Skip to content
Post Views: 6,459
நாட்கள்தான் ஓடியது. எந்த மாற்றமும் இல்லை அஞ்சனாவின் வாழ்வில். வேல்முருகனும் பெண்ணுக்கு வரன் பார்ப்பதை சற்று ஒத்தி வைத்திருந்தார்.
இரண்டு மாதங்கள் கழித்து நிஷாவும் அஞ்சனாவும் அவர்களது ஊருக்கு வந்திருந்தனர். ரோகிணிக்கும் வேல்முருகனுக்கும் திருமணமாகி இருபந்தைந்து வருடம் முடிவடைந்திருந்தது. வருவது இருபத்தைந்தாவது திருமண தினம் என்பதால் அதை கொண்டாட அஞ்சனா ஊருக்கு வந்திருந்தாள்.
நிஷாவும் ஊருக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியிருந்ததால், அவளும் அஞ்சனாவுடன் சேர்ந்து வந்திருந்தாள்.
அஞ்சனா ரோகிணிக்கு பட்டுபுடவையும், வேல்முருகனுக்கு பட்டு வேஷ்டி சட்டையும், எடுத்து தந்திருந்தாள் புதிதாக தன் வருமானத்தில். அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் ஒன்றுபோலவே வைரத்தில் மோதிரம் எடுத்து பரிசாக தந்திருந்தாள் திருமணப் பரிசாக.
Advertisement
அன்று காலையிலேயே, குடும்பமாக கோவிலுக்கு சென்று வந்தார்கள் அனைவரும். அன்று முழுக்க அஞ்சனாவின் சமையல்தான் வீட்டில். ரோகிணியை அவள் சமைக்கவே விடவில்லை. மாலையில் கேக் ஆர்டர் செய்தவள், தாய் தந்தை இருவரையும் சேர்ந்து வெட்ட சொல்லி, அந்த திருமண தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர் குடும்பத்தினர் அனைவருமாக.
நிஷாவும் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டாள். இரவு உணவைக்கூட ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள் எல்லோருமாக.
நெடுநாட்கள் கழித்து மகள் தன்னுடன் இணக்கமாக, சந்தோஷமாக பேசியதில், வேல்முருகனுக்கும் மன சஞ்சலங்கள் எல்லாம் மறைந்து போனது.
Advertisement
இப்படி அன்றைய தினம் முழுவதும் கொண்டாட்டமாகவும்… சந்தோஷமாகவும் கழிந்தது குடும்பத்தினருக்கு.
Advertisement
மறுநாள்… மதிய உணவு முடிந்து, அஞ்சனா பெங்களூருக்கு புறப்படுவதற்காக…, தனது துணிகளை பேக் செய்து கொண்டிருந்தாள்.
வேல்முருகன் மகளின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அவளுடன் பேச்சு கொடுத்தார். “அப்பா… மறுபடியும் வரன் பார்க்க ஆரம்பிக்கட்டுமாடா….?”
ரோகிணி கொண்டுவந்து கொடுத்த திண்பண்டங்களை எடுத்து வைத்து கொண்டிருந்தவள்…. கைகள் அப்படியே ஒரு க்ஷணம் நின்றுவிட்டது தந்தையின் வார்த்தையில்.
Advertisement
இன்னும் இதுவரை மனதில் இருப்பதை தந்தைக்கோ… அல்லது குடும்பத்தினருக்கோ… தெரியபடுத்தவில்லை. பயம்தான் காரணம். வேல்முருகன் என்ன சொல்வாரோ…? அடுத்து என்ன நடக்குமோ….? இதனால் தாய்க்கு ஏதாவது தொந்தரவு ஏற்படுமோ…? என உள்ளுக்குள்ளேயே இத்தனை நாட்கள் போட்டு புழுங்கி தன்னை வெளிப்படுத்த தயங்கினாள் அஞ்சனா. இப்போது தந்தை வந்து வரன் பார்க்கவா…? என கேட்டதும் உள்ளுக்குள் அதிர்வலைகள் மின்னத் தொடங்கியது பயத்தில்.
