Skip to content
Post Views: 5,815
மாப்பிள்ளை வீட்டார் அஞ்சனாவை பெண் பார்த்து சென்று இருபது நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. நடுவில் மார்கழி மாதம் வந்ததால் அது கழித்து நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம் என பெரியவர்கள் பேசி முடிவெடுத்திருந்தனர்.
ஜெகன் அஞ்சனாவிடம் போன் நம்பர் வாங்கியிருந்தாலும், போனெல்லாம் செய்யவில்லை. வாட்சப்பில் எப்போதாவது பார்வேட் மெசேஜ் எதையாவது அனுப்புவான். அஞ்சனா அதனை பார்ப்பதோடு சரி, ரிப்ளை எதுவும் செய்யமாட்டாள்.
ஒரு நாள் காலையிலேயே ஜெகன் அஞ்சனாவிற்கு கால் செய்திருந்தான்.
அஞ்சனா, “ஹலோ……”
Advertisement
“ஹாய்….. அஞ்சனா….. தூங்கிட்டிருந்தியா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா……?”
திரும்பி கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் காலை 7 மணி. “ம்கூம்… இல்ல…. சொல்லுங்க….”
“எப்படியிருக்கே……?”
Advertisement
“ஹ்ம்ம்…. குட்….”
Advertisement
“திரும்ப நான் எப்படியிருக்கேன்னு கேட்க மாட்டியா…..?”
ம்ப்ச்…. என சலித்தவள், “எப்படியிருக்கீங்க…?” என்றாள்.
எதுக்கு இப்ப இவன் இவ்வளவு காலையிலே கால் பண்ணியிருக்கான் என சிந்தனை சென்றது அவளுக்குள்.
Advertisement
“பைன். எனக்கு உன்னோட லொக்கேஷன ஷேர் பண்ணு….. கொஞ்சம்”
கேள்வியாக நெற்றியை சுருக்கியவள், “லொக்கேஷனா… எதுக்கு…..?” என இழுத்தாள்.
“நான் இப்ப பெங்களூர்லதான் இருக்கேன். பெங்களூர் எர்போர்ட்லதான் நிக்கறேன்”.
பதற்றத்தில் “அய்…..யோ….” என்று விட்டு நாக்கை கடித்துக்கொண்டு தலையை தட்டிக்கொண்டாள். இப்படியா வெளிய கேக்கற மாதிரி கத்தி வைப்ப… என மனதிலேயே அலுத்துக்கொண்டவள்,.
“ஹேய்… என்னாச்சு….?”
“இல்லல்ல… ஒன்னும் இல்ல. பெங்களூர்ல….யா….. இங்கயா இருக்கீங்க….? இங்க ஏன்….? ஏதாவது வேலையா வந்தீங்களா…. ன்னு கேட்டேன்..”.
“வேலையாவா…. ஹா….. ஹா…. நல்லா கேட்ட போ. உன்னை பார்க்கதான் வந்திருக்கேன்”.
“என்னைப் பார்க்கவா….?”
“ஹ்ம்ம்… உன்னைப் பார்க்கதான்….. சர்ப்ரைஸா உன் முன்னாடி வந்து நின்னு, உனக்கு ஷாக் குடுக்கனும்னு… ஆசைப்பட்டேன். ஆனால் முடியல. எனக்கு, நீ எங்க… ஸ்டே பண்ணியிருக்கேன்னு தெரியாததால, உனக்கு போன் பண்ணவேண்டியதா போயிடுச்சு…”
“இங்கயா….?” என அதிர்ச்சியானவள், தடுமாற்றத்துடன், தயங்கிக்கொண்டே மெல்ல “அ……து கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரியெல்லாம் பார்க்கறதுக்கு எங்க வீட்ல அலோவ் பண்ண மாட்டாங்க….. அப்பாக்கு தெரிஞ்சா…., ஏதாவது சொல்வாங்க…” என்றாள்.
“ஹா… ஹா…. எந்த காலத்துல இருக்கே அஞ்சனா…. நீ….? அவனவன் கல்யாணத்துக்கு முன்னாடி…, என்னென்ன பண்றான்.., நான் ஜஸ்ட் உன்னைப் பார்த்து பேசகூட கூடாதா…? எந்த ஊர்ல இருக்கீங்க… நீ உங்க அப்பா எல்லாம்…” என்றான் கிண்டலாக.
