் பாத்துருக்க மாப்பிள்ளை யார் என்னனு…”
“தெரியும் விஷ்ணு சார், எல்லாம் தெரிஞ்சு தான் பண்றேன். பார்த்திபன் சார் ஒரு நிமிஷம்”
தன்னுடைய அறைக்குள்ளே சென்று வந்தவள் ஒரு காகிதத்தை அவனிடம் நீட்டினாள், “என்னோட ரெசிக்னேஷன்”
அவள் கொடுத்த காகிதத்தை பிரித்து படித்த பார்த்திபன், “இத நான் உன்கிட்ட இருந்து எதிர்பாக்கல அனாயா”
விஷ்ணுவால் இந்த தோல்வியை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன போராட்டம், பெற்றோரோடு போராட்டம் என இந்த முடிவை எடுக்க அவன் எடுத்த முயற்சிகள் கொஞ்சம் இல்லையே.
அவள் பக்கமிருந்து பார்க்கும் பொழுது அவன் போராடியது வார்த்தையில் கூட தகுதியில்லாதது தான் ஆனால் அவ்வளவு எளிதில் காதலை விட்டு கொடுத்துவிட்டாளா என்று தான் வேதனை வந்தது. பார்த்திபனும் காருக்கு சென்று சிறிய கவரை அனாயா கையில் கொடுத்தான்.
“இதை நான் எதிர் பாத்து தான் வந்தேன், உங்க அக்கவுண்ட் நம்பர் இல்ல அதான் சாளரிய கைல குடுக்குறேன்”
அதனை வாங்கிய அனாயாவின் கைகள் ஒரு பக்கம் நடுங்க, கண்ணீர் கன்னத்தை நனைத்தது. அவளை ஏமாற்றத்துடன் பார்த்த விஷ்ணு வீட்டை விட்டு வெளியேறினான்.
“இது தான் முடிவுனு ஆனதும் தயக்கம் பயம் எல்லாம் தேவையில்லைம்மா” மெல்ல தலை அசைத்தவள் அவன் கொடுத்ததை வாங்க பார்த்திபன் வெளியே வந்தான்.
வாகனத்தில் நண்பன் தலையை பிடித்து அமர்ந்திருக்க சிறிது தொலைவு சென்ற பிறகு, “ரொம்ப லேட் பண்ணிட்டேன்ல பார்த்தி…”
“விஷ்ணு…”
“ஆனா அவளுக்கு எங்கடா அறிவு போச்சு அந்த ஆள் யாரை சொன்னாலும் சரினு தலையை ஆட்டிடுவாளா?”
“டேய் நான் சொல்றதை கேளு…”
“இவ்ளோ நாள் வேணாம்னு சொன்னாலும் பாத்துட்டே இருந்தா, இப்ப பாரு ஒரு பார்வை கூட பாக்கல”
“விஷ்ணு அவ ஒன்னும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லல”
“அதான் பாத்தேனே, அந்த ஆள் பிஸ்னஸ் வாங்கி என்னத்த நட்டமா நிறுத்த போறாளாம்” இவன் தான் பேசுவதை கேட்க போவதில்லை என உணர்ந்த பார்த்திபன் அனாயா கொடுத்த காகிதத்தை அவன் கையில் திணித்தது வாகனத்தை ஒரு ஓரம் நிறுத்தி இறங்கினான்.
அதனை பிரித்து படித்த விஷ்ணு நண்பனிடம் வந்து, “என்னடா இது?”
“ம்ம். ரெசிக்னேஷன் லெட்டர் இல்ல இது. நீ உன் வீட்டுல பேசுன அப்பறம் அனாயாக்கு நான் ரெண்டு நாளா கால் ட்ரை பண்றேன். சுவிட்ச் ஆப்ல தான் இருக்கு. விசாரிச்சப்போ கல்யாண விஷயம் தெரிஞ்சது. ஒரு கெஸ், ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணிருப்பாங்களோனு. இவன்கிட்ட சம்மந்தம் பேச வந்தேன்னு நினைச்சியா” விஷமமாக சிரித்தான் பார்த்திபன்.
