Skip to content
Post Views: 8,680
“அம்மா நீ கொஞ்ச நாள் துர்காக்கா வீட்ல இருந்துக்கோமா அடுத்த வர்ஷம் லீவுக்கு வரும்போது கூட்டிட்டுபோறேன், அடுத்தடுத்து ரெண்டு பிள்ளைங்க அதனால பெருசா ஊற சுத்தி பாக்க முடியல அடுத்த வர்ஷம் பெரியவள பிளே ஸ்கூல்ல போடலாம்னு இருக்கோம் அதுக்குள்ளே கொஞ்சம் ஊரெல்லாம் சுத்தி பாக்கணும்”.
Advertisement
“கார்ல நிறைய நேரம் போறமாதிரி இருக்கும் உன்னால அவ்ளோ நேரம் ட்ராவல் பண்ண முடியாது ரூமும் தனியா எடுக்கணும் அங்கல்லாம் ரொம்ப செலவு ஆகுமே உனக்குத் தெரியாதா அதனாலதான் என்றாள்” பார்கவி சாந்தாவிடம்.
Advertisement
Advertisement
அவருக்கா புரியாது… இனி பெரிதாகத் தன்னுடைய தேவை அங்கில்லை, ஒருமுறை துளசியின் வீட்டைச் சூற்றி பார்த்தார் ‘என்ன செய்திருப்பேன் இந்த வீடு இல்லையென்றால் துர்காவுடன் அவள் வீடு செல்ல வேண்டும் அவளுக்கு அதில் விருப்பம் இருப்பதாகவும் தெரியவில்லை’ பார்கவி கூறியபிறகும் துர்கா அமைதியாகவே இருந்தாள்.
Advertisement
சாந்தாவிற்கு விழிகள் கலங்கியது இனி தன் நிலைமை என்ன தனிமைதானா, அங்கும் இங்கும் ஓட வேண்டுமா என்ற சிந்தனையே மனதையும் உடலையும் தளர்த்தியது மகளின் கேள்விக்கு எந்தப் பதிலும் கூறவில்லை, பிறகு யோசித்த போதே புரிந்தது அவர்கள் அங்கிருந்து வரும்போதே முடிவு செய்து வந்திருக்கிறார்கள் சாந்தாவை அவர்களுடன் கொண்டு செல்லும் எண்ணமே இல்லை சாந்தாவிற்கு விமான பயணசீட்டே எடுக்கவில்லை அவர்கள்.
துளசியை தீர்க்கரசி என்று எண்ணிக்கொண்டார், அவள் வார்த்தைகள் இத்தனை சீக்கிரம் நடக்கும் என்று அவர் என்னவில்லையே மறுநாள் துர்கா ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் அம்மாவையும் கொண்டுபோகவேண்டுமா மாமியார் என்ன சொல்லுவார் எத்தனை நாட்கள் அங்கே தங்கவைக்க ஒருவருடமெல்லாம் எப்படி தங்கவைக்க முடியும் என்ற சிந்தனையில் அவள் பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டிருக்க பார்கவி கணவனுடன் வந்தாள்.
அவளுக்குத்தான் அங்குக் கணவனின் வீடு இருக்கிறதே பிள்ளைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு வந்திருந்தாள், இன்றுதான் இந்த வீட்டைப் புதிதாக வாங்கியவர்களுக்குக் கொடுக்கிறார்கள் பொருட்கள் இருந்ததால் அனைத்தையும் மாற்றுவது விற்பது என்று வேலை இருந்தது இன்றோடு இந்த வீட்டை விட்டு நிரந்திரமாகப் போகவேண்டும்.
வீட்டை ஒருமுறை சுற்றிவந்து பார்த்துக்கொண்டார் “என்னம்மா நீ கிளம்பலையா, அக்கா நீ அம்மாவைக் கூட்டிட்டு போறல்ல” என்றாள் பார்கவி துர்காவிடம்.
