Skip to content
Post Views: 14,595
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 20
நிரஞ்சன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தான். அவனுக்கு இந்த வீடு உணர்வோடு கலந்து, உரிமையாக நின்றது. பெற்றோருக்கு செல்ல பிள்ளை, மனைவியும் அவனுக்கு விட்டு கொடுத்து தான் நடந்து கொள்வாள். அண்ணன் எதிர்த்து நிற்க மாட்டான். அதனால் தான் சொத்து பிரிக்கும் போது வாய் வார்த்தையாக தான் என்றாலும் அதை தீர்மானமாக நம்பினான்.
அப்பா, அம்மா, அண்ணன் சொன்ன பின் வேற யார் வார்த்தை வேண்டும் என்று நினைத்தான். அத்தோடு வித்யா பற்றிய அனுமானம் அவனுக்கு சுத்தமாக கிடையாது. இத்தனை வருடத்தில் சேர்ந்து குடும்பமாக இருந்தது இல்லை. கெஸ்ட் மாதிரி வந்து போவதால், அண்ணி யார் என்று அலச தோன்றவில்லை.
Advertisement
அதையும் விட சொத்து விவரம் நர்மதாவுக்கும் தெரியாது. அதே போல வித்யாவுக்கும் தெரியாது. நாளை தெரிய வந்தாலும் நர்மதா வாய் இல்லா பூச்சி. என்ன சொல்ல முடியும். நிரஞ்சன், தன் மனைவியை மட்டுமே யோசித்தான். அண்ணன் மனைவி பற்றிய யோசனை கூட இல்லை. ஆனால், வித்யா ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டாள். தாமோதரனே சொத்தை சமமாக பிரிக்கும் அளவுக்கு தன் வாதத்தை வைத்து வென்று விட்டாள்.
நிரஞ்சன் வாதம் தோற்றது… யார் முன்னிலையில் மனைவி முன் வைத்தே… அவன் எப்போதும் பெருமையாக சொல்லும் என் வீடு என்ற வார்த்தையை இனி சொல்லவே முடியாது. அத்தோடு அவனுக்கு என்று வீடும் கிடையாது. சீக்கிரமாக வீடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
நர்மதா திரும்ப அக்கா வீடு வந்தது எல்லோரும் எதிர் பார்த்தது தான். அவளுக்கு என்னவோ ஒன்று கணவனிடம் வேண்டும். அதை எதிர்பார்க்கிறாள். அது கிட்டாமல் அங்கு செல்ல போவது இல்லை.
Advertisement
காலையிலே நிரஞ்சன் பரபரப்பாக அலுவலம் வர, பதட்டத்தோடு அவனை எதிர் கொண்டான் அஸ்வின். இவன் ஒரு யோசனையில் வர, அஸ்வின் வேற மாதிரி டென்ஷனில் இருந்தான்.
Advertisement
“என்னடா? பதட்டமாக இருக்க…” என்று நிரஞ்சன் கேட்க.
“நீ எதையும் பார்க்கலையா நிரஞ்சா?…”
“என்ன பார்க்க? என்னடா அஸ்வின்…” என்று கேள்வியாக நிரஞ்சன் கேட்க.
Advertisement
“நியூஸ் பாருடா…” என்று அதே பதட்டமான குரலில் அஸ்வின் சொல்ல,
என்னடா என்று ஒரு குழப்பத்தில் பொருளாதார நியூஸ் பார்க்க, பங்கு சந்தையில் ஆட்டோ மொபைல் பிஸ்னஸ் பெருத்த அடி வாங்கி இருந்தது.
பதறி போன நிரஞ்சன் தன் முதலீடுகளை கணக்கீடு செய்தான். சமீப காலமாகவே கார் உற்பத்தி இந்தியாவில் சரிவை நோக்கி தான் சென்று கொண்டிருந்தது. இவர்கள் கம்பெனியும் புது வருடத்தை முன்னிட்டு நிறைய சலுகை அறிமுகம் செய்ய, அதை நம்பி தனிப்பட்டு நிரஞ்சன் பங்கு சந்தையில் முதலீடு செய்தான்.
