Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 17

அத்தியாயம் 17:

சந்தியா காதலை சொன்னபிறகு திரும்பவும் ஆதி அவள் கண்ணில் படாமல் ஓடி கொண்டிருந்தான். வீட்டில், வயலில், தோட்ட வீட்டில் எங்கும் அவனை பார்க்க முடியவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்த சந்தியா கௌரியை அழைத்து கொண்டு அவன் அரிசி ஆலைக்கே சென்று விட்டாள்.

அருண் வசந்த் முரளி என்று அவளுக்கு ஏகப்பட்ட பேர் ஒற்று வேலை பார்த்து கொண்டிருந்தனர். இன்று முரளி கூப்பிட்டு அரிசி ஆலையில் இருப்பதாக சொல்லவும் கிளம்பி விட்டாள்.



Advertisement

கௌரிதான் பயந்து கொண்டே வந்தாள்

“அண்ணா திட்டுவாங்க சந்தியா. பயமாருக்கு”

“அதுக்குதான் உன்ன வரவேண்டாம்ன்னு சொன்னேன். நீ கேக்கல. அப்படியே திட்டினாலும் உன்ன திட்ட மாட்டாங்க. என்னதான் திட்டுவாங்க. பயப்படாம வா” என்று கூறிக்கொண்டே உள்ளே அழைத்து சென்றாள்.

Advertisement

மில்லில் நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களை வித்தியாசமாக பார்த்தனர். சில பேர் கௌரியிடம் நலம் விசாரித்தனர்.

Advertisement

முரளி வந்தவன் சந்தியாவிடம் “அண்ணா ஆஃபீஸ் ரூம்லதான் இருக்காங் அண்ணி” என்றான்.

“வா கௌரி” என்று சந்தியா கூப்பிட்டதற்கு “நீ போம்மா தாயே. நா இவனோடவே மில்ல சுத்தி பாத்துட்டு வரேன்” என்று கழண்டு கொண்டாள்.

அறையில் ஆதி நிறைய நோட்டுக்களை வைத்து பார்த்து கொண்டிருந்தான். டேபிளில் கம்ப்யூட்டரும் இருந்தது. சந்தியா திறந்திருந்த கதவின் மேலே விரல்களால் தட்டினாள்.

Advertisement

நிமிர்ந்தவன் இவளை பார்த்ததும் திடுக்கிட்டான். பிறகு ஆராய்ச்சியாக அவளை பார்த்தான்.

சந்தியா அவன் கூப்பிடுவதற்கு காத்திராமல் தானாகவே உள்ளே சென்று அவனின் எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள்.

ஆதி “நா இங்க இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்டான்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது பாஸ். ஆக்சுவலா நா உங்கள பாக்க வரல. இந்த ரைஸ் மில் ஒனரதான் பாக்க வந்தேன்”

அவளை கண்களை இடுக்கி கொண்டு பார்த்தவன் “என்ன விஷயமா ஓனர பாக்க வந்தேன்னு தெரிஞ்சுக்கலாமா” என்றான்.

“ஓ தாராளமா பாஸ். எனக்கு ஒரு ஆயிரம் மூட்டை நெல் அரைக்கணும். அத பத்தி விசாரிச்சிட்டு போலாம்னு வந்தேன்”

“அப்படியா. நெல்லு எங்கம்மா”

“நெல்லா? இப்பதான் ஒரு ஏக்கர் நிலம் வாங்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம். வாங்கி, அதுல விவசாயம் பண்ணி, நெல்லு அறுவடை பண்ணனும் பாஸ்”

“ஒரு ஏக்கர்ல ஆயிரம் மூட்டை ?”

“ஏன் முடியாதா பாஸ். நீங்க என்னமோ பெரிய விவசாயினு இந்த ஊர்ல பேசிக்கிறாங்க. நீங்க என்னன்னா ஆயிரம் மூட்டைன்ன உடனே பயப்படறீங்க”

“ஆமாம்மா. நா அவ்ளோ பெரிய அப்பாடக்கர்களாம் இல்லை. நீங்க இன்னும் பெரிய ஆளா பாருங்க”

“சரி ஓகே உங்களால முடியாதுன்னா நா பாத்துக்கிறேன். நா கிளம்பறேன்” என்று கிளம்புவது போல் எழுந்தவள் “நா கிளம்பவா பாஸ்” என்றாள்.

