Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 31

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 31

    நர்மதா உடன் வராமல் நிரஞ்சன் மட்டும் தன் பிள்ளைகள் உடன் சென்னை வந்து விட்டான். தொழில் கிடக்க அவ்வளவு நாள் அங்கு இருக்க முடியாது. நர்மதா தன் அம்மாவுக்காகவாது அங்கு இருக்க வேண்டும்.

  தன் இயல்பு மீறி நிரஞ்சன் மனைவிக்கு நிறைய விட்டு கொடுத்தான். தன்னை மாற்றிக் கொண்டான். மற்ற யாருக்கு இல்லாவிட்டாலும், தன் உடன் வாழ்நாள் முழுக்க பயணிக்கும் தன் துணைக்காக… அவள் இடத்தில் நின்று அவள் வலியை யோசித்து, அவளுக்காக நிறைய விட்டு கொடுத்து தான் போனான்.



Advertisement

         எல்லா நேரமும் பிள்ளைகள் உடன் இருக்க முடியாமல் சில நேரம் சிரமம் வரும். அப்போது எதிர்பாரா இடத்தில் இருந்து உதவி கிடைத்தது. வேற யார்?… செல்வா விநாயகம் தான்.

   அன்று ஒரு நாள் போன் செய்தவன்,

 “ நிரஞ்சன் எப்படி இருக்கீங்க? பிள்ளைகள் எப்படி இருக்காங்க?…”

Advertisement

  “ நல்லா இருக்கோம் விநாயகம். என்ன விசயம் போன் பண்ணி இருக்கீங்க…” காரணமின்றி அழைக்கும் ஆள் கிடையாதே…

Advertisement

     “எனக்கு நைட் டியூட்டி நிரஞ்சன். பசங்களை, இன்னைக்கு ஒரு நாள் நைட் மட்டும் உங்க கூட வச்சுக்க முடியுமா?… கொஞ்சம் லாங் டியூட்டி அதான். சிரமம்ன்னா சொல்லுங்க, ஒன்னும் பிரச்சனை இல்லை…” தயங்கி தான் கேட்டான்.

  “ஐயோ! என்ன சிரமம். கொண்டு வந்து விடுங்க… எங்க வீட்டு குட்டீஸ்க்கும் ஹேப்பியா இருக்கும்…”

 நிரஞ்சனுக்கு தெரியும் வேலைக்கு போய் தனியாக பிள்ளைகளை பார்ப்பது எவ்வளவு சிரமம் என்று.. இவனாவது பிள்ளைகளை கூடவே வைத்துக் கொள்ளலாம். விநாயகத்திற்கு மிக கடினம் புரிந்து கொண்டு தான் உதவ முன்வந்தான்.

Advertisement

      உறவுகள் என்றால் முரண்பாடு என்று ஏன் நினைக்க வேண்டும். உறவுகள் அருகருகே இருப்பதே அவசியத்திற்கு உதவ தான். பிருந்தா தங்கைக்காக எதுவும் செய்வாள். அவள் பிள்ளைகளை ஒருநாள் இரவு பார்த்துக் கொள்ள மாட்டானா?…

    விநாயகம் அன்று இரவே பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டு விட்டு போனார். உதவி என்று தான் நிரஞ்சன் பிள்ளைகளுடன் இருந்தது. ஆனால், இரு பெண் பிள்ளைகளை வளர்த்தவனுக்கு.. பிருந்தாவின் இரு பசங்களும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தான் கொடுத்தார்கள்.

   மித்ரணை விட மிதுன் தான் அதிகம் சுட்டி. அவனுக்கு நிரஞ்சனின் கடையில் இருந்த பொருள்களில் ஆர்வம் அதிகமாகியது. அது என்ன?.. இது என்ன?.. இது எப்படி?.. என்ற ஓராயிரம் கேள்விகள் பொறுமையாக விளக்கம் கொடுத்தான் நிரஞ்சன்.

       அன்று இரவு உறக்கமும் தாமதம் தான். அண்ணன், தங்கைகள் சேர்ந்து ஒரே ஆட்டம் பாட்டம்.. தள்ளி நின்று சிரித்த முகமாக பார்த்து இருந்தால் நிரஞ்சன். மறுநாள் காலை தாமதமாக தான் செல்வ விநாயகம் வந்தான் தான் ஏற்கனவே லேட் என்பதால் வந்தவுடன் பிள்ளைகளை கிளப்பு அவசரம் காட்ட..

  பிள்ளைகள் இருவருக்கும் சோகமானது.. “அப்பா அடுத்த ரெண்டு நாள் லீவு இருக்குல்ல.. நாங்க, இங்க இருக்கோம் சித்தப்பா வீட்டில…” என்று மித்ரன் சொல்ல,

  விநாயகம் சங்கடமாக நிரஞ்சனை பார்த்தான். நிரஞ்சன் சொல்லி விட்டான்,

   “பசங்க இருக்கட்டும் விநாயகம். எனக்கும் அவங்களோட இருக்கும்போது தனியா இருக்கிற ஃபீல் இல்ல.. நீங்களும் இங்கேயே இருங்கவே.. அதான் ரெண்டு நாள் லீவ் இருக்குல…” என்று நிரஞ்சன் முன்வந்து சொல்ல விநாயகத்திற்கு ஆச்சரியம்தான்.

