Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 24.2

“ம்மா சாப்பாடு போடு” என்றான்.

மகள் வாழ்க்கை சரியாகிவிட்ட மகிழ்வோடு, “நீயும் உக்காரு விஷாலினி” என்றார்.

“நீங்க உக்காருங்கத்த, இத்தனை சமைச்சிருக்கிங்க, உங்களுக்குத்தான் டையர்ட் ஆகியிருக்கும். நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என்று அனைவருக்கும் பரிமாறி, காவ்யா அறைக்கு உணவை எடுத்துபோனாள் விஷாலினி.

“அவங்களையும் சாப்பிட சொல்லியிருக்கலாம்” என பிரபாவதி குறைபட, “ம்… அவனுக்கு இப்போ கறி விருந்து ஒன்னுதான் குறைச்சல்” என்று அன்னையை முறைத்து, “இன்னும் கொஞ்சம் கெஞ்ச விட்டுருக்கலாம், நீங்க ஏன்ப்பா அவசரப்பட்டு வார்த்தையை விட்டிங்க? நீங்க இறங்கிப் போனதால நானும் சம்மதிக்க வேண்டியதாகிடுச்சு” என்றான் கோபமாக.



Advertisement

“முதல்ல சாப்பிடு விஷ்ணு, அவனைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்” என்றார் கோபாலன்.

விஷாலினி நேற்றிரவே பழம் மட்டுமே உண்டாள் ஆகையால் “விஷாலினி” என்று உரக்க குரல் கொடுத்தான்.

“நீ போ விஷாலினி, நான் சாப்பிட்டுக்கிறேன்” என்றாள் காவ்யா.

Advertisement

வெளியே வந்தவள், “எனக்கு பசிக்கலங்க” என்றாள்.

Advertisement

விஷ்ணு முறைக்க, “பாருங்க மாமா, எப்போப்பாரு முறைச்சிட்டேயிருக்காங்க” என்று குறைபட்டாள் கோபாலனிடம்.

மருமகள் காவ்யாவை சமாதானம் செய்து கொண்டிருந்திருப்பாள் என்றுணர்ந்தபோதும், “இரண்டு மூனு மாசத்துக்கப்புறம் நேத்துதான் விஷ்ணு வந்தான். உனக்கு பசிச்சா நீயும் சாப்பிடு, இல்லைனா விஷ்ணுக்கு பார்த்து பரிமாறு விஷாலினி” என்றார் கோபாலன்.

“சாப்பிடும்போது பார்த்தா இவங்களுக்கு பிடிக்காதே மாமா”

Advertisement

சிரித்தவர் “அது ஜன்னல்லயிருந்து பார்த்தாதான் பிடிக்காது. பக்கத்துலயிருந்து பரிமாறினா பிடிக்கும். ஆமாம்தான விஷ்ணு?” என்றார் மகனிடம்.

விஷாலினி முகம் மலர்ந்திட, காலங்காத்தால வந்து மூடை ஸ்பாயில் பண்ணிட்டான் என்று திவாகரை திட்டினான் மனதில். மகள் வாழ்வு சரியாகும் சந்தோசத்தில் இருந்த பிரபாவதி, “அதான் கூப்பிட்டதும் வந்துட்டாள்ல? இன்னும் ஏன்டா உர்ருனு இருக்க, விஷாலினி பயந்துக்கிறா பாரு” என்றார் நொடிப்பாக.

“யாரு இவளா? பயந்துக்கிறாளா?” என்றான் ஆராய்ச்சியாக.

ம் ஆராய்ச்சிதான் செய்தான் கோபம்போல். இளமஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். தன் முன் வெக்கப்படக் கூடாதென்று வெக்கத்தை மறைப்பதற்காக அவள் செய்து கொண்டிருந்த பாவனைகள் விஷ்ணுவை மேலும் மயங்க வைத்தது.

