Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகம் சேர்ந்தாய் அதிசயனே

ASA 14

அகம் 14

நிகர்வேலன் நயந்தினி திருமணத்தைப் பற்றி நாகராஜன் பேசியதை கேட்ட நளினியோ, “நீங்க சொல்றது நிஜம் தானா? என் பொண்ணுக்கு உங்க பேரனுக்கும் கல்யாணமா? இது நடக்குமா?” என்று சந்தேகமாக கேட்க,



Advertisement

“நான் கொடுத்த வாக்கை என்னைக்கும் மீற மாட்டேன் ம்மா,” என்றவர்,

Advertisement

“ராகவிக்கு கல்யாணம் நடக்கும் அதே மணமேடையில் இவங்க கல்யாணம் நடப்பதில் உங்களுக்கும் ஒன்னும் பிரச்சனையில்லையே,” என்று மகளிடமும் மருமகளிடமும் கேட்டார்.

Advertisement

“எங்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை. ஆனா மாப்பிள்ளை வீட்டில் என்ன சொல்வாங்களோ?” என்று இருவரும் கூற,

Advertisement

“அவங்களிடம் கேளுங்க, ஒருவேளை அவங்க யோசிச்சா, நாம வேற வழி யோசிக்கலாம், ஆனா அதே முகூர்த்தத்தில் இந்த கல்யாணம் நடக்கும்,” என்று அவர் உறுதியாக கூறினார்.

அதைக்கேட்ட நளினியோ, “பெரியவங்க பெருந்தன்மையா இருப்பீங்கன்னு நிரூபிச்சிட்டீங்க, இனி இவளைப்பத்தி எனக்கு எந்த கவலையுமில்லை.” என்று நளினி கூற,

நிலைமை கைமீறி சென்று கொண்டிருப்பதை உணர்ந்த நயந்தினியோ, “நீங்க பேசறதும் நீங்க எடுத்த முடிவையும் பார்த்தா நாங்க ஏதோ பெருசா தப்பு செய்துட்ட மாதிரி நினைக்க வைக்கறீங்க, நாங்க சும்மா பேசிட்டு தான் இருந்தோம்,” என்றவள்,

“என்ன நிகர், இவங்க என்னென்னமோ பேசிட்டு இருக்காங்க, நீங்க அமைதியா இருக்கீங்க,” என்று அவனிடமும் கேட்டாள்.

நிகர்வேலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் தாத்தாவின் இந்த முடிவு அவனுக்கும் அதிர்ச்சி தான், மனதிற்கு பிடித்த பெண்ணாக இருந்தாலும் அவளை இப்படி ஒருநிலையில் திருமணம் செய்ய அவனுக்கு விருப்பமில்லை தான், ஆனால் இதுவரையிலும் அவனின் தாத்தா நாகராஜன் என்ன சொல்கிறாரோ அதை யாரும் மீறியதில்லை. அதனால் அவனால் பதில் பேச முடியாமல் அவன் அமைதியாக நிற்க,

“சும்மா பேசிட்டு இருக்க உனக்கு அர்த்தராத்திரி தான் கிடைச்சுதா? இதை நாங்க நம்பலாம், ஆனா வெளி உலகம் நம்புமா? இதில் உன் எதிர்காலம் பாதிக்கப்பட போகறது உனக்கு தெரியல நயனி. இப்போ இந்த முடிவு தான் உன் எதிர்காலத்திற்கு ரொம்ப நல்லது. அதை ஒழுங்கு மரியாதை ஏத்துக்கப் பாரு, இப்படி நியாயம் பேசி உன் வாழ்க்கையை பாழாக்கிக்காத,” என்று மகளிடம் கூறிய நளினி,

“இவ இப்படி பேசினதுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இவளுக்கு புரிய வைக்கிற விதத்தில் பேசி புரிய வைக்கிறேன்.” என்று நளினி அவளை மேலும் பேச விடாமல் செய்தவர், அவர்களது அறைக்கு இழுத்து சென்றுவிட்டார்.