   நிரஞ்சன் தற்போது உறவாக பழகினாலும் அப்படி ஒன்றும் ஒட்டிக் கொள்பவன் அல்ல. அவனுக்கு தன் அன்றாட வாழ்க்கை, பிரிவசி கெடுவது பிடிக்காது என்று அறிவான். அவனே முன்வந்து சொல்லும்பொழுது நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.. நிரஞ்சனுக்காகவே அங்கு தங்க ஒற்றுக்கொண்டான்.

   அன்றிலிருந்து இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு மலர்ந்தது. நிரஞ்சன் சமையல் வேறு செய்து கொடுக்க… விநாயகம் தன்னையே கிள்ளி பார்த்து கொண்டான்.

      அங்கு பிருந்தா, நர்மதா இருவரும் சென்னை கிளம்ப ஆயத்தமானாகள். தாயை பார்க்கும் போது அவ்வளவு வேதனையாக இருந்தது. ஆனாலும், பொழப்பு அங்கு தானே.. அத்தோடு விஜயா வுக்கு மருமகளோடு நன்றாக ஒத்து போகும். வேற என்ன?…

    கிட்ட தட்ட இரண்டரை மதத்திற்கு பின் தான் கிளம்புகிறார்கள். சுபா கொடுத்த எதையும் எடுக்க வில்லை. ஏனோ தந்தை உயிரோடு இருக்கும் போது தம்பி மனைவியாக செய்வதற்கு ஒதுங்கி கொண்டவள். இன்று தந்தையை இழந்த பெண்கள் என்று செய்யும் சீரை ஏற்று கொள்ள முடியாமல் போனது…

    சுபா , நாத்துனார்கள் என்று முன்பே நல்ல விதமாக பழகி இருந்தால்.. அவள் செய்யும் சீர் தவறாக தெரிந்திருக்காது. எப்போதும் ஒட்டாதவள், பிறந்த வீட்டுக்கு இவர்கள் வந்தாலும் யாரோ என்று ஒதுங்கி போறவள்.. இன்று உறவுகள் பார்க்க இவ்வளவு சீர் செய்ய வேண்டியது என்ன?…

   எங்கள் அப்பா உயிரோடு இருக்கும்போது தள்ளி நின்ற உறவு.. இன்று ஏன் ஒட்டி நிற்க வேண்டும்?… யாரிடம் அவள் பெருந்தன்மையை காட்ட நினைக்கிறாள்?… வயதில் சின்னவள் எவ்வளவு பெருந்தன்மையாக தகப்பனை இழந்த பிள்ளைகளுக்கு ஆதரவு கொடுக்கிறார் என்று காட்ட நினைக்கிறார்களா?… தந்தை இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இவ்வளவு சீரியல் ஏன் செய்யணும்?.. எவ்வளவு பெரிய இழப்பு எங்களுக்கு அதை மறந்து விட்டு சீர் என்று இவள் தருவதை சந்தோஷமாக பெரு மனநிலை வரவில்லையே?

      மகள்கள் இருவரும் கிளம்பும்போது விஜயா நல்ல முறையில் வழி அனுப்பி வைத்தார். மகள்கள் அரவணைப்பு மனதிற்கு பெரும் ஆறுதலாக இருந்த போதும் அவர்கள் வாழ்க்கை இங்கே இல்லையே?… அவர்களுக்கு என்று குடும்பம் இருக்க, தான் பிடித்து வைத்திருக்க முடியாது என்று நல்ல முறையில் தான் அனுப்பி வைத்தார்.

   நர்மதா சென்னை வந்தாலும் என்னவோ நார்மல் வாழ்க்கைக்கு வர முடியவில்லை. ஏதோ ஒரு இடத்தில் தந்தையின் நினைவு குத்திக் கொண்டே இருந்தது. அடுத்தடுத்து உறவுகள் தெரிந்தவர் நட்பு என்று எல்லோரும் விசாரிக்க.. மனம் மேலும் வேதனை அடைந்தது.

 காலை, இரவு என்று இரண்டு வேளையும் போன் பேசி விடுவார். ஏதேனும் விசேஷம் பிறந்தநாள் கல்யாண நாள் எது ஒன்றுக்கும் தந்தையிடம் இருந்து முதல் வாழ்த்து வரும்.. அத்தோடு பிடித்ததை வாங்கிக் கொள்ள சொல்லி பணமும் வரும்… எவ்வாறு இந்த நினைவுகள் எல்லாம் கடந்து அடுத்த கட்டத்திற்கு நகர போகிறார் என்று தெரியவில்லை… இப்போதும் தந்தையை நினைத்தால் போதும் பட்டென்று அழுகை வந்துவிடும்.. அந்த அளவிற்கு உடைந்த மன நிலையில் தான் நர்மதா இருந்தாள்.

   உண்மையில் அவளின் மிகப்பெரிய ஆறுதல் நிரஞ்சன் தான். அவளால் இன்னும் பழைய நிலைக்கு வர முடியாமல் திணறிக் கொண்டிருக்க, அரவணைத்து தேற்றிக் கொண்டிருந்தது கணவன் தான்.

   ஒரு மாதிரி நாட்கள் நகர தொடங்கியது. தந்தை இல்லா வலி காலத்துக்கும் தான். அதை ஏற்று கொண்டு நர்மதா கடக்க தொடங்கினாள். நிரஞ்சன் மனைவிக்கு அனுசரித்து நின்றான். அவ்வப்போது தாயிடமும் பேசி கொண்டு தான் இருந்தாள்.

