Skip to content
Post Views: 7,919
அத்தியாயம் 21:
அரவிந்த் குடும்பத்தினர் நாள் குறித்துவிட்டு கிளம்பும்போது ஆதி அரவிந்தை மட்டும் தனியாக நிறுத்தினான்.
கிருஷ்ணனும் மற்றவர்களும் வேறொரு காரில் கிளம்பிவிட்டனர். அரவிந்த் அவன் ஸ்கோடாவில் ஏற செல்லும்போது “அரவிந்த்” என்று கூப்பிட்டான் ஆதி.
அவனை திரும்பி பார்த்த அரவிந்த் மனதிற்குள் “வாங்க சார். உங்களுக்காகத்தான் வெயிட்டிங்” என்று நக்கலடித்துக்கொண்டே வெளியில் இன்னும் நக்கலாக “என்ன ஆதி சார்” என்றான்.
Advertisement
“நீ என்ன பேசுன. ஏன் சந்தியா அழுதா?”
“மிஸ்டர் ஆதி. சந்தியா என்னோட வருங்கால பொண்டாட்டி. அவளோட நா பேசுனது எங்க பெர்சனல். அத எப்படி நா உங்ககிட்ட சொல்வன்னு நீங்க எதிர் பாக்கறீங்க”
அவன் சந்தியாவை பொண்டாட்டி என்றதுமே சுள்ளென்று கோவம் தலைக்கேறியது ஆதிக்கு. அடக்கி கொண்டவன்
Advertisement
“அவ எங்க வீட்டு பொண்ணு. நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு அவள அழ வச்சிட்டு இருந்தீன்னா கேக்கத்தான் செய்வேன்” என்றவனை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு காரில் ஏறி சென்றான் அரவிந்த்.
Advertisement
அடுத்த நாள் சந்தியா அரவிந்தின் டெக்ஸ்டைல் ஷாப்பில் கிருஷ்ணனை சந்தித்து பேசினாள்.
“சாரி அங்கிள். என் பிரச்சனைல உங்கள கஷ்ட படுத்திட்டேன். நா வேண்டாம்ன்னு சொன்னா அரவிந்த் கேக்கவே இல்ல”
“டோன்ட் ஓர்ரி சந்தியா. நீ ஆதிய கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எனக்கு மருமகதான். ஆதியும் என் பையன்தான். உன்ன விட்டாலும் அவன சரிக்கட்டி வேற பொண்ண அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதெல்லாம் இனி முடியாத காரியம். நல்ல பையன் அவன். வாழ்க்கைல தோல்வியே பார்க்காதவன். இப்படித்தான் படிக்கணும், உழைக்கணும், வாழனும்ன்னு வாழ்க்கைல பிரின்ஸிபலோட இருக்கவன். அவன் கல்யாண வாழ்க்கை இப்படி ஆனது எல்லாருக்குமே வருத்தம்தான். அதனாலதான் அரவிந்த் பிளானுக்கு நானும் ஒத்துக்கிட்டேன்”
Advertisement
“எல்லாம் சரிதான் அங்கிள். ஆனா நீங்க நிச்சயம் நிறுத்துனா உங்க மேல எல்லாரும் கோபப்படறதுக்கு வாய்ப்பு இருக்கு”
“அதெல்லாம் பாத்துக்கலாம்மா. அதெல்லாம் உன்ன கல்யாணம் பண்ணிட்டா ஆதி இருக்கானே அவன் எல்லாத்தையும் சரி பண்ணிடுவான். அப்புறம் எனக்கும் சினிமால நடிக்கணும்ன்னு சின்ன வயசுலேந்து ஆசை. இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கிறேம்மா” என்று சிரித்தவரை “உங்களுக்கு எல்லாமே ஈஸிதானா அங்கிள்” என்று கேட்டாள் சந்தியா.
அதற்கும் சிரித்தார் கிருஷ்ணன்.
மறுநாள் மாலையில் கௌரியும் சந்தியாவும் கல்லூரி விட்டு வரும் வழியில் அவர்களை மடக்கி நிறுத்தி பேசி கொண்டிருந்தான் அரவிந்த். சரியாக ஆதியும் அங்கு வந்தவன் அவர்களை பார்த்துவிட்டு புல்லட்டை நிறுத்தினான்.