எப்படி…. நான்… இவர்கிட்ட சொல்லி, என்னை புரிய வைக்கப்போறேன்… என்ற ஆயாசமும், பயமும் சேர்ந்தே மனதில் தோன்றியது. இன்னும் நிஷாவுக்குகூட தெரியாது, இவளது உள் மன போராட்டங்கள் அத்தனையும்.
எதையும் தெளிவுப்படுத்திக் கொள்ளாமல், யாரிடமும் வெளியிடும் விருப்பமில்லை அஞ்சனாவுக்கு. தன் பதிலுக்காக… தன்னையே பார்த்து கொண்டிருந்த தந்தையை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்… தள்ளாட்டமான மன சஞ்சலத்துடன்.
மகளின் கண்களில் தெரிந்த சஞ்சலத்தை பார்த்தவர் சமாதானமாக, “இந்த முறை நீ எதிர்பார்க்கற மாதிரியே…, நீ வேலைக்கு போக சம்மதிக்கற மாப்பிள்ளையாவே பார்க்கறேன்டா… அப்பா” என்றார் மகளை ஒத்துக்கொள்ள வேண்டுமே என்ற தவிப்பில்.
மகளின் யோசனையைப் பார்த்து, அவளின் தலையை மெல்ல தடவிக் கொடுக்க ஆரம்பித்தார்… வேல்முருகன் கனிவுடன்.
எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறார் என்மேல். ஆனால் நான்…? என மனதினிலேயே தவித்தாள் அஞ்சனா. வேல்முருகனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தவறு செய்தவளாக சங்கடத்துடன், தலையை குனிந்து கொண்டவள் மெல்லிய குரலில்…. “நானே உங்ககிட்ட இதைப்பத்தி பேசனும்னு இருந்தேன்…. ப்பா….” என்றாள்.
“சொல்லு… டா… ம்மா. உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்னு நீயே சொல்லு. அதுமாதிரியே அப்பா பார்க்கிறேன்…” என்றார் அன்பாக மகளிடம்.
தொண்டையை கூட்டி விழுங்கியவள், தைரியத்தை இறுக்கிப் பிடித்து “என…க்..கு எனக்கு……… மாமாவ பிடிச்சிருக்கு.. ப்…பா. அவருக்கே என்னை கல்யாணம் பண்ணி வைச்சிடு…ங்க…” என இத்தனை நாள் உள்ளுக்குள் போட்டு உழப்பிக் கொண்டிருந்த எண்ணங்களை கோர்த்து, தன் மனதை தந்தைக்கு தெரியபடுத்திவிட்டாள்… வெற்றிகரமாக.
வேல்முருகனுக்கு அஞ்சனா சொல்ல வருவது புரியவில்லை. யாரு மாமா….? எந்த மாமா…. என யோசித்தவருக்கு துளியும் செல்வதுரையின் ஞாபகமோ…, தேவநாதனைப் பற்றின எண்ணமோ எழவில்லை மனதுள். அந்த அளவுக்கு மலைபோல நம்பிக்கை பெண்ணின் மீது.
ஒன்றும் புரியாமல்…. குழம்பியவர், எந்த மாமாவ சொல்றாள்…..? என பெண்ணையே விழியெடுக்காமல் சிந்தனையுடன் பார்த்திருந்தவர், “யாரு…டா…… யாரை சொல்றே….?” என்றார் மகளிடமே மென்மையாக.
எப்படி சொல்வாள் பெண்? இதுவரை இருந்த தைரியம் கை நழுவியிருந்தது தந்தையின் கனிவான அனுசரணையில். இன்னும் உள்ளுக்குள் தடுமாற்றம்தான். ஐ…யோ… அப்…பா..வ ஏமாத்தறமோ… நாம என சொல்ல வந்த வார்த்தை எல்லாம் தொண்டையில் சிக்கிய முள் போல தவித்து நின்றது வெளிவராமல்.
மெல்ல தன்னை திடப்படுத்தி எச்சிலை கூட்டி விழுங்கியவள், “அ….து….” என ஆரம்பித்தவளுக்கு வார்த்தைகள் வெளிவராமல் சதி செய்தது. ரோகிணியும் அங்கேதான் நின்றிருந்தார்.
