Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 5

“நல்லாயிருக்கியா துரை?” என்று கொல்லைப்புறம் கை கால்களை கழுவ வந்த அந்த அறுபதை நெருங்கி கொண்டிருக்கும் வயதில் இருந்த அப்பாதுரையைப் பார்த்து சிரித்தபடியே கேட்டார் கனகுப் பாட்டி!

அவர் பரணியின் பண்ணை வீட்டு புறவாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு அவர்கள் வீட்டிலேயே பூத்த முல்லைப்பூக்களைக் கட்டி கொண்டிருந்தார்.

அப்பாதுரை பரணியின் உறவினர். அவர்கள் இனத்தில் கடைப்பிடிக்கும் எல்லா பழக்க வழக்கங்களும் அவருக்கு அத்துபடி!

அது கல்யாணம் போன்ற சுப விசேஷமானாலும் சரி, துக்க வீட்டில் செய்ய வேண்டிய செய்முறைகள் ஆனாலும் சரி, இப்போது இருக்கும் தலைமுறையில் அவர் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும்  அவர் அளவு சடங்குகளும் சாங்கியங்களும் தெரிந்திருக்க வில்லை!



Advertisement

முன்பு அவர் அப்பா இருந்து நடத்திக் கொடுப்பார், இப்போது அவர் காலத்திற்குப் பிறகு இவர் அதில் கை தேர்ந்து விட்டார்!

மேலும் காலத்திற்கேற்ப சில மாற்றங்களையும் வசதிகளையும் கொண்ட நடைமுறைகளையும் அவர் ஏற்படுத்தி வைத்திருந்தார்.

அவர்கள் வகையறாவில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் இவரே முன் நின்று செய்வதால், யார் வீட்டில் கல்யாண வயதில் பெண்கள் மற்றும் பையன்கள் இருக்கிறார்கள் என்ற டேட்டாவும் அவரிடம் தானாகவே சேர்ந்து விட்டது.

Advertisement

அதனால் வீட்டில் கல்யாணப் பேச்சு எடுப்பவர்கள், முதலில் இவரை அழைத்து பேசி விடுவார்கள்.

Advertisement

பின் ஒன்றும் ஒத்து வரவில்லை என்றால் மட்டுமே அடுத்த ஆப்சனாக ஆன்லைனோ ஆப்லைனோ மேட்ரிமோனியல் பக்கம் போவார்கள்.

அவரை அறியாமலேயே அவர் ஒரு மேட்ரிமோனியல் சர்வீஸ் பண்ணுகிறவர் ஆகிவிட்டிருந்தார்!

இத்தனை செய்தாலும் அடிப்படையில் அவர் கொஞ்சம் அப்பாவி துரை தான்!

Advertisement

ரகசியம் காக்க தெரியாதவரும் கூட!

ஆனால் அவர் மனைவி கொஞ்சம் உஷார் பேர்வழி!

அவள் தான் அவள் கணவனை இந்த திருமண ஏற்பாடுகளில் எதாச்சும் பிரச்சினை ஏற்பட்டால் இவர் தலை உருளாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்!

இன்று இருவரும் தான் பரணியின் அத்தை சந்திரா சொல்லி அனுப்பியதால் இங்கு வந்து பரணியின் கல்யாண விசயமாக தினகரனிடம் பேச வந்திருந்தார்கள்.

மாலை காபி டிபன் சாப்பிட்டு விட்டு கை கழுவ வெளியே வந்த அப்பாதுரை தான் இப்போது கனகுவிடம் சிக்கியிருக்கிறார்!

அவர் மனைவியை கிச்சனில் பிடித்து வைத்து பேசிக் கொண்டிருந்தார் ஜகது பாட்டி!

தன்னை நலம் விசாரித்த  கனகுவிடம், “நல்லாயிருக்கேன் சின்னம்மா, நீ எப்படி இருக்க? வெளிநாடு போய்ட்டு வந்ததில் இருந்து ஒரு டைப்பா இருக்கியே சின்னம்மா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லடா, நான் எப்போதும் போல தான் இருக்கேன்! எங்க உன் பொண்டாட்டி வரல?”