விஷ்ணுவின் பார்வையில் தடுமாறி, தனது அத்தை மாமாவை கண்களால் காண்பித்து என்ன? என்பதாய் கண்ஜாடை செய்தாள்.

அதில் மேலும் சொக்கியவன் “போய் தலைல இருக்க துண்டை கழட்டி முடியை உலர்த்திட்டு வந்து சாப்பிடு, வெளில போகனும்” என்றான்.

இரண்டுநாள் விஷாலினியோடு இருந்துவிட்டு, பிறகு தனது பெற்றோரோடு மேகலையையும் அழைத்துக்கொண்டு மகாபலிபுரம் சென்று வர திட்டமிட்டிருந்தான் விஷ்ணு. ஆனால் காவ்யா வீட்டிலிருப்பதால் மனைவியோடு தனியே செல்ல முடிவெடுத்தான்.

“எங்க போறோம்?” என்றாள்.

ஆர்வமின்மையோடு விஷாலினி கேட்டது கோபத்தை வரவழைக்க, “ஏன்? சொன்னாத்தான் வருவியோ?” என்றான் முறைப்பாக.

“இல்ல, அத்தை சமையல் செய்தே டையர்ட் ஆகியிருப்பாங்க. நிறைய பாத்திரம் இருக்கு. தேய்க்கனும்” என்றாள்.

மகளை திவாகரோடு பேச வைக்கும் எண்ணமிருக்க, அதற்கு விஷ்ணு வீட்டில் இல்லாமல் இருப்பதுதான் வசதி என்று நினைத்த  பிரபாவதி “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் விஷாலினி, நீ விஷ்ணுவோட போய்ட்டு வா” என்றார் மகிழ்வோடு.

“கல்யாணம் ஆனதுலயிருந்து இன்னும் எங்கேயும் போனதில்லை, இன்னைக்குத்தான் கூப்பிடுறான், போய்ட்டு வா விஷாலினி” என்றார் கோபாலனும்.

சரியென்பதாய் தலையசைத்து உள்ளே தயாராகப்போனாள். உண்டு முடித்து உள்ளே வந்தவன் “உன் அத்தை மாமா சொன்னதுக்காக நீ என்னோட வர வேண்டாம்” என்றான் முறைப்பாக.

“அச்சோ அதில்லைங்க… உண்மையா ரொம்ப டையர்டா இருக்கு” என்றாள் சன்னக்குரலில்.

வசீகரமாக சிரித்தவன், “காலைல எட்டு மணிக்குதான எழுந்த?” என்றான்.

“தூங்கினது இரண்டு மணிக்கு மேல” என்று முறைக்க முயன்று தோற்று தலைகுனிய, அணைத்துக் கொண்டவன் “உன்னோட நிறைய பேச நினைக்கிறேன், ஆனா கை கதவை தாழ் போடவும், உன்னை அணைக்கவும்தான் பரபரக்குது. இங்க இருந்தாலும் நிச்சயம் உன்னை தூங்க விடமாட்டேன். கிளம்பு” என்றான் கொஞ்சலாக.

விஷ்ணு அணைப்பிலிருந்தவள், கணவன் ஆசையை நிறைவேற்றும் எண்ணத்தில் “எனக்கு தூங்க வேண்டாம்” என்றாள்.

அணைப்பை இறுக்கியவன், “அதை நைட்டுக்கு சொல்லு. இப்போ கிளம்பலாம். எனக்கு இப்படி டைம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம். நீயும் சின்ன வயசுலயிருந்து பெருசா எங்கேயும் வெளில போனதில்ல, மகாபலிபுரம்தான் போறோம், ஈவ்னிங் வந்திடலாம்” என்றான்.

காவ்யாவிற்கு மகாபலிபுரம் எத்தனை பிடிக்கும் என்று அறிந்தவள் முகம் வாட்டமாகிட, “என்ன?” என்றான் அதட்டலாக.