அவர்கள் போனதும், “உங்க முடிவுக்கு நாங்க என்னைக்குமே மறுப்பு சொன்னதில்லை. நயந்தினி இந்த வீட்டுக்கு மருமகளா வருவதும் சந்தோஷம் தான், ஆனாலும் அவசரமா முடிவெடுத்திட்டோங்களோன்னு தோனுது மாமா,” என்று கார்மேகன் தனது கருத்தை கூற,

“நளினி பேசினதை கேட்டீங்க தானே, அந்த பொண்ணு சொல்றதிலும் நியாயம் இருக்கு தானே, நேத்து அந்த போட்டோ விஷயம் எனக்கு உறுத்தலா தான் இருந்தது. அதில் எந்த தப்பும் இல்லன்னு தெரிஞ்சாலும் மத்தவங்க அதேபோல நினைக்க மாட்டாங்க, அதிலும் பேச்சியே அதை பெரிய விஷயமா ஆக்கிட்டா, முத்துலட்சுமிக்கு வேற போட்டோ போயிருக்கு, அவ ஒருத்திக்கு தெரிஞ்சா நம்ம சொந்தக்காரங்க எல்லோருக்கும் இது தெரிஞ்சிடும், அப்புறம் ஊராருக்கும் தெரிய வரும், இதில் இப்போதைய சம்பவம் வேற, இதுவும் யாருக்காவது தெரிஞ்சு தப்பா பேசறதுக்குள்ள இந்த கல்யாணம் நடக்கணும் மாப்பிள்ளை.” என்று நாகராஜன் தீர்மானமாக கூறினார்.

“இப்படி திடீர் கல்யாணம் செய்தா, அப்போ ஏதோ இருக்கப் போய் தான் அவசர அவசரமா கல்யாணத்தை முடிக்கிறாங்கன்னு பேச மாட்டாங்களா தாத்தா,” என்று இப்போது நிகர்வேலன் கேட்க,

“நீ பேசாத, இதில் நியாயம் பேசும் தகுதியை கொஞ்சநேரத்துக்கு முன்னமே நீ இழந்துட்ட, நேத்து விஷயத்தில் உன்மேல எந்த தப்பும் இல்லைன்னு என்னால ஏத்துக்க முடியும், ஆனா இந்த நேரத்தில் அந்த பொண்ணை கூப்பிட்டு பேசிட்டு இருக்க நீ. இதுக்கு நீ எந்த நியாயம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. நான் சொன்னமாதிரி இந்த கல்யாணம் நடக்கும்,” என்று சொல்லிவிட்டு நாகராஜன் அங்கிருந்து சென்றுவிட, அவருடன் கார்மேகனும் சாகரியும் சென்றார்கள்.

சேகரனும் அவர்களுடன் செல்லவிருக்க, அவரை தடுத்த நிகர்வேலனோ, “தாத்தா அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவெடுத்துட்டாரு, நீங்களும் அதை மறுத்து பேசாம இருக்கீங்களே ப்பா,” என்று கேட்க,

“பின்ன என்ன செய்வாங்க, இப்போ தாத்தா சொன்னது தான் நானும் சொல்றேன். நேத்து விஷயத்தை கூட என்னால ஏத்துக்க முடியும், ஆனா இந்த விஷயத்தை என்னால ஏத்துக்க முடியாது. நீ இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பன்னு நான் நினைச்சேப் பார்க்கல நிகர்,” என்று சேகரன் கோபமாக கூறவும்,

“அப்பா, நயாவை எல்லோர் முன்னாடியும் அவங்க அம்மா அடிச்சாங்க, ரூம்க்கு கூட்டிட்டு போய் அடிச்சிருப்பாங்களா? திட்டியிருப்பாங்களான்னு கவலையா இருந்தது ப்பா, அதான் அவளை நேரில் பார்த்து பேச கூப்பிட்டேன். வேற எதுவும் தப்பா நடக்கல ப்பா,” என்று நிகர் அதற்கு விளக்கம் கூறினான்.

“அந்த பொண்ணு உன்னை பார்க்க வந்துச்சா? நீ அவளை கூப்பிட்டியா? இதெல்லாம் யாரும் ஆராய மாட்டாங்க, பொத்தாம் பொதுவா தப்பா தான் சொல்லுவாங்க, அதிலும் உன்னைவிட அந்த பொண்ணுக்கு தான் அது பாதிப்பு. அது உனக்கு புரியலையா நிகர். இங்கப்பாரு நீ பேசறதிலேயே அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு தெரியுது. அப்புறம் என்ன இந்த கல்யாணத்தை செய்துக்க வேண்டியது தானே,” என்று சேகரன் கேட்க,

