Skip to content
Post Views: 5,992
அஞ்சனாவும் நிஷாவும் தங்களது ஊருக்கு வந்திருந்தனர். சனி ஞாயிறுடன் சேர்ந்து திங்களும் விடுமுறையாக அந்த வாரம் வந்ததால் இருவரும் ஊருக்கு வந்திருந்தனர்.
ஞாயிறு அன்று காலை நிஷாவும் அஞ்சனாவும் சேர்ந்து மயிலம் முருகப் பெருமான் கோவிலுக்கு வந்திருந்தனர். அன்று நிஷாவுக்கு பிறந்தநாள் என்பதால் முருகனை தரிசிப்பதற்காக திண்டிவனத்திற்குப் பக்கத்தில் உள்ள இந்த கோவிலுக்கு வந்திருந்தனர் தோழிகள் இருவரும்.
மயிலம் முருகன் கோவில் சிறு குன்றின் மீது உள்ளது. கோவிலின் மேல் கார், பைக்கில் செல்வதற்கு தனி பாதை உண்டு. மக்கள் ஏறிச் செல்வதற்கு ஏதுவாக படிகளும் அமைந்திருக்கின்றது.
தோழிகள் இருவரும் பேசிக்கொண்டே…. படி வழியாக ஏறிச் சென்றனர். அன்று முகூர்த்தநாள் என்பதால் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் காதுகுத்து, கல்யாணம் எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
Advertisement
இருவருக்கும் மிகவும் பிடித்த கோவில் என்றுகூட சொல்லலாம். இவர்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் காலத்திலிருந்தே மயிலத்திற்கு பெற்றோருடன் நிறைய முறை வந்திருக்கின்றனர்.
சில சமயம் இருவீட்டு பெரியவர்களுடன் சேர்ந்தும் வருவதுண்டு. வேலைக்கு சென்ற பின்பு, இப்போதுதான் முதன்முறையாக வருகின்றனர் இருவரும்.
நிறைய விசேஷங்கள் நடந்து கொண்டிருந்ததால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. மலைக்கு கீழிருந்தே அர்ச்சனைத்தட்டு, பூமாலை எல்லாம் முருகனுக்கு வாங்கி வந்திருந்தனர். வெளிப்பிரகாரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே கோவிலுக்குள் நுழைந்தவர்கள், அர்ச்சனைக்கான சீட்டை வாங்கிக் கொண்டு மூலவரை தரிசிக்க சென்றனர். உள்ளே கூட்டம் சற்று குறைவாக இருந்தது.
Advertisement
“பரவாயில்ல… உள்ள கூட்டம் கம்மியா இருக்கு. வா… சீக்கிரம்” என நிஷா அஞ்சனாவின் கைப்பிடித்து வேகமாக அழைத்துச் சென்றாள்.
Advertisement
கூட்டம் வருவதற்கு முன் முருகரை தரிசித்துவிடலாம் என சாமியின் முன்னே வந்தவர்கள், முருகனை பார்த்து கைகூப்பி வணங்கி நின்றார்கள் மெய்மறந்து. சந்தனகாப்பில் முருகன் அழகனாக ஜொலித்துக் கொண்டிருந்தார் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக.
வந்தவர்களை பார்த்துவிட்டு, இவர்களை நோக்கி வந்த அர்ச்சகரிடம் கையில் இருந்த அர்ச்சனைத் தட்டு, பூமாலை எல்லாம் கொடுத்து…, நிஷாவின் பெயரையும் இராசி நட்சத்திரத்தையும் சொல்லி அவள் பெயருக்கு அர்ச்சனை செய்யும் படி சொன்னாள் அஞ்சனா.
“ப்பா…. இவரைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு. இன்னைக்கு ரொம்ப அழகாயிருக்கார் இல்ல…” என சொல்லிக்கொண்டே அஞ்சனா கண்மூடி கைகூப்பி முருகனை மனதார தொழுது நின்றாள் முருகனை.
Advertisement
இதுவரை அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்த அத்தனை பாரத்தையும் முருகன் பாதத்தில் இறக்கிவைத்து… மனதார பிரார்த்தனை செய்தாள். நிஜமாவே எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல முருகா. அப்பா பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்னாலும், இன்னும் எனக்கு குழுப்பமாவேயிருக்கு.
நான் செய்யறது சரியா தப்பான்னு… கூட எனக்கு தெரியல. பிளீஸ் எனக்கு நீதான் வழிகாட்டனும் ஐயனே. இந்த குழப்பத்துல இருந்து எனக்கு விடுதலை குடு. கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து, எனக்கு நிம்மதியே… இல்ல. நீதான் எனக்கு துணை இருக்கனும் என தன்னை மறந்து நெஞ்சுக்குள்ளேயே உருகி முருகனிடம் பிரார்த்தித்து நின்றிருந்தாள்..
“அஞ்சு கண்ணைத் திறந்து பாரு…. தீபாராதனை காட்டறாங்க” என்ற நிஷாவின் குரலில் கண்ணைத் திறந்தாள் அஞ்சனா.
