வசந்தங்கள் வாடுவதில்லை 21
தங்கையின் மாமியார் லஷ்மியே, அவருக்கு போன் செய்து இவர்களை வரச்சொல்லி சம்மந்தம் பேசியது மனதிற்குள் உற்சாகத்தையும், நிறைவையும் கொடுத்தது செல்வதுரைக்கு.
லஷ்மிதான் முட்டுக்கட்டையாக இருப்பார் என பயந்துகொண்டே இருந்ததற்கு நேர்மாறாக, அவரே முன்வந்து, சம்மதம் சொல்லி, திருமணத்தைப் பற்றி பேசி முடித்தது, செல்வதுரைக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றால், மீனாவுக்கு ஆச்சர்யம்தான் இதுவரை. இன்னும் நம்ப முடியாமல்தான் வலம் வந்தார்.
குடும்பத்தினர் எல்லோரும் மனமொத்துவந்து…, இதோ இன்று… முறைப்படி, அஞ்சனாவை பெண் பார்க்க வந்திருந்தனர். அப்படியே பூ முடித்து, கைத்தாம்பூலமும் மாற்றி நிச்சயித்துக்கொள்ளும் முடிவோடு வந்திருந்தனர். தங்கை வீட்டில் திருமணத்திற்கு சம்மதித்த உடனே நாளைக் கடத்தாமல்…, நிச்சயத்தை கையோடே முடித்துவிட எண்ணினார் செல்வதுரை.
அவருக்கு உள்ளுக்குள், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்த்து. ஆதலால், பெண் பார்க்கும் அன்றே…., கையோடே கைத்தாம்பூலம் மாத்தி நிச்சயத்துக்கொள்ள முடிவு செய்திருந்தார்.
Advertisement
கல்யாணத்தை சிறப்பாக செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டார் வீட்டினருடன் கலந்து பேசி. அவரது எண்ணத்துக்கு தங்கையின் வீட்டாரும் ஒத்துவரவே…, எதையும் தள்ளிப்போடாமல்…, நல்ல நாள் குறித்து எல்லோரையும் அழைத்துகொண்டு வந்துவிட்டார்.
அஞ்சனாவின் வீடே திருவிழா கோலம் பூண்டது போல எங்கும் ஜே ஜே என உறவினர் கூட்டம் நிறைந்து வழிந்தது. செல்வதுரையின் சொந்தங்கள் மட்டுமில்லாமல், வேல்முருகனின் உறவினர்களும் வருகை தந்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் அந்த ஊர் பெரிய மனிதர்கள், அக்கம் பக்கத்தினர் என ஒரு படையே அங்கு திரண்டிருந்தது அவர்களது வீட்டில்.
தோட்டத்தில் பந்தலிட்டு பெரும்படியாக சமையல் நடந்து கொண்டிருந்தது வந்திருந்த எல்லோருக்கும். ஒருபக்கம் வந்தவர்களுக்கு காப்பி, டீ ஜூஸ் என குடிப்பதற்கு ஏதுவாக யாருக்கு என்ன வேண்டுமோ…, கேட்டு கேட்டு உபசரித்துக் கொண்டிருந்தனர்.
Advertisement
வேல்முருகனுக்கு இந்த சம்மந்தத்தில் விருப்பம் இல்லையென்றாலும், எங்கும் எதிலும் விட்டுக் கொடுக்காமல்… மகளுக்கு தடபுடலாகவே செய்து கொண்டிருந்தார். ஒரு பக்கம் பெண்ணின் மீதான பற்று என்றாலும், இன்னொரு பக்கம் குடும்ப கௌரவத்தை யாரிடமும் விட்டுக்கொடுக்க அவருக்கு மனமில்லை.
Advertisement
கோவம் இன்னும் பெண் மீது இருக்கத்தான் செய்தது. ஆனாலும் எதையும் தந்தையாக தள்ளி வைக்கவில்லை. செய்ய வேண்டிய முறைகளை சரியாக செய்துகொண்டிருந்தார்.
ஆனால் தங்கையை கட்டிய மாப்பிள்ளையாக செல்வதுரையிடம் இன்னும் முறுக்குதான் காட்டி நின்றார். அதிலெல்லாம் தணிந்துபோக வேல்முருகனுக்கு மனதில்லை. உனக்கு நான் தாழ்ந்தவன் இல்லை என்ற ஈகோ வந்திருந்தது போல பெண் கொடுக்கும் மச்சானிடம். ஆதலால் எதிலும் உனக்கு சளைத்தவன் நானில்லை… என்ற வீம்பும் இருந்தது அவரது செயலில்.
