Skip to content
Post Views: 7,794
துளசி இதைச் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை அம்மாவின் மனது மாறும் மெல்ல மெல்ல பேசிப்பார்க்கலாம் அதற்குள் தமிழ்ச்செல்வனும் வந்துவிடுவான் என்றவள் ஏதோ கொஞ்சம் நம்பிக்கையைப் பிடித்துவைத்திருக்க சாந்தா விஜயகுமாரின் பெரியப்பா வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தார் அவளின் திருமணத்தைப் பற்றி.
Advertisement
“தப்புதான் பெரிய மாமா முதல் தடவ உங்க யாரையும் கலந்துக்காம ஏதோ அவசரமா முடிவு செஞ்சு எப்படியெல்லாமோ போய்டுச்சு, அது போகட்டும் நீங்கப் பாத்து நல்லதா ஏதாவது ஒரு இடம் சொல்லுங்க மாமா, அவரும் முடியாம கிடக்குறாரு நான் ஒத்தைல என்னத்த செய்ய”.
Advertisement
Advertisement
“முழுச்சிருக்க நேரமெல்லாம் துளசியேவே பாத்துட்டு இருக்காரு அவ கல்யாணம் நின்னு போன அதிர்ச்சிதான் அவர்க்கு இப்படி ஆயிடுச்சு, துளசிக்கு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கல்யாணத்தை நடத்தணும் பாத்து சொல்லுங்க மாமா” என்க.
Advertisement
சாந்தா மீதிருந்த கொஞ்ச நஞ்ச கோபமும் அவர் பேசிய விதத்தில் காணாமல் போய்விட்டது அவர்களுக்கு “அதுக்கென்ன சாந்தா நம்ம சொந்தம் தான் நெறய அங்க அங்க இருக்கே சொல்லிவைக்குறேன் நீ தைரியமா போ” என்றுவிட சாந்தாவுக்கு புது நம்பிக்கை பிறந்தது.
அன்று மாலை கல்லூரியிலிருந்து வேகமாக வந்த பார்கவி “அம்மா… அம்மா…” என்க.
விஜயகுமாரின் அறையில் இருந்த சாந்தா “என்னடி பொம்பள பிள்ளை எதுக்குடி இப்படி காத்திட்டே வர அடக்கமா இருக்க தெரியாது” என்றார்.
ஹாலின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த துளசி எந்த அசைவுமின்றி அப்படியே படுத்திருந்தாள் “என்னதாம்மா நினைச்சுட்டு இருக்க, ஏன்ம்மா இப்படிலாம் பண்ற” என்றாள் பார்கவி.
“என்னடி பண்ணேன்? வந்ததும் வராததுமா கத்திட்டு இருக்க என்ன பிரச்சனை” என்றார்.
“பெரிய தாத்தாகிட்ட துளசியக்காவுக்கு மாப்பிளை பார்க்கச் சொன்னியா” என்க.
விருட்டேன்று துள்ளி எழுந்து அன்னையை அதிர்ச்சியாகப் பார்த்தாள் துளசி, அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்த சாந்தா “ஆமா அதுக்கென்ன இப்போ” என்றார் சாதாரணமாக.
“என்னவா!” என்றவள் துளசியை ஒருமுறை திரும்பிப் பார்த்து “அக்காவைப் பாருமா பாவம்மா… எதுக்கு இப்படி அவசரமா எல்லா முடிவையும் எடுக்கறீங்க, அவங்க அம்மா பேசினது தப்புதான் நீங்களும் நல்லா அவங்கள திருப்பிக் கேட்டிருப்பீங்க”.
“தமிழ் மாமா வரவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கலாம் அவர் வந்ததும் பேசிப்பார்க்கட்டும், கண்டிப்பா மாமா துளசி அக்காவுக்குத் துணையா தான் நிப்பார் அவர் நல்லமாதிரி தான்மா” என்றாள் பார்கவி.
“ஓஹ்… முடிவெல்லாத்தயும் நீங்களே எடுத்துப்பீங்க அப்போ என் பேச்சுக்கு எந்த மரியாதையும் இல்ல அப்படித்தானே, அந்தப் பொம்பள அன்னைக்கு என்ன பேச்சு பேசுச்சு மறுபடியும் அவ கிட்ட போய்க் கெஞ்சணுமா, அந்த வீட்டுக்கு இவளை அனுப்பமாட்டேன் அவ்ளோதான் அது முடிஞ்சு போயிடுச்சு” என்றவர்.