அவள் அதற்கு ஒன்றும் சொல்லாமல் போனில் மௌனமானதை அடுத்து, “எவ்வளவு நேரம் இப்படி போன்லயே காக்க வைப்பே அஞ்சனா….., அட்ரஸை அனுப்பு. இல்ல லொக்கேஷன் ஷேர் பண்ணிவிடு. காலையிலேயே டென்ஷன் பண்ணாத…..” என எரிச்சலானான்.
அவன் பேசியும் அவளுக்கு மனமில்லை லொக்கேஷன் ஷேர் செய்ய. இது என்னடா தலைவலி எனதான் இருந்தது. வேல்முருகனும் நிச்சயம் இதற்கெல்லாம் ஒத்துக்கொள்வாரா என்பது சந்தேகமே. எத்தனை நாகரிகம் வளர்ந்திருந்தாலும், இன்னும் இதிலெல்லாம் அவர்கள் பழைய காலத்தவர்கள்தான். தந்தை ஏதாவது சொல்லவாரோ என்ற பயம் ஒரு பக்கம் என்றால், நாச்சியப்பனும் பிரேமாவும் இவனைப் பார்த்தால் ஏதாவது நினைப்பார்களோ… என தயக்கமும் இருந்தது.
மெல்ல தயங்கிக்கொண்டே ஜெகனிடம், “அப்பாவோட சம்மதம் இல்லாம…. இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி நாம மீட் பண்றது எல்லாம் வேணாமே. வீட்ல ஏதாவது சொல்வாங்க…. ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலான குரலில் பவ்யமாக, அவனுக்கு புரியவைத்துவிடும் நோக்கில்.
அவனுக்கோ கடுப்பானது இவளது வார்த்தையில், “ம்ப்ச்…. எரிச்சல் பண்ணாத அஞ்சனா. இப்படியே……, போன்ல பேசியே என்னை திருப்பி அனுப்பிடனும்னு உனக்கு ஐடியா இருக்கா…. என்ன…?”
“இல்லல்ல…, நான் அந்த மீனிங்ல சொல்லல. அங்க… எங்க வீடுன்னா பிரச்சினையில்ல, பெரியவங்க எல்லாம் இருப்பாங்க. அது வேற. ஆனால் இங்க அப்படியில்லையே. ஸாரி… தப்பா எடுத்துக்காதீங்க….. இங்க நான் மட்டும் தனியா இல்ல. என்கூட என்னோட பிரண்டும் தங்கியிருக்காள்….”
“பரவாயில்ல நீ அட்ரஸ குடு. அங்க வந்து நான் உன்னை ஒன்னும் கடிச்சு தின்னுட மாட்டேன். உன்னைப் பார்க்கனும்னு எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா….. இரிட்டேட் பண்ற நீ….”
………………….
“என்ன…. அஞ்சனா……? இல்லாட்டினா……. ஏதாவது ஒரு பிளேஸ் சூஸ் பண்ணி சொல்லு. நான் அங்க வெயிட் பண்றேன்…., நீ வா….”
“ஆபிஸ்க்கு கிளம்பிட்டிருக்கேன். இன்னைக்கு எனக்கு ஆபிஸ் இருக்கு….”
“என்னை…. டென்ஷனாக்குற…… நீ…..” என வார்த்தையை கடித்து துப்பியவன், “ஒழுங்கா அட்ரஸ… அனுப்பு” என போனை வைத்துவிட்டான் கோவமாக.
இதற்குமேல் ஏதும் செய்யமுடியாமல்…. அவளது லொகேஷனை ஷேர் செய்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த நிஷாவை உலுக்கி எழுப்பியவள், விஷயத்தை அவளிடம் கூறினாள்.
“ஹேய்…. என்னடி…. நீ… பாட்டுக்கு வரசொல்லிட்ட. உங்கப்பாகிட்ட அவர பேச சொல்லவேண்டியது தான. இல்ல நீயாவது மாமாக்கு கால் பண்ணி விஷயத்தை… சொல்லியிருக்கனும். இரண்டும் இல்லாம… இவர் பாட்டுக்கு இப்படி திடுதிப்புன்னு வந்து நின்னா…?, கீழ நாச்சியப்பன் அங்கிள் பார்த்தாங்கனா….. என்ன சொல்றது….?
“எனக்கும் ஒன்னும் புரியலடி… என பாவமாக நிஷாவைப் பார்த்தவள், என்னை பொண்ணு பார்த்துட்டு போன விஷயமே, இன்னும் அங்கிள் வீட்டுக்கு தெரியாது. அப்பா கன்பார்ம் ஆனதும் நானே பேசிக்கறேன். இப்ப நீ எதுவும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க என்கிட்ட”.