இருந்தாலும் வந்திருந்த மாப்பிள்ளை வீட்டினரை எல்லாம்…, இன்முகத்தோடே வரவேற்று உபசரித்தார். அவரது வீம்பு எல்லாம் செல்வதுரையிடம் மட்டுமே. மச்சான் மேல் இருந்த வருத்தம் குறையவில்லை. ஆதலால் செல்வதுரையிடம் மட்டும் பிடிகொடுக்காமலே இருந்தார் மாப்பிள்ளை.
Advertisement
செல்வதுரைக்கும் வேல்முருகனின் மனவருத்தம் புரிந்திருந்தது. அதனால் வேல்முருகனை எதற்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இதமாகவே நடக்க முயன்றார்.
வேல்முருகனுக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்ததிலிருந்து, மாப்பிள்ளையின் மேல்தான் கண் இருந்தது. எங்கே சுற்றி எவரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் பார்வை எல்லாம் வரப்போகும் மருமகனிடம்தான். இதுவரை அவனை தூரமாக… இருந்து ஒரிரு சமயம் வெளியிடங்களில் பார்த்திருந்தாலும்…, இன்றுதான் பக்கத்தில் நின்று மருமகனை பார்க்க முயன்றார்.
மகள் இவ்வளவு பிடிவாதமாக வேண்டி விரும்பி, திருமணம் செய்துகொள்ள எண்ணுபவனை, அலசி ஆராய முயன்று கொண்டிருந்தார் போல கண்களாலேயே.
ம்ம்… ஆள் நல்லா வாட்ட சாட்டமா……, பார்க்கறதுக்கு கம்பீரமா…. நல்லாதான் இருக்கான். ஆனாலும் அப்படியொன்னும் பெரிய அழகில்லையே.
நான் பார்த்திருந்த மாப்பிள்ளைய… எல்லாம் கம்பேர் பண்ணிப் பார்த்தா… இவன் சுமார்தான். அப்படியென்ன இருக்குன்னு இவனை என் பொண்ணுக்கு பிடிச்சிருக்கு…
வேல்முருகனுக்கு மருமகனை மனதுக்கு பிடித்திருந்தாலும், இன்னும் திருப்தியாகாமல் ஏதோ குறைவதாக உணர்ந்தார் மனதுக்குள்ளேயே. தந்தையின் மனது பெண்ணுக்கு நிகரான அழகை மருமகனிடம் எதிர்பார்த்தது போல.
அவர் நினைத்ததும் உண்மைதான். அவர் பார்த்த மாப்பிள்ளைகள் எல்லாம் சினிமா ஹீராக்களைப்போல அவ்வளவு அழகாக இருந்தனர். அழகுடன் சேர்ந்து, வேலை, வசதி எல்லாவற்றிலும் உசத்தியாகதான் பெண்ணிற்கு வரன் தேடிப் பிடித்திருந்தார்.
அஞ்சனாவின் அழகுக்கு ஈடாக……. மாப்பிள்ளையும் அழகாக இருக்கவேண்டும் என நினைத்து….., அதுபோலவே எல்லாவற்றிலும் பொருத்தமாக அலசி தேடி பிடித்திருந்தார், இருந்தாலும் பெண்ணுக்கு இவனைத்தானே பிடித்திருக்கிறது. அவரது ஆசை நிராசையானதுதான் மிச்சம்.
என்ன செய்வது. இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் முடிவு செய்வது இல்லையா……..?
இப்பொழுதுகூட தேவநாதனை பிடித்திருந்தாலும்…, அவரால் மனதளவில் இன்னும் அவனை பெண்ணுக்கு கணவனாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துகொண்டுதான் நின்றிருந்தார்… அந்த பாசகார தந்தை. மனதின் தடுமாற்றத்தை முகத்தில் காட்டாமல் தேவநாதனை சிரித்த முகமாகவே வரவேற்று, அவனிடமும் சில வார்த்தைகளை பேசியிருந்தார்.