“வந்தா கூட்டிட்டு போறேன்” என்ற துர்கா “அதெப்படி உனக்கு ரெண்டு பிள்ளை பிறந்து அதுங்க கொஞ்சம் நடக்குற வரைக்கும் அம்மா வேணும் இப்போ ஊர் சுத்த போகும்போது அம்மா வேண்டாம்”.
“உன்னையும் உன் புருஷனையும் உன் ரெண்டு பிள்ளைங்களையும் பாத்துகிட்டு வடிச்சுக்கொட்டிட்டு எல்லா வேலையும் செஞ்ச அம்மாவால கொஞ்சம் நேரம் கார்ல உக்காந்து டிராவல் பண்ண முடியாதா கேக்குறவன் கேனயனா இருந்தா என்ன கதை வேணா சொல்லுவீங்க” என்றாள் பல்லைக்கடித்து.
“இப்போ எதுக்கு கோவப்படுற நாங்க அம்மாவை நல்லாத்தான் பாத்துக்கிட்டோம் கொஞ்ச நாள் உன்னால பாத்துக்க முடியாதா” என்று அவளும் குரலுயர்த்த.
“நிறுத்துங்க” என்ற சாந்த்தா “நான் யார்கூடவும் வரேன்னு சொல்லல, யாரை பத்தி கொஞ்சம்கூட கவலைப்படாம யாருக்கு அநியாயம் செஞ்சேனோ அவதான் நான் சுருண்டு படுத்துக்க எனக்கு இன்னைக்கு ஒரு வீட்டைக் குடுத்துருக்கா, எனக்கு உங்க தயவு தேவையில்லை, உடம்புல தெம்பிருக்கு மருந்து காய்ச்சுறதை இன்னும் மறக்கல கைவசம் தொழில் இருக்குறப்போ உங்ககிட்ட கையேந்தவேண்டிய அவசியமும் இல்ல”.
“எல்லாரும் அவங்கவங்க பொழப்பை போய்ப் பாருங்க எப்போ வேணும்னாலும் இங்க நீங்க வரலாம் அவ நிச்சயமா யாரையும் வெளில போகச் சொல்லமாட்டா ஆனா இனிமே உங்க வீட்டுக்கு என்னைக் கூப்பிடாதீங்க” என்றவர் வீட்டைப் பூட்டி சாவியை புது உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு துளசியின் வீட்டை நோக்கி நடந்தார்.
தன்னையே விழி அகலாமல் பார்த்திருந்தவளை அவனும் அதிர்ச்சியோடு பார்த்திருந்தான் “துளசி” என்றவன் இதழ்கள் மெல்ல அசைய சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் துளசி, நெஞ்சம் அடித்துக்கொண்டது கைகளின் நடுக்கத்தை குறைக்க கம்பியை இறுக பற்றினாள்.
இருவருக்கும் இடையில் கிடந்து தத்தளித்த நிலை அல்லவே இப்பொழுது மனம் முழுதும் தமிழின் நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்ந்து வருகிறாளே, தன்னை அவன் பார்க்கக் கூடாது தன்னுடைய கண்களே அவன்மீதான காதலை ஏக்கத்தை வெளிப்படுத்திவிடும்.
“என்ன செய்ய என்ன செய்ய” என்று தடுமாறியவள் அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் இடித்துக்கொண்டு வேகமாக வெளியில் இறங்கி ஓடி மறைந்தாள்.
‘யாருடன் வந்திருப்பாள்? கணவன் உடன் இருக்கிறானோ இங்கு என்ன செய்கிறாள் போய்ப் பேசலாமா’ என்ற யோசனையில் அவன் நிற்க அவன் சிந்தித்து முடிப்பதற்குள் அவன் கண்ணிலிருந்து மறைந்திருந்தாள்.
தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை எங்குச் சென்றாள் தன்னை பார்த்ததாலா! ஆனால் ஏன் அபப்டி? என்ன செய்துவிடுவேன் இல்லை வேறு ஏதேனும் பிரச்சனையா… என்னவாகா இருக்கும் என்று மண்டை வெடித்தது, யாரிடம் கேட்க எப்படி கண்டுபிடிக்க என்று கலங்கி நின்றான் தமிழ்.
அவனுடைய கார் ரிப்பேர் ஆனதால் மெக்கானிக்கல் ஷாப்பில் விட்டு விட்டுப் பஸ்சில் ஏறியிருந்தான் இன்று செங்கல்பட்டு சென்றவன் வீட்டிற்கு செல்லாமல் பேருந்து நிறுத்தத்திலே அமர்ந்துகொண்டான், சட்டென்று அவனுக்கு வாணியின் நினைவு வந்தது அவளுடைய திருமணம் முடிவானதற்கு பிறகு அவளைச் சென்று பார்ப்பதையே பேசுவதையோ நிறுத்தியிருந்தான்.
இன்று மீண்டும் அவளின் எண்ணை எடுத்தவன் அழைப்பதா வேண்டாமா என்று அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான், திருமணமான பெண்… வீட்டில் தவறாக எடுத்துக்கொண்டால் தன்னால் அவளுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் என்று யோசித்துநின்றவன் பேசிப்பார்க்கலாம் என்ற முடிவோடு மூன்று வருடங்களுக்குப் பிறகு வாணிக்கு அழைத்தான்.
“அண்ணா…” என்ற வாணியின் அழைப்பில் ஆச்சர்யம் சந்தோசம் கொஞ்சம் படபடப்பு அனைத்தும் நிறைந்து நின்றது.
“நல்லா இருக்கியாமா” என்றான் தமிழ்.
“நல்லா இருக்கேன்னா” என்க.
“வாணி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உன்னால வெளில எங்கயாவது வரமுடியுமா” என்க, அவளுக்குப் படபடப்பு கூடியது என்ன பேச வேண்டும் எதற்க்காகக் கூப்பிடுகிறார் என்ற யோசனையில் அவள் குழம்பி நிற்க.
“துளசியை பத்தி பேசணும் எப்போ எங்க வரமுடியும்னு மெஸேஜ் பண்ணு வாணி” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு அங்கேயே அமர்ந்துகொண்டான், வீட்டிற்கு போகும் மனநிலையில்லை இரவு ஊர் அடங்கியபின் வீட்டிற்கு சென்றான்.
மகனின் அறையிலிருந்து இன்று பாடல் ஒலிக்கவில்லையே என்று எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார் கற்பகம், மகன் பாடல் கேட்பதை நிறுத்திவிட்டானா! இதை நினைத்துச் சந்தோஷப்படுவதா இல்லை கவலைப்படுவதா என்று அவருக்குத் தெரியவில்லை.
அடுத்த நாள் காலையே வாணியிடமிருந்து தமிழுக்கு அழைப்பு வந்துவிட்டது “அண்ணா என் புகுந்த வீடு மதுராந்தகம்ல இருக்கு உங்களால இங்க வரமுடியுமா, என் வீட்டுக்காரருக்கு துளசியை பத்தியும் உங்களைப் பத்தியும் நல்லாவே தெரியும் அதனால உங்கள பாக்க வந்தா எதுவும் சொல்லமாட்டார் இங்க அகத்தியர் கோவிலுக்கு நாளைக்கு சாய்ந்த்ரம் நாலு மணிக்கு வரீங்களா” என்றாள் வாணி.
“கண்டிப்பா வரேன்மா தேங்க்ஸ்” என்றான் தமிழ்.
தமிழின் முன் பதட்டத்தோடு கைகளைப் பிசைந்துகொண்டே நின்றிருந்தாள் வாணி “துளசியை இங்க சென்னைல பாத்தேன், இங்க என்ன பண்றா நல்லா இருக்காளா” என்றவன் கேள்விக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவள் தடுமாற.
