04 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 4.1
.
மறு ஜென்மம் என ஒன்று உண்டா எனக் கேட்டால், மற்றவர்கள் பதில் எப்படியோ… கௌதமனின் பதில் உண்டு என்பதாக மட்டுமே இருக்கும். கடந்து சென்ற பதினைந்து மாதங்கள் அவன் வாழ்வில் கோரத் தாண்டவம் ஆடியிருக்க, கௌதமனுக்கு இது மறு ஜென்மமே.
Advertisement
‘சார்மிங்… பிளே பாய்… ஹேப்பி மில்லினியர்…’ என வாழ்ந்த கௌதமன் இந்த ஜென்மத்தில் எப்படியோ? ஒரு வருடத்திற்கும் மேலான வேதனை அவனை எப்படிச் செதுக்கியுள்ளது என அவனோடு காலம் தள்ளுபவர்கள் தான் கூறவேண்டும்.
“ஹௌ ஆர் யூ ஃபீலிங் யங் மேன்?” என மருத்துவர் உள்ளே நுழைந்தார். அவரோடு, நோட்டு புத்தகமும் பேனாவுமாக ஒரு கூட்டமும் உள்ளே நுழைந்தது. அனைவரும் எதிர்கால மருத்துவர்கள்.
“குட்” என ஒற்றை வார்த்தையில் முடித்த கௌதமனை அப்படி எல்லாம் எளிதில் விடவில்லை மருத்துவர். சில பல சோதனைகள், கேள்விகள் எனக் கேட்டார். வழக்கமாக அவன் பொறுமையைச் சோதிக்கும் இந்தச் செயல், இம்முறை அவனை ஒன்றும் செய்யவில்லை.
Advertisement
கடைசியாக, “ரெண்டு நாள் முன்ன, மூணு வார்த்த சொல்லிட்டு போனேன். நினைவிருக்கா? அதே வரிசையில சொல்ல பாருங்க கௌதமன்” என்ற மருத்துவர் அவன் பதிலுக்காக காத்திருக்க, கௌதமன் நெற்றி சுருங்கியது.
Advertisement
இப்படிக் கேட்பார் எனத் தெரிந்து இருந்தால் கவனித்துக் கேட்டிருப்பானே. பதில் தவறாக இருந்தால்… இன்றும் தன்னை டிஸ்சார்ஜ் செய்ய மாட்டார்களோ என சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், “ஷிப், ஸ்கை… சம்திங்” என்றான் யோசனையோடு. என்ன முயன்றும் அடுத்த வார்த்தை நினைவிற்கு வரவில்லை.
‘நினைவு’ என்பது எத்தனை பெரிய வரம் என இந்த ஒரு வாரத்தில் கற்றுக் கொண்டான் கௌதமன். கடந்து சென்ற ஒன்பது மாதங்களில் ஐந்தாவது முறையாக அறுவை சிகிச்சைக்கு வந்தவனிடம், “ரொம்ப சின்ன பிரொசியூஜர். ரெண்டே ரெண்டு நாள்ல போயிடலாம்” என்றார் மருத்துவர். இதற்கு முன் நட்டெலும்பில் இரு முறை, முகத்தில் ஒரு முறை, பின் கழுத்தில் ஒரு முறை எனப் பலமுறை படுத்து எழுந்து விட்டான்.
ஆனால் இம்முறை, அறுவை சிகிச்சை முடிந்து கண் விழித்தவன் முதல் முறையாகச் சினிமாவில் வருவது போல் பேந்த பேந்த விழித்து, “யார் நீங்க எல்லாம்?” என கேட்டு வைத்தான்.
Advertisement
அம்மா, அப்பா, தோழன் என அவன் முன் இருந்த ஒருவரையும் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. குடும்பம் பயந்து போனது.
“குறுகிய காலத்துல உடம்பு எடுத்துகிட்ட அதிக அளவு அனஸ்திஷியா கூட காரணமா இருக்கும்.” என்றார் மருத்துவர்.