மாப்பிள்ளையின் சகோதரர்களான கார்த்திக், விவேக் இவர்களையும் இன்முகமாகவே வரவேற்று உபசரித்தவருக்கு, மேற்கொண்டு சகஜமாக பேச பாவம் அவருக்கும் வரவில்லை. அவர்களுக்கும் அதற்குமேல் அவரிடம் என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாகிவிட்டனர். எல்லோருக்கும் இது தர்ம சங்கடமான சூழ்நிலைதான்.
இத்தனை வருட விரிசலை ஒரே நாளில் ஒட்ட வைக்க முடியுமா என்ன…? அவர்களுக்கு எப்போதோ விவரம் தெரியாத வயதில், அத்தை மாமாவைப் பார்த்தது. அது எல்லாம் இப்போது நினைவிலும் இல்லை.
ஆண்களுக்குதான் இந்த சங்கடங்கள் எல்லாம். பெண்களுக்கு ஒன்றும் இல்லை போல. அவர்கள் சகஜமாகவே இருந்தனர் எல்லோரிடமும்.
மருமகள்களான கீர்த்தியும், காஞ்சனாவும் மீனாவுக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டு சுற்றி பெரியவர்கள் பேசுவதை எல்லாம் ஆர்வமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சபையின் நடுவில் தட்டுக்கள் பரப்பி…, அதில் பெண்ணுக்கான சீர்வரிசைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
கீர்த்தி, “ம்க்கும்…. க்கா…..”
காஞ்சனா, “ஹ்ம்ம்….”.
“நம்மளவிட வசதியானவங்களா இருப்பாங்கபோல…, வீடே இவ்வளவு பெரிசாயிருக்கு”.
“வீட்டைச் சுற்றி கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்த காஞ்சனா… “ம்ம்… இப்ப என்ன அதுக்கு”. என்றாள் புகைச்சலுடன். இருக்காதா பின்னே. தங்கையை தேவாவுக்கு எப்படியும் முடித்துவிடலாம் என கணக்கு போட்டவளுக்கு, அது இல்லை என்றானதில் உண்டான கடுப்பு அவள் பேச்சில் தெரிந்தது.
கீர்த்தி வேறு சும்மாயிருக்காமல் எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல “தேவாக்கு லக்குதான்… இல்ல. ஒரே பொண்ணு…, மொத்த சொத்தும் அவனுக்குதான். அடிச்சது ஜாக்பாட் அவனுக்கு” என்றாள் கண்களை சிமிட்டி சந்தோஷமாக காஞ்சனாவிடம்.
காஞ்சனா திரும்பி கீர்த்தியை முறைத்து பார்த்தாள்.
“என்னை… ஏன் க்கா… முறைக்கிறீங்க…? உண்மையதானே சொன்னேன். கொழுந்தனாருக்கு எங்கயோ… மச்சம் இருக்கு. இல்லாட்டினா இத்தனை வருஷமா உறவேயில்லாம இருந்தவங்க… தானே தேடி வந்து, பொண்ணையும் கொடுத்து… சொத்தையும் கொடுத்து…, ம்ம்… இதெல்லாம் நூத்துல ஒருத்தருக்குதான் நடக்கும். சும்மா சொல்லக்கூடாது, நிஜமாவே அதிர்ஷ்டக்காரன்தான்”.
“பொண்ணும் ஜம்முன்னு நல்லா அழகாயிருக்கா…, நம்மள மாதிரி படிச்சிட்டு வீட்டுல இருக்காம.., வேலைக்கும் போறாள். இதோ மாமா நினைச்சபடி இரண்டு குடும்பமும் ஒன்னு சேர்ந்துடுச்சு….” என ராகம் படித்தாள், காஞ்சனாவிடம்
“வாயை மூடிட்டு சும்மா இருக்க மாட்டியா… நீ”.
“க்கா… இங்க ஏதோ தீஞ்ச வாசனை அடிக்கல… என்ன முறைக்கறீங்க? கிண்டலுக்கு சொல்லல க்கா… நிஜமாதான் சொல்றேன். சரி. அதை விடுங்க.., பொண்ணை எப்ப கண்ணுல காட்டுவாங்க…ளாம்…”
கீர்த்திக்கு ஒரு சான்ஸ் இது. காஞ்சனாவை வெறுப்பேற்றிப் பார்க்க. என்ன இருந்தாலும் குடும்ப அரசியல் இருக்கதானே செய்யும். எப்பவும் தான் அந்த வீட்டின் பெரிய மருமகள் என்ற கர்வம் காஞ்சனாவுக்கு சற்று அதிகமுண்டு. அது அவளது செயலில் சில சமயம் வெளிப்பட்டு கீர்த்தியை காயப்படுத்துவதுண்டு.