“அதனால தான் ப்பா வேண்டாம்னு சொல்றேன். மனசுக்குப் பிடிச்ச பொண்ணை இப்படி ஒரு சூழ்நிலையில் கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பமில்லை. அதிலும் அவளிடம் இதை நான் வெளிப்படையா சொன்னதில்லை. அவளுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமான்னு கூட கேட்காம எப்படிப்பா இந்த கல்யாணத்தை செய்துக்க முடியும்?” என்று அவன் கேட்கவும்,

“நிலைமை கைமீறி போயிடுச்சு நிகர், நேத்து உன் பாட்டி பிரச்சனை செய்தாங்கன்னா இன்னைக்கு நளினி பேசினதை நீயும் கேட்டத்தானே, நேத்து நடந்ததுக்கு இன்னைக்கு நளினி பேசினதுன்னு பதிலுக்கு பதில் என்று எடுத்துக்கிட்டாலும் அதில் ஒரு நியாயம் இருக்கு தானே, அதனால இந்த கல்யாணம் நடந்து தான் ஆகணும் நிகர்,” என்று அவரும் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இங்கு நயந்தினியை தங்களது அறைக்கு நளினி தரதரவென அழைத்து வந்ததும், அவரிடமிருந்து கைகளை உதறியவள், “ஏன் ம்மா, இப்படி செய்தீங்க? சாதாரண விஷயத்தை எதுக்கு இப்படி பெருசு பண்ணீங்க, இப்படி செய்து நீங்களே என்னை அசிங்கப்படுத்தறீங்க, இதனால உங்களுக்கு என்ன கிடைச்சுது ம்மா?” என்று கேள்விகள் எழுப்ப, அந்த சத்தத்தில் இரட்டை சகோதரிகள் இருவரும் எழுந்து கொண்டனர்.

நயந்தினி கேட்டதற்கு நளினியோ, “நடுராத்திரியில் ஒரு பையனோட ரூம்ல போய் பேசிட்டு இருக்க, அது தப்பில்லையா?” என்று பதிலுக்கு கேட்க,

“இதிலென்ன தப்பு இருக்கு? ஒரு பங்ஷனுக்காக வந்திருக்கோம், எல்லாம் இங்க நல்லா ஃப்ரண்ட்ஷிப்பா தானே இருக்கோம், அப்புறம் தனியா ரூம்ல பேசினா அவங்க தப்பும் செய்றவங்களா? என்ன ஏதுன்னு கேட்காம இப்படித்தான் கல்யாணம்னு முடிவெடுப்பீங்களா?” என்று நயந்தினி பதிலுக்கு கேட்க, பாதி உறக்கத்தில் விழித்த சகோதரிகள் இருவருக்கும் அன்னையும் தமக்கையும் பேசிக் கொள்வது புரியவேயில்லை.

“நேத்து ஒரு போட்டோவுக்கே என்ன பேசினாங்கன்னு பார்த்தல்ல, நம்மளை எவ்வளவு கேவலமா பேசினாங்க, அவங்க இதையும் தப்பா பேசமாட்டாங்களா? அதுக்கான இடத்தை கொடுத்திட்டு, நியாயம் பேசிட்டு இருக்கீயா? நளினி பதிலுக்கு கேட்க,

“அவங்க பேசறதுக்கு முன்ன நீங்களே எல்லாம் பேசிட்டீங்க, என்னை தப்பா காட்டி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டீங்க, இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே,” என்று நயந்தினி கேட்டதற்கு,

“உன்னை எங்க தப்பா காட்டினேன். அவங்க வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாயம்னு நடந்துக்கிறாங்க, அவங்க வீட்டு பையனும் தானே இதில் சம்பந்தப்பட்டிருக்கான். நான் இதுக்கும் அமைதியா இருந்தா நீதான் அவன் ரூம்க்கு போய் அவனிடம் தப்பா நடந்துக்க முயற்சி செய்தேன்னு மோசமா பேசி நம்மளை இங்க துரத்தி விடுவாங்க, அவங்க பேசறதை எல்லா நேரமும் அமைதியா கேட்டுட்டு இருக்கணும்னு அவசியமில்லை. அப்படி இருந்தா அசிங்கப்பட்டு தான் போகணும், அவங்களை விட நம்ம எந்தவிதத்தில் குறைஞ்சுப் போயிட்டோம், பணமில்லன்னா நம்மளை கேவலமா நடத்துவாங்களா? அவங்களுக்கு மட்டும் தான் கௌரவம் இருக்கா?” என்று நளினி பேசிக் கொண்டே போக,