அங்கே எதிரே முருகன் தன் அடியார்களை காக்கும் இரட்சகனாக… “நான் இருக்க பயமேன்,,,” என கண்கள் பேசும் காருண்யனாக, அல்லல் போக்கும் ஆறுமுகனாக சிரித்த கோலத்தில் சிங்காரமாக காட்சி கொடுத்து கொண்டிருந்தான்.
நிஷாவும், “இன்னைக்கு முருகர் ரொம்ப அழகாயிருக்கார் இல்ல…” என்றாள்
ஆமாம் என தலையசைத்த அஞ்சனா, “சந்தனகாப்பு வேற செஞ்சிருக்காங்க. சிரிச்ச முகமா… அப்படியே பேசற மாதிரியேயிருக்கு” என சிரித்துக் கொண்டே நிமிர்ந்து எதிர்வரிசையில் சற்று தள்ளி பார்த்தவளின் பார்வை அங்கேயே தேங்கி நின்றது.
தேவநாதன் வேஷ்டி சட்டையில் கண்மூடி…, எதிர்வரிசையில் இவர்களுக்கு சற்று தள்ளி நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தான்.
இவங்க எப்போ வந்தாங்க… என திரும்பி நிஷாவைப் பார்த்தாள். அவள் சாமி கும்பிடுவதில் கவனமாக இருந்தாள். இன்னும் அவள் தேவநாதனை கவனிக்கவில்லை போல.
அர்ச்சகர் எடுத்துவந்த ஆரத்தியை தொட்டு வணங்கியவர்கள்…, விபூதி குங்கும பிரசாதத்தை நெற்றியில் இட்டு கொண்டு… அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு… கோவிலைச் சுற்றி வர ஆரம்பித்தார்கள்.
அஞ்சனா தேவநாதனைத்தாண்டி செல்லும்போது அவன் தன்னை பார்த்தானா, பேசுவதா… வேண்டாமா என தயக்கத்துடன் நடந்தாள். ஆனால் அவன் இவளை கண்டு கொண்டதுபோல் தெரிய வில்லை. கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வரும்போதும் இவர்களுக்கு பின்னாலேயேதான் நடந்து வந்தான். ஆனால் இவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பேசவும் இல்லை.
அஞ்சனாவின் மனதில். இவங்க என்னை பார்க்கலையா…? இல்ல பார்த்துட்டு பேசாம இருக்காங்களா….? என்ற குழப்பம் வந்தது இப்போது.
கோவிலைச் சுற்றி முடித்து விழுந்து வணங்கிவிட்டு வந்து உட்கார்ந்திருந்தனர். அவனும் இவர்கள் பார்வையில் படும் தூரத்தில் சற்று தள்ளிதான் உட்கார்ந்திருந்தான். ஆனால் அவனது பார்வை கையில் இருந்த மொபைலில் இருந்தது.
நிஷா… இப்போதுதான் அவனைப் பார்த்தாள்போல, “ஹேய் அவர் உங்க மாமா பையன்தான…” என்றாள் அஞ்சனாவிடம் தேவநாதனைக் கண்களால் காட்டி.
“ஹ்ம்ம்…. பார்த்தேன்”.
“பேசல…. சொந்தக்காரங்க கல்யாணத்துல பார்த்து பேசனாங்கன்னு சொன்னே”.
“அப்ப பேசனாங்க…. இப்ப பேசுவாங்களா… தெரியலையே….”
“ம்ப்ச்…, அவர் உன்ன சரியா கவனிச்சிருக்க மாட்டார். போய் பேசு”.
“என்னன்னு பேச. தயக்கமாயிருக்குடி…”
“போட்டேனா….., தாய்மாமா பையன்கிட்ட பேச தயக்கமாம் இவளுக்கு. வந்து வாய்ச்சிருக்கு பாரு. போய் பேசுட்டு வாடி. நான் போய் பிரசாதம் வங்கிட்டு வரேன்…” என்று நிஷா எழுந்து சென்றுவிட்டாள்.
அஞ்சனாவுக்கு தேவநாதனிடம் பேச சங்கோஜமாக இருந்தது. மனதினுள் தயக்கமாக இருந்தாலும் மெல்ல எழுந்து நடந்தாள் அவனை நோக்கி.
அஞ்சனா, “ஹாய்…” என்றாள் புன்னகையுடன்
நிமிர்ந்து இவளைப் பார்த்தவன், தலையசைத்து புன்னகைத்தான். இவளைப் பார்த்துவிட்டதற்கான ஆச்சர்யமோ… சந்தோஷமோ… எந்த முகபாவனையும் அவனது முகத்தில் தெரியவில்லை. மிக சாதாரணமாக இருந்தான்.
“எப்படியிருக்கீங்க….?”
“ஹ்ம்ம். நீ எப்படியிருக்கே…?”
“நல்லாயிருக்கேன். கோவிலுக்கு வந்தீங்களா…?”
