Skip to content
Post Views: 6,704
இதோ அதோ என்று பெங்களூருக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. வேல்முருகனிடம் இருந்து எந்த போனும் இல்லை மகளுக்கு. ரோகிணி மட்டும் விடாமல் கால் செய்து மகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
குடும்பத்தில் என்ன சச்சரவு, என்ன சண்டை என்றாலும் பெண்கள் தானே அதை எல்லாம் இழுத்து வைத்து ஒட்ட வைக்கும் பாலம். எப்பொழுதும் எதையாவது குறை பேசி குத்தம் சொல்லும் லஷ்மி கூட இந்த முறை வாயடைத்திருந்தார் மகனின் ஆக்ரோஷத்தைப் பார்த்து.
பேத்தியின் வாழ்க்கையை எண்ணி உள்ளுக்குள்ளேயே கவலை பிடித்தது அந்த மூதாட்டிக்கு. மருமகள் அவரையும் விடாது, எப்போதாவது பேத்தியுடன் பேச வைப்பார். ஆனால் அஞ்சனாவோ யாரிடமும் சரியாக பேசுவதில்லை. இன்னும் கோவம்… கோவம்… கோவம்தான் பெண்ணுக்கு. அது எப்படி கை நீட்டலாம் தந்தை என்ற ஆத்திரம் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது.
அதுமட்டுமா… என்ன மாதிரியெல்லாம் பேசிவிட்டார். ஏதோ மூணாவது மனிதரை ஏசுவது போல… வலி நிறைந்த வார்த்தைகள்தானே அத்தனையும்… எத்தனை வேதனையைக் கொடுத்தது அவளுக்கு. அவள் பாஷையில் சொல்வதென்றால் நாகரிகமே இல்லாமல், காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டார் தந்தை அன்று. அதுதான் அவளது வருத்தத்திற்கு காரணமாக இருந்தது மனதுக்குள்ளே. ஆதலால் வேல்முருகன் போன் செய்து பேசாததைக்கூட அவள் உணரவில்லை. கோவம் கண்ணை மறைத்ததுபோல பெண்ணுக்கு.
Advertisement
தாயும் அப்பத்தாவும் போனில் இவளுடன் சகஜமாக பேச முயன்றாலும்… கட்டாயத்திற்காக ஒரிரு வார்த்தைகள் மட்டும் உரையாடிவிட்டு… வைத்து விடுவாள். இப்படியே நாட்கள் சென்றது, எந்த மாற்றமும் இல்லாமல்.
நாச்சியப்பன் ஒருநாள் திடீரென்று போன் செய்து வேல்முருகனிடம் பேசினார். சாதாரணமாக ஷேம நலங்களை விசாரித்து பேசிக் கொண்டிருந்தவர், பேச்சின் இடையே நிஷாவின் குடும்பத்தைபற்றி விசாரிக்க துவங்கினார்.
வேல்முருகனுக்கு ஏதும் புரியவில்லை. ஏன் நாச்சியப்பன் நிஷா வீட்டைப் பத்தியெல்லாம் விசாரிக்கிறான்… என நினைத்தார். மனதில் கேள்வியிருந்தாலும், வெளியே கேட்கவில்லை நண்பனிடம்.
Advertisement
நாச்சியப்பனே அதற்கான பதிலை தெரிவித்திருந்தார். நிஷாவை உமாபதிக்கு பிடித்திருப்பதாக கூறியவர், அவளை முறைப்படி பெண் கேட்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். அதற்கு நிஷாவின் வீட்டில் பேசி அவர்களது விருப்பத்தை அறிந்து சொல்ல முடியுமா… என வேல்முருகனை கேட்டிருந்தார்.
Advertisement
வேல்முருகனுக்கோ… இதென்னடா வம்பு… என்றிருந்தது. வேலைக்கென வயசுப்பெண்களை கொண்டுபோய் பாதுகாப்பு கருதி, அங்கே தங்க வைத்தது தப்போ… என்றிருந்தது அவருக்கு.
இதைப் போய் நிஷாவின் வீட்டில் எப்படி கேட்பது. நிஷாவின் அம்மா அப்பா ஹாஸ்டலில் சேர்க்கிறேன் என்று சொன்னவர்களை வேல்முருகன்தான்.., இது என் நண்பனின் வீடுதான். பாதுகாப்பான இடம். எந்த தொந்தரவும் இருக்காது… என்று சொல்லி அஞ்சனா நிஷா இருவரையும் ஒன்றாக ஒருத்தருக்கொருத்தர் பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணத்துடன் நிஷாவின் பெற்றோர்களிடம் பேசி சம்மதிக்க வைத்திருந்தார்.