காவ்யாவைப் பற்றி நினைத்ததை மறைத்து, “விட்டாதான கிளம்ப முடியும்” என்றாள்.

விடுவித்தவன், “ரொம்ப யோசிக்காத. உன் அத்தை நாம எப்போடா கிளம்புவோம்னு பார்த்திட்டிருக்காங்க. நாம கிளம்பினதும் காவ்யாவை திவாகரோட பேச வைக்கிறதுதான் அம்மாவோட முக்கிய வேலையாயிருக்கும்” என்றான்.

வியந்து விழித்தவள், உற்சாகமாய் கிளம்பி வெளியே வந்தாள். “சாப்பிட்டு போ விஷாலினி” என்று பரிமாறிய பிரபாவதி “நல்லா சுத்தி பார்த்துட்டு மெல்ல வாங்க, அதுக்குள்ள நான் காவ்யாவை அவ புருசனோட பேச வச்சிடறேன்” என்று கிசுகிசுத்தார் மருமகளிடம்.

சரியென்பதாய் தலையசைத்தாள் இன்முகத்தோடு. பின்னே மேகலையிடம் சொல்லி இருவரும் கிளம்பினர் மகாபலிபுரத்திற்கு.

திவாகர் குடும்பத்தோடு வந்து மன்னிப்பு கேட்டு, காவ்யாவை கேட்டதால் விஷாலினி மிகுந்த சந்தோசத்தில் இருந்தாள். “சட்டப்படி டிவோர்ஸ் கிடைக்க இன்னும் நாலுநாள்தான் இருக்குனு நான் கூட ரொம்ப பயந்துட்டேன்ங்க, நல்லவேளை காவ்யாக்காவை கேட்டு எல்லாரும் வந்துட்டாங்க. நீங்க நினைச்ச மாதிரியே அத்தை மாமாகிட்ட அந்தண்ணாவை கெஞ்ச விட்டுட்டிங்க” என்றாள் மகிழ்வோடு.

“அவங்க பேச்சை விடு” என்றான் கடுப்பாக.

“இன்னும் காவ்யாக்கா மேல உள்ள கோபம் குறையலையா?” என்றாள் குரலிறங்கி.

விஷாலினிக்கு பதிலளிக்காமல் கார் ஒட்ட, அவனின் கோப முகம் கண்டு இனி காவ்யாக்கா பேச்சு கூடாது. கோபம் இருந்தாலும் அவங்க வாழ்க்கையை சரி பண்ணிட்டாங்க, கொஞ்சம் கொஞ்சமா காவ்யாக்கா மேல உள்ள கோபம் குறையும் என்று தனக்குத்தானே புத்தியுரைத்தவள், “பைக்ல வந்திக்கலாம்” என்றாள் சன்னக்குரலில்.

தன் கோபம் உணர்ந்து பேச்சை மாற்ற நினைப்பவளை முறைத்தான். விஷ்ணுவை பார்ப்பதும், முகத்தை தாழ்த்துவதுமாக சற்று நேரம் பயணித்தவள், அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “இன்னைக்கெல்லாம் இப்படியேத்தான் இருக்கப்போறிங்களா?” என்றாள் ஏமாற்றமாக.

இவளின் பாவனையில் விஷ்ணுவின் கோபம் காணாமல் போய்விட “என்னைப் பத்தி பேச உனக்கு ஏதும் இல்லையா?” என்றான்.

“நிறைய இருக்கே” என்றவள், “எனக்கு பழைய விஷ்ணுவர்தன் வேணும்” என்றாள்.

விஷாலினி தனது பெயரை உச்சரித்ததும் மனம் குளிர்ந்தது. சில நொடி அதனை அனுபவித்தவன், பிறகு “பழைய விஷ்ணுவர்தனா?” என்றான் புரியாமல்.

