Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்! அத்தியாயம் 10

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 10

    நிரஞ்சனின் பக்கத்து வீடு தான் நர்மதாவின் ஒன்று விட்ட சித்தி சாரதா வீடு. முகுந்தனுக்கு பெண் பார்க்கிறோம் என்று அக்கம் பக்கம் சொல்லி வைக்க, அவர்கள் சொல்லி வந்தது தான் மதுரை சம்மந்தம்.

   நர்மதா முகத்தை பார்த்ததும் நிரஞ்சன் வீட்டவர்களுக்கு பிடித்து விட்டது. முகுந்தனுக்கும் பிடித்து விட, ஜாதகம் தான் பொருந்தி வரவில்லை. அடுத்து ஒரு மாதத்தில் ஜாதகம் பார்த்து முடித்த வரன் தான் வித்யா. ஆனாலும், நர்மதாவை, சுசிலாவிற்க்கு விட மனதில்லை.



Advertisement

    “சாரதா, அந்த மதுரை வரனுக்கு முடிஞ்சதா?…” என்று சுசீலா கேட்க.

   “இல்லங்க அக்கா. நிறைய வரன் வருது, ஜாதகம் தான் கொஞ்சம் தகராறு…”

  “எங்க நிரஞ்சனுக்கு பார்க்கலாம்னு இருக்கோம். நாங்க நல்லா இருக்கும் போதே நிறைவா செய்யணும். அவங்க வீட்டுல ஒரு வார்த்தை சொல்லி பாரு…” என்று கேட்க.

Advertisement

  அதற்கு தக்க சாரதாவும் நர்மதா வீட்டில் சொல்ல.. முதலில் யோசனை தான் பாலமரத்தானுக்கு.. ஆனால், நிரஞ்சனின் படிப்பும், வேலையும், பின்புலமும் விட்டுவிட மனதில்லை. பெரிதாக ஊர் கூட்டி எல்லாம் முகுந்தனுக்கு பேச வில்லையே. வெறும் போட்டோ பரிமாற்றம் மட்டும் தானே. அவர்களாக தான் கேட்டு வருகிறார்கள், முதலில் ஜாதகம் பார்ப்போம் என்று பார்க்க, பத்து பொருத்தமும் நிறைந்து நின்றது.

Advertisement

   நிரஞ்சனை வசீகரித்தாள் நர்மதா. பார்த்ததும் மனதில் ஒட்டி கொண்டாள். கல்யாணம் என்ற பேச்சில் ஆண், பெண் யாராக இருந்தாலும் நிறைய வரன் வந்து போக தான் செய்யும். அது ஒரு இடை கல்லாக நிரஞ்சன் நினைக்க வில்லை.தன் வாழ்க்கை முறைக்கு ஒத்து வருமா என்றெல்லாம் யோசிக்க வில்லை. தன்னை திருமணம் செய்து, தன் வீட்டிற்கு வந்தால், தனக்கு ஏற்ப தான் மாற வேண்டும்.

      நர்மதாவை பொறுத்தவரை பெற்றவர்கள் கையில் நிற்கும் பெண். அவர்கள் கை காட்டுவது யாரோ அது நிரஞ்சன், முகுந்தன் என்றெல்லாம் இல்லை. பெற்றவர்கள் சொல்லி யாராக இருப்பினும் திருமணம் செய்து கொள்வாள். அவ்வளவு தான் நர்மதா.

   ஆனால், ஒரு மாதிரி அசௌகரியம் வித்யாவுக்கு தான். அறிவுசார்ந்து யோசிக்கும் போது வித்யாவுக்கு புரிய தான் செய்கிறது. கல்யாண பேச்சு எடுத்து உடனே பார்க்கும் முதல் வரனே எல்லோருக்கும் அமையாது. சிலது தட்டி போகும், ஒரு சிலது அமையும். நிச்சயம் வரை பேசி கூட நிற்கும் வரங்களும் இருக்க தான் செய்கிறது. அதையெல்லாம் மனதில் இருத்த கூடாது.