“என்ன இங்க நிக்கிறீங்க” என்றான் கௌரியை பார்த்து.
அதற்கு கௌரி “அரவிந்த் அண்ணா, சந்தியாவ ஷாப்பிங் கூட்டிட்டு போறாங்களாம். அதான் சந்தியா அவங்களோட போறா. நா ஸ்கூட்டிய எடுத்துட்டு வீட்டுக்கு போறனுங்ண்ணா” என்றதும் வாட்சை திருப்பி நேரத்தை பார்த்தவன் அரவிந்திடம் “இதான் நீ ஷாப்பிங் கூட்டிட்டு போற டைமா” என்று கேட்டான்.
அரவிந்த் “கௌரி, நீ கிளம்பு” என்று அவளை கிளப்பி விட்டான்.
கௌரியும் ஆதியை பார்த்தாள். அவன் தலை அசைத்தவுடன் கிளம்பி சென்றாள்.
இப்பொழுது அரவிந்த் ஆதியை பார்த்து “என் வருங்கால பொண்டாட்டிய நா எப்ப வேண்ணாலும் ஷாப்பிங் கூட்டிட்டு போவேன். அத பத்தி உங்களுக்கு என்னங்க சார்” என்றான்.
ஆதி புல்லட்டின் கியரை இறுக்கி பிடித்து கோவத்தை அடக்கினான். “அவ இன்னும் உனக்கு பொண்டாட்டி ஆகல. சும்மா அதையே சொல்லாத. எங்க வீட்டு பொண்ணோட பாதுகாப்பு எங்களுக்கு ரொம்ப முக்கியம். நீ அவள கொண்டு போய் வீட்ல விடு. காலைல கூட்டிட்டு போ” என்று பல்லை கடித்து கொண்டு கூறினான்.
“உங்கட்ட நா ஏதும் அட்வைஸ் கேக்கல சார்” என்றுவிட்டு அரவிந்த் சந்தியாவை காரில் வந்து ஏற சொன்னான். சந்தியாவும் ஆதியை திரும்பி பார்க்காமல் போய் அரவிந்தின் காரின் முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள். இவ்வளவு நேரம் அவளுக்கு கார் கதவை திறந்து பிடித்திருந்தவன் அதை அடித்து சாத்திவிட்டு “இனிமே அவ என் வீட்டு பொண்ணு. நா பாத்துக்குவேன். உங்களுக்கு கவலை வேண்டாம்” என்று விட்டு சுற்றி சென்று காரில் ஏறினான் அரவிந்த்.
ஆதி சந்தியாவை பார்த்தான். அவள் நேர் ரோட்டில் பார்த்தபடி ஆதியை திரும்பி பார்க்காமல் அமர்ந்திருந்தாள். கார் கிளம்பி சென்றது.
ஆதி அன்று இரவு எட்டு மணி அளவில் முதல் முறையாக சந்தியாவிற்கு கால் செய்தான் வீட்டுக்கு வந்துவிட்டாளா என்று தெரிந்துகொள்ள. கால் அட்டென்ட் செய்ய படவே இல்லை.
மறுநாள் தோட்ட வீட்டுக்கருகில் கிடந்த தேங்காய்களை மாங்மாங்கென்று உரித்து கொண்டிருந்தான் ஆதி. முரளி தான் செய்வதாக சொல்லியும் கேட்காமல் அவனை விரட்டி விட்டு தானே உரித்து கொண்டிருந்தான்.
அவனை பார்த்து கொண்டிருந்த வசந்தன் “மச்சான், தேங்காய் பாவம். உன்ர கோவத்தை அது தாங்காது” என்றான்.
அவனை முறைத்தவன் தேங்காயை தூக்கி வீசிவிட்டு வந்து அமர்ந்தான்.
“என்னமோ உன் தங்கச்சிக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவ. என்ன திரும்பி கூட பார்க்காம அவனோட கார்ல ஏறி ஊர்வலம் போறா. ரெண்டே நாள்ல மாறிட்டா”
“என்ரா நீ. அவ என்ன உன்ர வீட்டு நாயின்னு நினைச்சியா. நீ விரட்டிகிட்டே இருந்தாலும் வாலை குளச்சிட்டு உன்ர பின்னாடி வாரதுக்கு. அன்னைக்கு மில்லுக்கு உன்ன தேடி வந்தவகிட்ட என்ன பேசின நீ. அவகிட்ட கேட்டாலும் ஒன்னும் வாய தொறக்க மாட்றா. நீ என்னன்னா, இவ்ளோ நாள் அவ உன்ர பின்ன வரும்போது விட்டு போட்டு இப்ப வந்து அவ நாயத்த பேசற” என்றதும் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றான் ஆதி.