   ஒரு நாள் இரவு இருக்கும்.. சாப்பாட்டு வேலையை முடித்து விட்டு அமர்ந்த நேரம், பிருந்தாவிடம் இருந்து போன் வந்தது.

  “என்ன பிருந்தா?…”

   “ நர்மதா, கிளம்பி ரெடியா இரு… ஊருக்கு போகணும்..” என்று அக்கா சொன்னதும்,

     “அம்மாக்கு என்ன ஆச்சு?” என்று பதறி போய் கேட்க.

    “அம்மா க்கு ஒன்னும் இல்லை. கொஞ்சம் பிரச்சனை… நாம தான் போகணும்..”

     “யாரு செழியனா?…”

     “ ஆமா, அந்த வளர்ந்து கெட்டவன் தான். நிரஞ்சன் ஒன்னும் சொல்ல மாட்டார் தான…”

  “அவசியம் இல்லாம நீயும் பேச மாட்டா. ஊருக்கு போற அளவுக்கு பிரச்சனை பெரிதா?.. அம்மா எதுவும் சொல்லிட்டாங்களா?…”

  “நீ ரெடியா இரு.. வந்து பேசலாம்..” முடித்து விட்டாள்.

     இப்பவே ஊருக்கு போகணும் என்ற அளவுக்கு பிரச்சனை என்றால் என்னவாக இருக்கும். ரெடியாக இரு என்ற பிருந்தா சொல்லும் போதே விஷயம் பெரியதோ என்று படபடப்பு வந்தது மெல்ல நிரஞ்சனிடம் சொல்ல.. சூழ்நிலையை புரிந்து கொண்டு நர்மதாவை, அவள் அக்காவுடன் அனுப்பி வைத்தான்.

    விஷயம் இதுதான். நர்மதா வீடு இருப்பது மதுரையில் என்றாலும் சிட்டிக்குள் இல்லை. செழியனுக்கு சிட்டிக்குள் வீடு வாங்க வேண்டும் என்று ஆசை. முன்பு பால மரத்தான் இருந்ததால் அதற்கு ஒத்துழைக்கவில்லை. தற்போது தந்தை இறந்த பின் இருக்கும் வீட்டை விற்று சுற்றிக்குள் வீடு வாங்க முடிவு செய்துவிட்டான் செழியன். அதைத் தொட்டு குடும்பத்தில் பிரச்சனை…

   விஜயாவுக்கு மகன் வீடு வாங்குவதில் எந்த சங்கடமும் கிடையாது ஆனால் தன் கணவன் கட்டிய வீட்டை விற்று வீடு வாங்குவது தான் அவருக்கு மனம் ஒப்பவில்லை. இந்த வீட்டைத் தொட்டு அவருக்கு நிறைய நினைவுகள் இருக்கு.. கணவன் இங்கு இருப்பதாக விஜயாவுக்கு ஒரு எண்ணம். அப்படி இருக்கு தனிப்பட்டு மகனுக்கு என்று இவ்வளவு வருடம் வாழ்ந்த வீட்டை எப்படி விற்பது. அதுவும் சரி எனக்கு மூத்தவர்கள் இருவர் இருக்கும் போது…

   இப்படி லேசாக ஆரம்பித்த உரசல் தான். என்னவோ சுபா முழுதாக முட்டிக் கொள்ள ஆரம்பித்தாள். முன்பு மாமியார் என்று அவ்வளவு மரியாதையாக தள்ளி நிற்பவள். இப்பொழுது நடத்தை வேற மாதிரி இருந்தது. முன்பெல்லாம் சுபா வீட்டு ஆட்கள் அப்படி ஒன்றும் உள் நுழைய மாட்டார்கள். எந்த முடிவும் வீட்டின் பெரியவராக பாலம் மரத்தான் எடுப்பதுதான்.

     இப்போது அடிக்கடி சுபா வீட்டு ஆட்கள் உள் வருவதும், சுபா தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதும், மாமியாரை கலந்தாலோசிக்காமல் வீட்டை நிர்வாகிப்பதும் விஜயாவை பெரிய அழுத்தத்திற்கு தள்ளியது. கூப்பிடும் தூரத்தில் மகள்கள் இல்லை. இத்தனை ஆண்டு காலம் உடன் இருந்த கணவன் தற்போது இல்லை. ஒரு மாதிரி தனிமையை உணர ஆரம்பித்தார். கணவன் இருக்கும்போது அந்த வீட்டில் இருந்த மரியாதை தற்போது குறைவது போல் ஒரு எண்ணம்.

    பால மரத்தான் இருந்தவரை விஜயாவின் சத்தம் தான் உயர்ந்து நிற்கும். வீட்டில் அவர் எடுப்பதுதான் முடிவு. ஆனால், என்று பால மராத்தான் இல்லையோ… அன்றிலிருந்து எல்லாமே சுபா வசம் தான். ஏனோ தன் மரியாதை குறைவது போல விஜயாவே உணர தொடங்கினார்.