விஷ்ணு, “என்கிட்ட சொல்லிருக்கலாமேடா”
“என் பிளானே உன்ன வச்சு தானேடா. சொல்லிருந்தா ரியாளா இருக்காது. உன்ன சண்டை போட வச்சு அந்த பொண்ண வெளிய வர வச்சேன். இப்போ புரியுதா, அந்த பொண்ணு அந்தாளோட பிஸ்னஸ்ல என்ன பண்ண முடியுமோ அதை பண்ணி நமக்கு ஹெல்ப் பண்ண போறா. அதுக்குன்னு இதையே நம்பிட்டு இருக்க முடியாது. நம்ம சைடுல மூவ்மெண்ட் இருந்துட்டே இருக்கனும்”
விஷ்ணு, “சரிடா. இப்ப அவளை தாமோதரன் முழுசாவா நம்பிடுவான்? அவளை எப்படி மொத காண்டாக்ட் பண்றது?”
பார்த்திபன், “கண்டிப்பா கல்யாணம் முடியிற வர நம்ப மாட்டான். அது அந்த பொண்ணோட சாமர்த்தியம். இப்போ ஏதோ ஒரு பாசத்துல தலை ஆட்டினாலும் அவன் புத்தி அவனை மாதிரியே குறுக்க மறுக்க தான் யோசிக்கும். அப்றம் நான் குடுத்தது சேலரி இல்ல, அதுகூடவே ஒரு பட்டன் போன்” என்றவன்,
“நம்பர் தர்றேன், ஆனா நீ கால் எதுவும் பன்னிடாத மாட்டுனா அடுத்த நிமிஷம் கல்யாணம் முடிச்சிடுவான்” எனவும் விஷ்ணு அரை மனதாக தலை அசைத்து வைத்தான்.
இரவு உணவை முடித்து பூர்வியை ஆரபி அழைக்க அந்த குட்டி வாண்டு தாய் மாமன் தோள்களில் தஞ்சம் புகுந்து அன்னையை ஓரக்கண்ணால் சிரிப்போடு பார்க்க, “நோக்கு சேட்டை, போ உன் மாமனோட. நைட் வந்து மாமினு நில்லு அப்றம் கவனிச்சுக்குறேன்”
மகளிடம் எச்சரிக்கை கொடுத்தவள் ஸ்ரீனியிடம், “ஸ்ரீனி அவளுக்கு சூடா ஜலம் அங்க வச்சிருக்கேன் எடுத்துடுண்டு போ. ராத்திரி அழுதா யோசிக்காம எழுப்பி விடுடா”
ஸ்ரீனி, “நான் பாத்துக்குறேன்க்கா, என் பூரி இனி என் கூட தான் நைட். நீங்க ரெண்டு பேரும் என்ஜாய்”
மாமனிடம் கண்ணடித்து ஸ்ரீனி கூற, மச்சான் தலையில் அடித்து, “நானும் புது மாப்பிள்ளை. போடா, என் புள்ளைய வேகமா தூங்க வை. மொபைல் குடுத்த கொன்னுடுவேன்”
பார்த்திபன் எச்சரிக்கையில் அவனை முறைத்த ஸ்ரீனி, “யோவ் எனக்கும் தெரியும்ய்யா, வந்துட்டாரு கிளாஸ் எடுக்க” திட்டிக்கொண்டே அறைக்குள்ள சென்றான் ஸ்ரீனி.
மகள் உறங்கியதை பார்த்து வந்த ஆரபி கணவனுக்கு பால் எடுத்து வர, மெத்தையில் நிம்மதியாக படுத்திருந்தான். வழக்கம் மாறாமல் கையில் கைபேசி. கைபேசியின் இடத்தை பால் டம்ளரில் நிரப்பினாள் அவன் மனைவி ஒரு முறைப்போடு.