இப்போது அவரே போய் என் நண்பன் மகனுக்கு, உங்கள் மகள் மீது காதல் வந்துவிட்டதாம். அவனது பெற்றோரும் இதற்கு சம்மதித்து, உங்கள் பெண்ணை மருமகளாக்கிக் கொள்ள பெண் கேட்கிறார்கள் என்றா… கேட்க முடியும்.
Advertisement
நிஷாவின் பெற்றோர்… உங்களை நம்பிதானே அங்கே வைத்தோம் என ஏதாவது கேட்டு விட்டால்… என்ன செய்வது… என தர்மசங்கடமாக உணர்ந்தார்.
இந்த பொண்ணுங்களை படிக்க வச்சு வேலைக்கு அனுப்பறதும் போதும். இதுங்க காதல் கத்திறிக்கான்னு… வந்து நிக்கறதும் போதும்…, என நொந்துக்கொண்டார்.
உண்மையிலேயே அவருக்கு ஆயாசமாக இருந்தது. பெண்பிள்ளையை வேலைக்கு தனியாக அனுப்பிவிட்டு, அவரால் நிம்மதியாக இருக்க முடிந்ததில்லை இத்தனை நாட்களில்.
நெடு நாட்கள் பேசாமல் இருந்து, இந்த முறை வந்திருந்த போதுதான் அஞ்சனா பேசி சிரித்து சந்தோஷமாக இருந்தாள்… என பூரித்து போயிருந்தார் தகப்பன்.
அந்த சந்தோஷத்தின் சுவடு மறைவதற்குள்… அடுத்த யுத்தம் மகளுடன் ஆரம்பித்திருந்தது. இந்த முறை அவரும் மனசை விட்டு விட்டார்.
இதுவரை மகளின் மீது இருந்த பாசம், அன்பு எல்லாம் இப்போது விரக்தியாக… மாறி சலிப்பு தட்ட துவங்கியிருந்தது உள்ளத்தில்.
வாழ்க்கையின் போக்கை எண்ணி, தந்தை ஒய்ந்து போயிருந்தார் மனதினிலேயே மகளை நினைத்து.
யாருக்காக இந்த வாழ்க்கை? எதற்கு இந்த வாழ்க்கை….? என்று வெறுப்பின் உச்சத்தில் இருந்தார் வேல்முருகன் கடந்த காலமாக.
வீடு கலையிழந்து பாலைவனமாகியிருந்தது அவருக்கு. வீட்டில் இருந்த மூவரும் மூன்று திக்காகதான் இருந்தனர் ஒட்டுதல் இல்லாமல்.
எப்போதும் அன்னையிடம் பேசி, அவர் நலனில் அக்கறை கொள்ளும் மகன் கடந்த மாதமாக எதிலும் சிரத்தையில்லாமல், விட்டேத்தியாக வலம் வந்தார்.
இதில் நாச்சியப்பன் வேறு போன் செய்து உமாபதி… நிஷாவை விரும்புவதைப் பற்றி போனில் பேசியிருந்தது, இன்னும் அவரை சலிப்பிலும், வருத்தத்திலும் தள்ளியது.
யாரை வேண்டாம் என அறவே வெறுத்திருந்தாரோ…., அவரது மகனையே விரும்புகிறேன். எனக்கு அவனையே திருமணம் செய்து வையுங்கள் என மகள் தன்னிடம் நேரிடையாகவே உரையாடியதை நினைத்து, இன்னும் அவரால் அதனை ஏற்றுகொண்டு ஜீரணிக்க முடியாமல் மனதுக்குள்ளேயே மாய்ந்து போனார் தந்தை.
எங்கிருந்து அஞ்சனாவுக்கு இவ்வளவு தைரியம் வந்தது. நாலு வார்த்தைக்கு மேல் எதிரில் நின்று பேச பயப்படும் மகள்…, இன்று தன் முன்னாடியே சட்டமாக எதிர்த்து பேசுகிறாளே… என்ற வேதனைதான் மனதில்.
மகளிடம் மட்டும் இல்லை.., வீட்டில்கூட யாரிடமும் பேசபிடிக்கவில்லை அவருக்கு. மனைவியிடம் அறவே பேச்சை நிப்பாட்டி இருந்தார். ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் நேரடியாக பேசாமல், சுவற்றை பார்த்தோ… இல்லையென்றால் லஷ்மியை நடுவில் வைத்தோ… உரையாட ஆரம்பித்திருந்தார்.