       கணவனின் இழப்பு, மகள்களின் அரவணைப்பு இல்லாமல் தள்ளி நிற்பது என்று அழுத்தத்தில் இருந்த விஜயாவுக்கு , மகனும் வீட்டை விக்க சொல்லி அழுத்தம் தர, உடல் நிலை முடியாமல் போனது. தற்போது தான் மகள்கள் ஊருக்கு வந்து போனதால் அவர்களை தொந்தரவு செய்ய விரும்பாமல் அவரே சமாளித்துக் கொள்ள… தெரிந்தவர் மூலம் பிருந்தா காதுகளுக்கு விஷயம் வந்துவிட்டது.. உடனே தங்கையை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்து விட்டாள்.

    காலையில் வாசல் தெளிக்க எழுந்த சுபா, கதவை திறந்து கொண்டு வெளியே வர… ஆட்டோவில் வந்திருங்கிய இரு நாத்தனார்களை பார்த்து அதிர்ந்து போய் நின்று விட்டாள்.

   “ ம்ச்… இதுக்குத்தான் அக்கா, தங்கச்சி இருக்கிற வீட்ல வாக்கப்பட்டு போகக்கூடாதுன்றது.. இந்த தும்முனா கூட வந்து நிக்கிறாங்க…” புலம்பி கொண்டே தன் வீட்டிற்கு மெதுவாக தகவல் சொல்லிவிட்டாள்.

      மகள்களைப் பார்த்ததும் விஜயாவுக்கு என்னவோ அப்படி ஒரு அழுகை வந்தது. சுபா நல்ல மருமகள் தான். அவளுக்கு சாதகமாக இருக்கும் வரை மட்டுமே. இந்த வீட்டில் தான் ஒன்றுமே இல்லையா என்று அழுத்தத்தில் இருந்தவருக்கு மகள்கள் ஆதரவாக வந்ததும் அழுகை வந்துவிட்டது.

     விஜயா மறைக்கவில்லை. செழியன் கேட்டது அனைத்தையும் மகள்களிடம் சொல்லிவிட்டார்.

    நர்மதாவுக்கு இதில் உடன்பாடு இல்லை.

    “அம்மா, நீ சரின்னு சொல்லாத.. இது அப்பா கட்டிய வீடு. இதுல நீ இருக்க, தம்பி இருக்கான், அவன் குடும்பம் இருக்கு.. அதுவரை சரி. அவன் யோசனைப்படி இந்த வீட்டை வித்துட்டு சிட்டிக்குள்ள வீடு வாங்கி போனா.. அந்த வீடு யார் வீடு?…”

   பிருந்தா யோசனையாக தங்கையை பார்த்தாள்.

      “அந்த வீடு செழியன், சுபா வீடு. உன் வீட்டில நீ இருக்கிறதுக்கும், மகன் வீட்டுல நீ இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. இந்த வீட்டில நாங்க வருவோம், உன் கூட பிறந்தவங்க வருவாங்க, உன் சொந்தம் வருவாங்க… நாளைக்கு தம்பி வீட்ல எங்களுக்கு உரிமை இருக்காது. உனக்கும் உரிமை இருக்காது. உன் கையில வருமானம் இருக்கிற வரைக்கும் தான், பெத்த பிள்ளையை கிட்ட கூட மதிப்பு இருக்கும். நீங்க இருக்கிற வரைக்கும் வீடு, இடம், சொத்து எதையும் யாருக்கும் மாற்ற கூடாது. எல்லாம் உங்க பேர்ல, உங்க கையில இருக்கட்டும்…” என்று நர்மதா சொல்ல,

   “நாங்க சொன்னாலும் உங்க யோசனை என்னவோ அதுதான் ம்மா… ஒருவேளை தம்பிக்காக நாங்க விடனும்ன்னு நீங்க நினைச்சா, நாங்க எல்லாத்துலயும் கையெழுத்து போட்டு கொடுக்கிறோம்…” என்று பிருந்தாவும் முடித்துக் கொண்டாள்.

   ஏனெனில் விஜயாவுக்கு மகன் மேல் தனிப்பட்டு பாசம் இருக்கும். அதை கொண்டு சுபா மேலும் அன்பு இருக்கு. ஒருவேளை மகனுக்காக செய்ய நினைத்து தாங்கள் தடையாக இருக்க கூடாது என்று தான் பிருந்தா சொன்னது.

    மகள்கள் சொல்லாமலே விஜயாவுக்கு சில விஷயங்கள் புரியத்தான் செய்தது. கணவன் இருக்கும் வரை இருந்த மதிப்பு, மரியாதை, வீட்டில் ஓங்கிய அவர் கை எல்லாம் தற்போது கிடையாது. என்னவோ இனி தாங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது போலத்தான் செழியன், சுபா நடவடிக்கை இருந்தது. அடுத்த தலைமுறை நாங்கள் முன் வந்து விட்டோம் நீங்கள் பின் நில்லுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள். இப்பொழுதெல்லாம் வீட்டு விஷயம் சுபா வீடு வரைக்கும் போய் விடுகிறது.

   காலை பத்து மணி இருக்கும்… அக்காக்கள் வந்ததை அறிந்து செழியன் பேசத் தொடங்கினான்.

    “என்ன திடீர்னு ஊருக்கு வந்து இருக்கீங்க?…”

    “ஏன்டா வரக்கூடாதா? எங்களுக்கு பொறந்த வீடு இதுதானே…” என்று பிருந்தா சொல்ல,

   செழியன் அம்மா முகத்தைப் பார்த்தான். சுபா அங்கு தான் நின்று இருந்தாள். செழியன் பெரிதாக யோசிக்கவில்லை.