“இப்போல்லாம் க்ளீன் சேவ்லதான் இருக்கிங்க. இந்த ஹேர்கட் கூட நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் முன்ன நிறைய முடி வச்சிருப்பிங்க. தாடி வச்சிருப்பிங்க, அது இன்னும் அழகா இருக்கும்”

“என்னை அப்போவே சைட் அடிச்சிருக்க, ஆமாதான?”

“அய்ய… அதெல்லாம் இல்ல, ஆனா என் மாமா பிள்ளைகள் இரண்டு பேரும் ரொம்ப அழகுனு பெருமையா இருக்கும்” என்றாள் உண்மையாக.

“பார்டா” என்று மெச்ச, “எவ்வளோ நேரம் ட்ராவல் பண்ணனும்?” என்றாள்.

“ஏன்? எதாவது வேணுமா?” என்றான் அக்கறையாக.

“இல்லயில்ல, சும்மா கேட்டேன்”

“இன்னும் ஒன் ஹார், தூக்கம் வந்தா தூங்கு”

“தூக்கம் போச்சு” என்றாள் மகிழ்வோடு.

அதன்பின் விஷ்ணு கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபடி பயணித்தாள். காதல் கணவனாக அல்லாமல் பொறுப்பான கணவனாக விஷ்ணுவின் கேள்விகள் இருந்தது. ஆனாலும் கேள்விகள் சுவாரஸியமாக இருக்கவே ஆர்வத்தோடு பதிலளித்தபடி மகாபலிபுரம் வந்திருந்தனர்.

“வந்துட்டோமா? ஒருமணி நேரம் போனதே தெரியல” என்று வியந்தவாறு காரிலிருந்து இறங்கினாள்.

“பசிக்குதா? எதாவது வேணுமா?” என்றான்.

“பசிக்கல, ஆனா அங்க போனதும் தாகமா இருக்கும், தண்ணி மட்டும் எடுத்துக்கலாம்”  என்க, பின் சீட்டிலிருந்து பையை எடுத்துக்கொண்டான்.

அரைமணி நேர நடைப்பயணத்திற்கு பிறகு வியந்து பார்த்தபடி விஷாலினி வர, “என்னடீ அப்படி பார்க்குற? சின்ன வயசுல கூட்டிட்டு வந்திருக்கோமே… கொஞ்சம் கூட நியாபகம் இல்லையா?” என்றான்.

“யானை சிலையை காணோம்?” என்று பார்வையை சுழற்ற, “அது மட்டும்தான் நியாபகம் இருக்கா?” என்றவன், சிற்பங்களின் பெருமையை விளக்கியவாறு மனைவியோடு இணைந்து நடந்து கொண்டிருந்தான்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாகிட, “கால் வலிக்குது” என்றாள்.

“கொஞ்ச நேரம் உக்காரு, கால் மணி நேரம் கழிச்சு கிளம்பலாம்” என்று விஷ்ணு அமர, அருகே அமர்ந்தாள். கோபால் விஷ்ணுவிற்கு அழைத்தார். அழைப்பை ஏற்க, “விஷ்ணு, பின் சீட்ல உன் அம்மா தீணி வச்சிருக்காளாம், பார்த்தியா?” என்றார்.

“பார்த்தேன்ப்பா, கைலதான் வச்சிருக்கேன்”

“சரிப்பா, வைக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தார்.

சிறிது நேர ஓய்விற்கு பிறகு, விஷாலினிக்கு பிடித்த வகையில் புகைப்படங்கள் எடுத்து, பிற்பகல் மூன்று மணிபோல் கிளம்பினர். கால் மணி நேர பயணத்திற்கு பிறகு ஓர் உணவகத்தில் உணவுண்டு மாலை ஆறு மணிபோல் வீட்டிற்கு வந்தார்கள்.

விஷ்ணு அறைக்குள் சென்றிட, பிரபாவதியின் வாட்ட முகம் கண்டு, “என்னாச்சு அத்த?” என்றாள்.