எப்போதும் இழுத்து பிடிக்காத வண்ணம் தான் அவன் முதலீட்டு இருக்கும். இதுவரை நஸ்டம் என்று ஒன்று வந்ததே இல்லை.என்று முகுந்தன் கொண்டு நர்மதா சண்டை பிடித்தாலோ, அன்று கோபத்தில் தன் சம்பாதிக்கும் திறமையை வெளிக்காட்டும் பொருட்டு ஒரு பெரிய தொகையை பங்கு சந்தையில் போட, புது வருடத்தில் நிரஞ்சன் முதலீடு பெரிய இழப்பை சந்தித்தது.
அப்போது தான் மதிய உணவை முடித்து வெளியே பிள்ளைகளை பார்த்த வண்ணம் நின்று கொண்டு இருந்தாள் நர்மதா. திடீரென ஆபீஸ்ல இருந்து அழைப்பு வரவும், என்னாவாக இருக்கும் என்ற யோசனையோடு தான் தலைமை ஆசிரியர் அலுவலகம் வந்தது. அங்கு தன் மாமா செல்வ விநாயகம் அமர்ந்து இருக்கவும், நெஞ்சு படபடவென அடிக்க,
“மாமா… என்னாச்சு…” என்று ஒரு பயத்தோடு தான் கேட்டாள்.
தான் வேலை செய்யும் பள்ளிக்கே தன் மாமன் வருவது என்றால், முதலில் நினைவு வந்தது தந்தை தான்.
“மாமா…” கண்ணில் நீரோடு கேட்க.
“ஒன்னும் இல்லை நர்மதா. சின்ன பாப்பாவுக்கு காய்ச்சல். வீட்டுக்கு கூட்டி வந்துட்டோம். உன்னை பார்க்கணும்னு ஒரே அழுகை. அதான் கூட்டி போக வந்தேன்…” என்று சமாதானமாக விநாயகம் சொல்லியும்,
நர்மதா மனதில் அமைதி இல்லை. என்னவோ என்று பயம். அடி வயிறு கலங்கியது, நெஞ்சு படபடப்பு குறையவே இல்லை.
அலுவலகத்தில் சொல்லி விடுப்பு எடுத்து கொண்டு, தன் மாமனோடு கிளம்பினாள்.
“உண்மையாவே பாப்பக்கு தான் முடியலையா மாமா…” வரும் வழி எல்லாம் கேட்டு கொண்டு வர, விநாயகம் சமாதானம் செய்து கொண்டு தான் வந்தான்.
அவர்கள் வரும் வண்டி நேர வீட்டுக்கு போகாமல், ஒரு பெரிய மருத்துவமனை நோக்கி உள்ளே செல்ல, இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது.
“என்னவாம் மாமா…” என்றபடி இறங்க,
நர்மதா கையை தட்டி கொடுத்து, உள்ளே அழைத்து சென்றான் விநாயகம். திக்திக் என்று மனம் அடிக்க , முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிய, மெல்ல அடி வைத்து உள்ளே வந்தாள்.
வராண்டாவில் தந்தை நிற்க, புரியவில்லை நர்மதாவுக்கு… வேற யாருக்கு என்ன?… முன்னே செல்ல, அங்கு அவள் மாமனார், மாமியார், முகுந்தன் என்று குடும்பத்தார் நின்று கொண்டு இருந்தார்கள்.
“என்ன… என்ன ஆச்சு?…” பயத்தோடு, புரியாமல் நகர,
அழுது கொண்டிருந்த சுசீலா, மருமகள் வரவும்,
“நர்மதா, பார்த்தியா நம்ம நிரஞ்சனை… நம்மளை விட்டு போக பார்த்தான். எப்படி இருந்தவன், இப்படி வந்து படுத்து கிடக்கான். நெஞ்சு வலியாம் நர்மதா…” என்று அழுக,
“யார்? நிரஞ்சனுக்கு என்ன?”
மன திகைப்பு என்ற வார்த்தை தான் பொருத்தமாக இருக்கும். கிறுகிறுவென வர சுவத்தை பிடித்து நின்றவள். குறுட்டாட்டத்தில் மாட்டி கொண்டது போல திக்கு தெரியாமல் முழித்தாள்.
