Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெந்து தணிந்தது காதல்!

வெந்த தணிந்தது காதல் – 11

வாழ்க்கையில் மிகக் கொடுமையான விடயம் எது தெரியுமா? தன் உள்ளத்தின் அடியாழம் வரை நேசித்தவரை, ஒரு கட்டத்தில் உயிர்வரை வெறுத்துத் தீர்ப்பது!

ஆனால் அதை விடக் கொடுமையான விஷயம் எது தெரியுமா? நம்மை உயிராய் நேசித்தவர், தன்னை மறக்க நினைப்பது! அப்படி அவர் வேண்டுவதைத் தானே கேட்பது!

அந்தக் காதல், தன்னை வெறுப்பது கூட இரண்டாம் பட்சம் தான்.. ஆனால் அவர் நினைவிலிருந்தே தன்னை முழுமையாக அழிக்க நினைப்பது.. அதைத் தன் காதால், தானே கேட்பது.. ரணத்தின் முழு வலி!

அந்த வலியைத் தான் அனுபவித்து கொண்டிருந்தான் ஷிவ்.



Advertisement

அத்தனையாய் உடைந்து.. உடைந்த வலியை வெளியில் கூடக் காட்ட முடியாது இருப்பவளின் நிலை, குரல்வளை இறுகி.. வலியை வாய் விட்டுக் கத்தக் கூட முடியாத ஊமையின் ரணம்!

அந்த வலியை அனுபவித்துக் கொண்டிருந்தது நவிரா!

ஆனால் அவளால் எரிதணலில் நின்று உழன்றது ஷிவ்!

Advertisement

இருவரின் வலியும் ஒருவருக்கு ஒருவர் சளைத்ததல்ல! ஆனால் அதை இருவருமே உணரவில்லை!

Advertisement

பின்னிருந்தே அவளை பார்த்தவன்..

‘இன்னமும் என்னை நினைவுல வச்சிருக்கியா நவிரா?.. நீ என்னைக்கோ என்னையும், என் காதலையும் மறந்துட்டன்னு இல்ல நான் நினைச்சுட்டு இருக்கேன்..’ என்று எண்ணிக் கொண்டான்.

சற்று நேரம் இருளை வெறித்தபடி தனக்குள்ளே அழுதவளைப் பின்னிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான் ஷிவ்.

Advertisement

அவளிடம் சென்று பேச முனையவில்லை அவன். அது போலவே தன் பின்னால் ஒருவன் வந்து நின்றருப்பதையே அறியாது அப்படியே இருந்தாள் நவிரா.

சில மணிநேரங்கள் கடந்திருக்கும். ஆழ்ந்த ஒரு பெருமூச்சு அவளிடம்!

மெல்ல நடந்து கீழே அவள் செல்ல, அவள் பின்னே நின்றிருந்த ஷிவ்வும் ஓசையெழுப்பாது அவளது அறைக்குச் சென்றான்.

தன் அறைக்குள் சென்று அவள் கதவடைத்துக் கொள்ள, அவளுக்குப் பின்னே சுவரோரமாக மறந்து நின்றவன், மெல்ல அவள் அறையருகே சென்று கதவில் கை வைத்தான்.

அவள் உள்ளே தாளிடாததால் கதவு மெல்லத் திறந்து கொண்டது.

மெதுவே அவன் அறைக்குள் நுழைய, அங்கே நவிராவோ அவளது வழக்கம் போல தலையோடு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.

உறங்க முடியவில்லை அவளால்! அவள் உறங்கியே பல மாதங்கள் கடந்துவிட்டனவே?

கூடவே இப்பொழுது ஜான்ஸியும் உடன் இல்லை. என்னவோ அவரிடம் தன்னைத் தானே பார்த்துக் கொள்வதாய் ஜம்பமாய் பேசிவிட்டு இப்பொழுது அந்த ஷிவ்வின் நினைவினால் உறக்கமின்றி தவிப்பது அவளுக்கே அவமானமாக இருந்தது.