“வந்திருக்கா சின்னம்மா, உள்ள ஜகது சின்னம்மா கிட்ட பேசிட்டு இருக்கா!”

“என்ன இவ்வளவு தூரம்? யாருக்கும் கல்யாண சோலியா வந்திருக்கியா?”

“ஆமா சின்னம்மா, நம்ம பரணி தம்பிக்கு தான் பொண்ணு பார்க்க சொன்னாரு தினா அண்ணா, சந்திராவுக்கு அவங்க கொழுந்தன் பொண்ணக் கொடுக்கணும்னு ஆசை!

ஆனா ஜகது ஆத்தா அப்பவே வேணாம்னு சொல்லிட்டதால, வேற எதாச்சும் பொண்ணு இருந்தா பார்க்க சொன்னாரு தினு அண்ணன்”.

பரணிக்கு வெளியில் பொண்ணா, நம்ம ஜானகி இருக்கும் போது! மனதில் நினைத்த கனகு, இத இப்பவே கலைச்சு விடனும், இல்லன்னா, ஒண்ணு மாத்தி ஒண்ணா இவன் வேறே ஜாதகக் கட்டை கொண்டு வந்துடுவான்.

மனதிற்குள் சொல்லிக் கொண்ட கனகு, உரக்க மணியை அழைத்தார்.

“டேய் மணி.. மணீ , இங்க வாடா, இந்த பூவைக் கொண்டு போய் ஜானும்மா கிட்ட கொடுத்துட்டு வா! அப்புறம் ஜகது வேற என் பேத்திக்கு பூ கொடுக்கலியான்னு என் கிட்ட சண்டைக்கு வந்திடுவா”

“யாரு சின்னம்மா ஜானும்மா?”

“அவளா, அவ பரணி ஆஸ்பத்திரில வேலை செய்ற டாக்டர்! இங்க தான் தங்கி இருக்கா! ஜகதுவுக்கு அவன்னா ரொம்ப பிரியம்! பேத்தி.. பேத்தி உயிரை விடறா!” சொல்லி விட்டு அப்பாதுரையை ஓரக்கண்ணால் பார்த்தவர், மணியைப் பார்த்து

“டேய் அவனை என்னடா பார்க்குற? துரையை தெரியாதா உனக்கு? பரணிக்கு பொண்ணுப் பார்க்கிற விசயமா வந்துருக்கான்.”

“பரணி அண்ணனுக்கு வெளியே பொண்ணுப் பார்க்கிறாங்களா? அப்பா ஜானும்மா..?” அவன் இறங்கிய குரலில் கேட்டான்.

“டேய் சும்மாயிருடா.. அவன் காதில் விழுந்துடப் போகுது!” மெல்லிய குரலில் ஆனால் துரைக்கு கேட்குமாறு அவனைக் கண்டித்தார் கனகு!

“இல்ல ஆத்தா,” என்று  அவன் ஏதோ சொல்ல வர, “டேய்.. நீ போகப் போறியா இல்லியா? போய் பூவைக் கொடுத்துட்டு வா!” அவனை விரட்டினார்!

“என்ன சின்னம்மா, அவன் ஏதோ சொல்ல வந்தான்..நீ அவனை விரட்டி விட்டுட்டியே!”

“அதெல்லாம் விட்டுத் தள்ளு, அவன் படிக்காத பய! அவனுக்கு சில டவுன் பழக்கம் எல்லாம் புரியாது!”

“என்ன சொல்ற நீ எனக்கொண்ணும் புரியல சின்னம்மா!”

“அது தாண்டா, இவன் நம்ம பரணி இந்த ஜானு டாக்டரை தான் கல்யாணம் செய்யப் போறதா சொல்லிட்டு இருக்கான்!