“தாராளமா கிளம்புங்க” என்று வாசலை காட்டினான்.

எழுந்தவள் திரும்பவும் அமர்ந்து “என்னோட விவசாய ஆர்வத்தைத்தான் ஊக்குவிக்க மாட்றிங்க. அட்லீஸ்ட் என் கல்யாண வாழ்க்கைக்காவது ஒளி கொடுங்க பாஸ். உங்கட்ட நா என்னோட லவ் அண்ட் மேரேஜ் ப்ரோபோசல் வச்சிருந்தேனே. அதுக்காவது ஒரு பாசிட்டிவ் பதிலை சொல்லுங்க பாஸ்”

“படிக்கிற வயசுல ஒழுங்கா படிக்கிற வழிய பாரு”

“என்ன படிக்கிற வயசா. பாஸ் எனக்கு இருபத்து ஒன்றரை வயசாயிடுச்சு. பெண்ணின் திருமண வயது இருபத்து ஒண்ணுதான். ஆட்டோ பின்னாடி பாத்ததில்லையா நீங்க”

“ஆனா எனக்கு என்ன வயசுன்னு தெரியுமா உனக்கு. உனக்கும் எனக்கும் எட்டு ஒன்பது வயசு வித்தியாசம் இருக்கும். என் தம்பி வயசுதான் உனக்கும்”

“பாஸ். எட்டு ஒன்பதெல்லாம் இல்லை. வெறும் ஏழரை வயசுதான் வித்தியாசம். இதெல்லாம் ஒரு மேட்டரா. அதெல்லாம் நா உங்கள கண்கலங்காம பாத்துக்குவேன் பாஸ். பயப்படாதீங்க. அப்புறம் 90ஸ் கிட்ஸ்க்கெல்லாம் பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம். நல்ல சான்ச மிஸ் பண்ணிடாதீங்க”

“எனக்கு பொண்ணே கிடைக்கலன்னாலும் பரவால்ல. நீ மொதல்ல இடத்தை காலி பண்ணு”

“ஏன் எனக்கு என்ன கொறச்சல்ன்னு சொல்லுங்க பாஸ்”

அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன் “உனக்கு எதுமே கொறச்சல் இல்ல. எல்லாமே அதிகம் தான்” என்றான்.

வாயில் கை வைத்த அடித்து கொண்ட சந்தியா “அவ்வா. வைட் அன்ட் வைட்ல நாட்டாமை மாதிரி இருந்துட்டு இப்படி டபுள் மீனிங்க்ல பேசறீங்க”

“ஹலோ. உனக்கு வாய், கொழுப்பு எல்லாமே அதிகம்ன்னு  சொன்னேன்”

“நா நம்ப மாட்டேன். எப்படி எப்படி மேலருந்து கீழ என்ன பொண்ணு பாக்க வந்துருக்க மாதிரி பாத்துட்டு, இப்படி பேசறீங்க. எனக்கு தெரியாது. ஒழுங்கா என்ன கல்யாணம் பண்ணிக்கங்க”

“பொண்ண பாத்துட்டு உடனே கல்யாணம் பண்ணிக்குவாங்களா. புடிச்சாதான் கல்யாணம் பண்ணிக்குவாங்க”

“அப்ப வாங்க கல்யாணம் பண்ணிக்குங்க. உங்களுக்குத்தான் என்ன புடிக்குமே”

“அப்படீன்னு யாரும்மா சொன்னா. முதல்ல இங்கிருந்து கிளம்பு நீ. இன்னொரு டைம் இங்க வர்ற வேலையெல்லாம் வச்சிக்காத”

“இது என்ன பாஸ், பிசினஸ் பிளேஸ்க்கு நாலு பேர் வரத்தான் செய்வாங்க. நா திரும்பவும் வருவேன்” என்று சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

அவள் சென்ற பிறகு இவளை எப்படி சமாளிக்க போகிறோம் என்று கவலையாகி விட்டது ஆதிக்கு.

