Skip to content
Post Views: 8,455
“வாட் நான்சென்ஸ் ப்ரியா என்ன பேசிட்டு இருக்க? நான் வானகரம்ல இருக்கேன் இந்த மழைல ட்ராபிக்ல பெருங்குடி வந்து உன்னைப் பிக்கப் பண்ணி வீட்டில விடறது நடக்குற விஷயமா மழை வரும்னு முன்னாடியே தெரியும்ல சீக்கிரம் கிளம்பரத்துக்கு என்ன, ட்ரெயின்லாம் பிடிக்க வேண்டாம் கேப் புக் பண்ணி சீக்கிரம் வா என்றான்” ரவிநந்தன் எரிச்சலாக.
Advertisement
இதே வேலையாகப் போய்விட்டது தினமும் ஒரு காரணம் கண்டு பிடிக்கிறாள் தன்னை வர வைக்க இப்பொழுது அழைக்கச் சென்றாலும் அவனை உடனே விடமாட்டாள் வரும் வழியில் ஏதேனும் ஹோட்டாலில் இரவுணவை முடித்துக்கொண்டு அவனை வீட்டிற்கு அனுப்புவாள்.
Advertisement
Advertisement
வாரத்தில் பாதி நாட்கள் வெளியில் சாப்பிட்டு விட்டேன் என்று தாயிடம் சொல்லச் சங்கடமாக இருந்தது, பெரிதாக அவன் விஷயங்களில் தலையிடாத தந்தை கூட இப்பொழுதெல்லாம் அவனை அழுத்தமாகப் பார்க்கிறார்.
Advertisement
“பேச வேண்டிய எடத்துல பேசணும் ரவி” என்று இரு தினங்களுக்கு முன்பு அவனிடம் கூறினார்.
நிச்சயம் முடிந்த ஒரு மாதத்திலே அவனுக்கு ஒருவித சலிப்பு வந்திருந்தது அவனுடைய பொறுமையை மிகவும் சோதித்தாள் ப்ரியா, தான் நினைப்பதை எப்படியேனும் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற வெறி அவளிடம் இருந்தது அவனைப் பணியவைத்து கொண்டே இருக்கிறாள்.
அவளாக அழைத்து மல்லிகாவிடம் பேசுவதில்லை “நான் வேலை வெட்டி இல்லாமலா இருக்கேன்” என்றாள் அவனிடம்.
மல்லிகாவாக வாரத்தில் ஒரு முறை அழைத்து அவளிடம் சிறிது நேரம் பேசுவார் அப்படி அவர் ஒருமுறை அழைத்தபோது “சும்மா ஏன் தொல்லை பண்றீங்க அத்த கல்யாணம் செஞ்சு உங்கவீட்டுக்கு தானே வரப்போறேன் பேசவேண்டியது எல்லாம் அப்போ பேசிக்கோங்க” என்று அவரை அவமதித்தாள்.
மகனிடம் அதைக் கூறாமல் மறைத்துவிட்டாலும் அவர் மனதிற்கு இந்தத் திருமணம் எவ்வளவு தூரம் சரியாக வரும் என்ற பயம் சூழ்ந்தது.
வேலை தலைக்குமேல் கிடக்க பிரியா அழைத்து ஒருமணி நேரம் சென்ற பிறகே அவனால் அலுவலகம் விட்டு வெளியேற முடிந்தது, அடித்துப் பெய்யும் மழை நசநசவென்ற சாலை வாகனங்களின் பெரும் வரிசை என்று எரிச்சல் மூண்டது.
வானகரம் கடந்து முகப்பேர் செல்லும் திருப்பத்தில் திரும்பிப் பாலத்தின் கீழே வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தான், ஆமை வேகத்தில் வண்டிகள் நகர்ந்தது பாலத்தின் கீழே ஒரு ஓரமாக உடலைக் குறுக்கி கடந்து செல்லும் ஷேர் ஆட்டோக்களை எட்டி எட்டி பார்த்து நின்றிருந்தாள் துளசி.
‘அவள்தானா…’ என்று மீண்டும் ஒருமுறை நன்றாக ஊன்றிக் கவனித்தவன் மெல்ல மெல்ல காரை நகர்த்தி ஓரமாக நிறுத்திவிட்டு பின்னில் கிடந்த குடையை எடுத்துக்கொண்டு அவளை நோக்கி விரைந்தான்.
