Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 17.1

அத்தியாயம் 17

பிரபாவதி, “ஏங்க… எதுக்கு விஷ்ணுகிட்ட இப்படி பேசுனிங்க?” என்றார் தவிப்பாக.

“பேசாம என்ன பண்ண சொல்ற? விஷ்ணு அத்தனை சொல்லியும் கிருஷ்ணன் பொண்ணு கேட்டு வந்து நிற்கறான். மேகலை மறுத்தும் மொத்த குடும்பமும் மகனுக்கு சப்போர்ட்டா வந்திருக்காங்க. என் மருமகளை அந்த ஸ்தானத்துல வச்சி மேகலையோட அண்ணன் குடும்பம் பார்க்குறதை என்னால சகிக்க முடியல” என்றார் ஒவ்வாமையோடு.

“அதுக்காக அவசரமா கல்யாணத்தை ஏற்பாடு செய்யனுமா?” என்றார் ஆற்றாமையோடு.



Advertisement

“விஷாலினியை பிடிக்கும்தானே உனக்கு?” என்றார் அர்த்தப் பார்வையோடு.

“என்னங்க இப்படி கேட்டுட்டிங்க. விஷாலினியை விட நல்ல பிள்ளை எங்க தேடினாலும் கிடைக்கமாட்டா. என் பிரச்சனை அதுயில்ல” என்றார் கலக்கமாக.

“வேற என்ன பிரச்சனை?”

Advertisement

“கல்யாணம் ஆகி வாழாம காவ்யா வீட்டுல இருக்கும்போது, விஷ்ணுக்கு எப்படிங்க பண்றது?” என்றார் வேதனையாக.

Advertisement

இதை யோசித்திருந்த கோபாலன் முகம் வேதனையை காட்டியது. “நிச்சயம் செய்துக்கலாம்ங்க, ஆறு மாசத்துக்குள்ள காவ்யா வாழ்க்கையை சரி பண்ண பார்க்கலாம்”

“நாலு வருசமா சரி பண்ண முடியாத வாழ்க்கையை இப்போ மட்டும் எப்படி சரி பண்றது பிரபா? அவன்கிட்ட போய் என் பொண்ணை ஏத்துக்கோனு சொல்ல சொல்றியா?”

“ச்ச… உங்களை அப்படி விடமாட்டேன்ங்க. வேற எதாவது யோசிக்கலாம்” என்றார்.

Advertisement

“நீ எதோ யோசிச்சிருப்ப போலயே. அதை சொல்லு”

“நம்ம விஷ்ணுவோட பதவியை வச்சு” எனும்போதே, “வேற எதாவது சொல்லு பிரபா, என் மகனை இதுல இழுக்காத” என்றார் இறுகிய முகத்தோடு.

“நீங்களும் இப்படி சொன்னா எப்படிங்க? இப்படியே எத்தனை வருசத்துக்கு விடறது? காவ்யா கல்யாணம் செய்து நாலு வருசம் முடிஞ்சிடுச்சு” என்றார் கலக்கத்தோடு.

“அப்படி யோசிக்காத பிரபா. நம்ம பொண்ணு இப்போதான் பி.ஹெச்.டி படிச்சிட்டிருக்கானு நினை. இருபத்திநாலு வயசுதான் ஆகுது. இன்னும் இரண்டொரு வருசத்துல டாக்டர் பட்டம் வாங்கிடுவா. அதுக்கப்புறம் தானா தேடி வருவான் பாரு” என்றார் பெருமையாக.

“அப்போ காவ்யா வாழ்க்கையை சரி பண்ணாமலே விஷ்ணுக்கு கல்யாணம் செய்ய முடிவே பண்ணிட்டிங்களா? சொந்தபந்தத்துக்கு என்ன பதில் சொல்றது? இவங்க இரண்டுபேரும் சந்தோசமா இருக்கும்போது காவ்யாக்கு அந்த நினைப்பு வராதா?” என்றார் முகம் தாழ்த்தி வருத்தத்தோடு.

“வரும்தான். அதுக்காக விஷ்ணு வாழ்க்கையை யோசிக்கமா விட முடியுமா? அவனுக்கும் இருபத்தியொன்பது வயசாகுது. கல்யாணம் இப்போ பண்ணாம எப்போ பண்றது?”