மகன் பேத்தியிடம் திருமணத்தைபற்றின பேச்சை ஆரம்பித்ததுமே லஷ்மியும் வந்து அமர்ந்து கொண்டார் அவர்களுடன். சுற்றி அனைவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவளுக்கு பயத்தில் இதயத்துடிப்பு தானே அதிகரித்தது.
அன்னையை அழுத்தமாக பார்த்தவள்… மனதைத் திடப்படுத்திக் கொண்டு, “அ…து… அன்னைக்கு மாமா வந்திருந்தாங்க இ…ல்ல. அம்மாவோ…ட அண்ணன். அவங்க பையன…..தான் சொல்றேன்… ப்பா…..”
மகள் சொல்வது புரிவது போல் இருந்தாலும், இன்னும் அவள் மீதான நம்பிக்கை அவரை இழுத்துப் பிடித்தது. ச்ச… ச்ச… என் பொண்ணு. ம்கூம்…. நிச்சயம் இருக்கா…து. நான் வளர்த்தவ… என்னை புரியாதா என் பொண்ணுக்கு? அப்….பாவ தெரியாதா… அவளுக்கு? நிச்சயம் அப்படி இருக்காது… என்ற எண்ணங்கள்தான் வேல்முருகனுக்கு மனதில்.
இருந்தாலும் மகள் சொல்லிய வார்த்தைகள் எல்லாம், தந்தையின் காதில் ஓங்கி ஒலித்து, அது அப்படியில்லை என பறைசாற்ற முயன்றது. கண்களை சுருக்கி அஞ்சனாவை முறைத்து பார்த்து பார்த்தவர்… “எனக்கு புரியல. நீ என்ன சொல்ல வரே…? இன்னொருதரம் தெளிவா சொல்லு……….” என்றார் பற்களைக் கடித்துகொண்டு பொறுமையாக.
தந்தையின் குரல் மாற்றத்தில், அவளது குரல்வளை பயத்தில்… ஏறி இறங்க ஆரம்பித்துவிட்டது அஞ்சனாவுக்கு. நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் ஒத்தி எடுத்தவள், மெல்ல முனகலாக “செல்வதுரை மாமாவோட மூணாவது பையன்…. தேவநாதன் மாமாவ………” அவ்வளவுதான் தெரியும் அஞ்சனாவுக்கு. முழுதாக சொல்லி முடிப்பதற்குள்…, காதில் ஙொ…ய்ங்…… என சத்தம் மட்டும்தான் கேட்டது. வேல்முருகன் ஆக்ரோஷத்துடன் மகளின் கன்னத்தில் விட்ட அறையில். அத்தனை ஆவேசம் அவருக்கு
“என்ன உளர்ற……….? என்ன பேசறோம்னு புரிஞ்சுதான் பேசறியா……..? யார் குடுத்த தைரியம் உனக்கு….? எனக்கும், அந்த குடும்பத்துக்கும் ஆகாதுன்னு, உனக்கு நல்லா தெரியும். எந்த நினைப்போட இப்படி ஒரு ஆசை உன் மனசுல வந்தது”.
“எனக்கு சுத்தமா அந்த குடும்பத்தை அடியோட பிடிக்காதுன்னு, தெரிஞ்சும்… என்கிட்டயே இவ்வளவு தைரியமா வந்து பேசறேனா…, யார் சொல்லி கொடுத்து பேசறே…. இதெல்லாம்….?”
“உங்கம்மா…வா….? அவள் பார்க்கற வேலையா…. இதெல்லாம்….? ம்ம்…. சொல்லு… வாயைத் திற…. அமுங்கினி மாதிரி இருந்துட்டு இந்த வேலையெல்லாம் வேற பார்க்குறாளா…. இவள்” என ரோகிணியை முறைத்தவர், மகளிடம் மறுபடியும் திரும்பி “சொல்லு…” என உறுமினார் அடித் தொண்டையில்
…………………………….
