தீ சிறிதாக இருந்தால் பெருங்காற்று அதனை அழித்துவிடுமாம். அதே தீ பெரிய அளவில் இருந்தால், பெருங்காற்று அதனை அதிக அளவில் வளர்த்தி விடுமாம். விஷ்ணு, பார்த்திபன் வாழ்விலும் நிகழ்ந்தது அதுவே.
தாமோதரன் என்னும் பெரும் காற்று நண்பர்கள் மனதிலிருந்த தீயை இப்பொழுது பெரிதாக வளர்த்துவிட்டிருந்தார். தாமோதரனை உடனே எதுவும் செய்யா விடினும் வேகமாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினர்.
அதனை பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான், “அனாயா இருக்காலடா, அவளை வச்சு அந்த ஆளோட இல்லீகல் ஒர்க் எல்லாம் கண்டு புடிச்சு எங்க இன்பர்மேஷன் குடுக்கணுமோ அங்க குடுக்கலாம், மொத்தமா மூடிடலாம்ல?”
பார்த்திபன், “அவனோட ஈ-காமர்ஸ் சர்வீஸ் தான் இப்போ நல்ல லாபத்துல ஓடுது. அதை என்ன பண்றது? அது யாரோடதுன்னு கூட வெளிய தெரிய வரல”
Advertisement
விஷ்ணு, “கண்டு புடிக்கலாம்டா”
பார்த்திபன், “அவன்கிட்ட இருந்து பணத்தை புடுங்குறது, பாம்பை அடிக்க போய் அடிக்காம வர்றதுக்கு சமம். எபோனாலும் திரும்பி வந்து அடிப்பான். அதோட விட மாட்டான், இன்னும் வேற குடும்பத்தை நாசமாக்குவான்” என்ற பார்த்திபன் என்ன செய்வதென யோசிக்க,
“பேசாம அவன் வீட்டுல ஒருத்தர தூக்கிடலாமா?” என்றான் பலத்த யோசனைக்கு பிறகு.
Advertisement
“அவனோட பெரிய வீக்னஸ் தான். ஆனா அதெல்லாம் ஈஸியா கண்டு புடிச்சிடுவான் பார்த்தி” என்றான் விஷ்ணு தாமோதரனை நன்கு அறிந்து.
Advertisement
அரை மணி நேரம் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து யோசிக்க, “ரெண்டையும் செஞ்சிடலாமா?” இருவரும் ஒரே நேரத்தில் மற்றவரிடம் கேட்க, அங்கு உதயமாக துவங்கியது அவர்கள் திட்டம்.
இன்னும் எதுவும் முழுதாய் முடியவில்லை. அவரது குடும்பத்தை சற்று சாய்தாயிற்று அனாயாவின் மேல் கோவம் வர வைத்து. தொழில் கிட்டத்தட்ட முடங்கி போன நிலை தான். ஆனால் இதோடு அவரை விட மனம் வரவில்லை.
இதற்கு பிறகு அவருடைய நகர்வு எதுவாக இருக்குமென யோசித்தவர்கள் அனாயாவை திருமணம் செய்யும் வீட்டினரை குறி வைத்தனர். தங்கள் கணிப்பு சரியே என்னும் விதமாக அந்த குடும்பத்திடம் கதை கட்டிவிட்டார் அவரும்.
Advertisement
உடன் சென்றிருந்த அனாயாவின் அன்னைக்கு அந்த மாப்பிள்ளையை பார்த்ததும் முதல் முறை ஒரு பின்வாங்கல் மனதளவில். வந்தவர்களிடம் சபையில் நின்று பேசும் எண்ணம் இல்லாமல் வீட்டினர் பேசுவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தான், அதுவும் சில நேரம் தான்.
வேகமாக எழுந்து சென்றுவிட்டான் அவன் அறைக்கு. தன்னுடைய மனதினை வெளிக்காட்ட கூட அவருக்கு தயக்கம் தந்தையின் திட்டத்தை வைத்து. திருமணத்தை விரைவிலே செய்ய வேண்டும் என்றார்.