Advertisement

   நிரஞ்சன், நர்மதா கல்யாண பேச்சின் போது தான் வித்யாவிற்கு தெரியும், நர்மதா தன் கணவன் முகுந்தணுக்கு முன்பு பார்த்த பெண் என்பது… அத்தோடு அவனுக்கும் பிடித்து இருந்து இருக்கிறது என்பதே அவளுக்கு ஒரு மாதிரியான சூழல் கொடுத்தது.

    சகஜ மனப்பான்மை போய், நர்மதாவை ஆராயும் மனப்பான்மை முன் நின்றது. காலமும் அதற்கு தக்க நிற்க. நர்மதா தான் முதலில் கற்பமானாள். வித்யாவிற்கு பிள்ளைப்பேறு தள்ளி போனது. அதுவும் பெண் பிள்ளைகள் இல்லா வீட்டில் முதல் பெண் குழந்தை பிறக்கவும், தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

  காரணமில்லாத ஒவ்வாமை நர்மதா மீது வித்யாவுக்கு… இருவரின் திருமணமும் மாத கணக்கு வித்தியாசம் தான். வித்யா குழந்தைக்காக கோவில், ஹாஸ்பிடல் என்று அலைய, நர்மதா இரு பிள்ளைகளையும் பெற்று, மாமனார் மாமியார், கணவன் என்று குடும்பத்தை அரவணைத்து, அளவான வாழ்வாக கடந்தது, காரணமின்றி அவள் மீது போட்டியை கொடுத்தது.

  அதுவும் வீடு முழுக்க நர்மதா கட்டுப்பாட்டில் தான். சுசீலா சின்ன மகனுக்கு தான் வீடு என்பதும், அதற்கு தக்க நர்மதாவின் வீட்டின் மீதான உரிமையும் வித்யாவுக்கு பிடிக்க வில்லை. தான் அந்த வீட்டின் மூத்த மருமகள். தனக்கும் அது உரிமையான வீடு என்ற நினைப்பு இருந்தாலும், குழந்தை இல்லாமல் அங்கு போய் உரிமை கொண்டாட முடியவில்லை.

   அதுவும் நர்மதா குடும்ப கட்டுப்பாடு பண்ணி கொண்ட பின், சொந்தத்தில் ஒருவர் பாக்கி இல்லாமல் வித்யாவுக்கு குழந்தை இல்லாததை விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். பெரிய மன அழுத்தம் தான் அவளுக்கு… ஊரார் கேட்கும் கேள்விக்கு எல்லாம் நர்மதா மீது தான் ஆற்றாமை வளர்ந்தது. அதனாலேயே ஊர் பக்கம் வரவே மாட்டாள்.

   தவிர்க்க முடியாமல் வர நேர்ந்தாலும் ஒன்று, இரண்டு நாள் தான் வீட்டில் தங்குவது. அப்புறம் தாய் வீட்டிற்க்கு ஓடி விடுவாள். பிள்ளை இல்லாமல் வேதனையில் கிடக்கும் அவளால், பிள்ளைகளோடு இருக்கும் நர்மதாவை காண முடியாது.

  முழுதாக ஆறு வருடங்களுக்கு மேல் வித்யா புகுந்த வீட்டை விட்டு ஒதுங்கி நிற்க, முழுதாக நிறைந்து நின்றது நர்மதா தான். சுசீலாவும் பெரிய மகன் வெளிநாட்டு வாசம் தான். சின்ன மகனுக்கு தான் வீடு என்ற உறுதியாக பேச, நர்மதா உரிமையாக வளம் வந்தாள். ஆறு வருடத்திற்கு பின் வித்யா ஒரு ஆண் குழந்தைக்கு தாயான பின், முகுந்தனிடம் நச்சரிக்க தொடங்கி விட்டாள் இந்தியா போக வேண்டும் என்று…

  இனியும் வித்யா தன் உரிமைகளை விட்டு கொடுக்க தயாராக இல்லை. காரணமில்லாமல் நர்மதா மேல் கொண்ட வன்மம், அவளை விட்டு ஒதுங்கியே நிற்க வைத்தது. தான் இந்த வீட்டின் மூத்த மருமகள், தனக்கும் உரிமை இருக்கு. நீங்கள் மட்டும் அனுபவிக்கும் சொத்து அல்ல, இது பொது சொத்து, பொதுவானது என்று நிரூபிக்க தான் வித்யா இந்தியா வந்ததே.