“துளசி” என்று சத்தமாக அழைத்தான், மழையின் இரைச்சல் வாகனங்களின் சத்தத்தில் அவளுக்குக் கேட்கவில்லை மீண்டும் சத்தமாக அழைத்தவன் அவள் தோளைத் தொட பயத்தில் துள்ளி நகர்ந்தவள் ரவினந்தனை கண்டதும் நெஞ்சில் கை வைத்து நிம்மதி அடைந்தாள்.
“வா” என்றவன் அவளை அழைத்துச்சென்று காரின் கதவைத் திறக்க முன்னில் அமர்ந்துகொண்டாள்.
“என்னாச்சு ஏன் இங்க நிக்குற” என்றான் இப்பொழுது மெதுவாக.
“வண்டியே கிடைக்கல மாமா நடந்து போகவும் முடியல குடை எடுத்துட்டுவரல, ஷேர் ஆட்டோ எல்லாம் புல்லா ஆளுங்க” என்றாள்.
“ஹ்ம்ம் மழை ரொம்ப அதிகம் அதான்” என்றவன் “நான் வீட்டில விடுறேன்” என்க.
“வேண்டாம் மாமா உங்களுக்குச் சிரமம் பஸ் ஸ்டாப்ல விட்டுருங்க நன் போய்டுவேன்” என்றாள்.
“என்ன சிரமம் போற வழிலதான வீடு இறக்கி விட்டுட்டு போகப்போறேன் உனக்காக ஏழு கடல் ஏழுமலை எல்லாம் தாண்டல, அப்பறம் தமிழ் என்ன சொல்றாரு” என்க.
அழகாக ஒரு வெட்க புன்னகை வந்து அமர்ந்துகொண்டது அவளிடம் “ஊருக்குப் போயிருக்காங்க இன்னும் ஒருவாரத்துல வந்துடுவாங்க” என்றாள், அவள் பிடித்தமும் சந்தோஷமும் அந்த முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.
ப்ரியாவை நினைத்து ஒரு பெருமூச்சு எழுந்தது அவனுக்கு அதை மறைத்தவன் “இதேமாதிரி சந்தோஷமா இரு” என்றான் உளமார, அவனுக்கும் அவன் தாய் தந்தைக்கும் துளசியை மிகவும் பிடித்திருந்தது உடன் பிறந்தவளை போல அவளை எண்ணினான் ரவிநந்தன்.
ப்ரியா கார் புக் செய்து வந்துகொண்டிருந்தாள், தங்கள் தெருவின் உள்ளே அவள் வந்த வண்டி நுழைய ரவினந்தனின் கார் அவளைக் கடந்து சென்றது, வீட்டின் முன் இறங்கியவள் பார்த்தது வாசலில் தனக்காகக் காத்து நிற்கும் தாயையும் உடன் நிற்கும் துளசியையும்.
கேபிற்கு பணம் கொடுத்து இறங்கியவள் “ரவி வந்தாரமா” என்றாள் ஜெயந்தியிடம்.
“ஆமாம் துளசியை வந்து விட்டுட்டு போனார் வழியில பாத்தாராம்” என்க அவள் முகம் மிளகாயாய் சிவந்தது உடனே அலைபேசியை எடுத்தவள் அவனுக்கு அழைத்து “நீங்க இப்போ இங்க வரணும்” என்றாள்.
“என்ன விளையாடுறியா நான் பாதி தூரம் போய்ட்டேன்” என்றான் அவன்.
“நீங்க வரவரைக்கும் இந்த மழைல தான் நான் நிப்பேன்” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு கோபத்தில் அலைபேசியை எறிந்துடைத்தாள்.
மீண்டும் மீண்டும் அவளை அழைத்துப் பார்த்தவன் ‘இவளை இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாக்காம விடுறதில்ல’ என்ற முடிவோடு திரும்பி வந்தான்.
துளசி அதிர்ச்சியாகப் பார்த்து நிற்க “என்ன ப்ரியா என்னாச்சுடா ஏன் இவ்ளோ கோவம்” என்று பதறினார் ஜெயந்தி, சத்தம் கேட்டு வெளியில் வந்த ராகவனும் மகளை நெருங்கி “ப்ரியா என்னம்மா இது உள்ள வா” என்க.