“இவருக்கு ஒவ்வொரு முறையும் பொது மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கு. ஆப்பரேஷன் செய்யும் போது முழு தூக்கத்துல இருக்கதுக்காக கொடுக்கப்படற மயக்க மருந்தால மூளையிலும் உடலிலும் உள்ள நரம்பின் சைகைகள் பாதிக்கப்படும். மருந்தோட அளவுக்கு ஏற்ப, போதிய நேரம் வரை உடல் மறத்துப்போன நிலையிலேயே இருக்கும். கௌதமனுக்கு கடந்த பதினைஞ்சு மாசத்துல ஆறு தரம் கொடுத்திருக்கோம். சோ… குழப்பம், மறதி இது எல்லாம் நார்மல். சிலருக்கு சில நாள்கள், சிலருக்கு சில வாரங்கள். ஒரு சிலருக்கே அதிக நாள்கள் எடுக்கும் இயல்புக்கு உடலும் மனமும் திரும்ப. இதுல கவலபட அவசியம் ஏதும் இல்ல. வீக் ஆர் டூ-ல நார்மல் ஆகிடுவார். அப்படி நினைவு திரும்பாட்டா என்னன்னு பார்ப்போம்.” என்றிருக்கிறார் மருத்துவர்.
“ஷிப், பலூன், ஸ்கை டைவிங்” என்ற மருத்துவரை சுருங்கிய நெற்றியோடு இவன் பார்க்க, “நோ வொரீஸ். சிம்டம்ஸ் ஆர் குட். எல்லாம் சீக்கிரம் நினைவில வர ஆரம்பிச்சுடும். இன்னைக்கு உங்கள டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.” என அவன் வயிற்றில் தேனையும் பாலையும் சேர்த்தே வார்த்தார் மருத்துவர்.
கால்களைத் தொங்கவிட்டு கைகளை மெத்தையில் இருபக்கமுமாக ஊன்றி அமர்ந்திருந்தவனை பார்த்தவாரே உள்ளே நுழைந்த தாதி, “என்ன சாமி கிளம்பறியா இன்னைக்கு?” என அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
“ஆமா பரஞ்சோதி.” என்றான் ஜன்னல் பக்கம் தன் கவனத்தைப் பதித்திருந்தவன். இந்த ஜன்னலும் அங்குத் தெரியும் மருத்துவக் கட்டிடங்களும் தினமும் பார்க்கும் ஒன்றென்றாலும், இன்று தூரத்தில் தெரியும் அந்தக் கட்டிடம் அவன் கவனத்தை முழுவதுமாக ஈர்த்தது.
கண்கள் இடுங்கப் பார்த்தவனுக்கு எதிரில் தெரிந்த கட்டிடங்கள் ஒன்றின் மேல்தளத்தில் இருந்த அறை ஒன்றின் கண்ணாடி ஜன்னல் மட்டும் புகை மூட்டமாக இருப்பது போல் தோன்றியது. அந்தத் தளத்தில் இருக்கும் ஜன்னல்கள் என்றுமே பூட்டி இருந்தாலும் கருமையாக இருந்த நினைவு இல்லை.
“சாமி, பாத்ரூம கழுவிடவா?” என்றவரை திரும்பிப் பார்த்தான். அவன் கவனம் இங்கில்லை என்பதால் அவர் என்ன கேட்டார் எனத் தெரியவில்லை.
“என்ன கேட்டிங்க?” என்றவன் பரஞ்சோதியின் பக்கம் திரும்பினான். அவர் முகம் என்றுமில்லாது வாடியிருக்க, அவன் கவனம் அவர் மீது விழுந்தது. அவர் கேள்வியை மீண்டும் கேட்க, இவன் பதில் கூற என ஆரம்பித்த பேச்சு, அடுத்த சில பல நிமிடங்களை எளிதாக விழுங்கியது.
“கட்டுனவன் என் மவள உட்டுட்டு பூட்டான் சாமி. இப்போ அது வயித்துல புள்ள. எட்டு மாசம் ஆவுது. ஒத்த ஆளா போராடி என் பொண்ண வளத்தேன். இப்போ என் பொண்ணும் என்னை மாதிரியே ஒருத்தன நம்பி ஏமாந்து நிக்குது. எனக்காது ஒரு வேல இருக்கு என் பொண்ணுக்கு பதினேழு வயசு. அதுக்கு படிப்பும் இல்ல வேலையும் இல்ல சாமி. என்ன பாடுபட போவுதோ” எனப் புலம்பியவர் ஒருவழியாகக் குளியலறையை நோக்கி நகர்ந்தார்.