இது என்ன கேள்வி…? எனப் பார்த்தான் அவளை. “கோவில்தான…. கோவிலுக்கு வராம வேற எதுக்கு வருவாங்க….?”
“ஸாரி… திடீர்னு… உங்களை பார்த்ததுல என்ன பேசறதுனு தெரியல”.
“திடீர்னுலாம்… பார்க்கல. கோவிலுக்குள்ள சாமி கும்பிடும்போதே என்னைப்பார்த்ததான…”
கண்களை அகல விரித்து, ஆச்சர்யத்துடன், “அப்போ… நீங்களும் என்னை பார்த்தீங்களா…?”
ஆமாம் என தலையசைத்தான்
“அப்புறம்… ஏன் என்கிட்ட பேசல… நீங்க?”
“என்ன பேசனும்…?”
இதற்கு என்ன பதில் சொல்வாள்….? அமைதியாக அவனையே பார்த்து நின்றாள்.
சில நொடிகளில் அங்கிருந்து எழுந்தவன், வருகிறேன் என அவளிடம் தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான் நில்லாமல்.
இவங்க ஏன் இப்படி பேசிட்டு போறாங்க…? அன்னைக்கு நம்மகிட்ட நல்லாதான பேசினாங்க.
“கிளம்பிட்டாரா…” என்ற நிஷாவின் குரலில் திரும்பிப்பார்த்தவள், “ம்ம்…..” என்றாள் சுரத்தில்லாமல்.
“சரி வா…. போலாம். அம்மா கால் பண்ணிட்டாங்க. சீக்கிரம் வரச்சொல்லி…”
இருவரும் கிளம்பியவர்கள், கோவில் பிரகாரத்தைவிட்டு வெளியே நடந்து வந்தார்கள். அங்கே வெளிப்பரகாரத்தின் ஓரத்தில் தேவநாதன் ஒரு பெரியவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள் அஞ்சனா.
“ஹேய்… என்ன நின்னுட்ட. நட சீக்கிரம்…” என நிஷா முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டாள். நிஷா எங்கே தேவநாதனைப் பார்த்தாள். உள்ளுக்குள் வீட்டிற்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்ற நினைப்புடனே சரசரவென வேகமாக நடந்தவள் வழியில் நின்றிருந்த தேவநாதனை கவனிக்கவில்லை.
ஆனால் அஞ்சனா தேவநாதனை திரும்பி திரும்பி பாரத்துக் கொண்டே நிஷாவின் பின்னால் மெல்ல நடந்து சென்றாள்.
முன்புறம் பார்க்காமல் தேவாவைப் பார்த்துக்கொண்டே நடந்ததில்… வழியில் இருந்த கல்லைப் பார்க்காமல் அதன் மேல் காலை வைத்து தடுக்கி, இடறி விழுந்தாள் கால் மடங்கி.
இவள் விழுந்ததைப் பார்த்ததும் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவளை எழுப்பி உட்கார வைத்தனர். அதற்குள் இவள் விழுந்ததைப் பார்த்த தேவநாதனும்… அங்கே வந்திருந்தான்.
கால் மடங்கி சறுக்கினவாக்கில் விழுந்திருந்ததால் பெரிதாக அடி எதுவும் இல்லை. இரண்டு கையிலும் சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது. கையில் ஏற்பட்ட சிராய்ப்பிலிருந்து இலேசான இரத்தகசிவு இருந்தது.
ஓடி வந்த தேவநாதன்… சிராய்த்திருந்த அவளது கையைப் பிடித்து தூக்கி பார்த்துவிட்டு…., வேறு எங்காவது அடிபட்டிருக்கிறதா… என ஆராய்ந்தான்.
தேவநாதன், “பார்த்து நடக்கமாட்டியா… கால் விரல்லயும் அடிபட்டிருக்கு பாரு…” என அதட்டினான்.
அவ்வளவுதான். அவனது அதட்டலில் இத்தனைநேரம் உருண்டு திரண்டிருந்த கண்ணீர் கண்ணைவிட்டு இறங்கியிருந்தது கன்னத்தில் கோடாக.
கீழே விழுந்ததில் ஏற்பட்ட கை சிராய்ப்பிலும், கால் விரல் கல்லில் இடித்திருந்த காயத்தில் உண்டான வலியிலும் கண்கள் கலங்கியிருந்தவள், அவனது வேகமான அதட்டலில் உண்டான ஆத்திரத்தில் அழுதுவிட்டாள்.
ஏற்கனவே…, கீழே விழுந்திருந்தது அவளுக்கு அவமானமாக இருந்தது என்றால், இப்படி எல்லோர் முன்னும் தேவா அதட்டி வேறு பேசியது அசிங்கமாக இருந்தது. எல்லாம் இவனாலதான். இவனை பார்த்துட்டே நடந்ததாலதான் முன்னாடி இருந்த கல்ல பார்க்காம விழுந்துட்டேன்.