“என் பக்கத்துல யாரும் வராதீங்க போங்க எல்லாரும்” என்றவள் விழிகள் துளசியை எரித்தது, சத்தியமாகத் துளசிக்கு ஒன்றும் புரியவில்லை தன் மீது என்ன தவறு என்றவள் பயந்து நடுங்கி நின்றாள்.
காரை அவன் நிறுத்தியதிலே அவனின் கோபம் தெரிந்தது அவர்களுக்கு, வேக நடையில் உள்ளே வந்தவன் ப்ரியாவின் கையைப் பற்றி இழுத்து உள்ளே நிறுத்திய வேகத்தில் “பைத்தியமா நீ” என்றான் கட்டுப்படுத்திய கோபத்தோடு.
“ஆமாம் நான் பைத்தியம்தான், என்னை வந்து கூட்டிட்டு போங்கன்னு உங்களுக்குக் கால் பண்ணா நீயே வான்னு என்கிட்டே சொல்லிட்டு இவளை மட்டும் வாசல்ல கொண்டுவந்து விட்டுட்டு போற, என்னைவிட இவ முக்கியமா போய்ட்டாளா” என்றவளை வெறுப்போடு பார்த்தான் ரவிநந்தன்.
“மனசாட்சி இருக்கா உனக்கு… நீ என்னைப் பெருங்குடிக்கு வரச் சொன்ன, துளசி நான் வர வழில வண்டி கிடைக்காம மழைல நின்னுட்டு இருந்தா போற வழில இறக்கிவிட்டுட்டு போனேன் இதுல என்ன தப்பு, அவ உன் தங்கச்சிதான நீ கேக்குற கேள்வியே அர்த்தம் இல்லாததுன்னு உனக்குத் தோணல” என்றவன்.
தலையை அழுந்தக் கோதி “உன்கூட என்னால போராட முடியல ஐ ஆம் டையர்ட்” என்றான் தளர்வாக.
“ஓஹ்… இந்தக் கருப்பிகிட்டே அப்படி எண்ணத்தைப் பார்த்தீங்க துளசி தங்கமான பொண்ணுன்னு உன் அம்மா ஒருபக்கம், துளசி ஸ்வீட் கேர்ள்னு நீ ஒரு பக்கம், என்னமோ இவ உலக அழகி மாதிரி இவளைக் கட்டிக்க ஒருத்தன் ஒருபக்கம்னு எல்லாரும் தாங்குறீங்க, இந்த மூஞ்சில அப்படி என்ன எழவு இருக்கு இல்ல ஆசைக்கு உன் கூட வரேன்னு சொன்னாளா” என்ற ப்ரியாவின் கன்னத்தைப் பதம் பார்த்தது ரவியின் கை.
“கொன்னு பொதச்சிருவேன் ச்சீ…” என்றவன் “உன்கூடலாம் மனுஷன் வாழ்வானா, அந்தப் பொண்ணு உன்னை என்னடி பண்ணா இவ்ளோ வன்மம் உனக்கு, உன் மனசு முழுக்க சாக்கடை அழுக்கு அதுதான் இப்படி பேசவருது உனக்கு”.
“தமிச்செல்வனுக்கு தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்யாசம் தெரியுது அவன் தங்கத்தை தேடியிருக்கான் நான் தகரத்தை தங்கம்னு நினச்சு ஏமாந்திட்டேன், உன்ன தொட்டாலே எனக்கு அசிங்கம்” என்றவன் அவன் விரலில் கிடந்த நிச்சய மோதிரத்தை கழட்டி அவள் முன் வீசி “உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஒரு கும்புடு” என்று திரும்பி நடந்தான்.
அவள் கூறிய வார்த்தைகளில் மொத்தமாக உடைந்திருந்தாள் துளசி, தமிழின் அழைப்பு வந்துகொண்டே இருந்ததது எடுக்க முடியவில்லை அவளால் அவள் குரலை வைத்தே கண்டுபிடித்துவிடுவான் என்பதால் தன்னை கட்டுப்படுத்தி மூலையில் சுருண்டிருந்தாள் துளசி.
கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் விசிறி அடித்து உடைத்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தாள் ப்ரியா, ஜெயந்தியும் ராகவனும் எவ்வளவு முயன்றும் அவளை அடக்க முடியவில்லை.
ராகவன் துளசிக்கு கண்காணிப்பித்தார் ‘உள்ளே போய்விடு’ என்று மகள் அவளை ஏதேனும் செய்துவிடுவாளோ என்ற பயம் வந்தது அவருக்கு, துளசி ரூமிற்குள் சென்று சுவரோடு ஒண்டினாள்.
வெகுநேரம் கத்தி ஆர்ப்ப்பாட்டம் செய்தவள் மெல்ல மெல்ல சமாதானம் அடைந்தாள் “எங்க அவ அவளால தான் எல்லாம்” என்றாள் துளசியை குறிப்பிட்டு.
“கொஞ்ச நேரம் பேசாம இரு ப்ரியா, அவ என்ன பண்ணா உங்க ரெண்டு பேருக்கும் இடைல இதுவரைக்கும் வந்த பிரச்சனை எல்லாத்துக்கும் நீ தான் காரணம், இன்னைக்கும் மாப்பிளை தான் சொன்னாரே வழில பாத்தேன் கூட்டிட்டு வந்தேன்னு அதுக்கு எதுக்கு இவ்ளோ கோவப்பட்ட…”.
“என்ன வார்த்தையெல்லாம் பேசிட்ட சம்மந்தி வீட்டில என்ன சொல்லுவாங்களோனு பயமா இருக்கு, உன் அண்ணனுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான் ஊரைக்கூட்டி பண்ண நிச்சயம் இன்னும் ஒருமாசத்துல கல்யாணத்தை வெச்சுகிட்டு அப்படி என்ன உனக்குத் திமிர்”.
“அவரை யாரும் தப்பா பேசமாட்டாங்க எல்லாரும் உன்னைத்தான் கைக்காமிப்பாங்க எல்லாம் உன்னைச் சொல்லணும் கொஞ்சி கொஞ்சி இந்த நிலமைல கொண்டு வந்து விட்டிருக்க” என்ற ராகவன் அடுத்து என்ன என்று தெரியாமல் தலையைப் பிடித்து அமர்ந்துவிட ஜெயந்தியின் முகம் வெளுத்தது.
என்னதான் பென்சன் வருகிறது என்றாலும் வீட்டு செலவுகள் போகப் பெரிதாகச் சேமிப்பு இல்லை, ப்ரியா கை நிறைய சம்பாரித்தாலும் வீட்டிற்கு ஒன்றும் தருவதில்லை பட்டிகாட்டில் வாழ்கிறார்கள் பெரிதாக வசதியில்லை நம்மைப் போல நாகரிகம் இல்லை என்று ஜெயந்தியும் மகளும் பேசித் திரிகிறார்கள் சாந்தா குடும்பத்தை.
பார்கவி பிறந்த போதுகூட அது உண்மையாக இருக்கலாம் ஆனால் நிஜத்தை சொல்ல வேண்டும் என்றால் இப்பொழுது இவர்களைவிடக் கொஞ்சம் நல்ல நிலைமையில் அவர்கள் வாழ்கிறார்கள் அனால் அதை அவர்களைப் புரிந்துகொள்ள விடாமல் மட்டம் தட்டியே வைத்திருக்கிறார் ஜெயந்தி.
மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ஆளுக்கு இருப்பது பவன் வீட்டிற்கு தேவையான சீர் கல்யாண செலவு என்று முன்னரே திட்டமிட்டு சேர்த்துவைத்தார் சாந்தா, டவுன் கூட அல்லாத ஒரு ஊர் என்பதால் பெரிதாகச் செலவும் இல்லை கல்யாணமும் பெரிய செலவுகள் இல்லாமல் முடிந்துவிடும், என்றாலும் துர்காவின் திருமணத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல் சீர் செய்து நிறைவாக அனுப்பினர்.
இப்பொழுது துளசிக்கும் அனைத்துமே தயாராக உள்ளது பார்கவிக்கு கூட நகை சீட்டுக் கட்டி பாதி சேர்த்துவிட்டார், அவளுடைய திருமணத்திற்கு இன்னும் மூன்று வருடமேனும் உள்ளதே அதற்குள் நிறைவாகவே சேர்த்துவிடுவார்.
