Skip to content
Post Views: 7,951
அத்தியாயம் 7:
குளிக்க சென்ற மல்லிகா திரும்பி வந்ததிலிருந்து அவள் அம்மாவிடம் கத்தி கொண்டிருந்தாள்.
“எனக்கு இருவது வயசானப்பவே ஆதி மச்சான் வீட்ல பேசுங்ம்மான்னு உங்கட்ட சொன்னனுங். நீங்கதேன் இன்னும் கொஞ்சம் வயசாகோட்டும்ன்னு சொன்னீங். அதுக்குள்ள அவங்க அத்தை பொண்ண கட்டி வச்சு போட்டாங்க. ஏதோ கடவுள் புண்ணியத்துல அது விவாகரத்தாயிடுச்சி. இப்பவாது சூதானமா கல்யாணத்த முடிச்சி போடுவோம்ன்னு பாத்தா எனக்குன்னு எங்க இருந்துதேன் வருவாளுங்கண்ணே தெரியலயே” என்று புலம்பினாள்.
“என்ன கண்ணு . சும்ம ஓளப்பிரிச்சிட்டு கிடக்குற”
Advertisement
“ஏனுங்ம்மா. என்னை பாத்தா பைத்தியமாட்ட தெரியுதா. எனக்கு ஆதி மச்சானை கட்டி வைப்பீங்ளா இல்லையா?”
“ஏன் கண்ணு. ஆதிதேன் கல்யாணமே வேணாம்ன்னு சொல்லி போடுச்சாம். என்ர அண்ணன் உன்ர ஐய்யனுகிட்ட நேராவே சொல்லிருக்காங். இதுக்கு மேல நாம என்ன பண்ண முடியும்”
“நீங்கதேன் இப்படி சொல்றீங்ம்மா. அங்க ஒருத்தி அவளைத்தேன் ஆதி மச்சான் கட்டிக்க போறதா சொல்லிட்டு திரியறாளுங்”
Advertisement
“அது யாரு கண்ணு எங்கண்ணன் மவனுக்கு உரிமை கொண்டாடறவ இந்த ஊர்ல”
Advertisement
“அதுதானுங்ம்மா பெங்களூர்லருந்து இந்த கௌரியோட மாமன் மவ ஒருத்தி வந்துருக்காளே, அவதானுங்ம்மா. ஆளு வேற நல்ல அழகா மஞ்ச கெளங்காட்டம் இருக்காளுங்ம்மா.”
“நேத்து வந்துட்டு என்ர அண்ணன் வூட்டு சொத்துக்கு உரிம கொண்டாடறாளாக்கும். இரு கண்ணு. இன்னைக்கு அண்ணன் வூட்டுக்கு போயி என்ர அண்ணிகிட்டயே ரெண்டுல ஒன்னு கேட்டு போடறேன்” என்று அன்னபூரணி கூறியதும் தான் நிம்மதி ஆனாள் மல்லிகா.
மாலையில் சிவகாமி வசந்தன் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு வரும்வழியில் எதிராக வந்து சேர்ந்து கொண்டனர் அன்னமும், மல்லியும்.
Advertisement
“ஏனுங்கண்ணி அந்த பக்கத்தால எங்கங் போய்ட்டு வரீங். நானும் மல்லியும் நம்ம வூட்டுக்குத்தான் வந்துகிட்டு இருந்தோமுங்”
“அப்படியா அன்னம். வா வா மல்லி. நெம்ப சந்தோசம். உன்ர அக்கா வள்ளியதேன் போய் பாத்து போட்டு வரேன். அவளுக்கு முடியலன்னு வசந்த் கண்ணு சொல்லிச்சி”
“நானும் காலைல போயி பாத்துட்டு வந்தேனுங் அண்ணி. சும்மா ஏதாச்சும் கவலப்பட்டு உடம்ப கெடுத்துக்குவாளுங். ஏனுங்ண்ணி நம்ம வூட்ல மாடு கண்ணு போட்ருக்குங்களாம், மாடசாமி சொன்னான்”
“ஆமா அன்னம், உனக்கு கூட சீம்பால அனுப்ப சொல்லி உன்ர அண்ணன் சொல்லிட்டு இருந்தாங். இப்பதேன் வூட்டுக்கு போய் அருணுட்ட கொடுத்து அனுப்புவோம்ன்னு வாரேன், நீயே எதுக்கால வந்து போட்ட”
“பாத்தியா மல்லி. சின்னதுலருந்து எனக்கு சீம்பால் புடிக்கும்ன்றதை என்ர அண்ணன் மறக்கவே இல்ல பாரு. அந்த பாசம்தேன் எங்கண்ணன்கிட்ட புடிச்சதே” என்று பேசி கொண்டே வீட்டு வாசலுக்கு வந்துவிட்டனர்.