“கண்டிப்பா நல்ல சம்மந்தம் வரும் கல்யாணமும் உடனே நடக்கும், உங்க அப்பாவுக்கு மனசு பூரா இவ கல்யாணம் நின்னு போன கவலைதான் அந்த மனுஷனுக்கு நிம்மதியை குடுக்க இது ஒன்னுதான் வழி” என்றார்.
“அதுக்கு அக்காவைக் கஷ்டப்படுத்தணுமா, அப்பாகிட்ட எடுத்துச்சொன்னா புரிஞ்சுப்பாரு மாமாகிட்ட ஒருதடவை பேசிப் பார்க்கலாம், நீங்க அக்கா போனை ஒடச்சு போட்டுடீங்க அவர் எத்தனை தடவ அக்காவுக்குக் கூப்பிட்டுருப்பார் அது எடுக்கலன்னு தானே உங்களுக்கு அப்பாவுக்கு எல்லாருக்கும் திரும்பத் திரும்பக் கூப்பிட்டார் நீங்க எடுக்கவேயில்லை அவர் எவ்ளோ கவலைல இருப்பார் ரொம்ப தப்பும்மா ஒருதடவை அவருக்குக் கூப்பிட்டு பேசுங்கம்மா” என்றாள் பார்கவி.
“துளசி…” என்ற தாயை அவள் திரும்பிப் பார்க்க.
“உன் தங்கச்சி ஏதோ புரியாம பேசுறா உனக்கு நான் சொல்றது புரியும், உன்னைத் தப்பா பேசுனா அந்தப் பொம்பள நாளைக்கு கழுத்துல தாலி ஏறுனப்புறம் மறுபடியும் அந்த மாதிரிப் பேச்சு வராதுன்னு என்ன நிச்சயம் வேண்டாம்னா வேண்டாம் அவ்ளோதான்” என்றார் சாந்தா முடிவாக.
“எனக்கு வேற கல்யாணம் வேண்டாம்மா தயவுசெஞ்சு அந்த மாதிரி எதுவும் பண்ணாதீங்க, என்னால எப்படிம்மா வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியும் எனக்குத் தமிழ்த்தான்மா வேணும் அவர் ரொம்ப நல்லவர்ம்மா அவர் கிட்ட ஒருதடவை பேசுங்கம்மா” என்றாள் அவர் காலைப் பற்றிக்கொண்டு.
“உனக்குக் கொஞ்சம்கூட வெக்கம் மானம் இல்லையா இவ்ளோ சொல்றேன் அதுக்கு அப்புறமும் அவன்தான் வேணும்னு நிக்குற, அப்போ உன் பெரியம்மா சொன்னமாதிரி தப்பு பண்ணியிருக்கியா, இவன்கூட எங்கயாது போய்த் தங்கியிருந்தியா” என்க.
துளசி காதைப் பொத்திக்கொண்டாள் “அம்மா…” என்ற பார்கவி “ச்சி” என்றதோடு அவள் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
துளசியால் மீளவே முடியவில்லை அந்த வார்த்தைகளிலிருந்து அப்படியே சிலையென உறைந்துவிட்டாள்.
“தமிழு எத்தனை தடவ சொல்றேன் அவ அப்பாவுக்கு உடம்பு சரியில்ல அதனால ஊருக்குப் போயிருக்கா அதான் உன் போனை எடுக்கல” என்றார் கற்பகம் மகனிடம்.
“அவ எடுக்கல சரி, அவ அம்மாகூட எடுக்கமாட்டறாங்க துளசிக்கு போன் போக மாட்டுது அவ என்கிட்டே பேசாம இருக்கமாட்டாமா எனக்கு என்னமோ ஏதோ பிரச்சனையா இருக்கும்னு தோணுது நீங்கப் பேசுனீங்களா… அவங்க அம்மா பேசுனாங்களா உங்ககிட்ட அப்போ ஏன் என் போனை எடுக்கல” என்றான்.
நான்கு நாட்களாக இதே புலம்பல்தான் “தமிழு இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவல்ல நேர்ல வாப்பேசிக்கலாம்” என்று அழைத்தாய் துண்டித்த கற்பகத்திற்கு மெல்ல மெல்ல பதட்டம் அதிகரித்தது.