‘என்னோட இத்தனைக் காதலுக்கும் தகுதியில்லாதவனை நினைச்சு இப்படி தினம் தினம் நான் அழுது தவிச்சுட்டு இருக்கறது, அவனுக்குத் தான் வெற்றியைக் கொடுக்குது.. ஆனா என்னால முடியலையே..’ என்று வலியுடன் எண்ணியவளால் உறங்க முடியவில்லை.

அவளுக்கு உறக்கத்துக்கென்றே மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் விளைவுகளையும் மருத்துவர் அவளிடம் எடுத்துரைத்திருக்க அவள் அதனை தினமும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் இன்று தூக்க மாத்திரை இன்றி உறங்கவே முடியாது என்று நன்றாகக் புரிந்தது.

ஆனால் ஜான்சி அந்த மாத்திரையை அவளது கண்ணிலேயே காட்ட மாட்டார். மிகவும் அவசியம் ஏற்பட்டாலொழிய!

இப்பொழுதும் ஜான்சி இங்கிருந்து கிளம்பும் போது அந்த மாத்திரைகளையும் எடுத்துச் சென்றிருப்பாரோ என்று எண்ணியவள், சட்டென எழுந்தாள்.

அவள் படுக்கையில் புரள்வதையும், எழுவதையும் ஓரத்தில் திரைச்சீலைக்குப் பின்னிருந்து பார்த்தபடி தான் இருந்தான் ஷிவ்.

நேரே அருகிருந்த மேஜையை அடைந்தவள், அதன் ஒவ்வொரு இழுப்பறையையும் திறந்து பார்த்தாள்.

கடைசி இழுப்பறையில் ஒரே ஒரு தூக்க மாத்திரை இருந்தது. அதைப் பார்த்து தன்னையும் அறியாது சிரித்துவிட்டவள்..

“ரொம்ப நம்பிக்கை தான்!” என்று வாய்விட்டே கூறிக் கொண்டவள், தண்ணீர் எடுத்து மாத்திரையை விழுங்கிவிட்டு மீண்டும் படுக்கைக்கு வந்தாள்.

சற்று நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறக்கம் வந்தது தான். ஆனால் மனதின் அலைப்புறுதல், உடலை அமைதியாக இருக்கவிடவில்லை.

உறக்க நிலையை அடைந்தாலும், இன்னமும் படுக்கையில் பிரண்டு கொண்டிருந்தாள் நவிரா.

அதைத் திரைச்சீலைகளுக்குப் பின்னால் நின்றிருந்த ஷிவ்வும் பார்க்க, அவனுக்கு மனதுக்குள் ஒன்று சட்டென்று தோன்றியது.

மெல்ல வெளியே வந்தவன், படுக்கையில் இருந்தவளின் அருகே வந்தான்.

நவிராவோ, உறக்கமும் அல்லாது.. விழிப்பும் அல்லாத நிலையில் இருக்க, அவளின் காலருகே மண்டியிட்ட ஷிவ்.. அவர்களின் வழமை போல.. அவனின் வழமை போல, அவள் காலடியில் குனிந்து அவளது வெண்பட்டு பாதத்தைக் கையில் ஏந்தினான்.

ஒருகணம் போர்வையாழ் முழுக்க மறைத்திருந்த அவளது முகத்தைப் பார்த்தவள், மெதுவே.. மிக மென்மையாக அவளது பாதத்தின் அடியில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தான்.

அப்பொழுது தான் உறக்கத்திற்குச் சென்று கொண்டிருந்த நவிராவுக்கு, இதெல்லாம் கனவில் நடக்கிறதா? இல்லை உண்மையாகவே ஷிவ் தான் வந்து தன்னை முத்தமிடுகிறானா? என்று மனம் குழம்பினாலும், ஏதோ அவளே புரியாத வகையில்.. கனவோ, நிஜமோ.. அவன் முத்த ஸ்பரிசம் கிடைத்த திருப்தியில் அவளது அலைப்புறுதல் நின்றுவிட, அப்படியே உறங்கிப் போனாள்.