நாச்சியப்பன் பேச சொன்னதை நினைத்து மனதுக்குள்ளேயே தயக்கமும் யோசனையும்தான் அவருக்கு. அதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் மறுப்பு சொல்ல முடியாதே நண்பனிடம் என நிஷா வீ்ட்டாரிடம் பேச முடிவு செய்துகொண்டார் மனதில்.
வேல்முருகன் பயந்த அளவெல்லாம் நிஷாவின் வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் அதை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டார்கள். சொல்லப்போனால்…. இதில் அவர்களுக்கும் விருப்பம் இருப்பது போல் இருந்தது. பையனைப் பற்றியும், நாச்சியப்பனின் குடும்பத்தை பற்றியெல்லாம் அக்கறையாக விசாரித்து தெரிந்து கொண்டார்கள் பொறுப்பாக.
நாச்சயப்பன் அவர்களிடம் பேச விரும்புவதாக கூறியதற்கு…, சந்தோஷமாகவே விருப்பம் தெரிவித்திருந்தனர்.
வேல்முருகனுக்கே என்னடா… இது என்று இருந்தது. நாமதான் எல்லாத்துக்கும் ஓவரா ரியாக்ட் பண்றமோ… என்று இருந்தது அவருக்கு.
நாம எதிரே பார்க்கல. இப்படி சட்டுனு ஒத்துகிட்டாங்க… இவங்க என ஆச்சர்யப்பட்டார்.
நாட்களை தள்ளிப்போடாமல்… நல்ல நாள் பார்த்து நாச்சியப்பன் குடும்பமும் கிளம்பி வந்து சம்மந்தம் பேசி சென்றிருந்தனர். இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் வைத்துக்கொள்ளலாம், கல்யாணத்திற்கு முன்தினமே நிச்சயத்தையும் வைத்துக்கொள்ளலாம் என பேசி முடிவு எடுத்திருந்தனர் இரு குடும்பத்தினரும்.
இதில் அஞ்சனாதான் மிகவும் சந்தோஷப்பட்டாள். நிஷாவுக்கும் உமாபதியைப் பிடித்திருந்ததால், திருமணத்திற்கு சம்மதம் கூறியிருந்தாள். அவளைப் பொறுத்தவரை அம்மா அப்பா பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டும். அது உமாபதியாக இருந்ததில் இரட்டிப்பு சந்தோஷம் அவளுக்கு. தானே கனிந்து மடியில் விழும்போது, வேண்டாம் என மறுக்க அவள் என்ன முட்டாளா…? ஆக நிஷாவின் கல்யாணம் ஜெகஜோதியாக எல்லோருடைய ஆசிர்வாதத்துடன் உறுதியாகியிருந்தது.
மாப்பிள்ளை சரியான ரூட் எடுத்தான் போல. இவளை தேத்தி…, காதல் சொல்லி…., கனிய வைத்து…, ம்கூம்…., நாக்கு தள்ளிவிடும்…. என அவனுக்கே புரிய வைத்திருந்தாள் போல நம் நிஷா. ஆதலால்தான் கல்யாணத்திற்கு பின் காதலித்துக் கொள்ளலாம்… என தன் எண்ணத்தை மாற்றி, தன் விருப்பத்தை நேரிடையாக தாய் தந்தையிடமே முறையிட்டுவிட்டான் அந்த ஆகச் சிறந்தவன். அதுவும் சரியான பாதையில் சென்று, கல்யாணத்தில் கூடி நின்றது.
சில நாட்களாக அஞ்சனாவின் கவலையிலேயே லட்சுமி சரியாக சாப்பிடாமல்…, பிபிக்கான மாத்திரையும் எடுக்காமல்…., உடம்பை கெடுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு பகல்பொழுது டிவி பார்த்துக் கொண்டிருந்தவர், தாகமாக இருக்கிறது என தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தவர், மயங்கி தரையில் சரிந்திருந்தார்.
லட்சுமி தரையில் விழுந்த சத்தத்தை கேட்டு கிட்சனிலிருந்து எட்டிப் பார்த்த ரோகிணி, ஓடிவந்து அவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி உட்கார வைத்தார். லட்சுமி கண்திறந்து பார்த்தாலும்…. அவரால் சட்டென எழ முடியவில்லை. மனதோடு சேர்ந்து உடலும் பலமிழந்திருந்ததுபோல அந்த மூதாட்டிக்கு.