“உங்கம்மா சொல்லி குடுத்தாளா…?” என திரும்பவும் மிரட்டலாக அஞ்சனாவிடம் விசாரித்தவர், சட்டென்று ரோகிணியைத் திரும்பி பார்த்து… “இதைதான் பொண்ணுக்கு சொல்லி குடுக்கறயா… நீ…? உன்னோட ட்ரெயினிங்தானா இதெல்லாம்…..? இருக்கும்டி. என் எதிர்லயே பாசமலர் படத்த ஓட்டனவதான நீ…”
“அண்ணன பார்த்ததும் அப்படியே உருகி நின்னயே அன்னைக்கு. இன்னும் உன்னை நல்லா உங்கண்ணன் கவனிச்சு செஞ்சுட்டான்னா… உங்கள எல்லாம் கையால பிடிக்க முடியாதுடி. இத்தனை வருஷம் இல்லாத உங்கண்ணன், இன்னைக்கு எங்கிருந்துடி புதுசா வந்து குதிச்சான், என் உயிரை வாங்கன்னு”.
“நிம்மதியா இருந்த என் குடும்பத்துல குட்டைய குழப்பிட்டு போயிட்டானா… உன் அண்ணன்? இதைதான எதிர்பார்த்தான் அவன். இப்ப சந்தோஷமா அவனுக்கு. அவனுக்கு இருக்குடி….” என நாக்கை மடித்து பல்லைக் கடித்தார் ஆங்காரத்துடன்.
“சொல்லுடி… ஊமச்சி மாதிரி இருந்துட்டு இல்லாத வேலையெல்லாம் பார்க்கறயா நீ…” என ரோகிணியிடம் ஆவேசமாக நெருங்கியவர் “நீதான் இப்படி பேசு அப்பாகிட்டன்னு….. என் பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்தியா….? இருக்கும்டி. நீ பலே கைகாரிடி. எனக்கு தெரியாது உன்னப்பத்தி. என்ன… அண்ணன் பையனுக்கு பொண்ண கட்டிக்கொடுத்துட்டா…., திரும்பவும் உன் அண்ணன்கூட ஒட்டிக்கலாம்னு நினைப்பா…. தொலைச்சிருவேன்… உன்னை”.
“அந்த நினப்பெல்லாம் மனசுல இருந்ததுன்னா…. அடியோட… அழிச்சிடு. கனவுலகூட… அதெல்லாம் நடக்க விடமாட்டேன்…” என ரோகிணியின் தாடையை இறுக்கிப் பிடித்து ஆட்டியபடி பேசியவர், “வாயைத் திறடி. அமுங்கினி. திறக்கமாட்டியா….? புருஷன் கேட்டும் பதில் சொல்ல மாட்டியா….? அழுத்தம்டி. அழுத்தக்காரிதான…. அதான் உன் மவளும் அப்படியே வந்து வாய்ச்சிருக்கா. உன்னை மாதிரியே…”
“இத்தனை நாள் மனசுல இருக்கறத எல்லாம் சொல்லாம…, ம்ம்…” என கர்ஜித்தவர் “நான் இவளுக்காக தேடி பிடிச்சு நல்ல மாப்பிள்ளையா பார்த்தப்பகூட அவள் மனசுல இருக்கறத சொல்லாம…, எவ்வளவு அழுத்தம் பார்த்தியா… ஆத்தாள மாதிரியே”.
திரும்பி மகளை பார்வையால் எரித்தவர்…, “இதை மனசுல வச்சிட்டுதான் அந்த வரன வேணாம்னு சொன்னியா நீ….” என அதட்டினார்.
என்ன சொல்வாள் அஞ்சனா….? இத்தனை கோவத்தையும் ஆக்ரோஷத்தையும் வேல்முருகனிடம் அவள் எதிர்பார்க்கவில்லையே. சமைந்து நின்றுவிட்டாள் பெண் பேச்சற்று.
இதுவரை அவரை இப்படி பார்த்ததுகூட இல்லை. இன்றுதான் அவரின் இந்த புதிய அவதாரத்தை ஜீரணிக்க முடியாமல் பயத்தில் நடுநடுங்கிக் கொண்டிருந்தாள்… அழுகையுடன்.