அன்று ஞாயிற்று கிழமை. அரவிந்த் சந்தியா நிச்சயத்திற்கு புடவை எடுக்க அனைவரும் கிளம்பி கொண்டிருந்தனர். செல்வம் எல்லாவற்றிற்கும் ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தை முன்னிறுத்தியே அனைத்து காரியங்களும் செய்தார். கிருஷ்ணனும் அவர் வீட்டில் பெண்கள் இல்லையென்பதால் சிவகாமி சித்ராவையே எல்லாம் பார்த்து செய்யுமாறு கூறியிருந்தார்.
ஆதியை தவிர அனைவரும் கிளம்பி சந்தியா கௌரி குடும்பத்தை அழைத்து கொண்டு செல்ல பிளான் செய்து கிளம்பி விட்டனர். கடைசி நேரத்தில் அருண் போன் செய்து பார்த்தால் எப்பொழுதும் வரும் ட்ரைவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். அருணுக்கு கார் சரியாக இன்னும் ஓட்ட வராது. ராகு காலம் வேறு பத்து நிமிடத்தில் வர இருப்பதால் ஆதியை வந்து காரை எடுக்க சொன்னார் ஈஸ்வர மூர்த்தி.
“இதெல்லாம் காலைலயே டிரைவருக்கு கால் பண்ணி கன்பார்ம் பண்ண மாட்டியா நீ” என்று அருணை பார்த்து உறுமிவிட்டு காரை எடுத்தான் ஆதி.
சந்தியா வீட்டில் காரை நிறுத்தி ஏற்றும்போது காரில் ஏற வந்த சந்தியா ஆதியை உணர்வில்லாத ஒரு பார்வை பார்த்து விட்டு ஏறி கொண்டாள். அதற்கு பிறகு ஆதியை பார்க்கவே இல்லை. ஆனால் ஆதி நிமிடத்திற்கு ஒருமுறை ரியவியூ மிர்ரரில் அவளை பார்த்து கொண்டே வந்தான்.
வைட் வித் வயலட் சல்வாரில் அன்று மலர்ந்த பூ போல் அமர்ந்திருந்தாள்.
அரவிந்தின் கடைக்குதான் சென்றனர். அரவிந்த் வாசலுக்கே வந்து சந்தியா அமர்ந்திருந்த பக்கத்தின் காரின் கதவைத் திறந்தான்.
ஆதிக்கு இவ்வளவு நேரமாக இருந்த இனிய மனநிலை மாறி கடுப்பு குடியேறி கொண்டது.
அனைவரும் இறங்கி சென்றதும் காரை கொண்டு போய் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதிலேயே அமர்ந்திருந்தான். சிறிது நேரத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் இறங்கி கடைக்கு உள்ளே சென்றான்.
அரவிந்தும் சந்தியாவும் தனியாக நின்று புடவையை பார்த்து கொண்டிருந்தனர். அரவிந்த் பேசிக்கொண்டிருக்க சந்தியா சிரித்து கொண்டிருந்தாள்.
ஆதி நேராக அவர்களை நோக்கி தன்னைப்போல் சென்றான்.
அரவிந்த் சந்தியாவிடம் “கல்யாணத்திற்கு பிறகு நம்ம ஷாப் சாரி அட்வர்டைஸ்மெண்ட்க்கு நீயே மாடலா பண்ணு சந்தியா” என்றதை கேட்டுக்கொண்டே பக்கத்தில் சென்ற ஆதி, மிகுந்த கடுப்புடன் “ஏன் வருமானம் பத்தலையா உனக்கு. அவள வச்சு சம்பாதிக்க பாக்கிறியா”
“என் மனைவியை நா மாடலாக்குவேன், இல்ல நடிகையாக்குவேன் உனக்கென்ன அதை பத்தி. நீ என்ன சொல்ற சந்தியா.?”