“எனக்கு என்னமோ உங்க பக்கமிருந்து தான் இதெல்லாம் பண்றங்களோனு தோணுது தம்பி. போன வாரம் கூட எனக்கும் என் போத்திக்கும் ரெண்டு போன், கல்யாணத்தை நிறுத்துங்கனு சொல்லி மிரட்டுனாங்க. அதுக்கு பயந்தே புள்ளை போன் ஆப் பண்ணி வச்சிட்டோம்”
அவர்களும் கூட சற்று அரண்டு தான் போயினர். ஏனெனில் அவர்கள் பக்கம் அப்படி ஆட்களும் இருக்க தான் செய்கின்றனர். அதற்கு பயந்தே இந்த வேக ஏற்பாடு.
“சரிங்கயா வேகமா ஏற்பாடு பண்ணிடலாம்” என அவர்களே பேசி முடிவெடுத்தார் போல் இன்னும் மூன்று நாட்களில் என முடிவெடுத்தனர். பெற்றவரிடம் கூட அனுமதி கேட்கப்படவில்லை.
இத்தனை நாட்களும் கேட்டதில்லை அவர் தந்தை. இன்று தான் ஏன் கேட்கவில்லை என்கிற கேள்வி அவரிடம் வந்தது. வந்த வேலை முடிந்த நிம்மதியில் மகளை அழைத்து வந்த தாமோதரன் முகம் நேற்றை விட இன்று கொஞ்சம் தெளிந்திருந்தது.
“ப்பா நாம அவசரப்படுறோமா?”
“இல்ல கண்ணு. என்னைக்கோ நடக்க போகுது அது இன்னைக்கோ நாளைக்கோ நடந்தா என்ன?”
“இல்ல ப்பா, அந்த பையன்…”
“நல்லா விசாரிச்சிட்டேன்ம்மா. குணம் எல்லாம் நல்லா தான் இருக்கு, என்ன கொஞ்சம் வேலை விசயத்துல கொஞ்சம் சரியில்ல. அதெல்லாம் நான் இருக்கேன்ல பாத்துக்குறேன்” என்றார் பெரிதான நம்பிக்கையோடு.
அதற்குமேல் கேள்வி கேட்க முடியவில்லை அவருக்கு, “நான் கோவில்ல இறங்கிக்கிறேன் ப்பா” என்றார். வாகனம் கோவில் முன்பு நிற்க மகளுக்காக காத்திருப்பதாக தாமோதரன் கூறினார்.
“இல்ல இன்னைக்கு பூஜை இருக்கு, வர ரெண்டு மணி நேரமாகும்” எனவும் பூஜை முடிந்த பிறகு வாகனம் அனுப்புவதாக தாமோதரன் வாகனத்தில் பறந்தார்.
கோவில் பிரகாரத்திற்கு வந்த அனாயாவின் அன்னை கடவுளை கூட தரிசிக்க மனமில்லாமல் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார். ஒரு மணி நேரமிருக்கும் வீட்டு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
எடுத்து காதில் வைத்தார், “என்ன நினைச்சிட்டு இருக்கார் உங்க அப்பா, கல்யாணம் வேணாம்னு சொன்னா பிளாக்மெயில் பன்றார் ஆள தூக்கிடுவேன் அது இதுனு.
இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல சொல்லிட்டேன். இந்த அதட்டல் மிரட்டல் எல்லாம் உங்களோட நிறுத்திக்க சொல்லுங்க”
அழைத்த வேகத்தில் மகள் வைத்தும்விட கடவுள் விகாரத்தை நோக்கி நடந்தார். இறைவன் முன்பு கண் மூடி நின்றவருக்கு முதல் முறை தந்தையின் செயல் பயத்தை கொடுத்தது.