இதுல இவன் அதட்ட வேற செய்யறான். பெரிய இவன்னு நினைப்பு மனசுல, போடா……. வந்துட்டான்….. என அவனை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் மனதில்.
சிராய்ப்பிலிருந்து உண்டான எரிச்சல், கால் விரலில் எழுந்த வலி, தேவநாதன் எல்லோர் முன்னும் பேசியது என அவளுக்கு கண்கள் கலங்கி கண்ணீர் நிற்காமல் வந்தது.
கால் விரலை பரிசோதித்து பார்த்த தேவநாதன் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவன், “வலிக்குதா…..” என்றான்.
பல்லை இறுக கடித்தவள், “ம்ம்… ‘’குலு… குலுன்னு… கூலா இருக்கு”. என்றாள் எரிச்சலுடன் முனுமுனுப்பாக.
அப்படியிருந்தும் அவனது காதில் அவள் வார்த்தைகள் தெள்ளத் தெளிவாக விழுந்திருந்தது. முறுவலிக்க முயன்றவன், “எழுந்துரு…” என்றான் அஞ்சனாவின் கைப்பற்றி… எழுந்து நின்று.
அதற்குள் அவனுடன் பேசிக்கொண்டிருந்த பெரியவர் வந்து பார்த்து, “யாரு தேவா… இது…? உனக்கு தெரிஞ்ச பொண்ணா…?” என்றார்.
ஆமாம்… என தலையசைத்தவன்…. “என்…” என சில நொடிகள் அவளை உற்றுப்பார்த்தவன், “அத்தைப் பொண்ணு” என்றான்.
“அத்தையா…? யாரு… ரோகிணியா…? ரோகிணி பொண்ணா… இது” என்றார் ஆச்சர்யமாக.
ஆமாம்…. என தலையசைத்தான் .
திரும்பி அவளைப் பார்த்தவர், “அடி எதுவும் பெரிசா இல்லையேம்மா” என்றார்.
இல்லை எனத் தலையசைத்தாள்.
“சரி நான் வரேன் தேவா, பார்த்து போமா…” என்று சென்று விட்டார். செல்வதுரைக்கு வேண்டிய நண்பர் அவர். அங்கு நடக்கும் திருமணத்திற்காக வந்திருந்தார். தேவாவும் அங்கு நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளதான் வந்திருந்தான்.
செல்வதுரைக்கு தொழில்முறையில் தெரிந்த நண்பர் ஒருவரின் மகனுக்கு அன்று மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. அதற்காகதான் தேவநாதன், அந்த பெரியவர் எல்லாரும் வந்திருந்தனர்.
தேவநாதன் முன்னமே வந்து கல்யாணத்தை அட்டென்ட் செய்துவிட்டு, கோவிலுக்குள் சென்று தரிசனத்தையும் முடித்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பும் வழியில் தான் அந்த பெரியவரைக் கண்டு நின்று பேசிக்கொண்டிருந்தான். அவர் அப்பொழுதுதான் திருமணத்திற்கு வந்தார். வரும் வழியில்தான் தேவநாதனைப்பார்த்து பேசிக்கொண்டு நின்றிருந்தார்.
எழமுடியாமல் திணறியவளது கையைப் பற்றி மெல்ல எழுப்பி நிப்பாட்டினான். “வா…” என பற்றிய கையை விடாமலே மெல்ல நடந்தான் அவன் பார்க் செய்திருக்கும் காரை நோக்கி.
அஞ்சனாவுக்கு இன்னும் அவன் மீதிருந்த கோவம் போகவில்லை. இப்போது அது வீம்பாக மாறியிருந்தது. “விடுங்க…. நான் போய்ப்பேன்” என்றாள் வீராப்பாக… முறைத்துக் கொண்டு அவனிடம்.
அவளைத் திரும்பி பார்த்தவன், “எதுக்கு. மறுபடியும் விழறதுக்கா..? கால்ல அடிபட்டிருக்கு பேசாம வா…” என அதட்டினான்.
“இவங்களுக்கு சாதாரணமாவே பேச வராதா…? எப்ப பாரு அதட்டிட்டே இருக்காங்க” என முனகியவள், “அதெல்லாம் என் பிரென்ட் இருக்கா… அவள் கூட்டிட்டு போவாள், நான் போய்ப்பேன்…” என்றாள் வீம்பாக அவனிடம்.
சரியென்று தலையசைத்து அவளைப் பிடித்திருந்த கையை விட்டவன், தனது இரு கைகளையும் கட்டிகொண்டு நேராக நின்று, “எங்க உன் பிரெண்ட்….?” என்றான்.
படியைத் திரும்பி பார்த்தாள். நிஷாவைக் காணோம். இவள் எங்க போனாள்…? என்ன விட்டுட்டு என சொல்ல முடியாத கோவம் வந்தது உள்ளுக்குள்.
நாலாப்புறமும் அலைபாய்ந்தது அவளது கண்கள் நிஷாவைந் தேடி. அவளைக் காணாமல், திரும்பி அவனைப் பார்த்தாள்.