   சென்னையின் முக்கிய இடத்துல இருக்கும் ஒரு குட்டி பங்களாவை ஒரு மகனுக்கு மட்டும் கொடுப்பார்களா?… பிறந்த வீட்டு பங்கு தங்களுக்கு வேண்டும். முன்பு பிள்ளை இல்லை, அப்போது பேச முடியாது. தற்போது உரிமையாக பேசலாம் தானே… ஏதேதோ யோசித்து சென்னை வந்து நிற்க, நிரஞ்சன் பேச்சு வேற மாதிரி கொதிப்பை கொடுத்தது.

  ஆக, நர்மதா தங்களை பார்த்து பொறாமை படுகிறாள். தாங்கள் வாங்கிய சொத்து, சம்பாத்தியம் எல்லா அவள் கண்ணை உறுத்துது. முன்பே முகுந்தன் தான் அவளுக்கு பார்த்த வரன். அதனால் தான் கம்பேர் பண்ணி பேசுகிறாளோ… பெண்களை யோசனை புத்தியை மறந்து நிரஞ்சன் சொல்லி விட, நர்மதா தான் குற்றவாளி ஆனாள்.

   வித்யா முகத்தை திருப்பி கொண்டதும். அவள் நினைப்பு என்னவென்று நர்மதா உணர்ந்து கொண்டாள். இனி நிலை சகஜமாக இருக்காதோ!… சங்கடத்தோடு வெளியே வர,

   மனைவி முகம் பார்த்ததும் நிரஞ்சன் முகத்தை தூக்கி கொண்டு வெளியே சென்று விட்டான். அவனை பொறுத்த வரை, நான் தவறில்லை. சாதாரண போட்டோவுக்கு இவ்வளவு ரியாக்ட் செய்ய தேவையும் இல்லை. அவ்வளவு தான்… அதையும் மீறி நீ முகத்தை தூக்கி வைத்தால், எனக்கென்று இல்லை. அப்படியே இருந்துக்கோ…

   சுசீலா பிடித்து கொண்டார், “இங்க பாரு நர்மதா. உனக்கு என்ன ஆச்சு. எதுக்காக என் பிள்ளைகளுக்கு நடுவுல பிரிவினை உண்டாக்குற… உனக்கு சொத்து வேணும்ன்னா உங்க அப்பன் வீட்டுல போய் வாங்கி வா…” கடுமையாக பேச,

   “அத்தை என்ன பேசுறீங்க. உங்களுக்கு என்னை தெரியாதா?… ஆடம்பரமா செலவு செய்யாதீங்க. கொஞ்சம் எதிர்காலத்திற்கு சேர்த்து வைங்கனு சொன்னேன். அதுக்கு என் கூட மல்லுக்கு நிக்கிறார். ஒரு உதாரணமாக தான் பெரிய மாமாவ நான் எடுத்து சொன்னேன். அதை திரிச்சு சொல்லிட்டு போறார் உங்க மகன்…” சமாளிக்க தான் வேண்டும். சொன்ன வார்த்தையை இல்லை என்று சொல்ல முடியாதே…

   கணவன் என்று நினைத்து சக உறவுகள் முன்னேறி நிக்க, நாம் பின் தங்கி உள்ளோம் என்று புரியவைக்க சொன்ன வார்த்தை, எப்படி கோர்த்து விட்டான்.

