Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 20.1

சந்தியா அமெரிக்காவிலிருந்து ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டவள் அதன் பின்னர் எப்போதும் போல வழக்கமாக அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டாள். தாய் தந்தையர், பெரியப்பா குடும்பத்துடன் அவளது செல்ல ஆச்சியும் உடனிருக்க அலுவலகம் முடித்து வீட்டுக்கு எப்போது திரும்புவோம் என்று ஆவலுடன் காத்திருப்பாள் அவள்.

 

சூரியாவும் ஆரியாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே வந்து அவ்வபோது தலைகாட்டிவிட்டுச் சில பல அதிரசங்களையும் உள்ளே தள்ளிவிட்டுச் செல்வர். அவர்களின் வருகை தடைபட்டால் கோமதியம்மாள் யோசனையுடன் காத்திருக்கும் அளவுக்குச் சந்தியாவின் குடும்பத்தினரின் மனதில் இரு சகோதரர்களும் இடம்பிடித்துவிட்டனர்.

 



Advertisement

சந்தியாவின் பெற்றோரும் அரசுப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டதால் சில காலம் மகள்களுடன் தங்கிவிட்டுச் செல்வோம் என்ற முடிவுடன் தான் வந்திருந்தனர். ஒரு முறை அங்கே வரும் போது சூரியா சந்தியாவின் தந்தையிடம் அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள் என்று கேட்க அவர் மேலகரம் அருகில் வயல் மற்றும் தென்னந்தோப்பை வாங்கிப் போட்டிருப்பதாகக் கூறினார்.

 

இளம்வயதில் ஏற்பட்ட விவசாயத்தின் மீதான காதலை இப்படி தீர்த்துக் கொள்வதாக அவர் கூற சூரியா அடுத்து சந்தியாவின் எதிர்காலம் பற்றிய கேள்வியை முன்வைத்தான். தேவராஜ் அக்கேள்விக்கு மகளின் பதிலையே மறுமொழியாகக் கொடுக்க சூரியாவுக்கு தான் கேட்க வேண்டியது தேவராஜிடம் இல்லை, ரேணுகாவிடம் தான் என்பது புரிந்தது.

Advertisement

 

Advertisement

ஆனால் உடனே கேட்டால் நன்றாக இருக்காது என்று எண்ணியவன் ரேணுகாவிடம் பேசுவதற்கான நேரத்துக்காகக் காத்திருந்திருந்தான்.

 

அதே யோசனையுடன் அன்று அலுவலகத்தில் பேனாவை ஆட்காட்டிவிரலுக்கும், நடுவிரலுக்குமாகச் சுழற்றியபடி புருவம் சுளிக்க இருந்தவனைக் கண்ட சந்தியா என்ன விஷயமென்று கேட்க பெருமூச்சுடன் தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வியை அவளிடம் கேட்டே விட்டான் சூரியா.

Advertisement

 

“பிரவுனி! மேரேஜுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தமிருக்கு? காதலிக்கிறவங்க, கல்யாணம் பண்ணுனவங்கலாம் வாழ்க்கையில சாதிக்கவே இல்லையா? ஃபார் எக்சாம்பிள் மேரி கியூரியை எடுத்துக்கோ, அவங்க கல்யாணம் பண்ணிட்டு, ஒரு குழந்தையும் பெத்து, ஒரு பக்கம் சொந்த வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டே அவங்க ரிசெர்ச்சையும் கன்டினியூ பண்ணுனாங்க! அந்தக் காலத்துலயே ஒரு லேடி இவ்ளோ தெளிவா சொந்தவாழ்க்கை வேற, ப்ரொஃபசன் வேறனு புரிஞ்சு நடந்துக்கிட்டாங்க. இப்போ சொல்லு! கல்யாணம் பண்ணுனா ப்ரொஃபசன்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியாதா?” என்று ஆதங்கத்துடன் கேட்டுவிட்டு அவள் முகத்தையே பார்த்தான்.