என்ன…. என்று புருவத்தை ஏற்றி சைகையால் கேள்வி கேட்டவனிடம் ஒன்றும் சொல்லமுடியவில்லை அஞ்சனாவால்.
இப்படி இவன் முன்னாடி மானத்தை வாங்கிட்டு.., எங்க போய் தொலைஞ்சா… என எரிச்சலாக வந்தது மனதில்.
இப்போது அஞ்சனாவின் ஹேன்ட்பேக்கில் இருந்த போன் ஒலித்தது. ஹேன்ட்பேக் தேவநாதனிடம் இருந்தது. கீழே விழுந்ததில் ஹேன்ட்பேகும் விழுந்திருந்தது. அவளைப் பற்றி தூக்கியபோது அதனையும் சேர்த்து எடுத்து தன் கையில் வைத்திருந்தான்.
போன் சத்தம் கேட்டு… ஹேன்ட்பேகை அவளிடம் நீட்டினான். பேகைதிறந்து போனை எடுத்துப் பார்த்தாள். நிஷாதான் அழைத்திருந்தாள்.
“ஏய்… எங்கடி போன…..?” என்றாள் அடிக்குரலில் காட்டுக்கத்தலாக நிஷா.
தேவாவின் முன்னே எதுவும் பேசமுடியாமல், “எங்கடி… இருக்க…?” என அழுந்த பல்லைக்கடித்த அஞ்சனா கோவத்தில், “நான் கேட்கனும் உன்னை…. நீ எங்க போன…?” என்றாள் ஆத்திரத்தை அடக்கி.
“எங்கடி இருக்க…? நான் கீழ இறங்கியே வந்துட்டேன். இன்னும் உன்ன காணோம்”.
“கீழ போயிட்டியா…?”
“ஏய் எங்கயிருக்கே… நீ? நேரமாகுது. வீட்டுக்கு போகனும்னு உன்கிட்ட சொல்லிட்டுதான இருந்தேன்…”
அவள் தன்னை விட்டு மலையிறங்கிவிட்டாள் என்றதில் குரல் கமறியது அஞ்சனாவுக்கு. “ஏன்டி… பின்னாடி நான் வரனா… இல்லையானு கூட திரும்பி பார்க்காம போவியா…?”
அஞ்சனாவின் குரல் பேதத்தை கண்டுகொண்டவள் “ஹேய்…. என்னாச்சு…? நீ இப்ப எங்கயிருக்கே…..?” என்றாள்.
“ம்ப்ச்… மேல…, கோவில்ல…..”
“கோவில்லயா……..? இன்னும் அங்க என்னடி பண்ணிட்டிருக்கே……? கீழ வா…… சீக்கிரம். எங்க சித்தி சித்தப்பா வந்திருக்காங்களாம் வீட்டுக்கு. அவங்கதான் போன் பண்ணி பேசிட்டிருந்தாங்க. அவங்ககிட்ட பேசிட்டே இறங்கினதில…. பின்னாடி நீ வரியான்னு திரும்பி பார்க்காம வந்துட்டேன். லேட் பண்ணாம, சீக்கிரம் வா… அஞ்சு… வீட்டுக்கு போகனும்” என்றாள் அவசர தொனியில்
“ம்ப்ச்… நீ… வேணும்னா கிளம்புடி…, என்னால….. சீக்கிரமெல்லாம் வர முடியாது…” என்றாள் அழுகையை அடக்கிய குரலில்.
கீழே விழுந்தது, அதுவும் தேவநாதன் முன்னாடி விழ நேர்ந்தது, காயத்தில் உண்டான வலி.., இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் நிஷா தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டது என எல்லாம் சேர்ந்து அவளுக்கு அழுகையை கொடுத்தது. இவள் பேசும்பொழுது இவளையே பார்த்திருந்த தேவநாதன், அவளது முகம் சுருங்கி வாடியதைப் பார்த்து எதுவும் சொல்லாமல்…. கையை நீட்டினான்..
“ம்ப்ச்…, நான் போய்க்கிறேன், நீங்க போங்க…” என திரும்பி நடக்க முயன்றவளின் கையைப் பற்றி விடாமல் காருக்கு அழைத்து சென்றான் ஏதும் பேசாமல் அமைதியாக.
“ஸ்சு…. மெதுவா… போங்க கால் வலிக்குது….” கோவிலுக்கு சேலையில் வந்திருந்ததால் அடிப்பட்ட விரலில் நடக்கும்போது சேலையின் கொசுவம் பட்டு உரசியதில் எரிச்சலை உண்டுபண்ணியது.
திரும்பி அவளது காலைப் பார்த்தவன், நடையின் வேகத்தை குறைத்து மெல்ல அவளை அவன் காரிருக்கும் இடத்தை நோக்கி அழைத்து சென்றான்.