அடுத்த நாள் வயலில் நாற்று நடுவதால் மேற்பார்வையில் இருந்தான் ஆதி. அங்கு கால்நடையாக வந்து சேர்ந்தாள் சந்தியா தனியாக.

“ஹாய் பாஸ்”

“இங்க என்ன பண்ற”

“இது என்ன நா எங்க போனாலும் உங்கள பாக்க வந்தது போலவே பீல் பண்றீங்க”

“ஓ என்ன பாக்க வரலையா”

“உங்கள பாக்க வரல பாஸ். இங்க இந்த செடி வைக்கிறாங்கள்ல. அதான் எப்படி பண்றாங்கன்னு நானும் கத்துகிட்டு  போகலாம்ன்னு வந்தேன்”

“எதுக்கு உனக்கு இந்த விஷ பரீட்சை”

“ஆமா, நீங்கதான் என்னால ஆயிரம் மூட்டை நெல் ரெடிபண்ண முடியாதுன்னு சொன்னீங்கள்ல. அதான் நானே விவசாயம் கத்துக்கலாம்ன்னு கிளம்பி வந்துட்டேன்”

ப்ளாக் கலரில் ஸ்ட்ரைட் பேன்ட், லைட் ஆரஞ்சில் குர்தா, போனிடைல் என்று நாகரீக மங்கையாக பளிச்சென்று நின்றவளை மேலிருந்து கீழாக பார்த்தவன், அங்கு நாற்று நட்டு கொண்டிருந்தவர்களில் ஒரு கிழவியை பார்த்து 

“சின்னாத்தா இந்த புள்ள நாத்து நட கத்துக்கோனுமாம். கொஞ்சம் என்னன்னு பாருங்”

அந்த ஆத்தாவும் சந்தியாவை மேலும் கீழும் பார்த்தவர் “உனக்கு எதுக்கு கண்ணு இந்த வேலை” என்றார்.

“என்ன பாட்டி இப்படி கேக்கறீங்க. சோறு சாப்பிடற எல்லாருக்கும் இந்த பயிர எப்படி விளைவிக்கிறாங்கன்னு தெரிஞ்சுகிற கடமை இருக்கு” என்று சந்தியா சொன்ன பதில் பாட்டிக்கு பிடித்துவிட்டது போல.

“சரி கண்ணு . அந்த கால் சட்டையை மேல தூக்கிட்டு  சூதானமா இறங்கு” என்று பாட்டி கூறியதும் சந்தியா ஆதியை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். அவன் நமுட்டு சிரிப்புடன் அவளை பார்த்து கொண்டிருந்தான். 

அதை பார்த்ததும் ரோஷமாக பேன்டை தூக்கி விட்டு கொண்டு இறங்கினாள். அவள் மொழு மொழு வாழை தண்டு காலை பார்த்துவிட்டு ஆதிதான் ஜெர்காகி விலகி நடந்தான்.

அங்கு வேலை செய்த எல்லா பெண்களும் வாயை பிளந்து கொண்டு சந்தியாவை வேடிக்கை பார்த்தனர். சந்தியா சேற்றில் இறங்கி டான்ஸ் ஆடி பிறகு சின்னாத்தாளை பிடித்து கொண்டு பேலன்ஸ் செய்து நின்றாள். 

சந்தியாவிற்கு வயலில் கடைசியாக இருந்த ஒரு காலமை ஒதுக்கி விட்டனர். அதில் இடது கையில் இருந்த நாற்று முடிச்சில் இருந்து சிறிது சிறிதாக நாற்றை எடுத்து நட்டு காண்பித்தார் பாட்டி.

அதே போல் சந்தியாவையும் நட சொன்னார். தடுமாறியபடி சந்தியாவும் மெதுவாக நட்டாள். முதலில் பயந்தபடி நட்ட சந்தியாவிற்கு போக போக சந்தோசம் தாங்க முடியவில்லை. அவள் ஆர்வத்தை பார்த்த பாட்டியும் அவளை அந்த வரிசையில் நட சொல்லிவிட்டு அவர் இடத்திற்கு சென்று விட்டார்.