அவர்கள் பேச்சுக்குரல் கேட்டு ரூமை விட்டு வெளியில் வந்த அருண் “வாங்கத்தை, வா மல்லி” என்று அழைத்தான்.
“என்ன கண்ணு எப்படி இருக்க. ஒரு எட்டு இந்த அத்தைய வந்து பாக்கலாமல்லோ. நானெதென் உங்கள வந்து பாக்க வேண்டிருக்கு”
“எங்கத்தை. காலேஜ் போகத்தான் நேரம் சரியா இருக்குங்” என்றவனிடம் சிவகாமி “அண்ணன் எங்க கண்ணு. வெளில கிளம்பிட்டானா” என்றார்.
“அண்ணா ரூம்ல இருப்பாங்ம்மா. சந்தியாவும் கௌரியும் வந்தாங்க. வீட்டுக்கு பொறகால இருக்காங்க” என்று பேசிக்கொண்டே வந்தவர்கள்தான் ஆதியும் சந்தியாவும் ஓடி பிடித்து விளையாடியதை பார்த்து வாயை பிளந்து நின்றுவிட்டனர்.
ஆதியை சிறு வயதில் கூட இப்படி பெண்களுடன் விளையாண்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வயதில் இப்படி பார்த்ததும் சிவகாமியும் அருணும் சந்தோசமாக சிரித்தார்கள். அன்னமும் மல்லியும் ஓருவரையொருவர் கடுப்பாக பார்த்து கொண்டனர்.
இவர்களை பார்த்து விட்ட ஆதி நொந்து விட்டான். ஐயோ இவ்ளோ நாள் காப்பாத்தி வச்ச மானம் மரியாதல்லாம் இவளால காத்துல பறந்துடும் போலருக்கு என்று மனதில் புலம்பி கொண்டே வெளியில் சாதாரணமாக “வாங்கத்தை” என்று அன்னத்தை பார்த்து கூப்பிட்டுவிட்டு, கையில் சந்தியாவின் மொபைலுடன் உள்ளே சென்றான்.
இங்கு சந்தியா கௌரியை பார்த்து “அடியே பெஸ்ட்டி பெஸ்ட்டின்னுட்டு இப்படி கவுத்துட்டியே. ஏண்டி என் மொபைல புடுங்கி குடுத்த”
“என்னதான் இருந்தாலும் நீ நேத்து வந்த பெஸ்ட்டி டி. ஆனா எங்கண்ணன் குழந்தையா இருந்ததோட்டம் எங்கள வளத்தவங்ளாக்கும். அவங்க பேச்ச எங்களால மீற முடியாதுல்லோ”
“சினேக துரோகி” என்று சந்தியா அவளை அடிக்க செல்வதற்குள் உள்ளிருந்து ஆதி “கௌரி” என்று அழைக்கும் குரல் கேட்டதும் சிட்டாக பறந்து விட்டாள் கௌரி வழியில் நின்ற யாரையும் கண்டு கொள்ளாமல்.
அடிப்பாவி என்று திட்டிக்கொண்டே உள்ளே வந்த சந்தியாதான் எல்லோரையும் பார்த்துவிட்டு “வாங்க மல்லிகா, வாங்க ஆன்ட்டி” என்று ஒரு மரியாதைக்காக அழைத்தாள்.
“இது என்ற அண்ணன் வீடல்லோ. நீதேன் வெளியாளு. நீ என்ன வாங்கன்னு கூப்புடுறியாக்கும்” என்றார் அன்னம்.
அதற்கு சந்தியா பதில் சொல்வதற்குள் “அத்த அவ உங்களுக்கு முன்னாடியே இங்க இருக்கதால, ஒரு பார்மாலிட்டிக்கு உங்கள வாங்கன்னு சொன்னாளுங். இதுக்கு என்னத்துக்குங்க உரிம பிரச்சனையெல்லாம் கிளப்புறீங்” என்றான் அருண்.
