Skip to content
Post Views: 13,591
அத்தியாயம் 24
அதிகாலை ஐந்து மணிக்கு அழைப்பு மணி ஒலிக்க, கோபாலன் கதவை திறந்தார். காவ்யா நின்றிருக்க, “விடிஞ்ச பின்ன வர மாதிரிதான பஸ் ஏற சொன்னேன் காவ்யா? எனக்கொரு போன் பண்ணியிருக்க வேண்டியதுதான? இந்த நேரத்துக்கு தனியா வருவியா?” என கடிந்தார் கோபாலன்.
“உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னுதான்ப்பா” என்றாள் மன்னிப்பாக.
“உள்ள வா” என்றார் கோபம் குறைந்தவராய்.
Advertisement
உள்ளே வந்தவள் “விஷ்ணு வந்திருக்கானாப்பா? செப்பல் இருக்கு?” என்றாள்.
“ம் நேத்துதான் வந்தான், அம்மாவை எழுப்பவா?” என்றார்.
“வேணாம்ப்பா, தூங்கட்டும்” என்று தனதறைக்குள் சென்று முகம் கழுவி வந்து டீ வைத்து தந்தைக்கு கொடுத்து, “ரொம்ப டையர்டா இருக்குப்பா. கொஞ்ச நேரம் தூங்கறேன்” என்று தனதறைக்குள் சென்றாள்.
Advertisement
சமையலறை பக்கமே செல்லாத மகள் இன்று அன்னையை எழுப்பவேண்டாம் என்று டீ வைத்து தருவது கோபாலனுக்கு நெகிழ்வாக இருந்தது. காவ்யாவின் வயதிற்கு இது சாதாரண விசயம்தான். ஆனால் இது வயதால் வந்த பக்குவம் அல்ல, வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம் ஆகையால் டீ வைத்த சிறிய செயலே தகப்பன் மனதை நெகிழ்த்தியது. மகள் வாழ்க்கை சரியாக வேண்டி கடவுளை வேண்டியபடி டீ அருந்திக்கொண்டிருந்தார்.
Advertisement
ஆறு மணிபோல் பிரபாவதி விழித்தார். தன்னை சுத்தம் கூட செய்யாமல் மகன் மருமகள் உண்டார்களா என்று வெளியே வந்து டைனிங் டேபிளை ஆராய, “ம் சாப்பாட்டை காணோம்” என்று மகிழ்வோடு சிரித்தார் கோபாலன்.
தானும் சிரித்தபடி அறைக்குள் சென்று குளித்து வந்தார் பிரபாவதி. மகள் வந்த விசயத்தை கோபாலன் சொல்ல, டீ வைத்து எடுத்து சென்றார். காவ்யா ஆழ்ந்த உறக்கத்திலிருக்கவே, மகனுக்கு பிடித்த அசைவம் வாங்கி வர கணவனுக்கு பணித்து, சமையல் செய்ய ஆயத்தமானார்.
எட்டு மணியாகியிருக்க கண் விழித்தாள் விஷாலினி. தந்தையோடு பேசியிருந்து அப்பொழுதுதான் உள்ளே வந்த விஷ்ணுவர்தன் “விடிய விடிய முழிச்ச மாதிரி என்னடீ இவ்வளோ நேரம் தூங்கற?” என்றான் சிரிப்போடே.
Advertisement
விஷ்ணுவை நேர் கொண்டு பார்க்க முடியாமல் போனபோதும், எழுந்து உடை எடுத்தபடி “ஜாகிங் போகும்போது என்னை எழுப்பி விட்டுருக்கலாமில்ல?” என்று கோபித்து குளிக்கச் சென்றாள்.
வெளியே வந்தவன் “ம்மா என் பொண்டாட்டிக்கு டீ கொடு” என்றான்.
பிரபாவதி முறைக்க, “ம்மா” என சிரித்தவன், “ரொம்ப நேரம் தூங்கினதால கில்ட்டியா ஃபீல் பண்றா. அவளை கூல் பண்ணி கூட்டிட்டு வரதுக்குத்தான் டீ கேக்குறேன். ப்ளீஸ்ம்மா” என்றான் கெஞ்சலாக.
