Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

3 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 3

.

திருச்சி:



Advertisement

அன்பு சுயநலம் இல்லாதது.

அந்தி மாலைப் பொழுதில் ஒரு தோப்பு வீடு என்ன என்ன அம்சங்களைப் போர்த்திக் கொள்ளுமோ, அவை அத்தனையும் அந்த வீடு போர்த்திக் கொண்டிருந்தது. பெரிய திண்ணையோடு இருந்த அந்த வீட்டின் வாசலில் மூன்று பெரியவர்களும் ஒரு குட்டி மகனும் நின்றிருந்தனர்.

Advertisement

“அப்பாக்கு டாட்டா சொல்லு கண்ணு” பிஞ்சு விரல்களைப் பற்றியிருந்த பாட்டி உரைத்தார்.

Advertisement

பிதுங்கத் துடித்த உதட்டை இறுக்கிப் பிடிக்கத் தெரியாது, துடிக்கும் ஈர இதழைப் பிரிக்காது பிடிவாதமாக நின்றிருந்தான் குழந்தை.

Advertisement

வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த வெள்ளை நிறப் புத்தம் புதிய பென்சின் கதவைத் திறந்தவரின் குரல்வளை ஒருமுறை ஏறி இறங்கியது.  மடைதிறக்கக் காத்திருந்த கண்ணீரை வழிய விடாது பிடிவாதமாக நின்றிருந்த ஐந்து வயதேயான, பால் மணம் மாறாத மகனைத் திரும்பிப் பார்த்த தகப்பன் முகத்தில் சொல்லொண்ணா வேதனை. இதற்குத் தான் சந்தியாவின் மறைவின் பின் நகுலன் மறுமணம் புரிவதில்லை என்றிருந்தான்.

விதி யாரை விட்டது? சில மாதங்களே ஆன குழந்தையோடு நின்றவனை குடும்பம் அப்படியே விட மறுத்தது. அக்ஷாரா அவரின் துணைவியாக இருப்பாள் என்றிருக்க சந்தியா நிலைக்கவில்லையோ என்னவோ.

ஒன்றரை வருடத் திருமண வாழ்க்கையின் நினைவாக மகன் மட்டுமே இருந்தான் நகுலன் கரங்களின். அதனால் அக்ஷராவை ஏற்றுக் கொள்வதில் நகுலன் அவஸ்தை கொள்ளவில்லை.

அதுவும், தன்னை காதலித்த ஒரே காரணத்தால், வேறு திருமணமே செய்ய மாட்டேன் எனப் பிடிவாதமாக நிற்பவளை எப்படி மீண்டும் நிராகரிப்பான்?

அவள் விருப்பம் பற்றி அன்றே நகுலனுக்கு தெரிந்தாலும் அவன் தான் வேண்டாம் என மறுத்தான். சொந்தம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் பெண்ணின் வயதும், வசதியும் மறுக்கப் போதுமான காரணங்களாகப் போனது நகுலனுக்கு. இருபதைக் கூட தொடாத சிறுமியை அவன் மணக்கச் சம்மதிக்கவில்லை.

மனைவியின் மறைவுக்குப் பிறகு அக்ஷராவின் பிடிவாதம் அவனைச் சம்மதிக்க வைத்தது. இப்பொழுது மட்டும் என்ன… அவள் கல்லூரிப் படிப்பை முடித்து நிற்கும் இளம் பெண்.

நகுலனின் நெருங்கிய சொந்தம் இல்லை என்றாலும் ஏதோ இரு வகையில் மாமன் மகள் அக்ஷரா. ‘திருமண வாழ்வு என ஒன்று என்றால்… அது உன்னோடு மட்டுமே’ என அக்ஷரா திடமாக கூறிவிட நகுலன் யோசித்தான். அக்ஷராவின் வீட்டிலிருந்து வந்து பேசவும் நகுனலால் மறுக்கவில்லை. ஊர் அறிய இரண்டாவது முறையாகத் திருமண பந்தத்தினுள் நுழைந்தான் நகுலன்.

இன்று… தன் மகனை சந்தியாவின் பெற்றோரிடம் விட்டுச் செல்ல வேண்டிய தன் நிலையை அறவே வெறுத்தவனுக்கு மறுமணம் தவறோ எனத் தோன்றியது நிமிட நேரம் என்றாலும் தோன்றியது உண்மை.