பிரபாவதி, “இன்னும் ஏழெட்டு மாசத்துல விஷாலினி படிப்பை முடிச்சிடுவா. அதுவரைக்கும் தள்ளி போடலாம். அதுக்குள்ள எதாவது பண்ணலாம்” என்றார் கெஞ்சலாக.

“விஷ்ணுவும் இதைத்தான் சொன்னான். அரைமணி நேரம்வரைக்கும் அவன்கிட்ட மல்லுக்கட்டி சம்மதிக்க வச்சிருக்கேன். இப்போ மாத்தி பேசினா சந்தேகப்படுவான்”

“கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டானா? என்னை எதுலயும் வச்சிக்கிறதில்ல” என்று பிணங்க, “சம்மதிக்கல, சம்மதிக்க வச்சேன். என் பிடிவாதம் தாங்க முடியாமதான் சம்மதிச்சான். படிக்கிற பிள்ளைனு விஷ்ணுக்கு மட்டும் தெரியாதா?

கல்யாணம் முடிஞ்சதும் விஷாலினி படிக்கப்போய்டும். இவன் டியூட்டிக்கு போய்டுவான். நீ நினைக்கிற மாதிரி இவங்க கல்யாணத்தால காவ்யாக்கு எந்த டென்ஷனும் இருக்காது. அப்படியே மகனும் மருமகளும் சந்தோசமா இருந்தாலும் காவ்யா சந்தோசம்தான் படுவா. உன்னை மாதிரி நினைக்கமாட்டா” என்றார்.

இப்பொழுதும் கூட அரைமனதுதான் என்றாலும், மகன் திருமணத்திற்கு சம்மதித்த பின்னே காலம் தாழ்த்துவது சரியில்லை என்று “மேகலைகிட்ட எப்போ பேசப்போறிங்க? இல்ல… இதையும் என்னையில்லாமலே பேசி முடிச்சிட்டிங்களா?”

“நீ இல்லாம எப்படி பேசுவேன்?” என்று அன்போடு சொல்லி, “விஷ்ணுக்கு எப்போ நேரம் இருக்குனு கேட்டுட்டு, அந்த நேரம் விஷாலினிக்கு ஃப்ரீயானும் கேட்டுட்டு, அதுக்கப்புறம் என் தம்பிக்கு சொல்லலாம். எல்லாரும் ஒன்னாசேர்ந்து முறையா போய் பொண்ணு கேட்டு கல்யாணம் என்னைக்குனு முடிவு பண்ணலாம்” என்றார் மகிழ்வோடு.

பிரபாவதி சம்மதம் தெரிவிக்கவே, “மேகலையோட அண்ணன் குடும்பம் இப்போதான் போனாங்க. மேகலைகிட்ட காலைல பேசலாம்” என்றார்.

“அண்ணா” என்ற குரலோடு வாயிலில் நின்றார் மேகலை.

“வாம்மா” என்று சோபாவில் அமர பணித்தார் கோபாலன்.

உள்ளே வந்தவர், “எங்கண்ணன் வருத்தப்பட்டு போனதெல்லாம் எனக்கு கஷ்டமா இல்லைண்ணா, கிருஷ்ணனையும் எங்கண்ணியையும் நினைச்சாதான் கவலையா இருக்கு” என்றார் வருத்தமாக.

“கவலைப்படாத மேகலை, இரண்டொரு வருசத்துல கிருஷ்ணன் கல்யாணம் செய்துக்குவான்” என்றார் பிரபாவதி.

“அதெல்லாம் செய்துக்குவான்தான். ஆனா அண்ணியும் கிருஷ்ணனும் இனி என்னை விடமாட்டாங்க போல” என்றார் கவலையாக.

“ஏன்? என்னாச்சு?” என்றார் கோபாலன்.

“எல்லாரும் இங்க வந்த காரணம் என்னவோ விஷாலினிக்காகத்தான். ஆனா கிருஷ்ணன் விஷாலினியை பார்த்ததை விட என்னைத்தான் அதிகமா பார்த்திட்டிருந்தான்.