“நீ குடிச்சியா மாமி?”
“ம்ம்” என்றாள் உறுதி இல்லாமல்.
ஆரபி கை பிடித்து அங்கே அமர வைத்தவன் அவள் கையில் தனக்காக கொண்டு வந்த பாலை ஒப்படைத்தான்.
“இல்ல நீங்க குடிங்கோ, நேக்கு நான் எடுத்துண்டு வர்றேன்” அவளை வம்படியாக அமர வைத்து இவனே சமையலறை சென்று பால் எடுத்து வந்தான்.
அதிசயமாக பார்த்திபனை பார்த்தவளிடம், “என்ன, இது உங்க வீடுன்னு சொன்னிங்க, வெறும் பேச்சுக்கு தானா?” கேட்டான் சீண்டலாய். பலமாக தலையை ஆட்டி பாலினை பருகினாள்.
“இன்னைக்கு ரெண்டு பசங்க வந்தாங்க ஆராம்மா. ஒரு பொண்ணுக்கு ப்ரப்போசல் பண்ணணுமாம், அதுக்கு பிளாஷ் மாப் ப்ரப்போசல் பண்ணனும்னு கேட்டாங்க”
“பண்ணுங்கோ… நன்னா இருக்கும்” என்றாள் இவளும் ஆர்வமாய்.
“நல்லா தா இருக்கும், ஆனா எனக்கு அக்ஸப்ட் பண்ண மனசு வரல, அந்த பொண்ணுங்க ஓகே சொல்லிட்டா சரி, வேணாம்னு சொல்லிட்டா அந்த பசங்களுக்கு மட்டுமில்ல, நமக்கும் கஷ்டமா இருக்குமே” என்றான்.
உண்மையிலே அவன் குரலில் அப்படி நடந்துவிட்டால் என்கிற சந்தேகமும் இருக்க தான் செய்தது.
ஆரபி இதழ் கடித்து சிரிப்பை அடக்கினாள், “ஏன்னா லவ் மேல அவ்ளோ பயமா?”
“எனக்கென்னம்மா பயம், உங்க பொண்ணுங்க மேல தான் பயமே. யார் எப்போ எப்படி மாறுவீங்கனு தெரியாதே”
“அப்டிலாம் இல்ல, ஒரு தடவை முடிவு பண்ணிண்டா யார் சொன்னாலும் கேக்க மாட்டோம்”
“அந்த முடிவு எடுக்க தான் இங்க பிரச்சனையே. சொல்லு நீயே, எத்தனை பொண்ணுங்க லவ் பண்ணிட்டு அதை வீட்டுல தைரியமா சொல்றாங்க?”
“எப்போ பாரு பொண்ணுங்களையே குத்தும் சொல்லிண்டு இருக்காதீங்கோ, யாரும் வேணாம்னு அந்த பையன தேடி பொண்ணு வந்து நின்னாலும் இவா என்ன பண்ணுவா, ஆத்துக்கு ஒரே பையன் அம்மா அப்பாவை விட்டுண்டு வர முடியாதுனு சொல்றவா எத்தனை பேர்?”
மறுக்க முடியாத வார்த்தைகள் தான், “சரி உன் வீட்டுல அப்டி மாட்டேன்னு உன் தோப்பனார் ஒரேடியா சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப?” ஆரபி கை பிடித்து மெல்ல அழைத்தவன் மனைவியை தன்னுடைய மடிக்கு இடம் மாற்றினான்.
“நேக்கு தோப்பனார் மேல நம்பிக்கை…”
“சொல்லிருந்தா… மாட்டேன்னு சொல்லிருந்தா?”
“மனசை திடப்படுத்திட்டு கண்டிப்பா உம்மை தேடி வந்திருப்பேன்” “உன் அப்பா அம்மாவை விட்டு?”