அவளது காலடியில் இருந்து மேலே எழுந்தான் ஷிவ்.

இப்பொழுது அசைவற்று சீரான மூச்சுடன் உறங்குபவளைப் பார்த்தவன், அவளது முகத்தருகே குனிந்து.. முகம் வரை அவள் போர்த்தியிருந்த போர்வையை கழுத்துக்கு இழுத்துவிட்டுவிட்டு கிளம்பினான்.

கதவருகே சென்று அவளை ஒரு கணம் நின்று பார்க்க, அவளது அந்தப் பால் முகம் என்ன செய்ததோ, தன்னையும் அறியாது ஒரு பெருமூச்சு வந்தது அவனிடமிருந்து.

அதில் தலையை ஒரு கணம் உலுக்கிவிட்டுக் கொண்டவன், கதவை சாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

ஆழ்ந்த உறக்கம் நவிராவுக்கு.

கடந்த ஆறு மாதங்களில் அவள் கொண்ட நிம்மதியான உறக்கம் இதுவென்று கூறலாம்.

அவளருகே இருந்த மொபைல் அலறிக் கொண்டிருந்தது. ஆனால் இன்னமும் உறக்கம் கலையாத நவிரா காலை எடுக்கவில்லை எனவும் மறுபுறத்தில் ஜான்சிக்கு சற்று பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.

படபடப்புடன் டாக்டருக்கு அழைத்து விஷயத்தை அவர் கூற, மணியைப் பார்த்தார் டாக்டர்.

“மணி ஒன்பது தான ஆகுது ஜான்சி. நைட் லேட்டா தூங்கினதால, இப்போ காலைல நல்லா தூங்கிட்டு இருப்பா..” என்று அவர் சமாதானம் கூறினாலும், ஜான்சிக்கு மனம் கேட்கவில்லை.

அதை அவர் மீண்டும் கூற, “சின்ன வயசுல இருந்தே தன்னத் தானே பார்த்துக்கிட்டவ அவ.

இப்போ ஏதோ ஒரு சூழ்நிலையால் அவளுக்கு நம்மளோட துணை தேவைப்பட்டாலும், அவளோட இயல்பு இப்படி இன்னொருத்தங்களோட கண்காணிப்புல இருக்கறது இல்ல.

என்ன தான் நாம அக்கறையா கேட்டாலும், அவளுக்கு இதெல்லாம் சங்கிலில கட்டி வச்ச மாதிரி தான் இருக்கும்.

அதனால அவளைக் கொஞ்சம் ஃபிரீயா விடுங்க ஜான்சி. அவ ரொம்ப தைரியமான பொண்ணு, நீங்களும்.. நானும் நினைக்கறத விட!” என்று சமாதானப்படுத்த, ஜான்சிக்கும் கொஞ்சம் புரிவது போல இருந்தது.

ஆனால் நவிராவின் நொந்த, நைந்த நிலையைக் கூட இருந்தே கண்டவரல்லவா? அந்தத் தவிப்பில் மனம் சற்றுப் பதறவே செய்தது.

அங்கோ சூர்யவர்மன், நவிராவின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

அவனுக்கு நேற்றைய எல்லா சம்பவங்களை விடவும், இறுதியாக கண்ட ஷிவ்வின் முகம் உறுத்தியது.

‘அவன் எதுக்கு அந்த நேரத்துல அந்த வீட்டு வழியா போகணும்?’ என்று யோசித்தவாறே நவிராவின் வீட்டை அடைந்தான்.

அங்கே முன்னறையில் வந்து, அங்கிருந்த பி.ஏவை அழைத்து.. “நவிரா மேடமை பார்க்கணும். போய் சொல்லுங்க..” என்று கூற, அந்த பெர்சனல் செக்கரட்டரியோ, தயாளனுக்கு மட்டுமே வேலை பார்ப்பவர்.

அதனால் சற்று தயக்கத்துடன்.. “ஐயா.. நான்..” என்று அவர் தயங்க.. ஒரே பார்வை தான் சூர்யாவிடமிருந்து.. ஓடியே விட்டான் அந்த பி.ஏ.