…………………………
“இவர்வேற போன்ல டென்ஷனா பேசனதும்…. நானும் லொக்கேஷன் ஷேர் பண்ணிட்டேன்”.
“நல்ல ஆளை பிடிச்சாருடி…. உங்க அப்பா. கல்யாணத்துக்கு முன்னமே இந்த போடு போடறாரு….”
“இப்ப என்ன பண்றது… அதை சொல்லுடினா…. கதை பேசிட்டிருக்க…”
“என்ன பண்றது…? அதான் அட்ரஸ ஷேர் பண்ணிட்டியே. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து குதிக்க போறார் உன் மாப்பிள்ளை…..”
“கிண்டல் பண்ணாதடி….. நானே பயத்துல பக்… பக்னு டென்ஷனா இருக்கேன்”.
“ஈசி அஞ்சு. பாத்துக்கலாம் விடு. இப்ப எதுக்கு இங்க வராராம்…..?”
“அதான் சொன்னேனே, என்னைப் பார்க்கனும்னு வராருன்னு…”
“ஹ்ம்ம்….”
“பயமாயிருக்குடி……”
“ஆளப்பாரு. இந்நேரம் நீ லவ் சாங் மோடுக்கு போயி டூயட் பாட வேணாமா…?” என்றாள் கிண்டலாக நிஷா.
“அப்படியே ஒன்னு வச்சேன்னா தெரியும். நானே இங்க டென்ஷனாயிருக்கேன்….”
“எதுக்கு பயப்படுறே…..? கூல்….” என பாத்ரூம் எழுந்து செல்ல போனவள் நின்று, “அஞ்சு எனக்கு, ஒரு கப் காபி…” என்றாள்.
“அதான….. எவள் என்ன ஆனா…. உனக்கென்ன…..? உன் வேலைதான் உனக்கு முக்கியம்….”
“ச்ச… ச்ச….. அப்படி சொல்லாத… காலையில உன் கையால காபி குடிச்சாதான்…., இந்த நாள் இனிய நாளாகும்’’ என்றாள் சிரித்துக்கொண்டே… கண்ணிமைத்து.
“போடி… நீ வேற… நேரங்காலம் தெரியாம விளையாடிட்டு…..”
“சரி விடு. உனக்கும் சேர்த்து நான் காபி போடுறேன்”.
“அய்ய…. நீ போடற காபிக்கு…., நானே போட்டுடுவேன்…..” என்று எழுந்து கிட்சன் சென்றாள்.
நிஷாவும் எழுந்து பாத்ரூம் சென்றாள். அஞ்சனா ஏற்கனவே குளித்துவிட்டு கிட்சனுக்குள் சமைப்பதற்காக வரும்பொழுதுதான் ஜெகனின் போன் வந்திருந்தது.
இப்போது கிட்சனுக்கு சென்றவள்….. அவசர அவசரமாக தயிர் சாதம் மட்டும் செய்து… காலையில் சாப்பிடுவதற்கு…. இட்லி வேக வைத்து….. சட்னி அரைத்தாள்.
அதற்குள் நிஷாவும் குளித்து வந்திருந்தாள். பாலை காய்ச்சி சூடாக வைத்திருந்தவள், நிஷாவுக்கும் தனக்கும் காபி சேர்த்தாள். அஞ்சனா கொடுத்த காபியை வாங்கிய நிஷா அதனை ரசித்து ருசித்து குடிக்க ஆரம்பித்தாள்.
“ம்ம்ம்ம்ம்……. என்ன சொல்லு இந்த காபியில இருக்க சுகமே… தனிதான். சான்ஸே இல்ல. இந்த காபி டேஸ்டுக்கு……. என் நாக்கு அடிமை…..”
“எங்கேருந்துடி…. கத்துகிட்ட…..? இப்படி பேச…. நாக்கு… மூக்குன்னு…”
அதற்குள் அஞ்சனாவின் போன் ரிங்கானது. ஜெகன்தான் போன் செய்திருந்தான்.
அஞ்சனா. “ஹலோ…….”
“நீ அனுப்புன லொகேஷனுக்கு வந்துட்டேன். வீடு பூட்டியிருக்கு”.
“பூட்டியிருக்கா…. என வெளியே வந்தவள், கடகடவென்று கீழே இறங்க ஆரம்பித்தாள் வேகமாக. ஜெகன் நாச்சியப்பன் வீட்டின் முன்னே நின்று கொண்டிருந்தான் போனைக் காதில் வைத்துக்கொண்டு.