மகளின் ஆசையில் விட்டால் என்ன என யோசிக்க துவங்கியிருந்தார். மனம் நிம்மதியே இல்லாமல் தவித்தது. கணவனிடம் சென்று ஆறுதல் தேடும் குடுப்பனையும் இல்லாத காரணத்தால் தான் தந்தையின் சொல் படி நடக்க வேண்டி இருந்தது.
இன்று அவர் பேச்சை சந்தேகிக்கும் நிலை வருமென சிறிதும் அவர் எதிர்பார்க்கவில்லை. கண் மூடி மீண்டும் வந்து அமர்ந்துவிட்டார். இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்கும் அவரது சிந்தனை கலையாத நினைவுகளில் இருந்து மீட்டு வந்தது ஒரு பெயர் வராத எண்ணின் அழைப்பு.
இயந்திர கதியில் கைபேசியை எடுத்தவர் செவிகளில் மகனின் மூச்சு வாங்கும் சத்தம் பலமாக கேட்க அரண்டு போனார்.
“ஆரிவ் என்ன சாமி ஆச்சு?” படபடத்தார் அவனுக்கு என்னவோ ஏதோ என.
“ம்மா…” மகனால் பேச கூட முடியவில்லை.
“சாமி என்னயா எதுக்கு இப்டி பேசுற? உடம்புக்கு முடியலையா? இது யார் நம்பர்?” என்றார் இன்னும் பயம் கூடி போய்.
“என்ன கடத்தி வச்சிருக்காங்க ம்மா”
“ஐயோ…” நெஞ்சில் கை வைத்து பதறியவர், “இரு கண்ணு தாத்தாகிட்ட ஒடனே பேசுறேன், அவர் உன்ன எப்டியா…”
“கடத்துனதே அவர் தான் ம்மா” என்றான் மிகவும் மெதுவான குரலில்.
இது அன்னைக்கு மீண்டும் பெரிய அடி. இருக்கவே இருக்காது என மனம் அடித்து கூறியது.
“கண்ணு…”
“இப்ப கூட என்ன நம்ப மாட்டீங்களா ம்மா? நான் கேட்டேனேம்மா. அவங்க உங்க அப்பாகிட்ட பேசுனதை நான் கேட்டேன். ரொம்ப நேரம் பேச முடியாதும்மா. அவங்க வெளிய போகவும் தெரியாம பேசுறேன். நீங்க எதுவும் பண்ண மாட்டீங்க, என் அக்காகிட்ட சொல்லுங்க போதும் ப்ளீஸ் ம்மா”
“ஆரிவ், எங்க கண்ணு இருக்க, அம்மா வர்றேன்யா”
“தெரியல ம்மா. இவங்க என்ன என்னமோ பேசுறாங்க. ம்மா அவங்க வர்றாங்க நான் வைக்கிறேன், திருப்பியும் கூப்பிடாதிங்க”
“ஆரிவ்… ஆரிவ்” இவர் கத்துவதை சுற்றி இருந்த பலர் வித்யாசமாக பார்த்தனர்.
அதையெல்லாம் உதறிய அன்னை வேகமாக கண்ணில் பட்ட முதல் வண்டியை பிடித்து வீட்டிற்கு சென்றவருக்கு மனம் கதறி அழுதது.
‘துன்பம் என வந்த முதலில் நினைவில் வர வேண்டிய நான், என் பிள்ளைகள் இருவருக்கும் நினைவிலே வரவில்லை. அவர்களுக்காக அவர்களுக்காக என தான் செய்தது எதுவும் இப்பொழுது அர்த்தமே இல்லாமல் சிதைந்து கிடக்கிறது’
சாதாரண மனிதராக தன்னை தேடி தன் பிள்ளையின் தேடல் இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு தானே. இவரது ஏக்கமும் இந்த நேரம் தான் அது மலையளவு உயர்ந்து நிற்கிறது.