“பொழச்சிக்குவடா” என்று கோபாலன் சிரிக்க, “அப்புறம் பொழைக்கனும்தானப்பா?” என்றான்.
“அந்த பையன் சரி வருவான்னு நினைக்கிறியா விஷ்ணு? இன்னும் நாலு நாள்தான் இருக்கு, இந்த முறை விவாகரத்து கிடைச்சிடும்” என்றார் கவலையாக.
“கண்டிப்பா வருவான்ப்பா, சட்டப்படி பிரிஞ்சாலும் கூட காவ்யாக்கு வேற இடம் பார்க்க ஆரம்பிச்சா தன்னால வந்திடுவான், அந்த ஷாக்கையும் விவாகரத்து கிடைச்ச அடுத்த வாரமே கொடுத்திடலாம்” என்றான்.
பிரபாவதி டீ எடுத்து வர, அசுரன் சத்தம் ஓங்கி ஒலித்தது.
அந்த நேரம் கடைக்கு சென்று வந்த மேகலைக்கு இவர்களை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி. திவாகரை அடையாளம் தெரியும் ஆதலால், இன்று காவ்யாவிற்கு நல்லகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு அசுரனை பிடித்துக்கொண்டு “உள்ள போங்க” என்றார்.
காவ்யாவின் கணவனாக இருக்குமோ என்ற ஆவலோடு எடுத்து வந்த டீயை கொடுக்க மறந்து பிரபாவதி வாசலைப் பார்க்க, அங்கே திவாகரோடு சேர்த்து அவனின் மொத்த குடும்பமும் நின்றிருந்தது.
எங்கே அன்னை வரவேற்றிடுவாரோ என்று “ம்மா நான் சொல்ற வரைக்கும் அவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசக்கூடாது. இல்லயில்ல, நீ வாயே திறக்கக்கூடாது” என்றான் கட்டளையாக.
மகனை கவலையோடு பார்க்க, திவாகர் குடும்பம் வீட்டு வாயிலில் வந்து நின்றார்கள்.
“ம்… வாசம் தூக்குது. காவ்யாக்கு விடுதலை கிடைக்குற சந்தோசத்துல சமையலை அமர்க்களம் பண்ணியிருக்கபோல” என்று சந்தோஷித்து,
“இன்னும் நாலு நாளைக்கு இவனுக்கும் காவ்யாக்கும் சம்மந்தம் இருக்கு, அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் என்ன விஷயமா வந்துருக்கானு விசாரிங்கப்பா, நான் பத்து நிமிஷத்துல வரேன்” டீயோடு தனதறைக்குள் சென்றான்.
திவாகர் குடும்பம் வாயிலிலேயே நின்றிருக்க, “உள்ள வாங்க” என்றார் பிரபாவதி.
திவாகர் முன்னே வர, அவனின் குடும்பமும் வந்தது. அமர சொல்லாமல் “என்ன விசயமா வந்துருக்கிங்க?” என்றார் கோபாலன்.
“உக்காருங்க” என்று உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்தார் பிரபாவதி.
எத்தனை சொன்னாலும் அன்னை எப்படியும் அவர்களை உபசரிப்பார் என்று தெரியும் விஷ்ணுவிற்கு. அறைக்குள் உடைகள் அங்காங்கே கிடக்க, அனைத்தையும் சரி செய்து, “ம்மா இங்க வா” என்று உரக்க குரல் கொடுத்தான் விஷ்ணுவர்தன்.
என்னவோ என்று பிரபாவதி பதறி விஷ்ணு அறையருகே செல்ல, “உள்ள வாம்மா” என்றான்.
“விஷ்ணு, அவங்க” என்று தவிக்க, “ம் சமாதானம் பேசத்தான் வந்திருக்கான், காவ்யா வாழ்க்கை சரியாகனும்னா நான் சொல்ற வரைக்கும் நீ வெளில வரக்கூடாது” என்று கட்டளையிட்டான் மீண்டும்.