அழ வேண்டுமா? முன்னே சென்று பார்க்க வேண்டுமா? எதுவும் பேச வேண்டுமா? ஒன்றும் புரிய வில்லை.
அடுத்து என்ன செய்வது என்ற யோசனையே வராமல் இருக்க, தாங்கி பிடித்தார்கள் தந்தையும், மாமனும்.
தந்தை அவர் தோலில் சாய்த்து கொள்ள, மனம் ஆறுதல் அடைய வில்லை. உடல் எல்லாம் நடுக்கம் மட்டும் தான்.
விநாயகம் கையை பிடித்து அழுத்தி அமர வைக்க, ஏறிட்டு பார்த்தாள்.
கண்ணீர் எல்லாம் இல்லை. செத்த உடல் போல இருந்தாள். உதடு நடுங்க “என்னவாம் மாமா…”
“ஏதோ நிறைய பணம் இன்வெஸ் பண்ணி இருக்கான். ரொம்ப நம்பிக்கை போல… ஆனா எல்லாம் லாஸ் ஆகிடுச்சாம். அங்கேயே விழுந்துட்டான்… ஹார்ட் அட்டாக்…”
தற்போது கண்ணீர் திரண்டு நின்றது.
“இப்போ எப்படி இருக்கார்…”
“மயக்கம் தான். ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு… ஆஞ்சியோ பண்ணனும்ன்னு சொல்றாங்க…” கண் மூடி கொண்டாள் நர்மதா.
“ஆஞ்சியோ எல்லாம் இப்போ சாதாரணம் நர்மதா. காலையில வந்துட்டு சாயங்காலம் வீட்டுக்கு போகலாம். பயப்படாத…” என்று தைரியம் சொன்னான்.
பால மரத்தானுக்கு வார்த்தையே இல்லை. ஆறுதல் சொல்லி சரி செய்யும் வலி அல்ல… மகள் வாழ்க்கையை நினைத்து அவரும் துக்கத்தில் முடங்கி விட்டார்.
நர்மதா மெதுவாக எழுந்து சென்று, வெளியேவே நின்று கணவனை கண்டாள். தெளிவாக தெரியவில்லை. அவனையும் சுற்றி நிறைய உபகரணம். காய்ச்சல், சளி கூட நிரஞ்சனுக்கு அபூர்வம் தான். அப்படி இருக்க, இதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
அங்கே தான் நின்று இருந்தான் அஸ்வின். அவனிடம் சென்று என்ன நடந்தது என்று விவரம் கேட்டு கொண்டாள்.
திரும்ப வந்து கண் மூடி அமர்ந்து கொண்டவள். யாரிடமும் பேச்சு வார்த்தை இல்லை. ஆபரேசன் இரவு என்று முடிவு செய்ய பட்டது.
தன் அக்கா கணவரோடு சென்று மருத்துவரை பார்த்தாள்.
“நெஞ்சு வலி எல்லாம் இப்போ சாதாரணமா போச்சு. முன்ன எல்லாம் அறுவது வயசுக்கு மேல தான் வருவாங்க. இப்போ எல்லாம் எந்த வயசுன்னு கிடையாது. நம்ம வேலை, சாப்பாடு, இடம் எல்லாமே ஒரு காரணம் தான். அதிக மன அழுத்தம், தாங்க முடியாத அதிர்ச்சி கூட காரணமா இருக்கலாம். இனி, சரியா இருந்தா பிரச்சனை இல்லை…” என்று பலகட்ட அறிவுரை வழங்க பட்டது.
பிருந்தா, வித்யா என்று எல்லோரும் வந்து விட்டார்கள். யாரும் யாரோடும் பேச வில்லை. இந்த கொஞ்ச வயதில் மாரடைப்பு என்பது எல்லோரையும் பயப்படுத்தியது. எங்கோ கேள்வி பட்ட விசயம். நம் கண் முன்னால், நம் வீட்டில் ஒருவருக்கு எனும் போது வேண்டுதலும், பயமும் தான் நிறைந்து நின்றது.
வித்யாவுக்கு பயம், எங்கே பிரச்சனை தன் பக்கம் திரும்புமோ என்று…
பிருந்தா கடும் கோபத்தில் தான் இருந்தாள்.