“அதுக்கு நீங்களே உங்க பொண்ணை அசிங்கப்படுத்துவீங்களா? நீங்க என்னை காணோம்னு போய் அவங்களிடம் சொல்லலன்னா யாருக்கும் நான் நிகர் ரூம்ல இருப்பதே தெரிஞ்சு இருக்காது. அப்படியே யாராவது வந்து கதவை தட்டியிருந்தாலும் நான் பால்கனி வழியா வந்திருப்பேன். ஆனா அதுக்கான வழியில்லாம செய்தது நீங்க தானே, 

பூட்டிய ரூம் பூட்டியப்படியே இருக்க நான் எப்படி வெளியில் போயிருப்பேன். நான் பால்கனி வழியா தான் நிகர் ரூம்க்கு போயிருந்திருப்பேன்னு உங்களுக்கு தெரியும், நான் செய்தது தப்புன்னு நீங்க நினைச்சிருந்தா நான் அங்க இருந்து வந்ததும் என்னை ஏன் இப்படி செய்தன்னு கேட்டு அடிச்சிருக்கலாம், ஆனா அதைவிட்டு நீங்களே இப்படி எதுவும் தெரியாதது போல அவங்களை கூட்டிட்டு வந்தது எதுக்கு ம்மா? அவங்க மோசமா பேசினாங்க, அதுக்கு பதிலுக்கு பதில்னு சொல்லாதீங்க, அதுமட்டும் காரணமில்ல, 

நான் வெளிநாட்டுக்குப் போகக் கூடாது. அங்கப் போய் ஹையர் ஸ்டடீஸ் படிக்க கூடாது. அதுக்கு தானே ம்மா நீங்க இப்ப செய்தீங்க, அம்மாவோட அன்பு தான் கலப்படம் இல்லாததுன்னு சொல்வாங்க, ஆனா நீங்களே இப்படி செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கல, ஏன் ம்மா இப்படி செய்தீங்க? ஏன் என் எதிர்காலத்தை பாழாக்க நினைச்சீங்க?” என்று அவள் அழுது கொண்டே கேட்க,

“ஆமாம், நான்தான் எல்லாம் செய்தேன். நான்தான் பிரச்சனையை பெருசாக்கினேன். நான்தான் வேணும்னே பால்கனி கதவை பூட்டினேன். உனக்கு மட்டும் தான் லாங்க் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் தெரியுமா? நானும் ஸ்கூல் டேஸ்ல நல்லாவே லாங்க் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் விளையாடியிருக்கேன். 

நீ எவ்வளவு பெரிய படிப்பு படிக்கறதா இருந்தாலும் படி. நீ எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போய் படி. எவ்வளவு பணம் செலவானாலும் என் தலையை அடமானம் வச்சாவது பணம் ஏற்பாடு செய்து கொடுக்க நான் தயாரா இருக்கேன். ஆனா நீ மட்டும் தனியா வெளிநாடு போய் படிச்சா பரவாயில்லை. ஆனா நீ அந்த விக்கியோட போக தானே நினைச்சு வச்சிருக்க,

நீ விக்கியோட வெளிநாடு போறது. படிக்க மட்டுமில்ல, நிரந்தரமா எங்களை தலை முழுகிட்டு போகத்தான்னு எனக்கு தெரியாதா? அதை தடுக்க என்ன செய்றதுன்னு தினம் தினம் யோசிச்சிட்டு இருந்தேன். அதான் கிடைச்ச வழியை பிடிச்சிக்கிட்டேன்.” என்று நளினி கூறவும்,

“அதுக்கு உங்களுக்கு இந்த வழி தான் கிடைச்சுதா? என்னோட எதிர்காலத்தை மொத்தமா அழிக்கறது தான் இப்படியெல்லாம் செய்தீங்களா?” என்று கேட்டாள் நயந்தினி.

“உனக்கும் விக்கிக்குமான தொடர்பு சுத்தமா அறுந்து போகணும், அதனால் தான் இப்படி யோசிச்சேன். நேத்து நைட் படுக்கப் போகும்வரை எப்போ இங்க இருந்து போவோம் என்கிற எண்ணம் தான் இருந்தது. தூக்கம் வராம சும்மா கண்ணை மூடி தான் படுத்திருந்தேன். உனக்கு மெசேஜ் வந்த சத்தம் கேட்டதும் விக்கியோட மேசேஜ்னு தான் நினைச்சேன். ஆனா கொஞ்சநேரத்தில் நீ எழுந்து பால்கனிக்கு போன, அப்போ தான் நிகர் தான் உனக்கு மெசேஜ் செய்திருக்கான்னு தெரிஞ்சுது. 