நேற்று அவருடைய மூத்த மகள்… தமிழின் தமக்கை தாமரை அழைத்திருந்தாள் தாயை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டாள்
“கொஞ்ச நாளா நல்லாதாம்மா இருந்த இப்போ மறுபடியும் என்ன பேய் பிடிச்சுச்சு உன்னை என்ன பண்ணிவெச்சுருக்க? யாரோ என்னமோ சொன்னாங்கன்னு அவசரப்பட்டு வார்த்தையை விட்டிருக்க இந்தக் குணத்தை மாத்திக்கவே மாட்டியாம்மா.
“என் கல்யாணத்துல இப்படித்தான் யாரோ என் மாமியார் காப்பு வளவி கேட்டாங்கன்னு சொன்னத்தை நம்பி மண்டபம்னு கூடப் பாக்காம அவ்ளோ பேசின, அன்னைக்கு தமிழ் மட்டும் கொஞ்சம் இறங்கி வந்து பேசிச் சமாதானப்படுத்தலன்னா என் கல்யாணமே நின்னு போயிருக்கும்”.
“ஏதோ என் புகுந்த வீடும் கொஞ்சம் நல்லபடியா இருக்குறதால நான் காலம் தள்ளுறேன் இல்லனா அன்னைக்கு நீ பேசினத்துக்கு என்னைத் தினம் தினம் தூக்கி போட்டு மிதிச்சிருப்பாங்க, இப்போ மறுபடியும் அதேயே செஞ்சிருக்க”.
“எவளோ போன் பண்ணி சொன்னா நம்பிடுவியா என்ன எதுன்னு அவங்க வீட்டில பேசிருக்கலாம்ல அதுக்குள்ளே எதுக்கு வார்த்தையை விட்ட அதும் என்னலாம்மா பேசியிருக்க இப்போ அவனை எப்படி சம்மாளிப்ப” என்று அவள் போட்டுக் காய்ச்சியெடுக்க.
“என்ன சமாளிக்கணும் எடுத்துச் சொன்னா புருஞ்சுப்பான் நீ சும்மா ஏதாவது சொல்லாத, மூணு மாசமாதான அவளைத் தெரியும் அதுக்குள்ள என்ன” என்றார் அவர் அப்பொழுதும் அசட்டையாக.
“என்னது மூணுமாசமா! அப்படின்னு நீ சாதாரணமா நினைக்கிற அவன் மனசுல கொள்ள ஆசையை வெச்சுகிட்டு இருக்கிறான், தமிழுக்கு துளசியை ரொம்ப புடிச்சிருக்குமா அவன் மனசை பாரு உனக்குப் பேசச் சங்கடமா இருந்தா சொல்லு நான் பேசுறேன் அவங்ககிட்ட”.
“நீ பேசி வெச்சதுக்கு கண்டிப்பா கோபப்படுவாங்க, பரவாயில்ல நாம கொஞ்சம் இறங்கிப்போனா ஒருவேளை அவங்க கோபம் குறையலாம், இவர்கூட சொன்னாரு நாமளே பேசலாம் உன் அம்மாவை இனிமே தலையிட வேண்டாம்னு சொல்லுன்னு, இவர் ரொம்ப கோபமா இருக்கார் உங்க அம்மா எப்போதான் திருந்துவாங்கன்னு கேக்குறார்” என்க.
கற்பகத்தின் ஈகோ மீண்டும் தலை தூக்கியது “திருந்துறதுக்கு நான் என்ன கொலை குத்தமா பண்ணிட்டேன், என் புள்ள விஷயத்துல என்னைய விட உங்க எல்லார்க்கும் அக்கறையோ நான் என்ன அவனுக்குக் கெடுதலா பண்ண போறேன்”.
“அவ பெரியம்மாவே அவளைப் பத்தி நல்லது சொல்லல அப்பறம் என்ன… என்ன அவசியத்துக்கு நான் இறங்கி போகணும் சும்மா அதைப்பத்தி இனிமே பேசாத” என்று மகளிடம் கத்தினார், இப்பொழுது தமிழ் கேள்விமேல் கேள்வி கேக்க கொஞ்சம் பயம் வந்தது உண்மையே.
மகனைச் சமாளித்துவிடலாம் என்று அவர் எண்ணியிருக்க வரும்போதே கட்டுக்கடங்கா கோபத்தோடு வந்து சேர்ந்தான் தமிழ்.
“என்ன சொன்னீங்க துளசிய” என்று கற்பகத்தின் முன் நின்றவன் விழிகளில் வெறுப்பு கொண்டிக்கிடந்தது.