“சரியான சாடிஸ்ட் இவன்… எவ்வளவு சுயநலம் படிச்சவன்…” என்று முனங்க,
“பிருந்தா…” என்று அதட்டினான் விநாயகம்.
“நீங்க சும்மா இருங்க. இவன் மேல எல்லாம் எனக்கு பரிதாபம் வரல… எவ்வளவு சொல்லி இருப்பா என் தங்கச்சி. கழுத்தை மாதிரி கத்துனாலும், காத்து கொடுத்து கேட்க மாட்டான். வீட்டுல பொண்டாட்டி எதுக்கு அறிவுரை சொல்லுவான்னு ஒரு நினைப்பு வேணாம். என்ன ஆம்பிளை இவன்…”
“பிருந்தா… வாய மூடு…”
“அப்படி தான் பேசுவேன். குடும்ப தலைவனுக்கு யோசனை வேணாம். எதையும் செய்யிற முன்னாடி பொண்டாட்டி கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேணாம். இவன் இஷ்டத்துக்கு திமிரெடுத்து ஆடி வந்து படுத்து கிட்டான். ரெண்டு பிள்ளையை வச்சுகிட்டு அல்லல் படுறது யாரு? அவளை பாருங்க. என்னைக்காவது நிம்மதியா அவளை விடுறான… இப்படி எல்லாம் எதுவும் நடக்க கூடாதுன்னு தான் வீட்டு பொம்பளைக அடிச்சுகிறது…”
“ஒரு ஆம்பளைக்கு யோசிக்கவுமா கூடாது. நமக்கு குடும்பம் இருக்கு, ரெண்டு பிள்ளைக இருக்கு… நாம நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியம்ன்னு நினைப்பு இருக்கணும் தான. நாம இல்லாட்டி அவங்க நிலமை என்னன்னு நினைச்சு பார்த்த அவன் இஷ்டத்து இருப்பானா…”
“பிருந்தா விடு. குறை சொல்ற நேரம் இது இல்லை…”
“குறை இல்லை ஆதங்கம். இவனை மாதிரி எத்தனை பேரு சம்பாதிக்கிறாங்க. அவங்க எல்லாம் அமைதியா ஒரு வாழ்க்கை வாழல. இவனுக்கு என்ன குறை. ரெண்டு பிள்ளைக, பொண்டாட்டியும் வேலைக்கு போறா… பணம் போனா போகட்டும். உயிர் இருந்தா எவ்வளவும் தாங்கலாம். சரியான பயந்தவன், சோப்ளாங்கி. நான் கூட இவனை என்னமோன்னு நினைச்சேன்…” விநாயகம் சொல்லியும் நிற்காமல் பேசி கொண்டே இருக்க,
பாலமரத்தான், “பிருந்தா…” என்று ஒரு அதட்டல் போட்ட பின் தான் அமைதியானாள்.
நர்மதா இருந்த நிலை மாறவே இல்லை. எட்டு மணிக்கு மேல் கண் விழித்தான் நிரஞ்சன். எல்லாரும் உள்ளே சென்று பார்க்க, அவர்களில் ஒரு ஆளாக நர்மதாவும் சென்று பார்த்தாள்.
பரிதாபமாக இருந்தான். கண் எல்லாம் சோர்ந்து போய் கிடந்தது. கணவனை பார்க்க பார்க்க நெஞ்சு அடைத்து, உதடு துடித்தது. அழுது வெடிக்க தான் மனம் தள்ள, அடக்கி கொண்டு இருந்தாள்.
“நிரஞ்சா என்னடா இதெல்லாம்… பணம் போனா போகுதடா. நீ நல்லா வந்த போதும்டா…” என்று தாமோதரன் தொண்டை அடைக்க சொன்னார்.