கல்யாணம் ஆகாத ரெண்டு சின்ன வயசு பிள்ளைங்க  கொஞ்சம் சிரித்துப் பேசினால் கூட அவர்களை இணைச்சு பேசிடுவான்! படிக்காத தற்குறி!

அப்படி எல்லாம் சொல்லாதடான்னா, அப்புறம் ஏன் அண்ணன், இந்த டாக்டரை மட்டும் இன்னும் குவாட்டர்ஸ்க்கு அனுப்பாம இங்கியே தங்க வச்சுருக்குன்னு கேக்கறான்!

அவன் கேக்குறது எனக்கும் கூட சரி தானோன்னு சில சமயம்  தோணும்!

ஆனா அத மட்டும் வச்சு அவங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் செய்துக்க போறாங்க போலன்னு நானும் இந்த பொடிப் பய நினைக்கிற மாதிரி நினைக்க கூடாதுல்ல? என்ன நான் சொல்றது?” கனகு அப்பாதுரையை இன்னும் கொஞ்சம் ஆழம் பார்த்தார்!

இப்போது அப்பாதுரையின் முகத்தில் குழப்பம்!

கனகுவின் முகத்திலோ  வெற்றிப் புன்னகை!

“டேய் துரை,, நீ பாட்டுக்கு வெளிய போய், பரணி,  இந்த டாக்டர் பொண்ணை தான் கல்யாணம் செய்துக்கப் போறான், அதுக்கு தான் இங்க கொண்டு வந்து தங்க வச்சுருக்கானு சொல்லிட்டு இருக்காத! அப்புறம் ஜகது என்னை கொன்னே போட்டுடுவா! உன்னையும் தான்!

 இந்த விஷயம் உன் பொண்டாட்டிக்கு கூட தெரியக் கூடாது பார்த்துக்கோ!”  சொல்லி முடித்தே விட்டார் கனகுப்பாட்டி!

முடித்துவிட்டது பேச்சை மட்டுமல்ல, பரணிக்கு இனி பெண் தேடும் பேச்சுக்கே எண்டு கார்ட் போட்டு விட்டார்!

ஏனென்றால் அப்பாதுரையும் ஓட்டை வாயர் தான்!

இந்த விஷயம் முதலில் அவரின் பொண்டாட்டி காதுக்குப் போகும்! பின் அவள் இவரை இந்த பெண் தேடும் முயற்சியில் ஈடுபட விடாமல் தடுத்து விடுவாள்!

அப்பாதுரையோ போகுமிடமெல்லாம் இந்த “ரகசியத்தை” சொல்லிவிடுவார்!

“பத்த வச்சிட்டியே பரட்டை!” என்று சிரித்தவாறு கனகுவிடம் வந்தான் பரத்!

பரத்! எப்படி இந்த பாட்டிஸ் கூட்டணியில்?

கனகு ஒன்றும் வேண்டுமென்றே இப்படி வதந்தியைப் பரப்ப வில்லை!

அவர் பரணியின் மனதிலும் ஜான்வியின் மனதிலும் ஆசை இருப்பதை கன்பர்ம் செய்த பிறகே இப்படி செய்தார்!

சில பல வேலைகள் செய்து தான் அவர் இதை உறுதிப் படுத்தினார்!

முதல் டெஸ்ட் பரணிக்கு!

அன்று அயர்ன் பண்ணிய துணிகளை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார் அயர்ன் வண்டிக்காரர்.

அவை எல்லாம் பரணியின் சர்ட் மற்றும் பாண்ட்கள்.

அவர் கூடவே ஜான்வி வீட்டில் இல்லாததால், அவள் புடவைகளையும் அவள் வந்தால் கொடுக்க சொல்லி இங்கேயே வைத்து விட்டுப் போயிருந்தார்!