அதோடு சாந்தா விஜயகுமார் காலத்துக்குப் பிறகு அந்த வீடும் இடமும் இவர்கள் மூன்று பேருக்குத்தான் எப்படியும் கணிசமான தொகை வரும், இங்கே அப்படியில்லை மருமகளுக்கு நாற்பது பவன் குறையாமல் வேண்டும் என்று கேட்டு வாங்கினார் ஜெயந்தி.
தங்கை தன் மூன்று மகள்களுக்குச் செய்வதை மொத்தமாகத் தன் மகளுக்குச் செய்யவில்லையென்றால் தனக்கு கௌரவக்குறைச்சல் என்று கணவனோடு மல்லுக்கட்டி மகளுக்கு அறுபது பவன் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
சென்னை போன்ற மாநகரில் ஒரு மண்டபத்தைப் பிடித்துத் திருமணத்தை நடத்த எத்தனை லச்சங்கள் வேண்டும் அதோடு சீர் வேறு, ராகவனுக்கு தலை சுற்றியது மகனிடம் கேட்டு நின்றார்.
“நம்மால் என்ன முடியுமோ அதைச் சொல்லிக் கல்யாணம் முடிக்கலாம்” என்றான் அவன்.
“முடியாது” என்றார் ஜெயந்தி.
“அப்படியானால் வீட்டை முழுதாக எனக்குத் தர வேண்டும், கல்யாண செலவோடு இருபது அவன் நகை நான் செய்கிறேன்” என்றான் பிரேம், வேறு வழி இல்லாமல் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
மனைவியின் சேமிப்பு தன்னுடைய சேமிப்பு ஆபிசில் வாங்கிய கடன் என்று மொத்தமாக இருபத்தியைந்து லச்சங்கள் ஜெயந்தியிடம் கொடுத்திருந்தான் பிரேம், அது இல்லாமல் நிச்சய செலவை எந்தக் கணக்கும் கூறாமல் அண்ணனாக நின்று செய்திருந்தான்.
இவள் அனைத்தையும் இப்படியொரு நொடியில் கலைத்துவிட்டதை அறிந்தால் என்ன நடக்கும் என்ற பயம் வேறு அவரை ஆட்டிப்படைத்தது, சம்மந்தி என்ன சொல்லுவார் என்ற பயம் அப்பொழுதுதான் மெல்ல மெல்ல மனதில் கிளைபரப்பியது இடிந்துபோய் அமர்ந்திருக்கும் பெற்றோரைப் பார்த்த பிறகே நடந்துகொண்டது கொஞ்சம் அதிகப்படியோ என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு.
கண்மண் தெரியா கோபத்தில் வீட்டிற்குள் நுழைந்த ரவிநந்தன் “அப்பா இந்தக் கல்யாணம் நடக்காது நிறுத்திடுங்க’ என்க பெற்றோர் இருவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
அவனின் தந்தை மனைவியைத் திரும்பிப் பார்த்தார் இன்றுதான் மல்லிகா கணவரிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ‘இந்தப் பெண் சரியாக வருவாளா’ என்று.
“என்னாச்சு ரவி மொதல்ல போய்த் துணி மாதிட்டுவா அம்மா டீப்போடுறேன் பொறுமையா பேசலாம்” என்ற மல்லிகா கணவனுக்குக் கண் காண்பித்துவிட்டு கிட்சன் சென்றார்.
மகனின் அருகில் வந்தவர் “போ ரவி குளிச்சுட்டு வா” என்று மகனை அனுப்பி வைத்துவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தார், தேநீர் அருந்தும்வரை மனதில் ஒருமுறை அனைத்தையும் பொறுமையாக எண்ணிப்பார்த்துக்கொண்டவன் தன்னுடைய முடிவைத் தெளிவாகத் திடமாகக் கூறினான்.
“அவளோட வாழமுடியாதுமா இந்த மூணு மாசமே எனக்கு மூணு வர்ஷம் மாதிரி நரகமா இருந்துது, என் நிம்மதி போச்சு பொறுமை போச்சு உங்ககூட எனக்கான நேரங்கள் போச்சு எப்போவும் ஒருமாதிரி எரிச்சலா இருக்கு, இப்படியே போன எனக்கு வாழ்க்கையே வெறுத்துடும் இது சரியா வராது” என்றான்.