ரோகிணி பிரயத்தனப்பட்டு, மெல்ல அவரை பிடித்து தூக்கி அங்கிருந்த சோபாவிலேயே உட்கார வைத்தார் மெல்ல.
உடனே தாமதிக்காமல்… ஓடி சென்று கணவருக்கும் போன் செய்துவிட்டார். வேல்முருகன் வருவதற்கு முன் மருத்துவர் வந்திருந்தார் வீட்டிற்கு, வேல்முருகனின் அழைப்பில்.
மருத்துவர் லட்சுமியை பரிசோதித்து பார்த்து…, பிபி மாத்திரை எல்லாம் சரியாக எடுக்கிறீங்களா மா என வினவினார். அதற்கு லட்சுமி…. என்ன சொல்லுவார்? திரு… திரு… என முழித்தார் மருத்துவரின் முன்னால். அதிலேயே புரிந்துவிட்டது டாக்டருக்கு.
லட்சுமி கொஞ்ச நாட்களாகவே சரியாக சாப்பிடுவதும் இல்லை. மாத்திரையையும் ஒழுங்காக எடுப்பதில்லை. பேத்தியை நினைத்து இரவிலும் சரியாக தூங்குவதில்லை. இது எல்லாம் சேர்ந்து அவரை மயக்கத்தில் தள்ளியிருந்தது.
வந்திருந்த மருத்துவர்… அவர்களது குடும்பத்துக்கு தெரிந்தவர் என்பதால், லட்சுமியை “நல்லா சாப்பிட்டு…, தூங்கி…, மாத்திரையை ஒழுங்கா எடுத்தாலே, உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் வராது பாட்டிமா… நல்லா சாப்பிடுங்க..”. என அட்வைஸ் செய்து, மருத்துவம் பார்த்து சென்றிருந்தார். அதற்குள் வேல்முருகனும் வந்திருந்தார் அரக்க பரக்க வீட்டிற்கு.
மருத்துவர் கூறிச் சென்றதைக் கேட்டதும், வேல்முருகன் மனைவியைத் தான் முறைத்தார் கோவமாக. “ஆக்கறது இரண்டு பேருக்கு. இதுல அவங்க சரியா சாப்பிட்டாங்களா…? மாத்திரை போட்டாங்களான்னு கூட உன்னால கவனிக்க முடியாதா…? அப்படி என்னத்த வெட்டி முறிக்கற…?” என எகிறினார்.
வீட்ல நடந்த பிரச்சினையாலதான் அவங்க சாப்பிட மாட்றாங்கன்னா சொல்ல முடியும். இல்ல நீங்களும் உங்க மகளும் இப்படி எதிரும்… புதிருமா… முறைச்சிட்டு நின்னுட்டிருக்கிறதாலதான் கவலையா இருக்காங்கன்னு சொல்லிட முடியுமா…? உங்ககிட்ட.
அந்த தைரியந்தான் எங்கள மாதிரி வீட்டுல இருக்க பொம்பளைங்களுக்கு இருந்து தொலைஞ்சா…, நாங்க ஏன் இப்படி இருக்கோம்…? ப்பாஹ்… இன்னும் எவ்வளவு காலந்தான் மனசுல நினைச்சத வாய் திறந்து சொல்ல முடியாம அவஸ்தபடனுமோ… உங்ககிட்டயெல்லாம்… என மனதுக்குள்ளயே குமைந்து போனவர், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை தன் மன கொந்தளிப்பை.
“அஞ்சனா ஊருக்கு போனதிலிருந்து… அவங்க சரியாவே சாப்பிடறது இல்லைங்க. நானும் அவங்ககிட்ட எத்தனையோ முறை பேசி பார்த்துட்டேன்… அவங்க சாப்பிட மாட்டேன்றாங்க……”
“இத இத்தனை நாள் என்கிட்ட சொல்லாம கிழிச்சிட்டிருந்தியா…? இன்னைக்கு அவங்க படுத்ததுக்கு… அப்புறம் வாயைத் திறக்கிற…” என எரித்தார் பார்வையால் மனைவியை.
லட்சுமி, “டேய் அவளை எகிறாத…. நாந்தான் சொல்லவேணாம்னு சொல்லி வச்சிருக்கேன். வெளியில அலைஞ்சுட்டு வரவன்கிட்ட இதெல்லாம் சொல்லிட்டிருக்காதன்னு, அவளை கட்டுப்படுத்தி வச்சுருக்கேன்”.
“அவள் உன்கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டி உருட்டி சாப்பிட வைக்கிறதாலதான் பாதி சாப்பாடாவது என் தொண்டையில இறங்குது…” என்றார் முனகலான குரலில்.