“உங்களுக்கு ஆசையாருந்தா நா மாடலா இருக்கேன்” என்றாள் சந்தியா. அரவிந்த் ஆதியை நக்கலாக பார்த்துவிட்டு அருண் கௌரியின் பக்கம் சென்றான்.
ஆதி புடவையை பார்த்து கொண்டிருந்த சந்தியாவிடம் “நா உன்னட்ட என்ன சொன்னேன். நீ யாருக்கு மனைவியானாலும் உனக்கு என்ன விருப்பமோ அதை பண்ணு. புருஷன் சொன்னான்னு உனக்கு பிடிக்காததை பண்ண கூடாதுன்னு சொன்னேன்ல” என்றதும் அவனை திரும்ப அறிமுகமில்லாத பார்வை பார்த்த சந்தியா “நீங்க யாரு எனக்கு. உங்க பேச்ச நான் ஏன் கேக்கணும்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொன்னாள்.
அவள் பேச்சை கூட தாங்கி கொண்டான் ஆதி. ஆனால் அவள் பார்க்கும் அறிமுகமில்லாத பார்வையை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அங்கிருந்து வேகமாக வெளியே சென்றவன் காரை எடுத்து கொண்டு சென்று விட்டான்.
மதியம் அருண் போன் செய்து கேட்டதற்கு “எனக்கு ஒரு அவசர வேலை வந்ததால கிளம்பி வந்துட்டேன். அதான் அங்க மாப்பிள்ளை இருக்காரே. அவரையே கார் ஏற்பாடு பண்ண சொல்லி திரும்பி வாங்க” என்று வைத்து விட்டான்.
அரவிந்த் அருணிடம் “என்ன சொல்றார் உங்க அண்ணாத்த” என்றான்.
அருணும் சிரித்து கொண்டே “மாப்பிள்ளைட்ட சொல்லி கார் ரெடி பண்ணிக்கணுமாம். இப்ப என்னண்ணா பண்றது அப்பாட்ட வேற சொல்லணும்” என்றான் கவலையுடன்.
அரவிந்த் அருணுடன் சேர்ந்து ஈஸ்வர மூர்த்தியிடம் சென்றவன் “ஆதி அவசர வேலையா கிளம்புறேன்னு என்னட்ட சொல்லிட்டு போனாங்ப்பா. நம்ம பெரிய கார்லயே நீங்க போய்டலாம்” என்றதும் ஈஸ்வரன் ஆச்சரியமாக “என்ன அவசர வேலையாவா. அப்படி என்ன வேலை. இப்படி பாதிலேயே விட்டு போட்டு போக மாட்டாங்களே” என்றார். சிவகாமிதான் “என்னமோ இருக்க போய்த்தான தம்பி போயிருக்கானுங் . நம்ம அரவிந்து கார்லயே போய்டலாம்” என்று சமாளித்தார்.
சிவகாமியும் ஆதியை கவனித்து கொண்டுதான் இருக்கிறார். அரவிந்த் சந்தியா கல்யாணம் முடிவான நாளிலிருந்து ஆதி மிகுந்த கடுப்பிலும் யோசனையிலும் இருப்பதை. புள்ளைக்கு சந்தியாவை பிடித்திருந்ததோ, நாம்தாம் கவனிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவரும் குழப்பத்தில் இருந்தார்.
ஆதியும் வேகமாக காரை ஒட்டி சென்றவன் தோட்ட வீட்டிற்கு செல்லலாம் என்று செல்லும்போது அவன் வயலில் எதோ தகராறு நடப்பது போல் இருந்தது. பார்த்தால் ரமேஷும் அவன் ஆட்களும் வந்து வசந்த் முரளியிடம் வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தனர்.
அன்று பஞ்சாயத்து முடிந்த பிறகு ஆதி, கோயம்புத்தூரில் திருமணம் செய்து கொடுத்திருந்த ரமேஷின் அக்காவிடம் சென்று பேசினான். அவளுக்கும் தம்பியின் செயல்கள் பிடிப்பதில்லை. முக்கியமாக அவர்கள் தந்தை விவசாயத்தை எவ்வளவு நேசித்தார் என்று அவளுக்கு தெரியும் என்பதால், ஆதியின் சொல்லை ஏற்று தந்தையின் வயலில் தனக்கு பங்கு இருப்பதாகவும், சொத்து வேண்டுமென்றும் வழக்கு பதிவு செய்தாள்.
