Skip to content
Post Views: 12,992
அத்தியாயம் 22
வீட்டிற்கு திவாகர் வந்ததையும், விஷ்ணு நடந்துகொண்டதையும் மகளிடம் சொன்னார் பிரபாவதி. காவ்யா அமைதியாக இருக்கவே, மகள் வேறெதுவும் விபரீத முடிவெடுத்துவிட்டால் என்ன செய்வதென்று, “என்ன காவ்யா அமைதியா இருக்க?” என்றார் பயத்தோடு.
“அப்பா உயிரைவிட அவன் எனக்கு முக்கியமில்லம்மா. டிவோர்ஸ் பண்ணிக்கிறதுல எனக்கும் சம்மதம்தான்” என்றாள்.
“காவ்யா” என்று பிரபாவதி அதிர, “பிடிச்சிருந்தாலும் அவனோட வாழ என் தன்மானம் இடம் கொடுக்கல. அதேமாதிரிதான் அவனுக்கும். இப்படி இரண்டு பேரும் வாழவும் முடியாம, ஒருத்தருக்கொருத்தர் மறக்கவும் முடியாம இருக்கிறதுக்கு இந்த டிவோர்ஸ் நல்லதுதான்ம்மா” என்றாள்.
Advertisement
“யாருக்கு நல்லது? அவன் ஆம்பிளை… ஒன்னு இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் செய்துக்குவான். நீ என்ன செய்வ?”
காவ்யாவால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, முயன்று தன்னை சரி செய்து “உங்க மகளா இருந்துக்கிறேன்ம்மா” என்றாள்.
“நீ இருந்துக்குவடீ, உன்னை இப்படி பார்த்துட்டு எங்களால எப்படி நிம்மதியா இருக்க முடியும்?” என்றார் ஆற்றாமையோடு.
Advertisement
“என்னை என்னம்மா பண்ண சொல்ற?” என்றாள் இவளும் வேதனையோடு.
Advertisement
“உன் புருசன் போன் செய்தா பேசு காவியா, ஆயிரம் கோவம் இருந்தாலும் நீ விவாகரத்து பண்றதை தாங்க முடியாம வீட்டுக்கு வந்துட்டான்தான? ஆம்பிளைங்க இப்படித்தான் இருப்பாங்க, வளையிற இடத்துல வளையாம வாழ்க்கை நடத்த முடியாது.
நான் வேணும்னா என் அப்பாம்மாகிட்ட பேசுனு சொல்லு. உன் கண்டிஷனுக்கு சம்மதிச்சு எங்களை வந்து பார்க்குறானா பார்க்கலாம். வாய்ப்பே கொடுக்காம நிராகரிச்சா இரண்டு பேருக்கும் நிம்மதியிருக்காது” என்று எடுத்துரைத்தார் மிகுந்த அக்கறையோடு.
தற்போது திவாகரோடு பேசினால், இத்தனை நடந்தபோதும் என் மனைவி என்னை விட்டுக்கொடுக்கவில்லை என்ற எண்ணம்தான் திவாகர் மனதில் நிலைக்கும். மீண்டும் தனது குடும்பத்தாரை இழிவாகத்தான் நினைப்பான். அவனின் புத்தியும் அதுதான். நான் வேண்டும் என்றால் என் பெற்றோரிடம் வந்து பேசு என்று அன்றே சொல்லிவிட்டேன். ஆனால் இன்றும் அதைப்பற்றி திவாகர் யோசிக்கவில்லை.
Advertisement
தற்போது கூட சண்டையிட்டுத்தான் சென்றிருக்கிறான். எனில் இவன் தன் பெற்றோருக்கு என்றும் மரியாதை தரமாட்டான் எனும்போது அவனிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று முடிவெடுத்தாள். ஆனாலும் அன்னையின் மன ஆறுதலுக்காக “சரிம்மா” என்று இணைப்பை துண்டித்தாள்.