சந்தியா ஆர்வம் தாங்காமல் முதலில் நட்டவள், சிறிது நேரத்தில் டயர்டாகி, வியர்வை வழிய நிமிர்ந்து பார்த்தாள். அவள் மட்டும்தான் அந்த இடத்தில் நட்டு கொண்டிருந்தாள். அவளோடு நட்ட பெண்கள் அனைவரும் வேகமாக நட்டுவிட்டு பின்னே சென்றிருந்தனர்.

அதோடு முகத்தில் வழிந்த வியர்வையை வேறு எப்படி துடைப்பது என்று தடுமாறியவள் பிறகு புறங்கையால் துடைத்தாள். இதற்கே இடுப்பு வலியெடுக்க ஆரம்பித்துவிட்டது. நிமிர்ந்து ஆதியை பார்த்தாள். அவன் கை கட்டிக்கொண்டு  இவளைதான் பார்த்து கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் திரும்பவும் வேகம் வர பெற்றவள், குனிந்து வேக வேகமாக நட்டு பார்த்தாள். ம்ஹும். மற்ற பெண்கள் நட்ட அளவில் இருபது பெர்சன்ட் கூட இவளால் நட முடியவில்லை. இதற்கே வியர்த்து வழிந்து முகம் உடையெல்லாம் சேறாகிவிட்டது. ஆனாலும் பிடிவாதமாக நட்டு கொண்டிருந்தாள்.

சின்னாத்தாளும் வந்து தான் நடுவதாக சொல்லி கேட்டு பார்த்தார். ஆனால் சந்தியா பிடிவாதமாக அவரை அனுப்பிவிட்டு நட்டு கொண்டிருந்தாள். அனைவரும் அந்த பங்கை முடித்துவிட்டு மத்திய சாப்பாட்டிற்காக கரையேறிவிட்டனர். இவளை வேறு எல்லோரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களையெல்லாம் சாப்பிட அனுப்பி வைத்த ஆதி, சந்தியாவிடம் வந்தவன்,“நீ மேல ஏறு” என்றான்.

நிமிர்ந்து பார்த்த சந்தியா “இல்லல. நா இத முடிச்சுட்டுதான் மேல ஏறுவேன்” என்றாள்.

“சூரியன் மறைஞ்சா கூட இன்னைக்கு உன்னால முடிக்க முடியாது”

சந்தியாவிற்கு மயக்கமே வருவது போல் இருந்தது. இருந்தாலும் பிடிவாதமாக 

“அதெல்லாம் முடியாது. எல்லாரும் வேற போய்ட்டாங்க. எனக்கு குடுத்த வேலைய நான்தான் முடிக்கணும்” என்று தடுமாறியபடி குனிந்தவளின் பக்கத்தில் வேட்டியை மடித்து கட்டியபடி இறங்கியவன், ஒரே கையால் அவளின் இடுப்பை சுற்றி அணைத்தவாறு பிடித்து அசால்டாக பக்கத்தில் இருந்த வரப்பின் மேல் ஏற்றிவிட்டான். 

அவன் இடுப்பில் கை வைத்ததும் சந்தியாவின் மயக்கமெல்லாம் ஓடியே போய்விட்டது. விழியை விரித்து அவனை பார்த்து கொண்டிருந்தவளின் கைகளில் இருந்த நாற்று முடிச்சை வாங்கியவன் கிடு கிடுவென்று நட ஆரம்பித்தான். இருபது நிமிடங்களில் கடைசி வரப்பு வரை நட்டு முடித்தவன், மேலே ஏறி அவளின் அருகில் வந்தான். 

அவள் கைகளை பிடித்து கொண்டு பக்கத்தில் ஓடிய சின்ன வாய்க்காலுக்கு சென்றவன் “முதல்ல கை காலெல்லாம் அலசிக்கோ. நம்ம தோட்டத்துக்கு போய் ட்ரெஸ்ஸெல்லாம் சுத்தம் பண்ணிக்கலாம்” என்று விட்டு அவனும் கைகளை அலசி கொண்டு வரப்பின் மீது ஏறினான்.

சந்தியாவும் கை கால்களை கழுவி கொண்டு வரப்பின் மேலே ஏறும் போது தடுமாறினாள். அவளின் கைகளை பிடித்து மேலே தூக்கியவனின் நெஞ்சிலேயே முட்டி நின்று நிமிர்ந்து பார்த்தாள்.