நானென்னவோ ரொம்ப கஷ்டப்படுறமாதிரியும், அதுக்கெல்லாம் காரணம் அவங்கதான்ற மாதிரியும் பரிதாபமா பார்த்தான்.

எங்கண்ணி அதுக்கு மேல. இதென்ன புடவைனு எல்லாத்தையும் ஆராய்ஞ்சிட்டிருந்தாங்க. துணிமணி எடுக்க முடியாம இல்ல,  புருஷன் ஏமாத்துக்காரனாகிட்டான். யார் பார்க்க கட்டனும்னு நான் சொன்னேன்.

புருஷன் இல்லைனா நல்ல சேலை கட்டக்கூடாதா? விஷேசங்கள், நல்ல நாளுக்கு கட்ட கூட சேலையில்லையேனு கவலையா கேட்டாங்க.

எங்களுக்கு எல்லா நாளும் ஒன்னுதான். நாம பார்த்து பண்றதுதான் விஷேசம். அதனால எதுக்கு துணியில பணத்தை வேஸ்ட் பண்ணனும்னுதான் எடுக்கலனு நான் எதார்த்தமான உண்மையைத்தான் சொன்னேன். எதை சொன்னாலும் எல்லாம் அவங்களாலனு அவங்களே முடிவு செய்தா என்னதான் பண்றது?” என்றார் கவலையாக.

பிரபாவதி, “பாட்டி சாவுக்கு வந்தப்போதான் உன் அப்பா வீடு இவ்வளோ வசதினு தெரிய வந்துச்சு மேகலை. அவங்க வாழ்க்கையை ஒப்பிடும்போது நீ ரொம்ப ரொம்ப கம்மியாதான வாழ்ந்திட்டிருக்க? அதான் கவலைப்பட்டிருக்காங்க. உங்கண்ணி நல்ல மாதிரியாத்தான் இருக்காங்க” என்றார் தேறுதலாக.

“இனி பூவெல்லாம் கட்ட வேண்டாம், மாசம் மாசம் பணம் அனுப்பறேனு, பாட்டியோட நகைகள் இருக்கு, விஷாலினிக்குத்தான் அது, அப்படியிப்படின்னு நிறைய பேசினாங்க.

பாட்டி நகைகள் போடலைனாலும் பாட்டி என்னோடவேதான் இருப்பாங்க. அவங்க வாசம் என்னை விட்டு எப்போவும் போனதில்லனு விஷாலினி மறுத்துட்டா.

இனி அடிக்கடி வருவாங்களோ? என்னை அங்க கூப்பிடுவாங்களோனு கவலையா இருக்கு” என்றார் கவலையாக.

“அவங்க வரப்போக இருக்கிறது சந்தோசம்தான மேகலை” என்றார் பிரபாவதி.

“விஷாலினிக்கு சுத்தமா பிடிக்கல அண்ணி”

கோபாலன், “இனி அவங்க வரும்போது விஷாலினியை இங்க அழைச்சிக்கிறேன்” என்றார் இன்முகத்தோடு.

“அதெப்படிண்ணா?” என்று மேகலை தவிக்க, “நான் உங்க வீட்டுக்கு வந்து பேச நினைச்சேன்ம்மா, ம்… பரவால்ல. விசயத்தை மட்டும் இப்போ சொல்லிடறேன்.

கல்யாணத்தை சீக்கிரம் வச்சிடலாம் மேகலை. விஷ்ணுகிட்ட சம்மதம் வாங்கிட்டேன். இனி நீயும் விஷாலினியும்தான் முடிவு பண்ணனும்” என்றார்.

“விஷாலினிக்கு இன்னும் படிப்பு முடியலையேண்ணா. அதோட காவ்யா வாழ்க்கையை சரி பண்ணாம இவங்களுக்கு எப்படி பண்றது?” என்றார் மேகலை.

“காவ்யா வாழ்க்கையை விஷ்ணு வாழ்க்கையோட ஒப்பிட கூடாது. காவ்யா பி.ஹெச்.டி முடிக்கட்டும். அவ புருஷனா தேடி வந்தாலும் சரி, இல்ல சரிப்படலைனா வேற பார்க்குறதுனாலும் சரி. இன்னும் இரண்டு வருசம் கழிச்சு முடிவெடுத்துக்கலாம்.