விஷாலினி குளித்து வர, “திவாகர் குடும்பத்தோட வந்திருக்கான். காவ்யா ரூம்க்கு போ, நான் சொல்ற வரைக்கும் வரக்கூடாதுனு அவகிட்ட சொல்லு. அங்கேயே டீ குடி” என்று டீயை கொடுத்தனுப்பினான் மனைவியிடம்.
அறையை விட்டு வெளியேற எண்ணி, “அந்த டீ ஆறியிருக்கும், நான் சூடு பண்ணிக்கொடுக்கறேன்” என்று பிரபாவதி சொல்ல, “நான் சூடு பண்ணிக்கிறேன்த்த” என்று விஷாலினி வெளியேறினாள்.
“புருஷனுக்கு மேல இருக்கா” என்று பிரபாவதி கடுப்போடு முணுமுணுக்க, சிரித்தவன் “இங்கையே இரும்மா, உன்னையும் அப்பாவையும் கஷ்டப்படுத்தமாட்டேன்” என்று தேற்றி வெளியே வந்தான்.
டீயை சூடுபடுத்திக்கொண்டு காவ்யா அறைக்குள் நுழைந்தாள் விஷாலினி. விஷாலினியை கண்டதும் கலங்கினாள் காவ்யா.
“அழாதிங்கக்கா, டீ குடிங்க, உங்கண்ணா பார்த்துப்பார்”
காவ்யாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. பெற்றோர் மற்றும் உடன்பிறப்போடு திவாகர் வந்திருக்கிறான், நிச்சயம் நான் வேண்டும் என்று திவாகரின் பெற்றோர் நினைத்திருக்கமாட்டார்கள். திவாகரின் பிடிவாதத்தால்தான் வந்திருப்பார்கள்.
திவாகர் அன்னை பேசியதை மறக்கவோ மன்னிக்கவோ முடியவில்லை. அதேநேரம் தான் வேண்டும் என்று திவாகர் வந்துவிட்ட நிகழ்வு, காவ்யாவின் மனதிடத்தை உடைக்கச் செய்ய, விஷ்ணுவும் தந்தையும் என்ன சொல்வார்களோ என்ற பதட்டம் வந்தது.
“இங்கையே இருங்க, உங்களுக்கு டீ எடுத்துக்கிட்டு, அப்படியே வெளில என்ன நடக்குதுனு பார்த்துட்டு வரேன்” என்று வெளியே வந்தாள்.
“காவ்யாவை புரிஞ்சிக்காம நடந்துக்கிட்டானாம் விஷ்ணு, இனி அப்படி பண்ண மாட்டானாம்” என்று திவாகர் சொன்னதை மகனிடம் சொன்னார் கோபாலன்.
“இனி நீ எப்படி நடந்துக்கிட்டா எங்களுக்கென்னடா?” என முறைத்தவன், “இங்க எதுக்கு வந்திருக்கிங்க?” என்றான் விசாரணையாக.
திவாகர் “காவ்யாவை பிரிஞ்சு என்னால இருக்க முடியாதுங்க, டிவோர்ஸ் வேணாம்” என்றான் கெஞ்சலாக.
“நாலரை வருஷமா பிரிஞ்சு இருந்ததான?” என்று கோபாலன் கோபத்தோடு சொல்ல, “அப்பா” என்று தந்தையை தடுத்தவன், “ஆனா காவ்யாக்கு நீ வேணாமாம், உன்னை டிவோர்ஸ் பண்ற முடிவுல ரொம்ப உறுதியா இருக்கிறதா சொல்லியிருக்கா” என்றான் விஷ்ணுவர்தன்.
“முன்ன சொல்லியிருப்பா, நான் இங்க வந்திருக்கிறதா ஒரே ஒருமுறை கேட்டுப் பாருங்க. நான் போன் செய்தா அட்டன் பண்ணமாட்டேங்குறா” என்றான் வருத்தமாக.
விஷாலினி காவ்யாவிற்கான டீயோடு உள்ளே போக, இந்த பெண் விஷ்ணுவின் மனைவி. காவ்யா அம்மா அந்த ரூம்க்குள்ள போனாங்க. அப்போ இங்க… என யோசித்தவன், காவ்யாவாக இருக்குமோ என்ற ஆவலோடு விஷாலினி சென்ற அறையை பார்த்தான் திவாகர்.