அச்சோ மேல வீடுன்னு… சொல்ல மறந்துட்டேன்…. என தலையில் தட்டிக்கொண்டவள், அப்பொழுதுதான்.., நாச்சியப்பனின் வீடு பூட்டியிருப்பதை கவனித்தாள். எங்க போயிருக்காங்க…..? என யோசனையுடன் ஜெகனை நோக்கி வந்தாள்.
அவளைப் பார்த்தவனின் முகம் சட்டென பிரகாசமாகியது. பார்வை முழுவதும் அஞ்சனா மீதுதான். தலைமுடியை தூக்கி உச்சியில் கொண்டையிட்டு, த்ரீபோர்த் டீ…. சர்ட்டில் இருந்தவளை மையலுடன் ரசனையாக…. பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
அவனது பார்வையை உணர்ந்தவள்… அச்சோ டிரஸ் மாத்தனும்னு நினைச்சேன்… இருந்த டென்ஷன்ல மறந்துட்டேனே… என மானசீகமாக தலையை தட்டிக்கொண்டாள்.
“மேல வாங்க…. இது ஹவுஸ் ஓனர் வீடு. நாங்க மேல இருக்கோம்…” என அவனை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.
வீட்டிற்குள் அவனை அழைத்து வந்தவள் உட்கார வைத்து, தண்ணீர் கொடுத்தாள் குடிப்பதற்காக.
அதற்குள் நிஷாவும் வரவே அவளையும் ஜெகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“பேசிட்டிருங்க இப்ப வந்திடறேன்…… என அறைக்குள் சென்றவள் அணிந்திருந்ததை மாற்றி காட்டன் சல்வார் அணிந்துகொண்டு வந்து நின்றாள். அவள் பட்டென்று சென்று உடை மாற்றி வந்தது அவனுக்கு சங்கடமாக இருந்தாலும் வெளியில் சொல்லவில்லை ஏதும்.
உட்கார்ந்த இடத்திலிருந்தே கண்களால் வீட்டை பார்வையிட்டவன், “ம்ம்…. நாட் பேட்…. இன்னும் நல்லதா….. லக்ஸரி அப்பார்ட்மென்ட் மாதிரி எடுத்துருக்கலாம் இல்ல. சிங்கிள் ரூம்தான் இருக்கா…? அதையே இரண்டு பேரும் ஷேர் பண்ணிக்கிறீங்களா….?” என்றான் கேள்வியாக
வந்ததிலிருந்து அவனது ஒட்டாத பார்வையும்…, பேச்சும்… நிஷாவுக்கு உள்ளுக்குள் எரிச்சலைக் கிளப்பியது. நாங்க ஒன்னா ஸ்டே பண்ணியிருந்தா இவருக்கு என்ன வந்தது என கடுப்பாக இருந்தது. இருந்தாலும் தோழிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்பதால்… அமைதியாக நின்றிருந்தாள்.
அஞ்சனா, “என்ன சாப்பிடறீங்க….? காப்பி…. டீ… ஏதாவது சாப்பிடறீங்களா…?”
வீட்டைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த அவனது கண்கள்… இப்போது அஞ்சனாவை நோக்கியது. எந்த டிரஸ் போட்டாலும் இவளுக்கு சூட் ஆகுது. இதுல கூட அழகாதான்… இருக்காள்.
“வேண்டாம் என தலையசைத்தவன், நீ கிளம்பி வா… நாம எங்கயாவது வெளியே போய் சாப்பிட்டுக்கலாம்”.
இத்தென்னடா…. தலைவலி…. இவன் சொல்லாம கொள்ளாம வந்ததும் இல்லாம…, இந்த பாடு படுத்தறானே… என்று இருந்தது அஞ்சனாவுக்கு.
“அதா…ன் முன்னமே சொன்ன…னே. எனக்கு ஆபிஸ் இரு…க்கு……”
“இருக்கட்டும். எனக்கு மட்டும் ஆபிஸ் இல்லையா….? நானும் லீவ் போட்டுட்டுதானே வந்திருக்கேன். உன்னை பார்க்கனும்றதுக்காக… வந்திருக்கேன். நீ என்னடான்னா….. ஒரு ஹாப்… டே லீவ் போடவே யோசிக்கறே”.
இவனுக்கு என்னத்த சொல்லி புரியவைக்குறது. என் கஷ்டம் எனக்கு. இனிமே ஆபிஸ்ல லீவ் எடுத்தேன்னா… என்னை மொத்தமா…… வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இவன்கிட்ட சொன்னாலும் புரிஞ்சுக்கமாட்டான்… என அயர்வானது உள்ளுக்குள்.