    “அக்கா இந்த வீட்டை வித்துட்டு சிட்டிக்குள்ள வீடு வாங்கலாம்னு இருக்கேன். அதோட சொத்து விவரமும் பேசணும்…”

  “யாரை வச்சு பேச போற செழியா?… இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும்போது உனக்கு மூத்தவங்க இந்த வீட்ல ரெண்டு பேர் இருக்காங்க. அவங்க கிட்ட கேட்க தோணலையா…” என்று நர்மதா கேட்க.

    “நான் அம்மாகிட்ட பேசிட்டேன்..” என்றான் செழியன்.

      “அம்மா கிட்ட என்னடா பேசின? அம்மா வச்சு பேசினா.. எல்லாம் சரியா போகுமா… நாங்க வேணாமா! உனக்கு முன்னால இந்த வீட்ல பிறந்து வந்தவங்க நாங்க தான்டா.. எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேணாம்?…”

  “உங்ககிட்ட எதுக்கு சொல்லணும்.. முதல்ல நீங்க எதுக்கு இதுல வாரீங்க? உங்களுக்கு என்ன செய்யணுமோ எல்லாம் செஞ்சு, படிக்க வைத்து, கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு.. இனி எல்லாம் நான் பார்த்துக்கிறேன்…”

   “உனக்கும் தான் அப்பா எல்லாம் செஞ்சாரு… உன்னையும் படிக்க வைத்து கல்யாணம் பண்ணி வச்சார். உனக்கு மட்டும் எல்லா உரிமையும் இருக்கா?…” பிருந்தா விட வில்லை.

     செழியன் முகத்தைத் தூக்கிக் கொண்டு அம்மாவை பார்த்தான்.

    “என்னம்மா அமைதியா இருக்கீங்க. உங்க மகள்கள் பேசுறத பாருங்க…”

    “வீட்டுக்கு மூத்தவ பிருந்தா தான் செழியா… அப்புறம் நர்மதா அதுக்கு அப்புறம் தான் நீ இருக்க.. அப்போ அவங்கள வச்சு தான் நீ பேசணும்…” என்று விஜயாவும் சொல்லிவிட,

   செழியன் நம்ப முடியாமல் தாயைப் பார்த்தான். எப்போதும் தனக்கு ஆதரவாக இருக்கும் தாய்.. இன்று மகள்கள் பக்கம் சாய்ந்து கொண்டார்.

     “அப்ப என்னம்மா சொல்ல வரீங்க. இந்த வீடு, இடம் எல்லாம் உங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கட்டுமா?…” கடுப்பாக செழியன் கேட்க.

       “இது அப்பா கட்டின வீடு செழியா.. இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும்போது எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்ல தோணலையா? உன் கூட பொறந்தவங்க தானடா நாங்க?.. நாங்க என்ன எதிரியா உனக்கு?..” என்று நர்மதா சொல்லும் பொழுதே சுபா வீட்டு ஆட்கள் உள்ளே வந்தார்கள்.

       யாரும் எதுவும் பேசாமல் நடந்ததை விட்டுவிட்டு முறையாக உபசரிப்பு செய்தார்கள்.

   சுபா விடவில்லை, “என் நாத்தனார் ரெண்டு பேரும் என் கூடவும், அவர் கூடவும் சண்டைக்கு நிக்கிறாங்க…” என்று அவர்கள் வீட்டு ஆட்கள் முன் சொல்லிவிட்டாள்.

     “ என்ன சண்டை? எதற்குமா எங்க மருமகனா சத்தம் போடுறீங்க…” இன்று சுபா அம்மா தொடங்க.

  நர்மதாவுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. நமக்குள் தானே பேசிக் கொள்கிறோம். அப்படி இருக்க எதற்காக அவர்கள் வீட்டு ஆட்களை வர சொல்ல வேண்டும்.

  “ ஒன்னும் இல்ல அத்தை. தம்பி புது வீடு வாங்கற விஷயமா பேசிட்டு இருந்தோம்…”

 “ஆமா அந்த வீடு என் மகன் தான் பார்த்து கொடுத்தான். நல்ல இடம்தான் நர்மதா. சம்பந்தி அம்மா தான் கொஞ்சம் விட்டுக் கொடுக்க மாட்டேன்றாங்க…”

    “அது ஒத்து வராது அத்தை. அந்தப் பக்கம் எங்க அம்மாவுக்கு பழக்கம் இல்லாத இடம்.. எங்க சொந்தக்காரங்க எல்லாம் இந்த பக்கம் தான் இருக்காங்க. எங்க அப்பா எங்களுக்கு இல்லாம போயி ஆறு மாசம் கூட ஆகல… இந்த வீடு எங்க அப்பா கட்டின வீடு. இத மாத்தி விட எங்களுக்கு விருப்பமும் இல்லை. எங்க அம்மா இருக்கிற வரைக்கும் அவங்க விருப்பம் போல இருக்கட்டும். அதுக்கு பின்னாடி என் தம்பி விருப்பம் என்னவோ அதை அவன் செய்யட்டும்…” நர்மதாவும் தன்மையாக தான் பேசினாள்.