“ஏன்… ம்மா… இப்படி சாப்பிடாம இருந்து உடம்பை கெடுத்துக்கறே….? டாக்டர் என்ன சொல்லிட்டு போனார் பார்த்தல்ல. நல்லா சாப்டுட்டு மாத்திரை போட்டாலே போதும், உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லன்னு திட்டிட்டு போறார்…”
“ம்..க்கும்… இருந்து என்னத்த பண்ணப்போறேன்….?” என்றார் முனகாலக
“ம்மா…. என்ன பேசற….?”
“பின்ன…, நான் எதுக்குடா இருக்கனும்? இருந்து என்னத்த பண்ண போறேன்? இருக்கறது, ஒரு பேத்தி. அதுக்கும் கண்ணுக்கு இலட்சணமா கல்யாணம் பண்ணி… பார்க்க முடியல. நான் இனிமே இருந்து என்னத்த வாரி கட்டிக்க போறேன்….?”
“சும்மா எதையாவது உளறாதமா…., உன் பேத்தி திமிர் கொண்டுபோய் திரியறான்னா… நானும் அதுக்கு ஒத்து ஊதனுமா…?”
“என்னடா பேசற…? வாயிருக்குன்னு எதையாவது பேசாத வேலு. ஒத்த பிள்ளைய பெத்து வச்சிருக்கடா… நீ. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு, கருவேப்பிலை கொத்தாட்டம்…, ஒரே ஒரு பிள்ளைய… வச்சிருக்கோம்பா நாம. அதுக்குகூட நம்மால ஒரு கல்யாணம் காட்சி பண்ணி பார்க்க முடியலையே…..ன்னு என மனசு கிடந்து தவியா தவிச்சிட்டிருக்கு. இதுல நான் இருக்கனுமாம்… நான் இருந்து என்னத்த சாதிக்க போறேன்…, போயிட்டு போறேன்……… போ”.
“ம்மா… என்ன பேசற…….? அவள் கொழுப்பெடுத்து திரிஞ்சா… அப்படியே விட்டுட சொல்றியா…? அப்ப அப்பனா எதுவுமே கேட்ககூடாதா… நான்…?”
“நல்லா கேளு சாமி. யார் உன்ன கேட்க வேணாம்னு சொன்னா. நல்லா… கேளு. ஆனால் அத கேட்கற முறைன்னு ஒன்னு இருக்குல்ல. இன்னும் பொறுமையாகூட பேசியிருக்கலாம்”.
நீ அன்னைக்கு ஆடன ஆட்டத்துல நானே ஆடிப்போயிட்டேன். சின்னப்பிள்ளடா…. அது. இதுவரைக்கும் என் பேத்திய… ஒரு சொல் சொன்னதில்ல நான்.
ஆனால்…, அன்னைக்கு நீ… என் தங்கத்த கை நீட்டி…” என சொல்ல முடியாமல் தவித்தவர், “பிள்ளை அப்படியே தெவச்சு நின்னுட்டா… தெரியுமா… நீ அடிச்ச வேகத்துல. என் உசுரே உறைஞ்சு போச்சு அந்த நிமிஷம்”.
“பிள்ள என்ன பண்றாளோ…? ஏது பண்றாளோ…? மனசே ஆற மாட்டேன்னுது. தனியா வேற இருக்கா… இதையே நினைச்சு சாப்பிட்டாளோ… என்னமோன்னு என் மனசுக்குள்ள… நான் அழறது எனக்குதான் தெரியும்…” என கண் கலங்கினார் பேத்தியை எண்ணி.
“கொஞ்சமாவது தெரிஞ்சுதான் பேசறியா…. ம்மா… நீ…? உன் பேத்தி பேசினதை எல்லாம் நீயும் கேட்டுட்டுதான இருந்தே….?”
“கேட்டன் தான். கேட்டன்தான் சாமி. அப்பனா உனக்கு வலியிருக்குந்தான். இல்லேன்னு சொல்லல. என்ன பண்ண சொல்றே…….? நாம என்ன இரண்டு…, மூனா… பெத்து வச்சிருக்கோம். ஒன்னே ஒன்னு. ஆசைப்பட்டுடுச்சி. என்ன பண்றது…? நீயோ… நானோ… வாழப்போறது இல்லையே”.