 

சந்தியா “கண்டிப்பா கான்சென்ட்ரேட் பண்ண முடியாது… பிகாஸ் நான் மேரி கியூரியும் இல்லை, நீ பியேர் கியூரியும் இல்லை… சூரியா, காதலோ கல்யாணமோ தனியா வர்றது இல்லை.. ஒரு பொண்ணைப் பொறுத்தவரைக்கும் அது அவளுக்குனு சில பொறுப்புகளை அவ முதுகுல சுமத்துது… அந்தச் சுமையோட என்னால படிப்புல கவனம் செலுத்தவே முடியாது. பிகாஸ் நீயும் டிபிக்கல் இந்தியன் மேன் தானே! ஆஃப்டர் மேரேஜ், ஃபேமிலி ரெஸ்பான்ஸிபிளிட்டியை என் தலையில கட்டிட்டு நீ பணம் சம்பாதிக்கிறது மட்டும் தான் உன்னோட வேலைனு ஒதுங்கிப்ப… அதுல இன்னைக்கு இருக்கிற எந்த ஆணும் விதிவிலக்கு கிடையாது.

 

கல்யாணத்துக்கு அப்புறமா ஒரு ஆணுக்கு ஸ்பெஷலா எந்த புதுக்கடமையும் வர்றது இல்லை… அஸ் யூஸ்வல் நீங்க சம்பாதிச்சுட்டு வந்து பொண்டாட்டி கையில குடுப்பிங்க.. அண்ட் நாங்க, நீங்க குடுக்கிற சேலரியை வச்சு குடும்பத்தை ரன் பண்ணிட்டு, வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தா சாகணும்… எங்களுக்குனு ஆசையோ கனவோ இருக்கக் கூடாது… அப்பிடியே இருந்தாலும் கூட குடும்பம், குழந்தைக்குட்டினு பேசி எங்க கனவுக்குச் சமாதி கட்டிட்டு அதுக்கு தியாகம்னு பேர் வச்சிடுவிங்க… அதானே சொல்ல வர்ற நீ…

 

சாரி சூரியா, என்னால அப்பிடி ஒரு வாழ்க்கையை யோசிச்சுக் கூடப் பார்க்க முடியாது.. நான் எனக்குனு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்க நினைக்கிறேன்… அதைக் கல்யாணம் பண்ணிட்டு என்னால சாதிச்சுக்க முடியாதுங்கிறது என்னோட ஒபீனியன்.. இதுல எனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது… சோ ப்ளீஸ்! இனிமே நாம இந்த டாபிக்கை பேசாம இருக்கிறது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது” என்று பிடிவாதமாக அவனது வாதத்தை மறுத்துவிட்டாள் சந்தியா.

 

சூரியா அவளது நீண்ட உரையின் முடிவில் அவள் கூறிய வார்த்தைகளில் எரிச்சலுற்றவன், அதைக் காட்டிக் கொள்ளாமல் சிரமப்பட்டு முகம் மாறாமல் பார்த்துக் கொண்டான்.

 

ஆனால் சந்தியா இங்கே வந்த விஷயமே வேறு. இன்னும் நான்கு நாட்களில் அவளது குடும்பத்தினர் மீண்டும் ஊருக்குத் திரும்பிச் செல்லவிருப்பதால் தானும் விடுமுறை எடுத்துவிட்டு அவர்களுடன் செல்ல விரும்புவதாகக் கூறி அவனிடம் விடுப்பு பற்றி கேட்பதற்காகத் தான் அவள் வந்திருந்தாள்.

 

அதை அவனிடம் தெரிவித்து விடுமுறைக்கு அனுமதி கேட்க, சூரியா ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். அவனது யோசனையைக் கலைத்தவளுக்கு விடுமுறை கொடுப்பது இயலாதக் காரியம் என்பதே பதிலாகக் கிடைக்கச் சந்தியா இதுவரை தேர்வுக்கு எடுத்ததைத் தவிர தான் விடுமுறை எடுத்ததே கிடையாது என்று பதிலளித்தாள்.

 

சூரியா அதற்கு நிறுவனத்தின் சட்டத்திட்டங்களைப் பற்றி அவளுக்குப் பாடம் எடுத்தவன் முடிவாக இரண்டு நாட்களுக்கு அதிகமாக இனி அவளுக்கு விடுமுறை கிடையாது, வேண்டுமென்றால் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு அவளை அங்கிருந்து செல்லுமாறு கையசைக்கவே சந்தியா ஒரு நொடி கூடத் தாமதிக்காது அங்கிருந்து வெளியேறினாள்.