அவனோட சேர்த்து வச்சு மோசமா பேசியிருக்காங்க, அவனை தேடிப் போறீயேன்னு முதலில் கோபம் தான் வந்துச்சு, ஆனா யோசிச்சு பார்க்கும்போது நிகரை பத்தி நான் இதுவரைக்கும் நல்லதா தான் கேள்விப்பட்டிருக்கேன். உன்னை இங்க கூட்டிட்டு வந்தது விக்கியை மறந்து இருக்கணும்னு தான், நான் நினைச்சமாதிரி தான் நீ நடந்துக்கிட்ட, அதில் நிகர்க்கு நிறைய பங்கு இருப்பதா தான் எனக்கு தோனுச்சு, நிகரையே நீ கல்யாணம் செய்துக்கிட்டா நல்லாருக்கும்னு நினைச்சேன். நேத்து அவமானப்படுத்தவங்களுக்கு இது பதிலடியா இருக்கும்னு தோனுச்சு, அதான் இப்படி ஒரு காரியத்தை செய்தேன்.” என்று அவர் செய்ததை ஒத்துக் கொண்டவர்,

“இங்கப்பாரு, நீ இந்த கல்யாணத்தை செய்துக்கிட்டா உண்மையிலேயே உன்னைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும், நிகர் கண்டிப்பா உன்னை நீ நினைச்ச படிப்பை படிக்க வைப்பான். உன் எதிர்காலமும் நல்லா இருக்கும், நான் சொல்றதை கேளு. இந்த கல்யாணத்தை செய்துக்கோ, அதைவிட்டு விக்கி தான் முக்கியம்னு நீயே உன் வாழ்க்கையை அழிச்சிக்காத,” என்று இப்போது அவர் கனிவாக கூற,

“முடியாது, நீங்க இவ்வளவுதூரம் போனதுக்குப் பிறகு என்னால இந்த கல்யாணத்தை செய்துக்க முடியாது. விக்கி சொல்றது சரிதான், நீங்க எப்போ என்னை ஹாஸ்டலில் சேர்த்து விட்டீங்களோ அப்பவே என்மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. இவங்க ரெண்டுப்பேர் தான் எப்போதும் உங்களுக்கு முக்கியம். அதை அடிக்கடி எனக்கு நிரூபிக்கிறீங்க, நீங்க முடிவு செய்தா நான் இந்த கல்யாணத்தை செய்துக்கணுமா? என்னை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை செய்து வைக்கறதா எல்லோரிடமும் சொல்லிட்டு நான் காலையில் இங்க இருந்து கிளம்பிடுவேன்.” என்று நயந்தினி மிரட்டவும்,

“அது என்ன நாளைக்கு காலையில் போகணும், இப்போதே எல்லோரிடமும் சொல்லிட்டு போ. ஆனா ஒன்னு ஞாபகத்தில் வச்சிக்க, இந்த ரெசார்ட்டில் இருந்து நீ நிகரோட மனைவியா தான் வெளியப் போகணும், அது நடக்கலன்னா இங்க இருந்து என்னோட பிணம் தான் வெளியப் போகும்,” என்று நளினி கூறினார்.

அவரது அந்த பேச்சில் மொழியும் மதியும் வந்து அவரை அச்சத்துடன் அணைத்துக் கொள்ள, “என்ன மிரட்டறீங்களா? இப்படியெல்லாம் மிரட்டினா நான் பணிஞ்சு போவேன்னு நினைக்கறீங்களா?” என்று நயந்தினி கேட்க,

“நான் மிரட்டல, மிரட்ட வேண்டிய அவசியமுமில்லை. பால்கனி தாண்டி வந்து கதவை சாத்தி இவ்வளவு தூரம் துணிஞ்சு செய்த நான் இதையும் செய்வேன். ஆனா இதுக்கெல்லாம் நீ கவலைப்படாத, உனக்கு அந்த விக்கி தானே முக்கியம். நானோ இல்லை இவங்களோ உனக்கு முக்கியம் கிடையாதில்ல, அப்புறம் நாங்க எப்படி போனா உனக்கென்ன? போய் இப்பவே எல்லோரிடமும் சொல்லிட்டு கிளம்பு போ.” என்று அவர் கூற, அவரின் பேச்சில் அப்படியே கட்டிலில் தளர்ந்து போய் அமர்ந்தாள். அந்த இரவு அனைவருக்கும் உறங்கா இரவாக போய்விட, மறுநாள் காலை திருமண விஷயம் ஒவ்வொருவருக்காய் தெரிய வந்தது.