“என்ன யோசனை…, சீக்கிரம் கிளம்பு. கீழ கேப் வெயிட்டிங்ல இருக்கு…”
நிஷா திரும்பி அஞ்சனாவைப் பார்த்தாள். பார்க்கவே பாவமாக இருந்தது அவளுக்கு. அஞ்சனா திருதிருவென முழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“இல்…..ல, லீவ் போட முடியாது. ஏற்கனவே இருக்கற லீவ் எல்லாம் எடுத்துட்டேன்…” என்றாள் தயக்கமாக அவன் புரிந்துகொள்ள வேண்டுமே என்ற நோக்கத்துடன்.
“ஜஸ்ட் ஹாஃப்….. டே கூட போடமுடியாதா………?”
“அ…து…” என தடுமாறி கையை பிசைந்து கொண்டிருந்தாள்.
“ம்ப்ச்.. ஒரு ஹாஃப் டே லீவ் போட இவ்வளவு யோசிக்கறே. இதுக்கு தான்… கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக வேணாம்னு பீல் பண்ணேன்”.
இவன் என்ன லூசா…. என்னவோ கட்ன புருஷன் மாதிரி… இங்க வந்து சட்டமா… கால்மேல கால் போட்டு உட்கார்ந்துட்டு, நாட்டாமை பண்ணிட்டிருக்கான். இவளும் பொறுமையா பதில் சொல்லிட்டிருக்காள்….. என பொறுமியது நிஷாவுக்கு உள்ளுக்குள்.
வெளியே எல்லாம் வரமுடியாது. எதாயிருந்தாலும் வீட்ல பெரியவங்ககிட்ட பேசுங்கன்னு சொல்லவேண்டியதுதான…. இன்னும் நிச்சயம்கூட ஆகல. அதுக்குள்ள என்னமா சலிச்சுக்கறான்…. என்ற எண்ணம் நிஷாவுக்கு.
“ஸாரி…. என்னால லீவ்லாம் போட முடியாது. நீங்க முன்னமே சொல்லியிருந்தீங்கனா… நான் உங்களை வரவேணாம்னு சொல்லியிருப்பேன்….” என இழுத்தாள் அஞ்சனா.
அஞ்சனாவின் பேச்சைக் கேட்டதும் ஜெகனுக்கு கோவம் வந்தது. நிஜமாகவே அவன் அஞ்சனாவைப் பார்க்கவேண்டும்…, அவளுடன் டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டும் என்னும் ஆர்வத்தில்தான் வந்திருந்தான்.
அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்று அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென்பதுதான் அவனது ஆசை. அவனிடம் அஞ்சனாவின் முகவரி இல்லாததால்…, அவளுக்கு போன் பண்ணி கேட்கவேண்டியதாக இருந்தது.
பெங்களூர் வந்து இறங்கியதிலிருந்து…, அஞ்சனாவின் பேச்சைக் கேட்டதில் இருந்து, அவனுடைய சந்தோஷம்…, எதிர்பார்ப்பு எல்லாம் தரைமட்டமாக புஸ்வானம்…. ஆகியிருந்தது.
ஏர்போர்ட்டிலிருந்து அஞ்சனாவிடம் பேசும் போதும் சரி…. இங்கு வந்து நேரில் பார்த்த பிறகும் சரி…. அவன் அவளிடம் எதிர்பார்த்த எந்த ஆசையான ரியாக்ஷனும்…., உற்சாகமும்… அவளிடம் இல்லை. ஏன் ஆசையாக ஒரு பார்வைகூட இல்லை அவளிடம்.
ஜெகனுக்கு எரிச்சலாக வந்தது. என்ன நினைச்சிட்டிருக்கா இவள்? இவளைப் பார்க்கனும்னு என்னோட வேலையெல்லாம் ஒத்திவச்சுட்டு இங்க வந்தா…. இவள் என்னவோ….. ஹாஃப்டே லீவ் போடறதுக்கு இந்த அலட்டு அலட்டிக்கிறா…. என கோவம் வந்தது மனதில்.
இதற்குள் நிஷா…. ஆபிஸ்கு நேரமாவதை உணர்ந்து… அஞ்சனாவை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு…. அறைக்குள் சென்றுவிட்டாள்.
ஜெகனுடைய வாழ்க்கை முறையே வேறு. ஹைசொசைட்டியை சேர்ந்த பழக்கவழக்கங்களுடன் கூடிய அவர்களுடைய வாழ்க்கைமுறையில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.