அழகாய் புன்னகைத்தவள் ஒரு பக்கம் தலை ஆட்டி ஆமாம் எங்க, அவள் முகம் பற்றி நெற்றியில் இதழ் பதித்து அவள் மூக்குத்தியை வருடினான்.
“ன்னா, கொஞ்ச நாள் ஆகட்டுமே, பாப்பா..” மூக்குத்தியில் அவன் பார்வை நிலைக்க சற்று தயங்கி தான் பெண்ணவள் கூறினாள்.
அவனோ சிரிப்போடு அதே மூக்குத்திக்கு முத்தம் வைத்து அங்கேயே இளைப்பாற இது காமத்தின் முத்தமல்ல, காதலின் முத்தமென உணர்ந்தவள் கைகள் கணவனை ஆரத்தழுவியது.
அவளது பதில் என்னவாக இருக்குமென தெரிந்தே கேட்டாலும், அவனது முக்கியத்துவத்தின் அளவை அவள் நாவிலிருந்து கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சியில் மிதப்பதே அவன் வேலை.
“இப்போ தான் உன்ன பாத்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள நமக்கு ரெண்டு பேபி” சிரிப்போடு தலை அசைத்தாள். “எனக்கு இதுவும் பொண்ணு தான் வேணும், என் பூர்வி மாதிரியே” கேட்டான்.
“சரி, பொண்ணு தான் வரும்”
“உனக்கு என்னடா வேணும்?”
“எனக்கு என் பார்த்திக்கு பக்கபலமா நிக்கிற குட்டி பார்த்தி வேணும்” என்றாள் ஆசையாக.
“என் புள்ளைங்க என்னக்கு பக்கபலமா இருப்பாங்க, எல்லாத்தையும் விட என் மாமி இருந்தா போதும் நூறு வயசுலயும் எதையும் பேஸ் பண்ணுவேன்”
பார்த்திபன் கைகள் அவள் கன்னத்தை ஆதூரமாய் வருடியது. அவனது அன்பினில் நெகிழ்ந்து தத்தளித்தவளிடம் மேலும் அவனை நோக்கி இழுத்தான் வார்த்தைகள் கொண்டு, “என்ன போபியா இருந்தாலும் இதோட நிறுத்திக்கலாம் மாமி. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன்” என்றான்.
இரட்டை அர்த்தத்தில் அவன் பதில் கொடுக்க, மிக அருகே இருந்த அவன் முகத்தை பற்றியவள் அவன் இதழில் மென்மையான முத்தம் பதித்தாள். வேகம் இல்லாது, காமம் இல்லாது, மோகம் இல்லாத காதலை அவனுக்கு அவள் கொடுக்க, அவள் கையிலாடும் காற்றாடியாய் மாறி நின்றான்.
“என் மகிழ்ச்சி நோக்கு புரியுதா?”
பதில் சொல்லவில்லை பார்த்திபன், குற்றஉணர்ச்சியில் பல நாட்கள் அவளை தவிர்த்து பார்த்தான். என்ன இருந்தும் அவள் இல்லாமல் எதுவும் ரசிக்கவில்லை.
“கஷ்ட காலம் வரும்ன்னா ஆனா அது நிரந்தரமில்லையே. பகவத் கீதைல கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்றார்னா, ‘முயற்சி என்னைக்குமே தோக்குறதில்ல, முடிவு மட்டும் தான் நாம எதிர்பாராததா மாறிடும்’
உங்க ரெண்டு பேரோட பிணைப்பு, நேர்மை, உழைப்ப பாத்து ஊரெல்லாம் கண்ணு பட்டுண்டு, அதான் நோக்கு இந்த கஷ்ட காலம். இல்லனா என் ஆம்படையான் என்ன ராணி மாதிரில பாத்துப்பார்”
அவனாக உரிமையாக பாலை எடுத்து வந்ததில் அவளது தந்தை வீடு என்கிற எண்ணம் அதிகம் அவனை பாதிக்கவில்லை என்கிற நம்பிக்கை ஆரபிக்கு.