“மேகலைகிட்டதான் பேசிட்டிருக்கா, நீயே போய் என்னானு கேளு” என்றார் பிரபாவதி.

விஷாலினி பதட்டத்தோடு தனது வீட்டிற்கு வர, பின்னோடு வந்த பிரபாவதி “அந்த தம்பிக்கு போன் போட்டு பேசுன்றேன், மாட்டேனுட்டா” என்றார் கோபமாக.

“ஏன் காவ்யாக்கா?”

“என்னை பார்க்க பெங்களூர் போயிருப்பான், போய் நல்லா அலைஞ்சிட்டு வரட்டும்” என்று அன்னையிடம் சொன்ன விசயங்களையே விஷாலினியிடமும் சொன்னாள்.

“இவ்வளோதானா?” என நிம்மதியானவள், “காவ்யாக்கா சொல்றதும் சரிதான்த்த, அஞ்சு வருசமா கண்டுக்காம இருந்துட்டு இப்போ வந்தா… உடனே ஏத்துக்கனுமா?” என்று காவ்யாவிற்காக பேசினாள்.

“நீ இன்னும் கொஞ்சம் ஏத்திவிடாத. போய் குளி” என்றார் மேகலை.

“ம்மா…. டையர்டா இருக்கு” என்றாள் சலிப்பாக.

“உப்புகாத்துக்கு மேலெல்லாம் பிசுபிசுனு இருக்கும். போய் குளி விஷாலினி” என்றார் அதட்டலாக.

“அத்த வீட்டுலயே இருந்திருக்கலாம், எல்லாம் உங்களால காவ்யாக்கா” என்று காவ்யாவை குற்றம் சொல்லி குளிக்க சென்றாள்.

“நான் போய் விஷ்ணுக்கு டீ வைக்கிறேன் மேகலை” என்று கிளம்பினார் பிரபாவதி.

சற்று நேரத்தில் விஷாலினி குளித்து வர, டீ கொடுத்தார். சந்தோச மனநிலையில் இருந்த காவ்யா “சிற்பம்லாம் சௌக்கியமா இருக்கா?” என்றாள் கண்ணிமைத்து.

உரசிக்கொண்டும் இருக்காமல், விலகியும் இல்லாமல் இன்று விஷ்ணு பழகிய விதம் விஷாலினிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவ்வப்போது ரெஸ்ட்ரூம் போகனுமா? எதாவது வேணுமா? என்ற விஷ்ணுவின் அக்கறையில் தன்னை இளவரசியாய் உணர்ந்தாள்.

காவ்யாவின் கேளிக்கு சிரித்தவள், “உண்மையா நான் ரொம்ப கொடுத்து வச்சவள் காவ்யாக்கா. எவ்வளோ கேரிங்கா பார்த்துக்கிட்டார் தெரியுங்களா?” என்றாள் பெருமையாக.

காவ்யா, “விஷ்ணுவைப் பத்தி எனக்கு தெரியாதா?” என்றாள் பெருமையாக.

“பெருமைபட்டா போதாது, நீயும் அப்படி பார்த்துக்கனும், இந்த நைட் டிரஸ்சை கழட்டிட்டு சேரி கட்டு” என்று புடவையை நீட்டினார் மேகலை.

“ம்மா… தூங்கதான் போறேன்” என்று விஷாலினி சலித்துக்கொள்ள, “நீங்க கொடுங்க ஆன்ட்டி” என்று விஷாலினியை அறைக்கு அழைத்து வந்தவள், “என் அண்ணன் அவ்வளோ சலிச்சு போய்ட்டானா?” என்றாள் முறைப்பாக.

“காவ்யாக்கா” என்ற விஷாலினி பதற, அண்ணன் மனைவியை ரசித்தவள் “சாரி கட்டிக்கோ. விஷ்ணு சந்தோசப்படுவான்” என்றாள் அக்கறையாக.