காரின் முன்பக்க கதவைத் திறந்து அவளை அமர வைத்தவன், காரின் முன்பக்கம் சுற்றி வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“உன் பிரண்டுக்கு போன் பண்ணி, கீழயே வெயிட் பண்ண சொல்லு…” என்றான் தேவா.
அவன் சொன்னது போலவே நிஷாவிடம் பேசியவள், அவள் எங்கே நிற்கிறாள் என கேட்டுத் தெரிந்துகொண்டு, அவனிடம் கூறினாள்.
தலையசைத்து கொண்டவன்…, நிஷா நின்றிருக்கும் கடையின் முன் கொண்டு சென்று காரை நிப்பாட்டினான். அஞ்சனா தேவநாதனுடன் வருவதைப் பார்த்ததும் நிஷாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
அஞ்சனா கார் கதவைத் திறந்து இறங்க முற்பட்டாள். அவளை முறைத்தவன்…, கார் கதவின் வழியாக குனிந்து நிஷாவைப் பார்த்து, “பின்னாடி ஏறிக்கோமா….” என்றான்.
எதுவும் புரியவில்லை என்றாலும்…, தேவநாதன் சொன்னதுபோல்… காரின் பின்பக்க கதவைத் திறந்து ஏறிக்கொண்டாள்.
அங்கிருந்து காரை எடுத்தவன், திண்டிவனத்தில் இருந்த ஹாஸ்பிட்டலின் முன்னால் காரை கொண்டு வந்து நிறுத்தியிருந்தான். கார் ஹாஸ்பிட்டலின் முன்னால் நின்றதைப் பார்த்து நிஷா சந்தேகமாக முழித்தாள்.
காரை நிறுத்தி இறங்கியவன், அஞ்சனா உட்கார்ந்து இருக்கும் பக்கமாக வந்து நின்று, கதவைத் திறந்து வா….. என தலையசைத்தான்.
“இல்ல… நான் வீட்டுக்கு போய் பார்த்துக்கறேன்…” என இறங்க மறுத்தாள்.
“ம்ப்ச்… இறங்கு” என அவளின் கையைப் பற்றி கீழே இறக்கி ஹாஸ்பிட்டலின் உள்ளே அழைத்து சென்றான். நிஷாவும் அவர்களின் பின்னால் ஒன்றும் புரியாமல் இறங்கி சென்றாள்.
ஹாஸ்பிட்டலுக்கு உள்ளே சென்றபின்தான் நிஷாவுக்கு அஞ்சனாவுக்கு அடிப்பட்ட செய்தியே தெரிந்தது.
அவளைப் பார்த்து அதிர்ந்தவள்.., “லூசாடி… நீ என்னைக் கூப்பிட்டிருக்க வேண்டியதுதான… இப்படி அடிபட்டிருக்கு” என பதறினாள் அஞ்சனாவைப் பார்த்து.
“நீ பேசாதடி… ஒருத்தி பின்னாடி வராளா… இல்லையான்னுகூட திரும்பி பார்க்காம…, நீ பாட்டுக்கு விட்டுட்டு போயிட்ட. செம கான்டுல இருக்கேன் உன் பேர்ல”.
ஆளப் பாரு. அப்படியே வச்சேன்னா… தெரியும். கீழே பார்த்து நடக்காம கண்ணை என்ன…., பிடறியிலயா வச்சிருந்த. பேக்கு மாதிரி… பெராக்கு பார்த்து நடந்து, கீழ விழுந்து வச்சிருக்கே….”
“இதுல உன்னை கைய வேற பிடிச்சி கூட்டிட்டு போகனுமா…?” என நொடித்தாள் நிஷா.
“ஏய் என்னடி ஓவரா பேசற…. கீழே விழுந்து அடிப்பட்டது எனக்கு. இதுல திட்ட வேற செய்வியா… நீ”
“திட்டமட்டும் கூடாது இரண்டு போடனும் உன்னை. இப்ப உங்க அப்பத்தா என்ன பேச போவுதோ….? ஏற்கனவே அது வாய திறந்தா மூட முடியாது. இப்ப அது செல்ல பேத்திய கூட்டிட்டு போய் இப்படி கையையும் காலையும் பேத்து கொண்டாந்தேன்னு தெரிஞ்சுது… என்னை வச்சு செய்யும்”.
அந்த வலியிலும் அஞ்சனாவுக்கு சிரிப்பு வந்தது. “உனக்கு உன் கவலை…”
“ஆளையும் மூஞ்சையும் பாரு… என் பின்னாடியே தான வந்த. அப்புறம் எப்படி விழுந்த…….”
தேவநாதன் இவர்களை உட்காரவைத்துவிட்டு ரிசப்ஷனுக்கு சென்றிருந்தான். அப்போதுதான் இந்த பேச்சு வார்த்தை எல்லாம் தோழிகளிடத்தில்.
“அ…..து…. இவர் கோவில் வெளியில நின்னு பேசிட்டிருந்தார். அவரை திரும்பி திரும்பி பார்த்துட்டே நடந்ததுல…. முன்னாடி இருந்த கல்லை பார்க்காம அது மேல காலை வச்சு தடுக்கி, விழுந்துட்டேன்…” என்றாள் கதை சொல்வதுபோல.