“அங்கென்னடா பார்வ?” என குரலுயர்தினான் மிரட்டலாக.
திவாகர் வெட்கி தலைகுனிய, “டிவோர்ஸ்க்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. நீ வேணும்னு இருந்தா காவ்யா உன் போனை அட்டன் பண்ணுவா. அட்டன் பண்ணலைனும்போதே புரிஞ்சிக்கமாட்டியா?” என்றான்.
வெட்டிவிடுவது போலவே மகன் பேசும் பேச்சு கோபாலனுக்கும், விஷ்ணு அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பிரபாவதிக்கும் கவலையை உண்டாக்கியது.
கோபாலன் முகம் காட்டிய பாவனையில், திவாகர் தந்தைக்கு சிறு நம்பிக்கை பிறக்க, “மகனுக்கு பெரிய இடத்துல பார்க்க நினைச்சிருந்தா. இப்படி திடீர் கல்யாணம் செய்துட்டு வரவும் தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்ல ஆரம்பிச்சிட்டா. என் பொண்டாட்டி நடந்துகிட்டது தப்புதான்ங்க. நானும் அதுக்கு உடந்தையா இருந்துட்டேன். இனி இப்படி நடக்காது. பழசை மன்னிச்சு உங்க பொண்ணை எங்களுக்கே திருப்பி கொடுத்துடுங்க” என்று மகனுக்காக வணங்கிக்கேட்டார்.
தனது பேச்சால் காவ்யாவை வதைத்த திவாகரின் அன்னையும், அவனின் அக்காவும் இன்னும் மன்னிப்பு கேளாததால், விஷ்ணு… “சம்மதிச்சிடாதிங்கப்பா” என்று கட்டளையிட்டான் தந்தைக்கு.
கோபாலன் பரிதாபமாய் பார்க்க, “செய்யிறதெல்லாம் செய்துட்டு இப்படி கேட்டா நல்லவனாகிடுவானா? நம்பி கட்டிக்கிட்டவளை கௌரவமா காப்பாத்துறவன்தான் ஆம்பிளை. இரண்டே மாசத்துல துரத்திவிட்டவனை மன்னிச்சுட்டா காவ்யா வாழ்க்கை திரும்ப நரகமாகிடும்.
அந்த வீட்டுல இருக்க முடியாதளவுக்கு டார்ச்சர் பண்ணியிருக்காங்க இவனோட அம்மா. மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கும் எண்ணத்துலதான செய்திருப்பாங்க? இத்தனை மோசமான புத்தியுள்ளவங்களை” என்று கோபத்தோடு சொல்லிக்கொண்டிருக்க.. “எங்களை மன்னிச்சுடுங்க தம்பி” என்றார் திவாகர் அன்னை.
“உங்களை மன்னிச்சு எங்களுக்கு ஒன்னும் ஆகப்போறதில்லை” என்றான்.
திவாகர் முகம் அதீத வேதனையை காட்ட, “காவ்யாவை இவ்வளோ விரும்பறானு தெரிஞ்சிருந்தா அப்படி நடந்திருக்கமாட்டேன்” என்றார் வேதனையோடு.
தற்போதுதான் திவாகரின் அன்னை முகத்தில் உண்மையான வருத்தம் தெரிய, சற்று மனமிறங்கினான் விஷ்ணுவர்தன். “கேட்டியாடா உன் அம்மா சொல்றதை? நீ கொடுத்த இடம்தான் காவ்யாவை அப்படி பேச வச்சிருக்கு” என்றான் முறைப்பாக.
பெருத்த அமைதி நிலவ, “ம்மா” என்றழைத்தான்.
பிரபாவதி வெளியே வர, “எனக்கு பசிக்குது” என்றவன், “கிளம்பற ஐடியா இல்லையா?” என்று முறைத்தான் திவாகரை.
“காவ்யாகிட்ட பேசாம இங்கயிருந்து கிளம்பமாட்டேன்ங்க” என்றான் பயத்தை விடுத்து.