உள்ளே சென்று நவிராவின் அறை அருகே சென்றவன், கதவை இரண்டு தட்டு தட்ட, மறுபுறத்தில் இருந்து எந்தவொரு சலனமுமில்லை.

இன்னும் இரண்டு முறை தட்டினான் அவன். ஆனால் அப்பொழுதும் பதிலில்லாது போகவே, மீண்டும் சூர்யவர்மனிடம் திரும்பினான்.

“ஐயா, கதவைத் காட்டின யாரும் கதவைத் திறக்கல.” என்று கூற, அவனோ சற்று எரிச்சலுடன்..

“அவங்க கூட ஜான்சி இருப்பாங்களே.. அவங்க எங்க? அவங்களும் ரூம்ல தான் இருக்காங்களா?” என்று கேட்டான்.

அதற்கும் அந்த பி.ஏ திருதிருவென விழிக்க, கடுப்பாக வந்தது சூர்யவர்மனுக்கு.

“போங்க..” என்று எரிச்சலுடன் அவரை அனுப்பிவிட்டு நின்றிருந்தவனை, மாடிப்படியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த தயாளன் பார்த்தார்.

“என்ன சூர்யா? ஏதாவது முக்கியமான விஷயமா? நான் தான் நேரா கட்சி ஆஃபிஸுக்கே வந்துடுவனே? அதுக்குள்ள நீயே வந்துட்ட?” என்றார் கேள்வியாக.

அவரை மேலிருந்து கீழாகப் பார்த்தவன்..

“கட்சி தலைவர் இன்னமும் ரெடியாகிட்டு இருக்காங்க. அவங்களுக்காகக் காத்துட்டு இருக்கேன்.” என்று கூறவும் தயாளனின் முகம் இறுகி, சிவந்தது!

அவனைக் கொலைவெறியுடன் பார்த்தவர்..

“தலைவர்? அவ இந்தக் கட்சியோட தலைவியா? ஹ்ம்ம்.. காலைல ஒழுங்கா எழுந்து, கட்சி ஆஃபிஸுக்கு வரதுக்கு கூட முடியாதவ எல்லாம் தலைவி உனக்கு?” என்று கோபமாகப் பேசினார்.

அப்பொழுதும் நிதானமாகவே..

“காலைல நேரமா எழுந்துக்கறதெல்லாம் இந்த தமிழர் மக்கள் கழகத்துக்கு தலைவரா இருக்கற தகுதியா சார்?” என்றான் நக்கலாக.

அதில் முகம் மேலும் சிவந்தது தயாளனுக்கு. அவனை முடிந்தவரை முறைத்துவிட்டு அவர் கிளம்ப, அதற்குள் சூர்யவர்மன் வந்து அங்கு காத்திருக்கும் செய்தி நவிராவின் காதினை வேலையாள் மூலமாக எட்டியிருக்க, அவன் அவளை உள்ளே வரச் சொல்லி ஆள் அனுப்பினாள்.

அவன் உள்ளே வருகையில் முன் தினத்துக்கு நேர்மாறாக, முழு சல்வாரில், தோளிலிருந்து, உடலைச் சுற்றியது போலத் தடிமனான துப்பட்டாவை அணிந்து கொண்டு, விரிந்திருக்கும் கூந்தல் அறைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ஏசியில் மெதுவே அலைபாய்ந்து கொண்டிருக்க, காபியைப் பருகியபடி நின்றிருந்தாள் அவள்.

அவளுக்கு வயது இருபத்தேழு என்பது அவனுக்குத் தெரியும் தான்.

நேற்றிருந்த அந்தப் புடவையில் கூடக் கொஞ்சம் வயதுக்குத் தகுந்த பெண்ணாக.. தமிழகப் பெண்ணாகத் தோன்றினாள்.

ஆனால் இந்த சல்வாரிலேயே மிகவும் சிறு பெண்ணாக, அதிலும் தமிழகத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத பெண் போலத் தோற்றமளிக்கவும், சூர்யவர்மனுக்கு அவளைப் பார்த்து சற்று வியப்பாய் இருந்தது.