“அது வாழ்க்கை. அது ஆசைப்பட்ட மாதிரியே கட்டிவைச்சுடு பா…” இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வீம்பு பிடிவாதம் எல்லாம். எல்லாரும் ஒரு நாளைக்கு மண்ணுக்குள்ள போகதான போறோம். உன் கோவத்தை எல்லாம் விட்டுத் தள்ளிட்டு, பிள்ளய பாரு வேலு. பிள்ளையோட வாழ்க்கைய பத்தி யோசி… வேலு…”
“ஓஹ் அப்ப நீங்க எல்லாம் ஒரு கூட்டு. நான் மட்டும்தான் தனி…”
“என்ன… வேலு இப்படி பேசறே…? உனக்காகதான நாங்க எல்லாம் அமைதியா இருக்கோம். புரிஞ்சுக்கோப்பா…”
“உங்கப்பாவுக்கு அப்புறம் உன்னை மார்லயும் தோள்லயும் போட்டு வளர்த்ததெல்லாம் மறந்துட்டு பேசறியா… நீ… இன்னைய காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி நாமளும் கொஞ்ச மாறிக்கதான் வேண்டியிருக்கு… இன்னும் பிடிவாதமா பழசையே பேசி வீம்பு பிடிச்சிட்டிருந்தா… ஆயிடுமா…? பிள்ளைய பார்க்க வேணாமா… நம்ம பிள்ளைடா அது…”
“என்னைப் பத்தி தெரிஞ்சு… நீயும் இப்படி பேசறியே ம்மா… இதுவரைக்கும் என் பொண்ணு ஆசைப்பட்டதுக்கு எதிரா… என்னத்த நான் பண்ணியிருக்கேன்…? எல்லாம் அவள் ஆசைப்பட்டமாதிரிதானே செஞ்சு கொடுத்தேன்… இதுவரைக்கும்…”.
“படிக்கிறதுல இருந்து… வேலைக்கு போனது வரைக்கும் அவளோட இஷ்டப்படிதான அமைச்சு குடுத்தேன். ஆனால் இந்த விஷயத்துல என்னை வற்புறுத்தாத ம்மா….”
“எனக்கும் பிடிக்கலதான். என்ன பண்ண சொல்றே…..? அதுக்காக வயசுப்பிள்ளைய… எத்தனை காலம் இப்படியே கட்டிக் குடுக்காம வச்சிட்டிருக்க போறே…? அவள் வைராக்கியத்தை பத்தி தெரியுமில்ல. பிடிவாதத்தில உன்னையே மிஞ்சிடுவா….”
“நீ…. இதுக்கு சம்மதிக்கலனா காலம் முழுசும் இப்படியே இருப்பாளே தவிர, இன்னொரு பையனை நினைச்சுகூட பார்க்க மாட்டாள். என் பேத்திய பத்தி எனக்கு நல்லா தெரியும். யோசிச்சு நல்லா முடிவா… எடு வேலு”.
“நீ சொல்ற மாதிரி அப்படியே அவளை கட்டிகுடுத்தாலும்…, நாம அங்க போகவர இல்லாம இருக்க முடியுமா…? அவங்களோட என்னை இளிச்சுட்டு உறவாட சொல்றியா….? என்னால முடியாது”.
“மறுபடியும் சொல்றேன். உன் பிடிவாதத்திலே நிக்காத. அவளை கொஞ்சம் யோசிச்சு பாரு. வறட்டு பிடிவாதத்தை விட்டுட்டு… காலா காலத்துல…. நல்லது பண்ற வழிய பாரு பா. நானும் என் பேத்தி கல்யாணத்தை கண்ணார பார்த்துட்டு கண்ண மூடுவேன்”.
“ம்ப்ச்… முதல்ல நீ ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரைய போடு”.
“நீ என் பேத்தி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு. எனக்கு யானை பலம் வந்துரும்”.
“ஏன் ம்மா…? என் வார்த்தைக்கு மதிப்பே இல்லையா…., திரும்ப திரும்ப அதையே பேசி உயிர வாங்கற……?
“அப்படி சொல்லாதடா…. உன்னை மதிக்கிறதாலதான்… நாங்க யாரும் வாயை திறக்காம பொறுமையா இருக்கோம். என் பேத்தி என்ன தப்பு செஞ்சா…? உரிமைப்பட்ட இடத்துலதான ஆசைப்பட்டா…., ஊர் பேர் தெரியாதவனையா கூட்டிட்டு வந்தா…, சொந்த தாய்மாமன் பையன். கட்டிக்கிற முறை. அவளுக்கு பிடிச்சுருக்கு. கட்டிவைன்னு கேட்கிறாள்…?”