அதோடு இன்று நடனத்தையும் அவர்களிடம் கூற “ஐயோ” என்றானது அவர்களுக்கு “நானே சொல்லிட்டு வந்துட்டேன் நீங்களும் சொல்லிடுங்க என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நம்புறேன்” என்றான் முடிவாக, இரவு இரண்டு வீட்டிலும் உறக்கம் இல்லை.
பிள்ளைகளின் முடிவுக்கே விட முடியாது பெரியவர்கள் பேசிப்பார்க்கலாம் என்ற முடிவோடு ரவியின் வீட்டினர் வந்திருந்ததனார், துளசியிடம் இங்கு நடந்ததை அவள் வீட்டில் கூறக் கூடாது என்ற கட்டளை வைத்திருந்தார் ஜெயந்தி.
ப்ரேமும் ஆனந்தியும் காலையிலே வந்திருந்ததனர் பிரேம் தங்கையை அடிக்கக் கை ஓங்கிவிட்டான், ஜெயந்தி இடையில் நின்று தடுத்துவிட்டார்.
“நீங்கத் தான்… நீங்க மட்டும்தான் இவ இபப்டி இருக்க காரணம், பேசவரவங்க மட்டும் வேண்டாம்னு சொல்லிட்டு போகட்டும் இனிமே உங்க பொண்ணு விஷயத்துல நான் தலையிடமாட்டேன்” என்றவனுக்கு துளசியை பார்க்கவே சங்கடமாக இருந்தது, ஒரே நாளில் ஓய்ந்து போயிருந்தாள்.
வந்தவர்களை ராகவன் மரியாதையோடு அழைத்துப் பேசினார் “கொஞ்சம் அனுசரிச்சுபோங்க இப்போவே இப்படி முட்டிகிட்டா எப்படி” என்றார் மல்லிகா.
“ரவி ரொம்ப கோபமா இருக்கான் நான் எப்போவும் நியாத்துக்கு பக்கம்தான் நிப்பேன், நீயும் கொஞ்சம் பாத்து பேசியிருக்கலாம் ப்ரியா” என்றார் அவர்.
“நான் பேசினா உங்க மகன் மோதிரத்தை தூக்கி எறிஞ்சிட்டு போவாரா, நானும் கோவமாதான் இருக்கேன் ரவி வந்து என்கிட்டே சாரி சொல்லணும் அப்போதான் இந்தக் கல்யாணம்” என்றாள் அவள்.
அதுவரை பொறுமையாக இருந்த ரவியின் தந்தை “அப்படி உன்னைக் கட்டிக்குற அளவுக்கு என் மகன் தரம் தாழ்திடுல” என்றவர் “மல்லிகா இனிமே பேச்சு இல்லை வா நம்ம பையனை நாமே அவமதிக்குற மாதிரி இருக்கு” என்க மல்லிகாவும் எழுந்துகொண்டவர் “இதோட முடிஞ்சிடுச்சு” என்ற கூறி வெளியேறினார்.
தந்தை அண்ணன் அண்ணி என்று அனைவரும் ப்ரியாவை குற்றம் சொல்லித் திட்டிச் செல்ல, துளசியின் அலைபேசி தமிழ் செல்வனின் பெயரைத் தாங்கி மிளிர்ந்தது.
“நான் ஹாஸ்ப்பிட்டல் போயிட்டு பேசட்டுமா” என்றாள் துளசி, கதவின் பின்னே நின்று.
“நைட் இங்க ரொம்ப மழை சிக்னல் கிடைக்கல அதான் பேசல…”
“ஏன் இப்படி பண்றீங்க… அதுக்காகத் தூங்காம இருப்பீங்களா எனக்கு ஒண்ணுமில்ல நல்லா இருக்கேன் அங்க போயிட்டு பேசுறேன்” என்றவள் ஹாண்ட்பேக் எடுத்துக்கொண்டு வெளியேற ப்ரியதர்ஷினியின் விழிகள் வன்மத்தை கக்கியது.
error: Content is protected !!