மூடிய கதவைப் பார்த்து அமர்ந்திருந்தவனுக்கு இந்த ஒரு வாரமாகச் சிரித்த முகமாக வலம் வந்த பரஞ்சோதி நினைவில் வந்தார். தான் எப்படி? இப்பொழுது போல் அமைதியா? இல்லை தனக்கு வேறு முகம் உள்ளதா? காத்திரு மனமே… பத்துத் தினங்கள் காத்திரு. எல்லாம் நினைவில் வரும்! மூச்சை உள்ளிழுத்தவன் அதைப் பொறுமையாக வெளியே விட்டான். பார்வை மீண்டும் ஜன்னல் பக்கம் சென்றது.
அந்தக் கட்டிடத்தில் இருந்து புகை குபுகுபுவென ஜன்னல் வழி வெளி வந்து கொண்டிருந்தது. கட்டிடத்தில் இருந்து ஸ்டெட்சர்களும் மக்கள் கூட்டமும் வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சலசலப்பும் சத்தமும் இவன் காதுகளையும் வந்தடைய ஆரம்பித்தன. அந்த இடமே அல்லோல பட்டது. அந்த நான்காம் தளம் முழுவதுமே நெருப்பு பரவுமுன் தீயணைப்புத் துறை விரைந்திருந்தது.
எழுந்து ஜன்னல் பக்கம் சென்றவனின் கண்கள் கூட்டத்தை அலசின. நிறை மாத கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் இருந்தனர். ஜன்னல் வழி நடப்பதைப் பார்த்து நின்றிருந்தவன் காதில், “அது நியோ நேட்டல் ஃபிளோர் தானே சிஸ்டர்?” என்ற வாக்கியம் காதில் விழ, உடல் நடுங்கியது. முழு வளர்ச்சியை அடையாத பச்சிளம் குழந்தைகளை வைத்தியம் பார்க்கும் தளமாம்.
“அந்த ஆஸ்பத்திரி கட்டடம் முழுசுமே பிரசவத்துக்கு வர பொம்பளைங்களும் குழந்தைகளுக்கும் தான். நெருப்பு எத்தன உசுர எடுக்க போவுதோ? ஆத்தா… கொஞ்சம் கருண காட்டு” என பரஞ்சோதி புலம்பிக்கொண்டே ஜன்னல் வழி வெளியே பார்த்தார்.
இவன் ஏதாவது கேட்டால், அவரும் ஏதேனும் கூறுவார். இவனால் எதையுமே ஜீரணிக்க முடியாது போனதால் எதையும் கேட்காது கண்கள் மூடி அமர்ந்து கொண்டான். என்னவிதமான உணர்வு இது? யாருக்கோ பிறந்த குழந்தைகள் என்றாலும் அந்த முகம் தெரியா குழந்தைகளுக்காக மனம் வலிப்பது ஏன்?
நேரம் சென்றுக் கொண்டிருந்தது. சலசலப்பு அடங்குவேனா என்றிருந்தது. பெண்களைப் பிரசவத்திற்கு அழைத்து வந்திருந்த பெற்றவர்களும், அவர்களின் உறவினரும் என ஒரு கூட்டமே அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருக்க, பார்த்து நின்றிருந்தவன் மனம் பரபரத்தது.
இவனைப் போலவே ஒரு பெரியவரும் மரத்தடியில் சிலையாக நின்றிருந்தார். கருநீல நிற பை ஒன்றை நெஞ்சோடு அணைவாகப் பிடித்து நின்றிருந்தவரின் நிர்க்கதியான நிலையைப் பார்க்க பாவமாக இருந்தாலும் இவனால் என்ன செய்ய முடியும்? இளகிய மனம் படைத்த கௌதமனால் அவரை போல நல்ல செய்திக்காகக் காத்திருக்க மட்டுமே முடியும் என்பதால் அதையே செய்தான்.
அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றி விட்டார்கள் என்ற செய்திகாக காத்திருந்தவனுக்கு “ஐஞ்சு குழந்தைங்க சாமி… என்னாச்சுன்னு தெரியல. ரெண்டு பொண்ணு, மூணு பசங்க. பெத்து… அதுக முகத்த கூட ஒழுங்கா பாக்காத பெத்தவங்க அழுதத கண்ணு கொண்டு பாக்க முடியல சாமி” என்ற செய்தியே வந்தடைந்தது.