ஆனால் காலம் கடந்துவிட்டது. அரவணைத்து, பாதுகாக்க வேண்டியவர் தன்னுடைய திருமண வாழ்க்கை தோற்று போனதில் தகப்பனிடம் தஞ்சம் புகுந்து அவர் கைகளிலே பெற்ற பிள்ளைகளின் எதிர் காலத்தையும் ஒப்படைத்து பிள்ளைகளின் வெறுப்பை சம்பாதித்துவிட்டார்.
தனக்காக ஒன்றானால் அன்னை வருவார் என்கிற எண்ணம் இல்லை பிள்ளைகளிடம். இதோ வீடு செல்லும் பாதை எங்கும் அழுது மட்டும் என்ன பயன்?
சென்ற பாசமும் நம்பிக்கையும் மீண்டும் வருவது சந்தேகம் தான். வீட்டிற்குள் சென்றவர் கண்டது வீட்டின் தோட்டத்தில் வாதாடி சண்டையிடும் மகளையும் தந்தையையும் தான்.
பேத்தியை தாண்டி மகளை பார்த்தவர் அவரது கசங்கிய முகத்தை கவனித்து, “என்னம்மா, ஏன் முகமெல்லாம் இப்டி இருக்கு? எதுல வந்த? வண்டி இங்க தானே இருக்கு”
அவர் பார்வை மீண்டும் வாகனம் இங்கு தான் உள்ளதா என தேடியது. தாமோதரன் மகளோ கையிலிருந்த பணப்பை மற்றும் பிரசாதத்தை அப்படியே போட்டு தந்தை முன்பு கோவமாக,
“என் பையன் எங்க?” ஆக்ரோஷமாக இருந்தது அவர் நடவடிக்கை. தாமோதரனுக்கு மகளின் நடவடிக்கை அதிகம் வித்யாசத்தை கொடுத்தாலும் சந்தேகத்தை விழுங்கி,
“அவன் இந்நேரம் காலேஜ்ல இருப்பானே ம்மா, என்ன வீட்டுக்கு வர்றேன்னு சொன்னானா?”
“பொய் சொல்லாதீங்க ப்பா” வீறிட்டு கத்தியவரை தாத்தா பேத்தி இருவரும் வியந்து பார்த்தனர்.
“அவனை… என் பையனை நீங்க என்னமோ பண்ண போறீங்க. எங்க என் மகன்?”
“என்ன கண்ணு, என்னாச்சு அப்பாகிட்ட மொத நடந்ததை சொல்லு. யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்றார் அனாயாவை பார்த்து விஷ்ணு பார்த்திபனை மனதில் வைத்து.
அனாயாவிற்கு அவள் அன்னை கேட்கும் கேள்விகளில் பயம் அப்பிக்கொண்டது.
“யாரு என்னப்பா சொல்லணும், ஆரிவ் எங்க இருக்கான்னு அவன் சொல்லனுமா இல்ல என் பொண்ண அவளுக்கு தகுதியே இல்லாதவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு, அவங்க சொத்தையும் நீங்க வாங்கிக்க அனாயா வாழ்க்கையையும் அழிச்சு ஆரிவ் உயிரையும் வாங்க முடிவு பண்ணிட்டீங்க அப்டி தான?”
“என்ன சொல்றிங்க நீங்க?” அன்னை முகம் பார்த்து அவர் உரைப்பது பொய்யில்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
அன்னைக்கும் மகளை நிமிர்ந்து கூட பார்க்க இயலவில்லை, நம்ப கூடாத அனைத்தையும் நம்பி, இப்பொழுது அவளது ஒரே ஆறுதலான அவள் சகோதரனையும் தந்தையிடம் தூக்கி கொடுத்து நிற்பதன் காரணம் தான் மட்டும் தான் என்கிற தவிப்பு அவரிடம்.