“பொய் சொல்லாம என்கிட்டே உண்மைய மட்டும் சொல்லு வாணி” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் ‘துளசியை பத்தி இப்போ எதுக்குண்ணா… உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கே அதைப் பாருங்க அவளைப் பத்தி இனிமே நீக்க ஏன் கவலை படுறீங்க” என்றாள் படபடவென்று.
“எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு அந்தத் பைத்தியக்காரி உன்கிட்ட சொன்னாளா” என்க.
“ஆமா அதுதானே உண்மை, உங்களையும் உங்க மனைவியையும் பெங்களூர்ல பாத்ததா சொன்னா”.
“எப்போ சொன்னா…”.
“அது மூணு வருஷம் முன்னாடி அவ சென்னை வந்தப்போ” என்றவள் நாக்கை கடித்துக்கொண்டாள் உளறிவிட்டோமே என்று.
“அப்போ மூணு வருஷமா இங்கதான் இருக்காளா!” என்றான் தமிழ்.
அவள் ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றாள் “அன்னைக்கு அவ பாத்தது என் தம்பி மனைவியை அந்தப் பொண்ணு பெங்களூர்ல தங்கித்தான் வேலை பாத்தா, தம்பிக்கு லீவ் கிடைக்கல அதனால அவ தங்கியிருந்த வீட்டைக் காலி பண்ணி அவளைக் கூட்டிட்டு போகத்தான் நான் பெங்களுர் போயிருந்தேன் எனக்குக் கல்யாணம் ஆகல வாணி” என்க.
அவளிடம் பெரிய ஆசுவாச பெருமூச்சு இவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தவள் அப்படியே அந்தக் கல்மண்டபத்தின் தூணில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
“உண்மையாவே உங்களுக்குக் கல்யாணம் ஆகலையா” என்க.
“என்னைப் பாத்தா பொய் சொல்ற மாதிரி இருக்கா” என்றான் அவன், முழுமூச்சாகத் துளசியை பற்றி அனைத்தையும் சொல்லி முடித்தாள் வாணி.
அவன் விழிகள் நிறைய சட்டென்று எழுந்தவன் தூரமாகத் தள்ளிச்சென்று நின்றான் நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டான், முகத்தை மீண்டும் மீண்டும் அழுத்தித் துடைத்தான் பெரிய மூச்சுகளாக விட்டுத் தன்னை நிலைப்படுத்தினான்.
மெல்ல அவளை நோக்கி வந்தவன் “மூணு வருஷமா தனியா இருக்கா என்கிட்டே சொல்லணும்னு உனக்குத் தோணவேயில்லையா வாணி” என்றான் உடைந்த குரலில்.
“உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனு அவ சொன்னா உங்களை எங்க பாத்தாலும் சரி இல்ல நீங்கப் போன் பண்ணாலும் சரி அவளைப் பத்தி உங்ககிட்ட ஒண்ணுமே சொல்லக்கூடாதுனு சொன்னா அதோட நீங்கத் திரும்ப அவளைப் பத்தி கேக்க வரமாட்டீங்கன்னு சொன்னா, நான் ஏன்னு கேட்டேன்….”.
“அவருக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சிடுச்சு இனிமே என்னைத் தேடி வரமாட்டார்ன்னு சொன்னா அதே மாதிரி அதுக்கப்புறம் நீங்களும் வரல, நானும் அதுதான் உண்மைன்னு நினச்சேன்” என்றாள் வாணி.
“கடைசியா உன்னைப் பாக்க வந்தப்போ உனக்குக் கல்யாணம் முடிவாயிருக்குனு சொன்னியேமா, நான் வந்து உன்னைப் பாக்குறது உனக்குப் பிரச்சனையா ஆகக்கூடாதுன்னுதான் அதுக்கு அப்புறம் நான் வரல” என்றான் அவன்.
“எல்லாம் நேரம் அவ இந்தக் கஷ்டமெல்லாம் அனுபவிக்கணும்னு இருந்திருக்கு” என்றவள் “நீங்க… நீங்க… துளசியை உங்க உங்க… லைஃப்ல” என்றவளுக்கு அவனிடம் எப்படி கேட்க என்ற தயக்கம்.