மனைவி கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த எண்ணமே அபத்தம் என அவனுக்குத் தோன்றாமல் இல்லை. குரல் கமற, “பாத்துக்கோங்க மா” என்றவனுக்கு மகனைப் போல் பிடிவாதம் பிடிக்கத் தெரியவில்லை. கண்கள் கலங்கி உவர்ப்பு நீரை வெளியே தள்ளின.

இரண்டு நிமிடத் தூரத்தில் நின்றிருந்த காரை நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு மனம் போல் கால்களும் கனத்தன.

அவன் மகிழுந்தில் அமரவும், “கிளம்பட்டுமாங்க ஐயா?” என்ற கேள்விக்கு அவரிடமிருந்து தலையசைப்பு பதிலாக வரவும், ஓட்டுநர் கையில் மகிழுந்து, திருச்சியை விட்டு சென்னையை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தது.

அக்ஷரா இரண்டாம் முறை கர்ப்பம் தரித்திருக்க, இரண்டு பிள்ளைகளைப் பார்க்க மசக்கை விடுவதில்லை என்பதால் இந்த ஏற்பாடு.

தாங்கிக்கொள்ள சந்தியாவின் தாயும் தகப்பனும் இருப்பதால், “ஒரு ரெண்டு மூணு மாசம் மா… அவளுக்குத் தலை சுத்தல் சரியானதும் கூப்பிட்டுக்கிறேன்” என்று கூறித்தான் மகனை அவனின் தாத்தா பாட்டியிடம் விட்டு சென்றிருக்கிறான்.

சென்றவருக்கு தெரியவில்லை, இம்முறை இரண்டு மூன்று மாதங்களில் மாறிப் போகும் விடயம் இதில்லை என்று.

அந்த பெரிய வளாகத்தைத் தாண்டவும் அந்தக் குட்டி கால்கள் வேகமெடுத்து மதில் சுவர் இரும்பு கேட்டை நோக்கி ஓடின. திறந்திருந்த பெரிய கேட்டை பிடித்து நின்ற சின்னவன் கண்முன்னே வாகனம் புழுதியை வாரியிறைத்துக் கொண்டே சென்றது.

புழுதி பறந்து மறைந்த பின்னும் வாகனம் சென்ற பாதையை விசும்பலோடு பார்த்து நின்றிருந்தான் குட்டி மகன்.

“உள்ள போலாமா கண்ணு?” என்ற சத்ததிற்குத் தலை நிமிர்த்திப் பார்க்க, அவனையே வாஞ்சையோடு பார்த்து நின்றிருந்தார் அவனின் அம்மாச்சி. அம்மாவின் அம்மா என்பதால் பாட்டியை அவனுக்கு நன்கு பரிச்சயம். இந்த வீடும் பரிச்சயம்.

அவன் தவழ்ந்து… நடை பழகி… ஓடி விளையாடி என அவ்வப்போது அப்பாவோடு சில நாட்கள் தங்கிச் சென்ற வீடு. ஆனால் இது தான் முதல் முறை இப்படி அப்பா அவனைப் பெட்டியோடு விட்டுச் செல்வது.

பதில் உரைக்காது வீட்டை நோக்கி செம்மண் பாதையில் நடக்க ஆரம்பித்தவன் கரத்தை அந்த முதியவர் விடவே இல்லை.

தகப்பனின் தனிமையைப் போக்கப் பெற்றவர்கள் நினைத்ததின் பலனாய் இன்று இந்தச் சின்ன குறுத்துத் தனிமையில் நின்றுவிட்டது. ‘இன்னும் என்னென்னவோ’ என நினைத்தவருக்குள் கசந்து போனது.  

“சாப்பிடுறியா கண்ணு?” என்று கேட்டவருக்கு அவன் பதில் கொடுக்கவில்லை என்றாலும் அவர் ஊட்டி விட்ட பால் சோற்றைச் சத்தம் போடாது விழுங்கினான் குட்டி மகன். 

அவன் நினைவில் அம்மா என்பவர் இல்லை. புது அம்மாவோடு ஒட்ட மாட்டான் என்று, அவர் நிழற்படத்தை அப்பாவும் காட்டியதில்லை, பாட்டி தாத்தா காட்டவும் அனுமதித்தலில்லை.