*** *** *** ***
காவ்யா உள்ளே இருந்து கொண்டு வராமல் இருந்ததை திவாகரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வீட்டிற்கு சென்ற பின்னேதான் விஷ்ணுவைப் பற்றி விசாரித்தான். காஞ்சிபுரத்தில் டி.எஸ்.பி பதவியில் இருக்கும் விஷ்ணுவர்தன் கூடிய விரைவில் ஏ.டி.எஸ்.பி ஆக பதவி உயர்வு பெறப்போகிறான் என்றும் அறிந்தான்.
என்ன செய்து காவ்யாவை சந்திப்பது என்று யோசிக்க, ஒரு வழியும் தெரியவில்லை. கல்லூரிக்குள் சென்று காவ்யாவை சந்திக்க நினைத்தபோதும், இவ்விசயம் அதிகார பலம் உள்ள விஷ்ணுவிற்கு தெரிய வந்தால் என்ன செய்வதென்ற பயம் வந்திருந்தது.
ஆனாலும் கோர்ட் கேஸ் என்ற நிலையை அறவே வெறுத்தான் திவாகர். தனது பெற்றோருக்கு மரியாதை கொடுத்து முறைப்படி பேசி தன்னை அழைத்தால் மட்டுமே வருவேன் என்று காவ்யா சொன்னதை நினைத்தவன், வேறு வழியேயில்லாமல் அப்படியாவது செய்யலாமா என்று யோசித்தான்.
காவ்யா அம்மாவாவது அன்று மகளுக்காக தவித்தார், காவ்யாவின் தந்தையை நினைக்க, நாம் பேசினாலும் அவர் சம்மதிப்பார் என்ற நம்பிக்கையில்லாமல் போகவே, என்ன செய்யலாம் என்ற எண்ணத்திலேயே சுழன்றான் ஒரு மாதம் வரை.
நாளை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். திவாகரின் குடும்பத்தாருக்கு இதில் சந்தோசம்தான். மகன் வாழ்க்கைக்கான விடிவு காலமாக நினைத்தனர். ஆனால் திவாகரால் அப்படி எளிதாக காவ்யாவை விட்டுவிட முடியவில்லை.
காவ்யா இல்லாமல் இருப்பது திவாகருக்கு சுலபமாகத்தான் இருந்தது. ஆனால் நிரந்தரமாக தனது வாழ்வில் அவளில்லை என்பதும், அவனின் அண்ணன் அவளுக்கு வேறொருவனோடு திருமணம் செய்து வைப்பானோ என்பதையும் கற்பனையில் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை திவாகரால்.
அடுத்தநாள் காலை பத்து மணிக்கு குடும்ப நல நீதிமன்ற வளாகத்திற்கு வந்தான் திவாகர். பதினொரு மணிக்கு இவர்களின் நேரம். நாற்பத்தைந்து நிமிடம் வரை எங்கு தேடியும் காவ்யா தென்படவில்லை.
சரியாக பத்து ஐம்பதிற்கு நீதிமன்றத்தில் ஓர் அறையிலிருந்து வெளியே வந்தாள் காவ்யா. முகமெல்லாம் வீங்கி சிவந்திருந்தது. இந்த விவாகரத்தில் இவளுக்கும் வேதனைதான் என்பதை அவள் முகம் சொல்ல அதில் சற்று நிம்மதியானாவனுக்கு, தனியாக பத்து நிமிடம் பேசினால் எல்லாம் சரியாகிடும் என்ற நம்பிக்கை பிறந்தது.
வேகமாக அவளருகே சென்று “காவ்யா” என்றான் தவிப்போடு. கோபாலனும் மகளருகேதான் இருந்தார்.