“அவளைத்தவிர யாரையும் நினைக்கமுடியாமத்தான் இன்னமும் இப்படி சுத்திட்டு இருக்கேன்” என்றவன் எங்குத் தங்கியிருக்கிறாள் எங்கு வேலை செய்கிறாள் என்று அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டு “இனிமே நான் பாத்துக்குறேன்” என்றவன் புது நம்பிக்கையோடு சென்றான்.
காலை வேலைக்குச் செல்லப் பேருந்தில் அமர்ந்திருந்தாள் துளசி, அடுத்து வந்த நிறுத்தத்தில் அவளைப் பார்த்துக்கொண்டே உள்ளே ஏறினான் தமிழ் அவனைப் பார்த்துத் திருதிருவென்று விழித்தவள் தப்பிக்க வழி பார்க்கக் கையிலிருந்த பையை அவள் மடிமீது வைத்துவிட்டு அமைதியாக நின்றுகொண்டான்.
அதிர்ச்சி விலகாமல் விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள் அவள், அவள் இறங்கும்வரை அவனும் இறங்கவில்லை அவளுடைய நிறுத்தம் வந்ததும் தன்னுடைய பையை எடுத்துக்கொண்டான் இரவு அவள் திரும்பி வரும்பொழுது அவள் ஏறும் அதே நிறுத்தத்தில் அவளுடன் ஏறினான்.
அவள் வரும் நேரம் பெரிதாகக் கூட்டம் இருப்பதில்லை பின்னில் இருக்கை காலியாக இருக்க அங்குச் சென்று அமர்ந்துகொண்டாள், அவள் பின்னில் அவனும் அமர்ந்துகொண்டான் மெல்ல திரும்ப முயற்சிப்பதும் நேராக அமர்வதுமாக அவள் தடுமாற.
“ஏதாவது பேசணுமா” என்றான் பின்னில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டு, சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
“என்னை ஞாபகம் இருக்கா துளசி” என்றான் ஆழ்ந்த குரலில், விழிகள் கலங்க முகத்தை மூடிக்கொண்டவள் வேறுஇடம் சென்று அமர்ந்துகொண்டாள், இறங்கும்வரை அவளையே பார்த்திருந்தான்.
அதற்கடுத்த நாட்களும் அதே வாடிக்கையானது, துளசிக்கு பயம் வந்தது அவன் வீட்டில் தெரிந்துவிட்டால் அவன் மனைவிக்குச் செய்யும் துரோகம் இல்லையா இது, ஒரு பெண்ணின் வாழ்வு தன்னால் நாசமாவதா என்று கண்டதையும் யோசித்து மனம் நொந்தவள்.
பஸ் ஸ்டாப்பில் அவளைக் காத்து நின்றவன் அருகில் சென்று “ஏன் இப்படி என் பின்னாடி வரீங்க உங்க வீட்டில தெரிஞ்சா பிரச்சனை ஆகாதா… என் வீட்டுலயும் தப்பா நினைக்கமாட்டாங்களா அவர் ஊருக்குப் போயிருக்கார் அவர் வந்து இதைப் பார்த்தா என்ன நினைப்பார்” என்றவளை கை நீட்டித் தடுத்தவன்.
“யாரு? உன் முன்னால் கணவனா தப்பா நினைக்கிறது இல்ல எனக்கு இல்லாத பொண்டாடியா பிரச்சனை பண்ண போறது” என்க.
‘இவருக்கு எப்படி தெரியும்’ என்ற யோசனை ‘இல்லாத பொண்டாட்டியா’ என்று அதிர்ச்சிக்கு மாறியது.