அதனால் அவனுக்கு அம்மாவின் உருவம் தெரியாது. அம்மா என்ற ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்றும் தெரியாது.

புதிதாக வந்த அம்மாவிற்கு எந்தக் குறையுமில்லை. தம்பியைக் கடிவதை போல் இவனை அவர் கடிந்ததே இல்லை. கொஞ்சல் எல்லாம் இல்லை என்றாலும் அன்பாகப் பார்த்துக் கொள்வார்.

அவரும் அவனுக்காக என்னென்னவோ செய்துதான் பார்க்கிறார், அதில் ஒட்டுதல் இல்லை என்பதாலோ என்னவோ இவனாலும் அவரோடு ஒட்ட முடியவில்லை.

அமைதியாக, கொடுத்ததை விழுங்கி அறைக்குள் நுழைந்தவன், கட்டிலில் விழுந்தான். அந்த பெரிய அறையில் அலமாரி, மேசை நாற்காலி, விளையாட்டு சாமானாள்கள் என ஒரு மூலை இருந்தன. இவை எதையும் கவனிக்கும் நிலையில் மகன் இல்லை. ஜன்னல் அருகே அவன் படித்திருக்கும் மெத்தை இருந்தது.

சாளரம் வழியே தென்றல் வந்து தாலாட்டிய பின்னும் தூக்கம் தழுவவில்லை. எதையுமே எண்ணாது இரவை வேடிக்கை பார்த்து படுத்திருந்தான் சின்னவன்.

ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்றிருந்த மாமர கிளையில் ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருக்க, அதன் கயிற்றிற்கு இடையே அந்த பெரிய நிலா தெரிந்தது.

அத்தனை குட்டிக் குழந்தைக்கு அந்த நிலவில் பார்க்க என்ன இருந்ததோ, சோர்ந்த விழிகள் நிலாவினுள் யாரையோ தேடின. 

ஒரே மதில் சுவருக்குள் முன்னும் பின்னுமாக இரு வீடுகள் இருக்க, இவர்கள் வசிப்பது முன்னால் இருந்த வீட்டில்.

பின் வீட்டிலிருந்து ‘வீல்’ என்ற அழுகை சத்தம் காதை வந்தடைந்தது. கட்டிலில் அமர்ந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.

ஜன்னலுக்கு வலது புறம் கிணறு இருக்க, அதன் இடது பக்கத்தில் அந்த வீட்டின் முன் பக்கம் தெரிந்தது. அந்த வீட்டின் முன் கதவு திறந்திருந்தப் போதும் ஒருவரும் தெரியவில்லை.

மீண்டும் படுத்துக் கொண்டவனுக்குக் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. தூக்கம் வரவில்லை.

“என் பட்டு தங்கம் ஏன் அழுவுது” என்று அந்தப் பிஞ்சின் அம்மா குழைந்து கொண்டிருந்தாள். பாசம் இழைந்தோடியது அந்த குரலில்.

“தூக்கம் வருது என் மகளுக்கு. தூக்கு அவள” என்றார் அப்பா. அந்தக் குரலில் அவ்வளவு அன்பும் பரிவும்.

ஐந்து வயது குழந்தைக்கு என்ன புரிந்ததோ… தலையணைக்குள் முகம் புதைத்து சத்தம் போடாது விசும்ப ஆரம்பித்தான். ‘அம்மா வேணும்’ என்றது தலையணையை நனைத்த கண்ணீர். 

அம்மா இருந்திருந்தால் அப்பா என்ற உறவு தனக்கு இருந்திருக்குமே… நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ” என்ற தாலாட்டு இவனுக்காக பாடப்படவில்லை என்றாலும் தென்றல் காற்று அதை அவனிடம் கொண்டு சேர்த்தது.  குரலின் இதத்தில் வீறிட்டக் குழந்தையோடு சின்னவனும் கண்ணயர்ந்தான்.

என்றும் போல் அன்றும் நாள் விடிந்தது, ஆதவனும் விழித்தான். பல் தேய்த்து…  குளிக்க வைத்து என காலைக் கடன்களை முடிக்கப் பேரனுக்கு உதவினார் தாத்தா. அமைதியாக ஏற்றுக் கொண்டான்.