“ஒழுங்கா போய்ட்டினா டிவோர்ஸ் கேஸோட போய்டும். இல்ல” என்று முறைக்க, “என்னவானாலும் சரிங்க” என்றான் விஷ்ணுவைப் பாராமல்.
தான் மிரட்டியும் பயப்படாமல் பதிலுரைத்தவனை மெச்சுதலாய் நினைத்தபோதும், “இன்னும் நாலுநாள் கழிச்சு காவ்யாவை கோர்ட்ல வச்சி பார்த்துக்கலாம், இப்போ கிளம்பு” என்றான்.
இதற்கு மேல் பொறுக்க முடியாமல் விஷ்ணு அறையிலிருந்து வெளியே வந்த பிரபாவதி திவாகரின் தந்தையிடம் தண்ணீரை நீட்டினார். அவர் கோபாலனைப் பார்க்க, “தண்ணி குடிங்க, என் மகனை சமாதானம் செய்துட்டு, உங்க மகனோட வாழ விருப்பமானு பொண்ணுகிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்றார் தன்மையாக.
திவாகரின் பெற்றோர் முகம் நிம்மதியை காட்ட, அனைவருக்கும் டீ வைக்க ஆரம்பித்தாள் விஷாலினி.
“இவனோட மல்லு கட்டிடிருக்கனும்னு காவ்யாக்கு என்ன தலையெழுத்து? திரும்ப பிரச்சனை வந்தா இப்படி பொறுமையா பேசிட்டிருக்கமாட்டேன்”
“இனி பிரச்சனை வராதுங்க சார்” என்றான் மன்றாடலாக.
திவாகரின் பாவமான பாவனையில் மனமிறங்கிய கோபாலன், “திரும்ப பிரச்சனை வந்தாதான பொறுமையா இருக்கமாட்டேனுதான என் மகன் சொல்றான். அப்போ என்ன அர்த்தம்?” என்றார் இலகுவாக.
முகம் மலர்ந்த திவாகர், “இனி பிரச்சனையே வராதுங்க அங்கிள்” என்றான் மீண்டும்.
இதற்கு மேல் திவாகரோடு பேசப் பிடிக்காமல், “எனக்கு பசிக்குதுடா. என் அம்மா கறிக்குழம்பு வச்சு ஒருமணி நேரமாகுது. சாப்பிடலாம்னு நினைக்கும்போது சரியா வந்துட்டிங்க. உங்களால சாப்பிடாம இருக்கேன். எப்போ கிளம்புவிங்க?” என்றான்.
“விஷ்ணு” எனப்பதறிய பிரபாவதி, “அவன் கோபத்துல அப்படி சொல்லிட்டான். நீங்களும் சாப்பிடுங்க” என்றார் திவாகரின் அன்னையிடம்.
“பரவால்லைங்க, இன்னொரு நாளைக்கு வந்து சாப்பிடறோம். உங்க பொண்ணை என் மகன்கிட்ட பேச சொல்லுங்க” என்று கோரிக்கை விடுத்து, கோபாலனிடம் “கிளம்புறோம்ங்க” என்றார் பணிவாக.
“டீயாவது வைக்கிறேன்” என்று பிரபாவதி பரிதவிக்க, “நான் குடிக்கிறேன், வைங்க ஆன்ட்டி” என்றான் திவாகர்.
விஷாலினி அனைவருக்கும் டீ எடுத்து வர, “நீங்க சாரோட வெய்ஃபா? நாங்க இங்க வந்ததை காவ்யாகிட்ட சொல்லி, என்கூட பேச சொல்லுங்க” என்று கெஞ்சினான் சன்னக்குரலில்.
சரியென்பதாய் விஷாலினி தலையசைக்க, “அம்மாகிட்ட டிபன் வாங்கிட்டு ரூம்க்கு வா” என்று மனைவியை முறைத்தான் விஷ்ணுவர்தன்.
காவ்யா இங்கிருப்பதை அறியாமல், இன்றே பெங்களூர் செல்ல திட்டமிட்டு, டீ குடித்ததும் “நான் கிளம்பறேன் அங்கிள். காவ்யாகிட்ட பேசுங்க” என்று பெற்றோரோடு கிளம்பினான் திவாகர்.
error: Content is protected !!