இருவரும் மாமியார் மெச்சிய நல்ல மருமகள்தான். அவர்களுக்குள்ளும் ஒத்து போவார்கள். சில சமயங்களில் கருத்து வேறுபாடுகளில் உரசி நிற்பதும் உண்டு. இருந்தும் குடும்பத்தை ஒட்டி அனுசரித்து போகவும் பழகியிருந்தனர்.
காஞ்சனா மூத்த மருமகளுக்கேற்ற அத்தனை இலட்சணங்களும் பொருந்திய பொறுப்பான மருமகள்தான். அதில் எந்த குறையும் சொல்ல முடியாது.
மாமியாருக்கு அடுத்து அந்த குடும்பத்தை பொறுப்பாக நிர்வகித்து கொண்டிருப்பவள் அவளே. குடும்ப வேலைகள் மொத்தமும் அவள் தலையில் விழுந்தாலும் சலிப்பின்றி ஒவ்வொருத்தரின் பிடித்தம் அறிந்து அவர்களை கவனிப்பதும், குழந்தைகளைப் பார்ப்பதும் என எப்பொழுதும் பம்பரம்தான் அவள் வீட்டில்.
கீர்த்தி செய்வாள். ஆனால் காஞ்சனா அளவு எதையும் சிரத்தை எடுத்தெல்லாம் செய்ய வராது. முடிந்தளவு செய்து தருவாள். காஞ்சனாவும் எதையும் அவளிடம் எதிர்பார்க்கமாட்டாள். தங்கையாக பாவித்துதான் உருகுவாள். இருந்தும் சில சமயங்களில் அவளையும் அறியாமல் மூத்த மருமகள் என்னும் பந்தா வெளிப்படுவதுண்டு தானாகவே. அது அவள் இயல்பு. மாற்றவும் முடியாது.
எத்தனை உரசல்கள் வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் மாமியார் மெச்சிய மருமகள்தான். அதில் இரண்டுபேரும் சமத்து.
“வாயை வச்சிட்டு சும்மாவே இருக்கமாட்டியா… நீ, உன்கூடதான நானும் உட்கார்ந்திருக்கேன். எனக்கு மட்டும் என்ன தெரியும்..?”
“நாம வந்தே ஒரு மணிநேரத்துக்கு மேல ஆகப்போகுது. யாரும் பொண்ணை கூட்டிட்டு வரமாதிரியே தெரியலயே… நாம வேணா.. உள்ளேயே போய் பார்த்துட்டு வருவமா…?”
“வரும்போது வரட்டும். என்ன அவசரம் உனக்கு…?” என எரிச்சலானாள்.
காஞ்சனாவுக்கு தனது தங்கை இருக்கவேண்டிய இடத்தில், அஞ்சனா வருவதை நினைத்து எரிச்சலில் இருந்தாள். அது தெரியாமல் கீர்த்தி காஞ்சனாவிடம் பேசியது இன்னும் எரிச்சலைத் தூண்டியது. காஞ்சனாவின் குரலில் வித்தியாசத்தை உணர்ந்த கீர்த்தி நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
லஷ்மி ரோகிணியிடம் கண்ணைக் காட்டி, பேத்தியை அழைத்து வரச் சொன்னார். ரோகிணியும் தலையசைத்து உள்ளே சென்றார். அறையினுள் அஞ்சனாவும் நிஷாவும் ரெடியாகி உட்கார்ந்திருந்தனர்.
“என்னடா ரெடியா…? அங்க எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க…” என அவர்களைப் பார்த்து புன்னகைத்த ரோகிணி….. “ம்ம்… இப்பதான் என் பொண்ணு முகத்துல கல்யாண கலையே வந்திருக்கு…” என திருஷ்டி எடுத்தவர், “அழகாயிருக்கடா……. இப்படியே எப்பவும் சந்தோஷமா இருக்கனும்….” என்றார் பூரிப்புடன்.
“அய்யோ அத்தை… டயலாக் ஓல்டா இருக்கு…. புதுசா டிரண்ட்ல இருக்க மாதிரி ஏதாவது சொல்லுங்க….”
நிஷாவைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே.., “அவளது தோளில் தட்டியவர்… வாலு… அவளை அழைச்சிட்டு வா.., அங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டிருக்காங்க…” என அஞ்சனாவின் ஒருபக்கம் நிஷாவும், மறுபக்கம் ரோகிணியும் கைப்பிடித்து அழைத்து வந்தனர்.