திவாகரை பேசவிடாமல், “என்னை மதிக்காத நீ எனக்கு வேணாம்னுதான் வந்துட்டேன், நீ திரும்ப கூப்பிட்ட. நான் சில கண்டிஷன் சொன்னேன். அதைப்பத்தி நீ யோசிக்கக்கூட இல்ல. நான் வரலைனா வேற பொண்ணு பார்க்கட்டானு நீயேதான் கேட்ட. நான் பார்த்துக்கோனு சொன்னேன். அப்போ டிவோர்ஸ்க்கு அப்ளை பண்றேன், கையெழுத்து போட்டுடுனு சொன்ன. ஆனா அனுப்பல. அதான் நான் அனுப்பினேன். இனி நமக்குள்ள பேச ஏதும் இல்ல” என்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள் காவ்யா.
“காவ்யா ஒரு நிமிஷம் நில்லு” என்று பின்னோடு தொடர, சற்று தள்ளி நின்றிருந்த நாகநாதன் இணைந்தார் காவ்யாவோடு.
“ஏன்மா? இந்த முகரைக்காகவா என் மகனை வேணாம்னு சொன்ன?” என்று நாகநாதன் கேட்கவும் விதிர்த்துப்போனான் திவாகர்.
“அங்கிள்” என்று காவ்யா தவிக்க, திவாகரை தனியே அழைத்துச் சென்ற நாகநாதன், “என் மகன் ஐ.பி.எஸ் முடிச்சிட்டு உத்திரபிரதேசத்துல அசிஸ்டண்ட் கமிஷ்னரா இருக்கான். காவ்யாவை கல்யாணம் செய்துக்க கேட்டான். காவ்யா மறுத்துடுச்சு.
ஆனா எனக்கு காவ்யாவை விட மனசில்ல. விவாகரத்து முடிஞ்சு ஒரு வருசம் கழிச்சு பேசினா கண்டிப்பா சம்மதிக்கும். சம்மதிக்கலனாலும் கோபாலன்கிட்ட சொல்லி சம்மதிக்க வைப்பேன். இனி காவ்யாகிட்ட பேசுற வேலை வச்சுக்காத” என்று எச்சரித்து காவ்யாவோடு இணைந்தார் நாகநாதன்.
“அவனை பயமுறுத்தத்தான் உங்களை கூப்பிட்டேன். ஏன் நாகு இப்படிலாம் சொன்னிங்க?” என்று கடிந்தார் கோபாலன்.
“நானும் அவனை பயமுறுத்ததானுங்க சொன்னேன். இவனுங்களுக்கெல்லாம் இப்படி பேசினாத்தான் சரிவரும். இனி அவனால நிம்மதியா இருக்க முடியும்ன்றிங்க?” என்றார் சிரிப்போடு.
காவ்யா திவாகரை விசாரனைக்கு அழைத்தார்கள். இருவரும் உள்ளே சென்றனர். கோபாலனும் சென்றார். ஆனால் திவாகரோடு குடும்பத்தினர் யாரும் வரவில்லை. அவனின் கம்பெனி மேனஜரும் நண்பனுமான அர்ஜுன் வந்திருந்தான். அர்ஜுன்தான் திவாகருக்கு வக்கீலையும் ஏற்பாடு செய்திருந்தான்.
காவ்யா தரப்பில்தான் முதலில் விசாரித்தார்கள். “காதலிக்கும்போது இருந்த திவாகர் திருமணத்திற்கு பின்னே இல்லை. திருமணத்திற்கு பின்னே திவாகருக்கு தன்மீது காதல் இல்லை. அதனால் திவாகரோடு தனக்கு வாழப்பிடிக்கவில்லை, விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறேன்” என்றாள் காவ்யா.
பிறகு திவாகரிடம் விசாரித்ததில் “எனக்கு விவாகரத்தில் விருப்பமில்லை” என்றான். இருவரிடமும் முதலில் தனித்தனியாகத்தான் விசாரித்தார்கள். திவாகர் விவாகரத்தில் விருப்பமில்லை என்றதால் காவ்யாவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்தது நீதிமன்றம்.