அவன் எண்ணங்கள் தான் அவளது வார்த்தையானது, எவரையும் நாடி வாழாமல் அவன் உழைப்பில் அவன் குடும்பத்தை கைகளில் ஏந்தி நிற்க எண்ணினான்.
இப்பொழுதும் மாமனாரிடம் பலமான பணத்தை பார்த்திபனால் கொடுக்க இயலும், ஆனால் அது அவரை அவமதிப்பதாக இருக்குமே என தான் பெரும் வருத்தம்.
“உமக்கு ரொம்ப சங்கடமா இருந்தா ஸ்ரீனிக்கு கல்யாணம் கூடுறப்போ நல்லா செஞ்சிடலாம், தோப்பனாரும் ஒன்னும் நினைக்கா மாட்டா” என்றாள் மேலும்.
மனைவி கூறுவது சரியாக பட, “கல்யாணத்துக்கு முன்னாடி உன் அழகுளையும் அமைதியையும் மயக்கி வச்சிருந்த மாமி, இப்போ பேசி பேசியே என்ன வசியம் பண்ற” என்றான் மையலாய்.
“நானாவது பேசி தான் மயக்குறேன், நீங்க என்ன செய்றேள்?” “என்ன செய்றேன்?” புருவம் உயர்த்தி கேட்டான்.
“ஒன்னுமே செய்றதில்லை, ஒரு பார்வை போதுமே. இப்போ ஏறி இறங்குச்சு பாருங்கோ இந்த புருவம்” அவளது விறல் அவன் அடர்த்தியான புருவத்தினை வருடியது, “உங்க பாஷைல சொல்லனும்னா என்னென்னமோ செய்யிதுன்னா”
பார்த்திபனின் சிரிப்பொலி அவ்வறையையே தாண்டியிருக்குமென அஞ்சியவள் அவன் வாயை கை கொண்டு மூடி,
“வெளிய கேட்டுட போகுது பார்த்தி” அவன் சிரிப்பை தடுத்த அவள் கைக்கு பார்த்திபன் ஒரு முத்தம் வைக்க, வெடுக்கென எடுத்தவள் முகம் சிவந்து போனது.
அதில் பார்த்திபனின் சிரிப்பொலி ஸ்ருதி ஏற நீண்ட நாட்கள் பிறகு கணவனோடான அழகிய இரவை அவன் சிரிப்பை வைத்தே ப்ரகாசமாக்கினாள் பார்த்திபனின் ஆரபி.
பல நாட்கள் விட்ட பேச்சை எல்லாம் அந்த பற்றை இரவில் பேசினர், அவனது அடுத்த நகர்வு, விஷ்ணுவின் ஆசை, அனாயாவின் திட்டம், நாட்டின் பொருளாதாரம் என எந்த தலைப்பும் அவர்களிடமிருந்து தப்பிக்கவில்லை.
அடுத்த ஒரு வாரத்தில் பார்த்திபன் விஷ்ணுவுக்கு நிற்க நேரமில்லாமல் போனது. ஒருவர் வேலை தொடர்பாக சுற்றினால், மற்றொருவர் தாமோதரனின் ரகசியங்களை தெரிந்துகொள்ள அலைந்து திரிந்தனர்.
எதிர்பார்த்தபடி அனாயாவிடமிருந்து இன்று காலை தான் அவரது தொழில் சார்ந்த சில தகவல்கள் வந்தது. அதுவும் காலை மூன்று மணிக்கு. அந்த நேரமே கூறியது அவளது நிலை அங்கு என்னவாக இருக்குமென்று.
விஷ்ணு தன்னுடைய சகோதரன் மூலம் அவளது தம்பியிடம் தகவல் கேட்க, அவனிடம் அவள் பேசியே ஒரு மாதம் ஆகிறதென கூறினான்.