கனகுப் பாட்டி, அதிலிருந்த ஜான்வியின் புடவை ஒன்றை எடுத்து பரணியின் துணிகளுக்கு இடையில் வைத்து, மணியைக் கூப்பிட்டு பரணியின் அறையில் வைத்து விட்டு வர சொல்லி விட்டார்!

கனகு யாருக்கும் தெரியாமல் தான் இதை செய்தார். ஆனால் தலைக்கு மேல் இருந்த அந்த ஹாலின் CCTV காமிராவை அவர் யோசிக்க வில்லை!

பரத், CCTV புட்டேஜ்களை பேக்கப் எடுத்துக் கொண்டிருந்தவன் கண்ணில் எதேச்சையாக இந்த காட்சிப் பட்டுவிட, அவன் கனகுவை அழைத்து கேட்டு விட்டான்!

“ஏய்! கிரிமனல் கிழவி! எதுக்கு இப்படி செஞ்ச?”

மாட்டிக் கொண்டுவிட்ட கனகு, வேறு வழியில்லாமல் பாட்டிகளின் பிளான் பற்றி சொல்லும்படி ஆகிற்று!

“அது சரி. இப்படி புடவை கலந்து வச்சு என்னத்த கண்டுபிடிக்க போறே?”

“அவன் அந்த புடவையை உடனே யார்கிட்டயாச்சும்  கொடுத்து அவ கிட்ட கொண்டு போய் கொடுக்க சொன்னா, அவன் மனசுல எதுவும் இல்லன்னு அர்த்தம்!

இல்ல புடவை எடுத்து வச்சுட்டு தராம கமுக்கமா  இருந்தா, பய சிக்கிட்டான்னு அர்த்தம்!”

“ஒருவேளை அண்ணன் அதை கவனிக்காம இருந்திட்டா?”

“அதுக்கு தான் அந்த கட்டில் இருக்கும் எல்லா சட்டையையும் நான் போட்டோ எடுத்து வச்சுருக்கேன், பாரு என் போன்ல! இதுல எதாச்சும் ஒண்ணை அவன் போட்டுட்டு வந்தாலே அவன் புடவையைப் பார்த்து விட்டு தான் கொடுக்காம தானே வச்சுட்டு இருக்கான்னு அர்த்தம்! வெயிட் அண்ட் சீ பேரா! “

“செய்றது திருட்டு வேலை! இதில் இங்கிலிபீசு வேறே! குசும்புகார கிழவி நீ!”

“டேய் நான் மட்டுமா, இந்த ஆப்ரேசன்ல இருக்கேன், உன் ஆத்தா ஜகதுவும் தான் இருக்கா!”

“ஓ! கிழவிகள் கூட்டணி! அதுவும் வில்லங்கமான கூட்டணி! கழுதையால எதாச்சும் நல்லது நடந்தா சரி!” பரத் தோளைக் குலுக்கினான்!

“டேய் என்னடா இப்படி சொல்ற? உன் அண்ணனுக்கு நல்ல பொண்ணு பொண்டாட்டியா வரணும்னு தான் நாங்க இத செய்றோம்! உனக்கு அப்படி ஒரு ஆசை இல்லையா?”

“அய்யோ என்ன ஆத்தா இப்படி கேட்டுட்டே? ஜான்வி மேம் மாதிரி ஒரு பொண்ணு பரணி அண்ணாக்கு பொண்டாட்டியா, இந்த வீட்டுக்கு மருமகளா வர்றது எனக்கும் தான் சந்தோசம்!

எங்க அண்ணன் அவர் பிரண்டுன்னு ஒண்ணை கூட்டிட்டு வந்தார் கதிர் சித்தப்பா சாகுறதுக்கு முன்னாடி!

எங்க அதை கல்யாணம் பண்ணிடுவாரோன்னு நான், பவி, பாரதி எல்லாம் பயந்திட்டு இருந்தோம் தெரியுமா? இப்ப நான் ஹேப்பி ஆத்தா!”