இப்படி பிரஷ்ஷ பிடிச்சு பல்ல தேய்க்கணும்… கை இடுக்குல, கால் இடுக்குல எல்லாம் நல்லா தேச்சு குளிக்கணும்… சோப் போக குளிக்கணும்… ஈரம் போக தல தொவட்டணும்… என தாத்தா அனைத்தையும் பிள்ளைக்குப் போதித்தார்.

அவன் வாழ்வை அவன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்திருப்பார் போலும்… அனைத்தையுமே அவனுக்கு விளக்கினார். சமர்த்தாகக் கேட்டுக் கொண்டான்.

பாட்டி, பேரனுக்கு ஹார்லிக்ஸ் கொடுக்க, அடம்பிடிக்காது குடித்தான். சற்று நேரத்தில், “இட்டிலி சாப்பிடறியா கண்ணு?” என்ற பாட்டியிடம், ‘பிடிக்காது’ என்பதைக் கூறாது, “அப்பறம் பாட்டி” என்றவன் ஜன்னல் பக்கம் வந்தான்.

அடுத்த வீட்டைப் பார்க்கும் ஆவலில் வந்து விட்டவனுக்கு உயரம் போதவில்லை. அவன் உயரத்திற்குப் பெருவிரலில் நிற்க வேண்டி இருந்தது.

கண்கள் ஆவலாய் பக்கத்து வீட்டைப் பார்த்தன. பேச்சும் சிரிப்பும் கேட்டது. பிஞ்சு கால் விரல்கள் வலியைக் கொடுக்க, சோஃபாவில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

பசியில் வயிறு வலித்தது. ஆனால் அது பசி என பிள்ளைக்குத் தெரியவில்லை. வலிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

நேற்றும் கழுத்துக்கு அடியில் ஏதோ வலித்தது. அழுகை வந்தது. பக்கத்து வீட்டு அன்னையின் பாடல் அவன் வலியைப் போக்கியது. அதனால், மீண்டும் ஜன்னல் பக்கம் வந்தான்.

பெருவிரலில் நின்று பின் வீட்டைப் பார்த்தான். நிமிடங்களில் கால் விரல்கள் மீண்டும் வலி கொடுக்க ஜன்னலை விட்டு அகல நினைத்தவன் பார்வையை நிறைத்தது கண்ட காட்சி.

அம்மா என்னும் தேவதையின் விரலைப் பிடித்து… தோளில் இளநீலப் பட்டாம் பூச்சிகள் பறக்க, குட்டி வெள்ளை உடுப்பு அணிந்திருந்த குட்டி தேவதை தளிர் நடையோடு வந்து கொண்டிருந்தது.

ஒற்றைக் கையில் இளம் ரோஜா நிற குட்டி துணியை ஏந்திக் கொண்டு, சின்ன சின்ன குட்டி குடுமிகள் இரண்டும் ஆடத் தலையை ஆட்டிக்கொண்டே வந்து கொண்டிருந்தாள் இரண்டு வயதுக் குழந்தை.

கால் விரல்கள் வலித்தாலும், ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு எம்பி நின்றிருந்தவன் வருவோரைப் பார்த்த விழி பார்த்தபடியே இருந்தது.

அம்மாவை இறுகப் பிடித்திருந்த குட்டி மகளின் பிடியில் பார்வை நிலைத்து நின்றது. குட்டி மகனின் இதழ் பிதுங்கித் துடித்தது.

“கண்ணு சாப்பிடு” என்ற பாட்டியைப் பார்க்காது அறையினுள் ஓடி மறைந்தான். நேற்று வரை இருந்த அப்பாவும் இல்லாது… கட்டி அணைத்து… கைப்பிடித்து… பிடித்த உணவைக் கொஞ்சி ஊட்டிவிட அம்மாவும் இல்லாது அந்தப் பிஞ்சு மனம் தவியாய்த் தவித்தது.

தெரிந்த பாட்டியும் தாத்தாவும் தான்… ஆனாலும்… ப்ச்! விட்டுச் சென்றது அப்பா என்றாலும் மனம் இல்லாத அம்மாவை அதிகம் தேடியது.

அவன் பாட்டியின் வீட்டில், யாருமற்ற ஆனாதைப் போல் பிள்ளை உணர்ந்தான்.