“தாமோதரனை நெருக்குனா கல்யாணம் தானா நிக்கும்டா, ரெண்டு வாரம் தான் டைம் இருக்கு, என்ன பண்றதுனு மட்டும் யோசி” என்றான் பார்த்திபன்.
“எனக்கு ஒரு ஐடியா பார்த்தி…” தன்னுடைய யோசனையை விஷ்ணு கூற அதனை பொறுமையாக கேட்ட பார்த்திபனுக்கு இதை செயலாற்றினால் என்ன என்று தான் தோன்றியது.
நண்பன் கூறியதில் சிறு சிறு மாற்றங்களை கூறி இன்றிலிருந்தே தங்களது திட்டத்தினை துவங்கும் பணியில் இறங்கினர்.
“ஸ்ரீனிய வர சொல்லுடா, அவனும் நமக்கு ஹெல்ப் பண்ணலாம்ல?”
“வேணவே வேணாம், அவனால சீக்ரட்ஸ் மெயின்டைன் பண்ண முடியாதுடா, ஆரபி அழுத்தி கேட்டா சொல்லிடுவான். இந்த நேரம் ஆரபிக்கு பிரஷர் குடுக்க நான் விரும்பல”
“நாம ரெண்டு பேர் தனியா இதை செய்ய முடியாது பார்த்தி”
“அதுக்கு தான் வேற ஆள் ஒன்னு புடிச்சிருக்கேன்” புருவம் உயர்த்தி பார்த்திபன் சிரிப்போடு அப்பெயரை கூற, விஷ்ணுவுக்கு இந்த அதிர்ச்சி பிடித்திருந்தது.
விஷ்ணு, “சரியா வரும்னு நினைக்கிறியா?”
பார்த்திபன், “கண்டிப்பா சரியா வரும். இவ்ளோ வேகமா இதை பண்ண முடியுமா தெரியல, நம்ம சக்திக்கு மீறுனது தான். இருந்தாலும் எக்காரணம் கொண்டும் இதுல இருந்து நாம பின் வாங்க கூடாது”
முடிவுகள் வேகமாக எடுக்கப்பட்டன. அதில் சில தகவல்கள் அனாயாவிற்கும் கொடுக்கப்பட்டது. செய்தியை வாசித்தவளுக்கு இது சரி வருமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
நான்கு நாட்களில் வீட்டிற்கு மகள் வழக்கமாய் வரும் நேரத்தை தாண்டியும் வராதிருக்க அனாயாவின் அன்னை வாயிலை பார்பதாகவே இருந்தார்.
“இதுக்கு நீ போன் பண்ணி பேசிடேன் ம்மா” என்றார் தாமோதரன் மகள் படும் அவஸ்த்தையை தாங்காமல்.
“அவ என்கிட்ட பேசியே பல மாசம் ஆகிடுச்சுப்பா” என்றார் பெருமூச்சுடன்.
“எல்லாம் சரி ஆகிடும்ம்மா, இரு நானே எங்க இருக்கானு கேக்குறேன்” தாமோதரனிடம் அனாயாவின் முதல் கட்டளையே அவர் அலுவலம் எதற்கும் வர கூடாது என்பது தான்.
அவர் அலுவலகம் பக்கம் சென்றே ஒரு வாரம் ஆகியது. கைபேசியை எடுத்து தன்னுடைய காரியத்தரசிக்கு அழைத்தார். பத்து நிமிடங்கள் இடைவேளை விட்டு அழைத்து பார்த்தார், அவரும் அழைப்பை ஏற்கவே இல்லை.
நேரம் கடக்க சிறு படபடப்பு பெரியவருக்கு வர மீண்டும் அழைத்தார். இந்த முறை அழைப்பை எடுத்த அவரது காரியதரிசி கொடுத்த செய்தியில் தன் முன்பு எதுவும் நடவாதது போல் வந்து நின்ற அனாயாவை பார்த்து சொல்லில் அடங்கா சினம் மூண்டது அவருக்கு.