மாதேஷ் வீட்டில் இரண்டு திருமணமும் ஒன்றாக நடப்பதில் பிரச்சனை இல்லை என்று கூறிவிட, இரண்டு திருமணத்திற்குமான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. பேச்சியம்மாள் விஷயத்தை கேட்டு பொங்கி எழுந்துவிட்டார்.

“நான் சொன்னது சரியாப் போச்சா, பொண்ணை விட்டு நம்ம பையனை வளைச்சுப் போடப் பார்த்தா, அதை நாம தெரிஞ்சிக்கிட்டோம்னு இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கா, அவ நாடகம் புரியாம நீங்களும் இந்த கல்யாணம் நடக்கும்னு சொல்லியிருக்கீங்க,” என்று கணவரிடம் கோபப்பட,

“நீ சும்மா இரு, நடந்ததை நீதான் நேத்து பெருசு பண்ண, முத்துலஷ்மி கைக்கு வேற போட்டோ போயிருக்கு, இந்த கல்யாணம் நடந்தா ஏதோ இருக்கப் போய் தான் கல்யாணம் நடக்குதுன்னு பேசறவங்க, இல்லன்னாலும் அவங்க வசதி இல்லாதவங்கன்னு நாம ஏமாத்தறதா பேசுவாங்க, எதுவா இருந்தாலும் நம்ம கௌரவம் போனது தான், ஆனா இங்க ஒரு பொண்ணோட எதிர்காலத்தை யோசிக்கணும், நம்ம வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயம், அந்த பொண்ணுக்கு ஒரு நியாயம்னு நாம நடந்துக்க கூடாது. 

நான் வாக்கு கொடுத்துட்டேன். இந்த கல்யாணம் நடந்தே தீரும், என்மேல மரியாதை வச்சிருந்தா இந்த கல்யாணத்தை நடத்தவிடு. இல்லை கொடுத்த வாக்கை காப்பாத்த முடியாம அசிங்கப்பட்டு நான் உயிரை விட்டா பரவாயில்லையா?” என்று  நாகராஜன் கேட்க, பின் பேச்சியம்மாள் வாயை திறக்கவில்லை. அந்த புகைப்பட விஷயத்தில் அவினாஷ் சம்பந்தப்பட்டதால் நீலவேணியும் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொண்டார்.

விஷயம் கேள்விப்பட்டு நிகரை காண வந்த ராகவி, “சூப்பர் நிகர், உனக்கும் நயந்தினிக்கும் கல்யாணம்னு அம்மா சொன்னதும் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?” என்று குதூகலிக்க,

“நடந்தது தெரிஞ்சும் உன்னால எப்படி சந்தோஷப்பட முடியுது ராகவி, சும்மா பேசிட்டு இருந்தோம், அதை பெரிய பிரச்சனையாக்கி இவ்வளவுதூரம் கொண்டு வந்துட்டாங்க, மனசுக்கு பிடிச்ச பொண்ணா இருந்தாலும் இப்படி கல்யாணம் நடப்பதை நான் விரும்பல,” என்று நிகர் பதில் கூறவும்,

“எனக்கு உன்னோட நிலைமை புரியாம இல்லை நிகர், நானும் மாமாவை மனசுல வச்சு உன் காதல் ஈஸியா நிறைவேறிடும்னு தான் நினைச்சேன். ஆனா நேத்து பாட்டி பேசினதை கேட்டப்போதுதான், இது ஈஸி இல்லைன்னு தோனுச்சு, இப்போ ஏதோ ஒன்னு நடந்து நயனியோட உன் கல்யாணம் நடக்கப் போகுது, இதை எந்த பிரச்சனையும் செய்யாம ஏத்துக்கறது தான் உன்னோட புத்திசாலித்தனம்.” என்று ராகவி கூறினாள்.