அதனால் நிலத்தை விற்க தடங்கல் வந்த ஆத்திரத்தில்தான் இன்று சண்டைக்கு வந்திருக்கிறான். ஏற்கனவே மிகுந்த ஆத்திரத்தில் இருந்த ஆதிக்கு ரமேஷை கண்டதும் கண் மண் தெரியாத கோபம் வந்தது. அன்று பஞ்சாயத்தில் அவன் பேசிய பேச்சால்தான் அரவிந்த் சந்தியா திருமணத்திற்கு தான் சம்மதம் சொன்னோம் என்று நினைத்தவன், காரிலிருந்து வேகமாக இறங்கி வேட்டியை மடித்து கட்டினான். கையிலிருந்த காப்பை தூக்கி விட்டுக்கொண்டு நிதானமாக சென்று வசந்த்திடம் கத்தி கொண்டிருந்த ரமேஷை ஓங்கி ஒரு உதை விட்டான்.
அவன் விட்ட உதையை பார்த்த ரமேஷின் ஆட்கள் முதலில் திகைத்தனர். பிறகு ஆதியிடம் “பேசிக்கிட்ருக்கும்போது நீங்க எப்படி அடிக்கலாம்ங்க” என்றான் ஒருவன். அவனுக்கு ஓங்கி ஒரு அறை விழுந்தது. அந்த அறையை பார்த்த மற்ற ஆட்கள் தானாக ஒதுங்கி விட்டனர்.
அதற்கு பிறகு ரமேஷை ஆதி புரட்டி எடுத்து விட்டான். வசந்த்தான் ஆதியை தடுத்து கொண்டிருந்தான். முரளி “விடுங்ண்ணா, அன்னைக்கு என்ன பேச்சு பேசினான். இன்னைக்கு வாங்கட்டும்” என்றான்.
வசந்த் “டேய் அவனுக்கு எதாவதுன்னா, உன்ர அண்ணன்தேன் ஜெயிலுக்கு போவோணும்” என்றதும்தான் முரளியும் சேர்ந்து ஆதியை தடுத்தான். அதற்குள் ஊர் ஆட்களும் கூடி ஆதியை தடுத்தனர்.
ரமேஷின் ஆட்களும் வந்து ரமேஷை தூக்கி சென்றனர்.
விடுங்கடா என்று திமிறிய ஆதியை வசந்தும் முரளியும் சேர்ந்து தோட்ட வீட்டிற்கு இழுத்து சென்றனர்.
அங்கு சென்றும் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆதி கிடைத்த பொருட்களை எட்டி உதைத்து கொண்டிருந்தான்.
பிறகு வசந்த்திடம் “நான்தான் எதோ கோவத்துல சொன்னா உன் தொங்கச்சியும் உடனே அவன கல்யாணம் பண்ண கிளம்பிட்டா. அவன் பொண்டாட்டியாம்… சொல்றான் அந்த அரவிந்த். இவ என்ன பார்த்து நீ எனக்கு யாருமில்லன்னு சொல்றா. என்ன திமிரு இருக்கும் அவளுக்கு” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவன் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான்.
ஆறு மணி போல் வீட்டுக்கு வந்தான் ஆதி. கூடவே வசந்தும் வந்தான். வாசலில் அமர்ந்திருந்த ஈஸ்வரன் “என்னய்யா, அந்த ரமேச அடிச்சு போட்டியாம். என்ன பிரச்சனை?” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்ப்பா. நா பாத்துக்கிறேன்” என்றுவிட்டு உள்ளே சென்றான் ஆதி.
வசந்த்தான் ஈஸ்வரனிடம் “அன்னைக்கு பஞ்சாயத்துல நெம்ப பேசி போட்டானுங் மாமா அந்த ஆகாவலி. அதான் இன்னைக்கு மச்சான் வெளுத்து போட்டான். நீங் ஒன்னும் கவலைப்படாதீங் மாமா. நாங்க பாத்துக்கிறோம்” என்று சிறிது நேரம் அவரிடம் ஆறுதலாக பேசிவிட்டு கிளம்பினான் வசந்த்.
error: Content is protected !!