அவனுடைய சமூகத்தினரிடையே… டேட்டிங் செல்வது, பார்ட்டிக்கு போவது…, டிஸ்கோத்தே போவது… எல்லாம் இயல்பானது.
ஆனால் அஞ்சனா மாதிரியான கட்டுக்கோப்பான குடும்பத்தினருக்கு.., இன்னும் இதை எல்லாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.
“என்ன அஞ்சனா…., யோசிச்சிட்டே நின்னிட்டிருக்கே…..? சீக்கிரம் கிளம்பு…”
“இடைப்பட்ட நேரத்தில் அஞ்சனாவுக்கு திடம் வந்ததுபோல மனதில். தைரியத்தைகூட்டி, “ஸாரி…. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி உங்ககூட சேர்ந்து வெளியில வரதுல எல்லாம் எனக்கு இஷ்டம் இல்ல. நீங்க எதுவாயிருந்தாலும் அப்பாகிட்ட பேசிக்குங்க. எனக்கு டைமாயிடுச்சு… நான் வேலைக்கு கிளம்பனும். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க……” என்றாள் நேரான பார்வையுடன்.
அவளையே…… விடாமல் சில நிமிடம் உறுத்து பார்த்தவன்…., “அப்ப என்னை நீ வெளியில போடான்னு… மறைமுகமா சொல்றே….” என்றான் முகமெல்லாம் கசந்து.
“நான் அப்படி சொல்ல வரல. என்னோட சுட்சுவேஷன புரிஞ்சுக்கோங்க. நீங்க இப்படி சொல்லாம கொள்ளாம திடுதிடுப்புன்னு வந்து நின்னு, கூப்பிட்டா…. நான் என்ன பண்ண முடியும்…?”
“சொல்லிட்டு வந்து கூப்பிட்டா மட்டும்…, கூப்பிட்டவுடனே கிளம்பி வந்துட போறியா…? அப்பயும் இதே பதிலைதான் சொல்லியிருப்ப. என்ன கொஞ்சம் மாத்தி வேற மாதிரி மறுத்திருப்பே….” என நக்கலாக கூறியவன்,
“பார்க்கறேன்…. இன்னும் எவ்வளவு நாள் நீ இப்படி மறுத்து பேசுவேன்னு… சரி வா…” நான் உன்னை ஆபிஸ்லயாவது ட்ராப் பண்றேன்… என்றான் விடாக்கண்டனாக.
கடவுளே… என மனதில் சலித்தவள், “என் பிரண்ட் எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கா… நான் அவள்கூட சேர்ந்து போயிக்கறேன். நீங்க கிளம்புங்க. அவள் இல்லாம என்னால தனியாலாம் வரமுடியாது…” என்றுவிட்டாள் பட்டென்று.
ஜெகனுக்கு அவமானமாக போனது அஞ்சனாவின் பதிலில். நிஷா அறையில் இருந்தாலும் இவர்கள் பேசியது எல்லாம் அவள் காதில் நிச்சயம் விழுந்திருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு. உண்மைதான். அவளுக்கும் கேட்டது இவர்கள் பேசியது எல்லாம்.
அதுவும் நிஷாவை வைத்துகொண்டு இவள் இப்படி மறுத்து பேசியது…. அவனது ஈகோவை வேறு கிளப்பி விட்டிருந்தது. இதற்கா…. அவன் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு விழுந்தடித்து கொண்டு ஒடிவந்தான்.
அவன் கட்டிவந்த மனகோட்டை என்ன…? கண்ட கனவு என்ன……? இங்கு நடந்துகொண்டிருப்பதென்ன….? அவனது எதிர்பார்ப்புகள் அத்தனையும் உடைந்து தூள்தூளாகி சிதிறியிருந்தது அஞ்சனாவின் எதிரில்.
எதிரில் நிற்பவளை பார்வையால் எரிக்க மட்டுமே முடிந்தது அவனால். இவள் என்ன பெரிய உலக அழகியா…? இந்த அலட்டு அலட்றா…. பேசாம இவள் வேணாம்னு…. கல்யாணத்தை நிறுத்திடலாமா என கண்மூடித்தனமான ஆத்திரம் மூண்டது மனதில்.