   ஆனால் சுசீலா விடவில்லை. “ஆடம்பரமாக செலவு செய்ய கூடாதுன்னு நீ சொல்றியா?… ஜோடி போட்டு ஊரை சுத்தும் போது யோசிக்கணும் இதெல்லாம்… அதை விட்டு எம் பெரிய மகன் சொந்த ஊரை விட்டு நாடு கடந்து சம்பாரிக்கிறதை பார்த்து வயிறு எரியாத…” காட்டமாக சொல்ல,

  “அம்மா என்ன பேச்சு இது?… ஒரு குடும்பத்துக்குள்ள வார்த்தையை விடாதீங்க… உன் சின்ன மகனுக்கு பேசவே தெரியாதாக்கும். அவன் தான் என்னவாது சொல்லி இருப்பான். நர்மதா சாது… நீ மேல போ நர்மதா…” என்று முகுந்தன் சொல்ல,

   நர்மதா முகம் கசங்கி இருந்தாலும், மேல சென்று விட்டாள்.

 “வெளியில உயரமா நிக்கிற சொத்து தான் கண்ணுக்கு தெரியுது. அது சம்பாரிக்க நாங்க படுற பாடு யாருக்கு தெரியும். யாரோ அனாதை மாதிரி அடுத்த நாட்டுல கிடந்து சம்பாதிச்சு சொந்த ஊருக்கு வந்தா… இப்படி வயிறு எரியிறாங்க…” என்ற வித்யாவின் வார்த்தையை கேட்டு கொண்டு தான் மேலே வந்தாள் நர்மதா.

   எதார்த்தமாக விட்ட ஒரு வார்த்தை இப்படியா பிரச்சனையை கிளப்பும். அதுவும் தன் மாமியார்… இத்தனை வருடம் உடன் இருந்தும் புரிந்து கொள்ள வில்லையே…

   அடுத்த நாள் முதல் வித்யா முழுதாக ஒதுங்கி கொண்டாள். முன்பாவது சண்டை என்றெல்லாம் இல்லை. என்ன என்று அளவில் நின்று கொள்வார்கள். தற்போது தங்களின் வளமான வாழ்க்கையை பார்த்து நர்மதாவுக்கு பொறுக்க வில்லை என்று தான் நினைத்தாள் வித்யா.

   மறுநாள் பள்ளிக்கு செல்லும் அவசரம் நார்மதாவுக்கு… காலை, மதிய உணவுக்கான வேலையை தொடங்கி விட்டாள். பரபரப்பாக நடக்க, வித்யா வந்து விட்டாள்.

  “என்ன டிபன் நர்மதா?…”

   “இட்லி தான். சூடா இருக்கு தம்பிக்கு குடுங்க…”

வித்யா ஒரு இட்லியை எடுத்து குட்டி தட்டில் வைக்க,

   “பெரிய மாமாவு இட்லி சாப்பிடுவாங்க தான…”

 நகர்ந்த வித்யா திரும்பி பார்க்க,

   நான் இட்லி மட்டும் தான் ஊத்தி வச்சேன். பிள்ளைக ரெண்டு பேருக்கும் இட்லி கொடுத்துடுவேன். பெரிய மாமாவுக்கு தோசை வேணும்ன்னா நீங்க ஊத்தி கொடுத்துடுவீங்க தான. மதியம் வெஜ் சாதம் வச்சு இருக்கேன், கூட கொஞ்சம் ரசம். நீங்க கொஞ்சம் சாதம் மட்டும் வச்சுக்கோங்க. வேற உங்களுக்கு பிடிச்சது செய்ங்க. எனக்கு வேலைக்கு லேட், அதான் அவசரம். நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் பேசி மெனு போடலாம்…” சகஜமாக நர்மதா பேசி விட்டாள்.

   கொஞ்சம் யோசித்தாலும் உடன் பட்டாள் வித்யா. வேலைக்கு போறேன் என்று எல்லா வேலையும் என் தலையில் கட்டுவாளோ என்று நினைக்க, அப்படியில்லை.

  “சரி நர்மதா…” என்று முடித்து கொண்டாள்.

   பிள்ளைகளுக்கு உணவை கொடுத்து, தன் தட்டில் இட்லியை எடுத்து வைக்க, நிரஞ்சன் வந்தான். காலை உணவை பார்த்து முகம் சுருக்கி நிற்க, போட்ட உணவை அப்படியே மூடி வைத்து அவசரமாக தோசை ஊற்ற சென்றாள் நர்மதா.

