அடுத்தநாள் காலை ஒன்பது மணிபோல் கோபாலனின் தம்பி குடும்பம் வந்திருந்தனர். மாலை மூன்று மணிக்கு நல்லநேரம் ஆதலால் அந்த நேரம்தான் விஷாலினி வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். விஷ்ணு மதியம்போல் வருவதாக சொல்லியிருந்தான்.
அழைப்புவிடுக்கும்போதே காவ்யாவிடம் அவளின் கணவன் குறித்து பேசக்கூடாது என்று தம்பியிடம் சொல்லியிருந்தார் கோபாலன். அண்ணன் சொன்னதாலும், பி.ஹெச்.டி படித்துக்கொண்டிருக்கும் அண்ணன் மகளிடம் கசப்பான வாழ்க்கையை விசாரிக்க பிடிக்காமலும் இயல்பாகவே நலம் விசாரித்துக்கொண்டனர்.
“நாலு வருசமா காவ்யா விஷ்ணு முன்னாடி வரதில்லங்க, இன்னைக்கு அப்படி இருக்க முடியாது. காவ்யாவை ஏதும் சொல்லாம விஷ்ணுவை நீங்கதான் சமாளிக்கனும்” என்று கொழுந்தனிடம் கோரிக்கை வைத்தார் பிரபாவதி.
“ஆன்ட்டி ஏதும் நினைக்கமாட்டாங்க சித்தி, விஷாலினியும் அப்படித்தான். நான் கனியை அழைச்சிட்டு போறேன்” என்று சொல்ல, “நானும்தான் வருவேன்” என்று கவியரசும் எழுந்தான்.
Advertisement
“சரி வா” என்று இருவரையும் அழைத்துச்சென்றாள் காவ்யா.
Advertisement
“காவ்யாக்கா” என்று விஷாலினி இன்முகத்தோடு வரவேற்க, “நான் மட்டும் வரல, உன் சின்ன நாத்தனார், கொழுந்தனாரையும் அழைச்சிட்டு வந்திருக்கேன்” என்று பின்னிருப்பவர்களை உள்ளே வரும்படி செய்கை செய்தாள் புன்னகையோடு.
இருவரும் உள்ளே வர, “இவன் கவியரசு, ப்ளஸ்டூ படிக்கிறான். இவ கனிமொழி, டென்ந்த் படிக்கிறா” என்றாள்.
“ம்… முகமெல்லாம் மாறிப்போச்சு. கவியரசை மீசையில்லாம பார்த்தது. இந்த மேடம் எழு வருசத்துக்கு முன்னவிட இப்போ ரொம்ப அழகாகிட்டாங்க” என்று இன்முகத்தோடு சொன்னவள், “ஸ்டடீஸ்லாம் எப்படி போகுது?” என்றாள் இருவரிடமும்.
Advertisement
“ஸ்டடீஸ் பத்தி பேசறதாயிருந்தா நாங்க போறோம்” என்று இருவரும் கோரசாய் சொல்ல, சிரித்தவள், “சரி சரி பேசல. உக்காருங்க” என்றாள்.
“ஆன்ட்டி எங்க விஷாலினி?”
“கடைக்கு போயிருக்காங்கக்கா” என்றாள்.
கவியரசு “விஷ்ணு அண்ணா ப்ரப்போஸ் பண்ணினாங்களா?” என்றான் ஆச்சர்யமாக.
“இல்லையே… மாமாதான் என்னை பொண்ணு கேட்டுருக்காங்க. அம்மா சம்மதிக்கவும் நானும் சம்மதிச்சேன்”
“நம்ப முடியவில்லை… இல்லை…” என்று கவியரசு ராகமிழுக்க, சிரித்தவள், “ஹும்… என்னை கட்டிக்க உங்கண்ணன் எப்படி சம்மதிச்சார்னு இப்போவரை என்னாலயும்தான் நம்பமுடியல, சின்ன வயசுலயிருந்து என்னை கண்டாலே உங்கண்ணனுக்கு ஆகாது. காவ்யாக்காவும் அத்தை மாமாவும்தான் என்னோட பேசுவாங்க.
பெரியவங்க சொன்னாங்கனு கல்யாணம் செய்ய சம்மதிச்சிட்டேன், உங்கண்ணனோட எப்படி வாழப்போறேனு நினைச்சா திக்குனு இருக்கு. எப்போப்பாரு விறப்பாவே இருக்கார்” என்றாள் பாவமாக.
“டாக்டர்க்கு படிக்கிறது ரொம்ப கஷ்டமாக்கா?” என்றாள் இயல்பாக. இல்லை என தலையசைக்க, இன்னும் நிறைய கேட்டு தெரிந்துகொண்டாள் கனிமொழி. பிறகு பழரசம் கொடுக்கவே மூவரும் பருகினர்.