மகளின் மௌனத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் திரும்பவும் மனைவியைப் பார்த்தவர், “நீதான் அவளுக்கு சொல்லி குடுத்திருப்பே…. இல்லாட்டினா…, இவளுக்கு இப்படி பேச எப்படி தைரியம் வரும். பெத்தவன்கிட்டயே வந்து, அவனுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் நெஞ்ச நிமிர்த்திட்டு எவ்வளவு தைரியமா சொல்றா… உன் பொண்ணு, அந்த இத்துப் போனவன் பையனை கட்டி வைங்கன்னு. என்ன நெஞ்சழுத்தம்டி… ஆத்தாளுக்கும் மவளுக்கும். அது வேற ஒன்னும் இல்ல. நம்ம பொண்டாட்டி, நம்ம பொண்ணுன்னு உங்கள எல்லாம் என் தோள்லயும் மார்லயும் சுமந்தேன் இல்ல, அதா….ன் அந்த நன்றி கடனை காமிச்சிட்டீங்க…டி இரண்டு பேரும்”.
“இத்தனை வருஷம் இப்படி ஒரு உறவு நமக்கு இருக்குன்னே…, அவளுக்கு சொல்லாமதான நான் வளர்த்துட்டு வந்தேன். எங்கே…ருந்துடி அவளுக்கு தெரிஞ்சுது என அஞ்சனாவைக் கைக்காட்டி ரோகிணியிடம் கேள்வி எழுப்பியவர், சொல்லுடி, வாயத் திற…” என கன்னத்தில் ஒன்று ஓங்கி வைத்தார் ரோகிணியை.
“சொல்லு….டி அவளுக்கு எப்படி… தெரியும்? உன் குடும்பத்தபத்தி. உங்கண்ணனபத்தி, அவன் இங்க வந்து போனது எல்லாம்….” என ரோகிணியிடம் எகிறினார்.
ரோகிணியை அடித்து அவரது தலைமுடியை கொத்தாக பிடித்து உலுக்கிக் கொண்டே ஆக்ரோஷமாக விசாரிக்க ஆரம்பித்த வேல்முருகனின் கையைப் பிடித்து தடுத்த அஞ்சனா “அப்பா….. அம்மாவ எதுவும் சொல்லாதீங்க. அம்மாவுக்கும் இதுக்கும்….., எந்த சம்மந்தமும் இல்லை”.
“இது முழுக்க முழுக்க என்னோட விருப்பம். அவங்களுக்குகூட இன்னும் இதபத்தி எதுவும் தெரியாது. சொல்லப்போனா…. அவங்களுக்கும் இப்பதான் தெரியும். நான் இதுவரைக்கும் அவங்ககிட்ட கூட எதையும் சொன்னதில்ல. சும்மா… அம்மாவ திட்டாதீங்க…” என்றாள்.
மகள் தைரியத்துடன் தனது கண்களை துடைத்துகொண்டு, வேகமாக எழுந்து நின்று, தனது கைகளை பிடித்து தடுத்தது மட்டும் இல்லாமல், தன்னையே எதிர்த்து பேசியதை வேல்முருகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“ஓஹ்….. அந்த அளவுக்கு பெரிய மனுஷியாகிட்டீங்களா… நீங்க…? என்னையே எதிர்த்து பேசற அளவுக்கு…, தைரியம் வந்துடுச்சா… உங்களுக்கு?”
“என்ன… நாலு காசு சம்பாதிக்கறோம்ற திமிரா…? இல்ல அப்பனுக்கே புத்தி சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டோம்…..னு மனசுல நினைப்பு வந்துடுச்சா….?”
“தனியா போய் நாலு காசை கையில பார்த்ததும், அப்பன் வேணாம்… குடும்பம் வேணாம். எல்லாம் தானா முடிவெடுக்கற தெனாவெட்டு…. ம்ம்….”
இதற்கென்ன பதில் சொல்ல முடியும் அஞ்சனாவால். அது அப்படியில்லையே. இப்போது விளக்கி சொன்னாலும் புரிந்துகொள்ளும் மனநிலையில் வேல்முருகன் இல்லையே. அமைதியாக நின்றாள் மகள்.