நிரஞ்சன் லேசாக சிரித்தான். போனது பணம் மட்டுமா… நிரஞ்சனின் மொத்த உருவம். அவன், அவன் மேல் கொண்ட நம்பிக்கை, தைரியம், திறமை, அவனின் கௌரவம், எல்லாரையும் அசால்டாக எதிர் கொள்ளும் துணிவு, அவனின் எதிர்காலம், அவன் குடும்பத்தின் எதிர்காலம்…
யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த அவனின் தனிப்பட்ட குணம், ஆணவம், அகம்பாவம் எல்லாம் அடி வாங்கி போனது. தனக்கு இப்படி ஆகும் என்று அவனே எதிர்பார்க்க வில்லை. சமாளிக்க தான் நினைத்தான். சிறிது கூட யோசிக்காத நிகழ்வு நடந்த பின் கடந்த வர தெரியாமல், அதில் விழுந்து போனான்.
நிரஞ்சன் தயாரானான். எதுவும் பேச வில்லை என்றாலும் நர்மதா அவனோடு தான் இருந்தாள். அவன் தயாரான போது, சுசீலா கொண்டு வந்தார் நர்மதா தாலியை …
பார்த்ததும் கண் கலங்கியது. உண்மையில் யாரும் நர்மதாவை குறை சொல்ல வில்லை. எல்லோருக்கும் அவளின் குணம் தெரியும். நிரஞ்சன் பார்த்தான், தாலியை கையில் வாங்கி தொட்டு பார்த்தான்.
என்றோ ஆசையாக பார்த்தது. எட்டு வருடம் ஓடி போக, ஏதேனும் விசேஷ நாட்களில் குங்குமம் வைக்க சொல்லி நர்மதா கொண்டு வருவாள். அன்று எல்லாம் கவனித்தோ, உணர்ந்தோ பார்த்தது இல்லை. ஒரு கடமை மட்டும் தான். அவனுக்கு நர்மதா கழுத்தில் தாலி கட்டும் வரை தான் அந்த தொட்டு பார்க்கும் ஆசை எல்லாம்.
இன்று உணர்ந்து பார்த்தான். என்னவோ உள்ளுக்குள் உடைந்து போனான். தான் மனைவியை சரியாக நடத்த வில்லை என்று உணர்வு வருகிறது. தனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று உண்மையாக நம்பினான்.
அப்படி இல்லையென்றால் பறந்து கொண்டிருந்த தான் ஏன் மிக மோசமாக கீழ விழ போகிறேன். மாமனாரை பார்க்கும் போது குற்ற உணர்வு வந்தது. நான் அப்படி வைத்திருக்கிறேன் உங்கள் மகளை என்ற பெருமை அவனுக்கு எப்போதும் இருக்கும். நிச்சயம் இன்று இல்லை. மனைவிக்கு நிறைய வலியை கொடுத்து இருக்கிறோம் என்று உணர்ந்தான்.
டிரிப்ஸ் ஏறின கை தூக்க கஷ்டமாக இருந்தது. நர்மதா, கணவனுக்கு வாகாக தலையை குனிந்து கொள்ள, கண்ணீரோடு சுசீலா தான் நடுங்கும் விரலில் தூக்க முயற்சிக்கும் மகனின் கையை தூக்கி பிடித்து நர்மதா கழுத்தில் போட்டு விட்டார்.
என்னவோ எல்லாருக்கும் ஒரு நிறைவு. ஒன்னும் ஆகாது என்று மருத்துவர் சொன்னாலும், நர்மதா கழுத்தில் போட்ட தாலி ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
நிரஞ்சன் மனைவி கண் பார்க்க, அவளும் நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வை குற்றம் சுமத்த வில்லை. தொலைந்த குழந்தையாக பார்க்க, கணவன் கையில் தன் கையை அழுத்தமாக வைத்து பிடித்து கொண்டவள்,
“ நான் இருக்கேன் எப்பவும்…” என்று கண்ணீரோடு சொல்ல,
அவள் கையை நெஞ்சில் வைத்து கொண்டான். போட்ட சண்டை எல்லாம் போன இடம் தெரிய வில்லை.
எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்லி திட படுத்த, முகுந்தன் தம்பி அருகே வந்தான்,
“ஏண்டா? உன் பிள்ளைகளை நினைச்சு பாரு. அவங்களை யோசிடா? நீ நல்ல படியா வரணும். தைரியமா இரு…”
லேசாக சிரித்தான் நிரஞ்சன்,
“நல்ல படியா வருவேன் முகுந்தா… எம் பிள்ளைகளை பார்க்க அவங்க அம்மா இருக்க. அவ ரொம்ப தைரியசாலி. அவ புருசனை போல கோழை கிடையாது. ஆனா, நான் எம் பொண்டாட்டிக்காக வருவேன். நிரஞ்சன் பொண்டாட்டியோட தைரியம் நிரஞ்சன் தான். அவளுக்காவே வந்துடுவேன்…” என்று சொல்லும் போது நிரஞ்சன் கண்களும் கலங்கியது.
வாழ்க்கையில் மிக மோசமாக தோற்ற உணர்வு. ஆனாலும், தன் குடும்பத்தை வெற்றி பெற செய்யும் திடம் வந்தது. தைரியமாக கண் மூடி கொண்டான்.
வெளியே நர்மதாவும் கண் மூடி தான் இருந்தாள். யாரும் தொண்டையை நனைக்க கூட தண்ணி குடிக்க வில்லை. எல்லோருக்கும் ஒரே வேண்டுதல் தான்.
நர்மதா தன்னை திட படுத்தி கொண்டாள். பணம் போகுது விடு… கணவன் நன்றாக திரும்ப வந்தால் போதும்… தனக்கு படிப்பு இருக்கு, வேலை இருக்கு எப்படியும் சமாளித்து விடலாம் என்ற துணிவு வந்தது. கடவுளை மனதில் நினைத்து கொண்டாள்.
“எங்கள் உயிரை மட்டும் விட்டு, எந்த கஷ்டத்தையும் கொடு. சமாளித்து கரை சேர்ந்து விடுவேன் கடவுளே…” மனதோடு வேண்டி கொண்டாள்.
பன்னிரண்டு மணிக்கு மேல் நிரஞ்சனை வெளியே கொண்டு வந்தார்கள். ஐசியுவில் தான் இருந்தான். வெளியே நின்றே பார்த்து கொண்டார்கள். நன்றாக இருக்கிறான் என்ற பின் தான் ஒரு ஆசுவாசம் வந்தது.
நர்மதா திடம் கண்டாள். பிருந்தா, முகுந்தன் குடும்பம் வீடு சென்றது. முகுந்தன் வற்புறுத்தி தாய், தந்தை சாப்பிட வைத்தான்.
நர்மதா, தன் தந்தையை கட்டாய படுத்தி சாப்பிட அழைத்து சென்றாள். அதில் லேசான சுருக்கம் சுசீலாவுக்கு… அவர் அழுத அழுகை கூட நர்மதா அழ வில்லை என்று ஒரு எண்ணம்.
நர்மதா வேதனை அவள் தொண்டை குழியில் தான் நின்றது. தந்தை முடியாதவர். அவரை கஷ்ட படுத்த முடியாது. நம்ம வேதனை நம்மளோட… மகளுக்கு துணை நின்ற அவர் என்ன செய்வார். நிரஞ்சனை பார்ப்பதோடு தன் தந்தையும் பார்த்து கொண்டாள்.
மறுநாள் காலை தான் கண் விழித்தான் நிரஞ்சன். தண்ணி மட்டும் கேட்டான். பத்து நாள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார்கள். உறவு சனம் கூடியது. அறிந்தவர், தெரிந்தவர் எல்லோரும் பார்த்தார்கள்.
நர்மதாவுக்கு ஓய்வே இல்லை. யாரையும் எப்படி பார்த்து கொள்ள சொல்ல முடியும். முழுமையாக வளர்ந்த ஆண் மகன். எந்த சங்கடமும் இல்லாமல் மனைவியை தவிர, வேற யாரும் அணுக முடியாது.
அடுத்த ரெண்டு நாள் உறவுகள் வருகை குறைந்தது. பிள்ளைகள் பிருந்தாவிடம் தான் இருந்தார்கள். மாமியார் வீட்டில் விட வில்லை. பார்ப்பார்கள் தான். ஆனால், நாள் முழுக்க பார்க்க முடியாது.