அதைக்கேட்டவனோ, “அதான் தாத்தா வாக்கு கொடுத்திட்டாரே, என்னால இந்த கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் செய்ய முடியாது. ஆனா நயாவை யோசிச்சா தான், அவளுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமான்னு தெரியாம எப்படி இந்த கல்யாணத்தை நான் செய்துக்க முடியும்?” என்று  நிகர் கேட்க,

“உன்னை கல்யாணம் செய்துக்க அவளுக்கு கசக்குமா?” என்று ராகவி பதிலுக்கு கேட்க,

“அப்படி நினைச்சா நம்ம முட்டாள்தனம். நேத்து நடந்த பிரச்சனைக்கு நயா என்ன சொன்னா தெரியுமா? நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? நீ பணக்காரன்னா எல்லா பொண்ணுங்களும் உன் பின்னாடி வருவாங்களான்னு கேட்டா, அப்போத்தான் எனக்கு நயாவை இன்னுமே பிடிச்சுது. அவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்குதா இல்லையான்னு தெரியாம என்னால இந்த கல்யாணத்தை செய்துக்க முடியாது. நயாவோட என்னை பேச விடுவாங்களா தெரியல, நீ எனக்காக நயாவிடம் பேசறீயா?” என்று அவன் ராகவியிடம் கேட்க, அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.

ஆனால் நயந்தினியிடம் அதுபற்றி அவள் ஏதும் பேசவில்லை. நடந்த விஷயத்திற்கு வெறும் சமாதான வார்த்தைகள் பேசியவள், நிகர்வேலனை திருமணம் செய்து கொள்வதற்கு கொடுத்து வைக்க வேண்டுமென்பது போல் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் நயந்தினி எதையும் காது கொடுத்து கேட்கவில்லை. அவள் கவனமும் பார்வையும் முதலில் அங்கு இல்லை. வேறு எங்கேயோ நிலைத்திருந்தது.

ராகவியுடன் வந்த ரோஹன் அதை கவனித்தவன், “நயனி, உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் தானே,” என்று கேட்டான்.

நயந்தினி யாரையோ காதலிக்கிறாள் என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்கனவே இருந்ததால் அப்படி கேட்டான். அந்த கேள்வியில் நயந்தினி நண்பனை பார்த்தவள், ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை.

அதற்குள் நளினியோ, “அதெல்லாம் அவளுக்கு சம்மதம் தான், ஆனாலும் இந்த கல்யாணம் நடக்கறவிதம் தான் அவளுக்கு கொஞ்சம் வருத்தத்தில் இருக்கா, எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்,” என்று சமாளித்தார்.

“ஆமாம் நயனி, எல்லாம் சீக்கிரம் சரியாகிடும், அப்புறம் நிகரோட உனக்கு கல்யாணம் நடந்ததுக்கு நீ எவ்வளவு சந்தோஷப்படப் போறப் பாரு,” என்றாள் ராகவி.

பின் இருவரும் அந்த அறையிலிருந்து வெளியே வந்ததும், “அக்கா நயனி யாரையோ காதலிக்கிறா க்கா, அவளுக்கு அதான் இந்த கல்யாணத்தில் விருப்பமில்லைன்னு நினைக்கிறேன்.” என்று ரோஹன் கூறியதில் ராகவி அதிர்ச்சியானவள், 

“என்னடா சொல்ற,” என்று சகோதரனிடம் கேட்க,

“அவ இங்க வந்த ஆரம்பத்தில் நடந்ததை வச்சு எனக்கு அந்த சந்தேகம் இருக்கு க்கா,” என்று அன்று நடந்தததை ரோஹன் கூறவும்,

“சந்தேகம் தானா?” என்று நிம்மதியடைந்தவள்,

“அது யாராவது ஃப்ரண்டா கூட இருக்கலாம், அவ வேற எதுக்காவது அந்த வாட்ஸ் அப் ஸ்டேடஸை ரிமூவ் செய்திருக்கலாம், இதை வச்சு நீயா ஏதாவது முடிவு செய்துக்காத, இதை வேற யாரிடமும் சொல்லாத, ஏற்கனவே இருக்கும் பிரச்சனை போதாதா? இதில் இதை சொல்லி வேற ஏதாவது பிரச்சனை ஆகப் போகுது. முக்கியமா இதை நிகரிடம் சொல்லாத,” என்று எச்சரித்தாள்.

நிகர்வேலன் நீண்ட நாட்களாக நயந்தினியை காதலிக்கிறான். அந்த காதல் நிறைவேற இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று ராகவி அந்தநேரம் சுயநலமாக யோசித்தாள். ரோஹனும் தமக்கை கூறவும் அதை அப்படியே விட்டுவிட்டான்.