சாதாரணமாகவே அழகாக இருப்பவள்.., இன்று புதுப்பெண்ணுக்கான பொலிவில் மெருகேறியிருந்தாள். லஷ்மியின் பக்கத்தில் வந்து நின்றவள், அவர் சொல்லிக் கொடுத்தபடியே எல்லோரையும் வணங்கிவிட்டு… புன்னகை முகமாகவே அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். நிஷாவும் ரோகிணியும் அஞ்சனாவுக்குப் பின்னால் நின்று கொண்டனர்.
சபையில் இருந்த எல்லோரது பார்வையும் அஞ்சனாவின் மீதுதான் இருந்தது. செல்வதுரை மருமகளை மெச்சுதலான ஒரு பார்வைப் பார்த்து…., மீனாவைத் திரும்பி பார்த்தார்.
கணவனின் பார்வையில் சற்று கர்வம் இருந்தது போல மனைவிக்கு. இருக்காதா… பின்னே? தான் நினைத்ததை நடத்திக் காட்டிய நிமிர்வு நிறையவே தெரிந்தது… தங்கையின் அண்ணனாக செல்வதுரையிடம்.
“ம்ம்….. சாதாரணமாவே தங்கச்சின்னா… இந்த மனுசன பிடிக்க முடியாது. பாசத்துல பொங்குவார்…., இப்ப அவர் நினைச்ச மாதிரியே தங்கச்சி பொண்ணே மருமகளா வரப்போவுது… இனி இந்த மனுஷன… அசைக்க முடியாது” என இருந்தது மீனாவுக்கு.
தேவநாதனின் பார்வை மொத்தமும் அத்தை மகளிடம்தான் இருந்தது. அவனுக்கு இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. என்ன முயன்றும் சில கேள்விகளுக்கு பதிலில்லை அவனிடம். யாரிடம் இதையெல்லாம் வெளிப்படையாக பேசுவது என தெரியாமல் மனதினிலேயே பூட்டியிருந்தான் விடை தெரியாமல்.
அஞ்சனாவுக்கு ஏற்கனவே பார்த்து முடித்த மாப்பிள்ளை என்னானது. திடுதிடுப்பென்று தங்களை அழைத்து ஏன சம்மந்தம் பேசவேண்டும் என அவனுக்கு மண்டை குடைந்தது.
இதில இவளுக்கு நம்மள கல்யாணம் செஞ்சுக்கறதுல விருப்பமா….? இல்லை அத்தைக்காக, அவங்க பிடிவாதத்துல இந்த கல்யாண ஏற்பாடுகள் நடக்குதா…… என தவித்துக்கொண்டிருந்தான் மனதுக்குள்ளேயே ஆண்மகன்.
ஆம் லஷ்மி அப்படிதான் பேசியிருந்தார் செல்வதுரையிடம். பேத்தியை எங்கும் விட்டுக்கொடுக்க அவருக்கு மனமில்லை. அஞ்சனாவே விரும்பி தேவநாதனை திருமணம் செய்துகொள்வது அவர்களுக்கு தெரியவந்தால் எங்கே தன் பேத்தியை இளக்காரமாக நினைத்து விடுவார்களோ…,? தங்களை இன்னும் கீழ் இறக்கி பார்ப்பார்களோ…? என்ற பயம் இருந்தது நெஞ்சுக்குள்.
அதனால்தான் ரோகிணியின் விருப்பப்படி அவரது ஆசையின்படி அண்ணன் மகனுக்கே பேத்தியை மணமுடிக்க, அவர்களை அழைத்து பேசுவதுபோல் பேசியிருந்தார். யாரிடமும் மூச்சுவிடவில்லை. வீட்டில் நடந்த எந்த விஷயத்தையும்.
மருமகளிடமும் கண்டிப்பாக கூறியிருந்தார். எதையும் யாரிடமும் சொல்லக்கூடாது என்று. ரோகிணிக்கும் மாமியாரின் தவிப்பு புரிந்ததால் மறுக்காமல் தலையசைத்திருந்தார். பேத்தியையும் அதைச்சொல்லியே வாயை மூட வைத்திருந்தார்.