இந்த மாதிரியான நாட்டுபுறத்த கட்டிட்டு, காலம் முழுக்க இவள்கூட நான் போராட முடியுமா… என எண்ணம் வந்தது மனதில். அவனுக்கு திருமணத்திற்கு பின் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஃபங்ஷன்… பார்ட்டி… கிளப்… என பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். அங்கெல்லாம் இந்த மாதிரி வந்து எல்லாத்துக்கும் மறுத்து பேசி…, முகம் சுளிச்சுட்டிருந்தா…. என் பிரண்ட்ஸ் முன்னாடி… எனக்குதான் அவமானம் என வேகமாக எண்ணங்கள் குவிந்த வண்ணம் இருந்தது ஜெகனுக்குள்.
இவள் நமக்கு ஓகேதானா…? இப்பயே இப்படி பேசறா…. என பலதையும் அவன் மனது சிந்தித்து சரிபார்க்க ஆரம்பித்திருந்தது. இத்தனையும் அவன் முன் எழுந்து அவனை குழப்பினாலும்…, இறுதியில் அவன் மனம் அஞ்சனாவின் முன்தான் நின்றது. என்னவோ அவனுக்கு அவளை பிடித்துவிட்டது. அஞ்சனாவை இழக்கவும் மனமில்லை. அதற்கு அவளது அழகுகூட ஒரு காரணமாக இருக்கலாம். ஏற்கனவே தன்னுடன் அவளை சேர்த்து பார்த்து கனவு கண்டு கொண்டிருப்பவனுக்கு அவளை மிஸ் செய்யும் எண்ணம் வரவில்லை.
அவளையே ஆராய்ச்சியாக பார்த்திருந்தவன்… மௌனமாக எழுந்து நின்றான். அறையின் கதவு மூடியிருக்கிறதா என பார்த்தவன்…, மெல்ல அஞ்சனாவை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்.
அதற்குள் அஞ்சனா பதட்டமாகி….. பின் பக்கம் நகரத் துவங்கினாள்.
அவள் பின்பக்கம் நகரத் துவங்கியதைப் பார்த்தவன்.., ம்கூம்…. இவளை மாத்தறது ரொம்ப கஷ்டம் என நொந்துகொண்டு…… கோவத்தில் சொல்லிக் கொள்ளாமல் கூட வேகமாக சென்றுவிட்டான்.
கீழே இருந்து கார் கிளம்பி செல்லும் ஓசை கேட்டதிற்கு பின்புதான் அஞ்சனாவிற்கு முகமே தெளிந்தது. மூச்சை இழுத்துவிட்டவள் தொப்பென்று அங்கேயே உட்கார்ந்துவிட்டாள் அயர்ச்சியுடன்.
அவளுக்கும் உள்ளுக்குள் சங்கடம்தான், மறுத்து பேசியதை நினைத்து. அவளுக்கும் புரியும் இந்த காலத்தில் இது எல்லாம் சகஜம் என்று. ஏனோ கல்யாணம் பேசியதிலிருந்தே அவளுக்கு எந்த ஈடுபாடும் வரவில்லை அவன்மேல்.
ஜெகனைப் பிடித்திருக்கிறதா… என தந்தை கேட்கும் போது எந்த ஆர்வமும் இல்லாமல்தான் தலையசைத்திருந்தாள். ஜெகன் மீதான எந்த ஈர்ப்பும் இதுவரை வந்தபாடில்லை. அவள் அதைபற்றி பெரிதாக யோசித்ததில்லை. இத்தனைக்கும் ஜெகன் அழகன்தான். இவளுக்குதான் ஏனோ நாட்டமில்லாமல் இருந்தாள்.
“எல்லோருக்கும் இப்படிதான் இருக்குமா…..? இல்லை எனக்குமட்டும்தான் இப்படியா….? ஒரு பீலிங்கும் வரமாட்டேனுதே….? கடவுளே…. என புலம்பியிருக்கிறாள் சில சமயம்.
இதோ இப்பவும் அதே நினைப்புடன், ஒருவேளை எனக்கு இவன பிடிக்கலையோ….? அதான் எந்த ஆர்வமும் வரமாட்டேனுதோ… என்ற குழப்பம்தான்.
ஏன் பிடிக்கல…? நல்லாதான இருக்கார்…? வசதி…, வேலை எல்லாமே இருக்கு. அப்புறம் ஏன் பிடிக்கல…? எனக்கு இவரை பிடிக்கலைன்னு சொல்றதுக்கு என்ன ரீசனும் இல்லை. அப்பா சொல்றமாதிரி………. எல்லா வகையிலயும் பொருத்தமாதான இருக்காரு. அப்புறம் ஏன் அவர் மேல எனக்கு அட்ராக்ஷனே வரல….”