   பிருந்தாவுக்கு பேச விருப்பமில்லை. அவளுக்கு இப்படி தன்மையாக எல்லாம் பேச வராது… இவர்கள் எண்ணம் புரிந்து ஒன்றும் தெரியாதவர்கள் போல பேச அவளால் முடியாது. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு இதுதான் பிருந்தா குணம்.

      “ மருமகனுக்கு அங்கு போக தான் விருப்பம்…”

    “அப்பா அவன் குடும்பம் மட்டும் போகட்டும். எங்க அம்மா இங்க தான் இருப்பாங்க. அவங்க எங்கேயும் வர மாட்டாங்க…” என்றது பிருந்தா தான்.

  “அப்போ ஊர் எங்க பொண்ண தானே தப்பா பேசும். மாமனார் செத்து ஒரு வருஷம் கூட ஆகாம தனிக்குடுத்து நான் போயிட்டான்னு…”

    “அப்ப சேர்ந்து இருக்கட்டும் அத்த. இவ்வளவு நாள் அப்படித்தான் இருந்தாங்க. அப்பா இருந்த வரைக்கும் எந்த பஞ்சாயத்தும் வந்ததில்லையே.. இப்போ என்ன ஆச்சு?…” என்று நர்மதா கேட்க.

    “எல்லாத்துக்கும் நீங்க ஏன் பேசுறீங்க, அத்தை பேசட்டும்…” என்று ஆரம்பித்தது சுபா தான்.

    “நாங்க ஏன் பேசக்கூடாது. நாங்களும் இந்த வீட்டு பொண்ணுங்க தானே…”

 “நான் தான் இந்த வீட்டு பொண்ணு.. உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சு. உங்களுக்குன்னு தனியா குடும்பம் இருக்கு. அங்க போய் நீங்க உங்க முடிவை பேசுங்க. இங்க நீங்க பேசாதீங்க, நான் தான் பேசுவேன்…”

   “ஆமா, எங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சு. எங்களுக்கு குடும்பம் இருக்கு. அதுக்காக பொறந்த வீடு எங்களுக்கு இல்லாம போகுமா? அங்க ஒரு சங்கடம் வந்தா நாங்க வந்து பேசக்கூடாதா?…” நர்மதாவுக்கே கோபம் வந்தது..

    “பேசுங்க. ஒரு நல்லது, விசேஷம் எதுவும் பேசுங்க. ஆனா காசு விஷயம் நீங்க பேசாதீங்க. நாளைக்கு ஒரு கஷ்டம் நஷ்டம் வந்தா நாங்க தான் பாக்கணும். வீட்டுக்கு ஆம்பள பிள்ளைன்னு எல்லாமே என் புருஷன் தலையில தான் விழும்…”

   “ அப்படி ஒரு நிலையை எங்க அப்பா உங்களுக்கு தரவே இல்லையே சுபா. உன் புருஷன் தானே அவன் கிட்ட கேளு?… அப்படி என்ன செஞ்சுட்டு அந்த வீட்டுக்கு?… அப்படி ஆம்பள புள்ளன்னு அவன் தலையில நாங்க என்னத்த ஏத்தி வச்சோம். ஒன்னு கூட கிடையாது. இவனுக்கு மூத்தவங்க தான் நாங்க ரெண்டு பேரும் எங்களுக்கு பாத்தது எல்லாம் எங்க அப்பா தான். இவன் அவன் கல்யாணம் பண்ணி அவன் புள்ள குட்டிக்குத்தான் பாத்துக்கிட்டான். நம்ம கூட பிறந்த அக்கான்னு எங்களுக்கு என்ன செஞ்சிருக்கான்…”

    “எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சானா?.. இல்ல எங்க புள்ள குட்டிகளுக்கு தாய் மாமன் சீர் செஞ்சானா?… ஒரு பிரச்சனைன்னு வந்தா எனக்கு என் கூட பிறந்த அண்ணன், தம்பி இருக்கான்னு ஒரு நம்பிக்கையை கொடுக்கணும். ஒரு ஒரு வருஷத்துக்கு முன்னால நானும் எங்க வீட்டுக்காரரும் சண்டை போட்டு எவ்வளவு பெரிய பிரச்சனையாச்சு. அஞ்சு மாசம் எங்க வீட்டை விட்டு நான் தனியா இருந்தேனே ஒரு வார்த்தை இவன் கேட்டானா?.. என் வீட்டுக்காரர் முடியாம இருந்தாரே, வந்து எட்டியாவது பார்த்தானா?… தெரிஞ்சவங்க சும்மா பழகுனவங்க கூட வந்து பார்த்தாங்க. சொந்த அக்கா புருஷன் என்னன்னு கூட கேட்கல…” என்ற நர்மதா,

    “ஆனா நாங்க இவன எதிலயாவது விட்டுக் கொடுத்து இருக்கோமா?… தாய் மாமன்னு இவன முன்னாடி வச்சு தான் நாங்க எல்லாம் பண்ணுவோம். செய்றதெல்லாம் எங்க அப்பா, பேர் எல்லாம் இவனுக்கு தான். எங்க புருஷன் வீட்டு பக்கம் சொந்தம் இல்லாமையா இருக்கு ஆனாலும் எங்க கூட பிறந்ததுன்னு இவனை தானே முன்னாடி நிக்க வைக்கிறோம். ஆனா இவன் எங்களை புல்லுக்கு கூட மதிக்க மாட்டான்…” என்ற நர்மதா,