“பாத்தீங்ளாண்ணி . நேத்து வந்த புள்ளைக்காக என்னையே எதுத்து பேசறத பாருங்”
“அன்னம். என்ன பேசற நீயி . எப்ப வந்தாலும் அதும் நம்மூட்டு புள்ளதேன். அருணு நீ உள்ள போ கண்ணு” என்று அருணை அனுப்பி வைத்தவர், சந்தியாவிடம் “கண்ணு இது அன்னம். உன்ர மாமாக்களுக்கு தங்கச்சி. உனக்கு அம்மா முறையாகோணும்” என்றதும் சந்தியா “சரி அத்தை” என்றவள் அன்னத்திடம் “உங்க ஊர் பழக்க வழக்கம்லாம் எனக்கு தெரியாதும்மா. நா பேசுனது உங்களுக்கு எதோ புடிக்கல போல. ஸாரிம்மா” என்று விட்டு அங்கிருந்து சென்றவளை கனிவாக பார்த்தார் சிவகாமி.
“பாத்தியா அன்னம். நெம்ப நல்ல புள்ள” என்றுவிட்டு அடுக்களைக்கு சென்றார் சிவகாமி. மல்லியும் அன்னமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிவகாமியின் பின்னால் சென்றனர்.
உள்ளே வந்த சந்தியா நேராக ஆதி ரூமிற்கு சென்றாள். வழியில் கௌரி வந்தவள், போகிற போக்கில் “சாரிடி. அண்ணா உன்ர போன் லாக் கேட்டாங்க. சொல்லி போட்டேன்” என்று சொல்லிவிட்டு அவள் கையில் சிக்காமல் சென்று விட்டாள் .
அவளை பார்த்து பல்லை கடித்தவள், ஆதி அவன் பால்கனியில் உள்ள சேரில் அமர்ந்திருந்ததால் அங்கு சென்றாள். அவளிடம் அவள் மொபைலை கொடுத்தான் ஆதி. அதை வாங்கி கொண்டே “என் போனை என் பெர்மிஷன் இல்லாம எப்படி யூஸ் பண்ணீங்க பாஸ்” என்றாள்.
அவளை கண்களை இடுக்கி பார்த்தவன் “என் பெர்மிஷன் இல்லாம என் போட்டோ மட்டும் எடுக்கலாமா”
“அது சும்மா ஒரு குழந்தை போட்டோ. நேச்சர் சீன் அழகா இருந்தா வச்சுக்க மாட்டாங்களா. அது மாதிரி எடுத்து வச்சிருந்தேன்”
“ஆனா அது என்னோட பெர்சனல் போட்டோம்மா. அதான் டெலீட் பண்ணிட்டேன்” என்று சொல்லிவிட்டு திரும்பியவனிடம்
“நோ ப்ராப்லம் பாஸ். மொபைல்ல டெலீட் பண்ணா என்ன, என் லேப்டாப்ல உங்க போட்டோவ அல்ரெடி காப்பி பண்ணிட்டேன்” என்று நக்கலாக சொன்னவளை அதிர்ச்சியாக திரும்பி பார்த்தான். சில நொடிகளில் நிதானித்து
“பரவால்ல வச்சுக்கோ. அதவச்சு உன்னால என்ன பண்ண முடியும். நா அதுல அடையாளமே தெரிய மாட்டேன் யாருக்கும்”
“ஹா ஹா பாஸ். தெரியலைன்னா என்ன. ஊருக்கு வெளில ஒரு பேனர். ஒரு பக்கம் உங்க குழந்தை போட்டோ. இன்னொரு பக்கம் உங்க ரீசன்ட் போட்டோ. கீழ தெளிவா, எப்படி இருந்த நம் மண்ணின் மைந்தன் ஆதித்யன் இப்படி இருக்க காரணம் இயற்கை விவசாயமே. ஆதலால் நாமும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம், என்று ஒரு பிரீ விளம்பர பேனர் வச்சா சும்மா லைக்ஸ் பிச்சுக்காது” என்று சொன்னவளை அதிர்ந்து போய் பார்த்தவன்
“இப்ப நா என்ன பண்ணனும்” என்றான்.