அமைதியாக அமர்ந்திருந்தவன் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்ததை ஈரம் கன்னம் தொட்டபின்னரே உணர்ந்தான் கௌதமன். எதற்காகக் கண் கலங்குகிறான்? யாரோ சிலர் அவர்களின் வாழ்வின் இன்பத்தை நெருப்புக்குப் பலி கொடுத்ததாலா? அதற்கெல்லாம் கலங்குபவனா நான்? அவனைப் பற்றி அவனுக்கே தெரியாத போது இதற்கு என்ன பதில் கூறுவான்?
எதிலும் ஒட்டவும் முடியாது யாரோடும் மனம் விட்டும் பேச முடியாது அமர்ந்திருந்த கௌதமனுக்கு நேரம் பனிக்காலத்து உறைபனி போல் கரையாதே போனது. முன் மாலை ஆனது டிஸ்சார்ஜ் முடிய.
“கௌதமா போலாமா?” வைஷாலி கேட்டார். இவரைத் தான் அம்மா என்றிருந்தனர். பிறந்த குழந்தையிடம், “அம்மா பாரு… அப்பா பாருங்க” எனக் கொஞ்சிக் கொண்டே உலகை அறிமுகப் படுத்தும் தாயைப் போல் தான் இவரும் இவனுக்கு உலகைக் காட்டுகிறார்.
நீ இப்படி கௌதமா… நீ அப்பிடி கௌதமா… உனக்கு இது பிடிக்கும்… இது பிடிக்காது என அவன் விருப்பு வெறுப்பு வரை இவர் தான் அவனுள் ஏற்றிக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் கடந்துவிட முடிகிறதென்றாலும் பல நேரங்களில் எரிந்துவிழத் தோன்றுகிறது. ஆனாலும் தன்னை கருத்தாய் பார்த்துக் கொள்ளும் தாயைக் கடிய முடிவதில்லை.
“அவனுக்கான ஸ்பேச கொடு வைஷாலி. ஒரு பத்து நாள்ல அவன் நார்மல் ஆகிடுவான்னு சொல்றாங்க தான?” என எத்தனையோ முறை வாசுதேவன் உரைத்து விட்டார். மகன் என்று வந்துவிட்டால் கணவனாவது யாராவது என்ற இனம் வைஷாலி என்பதால், வாசுதேவனின் சொற்பொழிவு அனைத்துமே புல்லுக்கு இறைத்த நீராகப் போனது.
வைஷாலி மற்றும் வாசுதேவனோடு கௌதமன் கிளம்பும் நேரம் ஓட்டமாக வந்தான் விக்ரம்.
“ஹாய் புனி நல்லா இருக்கியா?” என செவிலியைக் கேட்டுக் கொண்டே வந்த விக்ரம் அங்குப் பிரபலம்.
“ஒருவழியா கிளம்பிட்டியா மச்சான்?” என்றவனைப் பார்த்து மென் புன்னகையைப் பதிலாகக் கொடுத்தான் கௌதமன்.
இந்தப் பதினைந்து மாதக் காலமாகவே தன்னோடு அதிக நேரம் செலவிட்டது இவன் தானாம். கௌதமன் நடக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தோழனாம். வெறும் தோழன் எல்லாம் இல்லை… உயிர்த் தோழனாம். இந்த ஒரு வாரத்தில் அன்னியமாகிப் போனவர்களில் இன்று இவனும் ஒருவன்.
“அடுத்து எப்போடா விசிட்? புனிதா ஏக்கமா பாக்கிறா” எனக் கண் சிமிட்டியவனுக்குப் பதில் கொடுக்கும் நிலையில் இவன் இல்லை.
வைஷாலியை பார்த்து ‘என்னவாம்?’ என்பதாக விக்கி வாயசைக்க, “ஃபையர் ஆஃசிடென்ட் ஆச்சில்ல… அத பார்த்திருப்பான் போல. அப்போல இருந்தே ஒரு மாதிரி தான் இருக்கான்” என்றார் ரகசியம் போல்.