    “இங்க பாரு சுபா. நாங்க எங்க தம்பியோட சுய சம்பாத்தியத்தை கேட்கல. அதை நல்லா இருக்கட்டும் எங்களுக்கும் சந்தோஷம்தான். ஆனால் எங்க அப்பா செத்து ஒரு வருஷம் கூட ஆகாம இடம், சொத்து எல்லாம் ஏன் பேசி வரீங்க?… எங்க அம்மாவுக்கு விருப்பம் இல்லைன்னா விடுங்க. எங்க அம்மா இருக்கிற வரைக்கும் எதுவும் மாறாது எல்லாம் எங்க அம்மா கையில தான் இருக்கும்…”

    “ அப்ப இவ்வளவு நாள் பார்த்த எங்களுக்கு? நாளைக்கு அத்தையை நாங்க தானே பாக்கணும்…”

   “ நீ பார்த்த தான், நாங்க எங்க அப்பா விஷயத்திலே பார்த்தோமே…” நக்கலாக சொன்னாள் பிருந்தா.

     “நான் ஏன் பாக்கணும். கழுத்து நிறைய நகை போட்டு வாக்கப்பட்டு போனது நீங்க… அப்ப நீங்க தான் பாக்கணும்…”

  “நீ பார்க்க வேண்டாம் நாளைக்கு எங்க அம்மாவை கூட நாங்களே பாத்துக்கிறோம்…”

  “ பாப்பிங்க.. முழு சொத்தையும் அமுக்கத்தான பிளான்…” என்று சுபாவும் சொல்ல,

   “எனக்கென்னமோ அந்த டவுட்டு உன் மேல தான் வருது. நீதான் அப்படி பிளான் போடுற.. எங்க எங்க அம்மாவுக்கு எங்க மேல பாசம் வந்து எங்களுக்கு எதுவும் கொடுத்துடுவங்களோன்னு பயம். அதுக்கு தான அவசரமா, எங்க அப்பா செத்து நாலு நாள் கூட ஆகல, எங்களுக்கு சீர் செய்யிறேன்னு ஊர் முன்னாடி காட்டிகிட்ட…” பொறுமை இல்லை பிருந்தாவுக்கு..

   “சும்மா என் பொண்ண பேசாதீங்க. அவ நல்லது நெனச்சு தான் செஞ்சா…”

  “ஆரம்பத்தில் இருந்து நாத்தனார்ன்னு எங்களை அரவணைச்சு ஒட்டி நின்று இருந்தா.. எங்களுக்கும் சந்தேகம் வந்து இருக்காது. நாங்க வடக்க வந்தா, எங்களை பார்த்து தெக்க திரும்பி போறவங்களுக்கு திடீர்னு என்ன நாத்தனார் மேல் அக்கறை…”

     “ எங்க அம்மாவ பேசாதீங்க…” என்றான் சுபா அண்ணன்.

   “உங்க அம்மா எங்க வீட்டு விஷயத்துல தலையிட்டா நாங்க பேச தான் செய்வோம்…” விட வில்லை பிருந்தா.

     “நீங்க எதுக்கு பேசுறீங்க. மொத உங்களுக்கு என்ன உரிமை இருக்கு… உங்கள கட்டிக் கொடுத்தாச்சு. உங்களுக்கு செய்ய வேண்டியது செஞ்சாச்சு, அவ்வளவுதான். இனி உங்களுக்கு இங்கே எந்த உரிமையும் கிடையாது. என் தங்கச்சியை தான் இங்க கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கு. இது அவ வீடு…” எகிறி கொண்டு வந்தான் சுபாவின் அண்ணன்.

    நர்மதாவுக்கு தப்பாக பட்டது. இதுவரை பேசியது பெண்கள். என்னவோ அவர்களுக்குள் பேசுகிறார்கள் என்று விட வேண்டியதுதானே? இவன் என்ன அடிக்கிற மாதிரி எகிறி கொண்டு வருகிறான்.

    “நீங்க பேசாதீங்க நாங்க பேசி தீத்துக்கிறோம் நீங்க முன்னாடி வந்து நிக்காதீங்க” என்று நர்மதா சொல்ல…

  “ என் தங்கச்சி வாழ்க்கை நான் தான் பேசுவேன். அடுத்த வீட்டுக்கு போயி இங்க வந்து காரியத்தினை பண்ணுவீங்களா?…”

   “என்ன பண்ணாங்க உங்க தங்கச்சிய?… இதுவரைக்கும் ஒரு நாளாவது வாக்குவாதம் பண்ணி இருப்போமா?.. அவங்க வாழ்க்கையில அவங்க எண்ணமும் பண்ணட்டும் எங்க அம்மாவை வைத்து எதுவும் கிடையாது…”

   “நாளைக்கு அவர்களை என் தங்கச்சி தானே பார்த்துக்கணும்…”

 “யாரும் எங்க அம்மாவை பாத்துட்டு தேவை கிடையாது அந்த அளவுக்கு எங்க அப்பாவும் விட்டுட்டு போகல. இன்னைக்கும் எல்லாம் எங்க அம்மா பேர்ல தான் இருக்கு. இப்பவும் எங்க அப்பாவோட பென்ஷன் எங்க அம்மாவுக்கு வருது. அவங்க நாலு பேருக்கு செய்வாங்களே தவிர யாரும் அவங்களுக்கு செய்யணும்னு அவசியமே கிடையாது…”

   “உங்களுக்கு பேசுற உரிமை இல்லை என்று நான் முன்னாடியே சொல்லிட்டேன். இது என் தங்கச்சி வீடு நீங்க உரிமை கொண்டாட முடியாது…” சுபா அண்ணன் பேச்சு செழியனுக்கே ஏற்றுக்கொள்ளாததாக இருந்தது.