அவனது பார்வையிலேயே வியப்பைக் கண்டவள்..

“வாங்க சூர்யவர்மன், என்ன அப்படி ஆச்சர்யமா பார்க்கறீங்க?” என்றாள் எடுத்ததுமே.

சூர்யவர்மனோ சற்றும் தயங்காமல்..

“இல்ல, உங்க ட்ரெஸ் பத்தி நான் கருத்து சொல்லறதா நீங்க நினைக்காதீங்க.. உங்க ட்ரெஸ் ரொம்ப கண்ணியமா தான் இருக்கு. இன் ஃபாக்ட் நீங்க அமெரிக்கால இருந்தப்போ கூட உங்க உடையை யாரும் குறை சொல்ல முடியாது.

ஆனா.. இந்த சல்வார்ல நீங்க இன்னமும் ரொம்ப சின்னப் பொண்ணா தெரியறீங்க!” என்றான் சற்று பாராட்டும் குரலிலேயே.

ஆனால் அதற்குள் அவன் கவலையுறும் இன்னுமொரு விஷயமும் புரிந்தது நவிராவுக்கு.

“என்ன சூர்யவர்மன்! நான் சின்ன பொண்ணு மாதிரி தெரிஞ்சா, இங்க மக்கள் என்னை நம்பமாட்டாங்கனு நினைக்கரிஞ இல்லையா சூர்யவர்மன்?” என்று அவள் கேட்க, அவனிடம் அமைதி.

“எனக்குப் புரியுது. ஆனா.. நம்ம மக்கள் மட்டுமில்ல, எல்லாருக்கும் ஒன்னும் புரியணும். வெறும் வெள்ளை வேட்டி, சட்டை போடறதாலேயே, காட்டன் புடவை கட்டறதாலேயோ மட்டுமே ஒருத்தங்க நல்லவங்க ஆகிட மாட்டாங்க.

அவங்களோட கண்ணியம் கண்டிப்ப ட்ரெஸ்லயும் இருக்கு தான். ஆனா, ட்ரெஸ்ல மட்டுமே இல்ல.

என் மதிப்பு மக்களுக்கு சீக்கிரம் புரியும் சூர்யவர்மன்.

மத்தபடி இந்த உடை விஷயமெல்லாம் ஒன்னும் பெருசுபடுத்தத் தேவையில்லை.” என்று அவள் சாதாரணமாகக் கூற, “சரி தான் மேடம்!” என்றுவிட்டு அவன் வெளியேற முயன்றான்.

அவனை, “ஒரு நிமிஷம் சூர்யவர்மன்!” என்று கூறித் தடுத்தவள், அவன் நின்று என்னவென்று பார்க்கவும்..

“நீங்க நேத்து, கிரீட் அவென்டஸ் பர்ஃபியூம் யூஸ் செய்திருந்தீங்களா? என்று அவள் கேட்க, புருவம் சுருக்கினான் சூர்யவர்மன்.

“இல்ல மேம்.. என்னோடது, க்ளைவ் க்ரிஸ்டின்.” என்று கூற, நெஞ்சமெல்லாம் படபடத்து அப்படியே கீழே சரிந்து அமர்ந்துவிட்டாள் நவிரா.

அதில் பதறியவனாக..

“மேடம்.. மேடம்.. என்னாச்சு? என்னாச்சு உங்களுக்கு?” என்று கேட்க.. உதடு நடுங்க தலை குனிந்து யோசித்தவள்..

“இந்த.. இந்த ரூம்ல.. இந்த ரூம்ல.. கிரீட் அவென்டஸ் வாசம் வீசுது.” என்றாள் திணறியபடி.

அதில் புரியாது சூர்யவர்மன் பார்க்க.. நவிராவோ..

“அது.. அது.. ஷிவ் யூஸ் பண்ணறது.” என்றதுமே சூர்யவர்மனுக்கே திக்கென்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!