“ம்ம்… ரெண்டு குழந்தைங்க மிஸ்சிங்காம். ரேண்டு பிரீமீஸ் புகைக்கு தாக்கு பிடிக்கல. மத்த குழந்தைங்கள எல்லாம் வேற ஹாஸ்பிட்டலுக்கு ஷிப்ட் பண்ணிட்டாங்க. மத்த ஃப்லோர்ல எந்த பிரச்சனையும் இல்லியாம். இருந்தாலும் அங்கயும் காலி பண்ணிட்டாங்க போல” என்றான் அவனும் ரகசியம் போல்.
இருவரின் ரகசியப் பேச்சும் கௌதமனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாசுதேவன் காதுகளிலும் விழ, திரும்பிப் பார்த்தவர் ஒன்றும் கூறவில்லை என்றாலும் அதன் பின் ரகசியங்கள் கடை பரப்பப்படவில்லை.
இங்கு நடக்கும் பேச்சு வார்த்தைக்கும் தனக்கும் எந்த விதச் சம்பந்தமுமே இல்லாதது போல் நின்றிருந்த கௌதமன் மனதில் ஆயிரம் கேள்விகளும் குழப்பங்களும்.
“எனக்குப் பொண்டாட்டி, குழந்தை இருக்கா விக்ரம்?” என ஜன்னல் வழியே நெருப்பிற்குத் தன்னை இறையாக்கி கருமையாக்கியிருந்த தளத்தைப் பார்த்து நின்றிருந்தவன் கேட்டான்.
முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியோடே வைஷாலியை பார்க்க அவர் அதற்கும் மேல் அதிர்ச்சியைக் காட்டினார். சில மாதங்களாகவே இப்படித் தான் அவ்வப்போது ஏதாவது சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்கிறான். அதுமட்டுமா… ஒன்பது மாதங்களில் அவன் குணநலன்களில் தான் எத்தனை மாற்றம்.
காரணம் கேட்டதற்கு, “ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட்” என்றார் மருத்துவர்.
“ஆர்கன் டிரான்ஸ்பிளான்டுக்கு அப்பறம், டோனரோட மெம்மொரி, பர்சனாலிட்டி, எமோஷன்ஸ் இப்படி பலதும் ரெசிபியன்ட் (தானம் வாங்கியவர்) காட்டுறது நடைமுறையில சாத்தியம். டோனர் (தானம் கொடுத்தவர்) பத்தி எதுவுமே ரெசிபியன்ட்டுக்கு தெரியலனா கூட, சிலருக்கு அவங்களோட ஃபீலிங்ஸ்சோட கனஷன் ஏற்படலாம். சிலருக்கு டோனரோட வாழ்க்கை பக்கங்கள் கூட நினைவுல வரலாம். இந்த பிஹேவியர்… பர்சனாலிட்டி சேஞ்சுக்கு ஹார்மோன்ஸ், செல்லுலார் மெம்மொரி காரணமா இருக்கலாம்ன்னு ஹைபாதிசிஸ் இருக்கு. DNA, RNA, protein, epigentic இப்படி பலவிதமான செல்லுலார் மெம்மொரி மூலமலா ஆர்கன் கொடுத்தவரோட நினைவுகள், உறுப்பு தானம் பெற்றவருக்கு வந்தடைய வாய்ப்புகள் அதிகம்ன்னு ஸ்டடி இருக்கு.” என்றனர் மருத்துவர்கள்.
“உனக்கு இன்னும் கல்யாணமே ஆகல டா” என்றான் விக்ரம்.
“ஓஹ்…” என்றவன் தொனியில் ஏமாற்றமா? அப்படித் தான் தோன்றியது. “என்ன டா?” என நண்பனை வேதனையோடு பார்த்தான் விக்ரம்.
“அப்போ எனக்கு பொண்டாட்டி குழந்தை இல்லையா?” எனக் கேட்டவன் எதை மனதில் வைத்துக் கொண்டு கேட்கிறான் என சத்தியமாக விக்ரமிற்கு தெரியவில்லை என்றாலும், “எனக்கு தெரிஞ்சு சத்தியமா இல்ல டா” என்றான்.
செவிலி வந்து மருந்துச் சீட்டைக் காட்டி என்னென்ன மருந்து, எப்பொழுது எடுக்க வேண்டும் எனப் பலவற்றைக் கூறி செல்ல, மருத்துவமனையிலிருந்து கிளம்பினர்.