“பெத்தவன்கிட்ட தானடா கேட்கிறா….? அவளேவா போய் பேசுனா…? இதுவரைக்கும் ஒருத்தர் குறை சொல்லி பேசற மாதிரி நடந்திருப்பாளா…. என் பேத்தி. என் வளர்ப்புடா…. வீண் போகாதுபா. அவள் பத்திரமாத்து தங்கம்”.
“என் ராஜாத்திய அவள் ஆசைப்பட்டவனுக்கே கட்டி கொடுத்துடு. அவள் கூட படிச்சு, அவள் கூடவே ஒன்னா சுத்திட்டிருந்த அந்த நிஷா பொண்ணுக்குகூட கல்யாணம் கூடிடுச்சு”.
“நாம நினைச்சோமா இதெல்லாம் நடக்கும்னு. பட்டுன்னு, அந்த பொண்ணுக்கு சம்மந்தம் கூடிடுச்சு பார்த்தியா…? உன் பிரண்ட்தான அவன். பாரு கட்டிக்கப்போற பையனுக்கு பொண்ணை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதுமே…, எவ்வளவு பெருந்தன்மையா பேசி முடிச்சிட்டாங்க….”
“அதுதான்..பா… கௌரவம். இப்பலாம் காலம் மாறிடுச்சு. காலத்துக்கு தக்கமாதிரி நாமளும் சிலதை மாத்திகிட்டுதான் ஆகனும்”.
“இன்னும் பழசையே பிடிச்சு தொங்கிட்டிருந்தா வேலைக்கு ஆகாது” என்றவர், திரும்பி மருமகளைப் பார்த்து…, “ரோகிணி உன் அண்ணனுக்கு போனை போட்டு வரச்சொல்லு….” என்றுவிட்டார் லஷ்மி மகனை எதிர்பார்க்காமல்.
“ம்மா…..ஆ….” என கண்டனமாக முறைத்துப் பார்த்தார் தாயை வேல்முருகன்.
“சும்மா இருடா….. இத்தனை நாள் நீ பேசறத எல்லாம் நான் பொறுமையா கேட்டுட்டு இருந்தேன் இல்ல. இந்த விஷயத்துல என்னை மறுத்து எதுவும் நீ பேச கூடாது… சொல்லிட்டேன்”.
“என்னை நீ உண்மையிலேயே மதிக்கிறவனாயிருந்தா…. பெத்தவ வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கறவனாயிருந்தா…. எதுவும் சொல்லக்கூடாது சொல்லிட்டேன். பேசாம இருக்கனும் ஆமாம்… என பேத்தியின் வாழ்வை தீர்மானிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்திருந்தார் லஷ்மி பாட்டி.
குடும்பம் என்பது இதுதானே. ஒருத்தர் எகிறும் போது, மற்றவர் அடங்கி அனுசரிப்பதால் தானே இன்னும் ஏனைய குடும்பங்கள் சரிந்து நலியாமல் தழைத்திருப்பதின் அடித்தளமே.
“என்ன அப்படியே பார்த்துட்டு நிக்கற…? போ… போய் போனைபோட்டு… உன் அண்ணன் அண்ணிய வரச்சொல்லு. சம்மந்தம் பேச….” என்றார் லட்சுமி மருமகளைப் பார்த்து.
இத்தனை வருட பொறுமையான வாழ்க்கைக்கு வரம் கிடைத்ததுபோல, இவ்வளவு நேரம் மாமியாரின் பேச்சில் நெகிழ்ந்து…, கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த ரோகிணி… லட்சுமி போன் செய்ய சொன்னதும்…, ஆட்டமேட்டிக்காக கணவனைத்தான் திரும்பி பார்க்க தோன்றியது.
“அவனை என்னத்துக்கு பார்க்கிற…., நீ போன் பண்ணு……, இல்ல போனை போட்டு, என்கிட்ட கொடு. நானே பேசறேன்…”
சரி எனத் தலையசைத்த ரோகிணியின் கண்கள் இன்னும் கணவனின் மேல்தான் இருந்தது.
எதற்கும் வேல்முருகன் வாயே திறக்கவில்லை அமைதியாக அமர்ந்திருந்தார் அங்கேயே.
கணவர் ஏதாவது வாயைத் திறப்பாரா.. என சில நொடிகள் நின்று பார்த்த ரோகிணி…, அவர் எதுவும் கூறாததால்……, செல்வதுரைக்கு போன் போட்டு மாமியாரிடம் நீட்டினார்.
லஷ்மி, “ஹலோ…. யார் பேசறது…? தொரையா….”