“உங்கள தான் கேக்குறேன்…”
அனாயா பேசுவதை தடுத்து, “நீ இரு கண்ணு, நான் பேசுறேன். உன் அம்மா ஏதோ குழப்பத்துல இருக்கா”
“நீங்க பேசாதீங்க. நான் அவங்ககிட்ட பேசுறேன்” என்றவள் அன்னையிடம் திரும்பி, “சொல்லுங்க என் தம்பிக்கு என்ன?” பாதியிலே குரல் உடைந்தது சகோதரனுக்கு என்னவோ ஏதோ என.
“ஆரிவ்வ இவர் கடத்திருக்கார்… என் புள்ள நிலைமை என்னனு கூட தெரியலம்மா” என்றார் தலையில் அடித்து அழுதவாறு. முழுதாக நடந்ததை கூற மனமில்லாமல் மகனை எண்ணி கதறினார்.
அவ்வளவு தான், அனாயா தாமோதரன் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி போக ஒரு கட்டத்தில் கையில் வைத்திருந்த கை தடியை தூக்கி எறிந்துவிட்டார். அந்த எடை குறைவான தடியானது பெண்ணவளின் நெற்றியினை பதம் பார்த்தது.
அதுவரை சுய வெறுப்பில் அல்லாடிக்கொண்டிருந்த அனாயாவின் அன்னை மகளை தாங்கி பிடித்து, “இங்க பாருங்க. இன்னும் அஞ்சு நிமிசத்துல என் பையன் எனக்கு போன் பண்ணனும், பண்ணல அடுத்த பதினோராவது நிமிஷம் என் ஒடம்பு உயிர் இல்லாம இங்க விழும்”
அனாயா நம்பவே முடியாமல் அன்னையை பார்க்க, அவரோ கண்ணீரோடு மகளின் காயத்திற்கு மருந்திட்டு அமர்ந்தார். இருவரிடமும் பேச்சே இல்லை, அனாயா எழுந்து சென்றுவிட்டாள்.
பெரியவரை நம்பி சகோதரன் விஷயத்தில் இருந்துவிட இயலவில்லை. மனம் பயத்தில் உழன்று தவித்தது. அறைக்கு வந்தவள் விஷ்ணுவுக்கு அழைக்க அவன் வேறு வேலையாக இருந்ததால் அழைப்பை ஏற்க முடியவில்லை.
பார்த்திபனுக்கு அழைத்து அழுகையோடு நடந்ததை பதட்டத்தில் வேகமாக கூற, “அனாயா வெயிட் பண்ணு…”
“இவரால என்னால அவன்கிட்ட பேச கூட முடியல, பாவம் சார் அவன்”
“இரும்மா, அவன் ரொம்ப சேப்”
“இல்ல சார், அவன் அம்மாக்கு கால் பண்ணி பேசிருக்கான்… அவங்களே ரொம்ப பயத்துல இருக்காங்க”
“பதட்டப்படாம கேளும்மா. அதை செட்டப் பண்ணாதே நாங்க தான்”
“சார் இதை ஏன் என்கிட்ட…” அவள் குரல் உடைந்தது.
“சாரிம்மா, உன் பெர்மிஷன் இல்லாம பண்ண வேண்டிய கட்டாயம். உன் தம்பி பத்தரமா இருக்கான். உன் தாத்தாவை பணத்தாலயோ பதவியாலயோ அடிக்க முடியாது.
அவரை முடக்குற ஒரே விஷயம் உங்க வீட்டு ஆளுங்க தான். முக்கியமா உன்னோட அம்மா. அவங்கள உன் தாத்தாக்கு எதிரா நிறுத்த தான் இந்த சின்ன பிளான்”
“எல்லாம் ஓகே தான் சார், ஆனா என்கிட்ட சொல்லிருக்கலாமே”
பார்த்திபன், “உன்னோட ரியாக்ஷன் ட்ரூவ்வா இருக்கனும் அனாயா. இவ்ளோ நாள் நீ பண்ணது ஒரு வகையான ஆக்டிங்னு தாமோதரனுக்கு தெரிஞ்சிருக்கும். அது எதுலயும் உன் அம்மா இன்வால்வ் ஆகல, ஆனா இந்த விஷயம் அப்டி இல்ல.
உனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லனு காட்ட தான் விஷயத்தை சொல்லல. இனி அவர் கோவமெல்லாம் எங்கமேல்ல தான் வரும், உன் மேல திரும்பாது. உன்ன இதுக்கு மேலையும் கஷ்டப்படுத்த விரும்பாம இருக்க தான் இந்த ஏற்பாடு”
“நான் அதுக்கெல்லாம் பயப்பிட மாட்டேன் சார்…”
“உனக்கு பயம் இல்ல அனாயா, எங்களுக்கு உன்ன பத்தரமா பாத்துக்கணும். ஆரபி, பூர்விய பாக்குற மாதிரி உன்னையும் பாதுகாக்குறது எங்க கடமை, நீ எதையும் நினைச்சு ஒரி பண்ணிக்காம இரு”
“உன் வீட்டுல பிரச்சனை ஆகிடுச்சுல, இனி உன் தம்பிய பத்தரமா விட சொல்லிடுறேன்” என பார்த்திபன் கூறிய பிறகே அனாயாவிற்கு நிம்மதியானது.
இந்த கன்னாமூச்சி ஆட்டம் எங்கு எப்பொழுது முடியுமென தெரியாது, விரைவில் தங்களுக்கு சாதகமாக முடிய வேணடுமென்று தான் அவள் மனம் வேண்டியது.
மறுபக்கம் தாமோதரன் செய்வதறியாமல் துடித்துக்கொண்டிருந்தார் மகளை எண்ணி, அவர் நடவடிக்கையை எண்ணி. இல்லவே இல்லை இது அவர் மகளே இல்லை.
காலை வரை தன் பேச்சை தட்டாமல் இருந்த மகள், அவர் மகன் விஷயம் கேட்டு இந்த தலைகீழான மாற்றத்தை எதிர்பார்க்க வில்லை. வெறுப்பு மகளின் விழிகளில் இழையோடியதை அவரால் கண்கூடாக பார்க்க முடிந்தது.
நிலையில்லாமல் தவித்தவர் கால்கள் நில்லாது வீட்டின் தோட்டத்தில் நடக்க, கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் உயிரை கையில் பிடித்து நடப்பது போல் பரிதவிப்பு.
ஏதேனும் மகள் செய்துவிடுவாளோ என்பது போல் நடக்க கூடாத சாத்தியக்கூறுகளை எல்லாம் மனம் எண்ணி யோசித்து பார்த்து துடித்தது.
“கேட்டியா?” ஐந்து நொடிக்கு ஒரு முறை பேரனை பற்றிய தகவல் ஏதேனும் வந்ததா என தன்னுடைய காரிய தராசியிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.
விடை தான் பூஜ்யம், ‘இல்லை’ என்பதை தவிர அவர் எதிர்பார்த்த செய்தி வரவில்லை.
தோட்டத்தின் வழியே வீட்டின் வரவேற்பறையை பார்க்கும் ஜன்னலை அவ்வவ்வபொழுது எட்டிப்பார்த்துக்கொண்டார். மகள் கொடுத்த நேரத்தை தாண்டி நேரம் கடந்திருக்க மனம் திக் திக் என அடித்துக்கொண்டது.
தலையை கையில் ஊன்றி, மகளுக்காக போட்டு விட்ட கட்டை வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்திரிக்கோல் இன்னும் அவர் கையிலே தான் இருந்தது.
ஆயிரம் குற்றங்கள் செய்திருந்த பொழுதெல்லாம் பதறாத இதயம், மகளின் உறுதியில் பதறியது.
வேலையாள் ஒருவரை அழைத்து அதை வாங்க முயன்றார் தாமோதரன், முடியவில்லை. நேரம் செல்ல செல்ல அவரது பிடி அதில் கூடியது. கேட்க முடியாத வார்த்தைகளை விட்டு திட்டி பார்த்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினார்.