“அப்ப , எங்க கூட சேர்ந்து நீயும் அவங்கள சேர்த்து வைக்க உதவி பண்ணு!”

“ஷ்யூர் பேபி!” பரத் கனகுவுக்கு ஹைபை கொடுத்தான்!

இந்த டெஸ்டில் மட்டுமல்லாது, ஜான்வியிடம் கொஞ்சம் பொசசிவாகவும் பரணி இருப்பதையும் கனகுவின் கழுகு கண்கள் கண்டுப்பிடித்திருந்தன!

விக்னேஷ் அவன் அப்பா தினகரனுக்கு ஜான்வியால் அமர்த்தப்பட்ட பிசியோதெரபிஸ்ட்!

அவளின் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து வந்தவனும் கூட!

ஜான்விக்கு அந்த ஊரில் அவள் வயதையொத்த நட்பு என்பது அவன் மட்டுமே!

மற்ற எல்லோரும் டாக்டர் என்ற மரியாதையில் கொஞ்சம் தள்ளியே நிற்பவர்கள் தாம்!

பரணியின் உடன் பிறப்புகள் உட்பட!

என்ன தான் ஜகதுவும் கனகுவும் அவளிடம் பாசமாக பழகினாலும் கூட அவர்கள் மூத்த தலைமுறை!

எனவே ஜான்விக்கு அங்கு விக்கி மட்டுமே பிரண்டாக இருந்தான்.

அவனுடன் மட்டும் தான் அவள் ஜாலியாக பேசுவதும் அரட்டை அடிப்பதும்!

விக்னேஷ் தன் லாப்டாப்பில் ஏ ஐ(AI) கொண்டு ஏதாவது மீம்ஸ், funny வீடியோக்கள் எடுத்து போட்டு காண்பித்து எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான்!

அது மாதிரி யூ டுயூப் சானல் ஒன்றும் வைத்திருக்கிறான்.

நேற்று கூட அவன் கனகு பாட்டி சிறு வயதில் வக்கீலாக ஆசைப் பட்டதைப் பற்றி ஜான்வியிடமிருந்து அறிந்து கொண்டு விதி படத்தில் வரும் சுஜாதா போல கனகுவை ஏ ஐ யில் கொண்டு வந்து வசனம் பேச வைத்து வீடியோ ஒன்றை தயாரித்து இருந்தான்!

அதை ஜான்வியிடம் போட்டுக் காட்ட, அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து விட்டாள்.

கூடவே விக்கியின் தலைமுடியைப் பிடித்து ஆட்டி, “டேய் என்னடா பண்ணி வச்சுருக்க என் கனகு டார்லிங்கை!” என்று பொய்க் கோபத்தோடு கேட்டுக் கொண்டிருந்த போது, தன் வண்டியைப் பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்த பரணி இதைக் கண்டு கோபமானான்.

உள்ளே போய், அவன் அம்மாவிடம் “அப்பாக்கு பிசியோ கொடுத்து முடிஞ்சா இவன் வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தானே, இங்க எதுக்கு இன்னும் அரட்டை அடிச்சுகிட்டு இருக்கான்?”  என்று திட்டி விட்டுப் போனான்!

அவனை ஆச்சர்யமாக பார்த்தார் தமிழரசி! இதுவரை விக்கியை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்த பரணியா இது?

அவனோ தன் ரூமுக்கு போகும் வழியில் திரும்பவும் ஒருமுறை, “எப்ப பார்த்தாலும் பொம்பள பிள்ளைங்க கூடவே அரட்டை அடிச்சுட்டு இருக்கிறது!” திட்டினான்.

தன் மைன்ட் வாய்ஸ் என்று நினைத்துக் கொண்டு முனகிய பரணியை பய சிக்கிட்டான் என்றே கன்பர்ம் செய்து விட்டார் கனகு!

இதற்கு முன், இதே போல் விக்கி, பவித்ராவுடனும், பாரதியுடனும் கூட அரட்டை அடித்ததைக் கண்டும் கூட சின்ன சிரிப்போடு நகர்ந்தவன் இதே பரணி!