ரோகிணிக்கு மகளின் எண்ணமே புதியது என்றால், இங்கு நடந்து கொண்டிருக்கும் களேபரம்… அதைவிட அதிர்ச்சி. எல்லாம் சேர்ந்து அவரை நிலையிழக்கச் செய்துகொண்டிருந்தது. இன்னும் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என அவரால் நம்ப முடியாமல், ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள திணறிகொண்டு… முழித்து நின்றார் பாவமாக.
சில சமயம் பெண்களின் நிலை இதுதான். அன்பு, பாசம், அக்கறை, பொறுமை எல்லாம் இருந்தாலும் ஓரிரு சமயங்களில்… பெண்களின் நிலை வெறும் பொம்மைபோல்தான் குடும்பத்தில். யாருக்கும் துணை நிற்க முடியாமல், உள்ளதை உள்ளபடி சொல்ல முடியாமல், எந்த பக்கமும் பேசமுடியாத சித்ரவதைதான் உள்ளுக்குள்.
“முழிக்காதடி…. உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொன்னா நான் நம்பிடுவேனா….? எல்லாம் ஆத்தாளும் மவளும் திட்டம் போட்டு பண்றீங்கன்னு எனக்கு தெரியும். நடிக்கிறீங்களா….? எல்லாம் கூட்டு களவானிங்க தான….”
“பொண்ணு பொண்ணுன்னு உயிரவிட்டு… நெஞ்சுல சுமந்ததுக்கு, தோ… காமிச்சுட்டால்ல. நீ எனக்கு ஒன்னுமேயில்லன்னு… நெஞ்சுலேயே மிதிச்சுட்டாயில்ல… என அஞ்சனாவைக் காட்டி கூறியவர், “ஒருநாளும் நீ நினைக்கறது நடக்காதுடி…” என எகிறினார் ரோகிணியிடம்.
வேல்முருகனை யாராலுமே கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. அதீத ஆத்திரத்தில் உதடெல்லாம் துடித்துக்கொண்டு, கண்கள் சிவந்து, மூக்கு புடைத்து, அவரது மூச்சுகூட புஸ்… புஸென்று எதிராளிக்கு கேட்கும் நிலையில்தான் நின்றிருந்தார். அத்தனை ஆவேசம் வந்திருந்தது மனிதருக்கு. அவரின் மனது ஆறவேயில்லை. அவரும் அதனை விடுவதாயில்லை. ஒருவழியாக்கிக் கொண்டிருந்தார் மகளையும்… மனைவியையும்.
திரும்பி… அஞ்சனாவைப் பார்த்தவர், “எப்படி தெரியும் அவனை உனக்கு? எங்க பார்த்த….. அவனை? இதுமட்டும் தானா…? இல்ல இன்னும் அவனோட….?” என இழுத்தார் கேள்வியாக
மென்று முழுங்கிய அஞ்சனா “அ…..து……. அம்மாவோட கல்யாணத்துக்கு போயிருந்தேன்…. இல்ல ப்பா…, அப்ப…. பார்த்தேன். அவங்கள….”
“ஓஹோ….. இன்னும் என்னல்லாம் எனக்கு தெரியாம நடந்திருக்கு. அம்மாவும் பொண்ணும் இவ்வளவு நாள் இதை என்கிட்ட சொல்லாமயே மறைச்சிட்டீங்களா…”
…………………..
“சொல்லு. வேறென்ன நடந்தது அங்க…”
“ஒன்னும் நடக்கல ப்பா…….. கல்யாணத்துல பார்த்து செல்வதுரை மாமா என்கிட்ட பேசினாங்க. நானும் பேசினேன் அவ்வளவுதான்”.
“அண்ணன பார்த்ததும் இவளும் அங்க பாசப்பயிர வளர்த்தாளோ….” என ரோகிணிக்கும் கன்னத்தில் மீண்டும் ஒரு அறை விழுந்தது.