“காதலிச்சதும் பொண்டாட்டியா நினைச்சதும் கனவிலே குடும்பம் குட்டின்னு வாழ்ந்ததும் ஒருத்திகூடத்தான் அது இன்னைக்கு வரைக்கும் மாறல, செத்து மண்ணா போனாலும் மாறாது உனக்குன்னு வாங்கின தாலிக்கொடியை வேற யார் கழுத்திலும் என்னால போடமுடியாதுடி பைத்தியக்காரி” என்றவன் அதிர்ந்து நின்றவள் கையைப் பிடித்துக்கொண்டு பேருந்தில் ஏறினான்.
அடுத்த இரண்டு நாட்களும் துளசி வேலைக்குச் செல்லவில்லை யோசித்து யோசித்து தலைவலியோடு ஜூரமும் வந்துவிட்டது, மூன்றாம் நாள் கவலை தேய்ந்த முகத்தோடு அவளைக் காத்து நின்றிருந்தான் தமிழ் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
அன்று இரவு திரும்பி வருகையில் இலையில் பொதிந்த மல்லிகை மலர்களை அவள் மடியில் வைத்துச்சென்றான், அதை வருடியவள் விழிகள் நிறைந்து தளும்பி மலர்களை நனைத்தது, அவள் அதைச் சூடி வருவாள் என்று அவனுக்கும் நம்பிக்கை இல்லை என்றாவது அவள் மனம் மாறும் என்று காத்திருந்தான், மல்லிகை மட்டும் நாள் தவறாமல் அவளைச் சென்று சேர்ந்தது.
மூன்று மாதங்களும் கடந்துவிட்டது என்றும் போலவே அன்றும் அமைதியாகப் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றாள் துளசி அவளை நெருங்கியவன் “இந்தத் தனிமை ரொம்ப கொடுமையா இருக்கு துளசி, நிறைய ஆசைப்பட்டேன் கனவுகண்டேன் திடீர்ன்னு அதெல்லாம் இல்லைனு என்கிட்டயிருந்து பிடிங்கிட்டு போய்ட்டாங்க”.
“எங்கயோ நிம்மதியா சந்தோஷமா இருக்கட்டும்னு எல்லாத்தயும் எனக்குள்ளே போட்டுக்கிட்டு சுத்திட்டு இருந்தேன், ஆனா இப்படி வந்து நிக்குறியேடி என்ன பண்ணட்டும் நான்… முடியல துளசி தப்பா பேசினவங்க விமர்சனம் பண்ணவங்க பிரிச்சுவச்சவங்க எல்லாரும் அவங்க அவங்க வழியைப் பார்த்துப் போய்ட்டாங்க பாரு… நீயும் நானும் மட்டும் கடந்துபோகமுடியாம அப்படியே நிக்குறோம்”.
“இருக்கப்போறது எவ்ளோ காலம்னு தெரியல நமக்காக நாம கொஞ்சம் வாழலாம் துளசி உன் மடி வேணும்டி எனக்கு… நிம்மதியா தூங்கியே பல வர்ஷம் ஆச்சு” என்றவன் அவள் கையில் கவரை வைத்துவிட்டு பேருந்தில் ஏறிப் பின்னில் சென்று அமர்ந்துகொண்டான், விழிகள் மூடிச் சாய்ந்து அமர்ந்திருந்தவன் அருகில் அரவம் உணர்ந்து திரும்பிப் பார்க்க அவன் கொடுத்த பூவைச் சூடி அருகில் அமர்ந்திருந்தாள் துளசி.
விழிநீர் வழிந்துகொண்டிருந்தது நடுங்கும் அவள் விரல்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவன் தன் மார்போடு சேர்த்துக்கொள்ள அவன் தோள் சாய்ந்தவள் கண்ணீர் அவனை நனைத்துக்கொண்டிருந்தது….
மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி (ம்-ம்) மஞ்சம் தேடி (ம்-ம்)
மாலை சூடி (ம்-ம்) மஞ்சம் தேடி (ம்-ம்)
காதல் தேவன் சந்நிதி காண
காண காண, காண
error: Content is protected !!