பிருந்தா வீடு என்றால் பயமில்லை. அம்மா, அப்பா எல்லோரும் இருக்கிறார்கள். தாமோதரன், சுசீலா கூட ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டுமே வந்தார்கள். வயதானவர்கள், எவ்வளவு நேரம் இருக்க முடியும். நிரஞ்சன் நன்றாகி விட்டான்.
வாழ்க்கையின் அடுத்த பக்கத்தை காலம் உணர்த்த தொடங்கி விட்டது போல… முழுதாக ஆறு நாளுக்கு பின் நர்மதாவை தவிர ஆள் இல்லை.அவன் நன்றாகி விட்டான் என்றதும், உறவுகள் தள்ளி நின்றது. நர்மதா முழு நேரமும் இருந்தாள். குளிக்க, சாப்பிட, தூங்க எல்லாம் கணவனோடு தான்.
நிரஞ்சனுக்கு பிள்ளைகளை பார்க்க ஆசை வந்தது. தற்போது நார்மல் வார்ட் தான். ஆனால்,தனியறையில் இருந்தான். பிருந்தா தான் அழைத்து வந்தாள்.
பிள்ளைகளை பார்த்ததும் லேசாக கண் கலங்கியது. என்ன வைத்து இருக்கிறேன் நான் அவர்களுக்கு…
“அப்பா…” என்று கிட்ட வந்தாள் சான்வி.
தந்தையின் கை பட்டென்று தூக்கி பிடிக்க தான் நீண்டது. நர்மதா தான் பதறி போய் தடுத்தாள். கொஞ்ச நாளுக்கு சுமை தூக்க கூடாது.
நிரஞ்சன் முகம் சுருங்கியது. நர்மதா பிள்ளைகளை தூக்கி அவன் அருகே அமர வைத்தாள்.
“என்னப்பா உனக்கு…” சஸ்டி கேட்க .
“அப்பாவுக்கு காய்ச்சல்டா வேற ஒன்னும் இல்லை…” என்று பிள்ளைகளை தொட்டு பார்த்தான் நிரஞ்சன்.
பிள்ளைகள் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக அணைத்து கொண்டார்கள். நிரஞ்சனுக்கு நெஞ்சு துடித்தது. எப்போதுமே இப்படி சாய்ந்து கொள்வார்கள். ஆசையாக தடவி கொடுத்தான். வெளியில் காட்டி கொள்ள விட்டாலும், நிரஞ்சன் பயந்து போய் இருந்தான் போல…
பிள்ளைகளுக்கு அங்கு பயமில்லை. அப்பா எப்போதும் அப்பா தான் போல… ஹோஸ்பிட்டல், மருந்து வாடை எல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. அவர்களுக்கு அப்பாவோடு இருக்க வேண்டும்.
நர்மதா பிள்ளைகளை தூக்க முயல, நிரஞ்சன் விடவில்லை. என்னவோ உறவுகள் சுற்றி நின்று கொடுத்த ஆறுதலை விட, பிள்ளைகள் நெருக்கம் அவனுக்கு இதமாக இருந்தது. ஒரு நிறைவை கொடுத்தது.
அன்று தன் பெரியம்மா வீட்டுக்கு போக மாட்டேன் என பிள்ளைகள் ஒரே அடம். அவர்களுக்கும் பெற்றோரிடம் இருந்து நீண்ட நாட்கள் ஆகியது. இருவரையும் விட்டு செல்ல முடியாமல் அப்படி அழுகை.
உறவுகள் வீடு சந்தோசம் எல்லாம் கொஞ்ச நாளுக்கு தான். அடுத்து யாராக இருப்பினும் தன் வீட்டை தான் மனம் தேடும். வேற வழி இல்லாமல் பிள்ளைகள் அன்று இரவு இவர்களோடு தான்.
நர்மதா தான் உணவு கொடுத்து உறங்க வைத்தாள். நடு இரவில் லேசாக நிரஞ்சனுக்கு விழிப்பு தட்ட, மெல்ல எழுந்து அமர்ந்தான். மனைவி, பிள்ளைகள் நல்ல உறக்கத்தில்…
அவன் செயலின் வெளிப்பாடு கண்டான். அங்கு தள்ளி இருந்த ஒரு கட்டிலில் பிள்ளைகள் படுத்து இருக்க, அவனோடு ஒட்டி இருந்த சேரில் அமர்ந்து நர்மதா அவன் கட்டிலில் தலை வைத்து உறங்கி கொண்டு இருந்தாள்.