கற்பகம் கை நடுங்க மகனைத் தொட நெருங்கப் பின்னில் நகர்த்தான் முதல்முறையாக மகனின் செயலில் காயம் கண்டது கற்பகத்தின் மனது, அவருடைய குணமே அதுதான் முழுதாக உண்மை தெரியாமலே பாய்ந்துவிடுவார் பிறகு தவறென்று தெரிந்தாலும் மனம் வருந்தியெல்லாம் மன்னிப்பு கேட்பதில்லை பலமுறை தமிழும் தாமரையும் கண்டித்தும் மாறவில்லை.
தமிழின் வற்புறுத்தலில் மட்டுமே மன்னிப்பு கேட்ப்பார், துளசியோடு பந்தம் முடிவான பிறகு அக்காவும் தம்பியும் ஆயிரம் முறை கூறிவிட்டார்கள் எதுவாக இருப்பினும் எங்களிடம் முதலில் சொல்ல வேண்டும் நீங்கலாக எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்று.
அன்னையின் குணம் தெரிந்ததாலே துளசிக்கு நகைகள் வாங்கியபோதுகூட பொறுமையாக எடுத்துச்சொல்லி அவரின் சம்மத்ததோடு வாங்கி வைத்தான், நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை போலச் சிலரின் குணத்தை மாற்ற முடியாது கொஞ்சம் நிதானித்திருந்தால் மகன் கூறியதை கொஞ்சம் நினைத்துப் பார்த்திருந்தால் இந்தத் தவறை செய்த்திருக்கமாட்டார்.
குறைந்த பட்சம் வார்த்தைகளை விடாமல் விசாரித்திருக்கலாம் அனைத்தும் கைமீறி போய்விட்டதே “உனக்கு யார் சொன்னா?” என்றவரை பார்த்தவன்.
“இப்போ எனக்கு யார் சொன்னாங்க அப்படின்றது தான் உங்க பிரச்சனை இல்ல… அக்கா சொன்னுச்சு போதுமா, இப்போ சொல்லுங்க என்ன பேசிவிச்சிங்க அவளை, அப்படி என்ன அவசரம் உங்களுக்கு”.
“அப்படியே கேக்கனும்னா ரவி அம்மாவுக்கோ மல்லிமாவுக்கோ கூப்பிட்டு கேட்டிருக்க வேண்டியது தானே இவ்ளோ நாள் ஆச்சே உண்மையில என்ன நடந்துச்சுன்னு அவங்ககிட்ட கேடீங்களா” என்றவன் தலை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
“இத எப்படி நான் சரி செய்வேன் அவ அங்க என்னலாம் கஷ்டப்படுறாளோ தெரியல” என்றவன் குரலில் அத்தனை வலி.
“எதுக்கு சரி பண்ணனும் அவ மேல தப்பில்லன்னா அவ பெரியம்மா சொல்லியிருக்க மாட்டாங்களா அவங்களே அவளைத் தப்பாதான சொன்னாங்க” என்ற தாயை பார்த்தவனுக்கு எங்கே சென்று முட்டிக்கொள்ள என்று ஆயாசமாக இருந்தது.
“உங்ககிட்ட பேசுறதே வீண் என் வாழ்க்கை நானே பாத்துக்குறேன்” என்றவன் நேரே அறைக்குச் சென்று குளித்துக் கிளம்பி வந்தான் “நான் துளசி ஊருக்குப் போறேன்”.
“நீங்கப் பேசி வெச்சதுக்கு அவங்க என்னை அடிச்சாக்கூட ஆச்சர்யப்படறதுக்கில்ல உங்க ரெண்டு பேர் ஈகோக்காக அவளைவிட முடியாது, பொண்டாட்டியா மனசுல பதிஞ்சிட்டா”.
“அவங்க ஒத்துக்கலைனாலும் நான் கூப்பிட்டா கண்டிப்பா வருவா அவங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் இல்லனா அவளைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வருவேன்” என்றவன் கற்பகத்தின் பதிலுக்குக் காத்தருக்காமல் வேகமாக வெளியேறினான்.
ரெயில் நிலையத்தில் காத்திருந்தவனை தேடி வந்தது அலைபேசி அழைப்பு, உயிர் கொடுத்தவரும் உயிரானவளும் தங்களின் முடிவைத் தேடிக்கொள்ள பார்த்தனர் கற்பகம் லாரியின் முன்பும் துளசி கிணற்றிலும்.
error: Content is protected !!