“சரிக்கா, டாட்டா” என்று கனிமொழி எழ, கவியரசும் எழவே, “நீங்க போங்க, நான் ஆன்ட்டி வந்தபின்ன வரேன்” என்றாள்.
“இல்லக்கா. எனக்கும் பிடிச்சிருக்கு. ஆனா ஸ்கூல் படிக்கிற பசங்ககிட்ட இதைப்பத்தி பேசப்பிடிக்கல. அதான் அப்படி சொன்னேன்” என்றாள் மலர்ந்த முகத்தோடு.
மகிழ்ந்தவள், “சரி நான் வரேன்” என்று கிளம்பினாள்.
ஒருமணிபோல் விஷ்ணு வந்தான். சித்தி சித்தப்பா நலம் விசாரித்து, கனிமொழி கவியரசோடு நிறைய பேசினான்.
காவ்யா தனது சித்தியோடு பேசிக்கொண்டிருக்கவே, மதிய உணவு உண்டு முடித்ததும் சற்று நேரம் ஓய்வெடுப்பதாய் சொல்லி விஷ்ணு தனதறைக்குள் சென்றிட, இரண்டு மணிபோல் இவர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள்.
பிறகு விஷ்ணுவை எழுப்பவே, “இங்க இருக்க வீட்டுக்கு போக இத்தனை மேக்கப்பா?” என்றான் கனிமொழியிடம்.
கோபாலனும் ராமனும் சோபாவில் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு சற்று தள்ளி சேரில் விஷ்ணு அமர்ந்திருந்தான். மற்றவர்கள் கீழே ஜமக்காளத்தில் அமர்ந்திருந்தனர்.
“கீழ உக்கார வைக்கும்படியா ஆகிடுச்சு அண்ணி. திடீர்னு முடிவானதால ஏதும் வாங்க முடியல, அடுத்தவாரம் தேவையான ஃபர்னிச்சர் வாங்கிடறேன்” என்றார் சங்கடமாக.
“நமக்குள்ள என்ன மேகலை? ஆனாலும் நேத்து ஒருநாளைல தேவையானதெல்லாம் வாங்கிட்ட போல” என்றார் பாராட்டாக.
இப்படி சினிமாக்களில் போல புடவை கட்டி அலங்கரித்து வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை விஷ்ணு. இடைதாண்டிய பின்னலும், அதில் குடிகொண்ட மலர்சரமும் என மிக அழகாய் இருந்தாள் விஷாலினி. ஜொள்ளுவாச்சி… கொஞ்சம் அசந்தோம்… நம்மளை ஜொள்ளுவிட வச்சிடுவா போலயே என்று நிமிர்வாய் அமர்ந்தான் விஷ்ணுவர்தன்.
கோபாலன், ராமனுக்கு டீ கொடுத்து விஷ்ணுவிடம் நீட்டினாள். வாங்கியவன், “போன வாரம் ஏன் மெஸேஜ் போடல?” என்றான்.
இவள் புரியாமல் பார்க்க, “அதான்… பத்து நாளைக்கொருமுறை எனக்கு பிரச்சனையில்லை. நான் நல்லாயிருக்கேனு மெஸேஜ் போடுவியே. அதை சொல்றேன்” என்றான்.
“நான் நல்லா இல்ல, எனக்கு கிருஷ்ணனால பிரச்சனை இருந்தது. உங்ககிட்ட சொன்னேன், நீங்க சரியா பார்த்துக்கல. அதனால மெஸேஜ் போடல” என்றாள் உர்ரென முகம் வைத்து.
“அண்ணி வெக்கப்படுவாங்கனு பார்த்தா… அண்ணா கூட சண்டைக்கு நிற்குறாங்க” என்று ஏமாற்றமாய் சொன்னாள் கனிமொழி.
‘இவ வெக்கப்பட்டுட்டாலும்’ என விஷ்ணுவும் ஏமாற்றத்தோடு நினைத்தான்.
இவர் பார்க்கனு கஷ்டப்பட்டு சாரி கட்டிட்டு வந்தா, அதைவிட்டுட்டு விசாரணை பண்ணிட்டிருக்கார் என்ற கோபத்தோடு பிரபாவதி பக்கம் திரும்பியவள் அவர்களுக்கு டீ கொடுத்து அவர்களோடே அமர்ந்து கொண்டாள் விஷ்ணுவிற்கு முதுகு காட்டி.
“நிறைய பூ வச்சு, ஜிமிக்கி போட்டு, சேரிகட்டி அழகா இருக்க விஷாலினி. இன்னைக்குத்தான் இப்படி பார்க்குறேன்” என்றார் பிரபாவதி.