புருவத்தை சுருக்கி அஞ்சனாவைப் பார்த்த நிஷா…, சீரியசாக “என்னாச்சு அஞ்சு…? உன் முகமே ஒரு மாதிரியிருக்கு” என்றாள்.
“ம்ப்ச்… அவர்கிட்ட பேசாமயே இருந்திருப்பேன். நீதான் போய் பேசுன்னு என்னை அனுப்பிவிட்ட. ஆனால் அவர் முகம் குடுத்தே சரியா பேசல… அந்த டென்ஷன்லே வந்துதான் கீழே விழுந்துட்டேன்”.
“சரி விடு. அவருக்கு என்ன டென்ஷனோ……”
அடுத்து நர்ஸ் வந்து அவர்களை அழைக்கவும் உள்ளே எழுந்து சென்றனர். தேவநாதனும் அதற்குள் வந்தவன், அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.
உள்ளே இருந்த லேடி டாக்டர்…, காயத்தை ஆராய்ந்து பார்த்து… ‘’வேற எங்கயாவது அடிபட்டிருக்கா…” என விசாரித்தார் அஞ்சனாவிடம்.
ஆமாம் என தலையசைத்தவள்…. கூச்சத்துடன் திரும்பி தேவநாதனைப் பார்த்தாள். அதைப் புரிந்து கொண்டவன் எழுந்து வெளியே வந்துவிட்டான். அவனைத் தொடர்ந்து நிஷாவும் எழுந்து வெளியே வந்திருந்தாள்.
அஞ்சனாவை உள்ளே அழைத்து சென்று படுக்க வைத்து அவள் காட்டிய பகுதியில் செக் செய்த மருத்துவர்…., “இலேசா இரத்தம் கட்டியிருக்கு…, வேற ஒன்னும் இல்ல. ஐஸ் ஒத்தடம் கொடுத்துட்டு, நான் கொடுக்கற ஆயின்மென்ட்டை போடுங்க சரியாயிடும்” என்றார்.
காயத்தை சுத்தம் செய்து… மருந்திட்டு, காலில் பேன்டெய்ட் போட்டு, மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
காலைத் தாங்கி… தாங்கி நடந்து வந்தவளைப் பார்த்த நிஷா, “வலிக்குதா…” என்றாள்.
“ஹ்ம்ம்…, பெயினிருக்கு. கையிலயும் எரியுது” என்றாள் முகத்தை சுருக்கி.
அவளது கையிலிருந்த மருந்துச்சீட்டை வாங்கிய தேவநாதன் அங்கிருந்த பார்மசியில் மருந்துகளை வாங்கிகொண்டு வந்து கொடுத்தான்.
“நாங்க இங்கேர்ந்து ஆட்டோ ஏதாவது பிடிச்சிக்கிறோம் ண்ணா….” என்றாள் நிஷா.
“ஏன்… ம்மா.., நானே கொண்டுவந்து விட்டுட்டு வரேனே…” என்றான் யோசனையாக அஞ்சனாவின் காயங்களை பார்த்துகொண்டே.
“அச்சச்சோ…. வேணாம்…. ண்ணா… இவங்க அப்பத்தாவ பத்தி உங்களுக்கு தெரியாது. ஆட்டோ மட்டும் பிடிச்சு குடுங்க. ஆட்டோவிலே போயிடறோம்”.
நிஷாவைப் பார்த்து சிரித்தவன்.., “சரி வெயிட் பண்ணுங்க” என ஆட்டோ பிடித்து வந்து அவர்களை அதில் ஏற்றிவிட்டு, இவர்களை பத்திரமாக கொண்டு சென்று இறக்கிவிடும்படி சொல்லியவன், அவரின் போன் நம்பரையும் வாங்கிக்கொண்டான்.
நிஷா பயந்தது போலவே அஞ்சனாவைப் பார்த்ததும் லஷ்மி நிஷாவை ஒரு வழி செய்திருந்தார்.
“ஏன்டியம்மா….? கல்யாணம் கூடியிருக்க சமயத்துல இப்படி கூட்டிட்டு போய் கைய கால உடைச்சு கொண்டு வந்து விட்டிருக்க…” என சத்தம் போட ஆரம்பித்து விட்டார் நிஷாவிடம்.
“அம்மாடி நான் இங்கயே இருந்தேன், உங்க அப்பத்தா என்னை ஒரு வழியாக்கி… பிரிச்சு மேய்ஞ்சிடும். நான் வரேன் தாயி…” என அஞ்சனாவை அவர்களது வீட்டில் விட்டுவிட்டு நிஷா ஓடிவிட்டாள்.
ரோகிணி, “பார்த்து நடக்க கூடாதா அஞ்சுமா. இப்படி காயமாக்கி வச்சிருக்கியே…” என வருத்தப்பட்டார்.