திடீரென ஏற்பாடு செய்த திருமணம் என்பதால் அவர்கள் கடையிலேயே முகூர்த்த புடவையும் ஏற்கனவே செய்து தயாராக விற்பனைக்கு இருந்த தாலியும் வர வைத்தார்கள். மறுநாள் முகூர்த்தம். அன்று இரவு சாகரி அதை கொண்டு போய் அவர்கள் அறையில் கொடுக்க, நளினியால் சாகரியை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

அது சாகரிக்கும் புரிந்ததோ, “உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் நளினி, நீ பணம் அந்தஸ்து எதுக்கும் ஆசைப்படாதவன்னு எனக்கு தெரியாதா? நீ அன்னைக்கு நடந்துக்கிட்டதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியும்,” என்று சொல்லவும் தான், நளினிக்கு மன நிம்மதியாக,

“உன் பொண்ணு கல்யாணம் நல்லப்படியா நடக்கணும்னு சொல்லுவ, ஆனா நடந்த பிரச்சனைகளுக்கு நானும் காரணமாகிட்டேனே,” என்று அவர் வருத்தமாக கூறவும்,

“அதான் பிரச்சனையெல்லாம் முடிஞ்சு என் பொண்ணுக்கு மட்டுமில்ல உன் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கப் போகுது, அதை நினைச்சு சந்தோஷப்படு, நாளைக்கு விடியற்காலையே எழுந்திருக்கணும், சில சடங்கெல்லாம் இருக்கு, அது முடிஞ்சதும் ப்யூட்டிஷியன் நயனியை ரெடி செய்ய வருவாங்க,” என்று தகவல்களை கூறிய சாகரி, அங்கே அமர்ந்திருந்த நயந்தினியை பார்த்தார்.

அவள் பார்வை எங்கேயோ நிலைத்திருக்க, மீண்டும் சாகரி நளினியை கேள்வியாக பார்க்க, “அது நடந்த விஷயங்களில் இப்படி இருக்கா, நாளைக்கு சரியாகிடுவா,” என்று நளினி பதில் கூற, சாகரி அரை மனதாக தலையசைத்தவர், அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதுவரை அவர்கள் பேச்சை கேட்டப்படி இருந்த மொழியும் மதியும், “அம்மா, அக்காக்கு விருப்பமில்லன்னா இந்த கல்யாணம் அக்காக்கு வேண்டாம் ம்மா, அக்காவை கட்டாயப்படுத்தாதீங்க,” என்று இருவரும் ஒன்று சேர்ந்து கூற,

“நான் எங்க கட்டாயப்படுத்தினேன். இப்போ கூட அவளுக்கு வேண்டாம்னா போகட்டும், நான் அவளை தடுக்கப் போறதில்ல, ஆனா இன்னொன்னும் ஞாபகம் வச்சிக்கோங்க, இந்த கல்யாணம் நடக்கலன்னா அப்புறம் உங்க அம்மா உங்களுக்கு துணையா இந்த உலகத்தில் இருக்க மாட்டேன். அதையும் ஏத்துக்க தயாரா இருங்க,” என்று இரக்கமேயில்லாமல் நளினி பதில் கூறவும்,

“ஏன் ம்மா, இப்படி பேசறீங்க, ஏற்கனவே அப்பாவும் இல்லை. நீங்களும் இல்லைன்னா அப்புறம் எங்க நிலைமை என்னாகும்னு யோசிச்சுப் பார்த்தீங்களா? இப்படியெல்லாம் பேசாதீங்க ம்மா,” என்று இருவரும் நளினியை கட்டிக் கொண்டு அழுதனர்.

அவர் பேசியதில் அவ்வளவுநேரம் எங்கேயோ வெறித்திருந்த பார்வையை தன் அன்னை மீது நிலைக்கவிட்டாள் நயந்தினி. அவர் எப்போது இந்த திருமணம் நடக்கவில்லையென்றால் இங்கிருந்து பிணமாக செல்வதாக கூறினாரோ, அப்போதே இந்த திருமணத்தை ஏற்க அவள் தயாராகிவிட்டாள். 

அவளின் எதிர்கால கனவுகள், அவளும் விக்கியும் பேசி வைத்தது. அவள் விக்கிக்கு கொடுத்த நம்பிக்கை எல்லாம் காற்றில் கரைந்து போக, நிகர்வேலனின் கையால் தாலி வாங்கி கொண்டு அவனின் மனைவியாகிவிட்டாள். அது தெரியாமல் இன்னும் இந்த ஒருநாள் தான் பின் நயந்தினி வந்துவிடுவாள் என்று அங்கு விக்கியின் மனமும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தது.

அகம் சேர்வான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!