    “அப்ப நீ பேசலாமா?…” மரியாதையை கைவிட்டாள் பிருந்தா.

    “உன் தங்கச்சியை தான் இங்க கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க. ஆனால், உனக்கு இந்த வீட்ல பேச உரிமை இருக்கு. இதே வீட்ல பிறந்து, இங்கேயே வளர்ந்து, இங்கிருந்து வெளியேறின எங்களுக்கு இங்க வந்து பேச உரிமை இல்லையா?…”

         “எங்க வீட்டு பேச நாங்க பேசிக்கிறோம். நீங்க வெளிய போகலாம்…” சொல்லியே விட்டாள் பிருந்தா.

    “மாமியார் ரெண்டு நாத்தனார் எல்லாம் சேர்ந்து என் தங்கச்சியை கொடுமை படுத்துறீங்க. ஒரு கம்பளைண்ட் போதும் வரதட்சணை கொடுமைன்னு குடும்பத்தோட தூக்கி உள்ள வச்சுருவேன்…”

   “என்ன பேசுறீங்க…” பதறி போய் வந்தான் செழியன்.

  “ பின்ன ஆளாளுக்கு என் தங்கச்சிய பேசுறாங்க. வாய மூடிட்டு என்ன போக சொல்றீங்களா? அப்புறம் என்ன நான் ஆம்பள?…” என்று அவன் எதிரி வந்து நின்றது பிருந்தாவிடம்…

   அவன் தோரணை நர்மதாவுக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுத்தது. என்ன அடிக்கிற மாதிரி அக்காவின் அருகில் வருகிறான்… அது என்ன ஆம்பள?…

   “நீங்கதான் ஆம்பளையா?. நாங்க பொண்ணுங்கன்னு எங்கள் ஆட்டி பேசுவீங்களா? எங்க வீட்டுல ஆம்பள யாரும் இல்லையா? நாளைக்கு வருவாங்க நின்னு பதில் சொல்லுங்க…” என்றவள்,

     “பாருடா தடிமாடு மாதிரி நிக்கிறியே… உன் கூட பிறந்தவ தானடா அவ எப்படி பேசி வாராங்க பாரு. ரெண்டு பொம்பள பிள்ளைக்கு அப்புறம் பிறந்த ஆம்பள பையன். நாளைக்கு அவன் தான் எங்களை பாப்பான்னு சொல்லி உன்ன தூக்கி வளர்த்ததுக்கு நல்லா செஞ்சு விட்டுட்ட.. நம்ம வீட்டுல வச்சு எங்க ரெண்டு பேரையும் அடிக்கிற மாதிரி பேசி வாராங்க, பேசாம பார்த்துட்டு நிக்கிற…”

   “நாம எல்லாம் ஒன்னா தானடா வளர்ந்தோம். அப்படி என்னடா நாங்க உனக்கு முக்கியம் இல்லாம போயிட்டோம். உன் கூட பொறந்தவ எங்களை பேசும் போது உனக்கு ரத்தம் துடிக்கல… அப்படி என்னத்த வந்து உன் கிட்ட அள்ளிட்டு போயிட்டாங்க. தாய்மாமன் சீரியல் அந்த காலம்தான். இப்பல்லாம் நீ ஒன்னு செஞ்சா நாங்க ரெண்டா திருப்பி செய்கிறோம். அப்படி இருந்து உனக்கு என்னடா எங்க மேல விரோதம். போடா இன்ன வரைக்கும் கூட பொறந்தவன் உனக்காக பார்த்து நின்னதுக்கு நல்ல பேச்சு கேட்டாச்சு… எங்க அப்பா மட்டும் இருந்திருந்தா இப்படி ஒரு வார்த்தை வந்து இருக்குமா?.. உங்கள எல்லாம் பேச விட்டு வேடிக்கையா பப்பாரு… நாய் இருந்தால் அப்பா அப்பா தாண்டா?.. அவருக்கு அப்புறம் நீ பார்ப்போம் என்று அவர் ரொம்ப நம்பினாரு. போடா…” என்றவள், உடனே நிரஞ்சனுக்கு அழைத்து நடந்தது அனைத்தையும் சொல்லி, வர சொல்லிவிட்டாள்.

    முன்பே சுபா அண்ணன் பேசுவது செழியனுக்கு தவறாக தான் பட்டது. ஆனாலும் அக்காக்கள் உள்ளே வந்தது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் கொஞ்சம் தடுமாறி நிற்க. பிரச்சனை எங்கோ வந்து நின்று விட்டது. ஒரு மாதிரி தன்னுடன் பிறந்தவர்களை விட்டுக் கொடுத்து விட்டோமோ என்று மனதை அறிக்கை தொடங்கியது. அவன் ஒரு யோசனையில் இருக்க, அன்று இரவே வந்து இறங்கி விட்டார்கள் நிரஞ்சனும், செல்வவிநாயகமும்…

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!