“என்ன பண்ணிருக்க அம்மணி?”
“என்ன பண்ணேனாம் இவரை?” வெற்றிடத்தை பார்த்து கேள்வி கேட்டவள் தன் வாக்கில் நடக்க துவங்கினாள்.
தந்தையின் கோப குரலும், மகளின் வரவையும் உணர்ந்தவர் பதறி முன்னரை வர சிவந்து போயிருந்தது தாமோதரன் கண்கள் கோவத்தில்.
“ஆபீஸ்ல என்ன பண்ணிருக்க, அதையும் கெடுத்து என்னையும் எதுவும் பண்ற எண்ணம் வேற இருக்கா உனக்கு?”
அவரை பார்த்து நின்ற அனாயா, “லுக் உங்களுக்கும் அந்த ஆபீஸ்க்கும் எந்த சம்மந்தமும் இல்ல சோ நீங்க கேள்வி கேக்காம இருக்குறது உங்களுக்கு நல்லது”
“அம்மணி என்ன பேசுற தாத்தாவை பாத்து” மகளின் பேச்சு ருசிக்கமாட்டாமல் போக அன்னை வந்து தடுத்தார்.
“இங்க பிஸ்னஸ் டாக்ஸ் தானே இருக்கு, நீங்க என்கிட்ட கம்பெனி எக்ஸ் சேர்மேன்னா கேள்வி கேக்குறீங்க, நான் கரண்ட் சேர்மேன்னா பதில் சொல்றேன். இதுல உங்களுக்கு நான் எதுக்கு மரியாதை குடுக்கணும்?” அன்னையை பக்கவாதமாக திரும்பி முறைத்தாள்.
“என்னப்பா பண்ணா இவ”
மகளை பார்த்தவர், “மில்ல ப்ராடக்ஸ் எல்லாம் குவாலிட்டி இன்க்ரீஸ் பண்ணி ஆர்டர் பண்ணிருக்கா, ஆபீஸ்ல நான் கோட் பண்ண அமௌன்ட் விட ப்ராஜெட்க்கு கம்மியா மாத்தி அனுப்பி இப்போ டீல் சைன் ஆகிடுச்சு”
“நல்லது தானே பண்ணிருக்கேன், வாங்குற காசுக்கு தகுந்த வேலை தான் நடக்கணும். குவாலிட்டி கூட்டுனாலும் ப்ராபிட் இல்லாம இல்லையே, வர வேண்டிய லாபம் தாராளமா வருது. ப்ராஜெக்ட்லயும் அதே தான். நீங்க கோட் பண்ணிருந்த அமௌன்ட்ல இன்னொரு ப்ராஜெக்ட் அவங்க செஞ்சிடுவாங்க. நம்ம கைக்கும் இது வந்திருக்காது”
“ஏய் எனக்கு பிஸ்னஸ் எப்படி பண்ணனும்னு நீ சொல்லி குடுக்க தேவையில்லை, எவ்ளோ கோடிய உன்னால இப்போ கம்பெனி இழந்து நிக்கிது தெரியுமா?”
“நஷ்டத்துல ஓடல மிஸ்டர் தாமோதரன், அதே மாதிரி பிஸ்னஸ் உங்களுக்கு நான் சொல்லி தர வரல, நேர்மையா எப்படி உழைக்கிறதுன்னு உங்க முன்னாடி வாழ்ந்து காட்ட போறேன்” என்றாள் அவருக்கு சிறிதும் அடிபணியாமல்.
“சரிங்க அம்மணி, இதெல்லாம் விடலாம், உன் அப்பாவை என்ன பண்ணிங்கனு சொல்லுங்க” என்றார் இன்னும் சினம் கூட பெற்று.
“என்ன பண்ணேன் போலீஸ்ல புடிச்சு குடுத்தேன்” என்றாள் சிறிதும் அலட்டாமல்.
“அனாயா… என்னடி சொல்ற?”