 

கண்ணாடிக்கதவைக் கோபத்துடன் அறைந்து சாத்தி தனது கோபத்தை வெளிக்காட்டிச் சென்றவள் வழியில் ஆரியாவை எதிர்கொள்ள, அவன் வழக்கம் போல கேலியாகப் பேசி அவளது கோபத்தைப் போக்க முயன்றான்.

 

சந்தியா மனத்தாங்கலுடன் சூரியாவுக்கும் தனக்குமான உரையாடலை விவரித்தவள் “பாஸ்! நான் இங்கே வந்ததுல இருந்து அன்வாண்டட்டா லீவ் போட்டிருக்கேனா? என் ஃபேமிலி கூட கொஞ்சநாள் ஊர்ல இருந்துட்டு வர்றேனு கேட்டதுக்கு உங்க நொண்ணா எனக்கு லீவ் தர முடியாதுனு சொல்லிட்டான்” என்று கூறிவிட்டு முகத்தை ஒரு சென்டிமீட்டருக்குத் தூக்கிவைத்துக் கொண்டாள்.

 

ஆரியா “அவன் தான் டூ டேய்ஸ் லீவ் குடுத்துருக்கானே தியா… அது உனக்கு காணாதா என்ன?” என்று கேட்க சந்தியா வெகுண்டுவிட்டாள்.

 

எடுத்ததும் படபடவென்று பொரிந்தவள் “நல்லா குடுத்தானே லீவ் ரெண்டு நாளைக்கு… வேண்டாவெறுப்பா பிள்ளை பெத்து அதுக்கு காண்டாமிருகம்னு பேர் வச்ச மாதிரி லீவ் குடுக்கவே இஷ்டமில்லாம ஷேட்டர்டே அண்ட் சண்டே மட்டும் லீவ் எடுத்துக்கோனு சொல்லிட்டான்.. இதுக்கு அந்த லீவை குடுத்துருக்கவே வேண்டாம்..

 

நான் தான் இதுவரைக்கும் எக்சாம் பர்பஸ் தவிர தேவையில்லாம லீவ் எடுக்கலையேனு சொன்னா, அதுக்கு ஆனை பூனை அம்பத்திரெண்டுனு எட்டுப்பக்கத்துக்குப் பேசுறான்… எல்லாம் என் தலையெழுத்து” என்று தலையிலடித்தபடி அங்கிருந்து நகர்ந்தவள் நேரே அவளது கேபினுக்குள் நுழைந்தாள்.

 

தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் இனி அவனே விடுமுறை அளித்தாலும் அது தனக்கு தேவையில்லை என்று எரிச்சலுடன் எண்ணிக்கொண்டாள்.

 

அங்கே சூரியாவுமே அவளுக்கு விடுமுறை கொடுக்கும் எண்ணத்தில் இல்லை. ஆரியா சென்று கேட்டதற்கு இன்று இரவு சந்தியாவின் வீட்டுக்குச் செல்லப் போகிறோம் என்று மட்டும் பதிலளித்தவன் அலுவலகம் முடிந்ததும் அங்கே செல்லத் தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்துவிட்டான்.

 

ஆனால் அவன் மனம் முழுவதுமே சந்தியா பேசிச் சென்ற விஷயங்களே ஓடிக்கொண்டிருக்க “பிரவுனி நீ பிடிவாதக்காரியா இருக்கலாம்… ஆனா நான் உன்னை விட பிடிவாதக்காரன்… கூடிய சீக்கிரமே நம்ம கல்யாணம் நடக்கும், அதுவும் உன் சம்மதத்தோட… அதுக்கு என்ன செய்யணும்னு எனக்கு நல்லாவே தெரியும்… கல்யாணம் பண்ணுனா சாதிக்க முடியாதுங்கிற உன்னோட எண்ணத்தை நான் மாத்திக் காட்டலை, என் பேர் சூரியா இல்லை” என்று தீர்மானத்துடன் உரைத்துக் கொண்டான் சூரியா.

**********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!