விக்கியின் வீடியோக்களைப் பார்த்து தினகரனே கூட பல முறை சிரித்து விட்டிருக்கிறார்!

அவ்வளவு ஏன் சிரிப்பதையே நிறுத்தியிருந்த தாமரைக் கூட அன்று ஒரு நாள் மனம் விட்டு சிரித்து விட்டாள்!

இதனாலும் கூட அவனுக்கு விக்கியை இதுவரை பிடித்து தான் இருந்தது!

இப்போது ஜான்வி அவனிடம் உரிமையாய் விளையாடியது அவனுக்குள் இப்படி பொசசிவ்நெஸ்  உண்டாக காரணமாகி விட்டது!

இந்த வீட்டுப் பெண்கள் விக்கிக்கு இந்த அளவு வீட்டில் இடம் கொடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு!

விக்கிக்கு அவன் விரும்பும் பெண்ணுடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஏற்கனவே நிச்சயம் ஆகியிருந்தது!

தமிழரசி, வத்சலா, ஜகது மற்றும் கனகுவோடு ஜான்வியும் அதற்கு போய் வந்தது பாவம் பரணிக்கு தெரியாது!

பரணிக்கு, ஜான்வியின் மேல் விருப்பம் இருப்பதை தெரிந்து கொண்ட கனகு, ஜான்வியின் விருப்பத்தையும் அறிந்து கொண்ட பிறகே, இந்த வதந்தி பரப்பும் வேலையில் ஈடுபட்டார்!

ஏன் என்றால், ஜான்வி வெளிப்படையாக அவள் விருப்பத்தை கனகுவிடம் ஒத்துக் கொண்டதைப் போல பரணி நிச்சயம் ஒத்துக் கொள்ளவே மாட்டான்!

ஆசை இருந்தாலும் வெளியே சொல்ல மாட்டான் என்றே அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்த பாட்டிகள் இருவரும் அவனுக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்கினால் தவிர அவர்கள் திருமணம் நடக்காது என்று உணர்ந்து செயல் பட்டார்கள்!

அதுவும் ஜான்வியின் விருப்பம், அவள் இந்த ஊரிலேயே இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு இன்னும் தீவிரமாக!

அன்று பாம்பைப் பார்த்து பயந்து ஜான்வி பரணியைக் கட்டிக் கொண்டு நின்றதை மணி உடனே வந்து கனகுவிடம் ஒப்புவித்து விட்டான்!

ஜகது உட்பட, எல்லோரும் அவளை சமாதானப்படுத்தி வைக்க மட்டுமே அன்று முயன்று இருந்தார்கள்.

ஜகதுவின் மடியில் படுத்துக் கொண்டிருந்த ஜானவியைப் பார்த்து, கனகு தான் அந்த கேள்வியைக் கேட்டார்!

“நீ எதுக்கு ஜானும்மா, அங்க அந்த வீட்டு பக்கம் போன?”

ஜான்வி தயங்கினாள்.

“அது பழைய காலத்து வீடு இல்ல அதான்.. “ அவள் வார்த்தைகளை விழுங்கினாள்!

“அதே மாதிரி தான் நம்ம செட்டியார் வீடு கூட, அத கூட நீ இப்படி ரசிச்சு பார்க்கலியே அன்னிக்கு!

உண்மையா சொல்லும்மா!”

“அது .. வந்து பாட்டி.. அந்த வீடு என் அம்மாச்சி வீடு! என் அம்மா விஜி பிறந்து வளர்ந்த வீடு!” ஜான்வி சொன்ன உண்மையில் அதிர்ந்து அவளை மடியில் இருந்து எழுப்பி விட்டு அவள் முகத்தையே உற்றுப் பார்த்தார் ஜகது!

ஏதோ இன்று தான் முதன் முதலில் பார்ப்பது போல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!