வீட்டிற்கு வந்ததும் காவ்யாவிற்கு அழைத்தான் திவாகர். காவ்யா அழைப்பை ஏற்கவில்லை. அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதிலளிக்கவில்லை. திவாகருக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.
எல்லாம் உங்களால் வந்தது. அவளை தரக்குறைவாக பேசியதால்தான் வீட்டைவிட்டு சென்றாள் என்று அக்கா, மற்றும் பெற்றோருடன் சண்டைபோட்டான்.
காவ்யாவை விட சிறந்த பெண்களை காட்டுகிறேன் என்று வழக்கம்போல் திவாகரின் அன்னை சொன்னார். “உன் மருமகனை கூடத்தான் கல்யாணம் ஆன புதுசுல ஆயிரம் குறை சொன்ன. அக்காக்கு வேற மாப்பிள்ளை பார்த்தியா?” என்றான் ஆத்திரத்தோடு.
இப்படியாக அடுத்த வாய்தா வரும்வரை திவாகர் காட்டிய கோபத்திலும், அவனின் நடைமுறையிலும் பயந்துதான் போனார்கள் குடும்பத்தினர்.
ஒருமாதம் கழித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
“இருவரும் விரும்பி திருமணம் செய்துகொண்டார்கள். திவாகர் வீட்டில் விருப்பமில்லாததால் சில பிரச்சனைகள் வந்தது உண்மைதான். காவ்யா கிளம்பி தந்தை வீட்டிற்கு வந்த பின்னே, இனி அப்பாம்மாவோடு இருக்கவேண்டாம், தனியா வாழ்க்கையை தொடரலாம் என்று இரண்டு முறை திவாகர் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு காவ்யாதான் சம்மதிக்கவில்லை என்றும் தனது கட்சிக்காரர் இன்னும் மனைவியை நேசிக்கிறார் என்று திவாகர் தரப்பு வக்கீல் தனது வாதத்தை வைத்தார்.
“படிக்கும்போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. டிகிரியை முடித்ததும் ரகசிய திருணம் செய்துகொண்டார்கள். திவாகரின் அன்னை மகனுக்கு வசதியான பெண்ணை மனம் முடிக்க விரும்பியதால் காவ்யாவை அவர்களுக்கு பிடிக்காமல் போனது.
காவ்யாவை தண்டச்சோறு என்றதோடு, காவ்யாவின் பெற்றோரையும் இழிவாக பேசியிருப்பதாகவும், அதற்கு திவாகர் உண்மையைத்தானே சொன்னார்கள்? அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றிருக்கிறார்.
வீட்டில் இருப்பதால்தானே தண்டச்சோறு என்கிறார்கள், வேலைக்கு செல்கிறேன் என்று காவ்யா விருப்பம் தெரிவித்தபோது அதற்கும் சம்மதிக்காமல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க எண்ணியிருக்கிறார்.
காவ்யாவின் வசதி, குடும்பப் பின்னனி அனைத்தும் தெரிந்தே காதலித்து திருமணம் செய்த திவாகர், திருமணத்திற்கு பின்னே காவ்யாவை மட்டுமல்லாது அவரின் குடும்பதினரையும் தரக்குறைவாக பேசியிருக்கிறார்.
அதனால் மிகுந்த மனஉளைச்சலோடு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் காவ்யா. தாய் வீட்டிற்கு வந்த பின்னே காவ்யாவை அழைக்க வந்த திவாகர், தனிக்குடித்தனம் போகலாம் என்றாரே தவிர, செய்த தவறுக்கு மன்னிப்பும் கோரவில்லை. அவரின் தவறை உணரவும் இல்லை.
திருமணமாகி இரண்டு மாதங்களே வாழ்ந்து, கடந்த நான்கு வருடம் மற்றும் எட்டு மாதங்களாக பிரிந்து வாழ்வதால் காலதாமதமின்றி விவாகரத்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார் காவ்யா தரப்பு வக்கீல். மீண்டும் அடுத்த மாதத்திற்கு வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்.