சில நொடிகள் குரலை அடையாளம் கண்டுகொள்ள திணறிய செல்வ துரையிடம் லஷ்மியே…
“நான் லஷ்மி பேசறேன், தொரை” என பேச ஆரம்பித்து…, அவர்களை சம்மந்தம் பேச அழைப்பு விடுத்தார் போனிலேயே. இதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டிருந்தாலும், வேல்முருகன் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தார் அன்னையின் பக்கத்தில். மனதில் இன்னும் அவருக்கு வருத்தம் கூடிப்போனது. யாரும் என்னை மதிக்கவில்லையே என்று. எல்லாம் தன்னை மீறி நடப்பதாக அமைதியாக அமர்ந்திருந்தார்.
தான் இத்தனை காலம் சீரும் சிறப்போடு…, அருமை பெருமையாக வளர்த்த செல்ல மகளே…, தன்னை மதிக்கவில்லை… இவர்களை சொல்லி என்ன பயன் என சோர்ந்துவிட்டார் மனதினிலேயே.
என்னவோ தந்தைக்கு வாழ்க்கையே தன்னை வஞ்சித்ததுபோல, வெறுமை சூழ்ந்துகொண்டது சட்டென. தன்னுள்ளே தகிக்கும் உணர்வுகளை வெளியில் பகிர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் தகப்பனாக.
எல்லாம் தன்னை மீறி நடப்பதுபோல் கண்ணைக் கட்டி மாயம் செய்தது சூழ்நிலை, இத்தனை காலம் அன்பைக் கொட்டி வளர்த்த அந்த பெற்றவருக்கு. நடப்பது நடக்கட்டும் என அமைதியாகி விட்டார்.
செல்வதுரை மீனாவை அழைத்துக்கொண்டு, நல்ல நாள் பார்த்து வந்தார், தங்கையின் வீட்டிற்கு சம்மந்தம் பேச. ரோகிணியின் மனதில் கணவனை எண்ணி சஞ்சலங்கள் இருந்தாலும், வந்தவர்களை நல்ல முறையிலேயே வரவேற்று உபசரித்தார்.
லஷ்மி அதற்கும் ஒரு படி மேலே போய், மகனை எதற்கும் எதிர் பார்க்காமல் தானே முன் நின்று எல்லா வற்றையும் பேசி முடித்தார் வந்தவர்களிடம்.
லஷ்மியின் இந்த மாற்றம் புதுமையாக இருந்தது எல்லோருக்கும். எவரும் எதிர்பார்க்கவில்லை. பின்னே இருக்காதா…? பேத்தியின் மீது அவர் வைத்திருந்த உண்மையான அன்பு அவரை அடியோடு மாற்றியிருந்தது.
அனைவருக்கும் அவரின் இந்த அவதாரம் குறித்து அதிசயமே. மீனாதான் இன்னும் வந்ததிலிருந்து வாயை மூடாமல் ஆங்… என ஆச்சர்யமாக பார்த்திருந்தார் நாத்தனாரின் மாமியாரை.
எல்லாவற்றையும் தங்கையின் மாமியாரோடு சுமூகமாகவே பேசி முடித்த செல்வதுரை, முறைப்படி எல்லோரையும் அழைத்துக் கொண்டு பெண்பார்க்க வருவதாக சொல்லி சென்றிருந்தார்.
வேல் முருகனுக்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும், மகளுக்காக மனதை தேத்திக் கொண்டார்போல. அப்படிதான் இருந்தது அவரது நடத்தை அனைத்தும்.
பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது போல, மகள் அவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தாள்போல உள்ளுக்குள்ளேயே.
அடுத்த கொஞ்ச நாட்களிலேயே செல்வதுரை சொந்த பந்தகளோடு தங்கையின் பெண்ணை பெண் பார்க்க வந்திருந்தார். தன் மகன்கள் மருமகள்களுடன் உற்றார் உறவினரை அழைத்துகொண்டு, தங்கையின் வீட்டிற்கு கோலாகலமாக வந்து இறங்கியிருந்தார் தாய்மாமன் திருவிழா கோலத்தில்.
இத்தனை நாள் இருந்த மனக்கசப்பு எல்லாம் தீர்ந்து, மீண்டும் தங்கையின் குடும்பத்தோடு இணைந்துவிட துடித்த அவரது எண்ணத்திற்கு ஜெயம் வந்தது போல அவரது ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் பூரிப்பு பொங்கி வழிந்தது. மீனாவும் அதற்கு சற்றும் குறையாமல் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் வளைய வந்தார்.
தொடரும்.
error: Content is protected !!