“ப்பா…ஆ….. அம்மாவ அடிக்காதீங்க…..” என்றாள் சத்தமாக.
“என்கிட்டயே சத்தம் போடறயா….? வெட்டி பொலி போட்றுவேன் பார்த்துக்கோ…. பொண்ணுன்னுகூட பார்க்க மாட்டேன். ம்ம்………. சொல்லு. இன்னும் என்ன நடந்தது அங்க. உன் மாமன் வெக்கமில்லாம அங்கேயே என் பையனை கட்டிக்கிறியா…ன்னு கேட்டானா…? உன்கிட்ட. அறிவேயிருந்துக்காது அவனுக்கு. சின்னப் பிள்ளைகிட்ட இதெல்லாம் பேசறமேன்னு இல்லாம…” என நாக்கை அழுந்த கடித்த வேல்முருகன், “அந்த வெக்கங்கெட்டவன்…, கேட்டிருந்தாலும் கேட்டிருப்பான்….” என நக்கலாக சிரித்தார்.
“கொஞ்சம் கூட சூடு சுரணையே இல்லாம என் வீட்டு படியேறி வந்து பொண்ணு கேட்டவன்தான…. அவனுக்கு எங்க இருக்கும் வெக்கமும் மானமும். அது இருந்திருந்தாதான் வந்திருக்க மாட்டானே, அந்த நல்லவன்”.
“அப்படியே அவருக்கு இப்பதான் பாசம் பொத்துகிட்டு வருதா…? இத்தனை வருசம் கூடப்பொறந்தவ… எங்க இருக்கான்னுகூட திரும்பி பார்க்கல. நாய்… இப்ப மட்டும் கண்ணுக்கு தெரியுதாமா…? எல்லாம் நடிப்பு, வேஷம்”.
“எல்லாம்… என் சொத்துக்கு அடி போடறான். ஒரே பொண்ணு தான, பிள்ளைக்கு கட்டிக்கிட்டா…, தங்கச்சி வீட்டு மொத்த சொத்தும் வந்துரும்னு, கணக்கு போடறான். அவன் புத்தி எனக்கு தெரியாது…”
“இத்தனை நாள் எங்க போனானாம் உங்க மாமன். என்னமா நடிக்கிறான், என்கிட்ட அன்னைக்கு. உருக்கமா பேசறானாம். அன்னைக்கே செவில காட்டி நாலு விட்டிருக்கனும் அவன. தப்பு பண்ணிட்டேன். இதுல உன்னை வேற உசுப்பேத்தி விட்டுருக்கானா……..? அந்த வீணாப்போனவன்”.
அப்பப்பா எத்தனை வார்த்தைகள்…? எவ்வளவு ஆக்ரோஷம்…? இத்தனை வருஷங்கள் அவர் மனதை அழுத்திய எண்ணங்கள் எல்லாம் குதர்க்கமாக வெளியே வந்தது, வார்த்தையின் வடிவில். ருத்ர மூர்த்தியாக அவதாரமெடுத்திருந்தார், அங்கே அந்த குடும்ப தலைவன்.
“யாரும் என்கிட்ட பேசலப்பா. எனக்கு தேவநாதன் மாமாவ பிடிச்சிருந்தது. அதான் நான் உங்ககிட்ட சொன்னேன். என் விருப்பத்த… உங்ககிட்ட சொல்லிட்டேன். மத்தது உங்க விருப்பம்”.
என்ன துணிச்சல் இவளுக்கு…? என்கிட்டேயே எப்படி தைரியமா… பேசறா… இவ…? ம்ம்… னா பயந்து நடுங்கினவ… இன்னைக்கு என்னைப் பார்த்து, எனக்கு பிடிக்காதத, என் முன்னாடியே அழுத்தமா சொல்றான்னா… யார் கொடுத்த தைரியம் இது…? எது தந்த துணிவு இது? என அசந்துதான் பார்த்தார் மகளை நம்ப முடியாமல் வேல்முருகன்.