   காலையிலே அவன் ஆரம்பிப்பான். நமக்கு தெம்பு இல்லை. அதுவும் அவன் அண்ணன் குடும்பம் இருக்கும் போது எக்கு தப்பாக வார்த்தை வந்து விடும் என்ற முடிவில் அவசரமாக தோசை ஊற்றினாள்.

   நர்மதா தோசை ஊற்ற, வித்யா ஒரு மாதிரி பார்த்தாள்.

  “என் புருசனுக்கு நான் பார்த்துப்பேன். நீ உன் வேலையை மட்டும் பாரு…” கடுமையாக சொன்னாள் வித்யா.

  “என்ன…” என்று பார்த்தவள், புரிந்து கொண்டாள்.

  “உங்களுக்கு மஞ்சள் காமாலை எதுவும் இருக்கா வித்யா…” என்று கேட்டு விட்டு நகர்ந்தாள்.

 வேகமாக சென்று கணவன் தட்டில் மூன்று தோசையை வைத்து விட்டு நிமிர,

  “நர்மதா, முகுந்தனுக்கும் தோசை தான் பிடிக்கும். அவனுக்கும் சேர்த்து ஊத்தி கொடு…” என்று சுசீலா சொல்ல,

  “அம்மா… நர்மதா வேலைக்கு போகணும். எனக்கு வித்யா பார்ப்பா…” என்று முகுந்தன் சொல்லும் போதே,

   “அவ சின்ன குழந்தை வச்சு இருக்கா முகுந்த். உன் மகன் எங்க கிட்ட இன்னும் பழகல. கை பிள்ளையை வச்சுட்டு தூக்கம் கெடும். அது எதுக்கு, சீக்கிரம் முழிச்சு நர்மதாவுக்கு பழக்கம் தான். என்ன பெரிய சமையல் வேலை. எங்க எல்லாருக்கும் நர்மதா தான் செய்வா, கூட கொஞ்சம் சேர்த்து செய்ய போறா அவ்வளவு தான். என்ன நிரஞ்சன்?…” என்று சின்ன மகனிடமும் ஒரு வார்த்தை கேட்க.

  “சரி தான்ம்மா… இதுல பெரிய சிரமம் என்ன இருக்கு. ஆறு இட்லிக்கு பத்து இட்லி ஊத்த போறா அவ்வளவு தான். கொஞ்ச நாளைக்கு அண்ணி சமையல் வேலை எதுவும் செய்ய வேண்டாம். வீட்டு வேலையை நர்மதாவே பார்க்கட்டும்…” முடித்து விட்டான் நிரஞ்சன்.

  இனி நர்மதா எதுவும் பேச முடியாது. அடுத்து அவள் வாதம் வைத்தால் அது நிரஞ்சனை எதிர்த்து பேசுவது போல, அவன் சும்மா விட மாட்டான். இவர்களுக்கு எல்லாம் சமையல் வேலை அவ்வளவு எளிதாகவா போனது.

   வித்யா எதுவும் பேச வில்லை. தன்னை காமாலை கண் என்று சொன்னாள் தானே வாங்கி கொள்ளட்டும்.

   கொஞ்சம் பயத்தோடு தான் நர்மதா பள்ளி சென்றாள். பெண் ஆசிரியர்கள் கொஞ்சம் கேலி செய்தார்கள். ஒரு சங்கட சிரிப்பில் கடந்து விட்டாள். அவளை மேலும் சங்கடபடுத்தும் விதமாக ஆண் ஆசிரியர்கள் எதுவும் கேட்க வில்லை. அது கொஞ்சம் ஆறுதல். அவள் கிளாஸ் பிள்ளைகள் “மிஸ் நீங்க அழகா இருந்தீங்க… உங்க சார் சூப்பரா இருக்கார்…” என்று கமென்ட்ஸ் வர, சரி என்று முடித்து கொண்டு பாடம் எடுக்க ஆரம்பித்தாள். இது ஒரு வாரத்திற்கு தொடரும்…

    மாலை வீடு வரும் போதே சரியான அசதி. கொஞ்சம் காபி குடிக்க ஆசை வந்தது. ஆனாலும் உடல் ஒத்துழைக்க வில்லை. பேசாமல் கொஞ்ச நேரம் கண் மூடி கொண்டாள். வரும் போதே மணி ஆறு, அரைமணி நேரம் கண் மூடி இருப்பாள்.