அவனைப் பொறுத்தவரை ரோகிணியின் பிடிவாதத்தில்…, வற்புறுத்தலில் தான் இந்த திருமணம் நடக்கவிருக்கிறது என நம்பினான். ஆதலால்தான் அஞ்சனாவின் முகத்தையே பார்த்திருந்தான். எங்கே அவள்தான் நிமிரவில்லையே அவன் பக்கமே.
வேல்முருகனின் தந்தை வழி உறவினரில் ஒருவர், கிண்டலாக “அப்புறம் என்னயா… மாப்பிள்ளையும் மச்சானும் ஒன்னு சேர்ந்துட்டீங்க. சொந்தம்தானேன்னு அசால்ட்டா இருக்கக்கூடாதுயா… நம்ம பொண்ணுக்கு என்ன நகை போடறோம்… எவ்வளவு சீர் வரிசை செய்யறோம்னு சபையில சொல்லிடனும்ல…” என்றார் விளையாட்டாக.
அங்கிருந்த இன்னொருவர், “இந்தாப்பா…., நீ என்னப்பா விவரங்கெட்ட தனமா… பேசிட்டிருக்கே…? அவன் என்ன பத்து பதினைஞ்சா பெத்து வச்சிருக்கான். ஒத்த பிள்ளை. அவனுக்கு அப்புறம்… அவளுக்குதானய்யா… எல்லாம்…” என்றார்.
முதலில் பேசியவரோ… யார் இல்லனா…? அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும். நான் ஒன்னும் தப்பா பேசிடலையே. ஊர் வழக்கத்ததான பேசறேன். அந்த வீட்டுல ஏற்கனவே இரண்டு மருமகள்ங்க வாழ்க்கைபட்டிருக்காங்க. நம்ம பிள்ளை மூணாவதா அங்க வாழ்க்கைப்பட போகுது. என்ன ஏதுன்னு பொதுப்படையில தெரிஞ்சாதானே வாழப்போற… நம்ம பிள்ளைக்கும் நாளைக்கு அங்க கௌரவம். அவங்களுக்கும் நாம என்ன செய்யறோம்னு தெரிஞ்சாதான நல்லாயிருக்கும். நீ ஆயிரம் மூடி மறைச்சு செஞ்சாலும், சபைக்கு முன்னாடி, ஊர் மெச்ச செய்றதுலதானயா நம்ம கௌரவமேயிருக்கு….” என்று தொடையை தட்டினார்.
அதற்குள் செல்வதுரை முந்திக்கொண்டு “நான் எதையும் எதிர்பார்த்து பொண்ணு கட்டலங்க… சொந்தம் வேணும்னுதான் பொண்ணெடுக்கிறேன்…” என்றார்.
வேல்முருகனோ “என்ன செய்யனும் சொல்லுங்க பெரியப்பா.. என் பொண்ணுக்கில்லாதது இங்க ஒன்னுமில்ல…” என்றுவிட்டார்.
“அப்புறம் என்னய்யா…. பெத்தவன்தான்… மொத்தத்தையும் இப்பயே எடுத்துக்கோன்னு… வாக்கு குடுத்துட்டானே…” என்றார் இரண்டாவதாக பேசியவர்.
அதற்குள் முதலில் பேசியவரோ… நான் விளையாட்டா கேட்டாலும் இதுல விஷயமிருக்குயா… நீ என்ன சொத்து சுகம் பின்னாடி அதுக்கு குடுத்தாலும், நம்ம வீட்டு பொண்ணு…, நாலு பேர் மெச்ச கௌரதையோட கட்டினவன் வீட்டுக்கு போறதுலதான்யா, நமக்கு சந்தோஷமே. இது எல்லாம் இப்ப இருக்க பசங்களுக்கு எங்க புரியுது. ஊர் நடப்ப சொன்னேன். ஏதோ எங்க காலம் நாங்க வாழ்ந்துட்டோம். இன்னும் மாத்திக்க முடியாம அப்படியே இருக்கனும்னு ஆசைப்படறோம். நீங்க ஆக வேண்டியத பாருங்க…” என்றார்.
இவ்வாறு பெரியவர்கள் எல்லாம் பேசி முடித்து…, நல்ல நேரத்தில் தட்டுமாற்றி…. நிச்சயச் சேலையை பெண்ணிடம் கொடுத்து, மாற்றிவரச் சொன்னவர்கள், நலங்கு வைக்க ஆரம்பித்திருந்தார்கள் பெண்கள் எல்லாம்.