“இப்ப எந்த ஆப்லிகேசனும் இல்ல பாஸ். தேவைப்படும்போது கேக்கிறேன்” என்று விட்டு திரும்பி சென்றவளை “சந்தியா” என்று கூப்பிட்டு நிறுத்தினான்.
முதன் முதலாக அவள் பெயர் சொல்லி அழைத்தவனை திரும்பி ஆர்வமாக பார்த்தாள்.
“உண்மைய சொல்லு. நீங்களா ஊர காலி பண்ணிட்டு வந்தீங்களா இல்ல உன் தொந்தரவு தாங்காம அங்க உள்ளவங்க மூட்டை கட்டி அனுப்பி வச்சிட்டாங்களா” என்று சீரியஸாக கேட்டவனை பார்த்து வாய்விட்டு சிரித்தவள்
“என்ன பாத்து ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ளவே இப்படி பீல் பண்ணா எப்படி பாஸ். இன்னும் நாம பாக்க வேண்டியது எவ்ளோ…. இருக்கு” என்றுவிட்டு சென்றாள்.
அவளை கைகளை கட்டி கொண்டு பார்த்து கொண்டிருந்தவன் தலையை உலுக்கி கொண்டான்.
கீழே கௌரியும் மல்லியும் சேர்ந்து பூ கட்டி கொண்டிருந்தனர். மல்லிகா அவளை கண்டு முகத்தை திருப்பி கொண்டாள். அவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவள் கௌரியிடம் “என் போட்டோ உங்கண்ணனுக்கு வேணுமாம் , என்ன எப்போதும் பாத்துகிட்டே இருக்க. அத எடுக்கத்தான் என் மொபைல புடுங்கிட்டு போனாங்களாம். இப்ப திருப்பி கொடுத்துட்டாங்க. நாம வீட்டுக்கு போலாமா கௌ” என்று கௌரியை கூப்பிட்டாள் சந்தியா.
கௌரியும் “ஹி ஹி அப்படியா சந்தியா. சரி படிக்கிற வேலையும் இருக்கு. நாம போலாம் சந்தியா” என்று கிளம்பினாள். இருவரும் சென்று அடுக்களையில் இருந்த அன்னத்திடமும் சிவகாமியிடமும் சென்று சொல்லி கொண்டு கிளம்பினர்.
அவர்களை பார்த்து கொண்டிருந்த சிவகாமியிடம் அன்னம் “என்னங் அண்ணி. புதுசா ஒருத்தி பவுசா கலரா வந்ததோட்டம் அவள மருமகளாக்கிடலாம்ன்னு நினைக்கிறீங்களாட்டருக்கு” என்றவரை புரியாமல் பார்த்த சிவகாமி, புரிந்ததும்
“என்ன பேசறதா இருந்தாலும் யோசிச்சு பேசோணும் அன்னம். இப்பத்தேன் கல்யாணம் நின்னு போயி அந்த புள்ள ஊருக்கு வந்துருக்கு. அது காதுல இந்த விஷயம் விழுந்தா வருத்தப்படுமல்லோ. ஆதிதேன் கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லி போட்டானே. அத நெனைச்சு நானே வெசனப்பட்டுட்டு கெடக்குறேன். அவங்க ஐயனும் ஒரு வருஷம் போட்டும்ன்னு சொல்லி போட்டாங்க”
“இல்லீங்ண்ணி . எனக்குதேன் என்ர மவள ஆதிக்கு கட்டி எங்க அண்ணன் வீட்டுக்கு அனுப்பி போடோணும்ன்னு ஆசைங். அதான் அப்படி பேசி போட்டேனுங். கல்யாணம்ன்னு பொண்ணு பாத்தீங்ன்னா என்ர மவள நியாபகத்துல வச்சிக்கிடுங்க”
“சரி விடு அன்னம். யாராருக்கு என்ன எழுதிருக்கோ அது நடக்குமாக்கும்” என்றவரிடம் சொல்லிக்கொண்டு அன்னமும் மல்லியும் வீட்டுக்கு கிளம்பினர்.
கௌரியை அவள் வீட்டில் விட்டுவிட்டு, தன் வீட்டுக்கு சென்ற சந்தியாவிற்கு கால் செய்த வசந்த், நாளை வயலுக்கு வந்து அவனை சந்திக்குமாறு சொல்லி வைத்தான்.