“பேரன் வந்துட்டானா மா?” என்று கேட்டுக் கொண்டே பக்கத்து வீட்டுத் தேவதை அம்மா உள்ளே நுழைவது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

வழியும் கண்ணீரைத் துடைக்க ஆள் இல்லாது அமர்ந்திருந்தான் சின்னவன்.

“அவன் இன்னும் சாப்பிட்டுடலியே. குழந்தைக்குப் பூரியும் கிழங்கும் கொண்டு வந்திருக்கேன். எங்க அவன்?” என்றார் அம்மா.

“என் குட்டி செல்லம் பாட்டிய தேடி வந்துட்டீங்களா?” எனக் கொஞ்சி… குட்டி மகளைத் தூக்கி கொஞ்சிக் கொண்டே, “உள்ள… அவன் ரூம்ல இருக்கான்.” என்றார் பாட்டி.

“அவன கூப்பிடுங்க மா” என்றவர் கையிலிருந்த தட்டை மேசை மேல் வைக்கவும், பாட்டியிடமிருந்து மேசைக்குத் தாவிய குட்டி மகள், பூரி ஒன்றை கையில் எடுத்தாள்.

“வீட்டுல கொடுத்தா சாப்பிடாத. இப்போ அவனுக்கு கொண்டு வந்திருக்கத எடு” என்றவரிடம், “குழந்தைங்க அப்படித் தான் மா. அவன் ரெண்டு சாப்பிடுவான். அவ்வளவு தான்!” என்றார்.

“ரகு கண்ணு வா” என்று விளித்துக் கொண்டே அறையின் பக்கம் போன பாட்டியை நூல் பிடித்துச் சென்றாள் சின்னவள்.

“மா… அடுப்பில தண்ணி கொதிக்குது. எதுக்கு வச்சிருக்கீங்க?” என்ற சத்தத்திற்கு, “டீ போட வச்சது. அதுல டீ தூள போடு தங்கம்” எனப் பாட்டி அடுக்களையை நோக்கிச் சென்றார்.

விசும்பல் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றது குழந்தை. கதவின் மறைவில் சுவரோடு சுவராக ஒடுங்கி அமர்ந்திருந்தவன் அருகில் சென்று அமர்ந்தாள் சின்னவள்.

முளைத்திருந்த அத்தனை பற்களையும் காட்டி சிரித்தது குழந்தை. கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவன் விழி அகற்றாது குழந்தையைப் பார்த்தே அமர்ந்திருந்தான்.

“ச்ச் சா…ப்பி” என்று தான் கடித்துக் கொண்டிருந்த பூரியை நீட்ட, அதையும் அவளையும் பார்த்தான் சிறுவன். சின்ன சின்ன பிங்க் நிற விரல்கள் பூரியைக் கசக்கிப் பிடித்திருந்தன.

“இ..இ..இ..ந்தா” என மீண்டும் அணில் கடி கடித்துவிட்டு அவனிடம் நீட்டினாள். விட்டால் அவளே முடித்து விடுவாள் என எண்ணினானோ என்னவோ… வாங்கிக் கொண்டான்.

சின்னவன் கண்ணீரைப் பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ, தன் கைக்குள் எப்பொழுதும் பிடித்திருக்கும் அந்த சின்ன புசுபுசு பிங்க் துணியை அவன் முட்டி மீது வைத்தாள்.

இரவு தூங்காது அழும் வேளையில் அவள் அம்மா இதைத் தானே அவளுக்குக் கொடுப்பார். அவளும், அதை அவன் முகம் பட மடிந்திருந்த முட்டியின் மீது வைத்தாள்.

பால் மணம் மாறாத அந்த மழலையின் வாசம் நிறைந்திருந்த அந்த இளம் சிவப்பு இரண்டடி போர்வையை இறுகப் பிடித்துக் கொண்டான் பிள்ளை.

தாய்மைக்கு வயதில்லை போலும். “ந்..ந்…நோ க்…க்..கையிங் ல்ல்..லகு” என கண்ணீரை அந்த தளிர் கரம் துடைத்து விட்டது. 

துடைத்தது வெறும் கண்ணீரை மட்டும் அல்ல அவன் காயத்தையும் சேர்த்தே என்று அவளும் அறியவில்லை அவனும் அறியவில்லை.

&&&& —- @@@@ —- &&&&

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!