  “நர்மதா…” என்று அழைத்து கொண்டு வந்தது வித்யா தான்.

  “வாங்க, எதுவும் முக்கியமா? என்னை தேடி ரூம் வரைக்கும் வந்து இருக்கீங்க…” சோர்வாக கேட்டாள் நர்மதா.

  “மணி ஆறரை ஆச்சு. தம்பிக்கு இட்லி கொடுக்கணும். பசிக்கு அழுகிறான்…” என்று சொல்ல,

  சரி போங்க வாரேன் என்றவள் முகம் கழுவி கொண்டு இட்லி ஊற்ற ஆரம்பிக்க,

  “நர்மதா எங்களுக்கும் சேர்த்து சப்பாத்தி பண்ணிடேன். லேட்டா சாப்பிட்டா ஜீரணம் ஆக மாட்டாது…” என்று மாமியார் வர,

சரி ஒரேபடியாக இரவு உணவை முடித்து விடுவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் ஆகாது என்று முடிவு செய்தவள், தொடர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டாள்.

   அடுத்தடுத்த நாட்களில் நர்மதா வேலை விட்டு வரும் போது மேலே தன் அறைக்கு செல்லவே மாட்டாள். அது என்னவோ அசதியில் படுத்தா திரும்ப எழுவதற்கு மனமே வரமாட்டது. அப்படியே படுத்து கிடக்க தான் தோணுது. நலரைக்கு விடும் பள்ளி, ஆறு மணியாகும் வீடு வர, அவ்வளவு அலைச்சல். ஏதாவது நோகுது என்று சொன்னால் வேலையே வேண்டாம் என்று தான் சொல்வார்கள்.

   அதுவும் வித்யா ஒவ்வொன்றுக்கும் மகனுக்கு என்று அவளை நச்சரிக்க, சில நேரம் எரிச்சல் வரும். பின் தன்னவே தேத்தி கொள்வாள். பாவம் கை பிள்ளை வைத்து இருக்கிறாள். நம் பிள்ளை போல தான், சிறு பிள்ளைக்கு கொடுப்பதற்கு என்ன?… நர்மதாவுக்கு பிள்ளை விசயத்தை சோம்பேறி தனம், அசதி என்று எதுவும் பார்க்கமாட்டாள். அவர்களுக்கு என்றால் எந்த நேரமும் தயார் தான்.

   அன்று இரவு வேலை முடித்து சூடாக டீ போட்டு எடுத்து கொண்டு காற்றாட வெளியே வந்தாள். வேலை அதிகமாக நேரகாலமில்லாமல் டீ அதிகமாக எடுத்து கொள்கிறாள். தவறு என்று தெரியும். ஆனால், விட முடியவில்லை.

  வித்யா மகனுக்கு உணவு ஊட்ட, குட்டி துருவ் அங்கும் இங்குமாக ஓடி கொண்டு கையில் கிடைக்கும் செடி, பூக்களை எல்லாம் பிடிங்கி போட்டான்.

  “வித்யா, குட்டி செடிய பிடிங்கி போடுறான் பாருங்க. ஆறு மணிக்கு மேல செடிய கசக்கி போட்டா அதுக்கு வலிக்கும்…” தன்மையாக தான் சொன்னாள்.