பார்த்தான் நிரஞ்சன். யாரும் உடன் இல்லை. அவன், அவன் மனைவி, அவன் பிள்ளைகள் மட்டும் தான். அப்படி ஒரு நிராதரவான நிலை அவர்களது… சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் மனைவி, பிள்ளைகள் அல்லவா அவன் குடும்பம். அவன் ஒருவன் சருகினால் யார் பாதிக்க படுவார்கள் என்று கண் கூடாக காண்கிறான். எத்தனை செல்லமாக வளர்த்தான் பிள்ளைகளை. ஆனால், இன்று…
தொண்டை அடைத்தது. மெல்ல எழுந்து பிள்ளைகள் அருகே வந்தான். விலகிய போர்வையை போர்த்தி விட்டு அவர்களையே பார்த்திருந்தான். இப்படி யாரோ போல ஆதரவு இல்லாமல் ஒரு சின்ன கட்டிலில் வசதி இல்லாமல் படுத்து இருக்கின்றதை பார்க்க தன் மீது தான் கோபம் வந்தது.
நர்மதா அந்த வசதி கூட இல்லாமல் சேரில் தான் உறக்கம். நிறைய வலித்தது, திரும்ப ஏதேனும் இழுத்து கொள்ள கூடாது என்று அடக்கி கொண்டான்.
மறுநாள் பிள்ளைகளை கிளப்ப முயல, ஏதோ ஒரு பார்சல் வந்தது. நிரஞ்சன் தான் வரவழைத்து இருந்தான். என்னவென்று கேள்வியாக பார்த்த படி பிரிக்க,
பிரியாணி, சிக்கன் லாலிபாப், சில்லி சிக்கன் இருந்தது. அஸ்வின் கொண்டு வந்து கொடுத்தான்.
நர்மதா முறைக்க, பிளீஸ் என்றான் கணவன். கொஞ்சம் சந்தோசமும் தான். அவள் நேரடியாக முறைத்து கூட எத்தனை நாள் ஆகி விட்டது.
நேற்று இரவு தந்தையிடம் பிள்ளைகள் தான் ஆசையாக கேட்டார்கள். அவர்களுக்கு உண்மை நிலவரம் தெரியாதே… கொஞ்ச நாட்களாக வீட்டு நிலவரம் சரி இல்லை. பிள்ளைகள் தனியாக கவனிக்க படவும் இல்லை. என்னவோ என்று தான் நாள் போனது நர்மதாவுக்கு …
இதில் கணவனுக்கு முடியாமல் போக, பிள்ளைகள் விருப்பத்தை கவனிக்க முடிய வில்லை. அத்தோடு கணவன் அப்படி இருக்க, கறி எடுத்து சாப்பிட தான் வேண்டுமா என்று ஒரு எண்ணம்.
அவனுக்கு பத்திய சோறு தான். கணவனை விட்டு நர்மதா நல்லது உண்ண மனம் வராது. ஆனால் நிரஞ்சனுக்கு பிள்ளைகளை அப்படி விட முடியாது.
நம்ம வலி நமக்கு தான். பிள்ளைகள் என்ன செய்யும். அவர்களுக்கு பிடித்த உணவு கூட வாங்கி கொடுக்காமல்… பிள்ளைகளை சாப்பிட வைத்த பின் தான் அவனுக்கு திருப்தியே…
நாளை வீட்டுக்கு செல்ல வேண்டும். அதற்கு முன் கணவனோடு கொஞ்சம் பேச வேண்டும் என்று நினைவோடு பிள்ளைகள் சாப்பிட்ட உணவை எடுத்து வைக்க,
வந்தார் சுசீலா. மருமகள் கையில் இருந்த உணவை பார்த்ததும் அப்படி ஒரு வெறுப்பு… சாக பிழைத்து வந்து இருக்கான். அதை நினைக்காமல் கறி எடுத்து உண்பதா முக்கியம்…
error: Content is protected !!