மாலை ஏழு மணிபோல் விஷாலினி வர, மனைவியை புடவையில் பார்த்ததும் புத்துணர்வுகள் பூத்தது விஷ்ணுவர்தனுள். முகத்தில் ஏதும் காட்டாமல் தனதறைக்குள் சென்றுவிட்டான்.

எட்டு மணிபோல் பிரபாவதி சாப்பிட அழைக்க, “சாயங்காலம்தான்த்த சாப்பிட்டோம், பசிக்கல” என்று கோபாலனோடு அரட்டையை தொடர்ந்தாள்.

விஷ்ணு “கால் வலிக்குதுனு சொன்னதான? சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு” என்று அதட்டி தானும் அமர்ந்தான் உணவுண்ண.

விஷ்ணு உண்டு முடித்து அறைக்கு சென்றிட, கோபாலன் பிரபாவதி உண்டு முடித்ததும், டேபிளில் இருந்த பார்த்திரங்களை எடுக்கப்போனாள்.

விஷ்ணு உள்ளே சென்றதால் விஷாலினியிடம் வந்த காவ்யா, “நீ போ… நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

உள்ளே சென்றால் மீண்டும் வெளியே வர அனுமதிக்கமாட்டான் ஆகையால், இந்த நேரமே அறைக்குள் போக விஷாலினிக்கு சங்கடமாகிட தயங்கி நின்றாள். காவ்யா “ப்ச் போ விஷாலினி” என்றாள் அதட்டலாக.

“உங்கண்ணன் மாதிரியே மிரட்டுறிங்க” என்று பிணங்கியபடி உள்ளே வந்தாள் விஷாலினி.

“ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தோம். ஏழு மணி வரைக்கும் கண்லயே படல” என்று முறைத்தபடி கதவை தாழிட்டான் விஷ்ணுவர்தன்.

“மகாபலிபுரம் பத்தி ஆசையா அம்மாகிட்ட சொல்ல போனேன், அதைப்பத்தி அப்புறம் பேசலாம், போய் குளினு பிடிவாதம். குளிச்சு சாரிகட்டி வர லேட்டாகிடுச்சு” என்றபடி கட்டிலில் அமர்ந்தாள்.

காவ்யா பற்றி விசாரித்திருப்பாள், ஆனால் தன்னிடம் மறைக்கிறாள் என்று மெச்சுதல் பார்வையோடு நெருங்கியவன்,  “ஒரு மணிநேரமா குளிச்சியா?” என்று வாசம் பிடித்தான்.

கணவனின் தாபம் உணர்ந்து, “நானாவது வரும்போது தூங்கினேன், உங்களுக்கு ரெஸ்ட்டே இல்ல” என்றாள் தவிப்பாக.

“எனக்கு டையர்டாவே இல்லையே” என்று அணைத்தவன், “உனக்கு டையர்டா இருக்கும்னு எனக்கு புரியுது. அதுக்காக உன்னை ரெஸ்ட் எடுக்க விடுற அளவுக்கு நான் நல்லவன் இல்லை. வேணும்னா முயற்சி செய்து கொஞ்சம் சீக்கிரம் பனெண்டு மணிக்குள்ள தூங்க விடறேன்” என்றான் கொஞ்சலாக.

அணைத்திருந்த கணவனை தானும் அணைத்துக்கொள்ள, மேலும் இறுக்கியவன் புடவை பின்னை அகற்ற முயற்சிக்க, “லைட்” என்றாள் காற்றோடு கரைந்த குரலில்.

“அணைச்சே ஆகனுமா?” என்றான் புன்னகையோடு.

விஷாலினி பேரதிர்ச்சியோடு பார்க்க, “சரி ஆஃப் பண்றேன்… ஷாக்கை குறை” என்று எழுந்து விளக்கணைத்து வந்தவன், மனைவியையும் அணைத்து தன் வசமாக்கும் செயலை துவக்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!