   “அத்தை, நாங்க வந்தது உங்க சின்ன மருமகளுக்கு பிடிக்கல போல… தொட்டத்துக்கு எல்லாம் குறை சொல்றாங்க. என் பையன் செடி, பூ எதையும் தொட கூடாதாம். ஒன்றை வயசு சின்ன பையன். துறுதுறுன்னு ஓட தான் செய்வான். அது குத்தமா? நானும் இந்த வீட்டு மருமகள் தான? இது பொது வீடு தான? நீங்க தான பெரியவங்க, எனக்கு அப்புறம் வந்தவ தான அவ? அவ மட்டும் இருந்ததால, நாங்க வந்ததை ஏத்துக முடியல போல…” வித்யா தன் மாமியாரிடம் சொன்னதும்,

  சுசீலா நன்றாக வாங்கி விட்டார் நர்மதாவை…

  அடுத்த நாள் எல்லோரும் குடும்பமாக குலதெய்வ கோவில் சென்றார்கள். அங்கும் சுசீலா ஏவல் எல்லாம் நர்மதா தான். வித்யாவுக்கு தேவையான எல்லா வேலையையும் நர்மதாவையே செய்ய வைக்க,

  அவள் முகத்தில் எரிச்சல் வந்தது.

  “இங்க பாரு நர்மதா, நீ கொஞ்சம் வித்தியாவுக்கு அடங்கி போ… அவ்வளவு பெரிய வீட்டை உனக்கு தான் விட்டு தர போறா… அவங்க வீடு கட்டுனதும் அங்க போயிடுவாங்க. இருக்குற வர அனுசரிச்சு போ… இந்த காலத்துல யார் விட்டு குடுப்பா சொல்லு? உனக்கு ரெண்டு பொம்பளை பிள்ளைக இருக்கு. யாரையும் பகைச்சு நிக்காத…” என்று தெளிவான அறிவுரை வழங்க,

  நர்மதாவுக்கு உடன் பாடு இல்லை. யார் விட்டு கொடுப்பா அவ்வளவு பெரிய வீட்டை. நிச்சயம் வித்யா கொடுக்க மாட்டாள். அது தேவையும் இல்லை. ஆண் மக்கள் இருவர் என்றால், இரண்டாகவே பிரிக்கட்டும்.

  எப்படியாவது கணவனோடு சமாதானமாகி, கையில் இருக்கும் பணத்தை போட்டு வீடு கட்ட சொல்ல வேண்டும். அதற்கு தக்க மறுநாள் காலையில் அவனுக்கு பிடித்த உணவை செய்து வைத்து, எப்பவும் போல சமாதான கொடியை அவள் பக்கம் தூக்கி பிடிக்க தயாரானாள்.

  “அம்மா…” கத்தி கொண்டு ஓடி வந்தாள் சஸ்டி.

  “என்னம்மா?…”

   “அப்பா புது கார் வாங்கி இருக்காங்க. சூப்பரா இருக்கு, வெளிய வந்து பாருங்க…” என்ற மகளின் பேச்சில்,

  என்ன நேத்து தானே நான் ஒரு திட்டம் போட்டேன். கடவுளுக்கு பொறுக்கலையா… என்ன கூத்து பண்ணி வச்சு இருக்கார். வீட்டுல கார் இருக்க, அப்புறம் இன்னொன்னு… எத்தனை லட்சம் போச்சு யோசனையோடு வெளியே வர,

   நல்ல பெரிய கார் வெள்ளை நிறத்தை கண்ணை பறித்தது. பார்த்தாலே விலை கூடுதலாக தெரிந்தது. வீட்டில் எல்லோரும் அதையே சுற்றி பார்க்க, நர்மதா தான் சேவிங் எவ்வளவு குறைந்து இருக்கும் என்று கணக்கு போட்டாள்.

  “நல்ல இருக்குறடா, என்ன திடீர் கார்?…” என்று அண்ணன் கேட்க.

  “ஆமா கோவிலுக்கு போகும் போது நீ தனி, நான் தனியா போனோம். குடும்பமா எங்கையும் போய் வர பெரிய கார் இல்லன்னு அம்மாக்கு ஒரே கவலை. அதான் கார் பார்த்தேன். எனக்கும் பிளான் இருந்தது…”

  “எவ்வளவுடா ஆச்சு?…”

“ஒரு கோடிக்கும் மேல தான் ஆச்சு. ஆனா பதினோர் பேருக்கும் மேல உட்கார்ந்து போகலாம்…” நிரஞ்சன் சொல்ல,

   ஒரு கோடியா? நெஞ்சை பிடித்து நின்று விட்டாள் நர்மதா.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!