நேரமாவதை உணர்ந்து வெளியில் வந்த நிஷா அஞ்சனா இரண்டு கைமுட்டியையும் தொடையில் வைத்து அழுத்தி, உள்ளங்கையால் கன்னத்தை தாங்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்.
எந்த கோட்டைய பிடிக்க இப்படி உட்கார்ந்திருக்கா…., “எங்கடி… உன் மாப்பிள்ளை…. போயிட்டாரா…?” என்றாள் நிஷா.
உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்களை மட்டும் உயர்த்தி நிஷாவைப் பார்த்தவள் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆம் என்றாள்.
“நான் ஒன்னு கேட்கவா……? உன்கிட்ட…..”
நீயுமா….? கேளு என பார்த்தாள் நிஷாவை.
“உனக்கு இவர பிடிச்சிருக்கா…..?”
ம்ப்ச்…. அததான் நானும் யோசிச்சிட்டிருக்கேன். இவவேற…. உதட்டைப் பிதுக்கினாள்… தெரியாது என விட்டேத்தியாக.
“என்ன பதில் இது அஞ்சனா….? விளையாடாத….. சீரியஸா கேட்கறேன். ஒழுங்கா பதில் சொல்லு…”
“ம்ப்ச்… நிஜமாவே தெரியலடி…. நானும் அதைதான் திங்க் பண்ணிட்டிருக்கேன்….”
“என்ன பேசற அஞ்சு. இது விளையாட்டு இல்ல. உன்னோட வாழ்க்கை. உனக்கு மட்டும் இல்ல. ஜெகனோட வாழ்க்கையும் இதுல அடங்கியிருக்கு. எதுவாயிருந்தாலும்…. நல்லா யோசிச்சு முடிவெடு. பின்னாடி பீல் பண்ண கூடாது…”.
………………………..
“அவரும் வீட்டுக்கு தெரியாம….. நிச்சயத்துக்கு முன்ன உன்னை பார்க்க வந்தது தப்புன்னுதான் சொல்வேன். தப்புன்னுகூட சொல்ல முடியாது. இந்த காலத்துல இது எல்லாம் சாதாரணம். ஏன் நாம வேலை செய்யற இடத்துல இதெல்லாம் பார்க்கறதில்லையா….?”
“ஆனால் நமக்கு இதெல்லாம் பழக்கமில்லை. கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்துக்கறது, பழகறது எல்லாம் இன்னும் சாதாரணமில்ல. இவர் சென்னையில இருந்து…. நிச்சயத்துக்கு முன்னாடியே… பெங்களூர்க்கு உன்னைத்தேடி வந்ததுதான், கொஞ்சம் உறுத்தலா இருக்கு மனசுக்குள்ள”.
“அட்லீஸ்ட்….. அவர ஆபிஸ்ல ட்ராப் பண்ணவாவது நீ அலோவ் பண்ணியிருக்கலாம்…”
“விருப்பம் இல்லாம எப்படி போக சொல்றே….?” என முறைத்தாள் அஞ்சனா.
“இததான் சொல்றேன். அவர் முகத்தை பார்த்தாலே தெரியுது. உன்னை அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு. நீதான் ஏனோ தானோன்னு இருக்க… இன்ட்ரெஸ்டே இல்லாம, விளையாடாம ஒழுங்கா யோசிச்சு முடிவெடு”.
“நிஜமாவே எனக்கு தெரியலடி. நான் யோசிக்கறது சரியா… எனக்கு ஏன் எந்த ஆர்வமும் வரமாட்டேன்னுதுன்னு…., எனக்கே யோசனையாதான் இருக்கு. இதை நான் அப்பாகிட்ட பேச முடியுமா….? அவர்கிட்ட என்னன்னு சொல்லி புரியவைக்க முடியும். ஏன் என்னன்னு… காரணம் கேட்பாரே…..? என்ன சொல்லுவேன்…..?”
“பிடிக்கலன்னா…. பிடிக்கலன்னு சொல்லு….”
“காரணம் கேட்பாங்களே….”.
“எல்லாத்துக்கும் காரணம் சொல்லமுடியாது. சிலரை ஏன்னு தெரியாமயே பிடிக்கும். அதேபோலதான் பிடிக்காததுக்கும். காரணம் சொல்ல முடியாது. இது உன் லைப். நீதான் முடிவெடுக்கனும்”.
“எதுவாயிருந்தாலும் லேட் பண்ணாம, சீக்கிரம் யோசிச்சு முடிவெடு. லேட் பண்ணாத….”
தொடரும்.
error: Content is protected !!