“ஜிமிக்கி என் ஃபங்சனுக்கு பாட்டி வாங்கி கொடுத்தது அத்த, சேரி மாமா வாங்கி கொடுத்தது” என்றாள் பெருமையாக.
காவ்யா தனியே நின்றிருக்க, கனிமொழியிடம் “போய் காவ்யாக்காவை கூட்டிட்டு வா” என்று விஷ்ணு அறியாவண்ணம் கிசுகிசுத்தாள்.
கனிமொழி எழுந்து காவ்யாவிடம் செல்லவே, அதிலேயே புரிந்துகொண்டவன், “நீங்க பேசிட்டு வாங்கப்பா, எனக்கு கால் பண்ணனும்” என்று எழுந்தான்.
“நீ இல்லாம என்ன பேசுறது விஷ்ணு? உனக்கு எப்போ ஃப்ரீ? விஷாலினி எக்ஸாம் எப்போ முடியுதுனு உங்க இரண்டு பேரையும் கேட்டுதான மத்தது முடிவு பண்ணனும். உக்காரு” என்றார் கோபாலன்.
“விஷாலினிதான் படிச்சிட்டிருக்கா, அவளை கேட்டு இரண்டு மூனு டேட் ஃபிக்ஸ் பண்ணுங்க. அதுல ஒருநாள் நான் ஃப்ரீயாகிக்கிறேன்” என்று வெளியேறினான்.
விஷாலினி அருகே வந்த காவ்யா, “என்னை கூப்பிட்டதாலதான் விஷ்ணு வெளில போயட்டான். அவன் முன்னாடி என்னை கண்டுக்காதனு நான்தான் சொன்னேன்ல?” என கடிந்தாள்.
“நான் அவருக்கு தெரியாமத்தான் கனிகிட்ட சொன்னேன்” என்று பாவமாய் சொல்ல, “இன்னைக்கு விஷ்ணு கவனமெல்லாம் உன்மேலதான் இருந்திருக்கும். இதை கூட கண்டுபிடிச்சிருக்கமாட்டானா?” என முறைத்து, “இதுவரை ஒரு க்ரஸ் கூட இருந்ததில்ல விஷாலினி. முதல்முறையா உன்னை ஆசைப்பட்டிருக்கான்.
நல்ல மூட்ல இருந்தவனை கோபமாக்கிவிட்டுட்ட. என்னால அவன் ஐ.பி.எஸ் லட்சியம் கனவாவே போய்டுச்சு. விஷ்ணு கல்யாண சந்தோசமும் என்னால பறிபோறதை நான் அனுமதிக்கமாட்டேன்” என்றாள் கண்டிப்போடு.
அன்னையிடம் வந்தவள், “ம்மா, அவங்க மாடிக்கு கூப்பிடுறாங்க” என்றாள் பெரும் அவஸ்த்தையோடு.
“இதுக்கு எதுக்கு இத்தனை நெளியிற?” என சிரித்து, “இரண்டு பேருக்கும் டீ தரேன். எடுத்துட்டு போ” என்று இரு டம்ளரையும், டீ யையும் கொடுத்தனுப்பினார் மேகலை.
டீயோடு விஷாலினி மேலே வர, அவளையே பார்த்திருந்தான். விஷாலினி வீட்டின் மாடிக்கு வந்து நிற்பாள் என்று விஷ்ணு எதிர்பார்த்திருக்க, இவள் விஷ்ணு வீட்டின் மாடிக்கே வந்து “டீ” என்று நீட்டினாள்.
“எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சே காவ்யாவை எதுக்கு கூப்பிட்ட?” என முறைத்தான்.
இவளை… என முறைத்தபடி நெருங்கி நிற்க, பயந்தாலும் பின்னடையாமல் காலை ஊன்றி நின்று “டீ ஆறிடும் குடிங்க” என்றாள் பொறுப்பாக.
“ஸோ… காவ்யாவை நீ விட மாட்ட?”
விஷ்ணு முறைத்த போது வராத பயம், தற்போது இயல்புபோல் கேட்டதில் வந்திருக்க, சில நொடி தடுமாறிய விஷாலினி, பின்னே சுதாரித்து “காவ்யாக்கா பத்தி கேட்கத்தான் கூப்பிட்டிங்களா? நான் கூட வேற என்னவோ நினைச்சேன்” என்றாள் ஏமாற்றம் அடைந்த பாவனையில்.
“என்ன? என்னை டைவர்ட் பண்றதா நினைப்பா?” என தீயாய் முறைத்தவன், “கிளம்பு” என்றான்.
விஷாலினி கலக்கத்தோடு பார்த்திருக்க, இவன் கிளம்பியிருந்தான்.