தாமோதரன், “சரியா தான்ம்மா உனக்கு கேட்டுச்சு. உன் பொண்ணு அவளோட தகப்பனை பொறுக்கின்னு முத்திரை குத்தி உள்ள அனுப்பிட்டா”
அனாயா, “பொறுக்கிய பொறுக்கின்னு சொல்லாம உத்தமன்னு உங்கள மாதிரி தலைல தூக்கி வச்சு ஆட சொல்றிங்களா?”
“அனாயா…” ஆத்திரத்தில் கத்திய அவள் அன்னை மகளின் சொற்களில் சினம் மட்டுப்படாமல் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.
“ச்சீ நீ எல்லாம் புள்ளையாடி, உன்ன பெத்து வளர்த்த வீட்டுக்கே அசிங்கத்தை பண்ணி அதை பெருமையை வேற சொல்லி நிக்கிற”
பெண்ணவள் சிறிதும் அசையவில்லை, “உன்கிட்ட வந்து அம்பது வயசுல ஒருத்தன், அவன் கூட என்ன படுக்க கூப்பிடுறானு சொன்னா, மனசாட்சியே இல்லாம போனு அனுப்புவியா நீ?”
கண்ணில் வழிந்த ஒற்றை கண்ணீரை வேகமாக துடைத்தெறிந்தவள், “நீ சொல்லுவ. உன் அப்பாக்கு ஒரு பையன் இருந்தாலும் அவன் கூப்டா, சோறு போடுறாங்க போனு அனுப்பியும் வப்ப நீ”
கால்கள் தடுமாற பின்னே தள்ளாடி நின்றார் அவள் அன்னை. இதற்கு மேல் அவரிடம் பேச கூட அனாயாவிற்கு புடிக்கவில்லை, வெறுத்து போனது அந்த குடும்பமே.
தாமோதரனுக்கு அவள் பேசியது எதுவும் பெரிதாய்ப்படவில்லை, அவருக்கு சிந்தனை எல்லாம் கையை விட்டு போன கோடிகளும், மருமகனை போலீஸ் அழைத்து சென்ற பொழுது போன மானமும் தான் பூதாகரமாக கண்ணில் பட்டது.
“எங்க போற, மில்ல மறுபடியும் குவாலிட்டி டீக்ரேட் பண்ண சொல்லு, சைன் ஆன ப்ராஜெக்ட்ட ரிசோர்ஸ் இல்ல, டைம்ல முடிக்க முடியாதுனு ஏதாவது ஒரு ரீசன் சொல்லி அப்பாலஜி மெயில் போட்டு இந்த டீல கேன்சல் பண்ணனும். பண்ணுற” என்றார் எச்சரிக்கும் குரலில் விறல் நீட்டி.
“முடியாதுங்க. நீங்க யாரு என்ன மிரட்டுறதுக்கு?”
“அந்த கம்பெனி என்னோடது…”
“இருந்துச்சு… இப்போ இல்ல” என்றாள் அழுத்தமாக சளைக்காமல்.
“உன்ன எப்படி சம்மதிக்க வந்ததுன்னு எனக்கு தெரியும்” என்றார் எதையோ மனதில் வைத்து.
“ஓ மிரட்டி பாக்குறீங்க”
“சந்தேகமே வேணாம் அம்மணி, கண்டிப்பா மிரட்ட தான் செய்றேன். மக, மருமகன், பேரன் பேத்தி எல்லாம் என்னோட கம்பெனிக்கு அப்பறம் தான். அதுக்காக என்ன வேணாலும், யாரையும் எதுவும் பண்ணுவேன். நீயா நான் சொல்றதை எல்லாம் செஞ்சு என் முன்னாடி வந்து நிப்ப”
எச்சரிக்கையோடு சென்றவரை அவர் மகள் விக்கித்து பார்க்க, அனாயா வழக்கம் போல் அவரை உதாசீனம் செய்துவிட்டாள்.
error: Content is protected !!