லஷ்மி, “பார்க்காம நடந்ததாலதான் விழுந்து வச்சிருக்கா. வலியோட வந்திருக்கவள நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருப்பியா…? பிள்ளைய கூட்டிட்டு போய் சாப்பிட வை….” என சத்தம் போட்டார்.
அன்பா சொல்றதகூட இப்படி அதிகாரமா… அதட்டிதான் சொல்லனுமா….? இந்த அப்பத்தா எப்பதான் மாறுமோ… என ரோகிணியுடன் உள்ளே சென்றாள் அஞ்சனா.
“இன்னும் உங்கப்பா வந்தா என்ன சொல்லப்போறாரோ….?” என பயந்தார் ரோகிணி.
“ஒன்னும் இல்லம்மா. சின்ன காயம்தான். சரியாகிடும். நான் சேலையை மாத்திட்டு வரேன் நீங்க சாப்பாடு எடுத்து வைங்க”.
உடையை மாற்றி வந்தவள், சாப்பிட்டு மாத்திரையை போட்டு படுத்துவிட்டாள் அசதியாக. வேல்முருகன் வீட்டிற்கு வந்தவர். விஷயம் கேள்விப்பட்டு மகளைப் பார்ப்பதற்காக அவளது அறைக்கே வந்துவிட்டார்.
பெயின்கில்லர் எடுத்ததால் வேல்முருகன் வந்ததுகூட தெரியாமல் அசந்து உறங்கிகொண்டிருந்தாள் அஞ்சனா. மகளது கையை பார்த்துவிட்டு, காலையும் ஆராய்ந்தவர், அங்கேயே அஞ்சனாவின் பக்கத்தில் அவளது தலையை வருடி விட்டவாறு உட்கார்ந்துவிட்டார் வருத்தத்துடன் மகளைப் பார்த்துகொண்டே.
“நீங்க சாப்பிட வாங்க. அவள் தூங்கட்டும்”.
சத்தம் போடாதே….. என வாயில் விரல் வைத்து சைகை செய்து காட்டியவருக்கு மகளைவிட்டு எழுந்து செல்ல மனம் வரவில்லை. சென்ற முறை வந்திருந்த பொழுது… அஞ்சனா தந்தையுடன் சண்டையிட்டு கோவித்துக்கொண்டு சென்றிருந்தாள்.
திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வதில் விருப்பமில்லை என ஜெகன் கூறி சென்றதை தன்னிடம் மறைத்ததற்காக தந்தையிடம் சண்டை போட்டு சென்றிருந்தாள்.
அதிலிருந்து அஞ்சனா வேல்முருகனுக்கு தானாக போன் செய்து பேசவில்லை. அவரே போன் செய்தாலும், கேட்கும் கேள்விகளுக்கு பதில் மட்டும் சொல்லி வைத்து விடுவாள். அதிலேயே வேல்முருகன் நொந்து போயிருந்தார் மனதுக்குள்.
மகள் வேலையைபற்றி சொல்லும் போதெல்லாம் சாதாரணமாக நினைத்திருந்தார். தான் சொன்னால் மகள் கேட்டுக்கொள்வாள். தன் பேச்சை தட்ட மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது மனதில்.
ஆனால் அப்படி இல்லை என அவளின் செயலில் அஞ்சனா காட்டியிருந்தது, அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. வேல்முருகனுக்கு அஞ்சனா வேலைக்கு செல்வதில் எந்த வெறுப்பும் இல்லை.
இங்கிருந்து அவ்வளவு தூரம் சென்று பெங்களூரில் வேலை செய்ய வேண்டுமா…? இருக்கிறது ஒரே மகள். பக்கத்தில் சென்னை மாதிரி ஊரில் வேலைக்கு போகக்கூடாதா என்பது அவர் எண்ணம். அதற்கு ஏற்றாற்போல வந்த வரனும் அஞ்சனாவின் வேலைக்கு பிடித்தமின்மையை தெரிவிக்கவே, வேல்முருகன் வேலையை விட சொல்லி சொன்னார்.
ஆனால் அது மகளுக்கும் அவருக்கும் இடையே இப்படி பெரிய மனக்கசப்பை உருவாக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை.
ஜெகன் வீட்டிலிருந்து வந்து பெண் பார்த்து சென்றதிலிருந்து அஞ்சனா வேல்முருகனுடன் பேசுவதை தவிர்த்திருந்தாள். அதையே அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே இன்னும் வேலையை விட சொல்லி வற்புறுத்தினால் மகள் தன்னை வெறுத்து விடுவாளோ என பயமே வந்திருந்தது அவருக்குள்.
அந்த தாக்கம் இன்னும் அவர் முகத்தில் மீதமிருந்தது. மகளின் பக்கத்தில் உட்கார்ந்து அவளை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்து மகளையே பார்த்திருந்தவர், மனைவியின் நச்சரிப்பில் எழுந்து வெளியே வந்தார்.
தொடரும்.
error: Content is protected !!