வருஷமானா கோடிகள்ல லாபம் பார்க்குற. திங்கிற சோத்துக்கெல்லாமா சொல்லிகாட்டுவிங்க? வக்கீல் மெய்ஞானம் தண்டச்சோறுனு உன் அம்மா சொன்னதை சொல்லும்போது உன் மிஸஸ் முகத்தை பார்த்தியா நீ? அவ்வளோ வலி அந்த பொண்ணு கண்ல.
சோத்துக்கு வக்கிலாம உன்னை கட்டிகிகிட்டாங்களா? இல்ல அவங்களுக்கு சோறு போட உனக்கு வக்கில்லனு உன் அம்மா பேசினாங்களா? இதெல்லாம் நடந்திருக்குனு என்கிட்ட சொன்னியா நீ?” என்று காய்ந்தவன், “ஒரு வருசம் பிரிஞ்சிருந்தாலே ஈஸியா டைவர்ஸ் கிடைச்சிடுமாம். நீங்க இரண்டு பேரும் நாலரை வருசமா பிரிஞ்சிருக்கிங்க. அவங்க பக்கம்தான் கேஸ் ஸ்ட்ராங்கா இருக்கு.
நல்லகாலம்… உங்கம்மா பேசினதுக்கும், அதுக்கு நீ அனுமதிச்சதுக்கும் சேர்த்து வரதட்சனை கொடுமைனு சொல்லாம விட்டாங்க. அதை சொல்லியிருந்தா மொத்த குடும்பமும் உள்ள போக வேண்டியதுதானு வக்கீல் சொல்றாரு.
எனக்கு இந்த சட்டமெல்லாம் தெரியாது. என் மனசுக்கு பட்டதை சொல்றேன். உனக்கு காவ்யா வேணும்னா அவங்க விருப்பம் என்னவோ அதை செய். அதுவும் அடுத்த ஹியரிங்குள்ள செய்தாகனும்.
செல்ஃப் ரெஸ்பெக்ட்டை விட்டுட்டு குடும்பம் நடத்த இந்த காலத்து பொண்ணுங்க யாரும் தயாரா இருக்கமாட்டாங்க. முதல்ல இப்படி வாழ்க்கையை உன் கூடப்பிறந்தவங்க ஏத்துப்பாங்களா?
காவ்யா நினைக்கிறது சரினு பட்டா ஈகோ பார்க்காம மன்னிப்பு கேட்டு குடும்பம் நடத்துற வழியைப் பாரு. இல்ல தனிமரமாத்தான் நின்னாகனும். நல்லா யோசிச்சி முடிவெடு” என்று திட்டியும் அறிவுறுத்தியும் சென்றிருந்தான் அர்ஜுன்.
இம்முறை திவாகரை நேர்கொண்டு பார்க்கவில்லை காவ்யா. அன்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து தனது கண்டிஷன்களை நியாபகப்படுத்தியும், தனது தந்தையிடம் பேச நினைக்கவில்லை திவாகர். எனில் இவன் திருந்தப் போவேதேயில்லை என்று வெறுத்துப்போனாள் காவ்யா.
தனது தன்மானத்தை இழந்து அப்படியென்ன அவனோடு வாழவேண்டும் என்ற கோபத்தோடு, இப்படிபட்டவனை மன்னித்து பெற்றோருக்கு மேலும் இழிவை உண்டாக்க கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.
குடும்பம், வேலை, தொழில் என்று நிம்மதியாய் வாழ்ந்தவரை இப்படி கோர்ட் கேஸ் என்று அலைக்கடிக்கிறோமே என்று தந்தையை நினைத்து வருந்தியபடி மிக மோசமான மனநிலையோடு வீட்டிற்கு வந்த காவ்யாவிற்கு இன்பச் செய்தி காத்திருந்தது அவளின் மொபைலில்.
error: Content is protected !!