விஷ்ணுக்கு இப்போ இருபத்தியொன்பது நடக்குது. இப்போ பண்ணினாதான் ஆச்சு. இந்த வருசம் விட்டா முப்பத்தியொன்னுலதான் பண்ண முடியும். இரட்டைபடையில எங்கள்ல பண்ணமாட்டோம். இப்போ கல்யாணம் பண்ணுவோம். விஷாலினி படிப்பு முடிஞ்ச பின்ன விஷ்ணுவோட அனுப்பி வைக்கலாம்.” என்றார்.

மேகலை யோசனையோடே இருக்க, “விஷ்ணுகிட்ட பேசிட்டேன் மேகலை, அவன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்” என்றதும், அனைத்து பிரச்சனைளையும் தள்ளி வைத்து, “சரிண்ணா… உங்க விருப்பம் போலவே செய்துடலாம்” என்றார்.

“முழு மனசோடதானம்மா சொல்ற?” என்றார் கோபாலன்.

“ஆமாம்ண்ணா. ஆனா என்ன? அவங்களுக்கு எதிராகவே இத்தனை அவசரமாய் கல்யாணத்தை வைக்கிறேனு அண்ணனும் அண்ணியும் நினைப்பாங்க.  முன்னாடினா சொல்லாமல் கூட கல்யாணத்தை செய்திருப்பேன். இப்போ அப்படி செய்ய முடியாது போல.

விஷாலினியை கொடுக்கலன்ற வருத்தம் இருந்தாலும், நான் இல்லாம விஷாலினி விஷேசம் நடக்கக்கூடாது. எதுனாலும் எனக்கு கால் பண்ணனும், உங்கண்ணன் அப்பா வரலைனாலும் நான் வருவேனு அண்ணி சொல்லிட்டு போயிருக்காங்க. அம்மா இறந்து இன்னும் முப்பது கும்பிடல, நல்லதுல கலந்துக்க முடியாதே. அதான் யோசனையா இருக்கு” என்றார் மேகலை.

“பதினைஞ்சு நாள்தானம்மா இருக்கு? அதுக்கப்புறம் செய்துக்கலாம்” என்றார் கோபாலன்.

“இல்லண்ணா வேண்டாம். விஷ்ணுகிட்ட சொன்னதுக்கப்புறம் இதை தள்ளிப்போடவும் எனக்கு மனசு வரல. பொண்ணு கேட்குறது மட்டுமாவது வச்சிக்கலாம். உறுதி பண்றதை பதினைஞ்சு நாள் கழிச்சு வச்சிக்கலாம்” என்றார்.

மகிழ்ந்த கோபாலன், “சரிம்மா. நான் என் தம்பிகிட்டயும், விஷ்ணுகிட்டயும் கலந்துகிட்டு என்னைக்குனு சொல்றேன். நீயும் விஷாலினிக்கு என்னைக்கு லீவ்னு கேட்டு சொல்லு” என்றார்.

“அவ இன்னும் இரண்டு நாள் வீட்டுலதான் இருப்பாண்ணா”

“அப்போ நாளைக்கு இல்ல நாளை மறுநாளே வச்சிக்கலாமாம்மா?” என்றார் ஆர்வமாக.

“விஷ்ணுக்கும் உங்களுக்கும் வசதினா வச்சிக்கலாம்ண்ணா” என்றார்.

“சரிம்மா. நீ போய் விஷாலினிகிட்ட சொல்லு. நான் என் தம்பிகிட்டயும் விஷ்ணுகிட்டயும் சொல்றேன்” என்று மொபைலை எடுத்தார்.

விஷ்ணு அழைப்பை ஏற்காமல் போகவே, தனது தம்பிக்கு அழைத்து விசயத்தை விளக்கிக்கொண்டிருந்தார் மகிழ்வோடு.

வீட்டிற்கு வந்த மேகலை மகளைத் தேட, அறையில் நடந்தபடி போனில் பேசிக்கொண்டிருந்தாள்.