தந்தையின் மனதில் இன்னும் மகள் சிறு பேதைதான் போல. வளராத… உலகம் தெரியாத… சிறு குழந்தைதான் இன்னும் வேல்முருகனின் எண்ணத்தில். மகள் வளர்ந்த பருவத்தையே தன்னில் பதிய வைக்க திணறுபவருக்கு, அவளின் இந்த துணிவும்… தெளிவும்… அதிர்ச்சியைத் தந்தது மனதில்.
நான் இல்லாம இவள் வந்துட்டாளா….? என்னை இவள் மதிக்கலையா….? இத்தனை தாள் இவளுக்காக நான் பார்த்து பார்த்து செஞ்ச அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர் தானா….?
அப்ப நான் ஒன்னும் இல்லையா இவளுக்கு? என் பாசமும், அக்கறையும், அன்பும் அவ்வளவுதானா…? என அந்த தந்தையின் மனது சூறாவளியில் சிக்கிய சுழலாக சுழன்று கொண்டிருந்தது அங்கே.
பெண்ணின் மீது வைத்த தன் நம்பிக்கை பொய்யாகிப் போனதில், பேச்சற்றுப் போனார்… அந்த பாசகார தந்தை.
அவரவருக்கு அவரவர் நியாயம். யாரும் யாரையும் குற்றம்கூற முடியாதே. சில சமயங்களில் இந்த மாதிரியான சூழ்நிலைகள் குடும்பங்களில் நடப்பதுதானே.
பிள்ளைகள் எத்தனை வளர்ந்தாலும் இன்னும் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தனது சொல்லுக்கு கீழ்படிய வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகம்தானே. அதில் வேல்முருகன் மட்டும் விதிவிலக்கா என்ன….?
இன்னும் அவருக்கு மனதே ஆறவில்லை மகள் பேசியதை நினைத்து. திரும்பவும் மகளிடம் தெளிவு பெற “இவனை மனசுல வச்சிட்டுதான் அந்த வரனை வேணாம்னு மறுத்தியா…. நீ? நான்கூட உண்மையிலேயே… நீ வேலைக்கு போறதுக்கு ஆசைப்படறேன்னுதான… மனசுல நினைச்சேன்…” என்றார் ஆதங்கமாக.
மகளுக்கு தைரியம் வந்திருந்ததுபோல. துணிவுடன் தந்தையை எதிர் கொண்டிருந்தாள். “அப்பா எதுக்கு அதையும்…. இதையும் போட்டு குழப்பறீங்க. நான் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்…. வேலைக்கு போகத்தான் செய்வேன். அதுல எந்த மாற்றமும் இல்லை. அதையும் இதையும் கன்ஃபுயூஸ் பண்ணாதீங்க”.
அதுவரை கோவமாக பேசியவர்…. குரலை தணித்து… அவளின் அருகில் வந்து உட்கார்ந்து, “அப்பா சொல்றத கேளுடா…. உன் நல்லதுக்குதான அப்பா சொல்வேன். நீ என்ன சொன்னாலும் அப்பா கேட்கறேன். அவன்லாம் உனக்கு வேணாம்…மா. அப்பா உனக்கு வேற நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்….. ம்மா…” என்றார் வேண்டுதலாக.
ம்கூம். மகளின் மனது இறுகிவிட்டது போல. தந்தையின் எந்த வார்த்தைக்கும் மறுமொழியில்லை அங்கு. மௌனமே அங்கு மதியானது. அதன்பிறகு அவர் கெஞ்சிய… எந்த கெஞ்சலுக்கும். பேசிய…. எந்த பேச்சிற்கும் அஞ்சனாவிடம் இருந்து அசைவேயில்லை. மாலை வரை பொறுத்திருந்தவள், எதுவும் பேசாமல் பையை எடுத்துகொண்டு கிளம்பி விட்டாள் யாரிடமும் சொல்லாமல் அமைதியாக.
வேல்முருகன் அங்கேதான் இருந்தார் மகளின் முகத்தையே பார்த்துகொண்டு தவிப்புடன். ம்கூம் யாரிடமும் போய்வருகிறேன்… எனக்கூட சொல்லாமல் பெங்களூருக்கு கிளம்பியிருந்தாள்.
தொடரும்.
error: Content is protected !!