மறுநாள் காலை பத்து மணிக்கெல்லாம் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு வயலுக்கு சென்றாள் சந்தியா. ஆட்கள் வேலை செய்வதை மேற்பார்வை பார்த்து கொண்டிருந்த வசந்தன், இவளை பார்த்ததும் ஆட்களுக்கு வேலையை பிரித்து கொடுத்து விட்டு இவளிடம் வந்தான்.
அவளை அழைத்து கொண்டு தோட்டத்து வீட்டு பக்கம் சென்றவன் அங்கு வாயிலில் கிடந்த கயிற்று கட்டிலில் அவளை அமர சொல்லிவிட்டு எதிரில் கிடந்த கல்லில் தானும் அமர்ந்தான்.
“என்னம்ணி. உன்ர கூட ஒரு கொடுக்கு சுத்துமே . அத எங்க.. காணோம்”
“கொடுக்க இன்னைக்கு கட் பண்ணி விட்டுட்டேண்ணா. அவள்ட்ட சொல்லாம கிளம்பி வந்துட்டேன். எப்ப வேணாலும் என்ன தேடுவா. சோ பாஸ்டா நா வீட்டுக்கு போகணும்” என்றவள் சுருக்கமாக அவள் நின்று போன கல்யாண கதையை கூறி முடித்துவிட்டு “இப்ப உங்க மச்சான் கதையை சொல்றீங்களாண்ணா” என்றாள்.
அவள் கதையை கேட்டவன் “ஆனாலும் உனக்கு நெம்ப தைரியந்தேன் கண்ணு” என்றுவிட்டு ஆதியின் கல்யாண கதையை சொல்ல தொடங்கினான்.
“ஆதியோட அத்தை பரிமளாவும், அவங்க மாமா தில்லைநாயகமும் தானா வந்துதேன் இந்த கல்யாண பேச்சை ஆரம்பிச்சு வச்சாங்க. என்ற மச்சானும் கல்யாணத்தை பத்திலாம் அப்ப யோசிக்கவே இல்ல. சிவகாமி அத்தையும் ஈஸ்வரன் மாமாவும், சுதாவும் நல்ல பொண்ணு, அழகாவும் அமைதியாவும் இருக்குன்னதொட்டு கல்யாணத்துக்கு சம்மதிச்சு போட்டாங்க. பிறவு மச்சானும் மறுக்கல. எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணதேன் போறோம், சரி அம்மா அப்பாவுக்கு ஓகேன்னதொட்டு அவனும் சம்மதிச்சு போட்டான்.
கல்யாணத்தையும் ரெண்டே மாசத்துல வெசைய்யா நடத்தி முடிச்சு போட்டார் தில்லை அப்பா.
கல்யாணத்தன்னைக்கு நைட்டு மழை வரும் போல இருந்ததோட்டம் வயலை பாக்க வந்து போட்டான் ஆதி. அவன நாந்தேன் திட்டி கொண்டு போயி வீட்டுல விட்டு போட்டு போனேன்”
வீட்டிற்கு வந்த ஆதிக்கு சிவகாமிதான் கதவை திறந்துவிட்டு மேலே ரூமிற்க்கு போக சொல்லிவிட்டு, அவர் அறைக்கு தூங்க சென்றார். கீழே அறைகள் முழுவதும் சொந்தங்களால் நிரம்பியிருந்தது.
ஆதி தன் ரூமிற்க்கு சென்று கதவை திறந்தால், கதவு தாழ்பாள் போடப்பட்டிருந்தது. லேசாக தட்டி பார்த்தான். திறக்கவில்லை. ஆதிக்கு எரிச்சலாக இருந்தது. நேற்றுவரை தன் ராஜ்யமாக இருந்த அறையில் இன்று அனுமதி கேட்பது போல் நின்றது அவனுக்கு பிடிக்கவில்லை.
உள்ளே என்ன செய்கிறாள் என்று யோசித்தவன், ரூமின் பால்கனி வழியாக சென்று கதவை தள்ளினான். நல்ல வேளை. அது உடனே திறந்துவிட்டது.
உள்ளே சென்றவன் பார்த்தது, இன்று காலை அவன் தாலி கட்டிய மனைவி சுதா அவசர அவசரமாக நாற்காலியில் நின்று உத்தரத்தில் கட்டியிருந்த புடவையில் தூக்கு மாட்டி கொள்ள சென்றதைத்தான்.
error: Content is protected !!