பத்து நிமிடம் வரை பொறுத்தவர், “யார் கூட பேசிட்டிருக்க? கட் பண்ணிவிடு, உன்கிட்ட முக்கியமான விசயம் பேசனும்” என்றார்.

“அப்புறம் கால் பண்றேன்” என்று இணைப்பை துண்டித்தவள், “என்ன விசயம்மா?” என்றாள்.

மேகலை விசயத்தை சொல்ல, “பொண்ணு பார்க்குறதெல்லாம் எதுக்கும்மா? நாம என்ன தெரியாதவங்களா?” என்றாள் அவஸ்த்தையோடு.

“தெரிஞ்சவங்களா இருந்தாலும் எல்லாம் முறைப்படி நடக்கனும்னு எனக்கு ஆசையா இருக்கு விஷாலினி. உனக்கு செய்யாம யாருக்கு செய்வேன்? இதெல்லாம் வாழ்க்கையில அனுபவிக்க வேண்டிய ஒன்னு” என்று மகிழ்வோடு சொல்லி,

“உன் கோபால் மாமாவோட தம்பி குடும்பம்லாம் உன்னை பார்க்கனும்ல? நீ ஸ்கூல் படிக்கும்போது பார்த்திருப்பாங்க. சேரி வேற ஒன்னுகூட இல்ல. கிளம்பு… ஒருசேரியாவது எடுத்து தைக்க கொடுத்துட்டு வரலாம்” என்றார் ஆசையாக.

சாந்தியின் உரிமை பேச்சு விஷாலினியை பாதித்ததோடு, நிச்சயம் செய்துக்கலாம் என்றதற்கே மறுத்தவன், இதற்கு சம்மதித்திருக்கமாட்டான். கிருஷ்ணன் வந்ததால் விஷ்ணுவிடம் கேளாமல் இவர்களாக முடிவெடுத்திருப்பார்களோ? என்றும் தோன்ற, “பர்ச்சேஸ் பண்ற மூட் இல்லைம்மா. நிறை பூ கட்டினது வேற இடுப்பெல்லாம் வலிக்குது” என்றாள் சலிப்பாக.

“விஷாலினி… அம்மா இறந்த துக்கமே இன்னும் போகல. ஆனாலும் இதுக்கு எதுக்கு சம்மதிச்சேன் தெரியுமா? முதல் காரணம் விஷ்ணு கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிச்ச பின்ன நாம மறுக்கக்கூடாதுன்றது.

இரண்டாவது காரணம் கிருஷ்ணன். நான் அந்த வீட்டை விட்டு வரும்போது அவனுக்கு ஆறு வயசு. அத்த அத்தனு என்மேல ரொம்ப ப்ரியமா இருப்பான். இத்தனை வருசம் பேசலைனாலும் அவனை என்னால வெறுக்க முடியல.

உன்னை ஆசைப்பட்டுட்டான். இப்படி விசயம்லாம் உனக்கு நடக்குதுனு தெரிஞ்சா சீக்கிரம் மறக்க முயற்சிப்பான். உன்னால அவன் வேதனைப்படுறதை என்னால தாங்க முடியல” என்றார் வருத்தத்தோடு.

“அவங்க சம்மதிச்சிட்டாங்களா?” என்றாள் வியப்பாக.

“ம் ஆமாம். கோபாலண்ணா சொன்னார்” என்றதும், உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பியவளுக்கு மனம் இனிய படபடப்பிற்குள்ளானது.

அன்னையிடம் தன் அவஸ்த்தையை மறைக்க மொபைலில் தனது பாடம் சம்மந்தமாக எதையோ பார்த்தபடி “ஒருநாள்ல யார் ப்ளொஸ் தைச்சு தருவாங்க? என் ஃபங்ஷனுக்கு மாமா எடுத்து கொடுத்தாங்கள்ல? அந்த சேரியையே கட்டிக்கறேன். பிளொஸ் மட்டும் ஆல்ட்ரேட் பண்ணிக்கலாம்மா” என்றாள்.

மகளின் மலர்ந்த முகத்தில் மனம் மகிழ்ந்தவர் “சரி” என்று அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!