ஆதியும் அவளின் முகத்தைத்தான் என்னவென்று வரையறுக்க முடியாத பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தான். பிறகு மெதுவாக அவளின் களைந்து கிடந்த முடிகளை காதின் பின்னே ஒதுக்கி விட்டவன், அவளின் முகத்தில் இருந்த சேற்றை மெதுவாக அவளுக்கு வலிக்க கூடாது என்பது போல் மிக மெதுவாக துடைத்து விட்டான்.   பிறகும் விடாமல் கீழே குனிந்து, அவளின் பேண்டை கீழே இறக்கி விட்டான். 

 சந்தியா அவனை பிரமித்து போய் பார்த்து கொண்டிருந்தாள். ஆதி எழுந்தவன் அவள் கைகளை பிடித்து மெதுவாக வரப்பில் நடத்தி கூட்டி சென்றான்.

சந்தியாவும் நினைவே இல்லாமல் கீ கொடுத்த பொம்மை போல் அவனின் பின்னே சென்றாள்.

தோட்ட வீட்டுக்கு சென்றவன் அங்கிருந்த கயிற்று கட்டிலில் அவளை அமர வைத்து விட்டு, பக்கத்தில் குவிந்து கிடந்த இளநீர் குவியலில் இருந்து ஒரு காயை வெட்டி கொண்டு வந்து கொடுத்தான். 

சந்தியா இளநீரை வாங்கி குடித்தாள் . அது அவளின் முகத்தில் வழிந்தது. அவனை பரிதாபமாக நிமிர்ந்து பார்த்தவள் “சாரி மாமா. ஸ்ட்ரா இருக்கா” என்று கேட்டாள்.

அவளின் மாமாவில் கரைந்தவன் தோட்ட வீட்டின் சாவியை எடுத்து உள்ளே சென்று ஒரு டம்ளரை எடுத்து வந்தான். இளநீரை வாங்கி அதில் ஊற்றி கொடுத்து விட்டு காயை வெட்டி கொண்டு வந்து தேங்காயை வழித்து கொடுத்தான். அதை வாங்கியவள் அவனை நிமிர்ந்து பார்த்து “உங்களுக்கு மாமா” என்றாள்.

“நீ சாப்பிடு” என்று சொல்லிவிட்டு கையை கட்டி கொண்டு அவளை பார்த்து நின்றான்.

தேங்காயை எடுத்து வாயில் போட்டு கொண்டவள் நிமிர்ந்து பக்கத்தில் இருந்தவனை பார்த்தாள். அவன் முகத்தில் கேள்வியை உணர்ந்தவள் போல் “என்ன மாமா” என்று கேட்டாள்.

“தயவு செய்து மாமான்னு கூப்பிடாத” 

“ஏன் மாமா”

 தலையை உலுக்கி கொண்டவன் “உனக்கு எதுக்கு இந்த நாத்து நடற  வேலை” என்றான்.

“அதான் சொன்னேனே மாமா. விவசாயம் கத்துக்கலாம்ன்னு”

“அதான் ஏன்?’

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் “உங்களுக்கு மனைவியானா உங்களுக்கு பிடிச்ச விவசாயம் எனக்கும் தெரிஞ்சிருக்கணும்ல” என்றாள்.

அவளின் கண்களை அழுத்தமாக பார்த்தவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் கீழே குனிந்து கொண்டாள்.

“நீ யாருக்கு மனைவியானாலும் உனக்கு பிடிச்சதத்தான் பண்ணனும். புருசனுக்கு பிடிச்சத ஏன் பண்ணனும். உனக்குன்னு தனி ஆசை, லட்சியம், பேசன்லாம் இருக்கும். அதுல அச்சீவ் பண்ணனும். அத விட்டுட்டு சும்மா புருசனுக்கு பிடிச்சிருக்குன்னு உனக்கு வராத கஷ்டமான வேலையெல்லாம் பாக்க கூடாது சரியா” என்றான்.

அவனை நேசம் பொங்க பார்த்தவள் “ஐ லவ் யு மாமா” என்றாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!